Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் வெறுக்கிற பழக்கங்கள்

கடவுள் வெறுக்கிற பழக்கங்கள்

பாடம் 10

கடவுள் வெறுக்கிற பழக்கங்கள்

கெட்டவை என்று கடவுள் சொல்லுகிற காரியங்களைப் பற்றி நீங்கள் எப்படி உணர வேண்டும்? (1)

என்ன வகையான பாலின நடத்தைகள் தவறானவை? (2)

ஒரு கிறிஸ்தவன், பொய் சொல்லுதலை (3), சூதாட்டத்தை (3), திருடுதலை (3), வன்முறையை (4), ஆவிக்கொள்கையை (5), குடிவெறியை (6)

எப்படிக் கருத வேண்டும்? ஒரு நபர் எப்படி கெட்ட பழக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளலாம்? (7)

1. கடவுளின் ஊழியர்கள் நல்லதை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கெட்டதை வெறுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். (சங்கீதம் 97:10) கடவுள் வெறுக்கிற குறிப்பிட்ட பழக்கங்களைத் தவிர்ப்பதை அது அர்த்தப்படுத்துகிறது. அப்படிப்பட்ட பழக்கங்களில் சில யாவை?

2. வேசித்தனம்: திருமணத்திற்கு முன் பாலுறவு, விபசாரம், மிருகப் புணர்ச்சி, முறைதகாப் புணர்ச்சி, ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி ஆகியவை கடவுளுக்கு விரோதமான பெரும் பாவங்கள். (லேவியராகமம் 18:6; ரோமர் 1:26, 27; 1 கொரிந்தியர் 6:9, 10) ஒரு தம்பதி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்களென்றால், அவர்கள் பிரிந்துவிட வேண்டும் அல்லது திருமணத்தைச் சட்டப்பூர்வமானதாக்க வேண்டும்.—எபிரெயர் 13:4.

3. பொய், சூதாட்டம், திருட்டு: யெகோவா தேவன் பொய் சொல்லக்கூடாதவர். (தீத்து 1:3) அவருடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறவர்கள் பொய் சொல்லுவதைத் தவிர்க்க வேண்டும். (நீதிமொழிகள் 6:16-19; கொலோசெயர் 3:9, 10) எல்லா வகையான சூதாட்டமும் பேராசையால் கறைபட்டிருக்கிறது. ஆகவே, லாட்டரிகள், குதிரை பந்தயம், பிங்கோ போன்ற எந்த விதமான சூதாட்டத்திலும் கிறிஸ்தவர்கள் பங்கெடுப்பதில்லை. (எபேசியர் 5:3-5) கிறிஸ்தவர்கள் திருடுவதும் இல்லை. திருடப்பட்ட பொருள் என்று அறியப்பட்டதை அவர்கள் வாங்குவதோ, அனுமதியின்றி பொருட்களை எடுப்பதோ இல்லை.—யாத்திராகமம் 20:15; எபேசியர் 4:28.

4. கோபாவேசங்கள், வன்முறை: கட்டுப்படுத்த முடியாத கோபம், வன்முறையான செயல்களுக்கு வழிநடத்தலாம். (ஆதியாகமம் 4:5-8) வன்முறையாக நடந்துகொள்ளும் ஒருவர் கடவுளின் நண்பராக இருக்க முடியாது. (சங்கீதம் 11:5; நீதிமொழிகள் 22:24, 25) பழிவாங்குதல் அல்லது மற்றவர்கள் நமக்குச் செய்யக்கூடிய கெட்ட காரியங்களுக்குப் பதிலீடாக அவர்களுக்குத் தீங்கு செய்வது தவறு.—நீதிமொழிகள் 24:29; ரோமர் 12:17-21.

5. மந்திர வசியங்களும் ஆவிக்கொள்கையும்: நோய்களைக் குணப்படுத்த முயலும்படி சில மக்கள், ஆவிகளின் சக்திக்காக மன்றாடுகிறார்கள். சிலர் தங்கள் பகைவர்களை நோயுற்றவர்களாக்க அல்லது அவர்களைக் கொல்லவும்கூட வசியங்களைச் செய்கிறார்கள். இந்த எல்லா பழக்கங்களுக்கும் பின்னாலிருக்கும் சக்தி சாத்தான். ஆகவே கிறிஸ்தவர்கள் அவை எவற்றிலும் பங்குகொள்ளக் கூடாது. (உபாகமம் 18:9-13) மற்றவர்களால் நம்மீது செய்யப்படக்கூடிய வசியங்களிலிருந்து மிகச் சிறந்த பாதுகாப்பு, யெகோவாவிடம் நெருங்கி இருப்பதே.—நீதிமொழிகள் 18:10.

6. குடிவெறி: சிறிதளவு திராட்சரசம், பீர், அல்லது வேறெந்த மதுபானத்தையாவது குடிப்பது தவறல்ல. (சங்கீதம் 104:15; 1 தீமோத்தேயு 5:23) ஆனால் மிதமிஞ்சி குடிப்பதும் குடிவெறியும் கடவுளுடைய பார்வையில் தவறானவை. (1 கொரிந்தியர் 5:11-13; 1 தீமோத்தேயு 3:8) அதிகமாகக் குடிப்பது உங்கள் உடல்நலத்தைக் கெடுத்து, உங்கள் குடும்பத்தைச் சிதறடிக்கலாம். மற்ற சோதனைகளுக்கு மிக விரைவாக இணங்கிவிடச் செய்வதற்கும் அது காரணமாகலாம்.—நீதிமொழிகள் 23:20, 21, 29-35.

7. கெட்டவை என்று கடவுள் சொல்லுகிற காரியங்களைச் செய்பவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (கலாத்தியர் 5:19-21) நீங்கள் உண்மையிலேயே கடவுளிடம் அன்புகூர்ந்து அவரைப் பிரியப்படுத்த விரும்பினால், இந்தப் பழக்கங்களிலிருந்து நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளலாம். (1 யோவான் 5:3) தீமையானவை என்று கடவுள் சொல்லுகிறவற்றை வெறுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். (ரோமர் 12:9) தேவபக்திக்கேற்ற பழக்கவழக்கங்களை உடையவர்களுடன் கூட்டுறவு கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 13:20) முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ கூட்டாளிகள் உதவிக்குரிய ஒரு மூலமாக நிரூபிக்கக்கூடும். (யாக்கோபு 5:14) எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெபத்தின் மூலமாகக் கடவுளுடைய உதவியின் பேரில் சார்ந்திருங்கள்.—பிலிப்பியர் 4:6, 7, 13.

[பக்கம் 20-ன் படம்]

குடிவெறி, திருட்டு, சூதாட்டம், வன்முறை செயல்கள் ஆகியவற்றைக் கடவுள் வெறுக்கிறார்