Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை ஆளப்போவது யார்?

உலகை ஆளப்போவது யார்?

அதிகாரம் ஒன்பது

உலகை ஆளப்போவது யார்?

மனதை லயிக்கவைக்கும் தானியேல் தீர்க்கதரிசனம் இப்போது, பாபிலோனிய ராஜாவான பெல்ஷாத்சாரின் முதலாம் வருடத்திற்கு நம்மை கொண்டுசெல்கிறது. தானியேல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு வெகுகாலம் ஓடிவிட்டது, ஆனால் இத்தனை காலமும் அவர் யெகோவா தேவனுக்கு உத்தமத்தில் சிறிதும் குறையாதவராய் இருந்திருக்கிறார். இப்போது 70 வயதைத் தாண்டிவிட்ட இந்த உண்மையுள்ள தீர்க்கதரிசி, “ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும்” காண்கிறார். இந்தத் தரிசனங்களைக் கண்டு எப்படி கதிகலங்கிப் போகிறார்!​—தானியேல் 7:1, 15.

2“இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின” என்கிறார் தானியேல். என்னே விசித்திரமான மிருகங்கள்! முதலாவது, செட்டைகளுள்ள சிங்கம்போலவும் இரண்டாவது கரடியைப் போலவும் இருக்கிறது. அதன்பின் வருவது நான்கு செட்டைகளும் நான்கு தலைகளுமுள்ள சிறுத்தை! மகா பலம்படைத்த நான்காம் மிருகத்திற்கு பெரிய இரும்புப் பற்களும் பத்து கொம்புகளும் இருக்கின்றன. இக்கொம்புகளுக்கு இடையே வேறொரு “சின்ன” கொம்பு எழும்புகிறது. இதற்கு ‘மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருக்கிறது.’​—தானியேல் 7:2-8.

3அடுத்ததாக தானியேல் கண்ட தரிசனங்கள் பரலோகத்தினிடமாக கவனத்தைத் திருப்புகின்றன. பரலோக நியாயசங்கத்தில் நியாயாதிபதியாக மாட்சிமையோடு வீற்றிருக்கிறார் நீண்ட ஆயுசுள்ளவர். ‘ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவிக்கிறார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நிற்கிறார்கள்.’ அவர் மிருகங்களுக்குக் கடுமையான தீர்ப்பளித்து, அவற்றின் ஆளுகையை அவற்றைவிட்டு நீக்குகிறார். நான்காம் மிருகத்தைக் கொல்கிறார். “மனுஷகுமாரனுடைய சாயலான” ஒருவருக்கு ‘ஜனங்களையும் ஜாதியாரையும் பாஷைக்காரரையும்’ நித்தியமாய் ஆளும் உரிமை வழங்கப்படுகிறது.​—தானியேல் 7:9-14.

4“தானியேலாகிய நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப் பண்ணினது” என்கிறார் தானியேல். ஆகவே “இதன் பொருள் [“நம்பத்தக்க தகவல்,” NW] எல்லாவற்றையும்” சொல்லுமாறு ஒரு தூதனிடம் கேட்கிறார். தூதனும் “அந்தக் காரியங்களின் அர்த்தத்தை” சொல்கிறார். (தானியேல் 7:15-28) அன்றைய இரவு தானியேல் பார்த்தவையும் கேட்டவையும் நமக்கு மிகுந்த அக்கறைக்குரியவை. ஏனெனில் நம் காலங்கள்வரை​—⁠அதாவது ‘மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவருக்கு’ சகல ‘ஜனங்களையும் ஜாதியாரையும் பாஷைக்காரரையும்’ ஆளும் உரிமை வழங்கப்படும் காலம்வரை​—⁠நடக்கவிருந்த உலக சம்பவங்களை அவை சுட்டிக்காட்டின. கடவுளுடைய வார்த்தை மற்றும் ஆவியின் உதவியால் இந்தத் தரிசனங்களின் அர்த்தத்தை நாமும் புரிந்துகொள்ளலாம்.  a

சமுத்திரத்திலிருந்து எழும்பும் நான்கு மிருகங்கள்

5“வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின” என்றார் தானியேல். (தானியேல் 7:3) காற்றுகளால் அடிக்கப்பட்ட சமுத்திரம் எதை அடையாளப்படுத்தியது? பல வருடங்களுக்குப் பிற்பாடு, அப்போஸ்தலனாகிய யோவான், ஏழு தலையுள்ள மூர்க்க மிருகம் ஒன்று “சமுத்திரத்திலிருந்து” எழும்பிவரக் கண்டார். அந்தச் சமுத்திரம், ‘ஜனங்களையும் கூட்டங்களையும் ஜாதிகளையும் பாஷைக்காரரையும்,’ அதாவது கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் மனிதவர்க்க சமுதாயம் முழுவதையும் அர்த்தப்படுத்தியது. ஆகவே இங்கும் சமுத்திரம் என்பது கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் மனிதவர்க்கத்தைப் பொருத்தமாகவே அடையாளப்படுத்துகிறது.​—வெளிப்படுத்துதல் 13:1, 2; 17:15; ஏசாயா 57:⁠20.

6“அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள்” என்றார் கடவுளுடைய தூதர். (தானியேல் 7:17) தானியேல் பார்த்த நான்கு மிருகங்கள், ‘நாலு ராஜாக்களை’ குறிப்பதாய் தேவதூதன் தெளிவாக சொன்னார். ஆகவே இவை உலக வல்லரசுகளை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் எந்த உலக வல்லரசுகளை?

7பைபிள் விமர்சகர்கள், நான்கு மிருகங்களைப் பற்றிய தானியேலின் சொப்பன-தரிசனத்தையும் மாபெரும் சிலையைப் பற்றிய நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தையும் பொதுவாய் தொடர்புபடுத்துகின்றனர். உதாரணத்திற்கு, த எக்ஸ்போசிட்டர்ஸ் பைபிள் கமென்ட்ரி குறிப்பிடுவதாவது: “[தானியேலின்] ஏழாம் அதிகாரம் அதன் இரண்டாம் அதிகாரத்தோடு ஒத்திருக்கிறது.” த வைக்ளிஃப் பைபிள் கமென்ட்ரி சொல்வதாவது: “அடுத்தடுத்த நான்கு புறமத பேரரசுகளைப் பற்றி . . . இங்கே [தானியேல், ஏழாம் அதிகாரத்தில்] சொல்லப்பட்டிருப்பதும் [தானியேல்] இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பதும் ஒன்றுதான் என பொதுவாய் ஒப்புக்கொள்ளப்படுகிறது.” நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்து சிலையின் நான்கு உலோகங்கள் அடையாளப்படுத்திய நான்கு வல்லரசுகள், பாபிலோன் (பொன் தலை), மேதிய-பெர்சியா (வெள்ளி மார்பும் புயங்களும்), கிரீஸ் (செம்பு வயிறும் தொடைகளும்), ரோம் (இரும்பு கால்கள்) ஆகியவையே.  b (தானியேல் 2:32, 33) இந்த ராஜ்யங்கள் எவ்வாறு தானியேல் பார்த்த நான்கு பெரிய மிருகங்களோடு ஒத்திருக்கின்றன என பார்க்கலாம்.

சிங்கம்போல் மூர்க்கம், கழுகுபோல் வேகம்

8தானியேல் எப்பேர்ப்பட்ட மிருகங்களைக் கண்டார்! அதில் ஒன்றை விளக்குகையில் அவர் சொன்னதாவது: “முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.” (தானியேல் 7:4) இந்த மிருகம், மாபெரும் சிலையின் பொன் தலை அடையாளப்படுத்திய அதே பாபிலோனிய உலக வல்லரசை (பொ.ச.மு. 607-539) அர்த்தப்படுத்தியது. மாமிசப்பட்சிணியான ‘சிங்கத்தை’ போல், பாபிலோன் மூர்க்கங்கொண்டு தேசங்களை விழுங்கியது, கடவுளுடைய ஜனங்களையும் சேர்த்துதான். (எரேமியா 4:5-7; 50:17) கழுகின் செட்டைகளைப் பெற்றதுபோல், இந்தச் “சிங்கம்” விரைந்து பாய்ந்து தேசங்களை இரையாக்கியது.​—புலம்பல் 4:19; ஆபகூக் 1:6-8.

9ஆனால் சிங்கத்தின் இறகுகள் ‘பிடுங்கப்பட்ட’ சமயமும் வந்தது. பெல்ஷாத்சார் ராஜாவினுடைய ஆட்சி முடிவை நெருங்கிய சமயத்தில், பாபிலோன், படையெடுப்பின் வேகத்தையும் தேசங்களின் மீதான அதிகாரத்தையும், அதாவது சிங்கம்போன்ற ராஜகம்பீரத்தையும் இழந்தது. வேகம் குறைந்து, இரு கால்களில் நடக்கும் மனிதனைப்போல் அது ஆகிவிட்டது. ‘மனுஷ இருதயத்தைப்’ பெற்று, பலவீனமானது. ‘சிங்க இருதயத்தை’ இழந்துவிட்ட பாபிலோன், இனியும் ‘காட்டுமிருகங்களின்’ ராஜாவாக நடந்துகொள்ள முடியாது. (ஒப்பிடுக: 2 சாமுவேல் 17:10; மீகா 5:8.) மற்றொரு பெரிய மிருகம் அதன் கொட்டத்தை அடக்கியது.

அகோரப் பசிகொண்ட கரடிபோல்

10“பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது” என்றார் தானியேல். (தானியேல் 7:5) ‘கரடியாக’ சித்தரிக்கப்பட்ட ராஜா, மாபெரும் சிலையின் வெள்ளி மார்பும் புயங்களும் அடையாளப்படுத்திய அதே மேதிய-பெர்சிய அரசர்கள்தான் (பொ.ச.மு. 539-331). முதலாவதாக மேதியனாகிய தரியு, பின் மகா கோரேசு, இறுதியாக மூன்றாம் தரியு என அனைத்து அரசர்களையும் குறித்தது.

11அந்தக் ‘கரடி’ “ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்றது.” உலக வல்லரசென்ற ஸ்தானத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக, தேசங்களைத் தாக்கி அவற்றைக் கைப்பற்றுவதற்கான தயார் நிலையில் இருப்பதை ஒருவேளை இது அர்த்தப்படுத்தியிருக்கலாம். அல்லது, அப்போதைய ஒரே மேதிய அரசரான தரியுவைக் காட்டிலும் பெர்சிய அரசர்கள் உயர்வடைவார்கள் என்பதைக் குறித்திருக்கலாம். கரடியின் பற்களின் பிடியில் இருந்த மூன்று விலாவெலும்புகள், அது போரிட்டு வென்ற மூன்று திசைகளைக் குறித்திருக்கலாம். மேதிய-பெர்சிய ‘கரடி’ பொ.ச.மு. 539-⁠ல் பாபிலோனைக் கைப்பற்ற வடக்கு நோக்கி சென்றது. அதன்பின் ஆசியா மைனர் வழியாய் த்ரேஸுக்கு மேற்கே சென்றது. இறுதியாக இந்தக் ‘கரடி’ எகிப்தைக் கைப்பற்ற தெற்கே சென்றது. மூன்று என்ற எண், சிலசமயம் மிகுதியைக் குறிப்பதால் மூன்று விலாவெழும்புகள் அடையாளப்பூர்வ கரடியின் அதிகாரப் பேராசையைக் குறிக்கலாம்.

12‘எழும்பி வெகு மாம்சம் தின்னு’ என்ற வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதாய் ‘கரடி’ தேசங்களைத் தாக்கியது. தெய்வீக சித்தத்தின்படி பாபிலோனை கைப்பற்றியதன் மூலம், யெகோவாவின் மக்களுக்கு மதிப்புமிக்க சேவை செய்யும் நிலையிலிருந்தது மேதிய-பெர்சியா. அவ்வாறே அது சேவையும் செய்தது! (பக்கம் 149-⁠ல், “பெருந்தன்மைமிக்க அரசர்” என்ற தலைப்பின் கீழ் காண்க.) மேதிய-​பெர்சிய அரசர்​களான மகா கோரேசு, முதலாம் தரியு (மகா தரியு), முதலாம் அர்தசஷ்டா ஆகியோர் சிறைப்படுத்தப்பட்ட யூதர்​களை பாபிலோனி​லிருந்து விடுவித்து, யெகோ​வாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டவும் எருசலேமின் மதில்​களை சீர்படுத்தவும் அவர்களுக்கு உதவி​புரிந்தனர். இறுதியில் மேதிய-பெர்சியா 127 மாகாணங்கள்மீது அதிகாரம் செலுத்தியது. எஸ்தர் ராணியின் கணவன் அகாஸ்வேரு (முதலாம் சஷ்டா) ‘இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரை அரசாண்டார்.’ (எஸ்தர் 1:1) இருந்தாலும் மற்றொரு மிருகம் விரைவில் காட்சியில் தோன்றவிருந்தது.

செட்டையுள்ள சிறுத்தைக்கு ஒத்த மின்னல் வேகம்!

13மூன்றாம் மிருகம் ‘சிவிங்கியைப் [“சிறுத்தையைப்,” NW] போலிருந்தது. . . . அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.’ (தானியேல் 7:6) நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலையின் செம்பு வயிறும் தொடைகளும் இதற்கு ஒத்தவை. இதைப்போலவே, நான்கு செட்டைகளும் நான்கு தலைகளுமுள்ள மிருகம், மகா அலெக்ஸாந்தரிலிருந்து தோன்றிய மக்கெதோனிய அல்லது கிரேக்க அரசர்களை அடையாளப்படுத்தியது. சிறுத்தையைப்போன்ற விறுவிறுப்போடு, அலெக்ஸாந்தர் மின்னல் வேகத்தில் ஆசியா மைனர் வழியாக சென்று, தெற்கே எகிப்தையும் அதன்பின் இந்தியாவின் மேற்கு எல்லையையும் கைப்பற்றினார். (ஆபகூக் 1:8-ஐ ஒப்பிடுக.) அவரது எல்லைப்பரப்பு, ‘கரடியுடையதைக்’ காட்டிலும் பரந்து விரிந்திருந்தது. ஏனெனில் மக்கெதோனியா, கிரீஸ், பெர்சிய சாம்ராஜ்யம் அனைத்தையும் அது உள்ளடக்கியது.​—⁠பக்கம் 153-⁠ல், “உலகையே வென்ற இளம் அரசர்” என்ற தலைப்பின் கீழ் காண்க.

14பொ.ச.மு. 323-⁠ல் அலெக்ஸாந்தர் இறந்த பிறகு அந்தச் ‘சிறுத்தைக்கு’ நான்கு தலைகள் உண்டாயின. அவரது நான்கு தளபதிகள் பேரரசின் வெவ்வேறு பகுதிகளின் அரசர்களானார்கள். செலூக்கஸ் மெசப்பொத்தேமியாவையும் சிரியாவையும் ஆண்டார். எகிப்தும் பலஸ்தீனாவும் தாலமியின் கையில் இருந்தன. லைசிமாக்கஸ், ஆசியா மைனரையும் த்ரேஸையும் ஆண்டார். கஸாண்டர் மக்கெதோனியாவுக்கும் கிரீஸுக்கும் அரசரானார். (பக்கம் 162-⁠ல், “மாபெரும் சாம்ராஜ்யம் பிளவுறுகிறது” என்ற தலைப்பின் கீழ் காண்க.) அதன்பின் அச்சுறுத்தும் புதிய மிருகம் தோன்றியது.

வித்தியாசமான மூர்க்க மிருகம்

15நான்காம் மிருகத்தை விவரிக்கையில் தானியேல் சொன்னார்: “அது பயமும் திகிலும் விளைக்கும் மிகவும் பலத்த மிருகம்; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தன; அது பட்சித்து நொறுக்கி மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எந்த மிருகத்தையும் போன்றதல்ல; அதற்குப் பத்துக் கொம்புகளிருந்தன.” (தானியேல் 7:7, தி.மொ.) இந்தத் திகிலூட்டும் மிருகம் ரோமின் அரசியல் மற்றும் ராணுவ வல்லரசாய் உருவெடுத்தது. அதன்பின் மெதுமெதுவாய் கிரேக்க சாம்ராஜ்யத்தின் நான்கு பகுதிகளையும் கைப்பற்றியது. பொ.ச.மு. 30-⁠ம் ஆண்டிற்குள், ரோம் பைபிள் தீர்க்கதரிசனத்தில் முத்திரை பதித்த அடுத்த வல்லரசானது. ராணுவ தாக்குதல் நடத்தி சென்ற இடமெல்லாம் வெற்றி சூடிய ரோம சாம்ராஜ்யத்தின் எல்லை விஸ்தரித்த வண்ணம் இருந்தது. காலப்போக்கில் பிரிட்டிஷ் தீவுகளையும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளையும், மத்தியதரைக் கடலை சுற்றியுள்ள நாடுகளையும், பாபிலோனை தாண்டி பாரசீக வளைகுடா வரையும் வளைத்துப் பிடித்தது.

16‘மிகவும் பயங்கரமான’ இந்த மிருகத்தைப் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, தூதன் தந்த இந்த விளக்கத்தை தானியேல் கவனமாக கேட்டார்: ‘அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போடுவான்.’ (தானியேல் 7:19, தி.மொ.; 20, 24) இந்தப் “பத்துக் கொம்புகள்” அல்லது ‘பத்து ராஜாக்கள்’ யார்?

17ரோம் செல்வச்செழிப்பில் திளைக்க திளைக்க, அரச குலத்தாரின் கட்டுப்பாடற்ற வாழ்க்கைப் போக்கினால் அதிகமதிகமாக சீரழியவும் ஆரம்பித்தது. இதுவே அது ராணுவ வலிமையை இழப்பதற்கு காரணமானது. காலப்போக்கில், ரோமின் ராணுவ பலம் வெகுவாய் குன்றியது மிகத் தெளிவாயிற்று. அந்த வல்லமைமிக்க சாம்ராஜ்யம் இறுதியில் அநேக ராஜ்யங்களாக பிளவுபட்டது. பைபிளில் பத்து என்ற எண் பூரணத்தைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுவதால், நான்காம் மிருகத்தின் “பத்துக் கொம்புகள்,” ரோம் சிதைந்த பிறகு உருவான எல்லா ராஜ்யங்களையும் குறிக்கின்றன.​—⁠ஒப்பிடுக: உபாகமம் 4:13; லூக்கா 15:8; 19:13, 16, 17.

18இருந்தாலும், பொ.ச. 476-⁠ல் ரோமின் கடைசி அரசர் பதவியிழந்ததோடு ரோம் உலக வல்லரசென்ற ஸ்தானத்திலிருந்து இறங்கிவிடவில்லை. போப்பாதிக்க ரோம், பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பா முழுவதிலும் அரசியலையும், முக்கியமாக மதத்தையும் கட்டுப்படுத்தியது. நிலப்பிரபுத்துவ முறை (feudal system) மூலம் அது ஆதிக்கம் செலுத்தியது. இம்முறையில் பெரும்பாலான ஐரோப்பியர்கள் பிரபுவுக்கும், பின் ராஜாவுக்கும் அடிமையாயிருந்தனர். எல்லா ராஜாக்களும் போப்பின் அதிகாரத்தை மனமார ஏற்றனர். போப்பாதிக்க முறையை மையமாகக்கொண்ட புனித ரோம சாம்ராஜ்யம், இருண்ட சகாப்தம் என அழைக்கப்பட்ட அந்த நீண்ட காலப்பகுதி முழுவதும் உலக விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தியது.

19நான்காம் மிருகம் ‘எல்லா ராஜ்யங்களைப் பார்க்கிலும் வேறாயிருந்ததை’ யார் மறுக்க முடியும்? (தானியேல் 7:7, 19, 23) இதைக் குறித்து சரித்திராசிரியர் எச். ஜி. வெல்ஸ் எழுதியதாவது: “இந்தப் புதிய ரோம வல்லரசு . . . நாகரிக உலகில் இதற்குமுன் தோன்றிய எந்தப் பேரரசுகளைக் காட்டிலும் அநேக விதங்களில் வித்தியாசமாக இருந்தது. . . . [அது] உலகிலிருந்த கிட்டத்தட்ட எல்லா கிரேக்கர்களையும் ஒருங்கிணைத்தது. முந்தைய சாம்ராஜ்யங்களின் அளவுக்கு அதன் குடிமக்களிடையே ஹாமிட்டிக் மற்றும் செமிட்டிக் இனத்தவர் அவ்வளவு அதிகமாக இல்லை. . . . அது புதிய சரித்திரம் படைத்தது. . . . ரோம சாம்ராஜ்யம் எதிர்பாராத புதுமையான வளர்ச்சியின் பேருருவம். ரோம மக்கள் முன்கூட்டி திட்டமிடாமலேயே பெரும் நிர்வாக முறைகளை செயல்படுத்தினர்.” இருந்தாலும் நான்காம் மிருகம் மேலும் வளர்ச்சி அடையவிருந்தது.

சின்ன கொம்பு மேலோங்குகிறது

20“அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது” என தானியேல் சொன்னார். (தானியேல் 7:8) இந்தக் கொம்பைப் பற்றி தேவதூதன் தானியேலுக்குச் சொன்னதாவது: ‘அவர்களுக்குப்பின்பு [பத்து ராஜாக்களுக்குப் பின்பு] வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப் பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போடுவான்.’ (தானியேல் 7:24) இந்த ராஜா யார், அவர் எப்போது எழும்பினார், எந்த மூன்று ராஜாக்களை தாழ்த்திப்போட்டார்?

21பின்வரும் வளர்ச்சிகளைக் கவனியுங்கள். பொ.ச.மு. 55-⁠ல் ரோம தளபதி ஜூலியஸ் சீசர் பிரிட்டானியாமீது படையெடுத்தார், ஆனால் அவரால் ஒரு நிரந்தரமான குடியிருப்பை ஏற்படுத்த முடியவில்லை. பொ.ச. 43-⁠ல் க்ளாடியஸ் மன்னர் தென் பிரிட்டனின் பகுதிகளைக் கைப்பற்றி தக்கவைத்துக்கொள்ள ஆரம்பித்தார். அதன்பின் பொ.ச. 122-⁠ல் ஹாட்ரியன் பேரரசர், டைன் நதியிலிருந்து சால்வே ஃபர்த் குடாவரை ஒரு மதிலைக் கட்டினார். இதுவே ரோம சாம்ராஜ்யத்தின் வட எல்லையாயிற்று. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோம படைகள் இத்தீவை விட்டுச் சென்றன. “பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து இரண்டாம்ரக வல்லரசாய் இருந்தது” என ஒரு சரித்திராசிரியர் விளக்குகிறார். “நெதர்லாந்தோடு ஒப்பிடுகையில் அது செல்வச்செழிப்பில் குறைவுபட்டிருந்தது. அதன் ஜனத்தொகையும் பிரான்ஸைக் காட்டிலும் சொற்பமாகவே இருந்தது. அதன் ஆயுதப் படைகள் (கப்பற்படையும் சேர்த்து) ஸ்பெயினைவிட தரம் குறைந்திருந்தது.” ஆகவே அத்தாட்சிகளின்படி, பிரிட்டன் அற்பமான ராஜ்யமாகவே இருந்தது. இவ்வாறு நான்காம் மிருகத்தின் அடையாளப்பூர்வ சின்னக் கொம்பாக விளங்கிற்று. இருந்தாலும் நிலைமை தலைகீழாக மாறவிருந்தது.

221588-⁠ல், ஸ்பெயினைச் சேர்ந்த இரண்டாம் பிலிப், பிரிட்டனுக்கு எதிராக போர்க் கப்பல்களை அனுப்பினார். 24,000-⁠க்கும் அதிக போர்வீரர்கள் 130 கப்பல்களில் இங்கிலீஷ் கால்வாயை நோக்கி பயணித்தனர். ஆனால் பிரிட்டிஷ் கப்பற்படையிடம் படுதோல்வியடைந்ததும், எதிர்க்காற்றாலும் அட்லாண்டிக் புயற்காற்றாலும் அலைக்கழிக்கப்பட்டதும்தான் மிச்சம். இச்சம்பவம், “கப்பற்படையில் தலைசிறந்து விளங்கிய ஸ்பெயினையே இங்கிலாந்து விஞ்சிவிடுவதற்கு” காரணமானதென ஒரு சரித்திராசிரியர் சொன்னார். 17-ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து, உலகின் மிகப் பெரிய வணிகக் கப்பல்மார்க்கத்திற்கு பெயர்போனதாய் இருந்தது. இருந்தாலும் அயல்நாடுகளில் அதிகமதிகமாக குடியேறியதால் பிரிட்டன் இந்த ராஜ்யத்தைவிடவும் மேம்பட்டு விளங்கியது. 18-ஆம் நூற்றாண்டில், வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பிரிட்டிஷ் படையும் பிரெஞ்சு படையும் மோதிக்கொண்டன. இதனால் 1763-⁠ல் பாரிஸ் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. இந்த உடன்படிக்கை, “ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் மற்ற திக்குகளிலும் மகா வல்லரசாக பிரிட்டன் புதிய ஸ்தானத்திற்கு உயர்ந்ததை காட்டியது” என்றார் ஆசிரியர் வில்லியம் பி. வில்காக்ஸ். பொ.ச. 1815-⁠ல் பிரான்ஸைச் சேர்ந்த நெப்போலியனை தோற்கடித்தபோது பிரிட்டன் ஆதிக்க உச்சாணியில் இடம்பிடித்தது. ஆக, பிரிட்டன் ‘தாழ்த்திப்போட்ட’ ‘மூன்று ராஜாக்கள்’ ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகியவையே. (தானியேல் 7:24) இவ்வாறு பிரிட்டன் உலக மகா குடியேற்ற மற்றும் வணிக வல்லரசானது. ஆம், அந்தச் “சின்ன” கொம்பு உலக வல்லரசாக உருவெடுத்தது!

23நான்காம் மிருகம் அல்லது நான்காம் ராஜ்யம் ‘பூமியை எல்லாம் பட்சிக்கும்’ என தேவதூதன் தானியேலிடம் தெரிவித்தார். (தானியேல் 7:23) பிரிட்டானியா என ஒருசமயத்தில் அழைக்கப்பட்ட ரோம மாகாண பகுதியைப் பொறுத்தவரை இது உண்மையாயிருந்தது. அது இறுதியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமாக உருவெடுத்து, ‘பூமியை எல்லாம் பட்சித்தது.’ ஒரு காலத்தில் பூமியின் கால்பங்கு நிலப்பரப்பும் அதன் ஜனத்தொகையில் கால்பங்கினரும் இந்த சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தில் இருந்தனர்.

24ரோம சாம்ராஜ்யம் முந்தைய உலக வல்லரசுகளிலிருந்து வித்தியாசப்பட்டது போலவே, “சின்ன” கொம்பாக காட்டப்படும் ராஜா ‘முந்தினவர்களைப் பார்க்கிலும் வேறாயிருப்பான்.’ (தானியேல் 7:24) பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் பற்றி சரித்திராசிரியரான எச். ஜி. வெல்ஸ் குறிப்பிட்டதாவது: “இப்படிப்பட்ட ஒரு வல்லரசு சரித்திரத்தின் ஏடுகளுக்கே புதியது. பிரிட்டிஷ் கூட்டரசின் முழு அமைப்புமுறையில் முதலானதும் முக்கியமானதுமான அம்சமாக விளங்கியது ‘மன்னர் குடியாட்சி.’ . . . எந்தவொரு நிர்வாகமும் எந்தவொரு தனி மனிதனும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை முழுமையாக புரிந்துகொண்டதாய் சரித்திரமே கிடையாது. வரலாறு காணாத அதன் பற்பல வளர்ச்சிகளும் ஆஸ்திகளும் இதற்குமுன் சாம்ராஜ்யம் என்றழைக்கப்பட்ட அனைத்திலிருந்தும் முழுமையாகவே வித்தியாசமாக இருந்தன.”

25“சின்ன” கொம்பு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மட்டுமே குறிக்கவில்லை. 1783-⁠ல், பிரிட்டன் தன் 13 அமெரிக்க குடியேற்றங்களுக்கு சுதந்திரம் வழங்கியது. இறுதியில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் பிரிட்டனோடு கூட்டு சேர்ந்தது. அது இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு உலகிலேயே அதிக செல்வாக்குள்ள தேசமானது. இப்போதும் பிரிட்டனோடு நெருங்கிய கூட்டுறவு கொண்டுள்ளது. இந்த ஆங்கிலோ-அமெரிக்க இரட்டை உலக வல்லரசே, ‘கண்களுள்ள கொம்பாகும்.’ இந்த உலக வல்லரசு உண்மையில் உன்னிப்பாக காரியங்களை நோட்டமிடுகிறது! அது ‘பெருமையானவைகளைப் பேசுகிறது.’ உலகின் பெரும் பகுதியினருக்கு கொள்கைகளை வகுத்து, அவர்களது சார்புப் பேச்சாளராக அல்லது ‘கள்ளத்தீர்க்கதரிசியாக’ சேவிக்கிறது.​—தானியேல் 7:8, 11, 20; வெளிப்படுத்துதல் 16:13; 19:⁠20.

சின்ன கொம்பு கடவுளையும் அவரது பரிசுத்தவான்களையும் எதிர்க்கிறது

26தானியேல், தரிசனத்தை இவ்வாறு தொடர்ந்து விவரித்தார்: “இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.” (தானியேல் 7:22) இந்தக் “கொம்பு” அல்லது ராஜாவைப் பற்றி தேவதூதன் முன்னறிவித்ததாவது: “உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.” (தானியேல் 7:25) தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதி எப்படி, எப்போது நிறைவேறியது?

27“சின்ன” கொம்பாகிய ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசால் துன்புறுத்தப்பட்ட ‘பரிசுத்தவான்கள்,’ ஆவியால் அபிஷேகம்செய்யப்பட்ட, இயேசுவின் பூமிக்குரிய சீஷர்கள். (ரோமர் 1:2; 1 பேதுரு 2:9) முதல் உலகப் போருக்கு முன் பல வருடங்களாகவே, அபிஷேகம் செய்யப்பட்ட இவர்களில் மீதியானோர், 1914-ஆம் வருடத்தில் “புறஜாதியாரின் காலம்” முடிவடையும் என பகிரங்கமாக எச்சரித்துவந்தனர். (லூக்கா 21:24) அவ்வருடத்தில் போர் ஆரம்பமானபோது, இந்தச் “சின்ன” கொம்பு எச்சரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்பது தெளிவானது. ஏனெனில் அது அபிஷேகம்செய்யப்பட்ட “பரிசுத்தவான்களை” தொடர்ந்து இம்சைப்படுத்தியது. ராஜ்யத்தின் நற்செய்தியை தமது சாட்சிகள் உலகெங்கும் பிரசங்கிக்க வேண்டும் என்ற யெகோவாவின் கட்டளைக்கு (அல்லது ‘பிரமாணத்திற்கு’ ) கீழ்ப்படிய இவர்கள் எடுத்த முயற்சிகளையும் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு எதிர்த்தது. (மத்தேயு 24:14) இவ்வாறு இந்தச் “சின்ன” கொம்பு, “காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற” முயன்றது.

28“ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்” என்ற தீர்க்கதரிசன காலப்பகுதி ஒன்றைப் பற்றி யெகோவாவின் தூதன் சொன்னார். இது எவ்வளவு காலம்? ஒரு காலம், இரண்டு காலங்கள், அரை காலம் ஆகியவற்றைக் கூட்டினால் வரும் மூன்றரை காலங்களை இது குறிப்பதாக பைபிள் அறிஞர்கள் பொதுவாய் ஒப்புக்கொள்கின்றனர். நேபுகாத்நேச்சாருக்குப் பித்துப்பிடித்திருந்த ‘ஏழு காலங்கள்’ ஏழு வருடங்களைக் குறித்ததால், மூன்றரை காலங்கள் மூன்றரை வருடங்களைக் குறிக்கிறது.  c (தானியேல் 4:16, 25) பொது மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கிறது: “மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர்.” ஜேம்ஸ் மொஃபட்டின் மொழிபெயர்ப்பு, “மூன்று வருடங்களும் அரை வருடமும்” என்கிறது. அதே காலப்பகுதி வெளிப்படுத்துதல் 11:2-7-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுளுடைய சாட்சிகள் 42 மாதங்களுக்கு அல்லது 1,260 நாட்களுக்கு இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டு பிரசங்கம் செய்வார்கள் என அங்கு சொல்லப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதி எப்போது ஆரம்பித்து எப்போது முடிந்தது?

29அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு முதல் உலகப் போர் சோதனைக்குரிய காலமாக இருந்தது. 1914-⁠ன் முடிவிற்குள் அவர்கள் துன்புறுத்துதலை எதிர்பார்த்தனர். சொல்லப்போனால், 1915-ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வருடாந்தர வசனம், “நான் குடிக்கப்போகிற பாத்திரத்தில் குடிக்க உங்களாலாகுமா” என இயேசு தம் சீஷர்களைப் பார்த்து கேட்ட கேள்வியே ஆகும். அது, மத்தேயு 20:22-⁠ம் (தி.மொ.) வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆகவே டிசம்பர் 1914 முதற்கொண்டு சாட்சிகளின் அந்தச் சிறிய தொகுதி ‘இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டு’ பிரசங்கித்தது.

30போர் தீவிரமடைந்தபோது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சந்தித்த எதிர்ப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர் சிறையிலடைக்கப்பட்டனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ராங்க் ப்ளாட், கனடாவைச் சேர்ந்த ராபர்ட் க்ளெக் போன்றவர்கள் ஈவிரக்கமற்ற அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டனர். பிப்ரவரி 12, 1918-⁠ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் இருந்த கனடா, சமீபத்தில் வெளியான த ஃபினிஷ்ட் மிஸ்டரி புத்தகத்தை​—⁠வேதாகமங்களின்பேரில் படிப்புகள் (ஆங்கிலம்) நூலின் ஏழாம் தொகுதியை​—⁠தடை செய்தது. த பைபிள் ஸ்டூடன்ட்ஸ் மன்த்லி என்ற துண்டுப்பிரதிகளையும் அது தடை செய்தது. அதற்கடுத்த மாதம் ஐமா நீதித்துறை இலாகா, இந்த ஏழாம் தொகுதியின் விநியோகத்தை சட்டப்படி தடைசெய்தது. அதன் விளைவென்ன? யெகோவாவின் வணக்கத்தாரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்!

31கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எதிர்ப்பட்ட துன்புறுத்துதல் ஜூன் 21, 1918-⁠ல் உச்சக்கட்டத்தை எட்டியது. உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் தலைவரான ஜே. எஃப். ரதர்ஃபோர்டும் மற்ற முக்கிய பிரமுகர்களும் பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். “காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற” முயற்சித்து, இந்தச் “சின்ன” கொம்பு, ஒழுங்கமைக்கப்பட்ட பிரசங்க வேலைக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துவிட்டதென்றே சொல்லலாம். (வெளிப்படுத்துதல் 11:7) ஆகவே “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்” என்ற தீர்க்கதரிசன காலப்பகுதி ஜூன், 1918-⁠ல் முடிவுக்கு வந்தது.

32ஆனால் “சின்ன” கொம்பின் துன்புறுத்துதலால் ‘பரிசுத்தவான்கள்’ ஒரேயடியாக அழிந்துவிடவில்லை. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் முன்னுரைக்கப்பட்டபடி, சிறிது காலம் செயலற்ற நிலையிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மீண்டும் புத்துயிர்பெற்று சுறுசுறுப்பானார்கள். (வெளிப்படுத்துதல் 11:11-13) மார்ச் 26, 1919 அன்று, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் தலைவரும் அவரது கூட்டாளிகளும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். அதற்குப் பிற்பாடு அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபணமாகி, அவர்கள் நிரபராதிகளென தீர்ப்பளிக்கப்பட்டார்கள். உடனடியாக, அபிஷேகம் செய்யப்பட்டோரில் மீதியானோர் கூடுதலான சேவைக்காக, ஒழுங்கமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். எனினும் இந்தச் “சின்ன” கொம்புக்கு நடக்கவிருந்தது என்ன?

நீண்ட ஆயுசுள்ளவரின் நியாயசங்கம்

33நான்கு மிருகங்களைப் பற்றி சொன்ன பிற்பாடு தானியேலின் பார்வை பரலோகத்தில் நடந்த ஒரு காட்சியிடம் திரும்புகிறது. நீண்ட ஆயுசுள்ளவர் நியாயாதிபதியாக பிரகாசமுள்ள சிங்காசனத்தில் நடுநாயகமாய் வீற்றிருப்பதைக் காண்கிறார். யெகோவா தேவனே நீண்ட ஆயுசுள்ளவர். (சங்கீதம் 90:2) பரலோக நியாயசங்கம் அமருகையில், ‘புஸ்தகங்கள் திறக்கப்பட்டதை’ தானியேல் காண்கிறார். (தானியேல் 7:9, 10) யெகோவா எண்ணற்ற ஆண்டுகள் வாழ்ந்துவந்திருப்பதால் புத்தகத்தில் எழுதிவைத்திருப்பதுபோல் அவ்வளவு தெளிவாக மனித சரித்திரம் அனைத்தையும் அறிந்திருக்கிறார். அடையாளப்பூர்வ மிருகங்கள் நான்கையும் கவனித்திருக்கிறார். ஆகவே கண்கண்ட சாட்சியாக அவரால் அவற்றை நியாயந்தீர்க்க முடியும்.

34தானியேல் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.” (தானியேல் 7:11, 12) தேவதூதன் தானியேலிடம் சொல்கிறார்: “நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.”​—தானியேல் 7:⁠26.

35மகா நியாயாதிபதியாகிய யெகோவா தேவனின் தீர்ப்பின்படி, அவரை தூஷித்து அவரது ‘பரிசுத்தவான்களை’ துன்புறுத்திய அந்தக் கொம்பிற்கு, பூர்வ கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ரோம சாம்ராஜ்யத்திற்கு ஏற்பட்ட அதே கதிதான் காத்திருக்கிறது. அதன் ஆளுகை தொடராது. ரோம சாம்ராஜ்யத்திலிருந்து முளைத்த தரம்குறைந்த கொம்புபோன்ற ‘ராஜாக்களின்’ ஆளுகையும் நீடிக்காது. இருந்தாலும், மிருகம்போன்ற முந்தைய வல்லரசுகளிலிருந்து தோன்றிய ஆட்சிகளைப் பற்றியென்ன? முன்னறிவித்தபடியே, “காலமும் சமயமும் ஆகுமட்டும்” அவற்றின் ஆயுள் நீடிக்கப்பட்டது. அவற்றின் பிராந்தியங்களில் இன்றுவரை மக்கள் குடியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஈராக் பூர்வ பாபிலோனின் பிராந்தியத்தில் அமைந்திருக்கிறது. பெர்சியாவும் (ஈரான்) கிரீஸும் இன்றும் நிலைத்திருக்கின்றன. இந்த உலக வல்லரசுகளின் மீந்திருக்கும் நாடுகள் ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் அங்கத்தினர்கள். இந்த ராஜ்யங்களும் கடைசி உலக வல்லரசு அழிகையில் இல்லாமல் போகும். ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்தில்’ எல்லா மனித அரசாங்கங்களும் துடைத்தழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) அப்படியென்றால் உலகை ஆளப்போவது யார்?

அழியாத ஆட்சி, இதோ வருகிறது!

36“இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்” என்றார் தானியேல் வியப்போடு. (தானியேல் 7:13) இயேசு கிறிஸ்து பூமியிலிருந்தபோது, மனிதவர்க்கத்தோடு தமக்கிருந்த உறவைக் காட்ட, தம்மை “மனுஷகுமாரன்” என குறிப்பிட்டார். (மத்தேயு 16:13; 25:31) யூத நீதிமன்றமாகிய நியாயசங்கத்திடம் இயேசு சொன்னார்: ‘மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் காண்பீர்கள்.’ (மத்தேயு 26:64) ஆகவே தானியேலின் தரிசனத்தின்படி, வருபவரும், மனித கண்களுக்குப் புலப்படாதவரும், யெகோவா தேவன் இடமட்டும் செல்பவருமானவர், உயிர்த்தெழுப்பப்பட்ட மகிமைபொருந்திய இயேசு கிறிஸ்துவே. இது எப்போது நடந்தது?

37கடவுள், தாவீது ராஜாவோடு உடன்படிக்கை செய்தபடியே, இயேசு கிறிஸ்துவோடும் ராஜ்யத்தைக் குறித்து ஓர் உடன்படிக்கை செய்தார். (2 சாமுவேல் 7:11-16; லூக்கா 22:28-30) ‘புறஜாதியாரின் காலங்கள்’ பொ.ச. 1914-⁠ல் முடிவடைந்தபோது தாவீதின் ராஜ வாரிசான இயேசு கிறிஸ்து பொருத்தமாகவே ராஜாவானார். தானியேலின் தீர்க்கதரிசன பதிவு வாசிக்கிறது: “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.” (தானியேல் 7:14) இவ்வாறு 1914-⁠ல் மேசியானிய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இருந்தாலும் மற்றவர்களுக்கும் ஆட்சிசெய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

38‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெறுவார்கள்’ என தூதன் சொன்னார். (தானியேல் 7:18, 22, 27) இயேசு கிறிஸ்துவே பிரதானமான பரிசுத்தவான். (அப்போஸ்தலர் 3:14, 4:28, 30) ஆளுகையில் பங்குபெறும் மற்ற ‘பரிசுத்தவான்கள்,’ ஆவியால் அபிஷேகம்செய்யப்பட்ட 1,44,000 உண்மையுள்ள கிறிஸ்தவர்கள். கிறிஸ்துவோடு, இவர்களும் ராஜ்யத்தின் சுதந்தரர்கள். (ரோமர் 1:2; 8:17; 2 தெசலோனிக்கேயர் 1:5; 1 பேதுரு 2:9) ஆகவே அவர்கள் பரலோக சீயோன் மலையில் கிறிஸ்துவோடு ஆட்சிபுரிவதற்காக, அழியாமையுள்ள ஆவி ஆட்களாய் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 2:10; 14:1; 20:6) இவ்வாறு, இயேசு கிறிஸ்துவும் உயிர்த்தெழுப்பப்பட்ட, அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் மனிதவர்க்கத்தை ஆளுவார்கள்.

39மனுஷகுமாரனும் உயிர்த்தெழுப்பப்பட்ட மற்ற ‘பரிசுத்தவான்களும்’ செய்யும் ஆட்சியை விவரிப்பவராய் தேவதூதன் சொன்னார்: “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்.” (தானியேல் 7:27) இந்த ராஜ்யம் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதத்தைப் பொழியும்!

40கடவுள் காட்டிய தரிசனங்களின் அருமையான நிறைவேற்றங்கள் அனைத்தையும் தானியேல் அறிந்திருக்கவில்லை. “அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்” என்றார். (தானியேல் 7:28) நாமோ, தானியேல் பார்த்த தரிசனத்தின் நிறைவேற்றத்தைப் புரிந்துகொள்ளும் காலத்தில் வாழ்கிறோம். இந்தத் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாய்ப்பது நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும். யெகோவாவின் மேசியானிய ராஜா உலகை ஆளுவார் என்ற நம் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a தானியேல் 7:1-14-⁠ல் உள்ள தரிசனங்களை வரிக்கு வரியாக, தானியேல் 7:15-28-⁠ல் உள்ள விளக்க வசனங்களோடு சேர்ந்து கவனிப்போம். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லாதிருக்கவும் தெளிவாக புரிந்துகொள்ளவும் இது உதவும்.

b இப்புத்தகத்தின் நான்காம் அதிகாரத்தைக் காண்க.

c இப்புத்தகத்தின் 6-ஆம் அதிகாரத்தைக் காண்க.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• ‘சமுத்திரத்திலிருந்து எழும்பிய நாலு பெரிய மிருகங்கள்’ ஒவ்வொன்றும் எதை அடையாளப்படுத்துகின்றன?

• “சின்ன” கொம்பு எதைக் குறிக்கிறது?

• முதல் உலகப் போரின்போது அடையாளப்பூர்வ சின்ன கொம்பு எவ்வாறு ‘பரிசுத்தவான்களை’ துன்புறுத்தியது?

• அடையாளப்பூர்வ சின்ன கொம்பிற்கும் மிருகம்போன்ற மற்ற வல்லரசுகளுக்கும் என்ன நடக்கும்?

• ‘நாலு பெரிய மிருகங்களைப்’ பற்றிய தானியேலின் சொப்பனத்திற்கும் தரிசனங்களுக்கும் செவிசாய்த்ததால் நீங்கள் எவ்வாறு நன்மையடைந்தீர்கள்?

[கேள்விகள்]

1-3. பெல்ஷாத்சார் ஆட்சிசெய்த முதலாம் வருடத்தில் தானியேல் கண்ட சொப்பனத்தையும் தரிசனங்களையும் விளக்குக.

4. (அ) நம்பத்தகுந்த தகவலுக்காக தானியேல் யாரை அணுகினார்? (ஆ) அன்றைய இரவு தானியேல் பார்த்தவையும் கேட்டவையும் நமக்கு ஏன் மிகுந்த அக்கறைக்குரியவை?

5. காற்றுகளால் அடிக்கப்பட்ட சமுத்திரம் எதை அடையாளப்படுத்துகிறது?

6. நான்கு மிருகங்கள் எதை அடையாளப்படுத்துகின்றன?

7. (அ) பைபிள் விமர்சகர்கள், நான்கு மிருகங்களைப் பற்றிய தானியேலின் சொப்பன-தரிசனத்தையும் மாபெரும் சிலையைப் பற்றிய நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தையும் பற்றி என்ன சொல்கின்றனர்? (ஆ) சிலையின் நான்கு உலோகங்கள் ஒவ்வொன்றும் எதை அடையாளப்படுத்தின?

8. (அ) முதல் மிருகத்தை தானியேல் எவ்வாறு விவரித்தார்? (ஆ) முதல் மிருகம் எந்த சாம்ராஜ்யத்தை அடையாளப்படுத்தியது, அது எவ்வாறு சிங்கம்போல் செயல்பட்டது?

9. சிங்கம்போன்ற மிருகம் என்னென்ன மாற்றங்களை எதிர்ப்பட்டது, அவை அதை எவ்வாறு பாதித்தன?

10. எந்த அரசர்களை ‘கரடி’ அடையாளப்படுத்தியது?

11. அடையாளப்பூர்வ கரடி ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்றதும் அதன் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகள் இருந்ததும் எதைக் குறித்தன?

12. ‘எழும்பி வெகு மாம்சம் தின்னு’ என்ற கட்டளைக்கு அடையாளப்பூர்வ கரடி கீழ்ப்படிந்ததால் ஏற்பட்ட விளைவென்ன?

13. (அ) மூன்றாம் மிருகம் எதை அடையாளப்படுத்தியது? (ஆ) மூன்றாம் மிருகத்தின் வேகத்தைப் பற்றியும் அதன் எல்லைப்பரப்பைப் பற்றியும் என்ன சொல்லலாம்?

14. ‘சிறுத்தைக்கு’ எவ்வாறு நான்கு தலைகள் உண்டாயின?

15. (அ) நான்காம் மிருகத்தை விளக்குக. (ஆ) நான்காம் மிருகம் எதை அடையாளப்படுத்தியது, பாதையிலிருந்த எல்லாவற்றையும் அது எவ்வாறு பட்சித்து நொறுக்கியது?

16. நான்காம் மிருகத்தைப் பற்றி தூதன் என்ன விவரமளித்தார்?

17. நான்காம் மிருகத்தின் “பத்துக் கொம்புகள்” எதை அடையாளப்படுத்துகின்றன?

18. ரோமின் கடைசி அரசர் பதவியிழந்து பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் ரோம் எவ்வாறு ஐரோப்பாமீது ஆதிக்கம் செலுத்தியது?

19. ஒரு சரித்திராசிரியர் எவ்வாறு ரோமை முந்தைய சாம்ராஜ்யங்களோடு ஒப்பிட்டார்?

20. நான்காம் மிருகத்தின் தலையில் முளைத்த சின்ன கொம்பைப் பற்றி தூதன் என்ன சொன்னார்?

21. எவ்வாறு பிரிட்டன் நான்காம் மிருகத்தின் அடையாளப்பூர்வ சின்ன கொம்பானது?

22. (அ) “சின்ன” கொம்பு நான்காவது மிருகத்தின் மற்ற எந்த மூன்று கொம்புகளை வீழ்த்தியது? (ஆ) பிரிட்டன் என்னவாய் உருவெடுத்தது?

23. அடையாளப்பூர்வ சின்ன கொம்பு எந்த விதத்தில் ‘பூமியை எல்லாம் பட்சித்தது’?

24. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வித்தியாசமாய் இருந்ததைப் பற்றி ஒரு சரித்திராசிரியர் என்ன சொன்னார்?

25. (அ) அண்மைக் காலங்களில் அடையாளப்பூர்வ சின்ன கொம்பு எதைக் குறிக்கிறது? (ஆ) “சின்ன” கொம்புக்கு எந்த அர்த்தத்தில் ‘மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும்’ இருக்கிறது?

26. யெகோவா மற்றும் அவரது ஊழியர்கள் சம்பந்தமாக, அடையாளப்பூர்வ கொம்பின் பேச்சையும் நடத்தையையும் பற்றி தூதன் என்ன முன்னறிவித்தார்?

27. (அ) “சின்ன” கொம்பால் துன்புறுத்தப்படும் ‘பரிசுத்தவான்கள்’ யார்? (ஆ) அடையாளப்பூர்வ கொம்பு எவ்வாறு “காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற” முயன்றது?

28. “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்” எவ்வளவு காலத்தைக் குறிக்கிறது?

29. தீர்க்கதரிசன மூன்றரை வருடங்கள் எப்போது, எப்படி ஆரம்பமாயின?

30. முதல் உலகப் போரின்போது ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு எவ்வாறு அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியது?

31. “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்” எப்போது, எப்படி முடிவுக்கு வந்தது?

32. “சின்ன” கொம்பு ‘பரிசுத்தவான்களை’ ஒரேயடியாக அழித்துவிடவில்லை என எப்படிச் சொல்லலாம்?

33. (அ) நீண்ட ஆயுசுள்ளவர் யார்? (ஆ) பரலோக நியாயசங்கத்தில் என்ன ‘புஸ்தகங்கள் திறக்கப்பட்டன’?

34, 35. “சின்ன” கொம்பிற்கும் மிருகம்போன்ற மற்ற வல்லரசுகளுக்கும் என்ன நேரிடும்?

36, 37. (அ) ‘மனுஷகுமாரனுடைய சாயலானவர்’ யார், பரலோக நியாயசங்கத்திற்கு எப்போது, எதற்காக வருகிறார்? (ஆ) பொ.ச. 1914-⁠ல் எது ஸ்தாபிக்கப்பட்டது?

38, 39. யாருக்கு உலகை நித்தியமாய் ஆளும் உரிமை அளிக்கப்படும்?

40. தானியேலின் சொப்பனத்திற்கும் தரிசனங்களுக்கும் செவிசாய்ப்பதிலிருந்து நாம் எவ்வாறு நன்மையடையலாம்?

[பக்கம் 149-152-ன் பெட்டி/படங்கள்]

பெருந்தன்மைமிக்க அரசர்

பெருந்தன்மைமிக்க அபிமான அரசர் என அவரை அழைத்தார், பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க எழுத்தாளர். கடவுளால் ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்,’ ‘கிழக்கிலிருந்து’ வரும், ‘இரை தின்னும் பறவை’ என்றெல்லாம் அவரை அழைக்கிறது பைபிள். (ஏசாயா 45:1; 46:11, NW) இவர்தான் பெர்சிய அரசரான மகா கோரேசு.

சுமார் பொ.ச.மு. 560/559-⁠ல் கோரேசு புகழின் பாதையில் காலடியெடுத்து வைத்தார். அவரது தகப்பனான முதலாம் காம்பைஸஸுக்கு பிறகு, பூர்வ பெர்சிய நகரமான அல்லது மாகாணமான ஆன்ஷனில் அப்போது அரியணை ஏறினார். ஆன்ஷன் மேதிய ராஜாவான ஆஸ்டைஜிஸின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசாக இருந்தது. மேதிய ஆட்சிக்கு எதிராக கலகம்செய்த கோரேசு விரைவில் ஜெயங்கொண்டார். ஏனெனில் ஆஸ்டைஜிஸின் படை கோரேசின் பக்கம் சேர்ந்துவிட்டது. அதன்பின் கோரேசு மேதியர்களின் இதயத்தைக் கொள்ளைகொண்ட தலைவரானார். அது முதற்கொண்டு அவரது தலைமையின்கீழ் மேதியர்களும் பெர்சியர்களும் தோளோடு தோள்சேர்ந்து போரிட்டனர். இப்படித்தான் மேதிய-பெர்சிய ஆட்சி பிறந்தது. காலப்போக்கில் அது ஈஜியன் கடலிலிருந்து சிந்து நதிவரை அதன் எல்லையை விஸ்தரித்தது.​—⁠வரைபடத்தைக் காண்க.

மேதிய-பெர்சிய படைகளை தன் இரு கரங்களாகக் கொண்டு, கோரேசு முதலில் மேதியாவின் கலவரமிக்க மேற்குப் பகுதியை கைப்பற்ற சென்றார். அச்சமயத்தில் லிடியா நாட்டு ராஜாவான க்ரோயஸஸ் இந்த மேதிய பிராந்தியத்திற்குள் நுழைந்து தன் எல்லையை விஸ்தரித்துவந்தார். லிடியா சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையான ஆசியா மைனர் வரை கோரேசு சென்று, க்ரோயஸஸை தோற்கடித்து அவரது தலைநகரான சார்டிஸைக் கைப்பற்றினார். அதன்பின் கோரேசு அயோனியன் நகரங்களை வீழ்த்தி, ஆசியா மைனர் முழுவதையும் தனது மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்தின் பாகமாக்கினார். இவ்வாறு அவர் நபோனிடஸுக்கும், அவர் ஆண்ட பாபிலோனுக்கும் பரம எதிரியானார்.

அடுத்ததாக மகா பலம்படைத்த பாபிலோனைத் தாக்க முற்பட்டார் கோரேசு. அது முதற்கொண்டு பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தில் பங்கு வகித்தார். கோரேசு என்ற அரசர் பாபிலோனை வீழ்த்தி, அங்கிருந்து யூதர்களை விடுவிப்பார் என கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூலம் யெகோவா சொல்லியிருந்தார். இந்த முன்நியமனத்தின்படியே வேதவசனம் கோரேசை யெகோவாவால் ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்’ என குறிப்பிடுகிறது.​—⁠ஏசாயா 44:26-28.

பொ.ச.மு. 539-⁠ல் கோரேசு பாபிலோனுக்கு எதிராக படையெடுத்தபோது பெரும் சவாலை எதிர்ப்பட்டார். மாபெரும் மதில்களோடும் ஐப்பிராத்து நதி ஓடிய ஆழமான அகலமான அகழியோடும் கம்பீரமாய், எவரும் நெருங்க முடியாதென்ற தோரணையில் காட்சியளித்தது பாபிலோன். நகருக்குள் ஓடிய ஐப்பிராத்து நதியின் கரையோரமெங்கும் மலைபோன்ற மதில், பிரமாண்டமான செம்பு கதவுகளோடு நின்றது. இப்படிப்பட்ட பாபிலோனை கோரேசு எப்படித்தான் கைப்பற்றுவார்?

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக, ‘வறட்சி அதின் தண்ணீர்கள்மேல்வரும்’ என்றும் ‘அவைகள் வறண்டுபோம்’ என்றும் யெகோவா முன்னறிவித்திருந்தார். (எரேமியா 50:38) தீர்க்கதரிசனத்தின்படியே, கோரேசு பாபிலோனின் வடக்கே சில கிலோமீட்டர் தூரத்தில் ஐப்பிராத்து நதியை திசைதிருப்பினார். அதன்பின் அவரது படை வீரர்கள் நடக்குமளவு இருந்த தண்ணீரைக் கடந்து, சரிவான பரப்பின்மீது ஏறி மதிலை அடைந்து, நகருக்குள் சுலபமாக நுழைந்துவிட்டனர். ஏனென்றால் அந்தச் செம்புக் கதவுகள் திறந்துகிடந்தன. ‘இரை தின்னும் பறவை,’ இரையைக் கண்டதும் விரைந்து பாய்வதுபோல் ‘கிழக்கிலிருந்து’ வந்த இந்த அரசரும் ஒரே இரவில் பாபிலோனைக் கைப்பற்றினார்!

பாபிலோனிலிருந்த யூதர்கள் விடுதலைக்காக வெகு காலமாய் காத்திருந்தனர், அவர்களது தாயகமும் 70 ஆண்டுகள் பாழாய்க்கிடந்தது. கோரேசின் வெற்றி, இவர்களது நிலைமையை மாற்றும் என நம்பினர். எருசலேமுக்குத் திரும்பி, மீண்டும் ஆலயத்தைக் கட்டுவதற்கு கோரேசு அனுமதியளித்து ஆணை பிறப்பித்தபோது அவர்கள் எவ்வளவு பூரிப்படைந்திருப்பார்கள்! நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு எடுத்துச் சென்றிருந்த விலைமதிப்புள்ள ஆலய பாத்திரங்களையும் கோரேசு அவர்களிடம் ஒப்படைத்தார். லீபனோனிலிருந்து மரங்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கி, ஆலய கட்டுமான பணிகளுக்காக ராஜாவின் கஜானாவிலிருந்து நிதிகளையும் வழங்கினார்.​—⁠எஸ்றா 1:1-11; 6:3-5.

தான் கைப்பற்றிய தேசத்து ஜனங்களோடு கோரேசு பொதுவாகவே மனிதாபிமானத்தோடும் பெருந்தன்மையோடும் நடந்துகொண்டார். அவரது மதம் இதற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். கோரேசு ஒருவேளை, பெர்சிய தீர்க்கதரிசியான ஜோராஸ்டரின் போதனைகளைப் பின்பற்றி, நன்மையான எல்லாவற்றையும் படைத்த கடவுளாக கருதப்பட்ட அஹுரா மாஸ்டாவை வணங்கிவந்திருக்கலாம். ஜோராஸ்டரிய பாரம்பரியம் என்ற ஆங்கில புத்தகத்தில் ஃபார்ஹாங் மேர் இவ்வாறு எழுதுகிறார்: “கடவுள் ஒழுக்க சீலர் என ஜோராஸ்டர் கற்பித்தார். அஹுரா மாஸ்டா பழிவாங்கும் தெய்வமல்ல, நியாயமானவர் என்பதால் அவரை நேசிக்கவேண்டுமே ஒழிய பார்த்து பயப்படக்கூடாது என அவர் மக்களுக்குக் கற்பித்தார்.” ஒழுக்கமும் நியாயமுமான தெய்வத்தின் பக்தராய், கோரேசு நீதிநெறியுள்ளவராய் பெருந்தன்மையையும் நேர்மையையும் காட்ட தூண்டப்பட்டிருக்கலாம்.

கோரேசு ராஜாவுக்கு பாபிலோனிய சீதோஷண நிலை ஒத்துக்கொள்ளவில்லை. கோடைகால பொசுக்கும் வெயிலை அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே பாபிலோன் அவரது சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகவும் மத மற்றும் கலாச்சார மையமாகவும் திகழ்ந்தபோதிலும், அவரை பொறுத்தவரை அது குளிர்கால வாசஸ்தலமாகவே இருந்தது. சொல்லப்போனால், பாபிலோனைக் கைப்பற்றியவுடனேயே கோரேசு தனது கோடைகால வாசஸ்தலமான அக்மேதாவுக்குத் திரும்பினார். இது, கடல்மட்டத்திலிருந்து சுமார் 1,900 மீட்டர் உயரத்தில், அல்வான்ட் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. அவ்விடத்தின் குளிர்கால குளிர்ச்சியும் இதமான வெயிலும் அவருக்கு பிடித்திருந்தது. முன்னாள் தலைநகரமான பஸார்கடியில் (பர்செபலஸ் அருகே) கோரேசு அழகிய மாளிகை ஒன்றையும் கட்டினார். இது அக்மேதாவின் தென்கிழக்கே 650 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. அது அவரது ஓய்விடமானது.

இவ்வாறு கோரேசு அஞ்சா நெஞ்சம்கொண்ட வெற்றி வீரரெனவும் பெருந்தன்மைமிக்க அரசரெனவும் பெயர்பெற்றார். பொ.ச.மு. 530-⁠ல் அவர் யுத்த களத்தில் உயிர் நீத்தார். இவ்வாறு அவரது 30 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின் அவரது மகனான இரண்டாம் காம்பைஸஸ் பெர்சிய அரியணையில் ஏறினார்.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• பெர்சியரான கோரேசு எவ்வாறு யெகோவாவால் ‘அபிஷேகம் செய்யப்பட்டவரென’ நிரூபித்தார்?

• கோரேசு யெகோவாவின் மக்களுக்கு என்ன பயனளிக்கும் சேவை செய்தார்?

• கோரேசு தான் கைப்பற்றி தேசத்து மக்களை எப்படி நடத்தினார்?

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மேதிய-பெர்சிய சாம்ராஜ்யம்

எருசலேம்

பாபிலோன்

மெம்ஃபஸ்

அக்மேதா

சூஸா

பர்செபலஸ்

மக்கெதோனியா

எகிப்து

எத்தியோப்பியா

இந்துதேசம்

[பக்கம் 14-ன் படம்]

கோரேசின் சமாதி, பசார்கடி

[பக்கம் 14-ன் படம்]

பசார்கடியிலுள்ள கோரேசின் சிற்பம்

[பக்கம் 153-161-ன் பெட்டி/படங்கள்]

உலகையே வென்ற இளம் அரசர்

சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு, பொன்நிற முடிகொண்ட ராணுவ தளபதி மத்தியதரை கடற்கரையில் நின்றார். 20 வயதைத் தாண்டியிருந்த இவர், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்த தீவு நகரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அதில் நுழைவதற்கு அனுமதி கிடைக்காததால் கொதிப்படைந்த இந்தத் தளபதி அந்நகரை எப்படியும் கைப்பற்றிவிட கங்கணம்கட்டினார். ஆனால் எப்படிக் கைப்பற்றுவார்? அத்தீவிற்கு பாதை அமைத்து, அதைத் தாக்க தன் படைகளை தயார்படுத்த திட்டமிட்டார். பாதையைக் கட்டும் பணி ஆரம்பமும் ஆகிவிட்டது.

ஆனால் பெர்சிய சாம்ராஜ்யத்தின் பேரரசர் அனுப்பிய தூது இந்த இளம் தளபதியை சற்று யோசிக்க வைத்தது. சமரசம் செய்துகொள்ள விரும்பி அந்த பெர்சிய அரசர் 10,000 பொன் தாலந்துகளையும் (இப்போதைய மதிப்புப்படி 200 கோடி டாலருக்கும் அதிகம்), பெர்சிய சாம்ராஜ்யத்தின் மேற்கு பகுதி முழுவதையும் அன்பளிப்பாக கொடுக்க முன்வந்தார்! அதுமட்டுமா தன்னுடைய ஒரு மகளை மணம்முடித்து வைப்பதாகவும் சொன்னார். அந்தத் தளபதி சிறைப்பிடித்திருந்த தனது குடும்பத்தினருக்கு ஈடாக இவை அனைத்தையும் அளிக்க முன்வந்தார் ராஜா.

இதை ஏற்றுக்கொள்வதா மறுப்பதா என்ற குழப்பத்தில் இருந்தவர், மக்கெதோனிய அரசரான மூன்றாம் அலெக்ஸாந்தர். அவர் இந்த அளிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? “இதில்தான் பூர்வ உலகின் தலையெழுத்தே அடங்கியிருந்தது” என சரித்திராசிரியர் உல்ரிக் விலன் சொல்கிறார். “அவர் செய்த தீர்மானம், இடைக் காலத்திலிருந்து நம் நாள் வரையாக, மேற்கத்திய உலகைப் போலவே கிழக்கத்திய உலகையும் பாதித்திருக்கிறது.” அலெக்ஸாந்தர் கொடுத்த பதிலைத் தெரிந்துகொள்வதற்குமுன், இந்தப் பரபரப்பான காலக்கட்டத்திற்கு வழிநடத்திய சம்பவங்களைப் பார்க்கலாம்.

வெற்றிவீரன் உருவாகிறான்

அலெக்ஸாந்தர் பொ.ச.மு. 356-⁠ல் மக்கெதோனியாவிலுள்ள பெல்லாவில் பிறந்தார். அவரது தகப்பன் மன்னர் இரண்டாம் பிலிப், தாய் ஓலிம்பியஸ். மக்கெதோனிய ராஜாக்கள் கிரேக்க கடவுள் சியஸின் மகனான ஹெர்குலஸின் வம்சத்தார் என அலெக்ஸாந்தருக்குக் கற்றுக்கொடுத்தார் ஓலிம்பியஸ். இலியிட் என்ற ஹோமரின் கவிதையினுடைய நாயகனான ஆக்கிலஸே, அலெக்ஸாந்தரின் மூதாதை என்றும் அவர் சொன்னார். இவ்வாறு வெற்றிக்கும் ராஜாங்க புகழுக்குமே ஆசை ஊட்டி வளர்க்கப்பட்ட இளம் அலெக்ஸாந்தருக்கு வேறெதிலும் நாட்டம் இல்லாமல் போயிற்று. ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வாரா என கேட்கப்பட்டபோது, ராஜாக்கள் ஓடும் பந்தயமானால் கலந்துகொள்ளத் தயார் என அலெக்ஸாந்தர் குறிப்பிட்டார். சாதனைமேல் சாதனை புரிந்து பேரும் புகழும் பெறுவதில் தன் தகப்பனையும் விஞ்சவேண்டும் என்பதே அவரது லட்சியம்.

13-ஆம் வயதில், கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில், அலெக்ஸாந்தரின் குருவானார். தத்துவம், மருத்துவம், அறிவியல் ஆகியவற்றில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள அரிஸ்டாட்டில் உதவினார். ஆனால் இவரது தத்துவ போதனைகள் எந்தளவு அலெக்ஸாந்தரின் சிந்தனைப்போக்கை மாற்றின என்பது இன்னும் விவாதத்திற்குரியதே. “எவ்வளவோ விஷயங்களில் இருவரும் ஒத்துப்போகவில்லை என சொல்வதே பொருத்தமானது” என 20-ஆம் நூற்றாண்டு தத்துவஞானியான பர்ட்ரன்ட் ரஸல் குறிப்பிடுகிறார். “மறைந்துவந்த கிரேக்க நகர-அரசு அமைப்புகளின் அடிப்படையிலேயே அரிஸ்டாட்டிலின் அரசியல் கருத்துக்கள் இருந்தன.” இந்த சிறு நகர-அரசு அமைப்புகள், லட்சியவாதியான இளவரசரின் மனதைக் கவர்ந்திருக்காது. ஏனெனில் இவர் ஒரே மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்க விரும்பினார். கிரேக்கரல்லாதவர்களை அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற அரிஸ்டாட்டிலின் போதனையையும் அலெக்ஸாந்தர் முழுமையாய் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார், ஏனெனில் தோற்கடித்தவர்களும் தோல்விகண்டவர்களும் நெருங்கிய கூட்டாளிகளாய் இருக்கும் ஒரு சாம்ராஜ்யத்தைப் பற்றியே மனக்கோட்டை கட்டினார்.

இருந்தாலும் வாசிப்பதற்கும் கற்பதற்கும் அலெக்ஸாந்தரின் ஆர்வப் பசியைத் தூண்டியது அரிஸ்டாட்டில் என்பதை மறுக்கவே முடியாது. இறுதிவரை அலெக்ஸாந்தர் புத்தகங்களை வாசிப்பதில் தனி இன்பம்கண்டார். அவர் முக்கியமாய் ஹோமரின் ரசிகர். இலியிட் கவிதையின் 15,693 வரிகளையும் ஒன்றுவிடாமல் அவர் மனப்பாடம் செய்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது!

அரிஸ்டாட்டிலிடம் பயின்றுவந்த கல்விக்கு பொ.ச.மு. 340-⁠ல் எதிர்பாராத தடை ஏற்பட்டது. அப்போது, 16 வயது இளவரசர் தன் தகப்பன் இல்லாத சமயங்களில் மக்கெதோனியாவை ஆள பெல்லாவிற்கு சென்றுவிட்டார். இந்தப் பட்டத்து இளவரசர் அதன்பின் வெகு சீக்கிரத்தில் பெயர்பெற்ற போர் வீரரானார். பிலிப்பிற்கு சந்தோஷம் உண்டாகும் விதத்தில், த்ரேஸியரின் மீடீ குலத்தாரது கலகத்தை அடக்கி, அவர்களது முக்கிய நகரை ஒரே வீச்சில் கைப்பற்றி, தன் பெயர் விளங்க அதற்கு அலெக்ஸாந்த்ரௌபோலிஸ் என பெயரிட்டார்.

வெற்றிமேல் வெற்றி

பொ.ச.மு. 336-⁠ல் பிலிப் கொல்லப்பட, 20 வயது அலெக்ஸாந்தர் மக்கெதோனிய அரியணையில் ஏறினார். பொ.ச.மு. 334, மே மாத ஆரம்பத்தில் ஆசியாவின் ஹெலஸ்பான்ட்டிற்கு (தற்போதைய டார்ட்னெல்ஸிற்கு) ஒரு சிறிய, ஆனால் பலம்படைத்த படையோடு​—⁠30,000 காலாட் படையினரோடும் 5,000 குதிரைப் படையினரோடும்​—⁠சென்ற அலெக்ஸாந்தர், வெற்றிகளைக் குவிக்கும் படலத்தில் இறங்கினார். அவரது படையினரோடு பொறியாளர்களும் மேற்பார்வையாளர்களும் கட்டடக் கலைஞர்களும் விஞ்ஞானிகளும் சரித்திராசிரியர்களும் சென்றனர்.

ஆசியா மைனரின் (தற்போதைய துருக்கியின்) வடமேற்கு முனையில், க்ரனைகஸ் நதியருகே அலெக்ஸாந்தர் பெர்சியர்களுக்கு எதிரான தனது முதல் யுத்தத்தில் வெற்றிபெற்றார். அவ்வருட குளிர்காலத்தில் ஆசியா மைனரின் மேற்குப் பகுதியைக் கைப்பற்றினார். பிறகு, அக்டோபரில் ஆசியா மைனரின் தென்கிழக்கு முனையில் அமைந்திருந்த இஸஸில் பெர்சியர்களோடு தீர்வாக இரண்டாம் முறை போரிட்டார். ஐந்து லட்சம் வீரர்களோடு பெர்சிய மகா ராஜாவான மூன்றாம் தரியு அங்கே அலெக்ஸாந்தரை போர் களத்தில் சந்தித்தார். எப்படியும் வெற்றி தன் பக்கம் என அசட்டுத் துணிச்சலோடு தரியு தன் தாயையும் மனைவியையும் மற்ற குடும்ப அங்கத்தினர்களையும் கூட்டிக்கொண்டு வந்தார். தான் பெறவிருந்த இமாலய வெற்றியைக் கண்டுகளிப்பதற்காக அவர்களை அழைத்து வந்தார். ஆனால் மக்கெதோனியர்களின் எதிர்பாராத பயங்கர தாக்குதலை பெர்சியர்களால் சமாளிக்க முடியவில்லை. அலெக்ஸாந்தரின் படைகள் பெர்சிய படையை முழுமையாய் தோற்கடித்தன. தரியு, தன் குடும்பத்தாரை அலெக்ஸாந்தரிடம் அம்போவென விட்டுவிட்டு தப்பியோடினார்.

தப்பியோடும் பெர்சியர்களைத் தொடர்வதற்குப் பதிலாக அலெக்ஸாந்தர் மத்தியதரைக் கடற்கரையோரமாய் தெற்கே சென்று, வலிமைமிக்க பெர்சிய கப்பற்படைத் தளங்களை வென்றார். ஆனால் தீவு நகரமான தீரு, படையெடுப்பை எதிர்த்தது. எப்படியும் தன் வசப்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தோடு அலெக்ஸாந்தர் அதை முற்றுகையிட்டார். முற்றுகை ஏழு மாதங்களுக்கு நீடித்தது. அப்போதுதான் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி தரியு சமரசத்தை விரும்பி, அன்பளிப்பு கொடுக்க முன்வந்தார். சலுகைகள் அவ்வளவு வசீகரமாய் இருந்ததால், ‘நான் மட்டும் அலெக்ஸாந்தராய் இருந்திருந்தால், கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன்’ என அலெக்ஸாந்தரின் நம்பகமான ஆலோசகர் பார்மினியோ சொன்னதாய் நம்பப்படுகிறது. அதற்கு இளம் தளபதி அலெக்ஸாந்தர் கொடுத்த பதில்: ‘நானும்தான் பார்மினியோவாய் இருந்திருந்தால், கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன்.’ இப்படியாக பேச்சுவார்த்தைக்கு இடம்கொடுக்காமல், அலெக்ஸாந்தர் முற்றுகையை தொடர்ந்தார். பின் பொ.ச.மு. 332, ஜூலையில் கர்வமிக்க “கடற்கன்னியை” அழித்தார்.

எருசலேம் சரணடைந்ததால் அலெக்ஸாந்தர் அதை விட்டுவைத்தார். பின் தெற்கே சென்று காசாவை வென்றார். பெர்சிய ஆட்சியால் கசப்புற்ற எகிப்தியர்கள் தங்களை விடுவிக்க வந்த கோமகனாய் அலெக்ஸாந்தரை வரவேற்றனர். மெம்ஃபஸில் ஏபிஸ் காளை தெய்வத்திற்கு பலிசெலுத்தி, எகிப்திய ஆசாரியர்களின் அபிமானத்தைப் பெற்றார். அவர் அலெக்சாண்டிரியா நகரையும் உருவாக்கினார். கல்வி மையமாக அது பிற்பாடு ஆதன்ஸையும் விஞ்சியது; இன்றும் அவர் பெயர் தாங்கி நிற்கிறது.

அடுத்ததாக அலெக்ஸாந்தர் வடகிழக்கே பலஸ்தீனா வழியாக டைக்ரீஸ் நதியை நோக்கி சென்றார். பொ.ச.மு. 331-⁠ல், நினிவேயின் இடிபாடுகளுக்கு அருகிருந்த கௌகமெலாவில் பெர்சியர்களோடு மூன்றாம் முறையாக கடும் போர் மூண்டது. இங்கே அலெக்ஸாந்தரின் 47,000 வீரர்கள், குறைந்தது 2,50,000 வீரர்கள்கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட பெர்சிய படையினரையே தோற்கடித்தனர்! அங்கிருந்து தப்பியோடிய தரியு, பிற்பாடு தன் சொந்த மக்களாலேயே கொல்லப்பட்டார்.

வெற்றிப் பெருமிதத்தோடு அலெக்ஸாந்தர் தெற்கே சென்று பெர்சிய குளிர்கால வாசஸ்தலமான பாபிலோனைக் கைப்பற்றினார். சூஸாவிலும் பர்செபலஸிலும் இருந்த தலைநகரங்களையும் அவர் ஆக்கிரமித்து, பெர்சியர்களின் பொக்கிஷ குவியல்களை கொள்ளையடித்து, சஷ்டாவின் பிரமாண்டமான அரண்மனையைக் கொளுத்தினார். இறுதியாக அக்மேதாவிலிருந்த தலைநகரையும் கைப்பற்றினார். அதன்பின் இந்த வெற்றி வேங்கை கிழக்கே சென்று மற்ற பெர்சிய பகுதிகளையும், இன்றைய பாகிஸ்தானின் சிந்து நதி வரை வளைத்துப் பிடித்தது.

சிந்து நதியைக் கடந்து, டாக்ஸலா என்ற பெர்சிய மாகாணத்தின் எல்லையை அலெக்ஸாந்தர் அடைந்தபோது, பலமிக்க பகைவனான இந்திய அரசன் போரஸை எதிர்ப்பட்டார். பொ.ச.மு. 326, ஜூனில் மூண்ட போரே, அலெக்ஸாந்தரின் நான்காம் மகா யுத்தம்; இறுதியான யுத்தமும்தான். போரஸின் படையில், 35,000 வீரர்களும் 200 யானைகளும் இருந்தன. மக்கெதோனியர்களின் குதிரைகள் இந்த யானைகளைக் கண்டு மிரண்டன. போரின் பயங்கரத்தால் யுத்த களம் ரத்தக்களமானது, ஆனாலும் அலெக்ஸாந்தரின் படைக்கே வெற்றி. போரஸ் சரணடைந்து, அவரது நண்பர் ஆனார்.

மக்கெதோனிய படை ஆசியாவிற்குள் நுழைந்து எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. களைப்பும் வீட்டு நினைவும் வீரர்களை வாட்டின. போரஸோடு கடுமையாய் போரிட்டதில் சற்று தளர்ந்துபோயிருந்த இவர்கள், வீடு திரும்ப விரும்பினார்கள். முதலில் சற்று தயங்கினாலும் பின்னர் அலெக்ஸாந்தர் அவர்களது விருப்பத்திற்கு இணங்கினார். உண்மையில் கிரீஸ் உலக வல்லரசென்ற நிலைக்கு உயர்ந்திருந்தது. கைப்பற்றப்பட்ட தேசங்களில் கிரேக்க குடியிருப்புகள் ஸ்தாபிக்கப்பட்டதால், சாம்ராஜ்யமெங்கும் கிரேக்க மொழியும் பண்பாடும் பரவின.

மாவீரரின் மனத்திரைக்குப் பின்னால்

மக்கெதோனிய படை வீரர்கள் வருடக்கணக்காக ஒன்றுபட்டு போரிட்டு வெற்றிகளைக் குவித்ததற்குக் காரணம் அலெக்ஸாந்தரின் குணநலனே. போர்களுக்குப் பின், காயமடைந்தவர்களை சென்று சந்தித்து, நலம் விசாரித்து, வீரதீர செயல்களுக்காக மெச்சி, அவரவரது சாதனைகளுக்கேற்ப சன்மானம் அளித்து கௌரவிப்பது அலெக்ஸாந்தரின் வழக்கம். போரில் இறந்தவர்களை ராஜ மரியாதையோடு அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். இறந்தவர்களின் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் வரி செலுத்துவதிலிருந்தும் எல்லா பணிகளிலிருந்தும் விலக்களித்தார். யுத்தங்களுக்குப் பிற்பாடு, ஒரு மாறுதலுக்காக அலெக்ஸாந்தர் விளையாட்டுகளையும் போட்டிகளையும் நடத்தினார். ஒருமுறை அவர் புது மணத்தம்பதிகளுக்கு விசேஷ விடுப்பு அளித்து, மக்கெதோனியாவில் தங்கள் மனைவிகளுடன் உல்லாசமாக குளிர்காலத்தைக் கழிக்க ஏற்பாடுகளை செய்துகொடுத்தார். இப்படிப்பட்ட செயல்களால் அவர் தன் மக்களின் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவரானார்.

பாக்ட்ரிய நாட்டு இளவரசியான ரொக்ஸானாவை அலெக்ஸாந்தர் மணம் முடித்ததைப் பற்றி, கிரேக்க வாழ்க்கை சரிதை எழுத்தாளரான ப்ளூடார்க் இவ்வாறு குறிப்பிட்டார்: “அது உண்மையிலேயே காதல்தான். அதேசமயத்தில் அவரது லட்சியத்திற்கும் கைகொடுத்தது. ஏனெனில் கைப்பற்றிய தேசத்திலிருந்தே ஒரு பெண்ணை கைபிடித்தது அம்மக்களின் உள்ளத்தைக் குளிர்வித்தது. அதுமட்டுமல்ல, அதிக அடக்கமான இவரே முதன்முறையாக உள்ளத்தை பறிகொடுத்திருந்தாலும், சட்டப்பூர்வமாய் கனத்துக்குரிய விதத்தில் மணம் முடிக்கும்முன் தன் நிழலும் அவள்மீது படாமல் பார்த்துக்கொண்டதால் அவர்களின் இதய தெய்வமானார்.”

மற்றவர்களின் திருமண பந்தத்தையும் அலெக்ஸாந்தர் மதித்தார். ராஜாவாகிய தரியுவின் மனைவியை இவர் சிறைப்பிடித்திருந்தாலும் அவள் தக்க மரியாதையோடு நடத்தப்படும்படி பார்த்துக்கொண்டார். அதேவிதமாய், சில அந்நியர்களின் மனைவிகளை இரண்டு மக்கெதோனிய வீரர்கள் மானபங்கப்படுத்தியதைக் கேள்விப்பட்டபோது, அது உண்மையென நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்க தீர்ப்பளித்தார்.

தன் தாய் ஓலிம்பியஸைப் போலவே அலெக்ஸாந்தர் மிகவும் பக்திமிக்கவர். யுத்தங்களுக்குச் செல்வதற்கு முன்னும் சென்றுவந்த பின்னும் பலிகள் செலுத்தினார். சகுனம் பார்ப்பதற்கு குறிசொல்பவர்களை அணுகினார். லிபியாவிலிருந்த அம்மோனில் இறைவாக்கு சொல்பவரையும் சந்தித்தார். முக்கியமாய் பாபிலோனிய தெய்வமான பெல்லுக்கு (மார்டுக்) பலிகள் செலுத்துவதைக் குறித்த கல்தேயர்களின் போதனைகளை பாபிலோனில் பின்பற்றினார்.

அலெக்ஸாந்தர் மிதமாக உணவருந்தினாலும், இறுதியில் பயங்கர குடிகாரர் ஆனார். கோப்பை கோப்பையாக திராட்சரசம் பருகப் பருக தனது சாதனைகளைக் குறித்து மணிக்கணக்காய் பெருமையடிப்பார். அலெக்ஸாந்தர் செய்த பொல்லாத பாவம், குடிவெறியில் தன் நண்பன் க்ளைடஸைக் கொன்றது. ஆனால் அலெக்ஸாந்தர் குற்றவுணர்வால் புழுங்கித் துடிதுடித்தார். மூன்று நாட்களாக பச்சைத்தண்ணீர்கூடப் பல்லில் படவில்லை; படுக்கையே கதியென கிடந்தார். ஒருவழியாக அவரது நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தனர்.

நாட்கள் செல்லச்செல்ல பேருக்கும் புகழுக்குமான வெறியால் அலெக்ஸாந்தரிடம் மற்ற கெட்ட குணங்கள் தோன்றின. பொய்க் குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாய் நம்பி, மிகக் கடுமையான தண்டனைகள் வழங்க ஆரம்பித்தார். உதாரணத்திற்கு, ஃபிலோடஸ் தன்னைக் கொல்ல திட்டமிட்டார் என்று சொல்லப்பட்டதை நம்பி, அவருக்கும் அவரது தகப்பனுக்கும்​—⁠அவ்வளவு காலம் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகராய் சேவித்த பார்மினியோவுக்கும்​—⁠மரண தண்டனை விதித்தார்.

அலெக்ஸாந்தர் கண்ட தோல்வி

பாபிலோனுக்குத் திரும்பிய கொஞ்ச காலத்திற்குள் அலெக்ஸாந்தருக்கு மலேரியா காய்ச்சல் வந்தது. அதில் விழுந்த அவர் எழவேயில்லை. பொ.ச.மு. 323, ஜூன் 13 அன்று, 32 வருடங்களும் 8 மாதங்களுமே வாழ்ந்திருந்த அவர், வெல்லமுடியாத எதிரியான மரணத்திடம் சரணடைந்தார்.

சில இந்திய ஞானிகள் சொன்னது உண்மையாயிற்று: “அலெக்ஸாந்தர் ராஜாவே, நிற்கிற ஒரு அடி நிலம்தான் மனுஷனுக்கு சொந்தம். நீரும் எல்லாரையும்போல் ஒரு சாதாரண மனுஷன்தானே. வித்தியாசமெல்லாம், நீர் துடிப்போடு, சிறிதும் தளராமல், சொந்த ஊருக்கு வெகு தூரம்சென்று, உலகையே வலம்வந்து, உமக்கும் இம்சையை வரவழைத்துக்கொண்டு மற்றவர்களையும் இம்சைப்படுத்திக்கொண்டு வாழ்கிறாய் என்பதே. ஆனால் இதெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு? உமக்கும் முடிவு காத்திருக்கிறது, அப்போது ஆறடி நிலம் மட்டுமே மிஞ்சும்.”

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• மகா அலெக்ஸாந்தரின் பின்னணி என்ன?

• மக்கெதோனிய அரியணையில் அமர்ந்தவுடனேயே அலெக்ஸாந்தர் என்ன பணியில் இறங்கினார்?

• அலெக்ஸாந்தரின் வெற்றிகள் சிலவற்றை விளக்குக.

• அலெக்ஸாந்தரின் குணாம்சத்தைப் பற்றி என்ன சொல்லலாம்?

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

அலெக்ஸாந்தர் வென்ற இடங்கள்

மக்கெதோனியா

பாபிலோன்

எகிப்து

சிந்து நதி

[படம்]

அலெக்ஸாந்தர்

[படம்]

அரிஸ்டாட்டிலும் அவர் மாணவர் அலெக்ஸாந்தரும்

[முழுபட பக்கம்]

[படம்]

மகா அலெக்ஸாந்தரின் உருவம் பொரிக்கப்பட்ட மெடல்

[பக்கம் 162, 163-ன் பெட்டி/படங்கள்]

மாபெரும் சாம்ராஜ்யம் பிளவுறுகிறது

மகா அலெக்ஸாந்தரின் சாம்ராஜ்யம் உடைந்து பகுக்கப்படும், ஆனால் ‘அவருடைய சந்ததியாருக்கு’ தரப்படாது என்று பைபிள் முன்னறிவித்திருந்தது. (தானியேல் 11:3, 4) அதேவிதமாய் பொ.ச.மு. 323-⁠ல் அலெக்ஸாந்தர் திடீரென இறந்து 14 வருடங்களுக்குள் அவருக்கு முறையாக பிறந்த நான்காம் அலெக்ஸாந்தரும் முறைதவறிப் பிறந்த ஹிராக்ளிஸும் கொல்லப்பட்டனர்.

பொ.ச.மு. 301-⁠ல் அலெக்ஸாந்தரின் நான்கு தளபதிகள் தங்கள் தேசாதிபதி உருவாக்கிய மாபெரும் சாம்ராஜ்யத்தை ஆளும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டனர். தளபதி கஸாண்டர் மக்கெதோனியாவையும் கிரீஸையும் ஆண்டார். லைசிமாக்கஸ் என்ற தளபதி ஆசியா மைனரையும் த்ரேஸையும் பெற்றார். மெசப்பொத்தேமியாவும் சிரியாவும் முதலாம் செலூக்கஸ் நிகேட்டாரின் கைக்குச் சென்றன. தாலமி லேகஸ் அல்லது முதலாம் தாலமி, எகிப்திற்கும் பலஸ்தீனாவிற்கும் அரசரானார். இவ்வாறு அலெக்ஸாந்தரின் மாபெரும் சாம்ராஜ்யம் நான்கு கிரேக்க ராஜ்யங்களாய் பிளவுற்றது.

இந்த நான்கு கிரேக்க ராஜ்யங்களில், மிகக் குறுகிய காலம் நீடித்தது கஸாண்டரின் ஆட்சியே. அவர் ஆட்சிக்குவந்து சில வருடங்களில் ஆண் வாரிசின்றி போனார். அதன்பின் பொ.ச.மு. 285-⁠ல் லைசிமாக்கஸ் மக்கெதோனிய ராஜ்யத்தின் ஐரோப்பிய பகுதியைக் கைப்பற்றினார். நான்கு வருடங்களுக்குப் பிறகு, லைசிமாக்கஸ், முதலாம் செலூக்கஸ் நிகேட்டாரோடு போரிட்டபோது உயிரிழந்தார். இவ்வாறு பெரும்பான்மையான ஆசிய பிராந்தியம் செலூக்கஸின் அதிகாரத்தின்கீழ் வந்தது. சிரியாவை ஆண்ட செலூக்கஸ் வம்சத்து ராஜாக்களில் இவரே முதலானவர். சிரியாவில் அந்தியோகியா என்ற நகரை நிர்மாணித்து அதை தனது புதிய தலைநகரமாக்கினார். பொ.ச.மு. 281-⁠ல் அவர் கொல்லப்பட்டார். ஆனால் அவரது வம்சம் பொ.ச.மு. 64 வரை ஆட்சி செய்தது. அவ்வருடத்தில் ரோம தளபதி பாம்பே சிரியாவை ரோம மாகாணமாக்கினார்.

அலெக்ஸாந்தரின் சாம்ராஜ்யத்தினுடைய நான்கு பிரிவுகளில் தாலமியின் ராஜ்யமே வெகு காலம் நீடித்தது. முதலாம் தாலமி பொ.ச.மு. 305-⁠ல் முதல் மக்கெதோனிய ராஜாவாக அல்லது எகிப்திய பார்வோனாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டார். அலெக்சாண்டிரியாவை தலைநகராக்கி, நகர வளர்ச்சித் திட்டத்தில் உடனடியாக இறங்கினார். அவரது பிரமாண்டமான கட்டுமான திட்டங்களில் ஒன்று, புகழ்பெற்ற அலெக்சாண்டிரியா நூலகம். இந்த மகத்தான பணியை மேற்பார்வையிட தாலமி கிரீஸிலிருந்து பெயர்பெற்ற ஆதன்ஸ் அறிஞரான திமிட்ரியாஸ் ஃபாலியரஃப்ஸை வரவழைத்தார். பொ.ச. முதல் நூற்றாண்டிற்குள், இந்த நூலகத்தில் பத்து லட்சம் சுருள்கள் சேகரிக்கப்பட்டிருந்ததாய் சொல்லப்படுகிறது. தாலமியின் ராஜ வம்சம், பொ.ச.மு. 30-⁠ல் எகிப்தை ரோம் கைப்பற்றியது வரை ஆட்சியில் இருந்தது. அதன்பின் உலக மகா வல்லரசாய் கிரீஸின் ஆட்சிப்பீடத்தை ரோம் எடுத்துக்கொண்டது.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• அலெக்ஸாந்தரின் மாபெரும் சாம்ராஜ்யம் எவ்வாறு பிளவுற்றது?

• செலூக்கஸ் அரச வம்சம் எதுவரை சிரியாவை ஆண்டது?

• எகிப்தில் தாலமியின் அரச வம்சம் எப்போது முடிவுக்கு வந்தது?

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பிளவுற்ற அலெக்ஸாந்தரின் சாம்ராஜ்யம்

முதலாம் தாலமி

முதலாம் செலூக்கஸ்

முதலாம் தாலமி

கஸாண்டர்

[படங்கள்]

லைசிமாக்கஸ்

முதலாம் செலூக்கஸ்

[பக்கம் 139-ன் வரைப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

தானியேல் தீர்க்கதரிசனத்தின் உலக வல்லரசுகள்

மாபெரும் சிலை (தானியேல் 2:31-45)

சமுத்திரத்திலிருந்து எழும் நான்கு மிருகங்கள் (தானியேல் 7:3-8, 17, 25)

பாபிலோனியா பொ.ச.மு. 607-லிருந்து

மேதிய-பெர்சியா பொ.ச.மு. 539-லிருந்து

கிரீபஸ் பொ.ச.மு. 331-லிருந்து

ரோம் பொ.ச.மு. 30-லிருந்து

ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு பொ.ச. 1763-லிருந்து

அரசியல்ரீதியில் பிளவுபட்ட உலகம் முடிவு காலத்தில்

[பக்கம் 128-ன் முழுபடம்]

[பக்கம் 147-ன் முழுபடம்]