Skip to content

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை

இந்தத் துண்டுப் பிரதியிலுள்ள அழகிய காட்சியைப் பார்க்கும்போது, உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்படுகிறது? சமாதானமும் சந்தோஷமும் செழுமையும் நிறைந்த இதுபோன்ற இடத்தில் வாழ வேண்டுமென உங்கள் இருதயம் ஏங்குகிறது, அல்லவா? ஆம், அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதெல்லாம் வெறும் கனவா அல்லது கற்பனையா?

அநேகர் அப்படித்தான் நினைக்கிறார்கள். இன்றைக்கு வாழ்க்கையில் பசி, நோய், முதுமை, போர், குற்றச்செயல், . . . இதெல்லாம்தான் இருக்கிறது. என்றாலும், நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். ஏனென்றால் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13; ஏசாயா 65:17.

பைபிளின்படி, “புதிய வானங்களும்” “புதிய பூமியும்” சொல்லர்த்தமானவை அல்ல. ஏனென்றால் இந்தப் பூமியும் வானமும் எந்தக் குறைபாடும் இல்லாமல் பூரணமாக இருக்கின்றன, அதோடு, இவை என்றைக்கும் அழியாமல் இருக்குமென்றும் பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 89:36, 37; 104:5) ஆகவே, “புதிய பூமி” என்பது இந்தப் பூமியில் வாழப்போகும் நீதியுள்ள மக்களைக் குறிக்கிறது; ‘புதிய வானங்கள்’ என்பது நீதியுள்ள மக்கள்மீது ஆட்சி செய்யப்போகும் பரலோக ராஜ்யத்தை, அதாவது அரசாங்கத்தை, குறிக்கிறது. ஆனால் “புதிய பூமி,” அதாவது அற்புதமான புதிய உலகம், வருவது நடைமுறையில் சாத்தியமா?

சரி, இந்த உண்மையை சிந்தித்துப் பாருங்கள்: இந்தப் பூமியில் இத்தகைய நல்ல நிலைமைகள் இருக்க வேண்டும் என்பதே கடவுளுடைய ஆதி நோக்கமாக இருந்தது. முதல் மனித ஜோடியை பூமியில் ஏதேன் என்ற பரதீஸில்—பூங்காவனம் போன்ற ஓர் இடத்தில்—கடவுள் குடிவைத்தார்; பின்பு அவர்களுக்கு இந்த அருமையான பொறுப்பையும் கொடுத்தார்: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள்.’ (ஆதியாகமம் 1:28) ஆம், அவர்கள் பிள்ளைகளைப் பெற்று, கடைசியில் இந்த முழு பூமியையும் பூங்காவனம் போன்ற பரதீஸாக மாற்ற வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. பிற்பாடு அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் என்றென்றும் வாழும் பாக்கியத்தை இழந்தார்கள், ஆனாலும் கடவுளுடைய ஆதி நோக்கம் மாறவே இல்லை. அது புதிய உலகில் கட்டாயம் நிறைவேற்றப்படும்!—ஏசாயா 55:11.

சொல்லப்போனால், கடவுளுடைய ராஜ்யம் வருவதாக என பரமண்டல ஜெபத்தில் சொல்லும்போது அதையே நீங்கள் கேட்கிறீர்கள். அதாவது அவருடைய பரலோக அரசாங்கம் பூமியிலுள்ள அக்கிரமத்தையெல்லாம் நீக்கி புதிய உலகின் மீது ஆட்சி செய்ய வேண்டும் என்றே கேட்கிறீர்கள். (மத்தேயு 6:9, 10) இந்த ஜெபத்திற்குக் கடவுள் பதிலளிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம், ஏனென்றால் “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்று அவருடைய வார்த்தை வாக்குறுதி அளிக்கிறது.

கடவுளுடைய புதிய உலகில் வாழ்க்கை

கடவுளுடைய ராஜ்யம் ஒப்பற்ற நன்மைகளை வாரிவழங்கும். இந்தப் பூமியில் மக்கள் அனுபவிக்க வேண்டுமென கடவுள் ஆதியில் கொண்டிருந்த நோக்கத்தின்படியே எல்லாவற்றையும் அந்த ராஜ்யம் நன்மையாக மாற்றும். பகைமையோ தப்பெண்ணங்களோ இனிமேல் இருக்காது, பூமியிலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் உண்மையான நண்பர்களாக ஆகிவிடுவார்கள். ‘பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுவதாக’ பைபிளில் கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—சங்கீதம் 46:9; ஏசாயா 2:4.

கடைசியில், இந்த முழு பூமியும் பரதீஸாக, ஓர் அழகிய தோட்டமாக மாற்றப்படும். பைபிள் இவ்வாறு கூறுகிறது: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போல் செழிக்கும். . . . வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும், வெட்டாந்தரை தண்ணீர்த் தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்.”—ஏசாயா 35:1, 6, 7.

பரதீஸ் பூமியில் ஆனந்தமாக இருப்போம் என நம்புவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. மக்கள் இனி ஒருபோதும் உணவின்றி தவிக்க மாட்டார்கள். “பூமி தன் பலனைத் தரும்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 67:6; 72:16) எல்லாரும் தங்களுடைய உழைப்பின் பலனை அனுபவித்து மகிழ்வார்கள் என நம்முடைய படைப்பாளர் வாக்குறுதி அளிக்கிறார்: “திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். . . . அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை.”—ஏசாயா 65:21, 22.

இனிமேல் நெருக்கமான வீடுகளிலோ சேரிகளிலோ மக்கள் குடியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் கடவுளுடைய நோக்கம் இதுவே: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், . . . அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதுமாயிருப்பதில்லை.” அதோடு, பைபிள் இந்த வாக்குறுதியையும் தருகிறது: “அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை.” (ஏசாயா 65:21-23) ஆகவே, மக்கள் அனைவருக்கும் பலன்தரும் திருப்தியான வேலை இருக்கும். வாழ்க்கை சலிக்கவே சலிக்காது.

காலப்போக்கில், ஏதேன் தோட்டத்தில் இருந்தது போல், மிருகங்களுக்கு இடையிலும் சமாதானம் இருக்கும், மிருகங்களுக்கும் மனிதருக்கும் இடையிலும் சமாதானம் இருக்கும். பைபிள் இவ்வாறு கூறுகிறது: “ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக் குட்டியோடே படுத்துக்கொள்ளும். கன்றுகுட்டியும், பால சிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.”—ஏசாயா 11:6-9; ஓசியா 2:18.

சற்று கற்பனை செய்து பாருங்கள், பரதீஸ் பூமியில் எல்லா நோய்களும் உடல் ஊனங்களும் சுகப்படுத்தப்படும்! “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என்று கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதி அளிக்கிறது. (ஏசாயா 33:24) “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.

இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்

நீதி தவழும் புதிய உலக வாழ்க்கையைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் உங்கள் மனதைக் கவர்ந்திருக்கும். இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் உண்மையிலேயே வருமா என சிலர் யோசித்தாலும், நம்முடைய அன்புள்ள படைப்பாளருக்கு இவையெல்லாம் நிறைவேற்ற முடியாதவை அல்ல.—சங்கீதம் 145:16; மீகா 4:4.

அதேசமயத்தில், வரப்போகும் பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழ வேண்டுமென்றால், நாம் செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன. அதில் முக்கியமான ஒன்றைத்தான் கடவுளிடம் ஜெபிக்கையில் இயேசு குறிப்பிட்டார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.

ஆகையால், கடவுளுடைய புதிய உலகில் உண்மையிலேயே நாம் வாழ விரும்பினால், முதலாவதாக கடவுளுடைய சித்தத்தைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும், பின்பு அதன்படி செய்ய வேண்டும். ஏனென்றால், ‘இந்த உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களே என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.’ ஆம், அன்புள்ள நமது படைப்பாளர் பொழியும் ஆசீர்வாதங்களை நித்திய நித்திய காலமாய் அனுபவித்து மகிழ்வார்கள்!—1 யோவான் 2:17.

பைபிள் மேற்கோள்கள் அனைத்தும் தமிழ் யூனியன் பைபிள் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.