Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளது தூதுவர் தந்த பலம்

கடவுளது தூதுவர் தந்த பலம்

அதிகாரம் பன்னிரண்டு

கடவுளது தூதுவர் தந்த பலம்

யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதைப் பார்ப்பதில் தானியேலுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அவ்வாறு ஆர்வம் காட்டியதற்காக கடவுள் அவரை பெரிதும் ஆசீர்வதித்தார். மேசியா தோன்றுவது சம்பந்தமான, 70 வாரங்களைக் குறித்த ஆர்வத்தைக் கிளறும் தீர்க்கதரிசனம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. கடவுளுக்கு உண்மையோடு இருந்த தனது மக்களில் மீதியானோர் தாயகத்திற்குத் திரும்புவதைப் பார்க்கும் பாக்கியம் தானியேலுக்கு கிடைத்தது. இது, ‘பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்தின்’ முடிவிலே, பொ.ச.மு. 537-⁠ல் நடந்தது.​—எஸ்றா 1:1-4.

2தானியேல் தன் மக்களோடு சேர்ந்து யூதாவிற்குத் திரும்பவில்லை. அந்த வயதான காலத்தில் பயணம் செய்வது அவருக்கு சிரமமாய் இருந்திருக்கலாம். எதுவாயிருந்தாலும், பாபிலோனிலேயே தானியேலை தம் சேவைக்காக மேலும் பயன்படுத்த கடவுள் எண்ணினார். இரண்டு வருடங்கள் சென்றன. பதிவு சொல்கிறது: “பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்து கொண்டான்.”​—தானியேல் 10:⁠1.

3‘கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷம்’ பொ.ச.மு. 536/535-⁠ஆக இருக்கும். ராஜகுலத்தையும் உயர்குடியையும் சேர்ந்த யூத வாலிபர்களோடு தானியேலும் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டு இப்போது 80 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. (தானியேல் 1:3) அவர் முதன்முதலில் பாபிலோனுக்கு வந்தபோது இளம் வாலிபரென்றால், இப்போது கிட்டத்தட்ட 100 வயதை எட்டியிருப்பார். இவ்வளவு காலம் கடவுளுக்கு உண்மையோடு தொண்டாற்றி, என்னே ஓர் அருமையான வாழ்க்கை வாழ்ந்தார்!

4தானியேலுக்கு, வயதான காலத்திலும் யெகோவாவின் சேவையில் இன்னும் செய்வதற்கு அதிகமிருந்தது. அவர் மூலம் கடவுள் இன்னொரு செய்தியை சொல்லவிருந்தார். அது ஆண்டாண்டு காலத்திற்கு நிறைவேற்றத்தைக் காணவிருந்த ஒரு தீர்க்கதரிசனம். நம் நாள்வரையும் எதிர்காலத்துக்கும்கூட பொருந்தும் ஒரு தீர்க்கதரிசனம். இப்பணியையும் தானியேல் நிறைவேற்ற, தம் பங்கில் உதவியளித்து அவரை பலப்படுத்துவது அவசியமென கண்டார் யெகோவா.

கவலையளித்த ஒன்று

5யூத மீதியானோரோடு தானியேல் எருசலேமுக்குத் திரும்பாவிட்டாலும், தனது நேசத்திற்குரிய தாயகத்தில் என்ன நடக்கிறதோ ஏது நடக்கிறதோ என சதா நினைத்துக்கொண்டிருந்தார். எருசலேமில் அனைத்தும் சுமுகமாக நடக்கவில்லை என்ற செய்தி அவரை எட்டியது. பலிபீடம் மீண்டும் கட்டப்பட்டு, ஆலயத்திற்கான அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது உண்மை. (எஸ்றா, அதிகாரம் 3) ஆனால் திரும்பக்கட்டும் பணியை அண்டைய தேசங்கள் எதிர்த்தன. தாயகம் திரும்பிய யூதர்களுக்கு எதிராக விஷமம் செய்தன. (எஸ்றா 4:1-5) இப்படி எவ்வளவோ நியாயமான காரணங்களுக்காக தானியேல் கவலைப்பட்டிருக்கலாம்.

6எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை தானியேல் நன்கு அறிந்திருந்தார். (தானியேல் 9:2) எருசலேமின் ஆலயம் திரும்பக் கட்டப்பட்டு, உண்மை வணக்கம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுவது, யெகோவாவின் நோக்கத்தோடு நெருங்க சம்பந்தப்பட்டிருந்தது என்றும் இவை அனைத்தும் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா தோன்றுவதற்கு முன் நடைபெறும் என்றும் அவர் அறிந்திருந்தார். சொல்லப்போனால், ‘எழுபது வாரங்களைப்’ பற்றிய தீர்க்கதரிசனத்தை யெகோவாவிடமிருந்து பெறும் மிகப் பெரிய பாக்கியம் பெற்றார் தானியேல். அத்தீர்க்கதரிசனத்திலிருந்து, எருசலேம் திரும்ப எடுப்பித்துக் கட்டப்படுவதற்கான கட்டளையிடப்பட்டு 69 ‘வாரங்களுக்கு’ பிற்பாடு மேசியா தோன்றுவார் என புரிந்துகொண்டார். (தானியேல் 9:24-27) எருசலேம் பாழாய்கிடந்ததையும், ஆலயக் கட்டுமானப் பணி ஒத்திப்போடப்பட்டதையும் கருத்தில் கொள்கையில், தானியேல் ஏன் உற்சாகமிழந்து, சோர்வுற்று, துவண்டுபோயிருந்தார் என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.

7“அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை” என பதிவு சொல்கிறது. (தானியேல் 10:2, 3) “மூன்று வாரமுழுவதும்” அதாவது 21 நாட்களும் துக்கித்து உபவாசமிருந்தது வழக்கத்திற்கு மாறான நீண்ட காலம்தான். அது “முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே” முடிந்ததாக தெரிகிறது. (தானியேல் 10:4) ஆகவே முதலாம் மாதமான நிசான் 14 அன்று கொண்டாடப்பட்ட பஸ்காவின்போதும் அதைத் தொடர்ந்த ஏழு நாள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையின்போதும் தானியேல் உபவாசித்துக்கொண்டிருந்தார்.

8தானியேல் இதுபோல் துக்கிப்பது முதல் தடவை அல்ல. முன்பு, 70 வருடங்களுக்கு எருசலேம் பாழாய்க் கிடக்கும் என்ற யெகோவாவின் தீர்க்கதரிசனத்தினுடைய நிறைவேற்றத்தைக் குறித்து அவர் கலக்கமடைந்திருந்தார். அப்போது தானியேல் என்ன செய்தார்? ‘நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கினேன்’ என்றார் தானியேல். யெகோவா தானியேலின் ஜெபத்திற்கு பதிலளித்தார். அவர் காபிரியேல் தூதனை அனுப்பி, தானியேலுக்கு மிகுந்த உற்சாகமளித்தார். (தானியேல் 9:3, 21, 22) அதேவிதமாய் இப்போதும், தானியேல் பெறத் துடித்த உற்சாகத்தை யெகோவா அருளுவாரா?

பிரமிப்பூட்டும் தரிசனம்

9தானியேலுக்கு ஏமாற்றம் ஏற்படவில்லை. அடுத்ததாக நடந்ததை அவர் தொடர்ந்து சொல்கிறார்: “நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.” (தானியேல் 10:4, 5) இதெக்கேல் என்பது ஏதேன் தோட்டத்திலிருந்து ஓடிய நான்கு நதிகளில் ஒன்றாகும். (ஆதியாகமம் 2:10-14) பண்டைய பெர்சிய மொழியில் இதெக்கேல் என்பது டைகிரா என அழைக்கப்பட்டது; இதிலிருந்துதான் டைக்ரீஸ் என்ற கிரேக்க பெயர் தோன்றியது. இந்நதிக்கும் ஐப்பிராத்து நதிக்கும் இடையேயான பகுதிதான் மெசப்பொத்தேமியா என அழைக்கப்பட்டது. அதற்கு அர்த்தம், “நதிகளுக்கிடையிலான நிலம்.” ஆகவே தானியேல் இந்தத் தரிசனத்தை பெற்றபோது, அவர் பாபிலோன் நகரில் இல்லாவிட்டாலும் பாபிலோனியா தேசத்தில்தான் இருந்தார் என்பது ஊர்ஜிதமாகிறது.

10தானியேல் என்னே ஒரு தரிசனத்தைப் பெற்றார்! அவர் கண்டது ஒரு சாதாரண மனிதனே அல்ல. தானியேலே தத்ரூபமாய் விவரிப்பதைக் கேளுங்கள்: “அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.”​—தானியேல் 10:⁠6.

11தரிசனம் அவ்வளவு பிரகாசமாய் இருந்தபோதும், “என்னோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை” என்றார் தானியேல். ஏதோவொரு காரணத்தால், “அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளித்துக் கொண்டார்கள்.” ஆகவே தானியேல் நதிக்கரையில் தன்னந்தனியாக விடப்பட்டார். ‘அந்தப் பெரிய தரிசனம்’ அவ்வளவு பிரமிப்பூட்டியதால், “என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்” என அவர் ஒப்புக்கொண்டார்.​—தானியேல் 10:7, 8.

12தானியேல் பார்த்து அரண்டுபோன, ஈர்க்கும் சக்திபடைத்த இந்தத் தூதுவரை சற்று உற்று நோக்கலாம். அவர் ‘சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தார்.’ பூர்வ இஸ்ரவேலில், பிரதான ஆசாரியரின் கச்சையும், மார்ப்பதக்கமும், ஏபோத்தும், மற்ற ஆசாரியர்களின் அங்கிகளும்கூட, திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டன. (யாத்திராகமம் 28:4-8; 39:27-29) இவ்வாறு தூதுவரின் உடை புனிதத்தன்மையையும் மதிப்புமிக்க அதிகாரப் பொறுப்பையும் குறிக்கிறது.

13தூதுவரின் தோற்றத்தைப் பார்த்தும் தானியேல் பிரமித்துப்போனார். ரத்தினம்போல் பிரகாசிக்கும் உடல், கண்ணைப் பறிக்கிற ஒளிவீசும் முகம், நெருப்பாய் ஜொலிக்கும் கண்கள், அம்பென பாயும் கூரிய பார்வை, உரமேறிய கைகள் மற்றும் பாதங்களின் பளபளப்பு என அனைத்தும் பிரமிப்பூட்டின. அவரது அதிகாரத் தொனியும் பயமுண்டாக்கியது. இவ்வர்ணனை மீமானிடருக்கு மட்டுமே பொருந்தும் அல்லவா? ‘சணல் வஸ்திரந்தரித்த’ இவர், யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தில், உயர்ந்த ஸ்தானத்தில் சேவித்த ஒரு தேவதூதரே. அங்கிருந்து ஒரு செய்தியோடு அவர் வந்திருந்தார் a

‘மிகப் பிரியமானவர்’ பலப்படுத்தப்படுகிறார்

14தானியேலிடம் யெகோவாவின் தூதர் சொல்லவிருந்த செய்தி, மிக முக்கியமான, ஆனால் சிக்கலான ஒன்றாயிருந்தது. அதைக் கேட்பதற்குமுன், உடற்சோர்விலிருந்தும் மனவேதனையிலிருந்தும் மீள தானியேலுக்கு உதவி தேவைப்பட்டது. இதை அறிந்த தூதர் தானியேலுக்கு தனிப்பட்ட உதவியையும் உற்சாகத்தையும் அன்போடு அளித்தார். என்ன நடந்ததென்பதை தானியேல் சொல்ல, நாம் கேட்போம்.

15“அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கவே நான் முகங்கவிழ்ந்து அறிவுமயங்கினவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்.” ஒருவேளை தானியேல் பயத்தாலும் கவலையாலும் துவண்டுபோய் மயங்கிக்கிடந்திருப்பார். அவருக்கு தூதர் எவ்வாறு உதவினார்? “இதோ, ஒருவன் கை என்னைத்தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையில் நடுங்கி ஊன்ற என்னைத் தூக்கிவைத்தது” என்றார் தானியேல். அதுமட்டுமல்லாமல், அந்தத் தூதர் தானியேலை இப்படி உற்சாகப்படுத்தவும் செய்தார்: “தானியேலே, மிகப் பிரியமானவனே, நான் உனக்குச்சொல்லும் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டுக் கால் ஊன்றி நில்; நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டேன்.” அந்தத் தூதர் செய்த உதவியும், கூறிய ஆறுதலான வார்த்தைகளும் தானியேலுக்கு புத்துயிரளித்தன. அவர் ‘நடுங்கினாலும்,’ ‘எழுந்து நின்றார்.’​—தானியேல் 10:9-11, தி.மொ.

16தானியேலைப் பலப்படுத்தவே வந்திருப்பதாய் அந்தத் தூதர் குறிப்பிட்டார். “தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்” என்றார் தூதர். அதன்பின் தான் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதேன் எனவும் விளக்கினார்: “பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.” மிகாவேலின் உதவியோடு இத்தூதரால் தன் வேலையை நிறைவேற்ற முடிந்தது. இந்த மிக அவசர செய்தியோடு தானியேலிடம் வந்தார்: “இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும்.”​—தானியேல் 10:12-14.

17ஆர்வத்தைக் கிளறும் ஒரு செய்தியை கேட்கப்போவதை நினைத்து தானியேல் பூரிப்படைவார் என்று பார்த்தால், அதுதான் இல்லை. நிலைமை தலைகீழாகிவிட்டதாய் தெரிகிறது. பதிவு சொல்கிறது: “அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.” ஆனால் அந்தத் தேவதூதர் மீண்டும், இரண்டாம் முறையாக அன்போடு உதவிக்கு வந்தார். தானியேல் சொன்னார்: ‘அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசினேன்.’  bதானியேல் 10:15, 16அ.

18அந்தத் தூதர் தானியேலின் உதடுகளைத் தொட்டபோது அவர் திடமானார். (ஏசாயா 6:7-ஐ ஒப்பிடுக.) இப்போது பேசுவதற்கு தெம்பு வந்துவிடவே, தானியேல் தன் பாடுகளை இவ்வாறு தூதரிடம் விளக்கினார்: “என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப் போனேன். ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை.”​—தானியேல் 10:16ஆ, 17.

19தானியேல் ஏதோ புகார் செய்துகொண்டோ சாக்கு சொல்லிக்கொண்டோ இல்லை. அவர் வெறுமனே தன் இக்கட்டான நிலையைத்தான் குறிப்பிட்டார், அத்தூதரும் இவர் சொன்னதை மறுக்கவில்லை. ஆகவே மூன்றாம் முறையாக, தானியேலுக்கு உதவினார் தூதர். ‘அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தினான்’ என்றார் தீர்க்கதரிசி. அவ்வாறு தொட்டு திடப்படுத்திய தூதர் இப்படி ஆறுதலாகவும் பேசினார்: “பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள்.” தானியேலுக்குத் தேவைப்பட்டதெல்லாம் இந்த அன்பும் ஆறுதலான வார்த்தைகளும்தான். விளைவு என்ன? தானியேல் அறிவித்ததாவது: “இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.” இப்போது அவர் மற்றொரு நியமிப்பின் சவாலை சந்திக்க தயாரானார்.—தானியேல் 10:18, 19.

20தானியேலைப் பலப்படுத்தி, மனதளவிலும் உடலளவிலும் இயல்புக்குத் திரும்ப அவருக்கு உதவிய தூதர் மறுபடியும் தான் வந்த நோக்கத்தைக் குறிப்பிட்டார். அவர் சொன்னார்: “நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப் போகிறேன்; நான் போன பின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான். சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத்தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.”—தானியேல் 10:20, 21.

21யெகோவாவிற்கு என்னே அன்பு, என்னே கரிசனை! அவர் எப்போதும் தம் ஊழியர்களின் திறமைகளையும் குறைபாடுகளையும் கருத்தில்கொண்டே செயல்படுகிறார். அவர்களால் நிறைவேற்ற முடியுமென தாம் நினைக்கும் நியமிப்புகளையே தருகிறார். சிலசமயம் அதற்கு தாங்கள் தகுதியில்லை என அவர்கள் நினைக்கலாம். அச்சமயத்தில் அவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்டு, பின் நியமிப்புகளை நிறைவேற்ற அவர்களுக்குத் தேவையான உதவியையும் அளிக்கிறார். நாமும் நம் பரலோக தகப்பனான யெகோவாவைப் போலவே, நம் உடன் விசுவாசிகளை அன்போடு உற்சாகப்படுத்தி பலப்படுத்துவோமாக.—எபிரெயர் 10:24.

22தூதரின் ஆறுதலான செய்தி தானியேலுக்கு மிகுந்த உற்சாகமளித்தது. முதிர்வயதிலும், முக்கியத்துவம் வாய்ந்த கூடுதலான தீர்க்கதரிசனத்தைப் பெற்று நம் நன்மைக்காக அதை எழுதிவைக்க தானியேல் பலப்படுத்தப்பட்டு, தயாராக்கப்பட்டார்.

[அடிக்குறிப்புகள்]

a இத்தூதரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் தானியேல் கண்ட தரிசனத்தை அவருக்கு விளக்குமாறு காபிரியேலிடம் சொன்னவர் இவரே என தெரிகிறது. (தானியேல் 8:2, 15, 16-ஐ, 12:7, 8-⁠ம் வசனங்களோடு ஒப்பிடுக.) மேலும் “பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய” மிகாவேல் இந்தத் தூதரின் உதவிக்கு வந்ததாக தானியேல் 10:13 சொல்கிறது. ஆகவே பெயரிடப்படாத இந்தத் தூதர் காபிரியேலோடும் மிகாவேலோடும் நெருக்கமாக சேவை செய்யும் பாக்கியம் பெற்றவராய் இருக்கவேண்டும்.

b தானியேலிடம் பேசிக்கொண்டிருந்த அதே தூதர் அவரது உதடுகளைத் தொட்டு பேச வைத்திருக்கலாம் என்றாலும், இது சொல்லப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால், வேறொரு தூதர் அதைச் செய்திருப்பதற்கும் வாய்ப்பிருப்பதாய் தெரிகிறது. ஒருவேளை அவர் காபிரியேல் தூதராயும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், தானியேல் ஒரு பரலோக தூதுவரால் பலப்படுத்தப்பட்டார்.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• பொ.ச.மு. 536/535-⁠ல் யெகோவாவின் தூதர் தானியேலின் உதவிக்கு வருவதில் ஏன் தாமதம் ஏற்பெட்டது?

• தேவதூதரின் உடையும் தோற்றமும் அவரைப் பற்றி என்ன சொல்கின்றன?

• தானியேலுக்கு என்ன உதவி தேவைப்பட்டது, எவ்வாறு தூதர் மூன்று முறை உதவியளித்தார்?

• தூதர் தானியேலிடம் என்ன செய்தியைச் சொல்ல வந்தார்?

[கேள்விகள்]

1. யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியதற்கு தானியேல் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார்?

2, 3. தானியேல் ஏன் யூத மீதியானோரோடு சேர்ந்து எருசலேமுக்குத் திரும்பவில்லை?

4. வயதான காலத்திலும் தானியேல் யெகோவாவின் சேவையில் தொடர்ந்து என்ன முக்கிய பங்கு வகிக்கவிருந்தார்?

5. தானியேல் எப்படிப்பட்ட செய்திகளைக் கேட்டு கவலைப்பட்டிருப்பார்?

6. எருசலேமின் நிலைமைகள் ஏன் தானியேலை வாட்டின?

7. தானியேல் மூன்று வாரங்களுக்கு என்ன செய்தார்?

8. எந்தச் சந்தர்ப்பத்தில் தானியேல் யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஊக்கமாக மன்றாடினார், அதன் விளைவென்ன?

9, 10. (அ) தானியேல் தரிசனத்தைப் பெற்றபோது எங்கிருந்தார்? (ஆ) தானியேல் கண்ட தரிசனத்தை விளக்குக.

11. தானியேலையும் அவரோடிருந்த மற்றவர்களையும் தரிசனம் என்ன நிலைக்கு உள்ளாக்கியது?

12, 13. தூதுவரின் (அ) உடையும், (ஆ) தோற்றமும் எதைக் காட்டுகின்றன?

14. தூதர் சொல்லும் செய்தியைக் கேட்பதற்கு தானியேலுக்கு என்ன உதவி தேவைப்பட்டது?

15. தூதர் எவ்வாறு தானியேலுக்கு உதவினார்?

16. (அ) யெகோவா தமது ஊழியர்களின் ஜெபங்களுக்கு உடனடியாக பதிலளிக்கிறார் என எது காட்டுகிறது? (ஆ) தானியேலின் உதவிக்கு வருவதில் தூதருக்கு ஏன் தாமதம் ஏற்பட்டது? (பெட்டியையும் சேர்த்துக் கொள்ளவும்.) (இ) தூதர் தானியேலிடம் என்ன செய்தியை சொல்ல வந்தார்?

17, 18. தானியேல் இரண்டாம் முறையாக எவ்வாறு உதவப்பட்டார், எதைச் செய்ய அது அவருக்கு உதவியது?

19. மூன்றாம் முறையாக எவ்வாறு தானியேல் உதவப்பட்டார், அதன் விளைவென்ன?

20. தேவதூதருக்கு தன் நியமிப்பை நிறைவேற்ற ஏன் முயற்சி தேவைப்பட்டது?

21, 22. (அ) தானியேலின் அனுபவத்திலிருந்து, யெகோவா தம் ஊழியர்களை நடத்தும் விதத்தைக் குறித்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) எதற்காக இப்போது தானியேல் பலப்படுத்தப்பட்டார்?

[பக்கம் 204, 205-ன் பெட்டி]

பாதுகாக்கும் தூதர்களா, ஆளுகைசெய்யும் பேய்களா?

தூதர்களைப் பற்றி தானியேல் புத்தகத்திலிருந்து நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். யெகோவாவின் கட்டளையை நிறைவேற்றுவதில் அவர்களது பங்கைப் பற்றி அது சொல்கிறது. தங்கள் நியமிப்புகளை நிறைவேற்ற அவர்கள் எடுக்கும் முயற்சியையும் அது சுட்டிக்காட்டுகிறது.

தானியேலிடம் பேச வருகையில் “பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி” தன்னைத் தடுத்ததாக தேவதூதர் சொன்னார். 21 நாட்கள் அவனோடு போராடிய பிறகும் ‘பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேலின்’ உதவியால் மட்டுமே அவரால் அவனை மேற்கொள்ள முடிந்தது. மீண்டும் அந்த எதிரியுடனும், ஒருவேளை ‘கிரேக்கு தேசத்தின் அதிபதியோடும்கூட’ யுத்தம் செய்யவேண்டியிருக்கும் என்றும் தூதர் சொன்னார். (தானியேல் 10:13, 20) தூதருக்கும்கூட இவ்வளவு திண்டாட்டம்! ஆனால், இந்த பெர்சிய, கிரேக்க அதிபதிகள் யார்?

முதலாவதாக, மிகாவேல் ‘பிரதான அதிபதிகளில் ஒருவன்’ என்றும் ‘உங்கள் அதிபதி’ என்றும் அழைக்கப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிற்பாடு, “[தானியேலுடைய] ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதி” என்றும் மிகாவேல் அழைக்கப்படுகிறார். (தானியேல் 10:21; 12:⁠1) இஸ்ரவேலர்களை வனாந்தர வழியாக நடத்திச்செல்ல யெகோவாவால் நியமிக்கப்பட்ட தூதரே மிகாவேல் என இது காட்டுகிறது.​—⁠யாத்திராகமம் 23:20-23; 32:34; 33:⁠2.

சீஷராகிய யூதா சொன்னது இதை ஆதரிக்கிறது: ‘பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினார்.’ (யூதா 9) மிகாவேலின் ஸ்தானமும், வல்லமையும், அதிகாரமும் அவரை உண்மையில் ‘பிரதான தூதராக்கின,’ அதாவது முக்கிய அல்லது தலைமை தூதராக்கின. இந்த உயர்வான ஸ்தானம் கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே பொருந்தும். பூமிக்கு வருவதற்கு முன்னும் வந்துசென்ற பின்னும் அவர் இந்த ஸ்தானத்தை வகிக்கிறார்.​—⁠1 தெசலோனிக்கேயர் 4:16; வெளிப்படுத்துதல் 12:7-9.

அப்படியென்றால் பெர்சியா, கிரீஸ் போன்ற தேசங்களையும் வழிநடத்த யெகோவா தூதர்களை நியமித்திருக்கிறார் என அர்த்தமாகுமா? ‘இந்த உலகத்தின் அதிபதிக்கு . . . என்னிடத்தில் ஒன்றுமில்லை’ என கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெளிப்படையாக குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, . . . என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல” என்றும் சொன்னார். (யோவான் 14:30; 18:36) ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று’ அப்போஸ்தலனாகிய யோவான் அறிவித்தார். (1 யோவான் 5:19) உலகத்து தேசங்கள் கடவுளது அல்லது கிறிஸ்துவின் ஆட்சியின்கீழோ வழிநடத்துதலின்கீழோ ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை என்பது தெளிவாயிருக்கிறது. ‘மேலான அதிகாரங்கள்’ செயல்படவும், பூமிக்குரிய அரசாங்க காரியங்களை கட்டுப்படுத்தவும் யெகோவா அனுமதிக்கிறபோதும், அவற்றின்மீது தூதர்களை நியமிப்பதில்லை. (ரோமர் 13:1-7) ‘இந்த உலகத்தின் அதிபதியான’ பிசாசாகிய சாத்தான் மட்டுமே அவற்றின்மீது எவ்வித ‘அதிபதிகளையும்’ ‘ஆட்சியாளர்களையும்’ நியமித்திருப்பான். அவர்கள் பாதுகாப்பளிக்கும் தூதர்கள் அல்ல, ஆளுகைசெய்யும் பேய்களாகத்தான் இருக்க முடியும். அப்படியென்றால் மனித ஆட்சியாளர்களுக்குப் பின் காணக்கூடாத பேய்கள் அல்லது ‘அதிபதிகள்’ உண்டு. தேசப் போர்களில் ஈடுபட்டிருப்பதும் மானிடர்கள் மட்டுமே அல்ல.

[பக்கம் 199-ன் முழுபடம்]

[பக்கம் 207-ன் முழுபடம்]