அதிகாரம் 7
அடங்காத பிள்ளை ஒன்று வீட்டில் இருக்கிறதா?
1, 2. (அ) யூத மதத்தலைவர்களின் விசுவாசமற்றத்தன்மையை சிறப்பித்துக் காண்பிப்பதற்கு இயேசு என்ன உவமையை அளித்தார்? (ஆ) இயேசுவின் உவமையிலிருந்து வளரிளமைப் பருவத்தினரைக் குறித்து என்ன குறிப்பை நாம் கற்றுக்கொள்ளலாம்?
இயேசு, இறந்துபோவதற்கு சில நாட்களுக்கு முன்பு, யூத மதத்தலைவர்கள் அடங்கிய தொகுதியினரிடம் சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டார். அவர் சொன்னார்: “ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்.” அதற்கு யூதமதத்தலைவர்கள், “மூத்தவன்தான்” என்று பதிலளித்தனர்.—மத்தேயு 21:28-31.
2 இயேசு இங்கே யூத மதத்தலைவர்களின் விசுவாசமற்றத்தன்மையை சிறப்பித்துக் காண்பித்துக்கொண்டிருந்தார். அவர்கள் இளைய மகனைப் போல, கடவுளுடைய சித்தத்தை செய்வதாக வாக்களித்தனர், ஆனால் பின்னர் அந்த வாக்கை நிறைவேற்றாமல் போயினர். ஆனால், குடும்ப வாழ்க்கையை நன்கு புரிந்துகொள்வதன் பேரில் இயேசுவின் உவமை சார்ந்திருந்தது என்பதை அநேக பெற்றோர் ஒப்புக்கொள்வர். இளைஞர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வது பெரும்பாலும் கடினமானது என்பதை இயேசு நன்றாக விளக்கிக் காண்பித்தார். ஒரு இளைஞன் தன் வளரிளமைப் பருவத்தின்போது அநேக பிரச்சினைகளை உண்டுபண்ணலாம், ஆனால் பின்னர் பொறுப்புள்ள, சமுதாயத்தில் மதிப்புடைய பெரியவராக வளரலாம். பருவவயது அடங்காமை என்ற பிரச்சினையை கலந்தாலோசிக்கையில் இதை நாம் மனதில் வைப்பது அவசியம்.
அடங்காத பிள்ளை என்பது எது?
3. பெற்றோர் தங்கள் பிள்ளையை ஏன் உடனடியாக அடங்காத பிள்ளை என்று வகைப்படுத்திவிடக்கூடாது?
3 பருவவயது பிள்ளைகள் நேருக்கு நேராக பெற்றோரை எதிர்ப்பதைக் குறித்து நீங்கள் ஒருவேளை அவ்வப்போது கேள்விப்படலாம். எவ்வகையிலும் கட்டுப்படுத்தவே முடியாததாய்த் தோன்றும் ஒரு பருவவயது பிள்ளையை உடைய ஒரு குடும்பத்தைப் பற்றி நீங்கள் தனிப்பட்டவிதமாகவும்கூட அறிந்திருக்கலாம். இருப்பினும், ஒரு பிள்ளை உண்மையில் அடங்காத பிள்ளையா என்பதை அறிந்துகொள்வது எப்போதும் சுலபமானதாக இருப்பதில்லை. மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளாய் இருந்தாலும், சில பிள்ளைகள் ஏன் கலகம் செய்கின்றனர், சில பிள்ளைகள் ஏன் கலகம் செய்வதில்லை என்பதை புரிந்துகொள்வது கடினமானதாய் இருக்கக்கூடும். தங்கள் பிள்ளைகளில் ஒன்று முற்றிலும் எதிர்க்கக்கூடிய, அடங்காத பிள்ளையாக வளர்ந்து வருகிறது என்று பெற்றோர் சந்தேகப்பட்டால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இக்கேள்விக்கு பதிலளிக்க, அடங்காத பிள்ளை என்பது எது என்பதைப் பற்றி நாம் முதலில் கவனிக்க வேண்டும்.
4-6. (அ) அடங்காதவன் என்பவன் யார்? (ஆ) பருவவயது பிள்ளை அவ்வப்போது கீழ்ப்படியாமற்போனால் பெற்றோர் எதை மனதில் வைக்க வேண்டும்?
4 எளிதாக சொன்னால், அடங்காதவன் என்பவன், வேண்டுமென்றே எப்போதும் கீழ்ப்படியாமல் இருப்பவன் அல்லது உயர் அதிகாரத்தை எதிர்த்து சவால் விடுபவன். “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்பது உண்மைதான். (நீதிமொழிகள் 22:15) ஆகையால் எல்லா பிள்ளைகளும் பெற்றோரையும் மற்ற அதிகாரங்களையும் ஏதாவது ஒரு சமயம் எதிர்ப்பதுண்டு. சரீரப்பிரகாரமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் வளர்ச்சியடையும் பருவம் வளரிளமைப் பருவம் என்று அழைக்கப்படுகிறது. அப்பருவத்தின்போது இது குறிப்பாக உண்மையாய் இருக்கிறது. எந்த ஒரு நபரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் அழுத்தத்தை உண்டாக்கும், வளரிளமைப் பருவமோ மாற்றங்கள் நிறைந்த சமயமாய் இருக்கிறது. உங்கள் பருவவயது மகனோ அல்லது மகளோ பிள்ளைப்பருவத்தைத் தாண்டி வயதுவந்தவராகும் கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறான்(ள்). இதன் காரணமாக, வளரிளமைப் பருவத்தின்போது, சில பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவரோடொருவர் ஒத்துப்போவதை கடினமாய்க் காண்கின்றனர். பெரும்பாலும், அந்த மாற்றம் ஏற்படும் சமயத்தின் வேகத்தை குறைக்க பெற்றோர் இயல்பாகவே முயற்சிசெய்கின்றனர், ஆனால் பருவவயது பிள்ளைகளோ அதை விரைவுபடுத்த முயலுகின்றனர்.
5 அடங்காத பருவவயது பிள்ளை பெற்றோரின் மதிப்பீடுகளை நிராகரித்து விடுகிறான். ஆனால் கீழ்ப்படியாத சில செயல்கள் மட்டுமே ஒருவனை அடங்காத பிள்ளையாக ஆக்குவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். ஆவிக்குரிய விஷயங்களுக்கு வருகையில், சில பிள்ளைகள் ஆரம்பத்தில் பைபிள் சத்தியத்தின் பேரில் மிகவும் குறைவான அக்கறையே காண்பிக்கலாம் அல்லது அக்கறை காண்பிக்காமலேயே இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒருவேளை அடங்காத பிள்ளைகளாக இருக்கமாட்டார்கள். ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் பிள்ளையை இது இவ்வகையான பிள்ளை என்று உடனடியாக வகைப்படுத்தி விடாதீர்கள்.
6 எல்லா இளைஞர்களின் வளரிளமைப் பருவமும் பெற்றோரின் அதிகாரத்துக்கு எதிராக அடங்காமை நிரம்பிய காலமாக இருக்கிறதா? இல்லை, இல்லவே இல்லை. சிறுபான்மையான பருவவயது பிள்ளைகள் மட்டுமே வினைமையான வளரிளமைப்பருவ அடங்காமையை வெளிப்படுத்துகின்றனர் என்று அத்தாட்சிகள் குறிப்பிட்டுக் காண்பிப்பதாக தோன்றுகிறது. இருப்பினும், பிடிவாதமாய் தொடர்ந்து எப்போதும் கலகம் செய்துகொண்டிருக்கும் பிள்ளையைப் பற்றியென்ன? அப்படிப்பட்ட அடங்காமையை எது தூண்டக்கூடும்?
அடங்காமைக்கு காரணங்கள்
7. சாத்தானிய சூழ்நிலை எவ்வாறு ஒரு பிள்ளையை அடங்காமல் போகும்படி செய்விக்கலாம்?
7 இந்த உலகத்தின் சாத்தானிய சூழ்நிலையே அடங்காமைக்கு ஒரு முக்கியமான காரணம். ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) சாத்தானின் செல்வாக்குக்குள் இருக்கும் இவ்வுலகம் தீங்குண்டாக்கும் பண்பாட்டை வளர்த்திருக்கிறது, கிறிஸ்தவர்கள் அதோடு போராட வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. (யோவான் 17:15, NW) இன்று அந்தப் பண்பாட்டின் பெரும்பாகம் கடந்த காலத்தைக் காட்டிலும் அநாகரிகமானதாயும், அதிக ஆபத்தானதாயும், கூடுதலான தீய செல்வாக்குகளால் நிறைந்ததாயும் இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5, 13) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்து, எச்சரித்து, பாதுகாக்கவில்லையென்றால், இளைஞர்கள் ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவியினால்’ எளிதில் மேற்கொள்ளப்படுவார்கள். (எபேசியர் 2:2) சகாக்களிடமிருந்து வரும் அழுத்தம், இதோடு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. பைபிள் சொல்கிறது: “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) அதேபோல், இந்த உலகத்தின் ஆவியில் ஊறியிருப்பவர்களோடு ஒருவர் தோழமை வைத்திருந்தால், அந்த ஆவியால் அவர் செல்வாக்கு செலுத்தப்படுவதன் சாத்தியம் அதிகம் உள்ளது. தெய்வீக நியமங்களுக்கு கீழ்ப்படிவதே மிகச் சிறந்த வாழ்க்கை முறைக்கு அடிப்படை என்பதை இளைஞர் போற்ற வேண்டுமென்றால், அவர்களுக்கு உதவி எப்போதும் தேவைப்படுகிறது.—ஏசாயா 48:17, 18.
8. என்ன காரணக்கூறுகள் ஒரு பிள்ளை அடங்காமல் போவதற்கு வழிநடத்தலாம்?
8 வீட்டில் நிலவும் சூழ்நிலை அடங்காமைக்கு மற்றொரு காரணமாய் இருக்கலாம். உதாரணமாக, பெற்றோரில் ஒருவர் குடிவெறியராக, போதைப்பொருள் துர்ப்பிரயோகம் செய்பவராக, அல்லது துணைவரிடம் வன்முறையாக நடந்துகொள்பவராக இருந்தால், அது வாழ்க்கையைக் குறித்த பருவவயது பிள்ளையின் நோக்குநிலையை கெடுத்துப் போடக்கூடும். பெற்றோருக்கு தன்மீது அக்கறை இல்லை என்று பிள்ளை உணரும்போது, ஓரளவு அமைதி நிலவும் வீடுகளிலும்கூட அடங்காமை திடீரென வெளிப்படலாம். இருப்பினும், பருவவயது அடங்காமை எப்போதுமே புறம்பேயுள்ள செல்வாக்குகளின் காரணமாக ஏற்படுவதில்லை. தெய்வீக நியமங்களைப் பொருத்தி, தங்களைச் சுற்றியிருக்கும் உலகிலிருந்து பிள்ளைகளை பெருமளவில் பாதுகாக்கும் பெற்றோரை கொண்டிருந்தாலும்கூட, சில பிள்ளைகள் பெற்றோரின் மதிப்பீடுகளை நிராகரித்து விடுகின்றனர். ஏன்? நம்முடைய பிரச்சினைகளுக்கு மற்றொரு காரணமாகிய மானிட அபூரணத்தினால் ஒருவேளை இருக்கலாம். பவுல் சொன்னார்: “இப்படியாக, ஒரே மனுஷனாலே [ஆதாம்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) ஆதாம் சுயநலமுள்ள அடங்காதவனாக இருந்தான், அவன் தனக்குப் பின்னால் வந்த சந்ததியார் அனைவருக்கும் மோசமான இந்தப் பரம்பரைச் சொத்தை விட்டுச்சென்றிருக்கிறான். சில இளைஞர்கள் வெறுமனே தங்கள் முற்பிதா செய்ததைப் போன்றே அடங்காமல் இருக்க தெரிந்துகொள்கின்றனர்.
எவ்வித கண்டிப்புமில்லாத ஏலியும் அளவுக்குமீறிய கண்டிப்பான ரெகொபெயாமும்
9. பிள்ளை பயிற்றுவிப்பில் எந்த மிதமிஞ்சிய நிலைகள் பிள்ளை அடங்காமல் போகும்படி தூண்டலாம்?
9 பிள்ளை வளர்ப்பைப் பற்றி பெற்றோர் சமநிலையற்ற எண்ணத்தைக் கொண்டிருப்பது, பருவவயது அடங்காமைக்கு வழிநடத்தியிருக்கும் மற்றொரு காரணமாகும். (கொலோசெயர் 3:21) கடமையுணர்ச்சியுள்ள பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளை கடுமையாக கட்டுப்படுத்தி சிட்சிக்கின்றனர். மற்றவர்கள் கண்டிப்பில்லாமல் விட்டுவிடுகின்றனர், அனுபவமில்லாத தங்கள் வளரிளமைப் பருவத்தினரை பாதுகாப்பதற்கு தேவையான அறிவுரைகளை பெற்றோர் அளிப்பதில்லை. இந்த இரண்டு மிதமிஞ்சிய நிலைகளுக்கு இடையே சமநிலையோடு இருப்பது எப்போதுமே எளிதானதல்ல. வித்தியாசமான பிள்ளைகளுக்கு வித்தியாசமான தேவைகள் உண்டு. ஒரு பிள்ளைக்கு மற்றொன்றைக் காட்டிலும் கூடுதலான மேற்பார்வை தேவைப்படலாம். இருப்பினும், அளவுக்குமீறி கண்டிப்பாக இருப்பது அல்லது எவ்வித கண்டிப்பும் இல்லாமலேயே இருப்பது போன்ற இரண்டு மிதமிஞ்சிய நிலைகளினால் ஏற்படும் அபாயங்களை காண இரண்டு பைபிள் உதாரணங்கள் உதவிசெய்யும்.
10. ஏலி உண்மைத்தன்மையுள்ள பிரதான ஆசாரியராக அநேகமாய் இருந்தபோதிலும் ஏன் நல்ல பெற்றோராய் இருக்கவில்லை?
10 பண்டைய இஸ்ரவேலின் பிரதான ஆசாரியராயிருந்த ஏலி ஒரு தந்தையாக இருந்தார். அவர் 40 வருடங்கள் ஆசாரிய சேவை செய்தார், கடவுளுடைய சட்டங்களை நன்கு அறிந்தவராயிருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஏலி தன் வழக்கமான ஆசாரிய கடமைகளை அநேகமாய் உண்மைத்தன்மையோடு செய்து வந்தார், மேலும் தன் குமாரர்கள் ஓப்னிக்கும் பினெகாசுக்கும் கடவுளுடைய சட்டத்தை அவர் முழுவதுமாக கற்றுக்கொடுத்திருக்கக்கூடும். இருப்பினும், ஏலி தன் குமாரர்களுக்கு அதிக சலுகை காட்டி வந்தார். ஓப்னியும் பினெகாசும் ஆசாரிய சேவை செய்துகொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் “எதற்கும் உதவாத மனிதர்களாய்,” இருந்தனர், அவர்கள் தங்கள் பசியையும் ஒழுக்கயீனமான விருப்பங்களையும் திருப்திசெய்துகொள்வதில் மட்டுமே அக்கறையுள்ளவர்களாய் இருந்தனர். இருப்பினும், அவர்கள் பரிசுத்தமான இடத்தில் வெட்கக்கேடான செயல்களை செய்தபோது, ஏலி அவர்களை ஆசாரிய சேவையிலிருந்து வெளியேற்ற தைரியமாய் செயல்படவில்லை. அவர் வெறுமனே அவர்களை குறைவாகவே கடிந்துகொண்டார். ஏலி கண்டிக்காமல் இருந்ததன் காரணமாக, கடவுளைக் காட்டிலும் தன் குமாரர்களை கனம்பண்ணினார். அவருடைய குமாரர்கள் யெகோவாவின் தூய வணக்கத்துக்கு எதிராக அடங்காமல் போனார்கள், அதன் காரணமாக ஏலியின் முழு வீட்டாரும் பெருந்துன்பத்தை அனுபவித்தார்கள்.—1 சாமுவேல் 2:12-17, NW, 22-25, 29; 3:13, 14; 4:11-22.
11. ஏலியின் தவறான முன்மாதிரியிலிருந்து பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 இந்தச் சம்பவங்கள் நடந்தபோது ஏலியின் குமாரர்கள் ஏற்கெனவே வயதுவந்தவர்களாய் இருந்தனர், ஆனால் சிட்சை கொடுக்காமல் இருப்பதன் அபாயத்தை இந்தச் சரித்திரம் வலியுறுத்திக் காண்பிக்கிறது. (நீதிமொழிகள் 29:21-ஐ ஒப்பிடுக.) சில பெற்றோர் அன்பை கண்டிப்பில்லாமையோடு சேர்த்து குழப்பிவிடுகின்றனர், தெளிவான, நிலையான, நியாயமான விதிமுறைகளை வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தவறிவிடுகின்றனர். தெய்வீக நியமங்களை மீறினாலும்கூட, அவர்கள் அன்பான சிட்சை கொடுக்க தவறிவிடுகின்றனர். அப்படி கண்டிப்பில்லாமல் இருப்பதன் காரணமாக, பெற்றோர் செலுத்தக்கூடிய அதிகாரத்திற்கோ அல்லது வேறு எந்தவகையான அதிகாரத்திற்கோ செவிசாய்க்காமல் போய்விடும் நிலைக்கு அவர்களுடைய பிள்ளைகள் வந்துவிடுகின்றனர்.—பிரசங்கி 8:11-ஐ ஒப்பிடுக.
12. அதிகாரம் செலுத்துவதில் ரெகொபெயாம் என்ன தவறு செய்தார்?
12 அதிகாரத்தைக் கையாளுவதில், மிதமிஞ்சிய நிலைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக ரெகொபெயாம் இருக்கிறார். அவர் இஸ்ரவேல் தேசத்து கூட்டரசின் கடைசி ராஜாவாக இருந்தார், ஆனால் அவர் ஒரு நல்ல ராஜாவாக இருக்கவில்லை. அவருடைய தகப்பனாகிய சாலொமோனால் சுமத்தப்பட்ட பாரங்களினால் அதிருப்தியடைந்திருந்த ஜனங்களைக் கொண்ட ஒரு தேசத்தை ரெகொபெயாம் சுதந்தரித்துக்கொண்டார். ரெகொபெயாம் புரிந்துகொள்ளுதலைக் காண்பித்தாரா? இல்லை. பெருஞ்சுமையாயிருந்த நடவடிக்கைகள் சிலவற்றை நீக்கும்படி தூதுக்குழு ஒன்று அவரைக் கேட்டுக்கொண்டபோது, அவர் தனக்கு வயதில் மூத்தவர்களாயிருந்த ஆலோசகர்களின் புத்திமதியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு, ஜனங்களின் சுமையை இன்னும் பாரமாக ஆக்குவதற்கு கட்டளையிட்டார். எதிர்த்துக் கலகம் செய்யும்படி வடதேசத்து பத்து கோத்திரங்களை அவருடைய ஆணவம் தூண்டிற்று. அந்த ராஜ்யம் இரண்டாகப் பிளவுற்றது.—1 இராஜாக்கள் 12:1-21; 2 நாளாகமம் 10:19.
13. பெற்றோர் எவ்வாறு ரெகொபெயாமின் தவறை தவிர்க்கலாம்?
13 ரெகொபெயாமைப் பற்றிய பைபிள் பதிவிலிருந்து பெற்றோர் சில முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்ளலாம். பெற்றோர் ஜெபத்தில் ‘யெகோவாவைத் தேடி’ பைபிள் நியமங்களின் அடிப்படையில் தங்கள் பிள்ளை-வளர்ப்பு முறைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். (சங்கீதம் 105:4, NW) “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்,” என்று பிரசங்கி 7:7 சொல்கிறது. நன்கு-சிந்தித்து நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் வளரிளமைப் பருவத்தினர் வளர்ந்து வருகையில் போதிய சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்கின்றன, அதேசமயத்தில் அவை அவர்களைத் தீமையிலிருந்து பாதுகாக்கின்றன. ஆனால் தன்மீது சார்ந்திருத்தல், தன்னம்பிக்கை ஆகியவற்றை நியாயமான அளவு வளர்த்துக்கொள்வதிலிருந்து தடைசெய்யக்கூடிய கண்டிப்பான, ஒடுக்கி நெருக்குகிற சூழ்நிலையில் பிள்ளைகள் வாழக்கூடாது. தெரிவு செய்யும் உரிமைக்கும் தெளிவாய் விளக்கப்பட்டிருக்கும் உறுதியான வரம்புகளுக்கும் இடையே சமநிலையை காத்துக்கொள்ள பெற்றோர் முயலும்போது, பெரும்பாலான பருவவயதினர் அடங்காமல் போகும் மனச்சாய்வை பெரும்பாலும் கொண்டிருக்க மாட்டார்கள்.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வது அடங்காமையைத் தவிர்க்கக்கூடும்
14, 15. பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளையின் வளர்ச்சியை நோக்க வேண்டும்?
14 தங்கள் வாலிபப் பிள்ளைகள் சரீரப்பிரகாரமாக சிசுப்பருவத்திலிருந்து வயதுவந்தோராக வளருவதைக் கண்டு பெற்றோர் மகிழ்ச்சியடைந்தாலும், பெற்றோர்மீது சார்ந்திருப்பதை விட்டு வளரிளமைப்பருவ பிள்ளைகள் தங்கள் மீதே சார்ந்திருக்க ஆரம்பிக்கையில் அவர்களுக்கு வருத்தம் ஏற்படலாம். இந்த மாற்றம் நிகழும் சமயத்தில் உங்கள் பருவவயது பிள்ளை அவ்வப்போது பிடிவாதமாய் அல்லது ஒத்துழைக்காமல் போகும்போது நீங்கள் ஆச்சரியப்படாதீர்கள். முதிர்ச்சிவாய்ந்த, நிலையான, பொறுப்புள்ள கிறிஸ்தவனாக வளர்ப்பதே கிறிஸ்தவ பெற்றோரின் இலக்காக இருக்கவேண்டும் என்பதை மனதில் வையுங்கள்.—1 கொரிந்தியர் 13:11; எபேசியர் 4:11, 14.
15 வளரிளமைப்பருவ பிள்ளைகள் மிகுதியான சுயாதீனத்திற்காக கேட்கும் எந்த வேண்டுகோளுக்கும் மறுப்புத் தெரிவிக்கும் பழக்கத்தை பெற்றோர் நிறுத்த வேண்டும், அது கடினமாக இருந்தாலும் பெற்றோர் அதை செய்ய வேண்டும். தனிப்பட்ட தன்மைகளையுடைய ஒரு நபராக நல்லவிதத்தில் பிள்ளை வளருவதற்கு அனுமதிக்க வேண்டும். உண்மையில் சில பருவவயதினர் இளவயதிலேயே பெரியவர்களுக்கு இருக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். உதாரணமாக, யோசியா என்ற இளம் ராஜாவைப் பற்றி பைபிள் சொல்கிறது: ‘தான் இன்னும் இளவயதாயிருக்கையில், [ஏறக்குறைய 15 வயதாயிருக்கையில்] தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்தான்.’ இந்த தனிச்சிறப்புவாய்ந்த பருவவயது பிள்ளை சந்தேகமின்றி ஒரு பொறுப்புள்ள நபராக இருந்தான்.—2 நாளாகமம் 34:1-3.
16. பிள்ளைகளுக்கு கூடுதலான பொறுப்புகள் கொடுக்கப்படுகையில், அவர்கள் எதை உணர வேண்டும்?
16 என்றபோதிலும், தன் செயல்களினால் ஏற்படும் விளைவுகளை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பையும் சுயாதீனம் அதனுடன் கொண்டுவருகிறது. ஆகையால், வயதுவந்தோர் பருவத்தை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் உங்கள் பிள்ளை தான் எடுக்கும் சில தீர்மானங்கள், செயல்கள் ஆகியவற்றுக்கான விளைவுகளை அனுபவிக்கும்படி அனுமதியுங்கள். “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்ற நியமம் பருவவயது பிள்ளைகளுக்கும் வயதுவந்தவர்களுக்கும் பொருந்துகிறது. (கலாத்தியர் 6:7) பிள்ளைகளை எப்போதும் பாதுகாத்துக் கொண்டிருக்கமுடியாது. உங்கள் பிள்ளை முற்றிலும் ஏற்கத்தகாத ஏதோவொன்றை செய்ய விரும்பினால் என்ன செய்வது? பொறுப்புள்ள பெற்றோராக நீங்கள், “செய்யக்கூடாது” என்று சொல்ல வேண்டும். மேலும், நீங்கள் காரணங்களை விளக்கினாலும், உங்களுடைய செய்யக்கூடாது என்ற பதிலை செய்யலாம் என்ற பதிலாக எதுவும் மாற்றக்கூடாது. (மத்தேயு 5:37-ஐ ஒப்பிடுக.) இருப்பினும், “செய்யக்கூடாது” என்பதை சாந்தமாகவும் நியாயமானமுறையிலும் சொல்ல முயற்சிசெய்யுங்கள், ஏனென்றால் “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்.”—நீதிமொழிகள் 15:1.
17. ஒரு பெற்றோர் பூர்த்திசெய்ய வேண்டிய பருவவயது பிள்ளைகளுடைய சில தேவைகள் யாவை?
17 கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் இளம் நபர்கள் எப்போதும் உடனடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, நிலையாக சிட்சை அளிப்பதன் பாதுகாப்பு இளம் நபர்களுக்கு தேவை. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பெற்றோர் எவ்வாறு உணருகிறார்களோ அதற்கேற்ப விதிமுறைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தால் அது ஏமாற்றத்தை விளைவிக்கும். மேலும், மனவுறுதியற்று தயங்குதல், கூச்சமுள்ள சுபாவம், அல்லது தன்னம்பிக்கை குறைவுபடுதல் போன்றவற்றை சமாளிப்பதற்கு தேவைப்படும் உற்சாகத்தையும் உதவியையும் பருவவயதினர் பெற்றுக்கொண்டால், அவர்கள் பெரும்பாலும் எளிதில் அசைக்கமுடியாத திடம்வாய்ந்த நபர்களாக வளரும் சாத்தியம் அதிகமிருக்கிறது. தாங்கள் சம்பாதித்துக்கொண்ட நம்பிக்கையைப் பெறும்போதும்கூட பருவவயது பிள்ளைகள் அதைப் போற்றுகின்றனர்.—ஏசாயா 35:3, 4; லூக்கா 16:10; 19:17-ஐ ஒப்பிடுக.
18. பருவவயது பிள்ளைகளைக் குறித்து சில உற்சாகமூட்டும் உண்மைகள் யாவை?
18 சமாதானம், நிலையானத்தன்மை, அன்பு ஆகியவை குடும்பத்துக்குள் இருக்கையில் பிள்ளைகள் பொதுவாக செழித்தோங்குவர் என்பதை பெற்றோர் அறிந்துகொள்வதில் ஆறுதலடையலாம். (எபேசியர் 4:31, 32; யாக்கோபு 3:17, 18) குடிவெறி பழக்கமோ, வன்முறையோ அல்லது வேறு ஏதாவது தீங்கான செல்வாக்கோ இருக்கும் குடும்பங்களிலிருந்து வரும் அநேக இளைஞர் ஒரு மோசமான வீட்டு சூழ்நிலையையும்கூட எதிர்த்துச் சமாளித்து மிகச் சிறந்த பெரியவர்களாக வளர்ந்திருக்கின்றனரே. எனவே, அன்பு, பாசம், கவனிப்பு, பாதுகாப்பான உணர்வு ஆகியவை நிலவும் ஒரு வீட்டை நீங்கள் உங்கள் பருவவயது பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் நீங்கள் பெருமைப்படத்தக்க பெரியவர்களாக வளருவார்கள். நீங்கள் அளிக்கும் அந்த ஆதரவோடு, வேதாகம நியமங்களுக்கு இசைவான கட்டுப்பாடுகளும் சிட்சையும் இருந்தாலும்கூட, அவர்கள் அப்படிப்பட்டவர்களாக வளருவார்கள்.—ஒப்பிடுக: நீதிமொழிகள் 27:11.
பிள்ளைகள் கஷ்டத்துக்குள்ளாகையில்
19. பெற்றோர் பிள்ளையை நடக்க வேண்டிய வழியிலே நடத்தினாலும், பிள்ளைக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
19 நல்ல பெற்றோராயிருத்தல் நிச்சயமாகவே வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. நீதிமொழிகள் 22:6 சொல்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” இருப்பினும், நல்ல பெற்றோரை உடையவர்களாயிருந்தாலும், வினைமையான பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பற்றியென்ன? இது சாத்தியமா? ஆம். பெற்றோருக்கு ‘செவிகொடுத்துக் கேட்டு’ அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டிய பிள்ளையின் பொறுப்பை அழுத்திக் காண்பிக்கும் மற்ற வசனங்களின் அடிப்படையில் அந்த நீதிமொழியின் வார்த்தைகளை புரிந்துகொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 1:8) குடும்பத்தில் ஒற்றுமை இருக்க வேண்டுமென்றால், வேதாகம நியமங்களை பொருத்துவதில் பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து உழைக்கவில்லையென்றால் கஷ்டங்கள் நிச்சயமாகவே ஏற்படும்.
20. சிந்திக்காமல் செயல்படுவதன் காரணமாக பிள்ளைகள் தவறுசெய்கையில், பெற்றோர் என்ன ஞானமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்?
20 பருவவயது பிள்ளை ஒன்று தவறுசெய்து கஷ்டத்துக்குள்ளானால் பெற்றோர் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? அப்போது விசேஷமாக இளைஞருக்கு உதவி தேவைப்படுகிறது. அனுபவமில்லாத ஒரு இளைஞனை தாங்கள் கையாளுகிறார்கள் என்பதை பெற்றோர் நினைவில் வைத்தால், அவர்கள் அளவுக்குமீறி பிரதிபலிக்கும் மனச்சாய்வை எளிதில் தவிர்த்து விடலாம். பவுல் சபையில் இருந்த முதிர்ச்சிவாய்ந்த நபர்களுக்கு புத்திமதி கூறினார்: “ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்.” (கலாத்தியர் 6:1) சிந்திக்காமல் செயல்பட்டதன் காரணமாக தவறு செய்கிற ஒரு இளைஞனை கையாளுகையில் பெற்றோர் இதே வழிமுறையைப் பின்பற்றலாம். அவனுடைய நடத்தை ஏன் தவறு என்பதையும், மீண்டும் அந்தத் தவறுசெய்வதை அவன் எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் தெளிவாக விளக்கும்போது, தவறான நடத்தையே கெட்டது, அந்த இளைஞன் கெட்டவன் அல்ல, என்பதை பெற்றோர் தெளிவாக்க வேண்டும்.—யூதா 22, 23-ஐ ஒப்பிடுக.
21. கிறிஸ்தவ சபையின் முன்மாதிரியைப் பின்பற்றி, தங்கள் பிள்ளைகள் வினைமையான பாவத்தை செய்கையில் பெற்றோர் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
21 இளைஞரின் தீயசெயல் அதிக வினைமையானதாக இருந்தால் என்ன செய்வது? அப்போது பிள்ளைக்கு விசேஷமான உதவியும் திறமையுள்ள வழிநடத்துதலும் தேவை. சபை அங்கத்தினர் ஒருவர் வினைமையான பாவத்தைச் செய்தால், அவர் மனந்திரும்பி உதவிக்காக மூப்பர்களை அணுகும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார். (யாக்கோபு 5:14-16) அவர் மனந்திரும்பினால், அவரை ஆவிக்குரியப்பிரகாரமாய் திரும்பவும் நிலைநாட்டுவதற்கு மூப்பர்கள் உதவிசெய்வர். அந்த விஷயத்தை மூப்பர்களோடு கலந்து பேசும் தேவை இருந்தாலும்கூட, குடும்பத்தில் உள்ள தவறுசெய்யும் பருவவயது பிள்ளைக்கு உதவிசெய்ய வேண்டிய பொறுப்பு பெற்றோர் பேரில் சார்ந்திருக்கிறது. தங்கள் பிள்ளைகளில் ஒன்று செய்த வினைமையான குற்றத்தை மூப்பர் குழுவிடமிருந்து மறைத்து வைக்க அவர்கள் நிச்சயமாகவே முயற்சி செய்யக்கூடாது.
22. தங்கள் பிள்ளை ஒரு வினைமையானத் தவறைச் செய்கையில் யெகோவாவைப் பின்பற்றும் விதத்தில் என்ன மனநிலையை பெற்றோர் காத்துக்கொள்ள முயற்சிசெய்வர்?
22 தன் சொந்த பிள்ளையை உட்படுத்தும் ஒரு வினைமையான பிரச்சினை தாங்கிக்கொள்வதற்கு அதிக கடினமாக இருக்கலாம். உணர்ச்சி சம்பந்தமாக மனக்குழப்பத்தில் இருக்கையில், கீழ்ப்படியாத பிள்ளையை கோபத்தோடு மிரட்டுவதற்கு பெற்றோர் தூண்டப்படலாம்; ஆனால் இது அவனை வெறுமனே கசப்படைய மட்டும்தான் செய்யும். இந்த இக்கட்டான சமயத்தில் அவன் எவ்வாறு நடத்தப்படுகிறான் என்பதன் பேரில் இந்த இளம் நபரின் எதிர்காலம் ஒருவேளை சார்ந்திருக்கலாம் என்பதை மனதில் வையுங்கள். தம்முடைய ஜனங்கள் சரியானதைச் செய்வதிலிருந்து வழிவிலகிச் சென்றபோது—மனந்திரும்பினால் மட்டுமே—யெகோவா மன்னிப்பதற்கு தயாராயிருந்தார் என்பதையும் மனதில் வையுங்கள். அவருடைய அன்பான வார்த்தைகளை செவிகொடுத்துக் கேளுங்கள்: “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.” (ஏசாயா 1:18) பெற்றோருக்கு என்னே ஒரு சிறந்த முன்மாதிரி!
23. தங்கள் பிள்ளை ஒன்று பெரும் பாவம் செய்கையில் பெற்றோர் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்கள் எதைத் தவிர்க்க வேண்டும்?
23 எனவே, கீழ்ப்படியாத பிள்ளை தன் போக்கை மாற்றிக்கொள்வதற்கு உற்சாகப்படுத்துங்கள். அனுபவமுள்ள பெற்றோர், சபை மூப்பர்கள் ஆகியோரிடமிருந்து புத்திமதியை நாடுங்கள். (நீதிமொழிகள் 11:14) உணர்ச்சிவசப்பட்டு, உங்கள் பிள்ளை உங்களிடம் திரும்பி வருவதை கடினமாக்கும் காரியங்களை செய்யாதீர்கள் அல்லது சொல்லாதீர்கள். கட்டுப்பாடில்லாத கோபத்தையும் கசப்பையும் தவிருங்கள். (கொலோசெயர் 3:8) சீக்கிரத்தில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். (1 கொரிந்தியர் 13:4, 7) கெட்ட காரியத்தை வெறுத்தாலும், உங்கள் பிள்ளையிடமாக மனக்கசப்படைந்து உணர்ச்சியற்று இருந்து விடாதீர்கள். அதிமுக்கியமாக, பெற்றோர் ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் கடவுள் பேரில் தங்கள் விசுவாசத்தை பலமாக வைத்திருக்கவும் முயற்சிசெய்ய வேண்டும்.
விடாப்பிடியாய் அடங்காமல் இருக்கும் பிள்ளையை கையாளுதல்
24. ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் என்ன கவலைக்கிடமான சூழ்நிலை சிலசமயங்களில் எழும்புகிறது, பெற்றோர் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
24 ஒரு இளைஞன் கிறிஸ்தவ மதிப்பீடுகளை முழுவதுமாக நிராகரிப்பதற்கும் கலகம் செய்வதற்கும் திட்டவட்டமான தீர்மானம் எடுத்திருக்கிறான் என்பது சிலருடைய விஷயங்களில் தெளிவாக தெரிகிறது. அப்போது மற்ற பிள்ளைகளின் குடும்ப வாழ்க்கையை காத்துவருவது அல்லது மறுபடியுமாக கட்டுவது ஆகியவற்றின் பேரில் கவனம் மாற்றப்பட வேண்டும். அடங்காத பிள்ளையிடம் உங்கள் சக்தியையெல்லாம் இழந்துவிட்டு மற்ற பிள்ளைகளை கவனியாமல் விட்டுவிடாமலிருப்பதைக் குறித்து கவனமாயிருங்கள். குடும்பத்திலுள்ள மற்ற அங்கத்தினர்களிடம் கஷ்டத்தை சொல்லாமல் மறைத்து வைக்க முயற்சிசெய்வதற்குப் பதிலாக, அவர்களோடு அவ்விஷயத்தை பொருத்தமான அளவிலும் திரும்ப உறுதியளிக்கும் விதத்திலும் கலந்து பேசுங்கள்.—நீதிமொழிகள் 20:18-ஐ ஒப்பிடுக.
25. (அ) கிறிஸ்தவ சபையின் மாதிரியைப் பின்பற்றி, ஒரு பிள்ளை விடாப்பிடியாய் அடங்காமல் போய்விட்டால் பெற்றோர் எவ்வாறு செயல்பட வேண்டும்? (ஆ) பிள்ளைகளில் ஒன்று அடங்காமல் போனால் பெற்றோர் எதை மனதில் வைக்க வேண்டும்?
25 சபையில் திருத்தமுடியாத அடங்காதவராக ஆகிவிடும் ஒருவரைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னார்: “அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.” (2 யோவான் 10) சட்ட வரம்புக்கு உட்பட்ட வயதுவந்த பிள்ளையாக இருந்து முற்றிலும் அடங்காதவனாக ஆகிவிட்டால், பெற்றோர் அதே நிலைநிற்கையை எடுக்க வேண்டிய அவசியமிருப்பதாக உணரலாம். அப்படிப்பட்ட நடவடிக்கை கடினமாயும் வேதனை தருவதாயும் இருந்தாலும், மற்ற குடும்ப அங்கத்தினர்களை பாதுகாப்பதற்கு அது சில சமயங்களில் இன்றியமையாதது. உங்களுடைய குடும்பத்துக்கு உங்களுடைய பாதுகாப்பும் இடைவிடா மேற்பார்வையும் அவசியம். எனவே, தெளிவாக விளக்கப்பட்ட, அதே சமயத்தில் நியாயமான நடத்தை வரம்புகளை தொடர்ந்து காத்து வாருங்கள். மற்ற பிள்ளைகளோடு கருத்துக்களை பறிமாறிக்கொள்ளுங்கள். பிள்ளைகள் பள்ளியிலும் சபையிலும் எவ்வாறு இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள ஆவலாயிருங்கள். மேலும், அடங்காத பிள்ளையின் செயல்களை நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்றாலும்கூட, அவனை நீங்கள் விரோதிக்கவில்லை என்பதை மற்ற பிள்ளைகள் அறியும்படி செய்யுங்கள். பிள்ளையை கண்டனம் செய்வதற்கு பதிலாக கெட்ட செயலை கண்டனம் செய்யுங்கள். யாக்கோபின் இரண்டு குமாரர்கள் கொடூரமான செயலை செய்ததன் காரணமாக குடும்பத்தின்மீது அவமதிப்பை கொண்டுவந்தபோது, யாக்கோபு அவர்களுடைய உக்கிரமான கோபத்தை சபித்தார், பிள்ளைகளை சபிக்கவில்லை.—ஆதியாகமம் 34:1-31; 49:5-7.
26. பிள்ளைகளில் ஒன்று அடங்காமல் போகையில் கடமையுணர்ச்சியுள்ள பெற்றோர் எதிலிருந்து ஆறுதலடையலாம்?
26 உங்கள் குடும்பத்தில் நடந்தவற்றுக்கு ஒருவேளை நீங்களே பொறுப்பாளி என உணரலாம். ஆனால் நீங்கள் ஜெபசிந்தையோடு உங்களாலான எல்லாவற்றையும் செய்திருந்தால், உங்களால் முடிந்தவரை யெகோவாவின் புத்திமதியைப் பின்பற்றியிருந்தால், நீங்கள் உங்களையே அநியாயமாக குறைகூறிக்கொள்ள வேண்டியதில்லை. எவருமே ஒரு பரிபூரண பெற்றோராக இருக்கமுடியாது என்ற உண்மையில் ஆறுதல் அடையுங்கள், ஆனால் நீங்கள் கடமையுணர்ச்சியோடு நல்ல பெற்றோராய் இருக்க முயன்றீர்கள். (அப்போஸ்தலர் 20:27-ஐ ஒப்பிடுக.) முழுக்க முழுக்க அடங்காமல் இருக்கும் ஒருவனை வீட்டில் கொண்டிருப்பது நெஞ்சைப் பிளக்கிறதாய் இருக்கும், ஆனால் அது உங்களுக்கு நேரிடுமானால், கடவுள் அதைப் புரிந்துகொள்கிறார், தன் பற்றுமாறா ஊழியர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற உறுதியோடு இருங்கள். (சங்கீதம் 27:10) ஆகையால் வீட்டில் இருக்கும் மற்ற பிள்ளைகளுக்கு உங்கள் வீட்டை ஒரு பாதுகாப்பான, ஆவிக்குரிய புகலிடமாக வைக்க தீர்மானமாயிருங்கள்.
27. கெட்ட குமாரனைப் பற்றிய உவமையை நினைவில் வைத்து, அடங்காமல் போகும் பிள்ளையின் பெற்றோர் எதற்காக எப்போதும் நம்பிக்கையோடு இருக்கலாம்?
27 மேலும், நீங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. சரியான பயிற்றுவிப்பை அளிப்பதற்கு நீங்கள் ஆரம்பத்தில் எடுத்த முயற்சிகள், வழி தவறிப்போகும் பிள்ளையின் இதயத்தை இறுதியில் பாதித்து அவன் தன் தவறுகளை உணரும்படி செய்விக்கலாம். (பிரசங்கி 11:6) அநேக கிறிஸ்தவ குடும்பங்கள் நீங்கள் பெற்றிருந்த அனுபவங்களைப் போன்ற அனுபவங்களையே பெற்றிருக்கின்றன. இயேசுவின் உவமையில் உள்ள கெட்ட குமாரனைப் போன்று அவர்களில் சிலர் தங்கள் கீழ்ப்படியாத பிள்ளைகள் திரும்பி வருவதை பார்த்திருக்கின்றனர். (லூக்கா 15:11-32) அதே காரியம் உங்களுக்கும் நடக்கக்கூடும்.