Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்

யெகோவாவின் சாட்சிகள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்

பாடம் 14

யெகோவாவின் சாட்சிகள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்

யெகோவாவின் சாட்சிகள் எப்போது தங்கள் நவீன நாளைய ஆரம்பத்தைக் கொண்டிருந்தார்கள்? (1)

யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் எப்படி நடத்தப்படுகின்றன? (2)

செலவுகள் எவ்வாறு கவனிக்கப்படுகின்றன? (3)

ஒவ்வொரு சபையிலும் யார் முன்நின்று வழிநடத்துகிறார்கள்? (4)

ஒவ்வொரு வருடமும் என்னனென்ன பெரிய கூட்டங்கள் நடத்தப்படுகின்றன? (5)

அவர்களுடைய தலைமை அலுவலகங்களிலும் கிளை அலுவலகங்களிலும் என்ன வேலை செய்யப்படுகிறது? (6)

1. யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நவீன நாளைய ஆரம்பத்தை 1870-களில் கொண்டிருந்தனர். முதலில் அவர்கள் பைபிள் மாணாக்கர்கள் என்றழைக்கப்பட்டனர். ஆனால் 1931-ல் அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற வேதப்பூர்வமான பெயரை ஏற்றுக்கொண்டனர். (ஏசாயா 43:10) சிறிய தொடக்கங்களிலிருந்து இந்த அமைப்பு லட்சக்கணக்கான சாட்சிகள் வரையாக வளர்ந்திருக்கிறது; அவர்கள் 230-க்கும் அதிகமான நாடுகளில் மும்முரமாக பிரசங்கித்து வருகின்றனர்.

2. யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் பெரும்பாலானவை ஒவ்வொரு வாரமும் மூன்று தடவை கூட்டங்களை வைத்திருக்கின்றன. இவற்றில் எந்தக் கூட்டத்திற்கு வரவும் நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். (எபிரெயர் 10:24, 25) போதிக்கப்படுகிறவற்றிற்கு பைபிளே அடிப்படையாக இருக்கிறது. கூட்டங்கள் ஜெபத்துடன் தொடங்கப்பட்டு ஜெபத்துடன் நிறைவு செய்யப்படுகின்றன. இருதயப்பூர்வமான ‘ஆவிக்குரிய பாடல்களும்’ பெரும்பாலான கூட்டங்களில் பாடப்படுகின்றன. (எபேசியர் 5:18, 19, NW) அனுமதி இலவசம், பணம் வசூலிக்கப்படுவதில்லை.—மத்தேயு 10:8.

3. பெரும்பாலான சபைகள் ஒரு ராஜ்ய மன்றத்தில் தங்கள் கூட்டங்களை நடத்துகின்றன. இவை பெரும்பாலும், சாட்சிகளாக இருக்கும் வாலண்டியர்களால் கட்டப்பட்ட எளிய கட்டட அமைப்புகளாக இருக்கின்றன. எவ்வித உருவங்களையோ, சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் உருவங்களையோ, அது போன்ற பொருட்களையோ நீங்கள் ராஜ்ய மன்றத்தில் பார்க்க மாட்டீர்கள். மனமுவந்த நன்கொடைகளின் மூலமாக செலவுகளுக்காகும் பணம் கொடுக்கப்படுகிறது. நன்கொடை செய்ய விரும்புகிறவர்களுக்காக, ஒரு நன்கொடைப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது.—2 கொரிந்தியர் 9:7.

4. ஒவ்வொரு சபையிலும், மூப்பர்கள், அல்லது கண்காணிகள் இருக்கிறார்கள். சபைக்குப் போதிப்பதில் அவர்கள் முன்நின்று செயல்படுகிறார்கள். (1 தீமோத்தேயு 3:1-7; 5:17) அவர்கள் உதவி ஊழியர்களால் உதவப்படுகிறார்கள். (1 தீமோத்தேயு 3:8-10, 12, 13) சபையிலுள்ள மற்றவர்களுக்கு மேலாக இந்த ஆண்கள் உயர்த்தப்பட்டவர்களாக இல்லை. (2 கொரிந்தியர் 1:24) அவர்களுக்கு விசேஷித்த பதவி பெயர்கள் கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு 23:8-10) அவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக உடுத்திக்கொள்வதில்லை. அவர்கள் செய்யும் வேலைக்காக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதுமில்லை. சபையின் ஆவிக்குரிய தேவைகளை மூப்பர்கள் மனமுவந்து கவனித்துக்கொள்கிறார்கள். கஷ்டமான சமயங்களில் அவர்கள் ஆறுதலையும் வழிநடத்துதலையும் தரலாம்.—யாக்கோபு 5:14-16; 1 பேதுரு 5:2, 3.

5. ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் சாட்சிகள் பெரிய மாநாடுகளையும் நடத்துகின்றனர். இந்தச் சமயங்களில், பைபிள் போதனையின் ஒரு விசேஷித்த நிகழ்ச்சிநிரலை அனுபவிப்பதற்காக அநேக சபைகள் ஒன்றுகூடி வருகின்றன. புதிய சீஷர்களின் முழுக்காட்டுதல் ஒவ்வொரு மாநாட்டு நிகழ்ச்சிநிரலிலும் ஒரு தவறாத அம்சமாக இருக்கிறது.—மத்தேயு 3:13-17; 28:19, 20.

6. யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகம் நியூ யார்க்கில் இருக்கிறது. உலகளாவிய சபையை கண்காணிப்பு செய்யும், அனுபவம் வாய்ந்த மூப்பர்களாலான ஒரு மைய தொகுதியாகிய ஆளும் குழு அங்கிருக்கிறது. உலகெங்கிலும் 100-க்கும் அதிகமான கிளை அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில், பைபிள் பிரசுரங்களை அச்சடித்து அனுப்புவதற்கு வாலண்டியர்கள் உதவி செய்கிறார்கள். பிரசங்க வேலையை ஒழுங்கமைப்பதன் பேரிலும் வழிநடத்துதல் கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு மிக அருகிலிருக்கும் கிளை அலுவலகத்தை விஜயம் செய்து பார்க்க நீங்கள் ஏன் திட்டமிடக் கூடாது?