பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
“இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்”
பிறந்த வருஷம்: 1966
பிறந்த நாடு: பின்லாந்து
என்னைப் பற்றி: சமூக உரிமைகளுக்காகப் போராடினேன்
என் கடந்த கால வாழ்க்கை:
சின்ன வயதிலிருந்தே இயற்கையை நான் ரொம்ப ரசித்தேன். மத்திய பின்லாந்தில் இருக்கிற யுவாஸ்க்யூலாதான் என்னுடைய சொந்த ஊர். அதைச் சுற்றி இருக்கிற அழகான காடுகளையும், ஏரிகளையும் சுற்றிப்பார்க்க நாங்கள் அடிக்கடி குடும்பமாகப் போவோம். மிருகங்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் சின்ன பையனாக இருக்கும்போது நாய், பூனையை எங்கே பார்த்தாலும் அதைக் கட்டிப்பிடித்து கொஞ்ச வேண்டும் என்று நினைப்பேன். நான் வளர்ந்த பிறகு, யாராவது மிருகங்களைக் கொடுமைப்படுத்துவதைப் பார்த்தால் எனக்குக் கோபம் கோபமாக வரும். பிற்பாடு, விலங்குகள் உரிமைகளுக்காகப் போராடுகிற ஒரு அமைப்பில் சேர்ந்தேன். என்னை போலவே யோசிக்கிற ஆட்களை அங்கே பார்த்தேன்.
மிருகங்களுடைய உரிமைகளுக்காக நாங்கள் போராட்டங்களில் ஈடுபட்டோம். அது சம்பந்தமான சில பத்திரிகைகளை வினியோகித்தோம். மிருகங்களுடைய தோலை விற்பனை செய்கிற கடைகளுக்கும் மிருகங்களைப் பரிசோதனை செய்கிற ஆய்வுக் கூடங்களுக்கும் எதிராக, கண்டன ஊர்வலங்களையும், பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தோம். மிருகங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு புதிய அமைப்பையும் உருவாக்கினோம். இப்படி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அதிகாரிகளுக்கும் எங்களுக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் வந்தன. நிறைய தடவை நான் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டேன்.
மிருகங்களைப் பற்றிய கவலை மட்டுமல்ல, உலகத்தில் நடக்கிற மற்ற பிரச்சினைகளும் என் மனதை வாட்டியெடுத்தன. அதனால் அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், க்ரீன்பீஸ் போன்ற சில அமைப்புகளில் நான் சேர்ந்தேன். அந்த அமைப்புகளில் நடக்கிற வேலைகளுக்காக என்னுடைய சக்தியையெல்லாம் செலவழித்தேன். ஏழை எளியவர்கள், பசி பட்டினியில் வாடுகிறவர்கள், ஆதரவற்ற மற்றவர்கள் என எல்லாருக்காகவும் நான் குரல் கொடுத்தேன்.
ஆனாலும், இந்த உலகத்தை என்னால் மாற்ற முடியாது என்பதைப் போகப்போகப் புரிந்துகொண்டேன். அந்த அமைப்புகளால் சின்ன சின்ன பிரச்சினைகளைச் சரிசெய்ய முடிந்தாலும், பெரிய பிரச்சினைகள் சரிசெய்ய முடியாத அளவுக்கு மோசமாகி கொண்டேதான் இருந்தன. தீய சக்திகள் இந்த உலகத்தையே விழுங்குவது போலவும், யாருமே அவற்றைக் கண்டுகொள்ளாதது போலவும்தான் இருந்தது. நான் விழி பிதுங்கி நின்றேன்!
பைபிள் என் வாழ்க்கையையே மாற்றியது:
‘என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே’ என்ற கவலையில் நான் கடவுளையும் பைபிளையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். முன்பு யெகோவாவின் சாட்சிகளோடு நான் பைபிளைப் படித்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் ரொம்ப அன்பாக, அக்கறையாக இருப்பார்கள். அவர்கள் அப்படி நடந்துகொண்ட விதம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தாலும், என் வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்கு அப்போது நான் தயாராக இருக்கவில்லை. ஆனால், இந்தத் தடவை என் சூழ்நிலை மாறியிருந்தது.
நான் என்னுடைய பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அதில் இருக்கிற வார்த்தைகள் என்னுடைய மனக் காயங்களுக்கு அருமருந்தாக இருந்தன. மிருகங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்வதை நான் கவனித்தேன். உதாரணத்துக்கு, “நல்லவன் தன் மிருகங்களைக் கவனித்துக் கொள்கிறான்” என்று நீதிமொழிகள் 12:10 (ERV) சொல்கிறது. இந்த உலகத்தில் நடக்கிற பிரச்சினைகளுக்குக் கடவுள் காரணம் இல்லை என்பதையும் நான் புரிந்துகொண்டேன். மக்கள் கடவுளுடைய ஆலோசனைகளைக் கேட்டு நடக்காததால்தான் பிரச்சினைகள் இந்தளவுக்கு மோசமாக இருக்கின்றன என்பதையும் நான் புரிந்துகொண்டேன். யெகோவாவுடைய அன்பையும் பொறுமையையும் பற்றிக் தெரிந்துகொண்டது என் மனதை ரொம்பவே தொட்டுவிட்டது.—சங்கீதம் 103:8-14.
கிட்டத்தட்ட இந்தச் சமயத்தில்தான் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்துக்கான கூப்பனைப் பார்த்தேன். அதைப் பூர்த்திசெய்து அனுப்பினேன். சீக்கிரத்திலேயே யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற ஒரு தம்பதி என் வீட்டுக்கு வந்தார்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொன்னார்கள். உடனே அதை ஏற்றுக்கொண்டேன். ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தேன். அதனால், பைபிளில் இருக்கிற உண்மைகள் என் மனதுக்குள் ஆழமாக வேர்விட ஆரம்பித்தன.
பைபிளின் உதவியால் நிறைய மாற்றங்களை என்னால் செய்ய முடிந்தது. புகைப்பிடிப்பதையும் அளவுக்கு மீறி குடிப்பதையும் விட்டுவிட்டேன். என்னுடைய தோற்றத்தையும், பேசும் விதத்தையும் மாற்றிக்கொண்டேன். அதிகாரிகள்மேல் இருந்த என்னுடைய எண்ணத்தையும் மாற்றிக்கொண்டேன். (ரோமர் 13:1) ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை அடியோடு விட்டுவிட்டேன். அந்த விஷயத்தில் நான் எல்லைமீறி நடந்துகொண்டிருந்தேன்.
சமூக நல அமைப்புகள்மேல் எனக்கு இருந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வதுதான் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அதற்குக் கொஞ்சம் காலம் எடுத்தது. அந்த அமைப்புகளைவிட்டு வெளியே வந்தால் அவர்களுக்குத் துரோகம் செய்வதுபோல் ஆகிவிடும் என்று முதலில் நான் நினைத்தேன். ஆனாலும் கடவுளுடைய அரசாங்கம்தான் இந்த உலகத்துக்கு ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கப்போகிறது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டேன். அதனால், அந்த அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பதற்கும், அதைப் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுவதற்கும் என்னுடைய சக்தியையெல்லாம் கொடுக்க முடிவு செய்தேன்.—மத்தேயு 6:33.
எனக்குக் கிடைத்த நன்மை:
நான் சமூக உரிமைகளுக்காகப் போராடுகிறவனாக இருந்ததால், மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என இரண்டு விதமாகப் பிரித்துப் பார்த்தேன். யாரைக் கெட்டவர்களாக நினைத்தேனோ, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால், பைபிளின் உதவியால் மற்றவர்கள்மேல் வெறுப்பு காட்டுவதை அடியோடு விட்டுவிட்டேன். அதற்குப் பதிலாக எல்லாரிடமும் கடவுளைப் போல அன்பு காட்ட முயற்சி செய்கிறேன். (மத்தேயு 5:44) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை மற்றவர்களிடம் சொல்வது மூலமாகவும் இந்த அன்பைக் காட்டுகிறேன். மக்கள் உண்மையான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் எதிர்கால நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ள இந்த வேலை எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறது என்பதை நினைத்துப் பூரித்துப்போகிறேன்.
என்னுடைய எல்லா கவலைகளையும் யெகோவாவின் கையில் விட்டுவிட்டதால் இப்போது நிம்மதியாக இருக்கிறேன். அவர் படைப்பாளராக இருப்பதால் மிருகங்களும் சரி, மனிதர்களும் சரி, என்றென்றும் கொடுமைப்படுத்தப்படுவதற்கு அவர் விடமாட்டார். இந்த அழகான பூமியை அழிப்பதற்கும் அவர் விடமாட்டார். இந்த விஷயத்தில் நான் ரொம்ப உறுதியாக இருக்கிறேன். இதுவரை ஏற்பட்டிருக்கிற எல்லா பாதிப்புகளையும் தன்னுடைய அரசாங்கத்தின் மூலமாக அவர் சீக்கிரத்தில் சரி செய்யப்போகிறார். (ஏசாயா 11:1-9) இந்த உண்மைகளைத் தெரிந்துகொண்டது எனக்கு ரொம்ப சந்தோஷத்தைத் தருகிறது. இந்த விஷயங்கள்மேல் நம்பிக்கை வைக்க மற்றவர்களுக்கு உதவி செய்வதும் எனக்கு ரொம்ப சந்தோஷத்தைத் தருகிறது. இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை நான் மாற்றிக்கொண்டேன்.