Skip to content

குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள்

குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள்

குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள்

குடும்பங்கள் உண்மையில் மகிழ்ச்சியாய் இருக்கமுடியுமா?

இது எவ்வாறு இயலும்?

இந்தத் துண்டுப்பிரதியில் காணப்படுகிறவர்களைப்போல ஐக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிற எந்தக் குடும்பங்களையாவது உங்களுக்குத் தெரியுமா? எல்லா இடங்களிலும் குடும்பங்கள் பிளவுப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மணவிலக்கு, வேலைப் பாதுகாப்பின்மை, ஒற்றைப் பெற்றோர் இரண்டக நிலைகள், ஏமாற்றம்—இவையனைத்தும் நெருக்கடிக்குக் காரணமாயிருக்கின்றன. குடும்ப வாழ்க்கையின்பேரில் வல்லுநரான ஒருவர் இவ்வாறு புலம்பினார்: “இதற்குள்ளாக, குடும்ப சிதைவைப்பற்றிய முன்னறிவிப்புகள் எல்லாராலும் நன்கு அறியப்பட்டவை ஆகிவிட்டன.”

இன்று ஏன் குடும்பங்கள் இப்படிப்பட்ட துயரார்ந்தப் பிரச்னைகளால் தீவிரமாகத் தாக்கப்படுகின்றன? நாம் எவ்வாறு குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்கலாம்?

குடும்பம் எவ்விதம் ஆரம்பமானது

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, திருமணம் மற்றும் குடும்பத்தின் ஆரம்பத்தைப்பற்றி நாம் அறிவது அவசியம். இவற்றைத் தொடங்கி வைத்தவர்—ஒரு சிருஷ்டிகர்—இருந்தாராகில், குடும்ப அங்கத்தினர்கள் வழிநடத்துதலுக்காக அவரை நோக்கியிருக்கவேண்டும்; ஏனென்றால் குடும்ப வாழ்க்கையை நாம் எவ்வாறு முழுமையாக மகிழ்ந்து அனுபவிக்கலாம் என்பதை நிச்சயமாகவே அவர் மிக நன்றாக அறிந்திருப்பார்.

அக்கறைக்குரிய விதமாக, குடும்ப ஏற்பாட்டுக்கு எந்த மூலகாரணரும் இல்லை என்று அநேகர் நம்புகின்றனர். தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா சொல்லுகிறது: “மனிதனிலும் தாழ்வான விலங்குகளின் ஜோடிசேரும் பழக்கங்களிலிருந்து திருமணம் ஆரம்பித்தது என நிரூபிக்க சில கல்விமான்கள் முயலுகின்றனர்.” என்றபோதிலும், ஆணும் பெண்ணும் சிருஷ்டிக்கப்பட்டதைப்பற்றி இயேசு கிறிஸ்து பேசினார். அவர் பூர்வ பைபிள் பதிவை அதிகாரமாக மேற்கோள்காட்டி சொன்னதாவது: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”—மத்தேயு 19:4-6.

ஆகவே இயேசு கிறிஸ்து சொன்னது சரி. ஒரு புத்திக்கூர்மையுள்ள கடவுள் முதல் மானிடரைச் சிருஷ்டித்து மகிழ்ச்சியானக் குடும்ப வாழ்க்கைக்காக ஏற்பாடு செய்தார். முதல் தம்பதியைத் திருமணத்தில் ஒன்றாகச் சேர்த்து, மனுஷன் “தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்,” என்று சொன்னார். (ஆதியாகமம் 2:22-24) அப்படியானால் இன்றைய குடும்பப் பிரச்னைகளுக்குக் காரணம், சிருஷ்டிகர் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் கொடுத்துள்ள தராதரங்களை மீறுகிற வாழ்க்கை-பாணிகளின் நாட்டமாக இருக்கக்கூடுமா?

வெற்றிக்கு வழி எது?

நீங்கள் சந்தேகமில்லாமல் அறிந்திருக்கிறபடி, நவீன உலகம் சுய-நலத்தையும் சுய-நிறைவேற்றத்தையும் ஊக்கப்படுத்துகிறது. “பேராசை ஆரோக்கியமானது,” என்று ஒரு நிதிநிலை நிர்வாகி ஐக்கிய மாகாணத்தில், ஒரு கல்லூரிப் பட்டமளிப்பு வகுப்பில் சொன்னார். “நீங்கள் பேராசையுள்ளவராக இருந்துகொண்டேகூட உங்களைக்குறித்து நன்றாக உணரலாம்.” ஆனால், பொருளுடைமைகளை நாடுவது வெற்றிக்கு வழிநடத்துவதில்லை. உண்மையில், பொருளாசை குடும்ப வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய தனி அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கிறது; ஏனென்றால் அது மனித உறவுகளில் குறுக்கிட்டு, மக்களின் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கிறது. மாறாக, மகிழ்ச்சிக்கு எது முக்கியம் என்பதைக் காண வெறுமனே இரண்டு பைபிள் நீதிமொழிகள் நமக்கு எவ்விதம் உதவிசெய்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

“பகையிருக்கிற இடத்தில் மிகச்சிறந்த இறைச்சியை உண்பதைவிட, உங்களை நேசிக்கிற மக்களோடு காய்கறிகளை உண்பது நல்லது.”

“தொல்லை நிறைந்த ஒரு வீட்டில் விருந்துண்பதைவிட, மனசமாதானத்தோடு காய்ந்துபோன ரொட்டித் துண்டை உண்பதே நல்லது.”

நீதிமொழிகள் 15:17; 17:1, “இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு,” (“Today’s English Version”).

அவை சக்திவாய்ந்தவை அல்லவா? இவற்றிற்கு ஒவ்வொரு குடும்பமும் முன்னுரிமைகள் அளித்திருக்குமாகில், இந்த உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்குமென்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள்! குடும்ப அங்கத்தினர்கள் எவ்விதமாக ஒருவரையொருவர் நடத்தவேண்டும் என்பதன்பேரில் மதிப்புவாய்ந்த வழிநடத்துதலையுங்கூட பைபிள் கொடுக்கிறது. அது கொடுக்கிற சில ஆலோசனைகளை மட்டும் கவனியுங்கள்.

புருஷர்கள்: ‘உங்களுடைய சொந்த சரீரத்தைப்போல உங்கள் மனைவியை அன்புகூருங்கள்.’—எபேசியர் 5:28-30.

எளிமையானது, ஆனால் மிகவும் நடைமுறையானது! கணவன் ‘தன்னுடைய மனைவியைக் கனம்பண்ணுவதற்குங்’கூட பைபிள் கட்டளையிடுகிறது. (1 பேதுரு 3:7) கனிவு, புரிந்துகொள்ளுதல், நம்பிக்கையூட்டுதல் ஆகியவை உட்பட, அவளுக்கு விசேஷித்த கவனத்தைக் கொடுப்பதன்மூலம் அவன் இதைச் செய்கிறான். மேலும் அவளுடைய அபிப்பிராயங்களை அவன் மதித்து அவளுக்குச் செவிகொடுக்கிறான். (ஆதியாகமம் 21:12-ஐ ஒத்துப்பாருங்கள்.) கணவன்தானே தான் நடத்தப்பட விரும்புகிறபடி, தன்னுடைய மனைவியை அக்கறையுடன் நடத்துவானாகில், எந்தக் குடும்பமும் பிரயோஜனமடையும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்களா?—மத்தேயு 7:12.

மனைவிகள்: ‘[உங்களுடைய] கணவனுக்கு ஆழ்ந்த மரியாதையைக் கொண்டிருங்கள்.’—எபேசியர் 5:33.

ஒரு மனைவி, தன் கணவனுடைய பாரமான உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்கு உதவுவதன்மூலம் குடும்ப மகிழ்ச்சிக்கு உதவுகிறாள். இதுதான் முன்னரே திட்டமிடப்பட்டது, ஏனென்றால் கடவுள் ஒரு மனைவியை “அவனுக்கு ஓர் உதவியாளாக, பூர்த்திசெய்பவளாக,” இருப்பதற்கு அளித்தார். (ஆதியாகமம் 2:18, NW) மனைவி தன்னுடைய கணவனின் தீர்மானங்களை ஆதரித்து குடும்ப இலக்குகளை அடைவதற்கு அவருடன் ஒத்துழைப்பதன்மூலம் கணவனுக்கு மரியாதைச் செலுத்தும்போது, குடும்ப வாழ்க்கைக்குக் கிடைக்கும் ஆசீர்வாதத்தை உங்களால் மதித்துணர முடிகிறதா?

திருமணத் துணைவர்கள்: “கணவர்களும் மனைவிகளும் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும்.”—எபிரெயர் 13:4, TEV.

அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருக்கும்பொழுது, குடும்ப வாழ்க்கை பிரயோஜனமடைவது நிச்சயம். விபசாரம் ஒரு குடும்பத்தை பெரும்பாலும் பாழ்ப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 6:27-29, 32) ஆகவே, ஞானமாகவே பைபிள் தூண்டுகிறது: “உன் மனைவியோடு மகிழ்ந்திரு, நீ திருமணம்செய்த பெண்ணோடு உன்னுடைய சந்தோஷத்தைக் காண்பாயாக . . . உன் நேசத்தை நீ வேறொரு பெண்ணுக்கு கொடுப்பானேன்?”—நீதிமொழிகள் 5:18-20, TEV.

பெற்றோர்: “[உங்கள் பிள்ளைகளை] நடக்கவேண்டிய வழியிலே நடத்து[ங்கள்].”—நீதிமொழிகள் 22:6.

பெற்றோர் பிள்ளைகளுக்கு நேரத்தையும் கவனத்தையும் கொடுக்கும்போது, குடும்ப வாழ்க்கை முன்னேறுவது நிச்சயம். இவ்விதமாக, பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குச் சரியான நியமங்களை ‘தங்களுடைய வீட்டில் அவர்கள் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்’ கற்பிக்கும்படியாகப் பைபிள் தூண்டுகிறது. (உபாகமம் 11:20) பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைச் சிட்சிப்பதன்மூலம் அவர்களை நேசிக்கிறார்கள் என்பதைக் காட்டவேண்டும் என்றுங்கூட பைபிள் சொல்கிறது.—எபேசியர் 6:4.

பிள்ளைகள்: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்.”—எபேசியர் 6:1.

உண்மைதான், இந்த அக்கிரம உலகில், உங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிவது எப்பொழுதும் சுலபமானதல்ல. என்றபோதிலும், குடும்பத்தை தொடங்கி வைத்தவர் நமக்குச் சொல்கிறதைச் செய்வது ஞானமானது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? நம்முடைய குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குவதற்கு எது மிகச் சிறந்தது என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆகவே உங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிய கடினமாக முயற்சிசெய்யுங்கள். கெட்ட காரியங்களைச் செய்வதற்கான உலகத்தின் அநேக கவர்ச்சிகளைத் தவிர்க்கத் தீர்மானமாயிருங்கள்.—நீதிமொழிகள் 1:10-19.

ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் பைபிளின் ஆலோசனையைப் பொருத்துகின்ற அளவுக்கு, குடும்ப வாழ்க்கை பிரயோஜனமடையும். ஒரு மேம்பட்ட வாழ்க்கையை இப்பொழுது குடும்பம் மகிழ்ந்து அனுபவிப்பது மட்டுமல்லாமல், கடவுளால் வாக்களிக்கப்பட்டப் புதிய உலகில் ஓர் அதிசயமான எதிர்காலத்தின் எதிர்பார்ப்பையும் அது மகிழ்ந்தனுபவிக்கும். (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆகவே பைபிளை ஒன்றுசேர்ந்து படிப்பதை ஒரு குடும்பப் பழக்கமாக்குங்கள்! பூமி முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கானக் குடும்பங்கள், ‘நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்’ என்ற அழகிய படங்களுள்ள புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிநடத்துதல் ஓர் உண்மையான பிரயோஜனமாயிருப்பதாகக் கண்டிருக்கின்றனர்.

மற்றபடி குறிப்பிட்டிருந்தால் தவிர, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிள் பயன்படுத்தப்படுகிறது. NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்.

[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]

[படத்திற்கான நன்றி]: Cubs: Courtesy Hartebeespoortdam Snake and Animal Park.