Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை

எதிர்ப்பிலிருந்து மீண்டது

எதிர்ப்பிலிருந்து மீண்டது

பைபிளுக்கு வந்த ஆபத்து: அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் நிறைய பேருடைய குறிக்கோள் பைபிளில் இருக்கிற விஷயங்களுக்கு எதிராக இருந்தது. அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் தங்களுக்கென்று சொந்தமாக பைபிள் வைத்திருப்பதை, அதைத் தயாரிப்பதை, அல்லது அதை மொழிபெயர்ப்பதை அடிக்கடி தடுத்திருக்கிறார்கள். அதற்கு இரண்டு உதாரணங்களை இப்போது பார்க்கலாம்:

  • சுமார் கி.மு. 167-ல்: செலூக்கஸ் வம்சத்தில் வந்த ராஜாவான ஆண்டியோகஸ் எப்பிஃபேனீஸ், கிரேக்க மதத்தை யூதர்கள் பின்பற்றும்படி கட்டாயப்படுத்தினார். அதுமட்டுமல்ல, எபிரெய வேதாகமத்தின் எல்லா பிரதிகளையும் அழிப்பதற்குக் கட்டளையிட்டார். அவருக்குக் கீழிருந்த அதிகாரிகள், “தங்களுடைய கண்ணில்பட்ட திருச்சட்ட சுருள்கள் எல்லாவற்றையும் கிழித்து சுட்டெரித்தார்கள். அதுமட்டுமல்ல, பலத்துக்காகவும் ஆறுதலுக்காகவும் அதைப் படித்த எல்லாரையும் கொன்றுபோட்டார்கள்” என்று சரித்திராசிரியரான ஹைன்ரிச் கிரெட்ஸ் எழுதினார்.

  • சுமார் 800 வருஷங்களுக்கு முன்: கத்தோலிக்கக் கோட்பாட்டைப் பற்றிப் பிரசங்கிக்காமல் பைபிள் விஷயங்களைப் பற்றிப் பிரசங்கிக்கிற சர்ச் அங்கத்தினர்கள்மேல் கத்தோலிக்க மதத் தலைவர்கள் சிலர் எரிச்சலடைந்தார்கள். லத்தீன் மொழியில் இருக்கிற சங்கீதப் புத்தகத்தைத் தவிர மற்ற பைபிள் புத்தகங்களை வைத்திருக்கிற சர்ச் அங்கத்தினர்களை, சர்ச் கோட்பாடுகளை எதிர்க்கிறவர்கள் என்று முத்திரை குத்தினார்கள். “சர்ச் கோட்பாட்டை எதிர்க்கிறவர்களை விடாமுயற்சியோடு அடிக்கடி போய்த் தேடுங்கள். . . . எல்லா வீடுகளிலும் நிலத்தடி அறைகளிலும் அவர்களைத் தேடுங்கள். . . . ஒரு வீட்டில் சர்ச் கோட்பாட்டை எதிர்க்கிற ஒருவரைக் கண்டுபிடித்தால் அந்த வீட்டை அழித்துவிடுங்கள்” என்றெல்லாம் ஒரு சர்ச் பேரவை அதன் ஆட்களுக்குக் கட்டளை கொடுத்தது.

பைபிளை ஒழித்துக்கட்டுவதற்கு எதிரிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றிப் பெற்றிருந்தது என்றால், அதிலிருக்கிற விஷயங்களும் அழிந்துபோயிருக்கும்.

வில்லியம் டின்டேலின் ஆங்கில பைபிள் மொழிபெயர்ப்புக்கு பல தடைகள் வந்தன பைபிள்கள் எரிக்கப்பட்டன, 1536-ல் அவருடைய உயிரும் பறிக்கப்பட்டது. ஆனாலும், அந்த பைபிள் மொழிபெயர்ப்பு மீண்டுவந்திருக்கிறது

பைபிள் மீண்டுவந்தது எப்படி? ஆண்டியோகஸ் ராஜா இஸ்ரவேல் தேசத்தைத் தாக்குவதில்தான் குறியாக இருந்தான். ஆனால், யூத சமுதாயம் மற்ற பல இடங்களிலும் பரவியிருந்தது. சொல்லப்போனால், முதல் நூற்றாண்டுக்குள் 60 சதவீதத்துக்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரவேல் தேசத்துக்கு வெளியே வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள். யூதர்கள் தங்களுடைய ஜெபக்கூடங்களில் வேதாகமத்தின் பிரதிகளை வைத்திருந்தார்கள். அந்தப் பிரதிகளைத்தான் அவர்களுக்குப் பின்வந்த தலைமுறையினரும் கிறிஸ்தவர்களும் பயன்படுத்தினார்கள்.—அப்போஸ்தலர் 15:21.

சுமார் 800 வருஷங்களுக்கு முன், வேதாகமத்தை நேசித்த நிறைய பேர், துன்புறுத்தல் மத்தியிலும் துணிந்து பைபிளை மொழிபெயர்த்து நகல் எடுத்தார்கள். 15-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில் அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, 33 மொழிகளில் பைபிளின் சில பாகங்கள் இருந்ததாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு, பைபிளை மொழிபெயர்க்கிற வேலையும், தயாரிக்கிற வேலையும் படு விறுவிறுப்பாக நடந்தது.

பலன்: சக்தி படைத்த ராஜாக்களிடமிருந்தும் மத குருமார்களிடமிருந்தும் பயங்கரமான எதிர்ப்புகள் வந்தாலும், சரித்திரத்தில் அதிகமாக வினியோகிக்கப்பட்ட... மொழிபெயர்க்கப்பட்ட... ஒரே புத்தகம் பைபிள்தான். சில நாடுகளின் சட்டங்களிலும் மொழிகளிலும் சீர்த்திருத்தம் செய்வதற்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதற்கும் இந்தப் புத்தகம் உதவி செய்திருக்கிறது.