Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குதல்

ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குதல்

பாடம் 7

ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குதல்

ஒழுங்காக ஜெபம் செய்வது ஏன் முக்கியம்? (1)

நாம் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும், எப்படி? (2, 3)

ஜெபம் செய்வதற்குத் தகுந்த காரியங்கள் யாவை? (4)

நீங்கள் எப்போது ஜெபம் செய்ய வேண்டும்? (5, 6)

கடவுள் எல்லா ஜெபங்களுக்கும் செவிகொடுக்கிறாரா? (7)

1. ஜெபம் என்பது மனத்தாழ்மையுடன் கடவுளிடம் பேசுவதாகும். நீங்கள் கடவுளிடம் ஒழுங்காக ஜெபம் செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் அன்பான ஒரு நண்பரிடம் நெருங்கியவராக உணருவதுபோலவே அவரிடம் உணர முடியும். யெகோவா எவ்வளவோ பெரியவராகவும் வல்லவராகவும் இருந்தாலும், அவர் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார்! நீங்கள் கடவுளிடம் ஒழுங்காக ஜெபிக்கிறீர்களா?—சங்கீதம் 65:2; 1 தெசலோனிக்கேயர் 5:17.

2. ஜெபம் என்பது நம் வழிபாட்டின் பாகமாக இருக்கிறது. இதன் காரணமாக, கடவுளாகிய யெகோவாவிடம் மட்டுமே நாம் ஜெபிக்க வேண்டும். இயேசு பூமியில் இருந்தபோது, அவர் எப்போதும் தம் பிதாவிடமே ஜெபம் செய்தார், வேறு எவரிடமும் அல்ல. நாமும் அதையே செய்ய வேண்டும். (மத்தேயு 4:10; 6:9) என்றபோதிலும், நம்முடைய எல்லா ஜெபங்களும் இயேசுவின் பெயரிலேயே சொல்லப்பட வேண்டும். இது, நாம் இயேசுவின் ஸ்தானத்தை மதிக்கிறோம் என்றும் அவருடைய மீட்பின் கிரய பலியில் விசுவாசம் வைத்திருக்கிறோம் என்றும் காண்பிக்கிறது.—யோவான் 14:6; 1 யோவான் 2:1, 2.

3. நாம் ஜெபம் செய்யும்போது நம் இருதயத்திலிருந்து கடவுளிடம் பேச வேண்டும். நாம் மனப்பாடம் செய்த ஜெபங்களைச் சொல்லவோ, ஜெப புத்தகம் ஒன்றிலிருந்து வாசிக்கவோ கூடாது. (மத்தேயு 6:7, 8) மரியாதையுள்ள எந்த நிலையிலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்து நாம் ஜெபம் செய்யலாம். நம்முடைய இருதயத்தில் சொல்லப்படுகிற அமைதலான ஜெபங்களையும்கூட கடவுளால் கேட்க முடியும். (1 சாமுவேல் 1:12, 13) நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களைச் சொல்வதற்கு, மற்றவர்களிடமிருந்து தள்ளிச் சென்று ஓர் அமைதலான இடத்தைக் கண்டுபிடிப்பது நல்லது.—மாற்கு 1:35.

4. என்ன காரியங்களைக் குறித்து நீங்கள் ஜெபிக்கலாம்? அவருடனுள்ள உங்கள் நட்பைப் பாதிக்கக்கூடிய எதைப் பற்றியும் ஜெபிக்கலாம். (பிலிப்பியர் 4:6, 7) யெகோவாவுடைய பெயரையும் நோக்கத்தையும் பற்றி நாம் ஜெபம் செய்ய வேண்டும் என்று மாதிரி ஜெபம் காண்பிக்கிறது. நம்முடைய பொருளாதார தேவைகள் கொடுக்கப்படும்படியும், நம் பாவங்கள் மன்னிக்கப்படும்படியும், சோதனைகளை எதிர்த்து நிற்க உதவி செய்யும்படியும் நாம் கேட்கலாம். (மத்தேயு 6:9-13) நம்முடைய ஜெபங்கள் தன்னலமானவையாக இருக்கக் கூடாது. கடவுளுடைய சித்தத்திற்கு இசைவான காரியங்களுக்காக மட்டுமே நாம் ஜெபிக்க வேண்டும்.—1 யோவான் 5:14.

5. கடவுளுக்கு நன்றி சொல்லவோ அவரைத் துதிக்கவோ உங்கள் இருதயம் எப்போதெல்லாம் உங்களைத் தூண்டுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் ஜெபம் செய்யலாம். (1 நாளாகமம் 29:10-13) உங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கும்போதும் உங்கள் விசுவாசம் பரீட்சிக்கப்படும்போதும் நீங்கள் ஜெபிக்க வேண்டும். (சங்கீதம் 55:22; 120:1) உங்கள் உணவைச் சாப்பிடும் முன்னர் ஜெபிப்பது பொருத்தமானதாக இருக்கிறது. (மத்தேயு 14:19) யெகோவா நம்மை “எந்தச் சமயத்திலும்” ஜெபம் பண்ணும்படி அழைக்கிறார்.—எபேசியர் 6:18.

6. விசேஷமாக நாம் ஒரு பெரும் பாவத்தைச் செய்திருந்தால் ஜெபம் செய்ய வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் யெகோவாவுடைய இரக்கத்திற்காகவும் மன்னிப்பிற்காகவும் கெஞ்ச வேண்டும். நம்முடைய பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவற்றை மீண்டும் செய்யாதபடிக்கு நம்மால் முடிந்ததை எல்லாம் செய்வோமானால், கடவுள் “மன்னிப்பதற்குத் தயாராக” இருக்கிறார்.—சங்கீதம் 86:5, NW; நீதிமொழிகள் 28:13.

7. நீதிமான்களின் ஜெபங்களுக்கு மட்டுமே யெகோவா செவிகொடுக்கிறார். உங்களுடைய ஜெபங்கள் கடவுளால் கேட்கப்பட வேண்டுமானால், அவருடைய சட்டங்களின்படி வாழ உங்களால் முடிந்தளவுக்கு முயற்சிசெய்ய வேண்டும். (நீதிமொழிகள் 15:29; 28:9) நீங்கள் ஜெபம் செய்யும்போது மனத்தாழ்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (லூக்கா 18:9-14) நீங்கள் எதற்காக ஜெபம் செய்கிறீர்களோ அதற்கிசைவாக உழைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் உங்களுக்கு விசுவாசம் இருப்பதையும், நீங்கள் எதைச் சொல்லுகிறீர்களோ அதை உண்மையிலேயே அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பதையும் நிரூபிப்பீர்கள். அப்போதுதான் யெகோவா உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார்.—எபிரெயர் 11:6.