Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடுஞ்சோதனைக்கு மசியாத விசுவாசம்

கடுஞ்சோதனைக்கு மசியாத விசுவாசம்

அதிகாரம் ஐந்து

கடுஞ்சோதனைக்கு மசியாத விசுவாசம்

கடவுள் பக்தியா, தேச பக்தியா என்ற கேள்வி எழும்புகையில், ‘இரண்டிற்குமே மரியாதை காட்டுகிறேன். என் மதத்தின்படி கடவுளை வணங்குகிறேன்; அதேசமயம் என் தாய்நாட்டின் மானம் காப்பேன்’ என அநேகர் சொல்வார்கள்.

2இன்று தெய்வ பக்திக்கும் தேசப்பற்றுக்கும் ஓரளவு வித்தியாசம் தெரியலாம், அன்றோ பூர்வ பாபிலோனில் இத்தகைய வித்தியாசம் அறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில், அரசியலும் மதமும் அங்கு அந்தளவு பின்னிப் பிணைந்திருந்ததால் சிலசமயம் அவற்றைப் பிரித்துப் பார்ப்பது முடியாத காரியமாயிருந்தது. “பூர்வ பாபிலோனில் ராஜாவும் பிரதான ஆசாரியரும் ஒருவரே. அவர் பலிகளை செலுத்தி, தன் குடிமக்கள் பின்பற்றவேண்டிய மத பழக்கவழக்கங்களையும் நிர்ணயித்தார்” என பேராசிரியர் சார்ல்ஸ் எஃப். ஃபைஃபர் எழுதுகிறார்.

3நேபுகாத்நேச்சார் ராஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது பெயரின் அர்த்தம், “நேபோவே, வாரிசை பாதுகாத்திடு!” என்பதாகும். நேபோ என்பது அறிவுக்கும் வேளாண்மைக்குமான பாபிலோனிய தெய்வம். நேபுகாத்நேச்சார் தெய்வபக்தி மிக்கவர். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அவர் அநேக பாபிலோனிய தெய்வங்களுக்கு ஆலயங்களைக் கட்டி, அவற்றை அழகுபடுத்தினார். அவரது இஷ்ட தெய்வம் மார்டுக். போரில் தான் பெற்ற எல்லா வெற்றிகளுக்கும் புகழ்மாலையை மார்டுக்கிற்கே சூட்டினார் a நேபுகாத்நேச்சார் குறிகேட்காமல் எந்தப் போர் நடவடிக்கைகளையும் திட்டமிட்டதாக தெரியவில்லை.​—எசேக்கியேல் 21:18-23.

4பாபிலோன் எங்கும் மத சூழல் நிலவியதில் சந்தேகமேயில்லை. அந்நகரில் 50-⁠க்கும் அதிகமான ஆலயங்கள் இருந்தன. கணக்குவழக்கில்லாத தெய்வங்களும் தேவிகளும் வணங்கப்பட்டன. அனூ (வான தெய்வம்), என்லில் (பூமி, தென்றல், புயல்காற்றுக்கான தெய்வம்), இயா (தண்ணீர் தெய்வம்) ஆகிய திரித்துவ தெய்வங்கள் வணங்கப்பட்டன. மூன்று கடவுட்களின் மற்றொரு தொகுதி: சின் (சந்திரக் கடவுள்), ஷமாஷ் (சூரியக் கடவுள்), இஷ்டார் (கருவள தேவதை). மாயவித்தை, பில்லிசூனியம், ஜோசியம் ஆகியவை பாபிலோனிய வணக்கத்தில் முக்கிய பாகம் வகித்தன.

5அநேக தெய்வங்களை வழிபட்டு வந்த மக்களோடு சேர்ந்து வாழ்வது நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், உன்னத சட்டப் பிரமாணிகரான கடவுளுக்கு எதிராக கலகம் செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மோசே இஸ்ரவேலர்களுக்கு எச்சரித்திருந்தார். அவர் சொன்னதாவது: “கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.”​—உபாகமம் 28:15, 36.

6இப்போது யூதர்கள் இதே சிக்கலான சூழ்நிலையில்தான் இருந்தனர். முக்கியமாய் தானியேலுக்கும் அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கும் யெகோவாவிற்கு தொடர்ந்து உத்தமமாய் இருப்பது மிகச் சிரமமாய் இருந்திருக்கும். இந்த நான்கு எபிரெய இளைஞர்களும், அரசாங்க சேவைக்கான பயிற்சிபெற விசேஷமாய் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (தானியேல் 1:3-5) அந்தப் புது சூழ்நிலையோடு அவர்களை ஒன்றரக் கலக்க பெல்தெஷாத்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற பாபிலோனிய பெயர்களும் அவர்களுக்கு சூட்டப்பட்டது ஞாபகம் இருக்கிறதல்லவா b இவர்கள் உயர் பதவி வகித்ததால், அந்நகரத்து தெய்வங்களை எந்த விதத்தில் வணங்க மறுத்தாலும், எல்லாருக்கும் தெரியவந்துவிடும்; அது தேசத்துரோகமாகவும் கருதப்படும்.

பொற்சிலை அச்சுறுத்துகிறது

7அத்தாட்சிகளின்படி, நேபுகாத்நேச்சார் தனது சாம்ராஜ்யத்தின் ஒற்றுமையை பலப்படுத்த தூரா சமவெளியில் ஒரு பொற்சிலையை நிறுத்தினார். அதன் உயரம் 60 முழம் (27 மீட்டர்), அகலம் 6 முழம் (2.7 மீட்டர்).  c அது வெறுமனே ஒரு தூண் அல்லது நான்முகக் கம்பமாய் இருந்திருக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். மிக உயரமான பீடத்தின்மீது மனிதனுக்கு ஒத்த ஒரு பெரிய சிலை வைக்கப்பட்டிருக்கலாம். அது ஒருவேளை நேபுகாத்நேச்சாரை அல்லது நேபோ தெய்வத்தை அடையாளப்படுத்தியிருக்கலாம். எதுவாயிருந்தாலும், இந்த உயர்ந்தோங்கிய சிலை பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் சின்னமாக இருந்தது. பயபக்தியோடு பார்த்து வழிபடுவதற்காக நிறுத்தப்பட்டது.​—தானியேல் 3:⁠1.

8ஆகவே நேபுகாத்நேச்சார் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தார். தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், ஆளுநர்களையும், அறிவுரையாளர்களையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், மாகாணங்களிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் வரவழைத்தார். இவ்வாறு தண்டோரா போடப்பட்டது: “சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள். எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான்.”​—தானியேல் 3:2-6.

9யூதர்களை கட்டாயப்படுத்தி யெகோவாவின் வணக்கத்தை துறக்கச்செய்யவே நேபுகாத்நேச்சார் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்தார் என சிலர் சொல்கின்றனர். ஆனால் இது உண்மையாயிருக்க முடியாது. ஏனென்றால் அத்தாட்சியின்படி அரசாங்க அதிகாரிகள் மட்டுமே விழாவிற்கு அழைக்கப்பட்டனர். இதனால் அரசு பணியிலிருந்த யூதர்கள் மட்டுமே அங்கு இருப்பர். ஆகவே அச்சிலைக்கு முன்பு தாழ விழுந்து வணங்குவது, அதிகாரிகளின் ஒற்றுமையை பலப்படுத்தவே என தெரிகிறது. அறிஞர் ஜான் எஃப். வால்வோர்ட் குறிப்பிடுவதாவது: “அவ்வாறு அதிகாரிகளை வரவழைத்தது ஒருபட்சத்தில் நேபுகாத்நேச்சாரின் சாம்ராஜ்யத்தினுடைய வல்லமையை பிரஸ்தாபப்படுத்திக் காட்டியது, மறுபட்சத்திலோ தங்கள் வெற்றிகளுக்கெல்லாம் காரணமென பாபிலோனியர்கள் நினைத்த தெய்வங்களை கௌரவிப்பதாகவும் இருந்தது.”

யெகோவாவின் ஊழியர்கள் மசியவேயில்லை

10நேபுகாத்நேச்சாரின் சிலைக்கு முன்பாக கூடிவந்தவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபட்டபோதிலும், இச்சிலையை வணங்குவதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. “அவர்கள் எல்லாருமே விக்கிரகங்களை வணங்கிவந்தவர்கள்தான், ஒரு தெய்வத்தை வழிபடுவதால் இன்னொரு தெய்வத்தை வழிபடக்கூடாது என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை” என ஒரு பைபிள் அறிஞர் விளக்கினார். “விக்கிரக வணக்கத்தாரின் கருத்துக்கு, அதாவது அநேக கடவுட்கள் இருக்கிறார்கள், மேலும் . . . வேறெவரின் அல்லது வேறெந்த நாட்டின் கடவுளையும் வணங்குவதில் தப்பில்லை என்ற கருத்துக்கு அது ஒத்திருந்தது” என்றும் அவர் சொன்னார்.

11யூதர்களின் விஷயமோ வேறு. அவர்களது கடவுளான யெகோவா இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: ‘மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள [“தனிப்பட்ட பக்தியை விரும்பும்,” NW] தேவன்.’ (யாத்திராகமம் 20:4, 5) ஆகவே இசை துவங்கி, கூடியிருந்தவர்கள் அச்சிலைக்கு முன் தாழ விழுந்து வணங்கியபோது, இந்த மூன்று எபிரெய இளைஞர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ மட்டும் நின்றுகொண்டே இருந்தார்கள்.​—தானியேல் 3:⁠7.

12இந்த மூன்று எபிரெய அதிகாரிகளும் சிலையை வணங்க மறுத்ததால் சில கல்தேயர்கள் ஆத்திரமடைந்தனர். உடனடியாக அவர்கள் ராஜாவை அணுகி, ‘யூதர்பேரில் குற்றஞ்சாற்றினார்கள்.’  d எவ்வித விளக்கத்தையும் கேட்க அவர்கள் தயாராயில்லை. நம்பிக்கைத் துரோகத்திற்கும் தேசவிரோதத்திற்கும் இந்த எபிரெயர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு இவ்வாறு சொன்னார்கள்: “பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள்.”​—தானியேல் 3:8-12.

13ஆணையை மீறிவிட்ட அந்த மூன்று எபிரெயர்களால் நேபுகாத்நேச்சாருக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம்! சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் விசுவாசமான ஊழியர்களாய் மாற்ற அவர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது தெளிவாயிற்று. கல்தேயர்களின் ஞானத்தின்படி அவர்களுக்கு கல்விபுகட்டியது உண்மைதானே? அவர்களது பெயர்களைக்கூட மாற்றியிருந்தாரே! மகத்தான கல்வித்திட்டம் புதுவித வணக்கமுறையை அவர்களுக்குக் கற்றுத்தரும் அல்லது பெயர் மாற்றம் அவர்களது குணங்களையே அடியோடு மாற்றிவிடும் என அவர் நினைத்திருந்தால், அந்தோ பரிதாபம்! சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும் யெகோவாவின் உத்தமமுள்ள ஊழியர்களாகவே நிரூபித்தனர்.

14நேபுகாத்நேச்சார் ராஜா கடுங்கோபம் கொண்டார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை உடனடியாக அழைத்துவரும்படி ஆணையிட்டார். “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா?” என கேட்டார். விஷயத்தை ஜீரணிக்க முடியாமல், அதிர்ச்சியடைந்த நிலையில் நேபுகாத்நேச்சார் இப்படிக் கேட்டார் என்பதில் சந்தேகமில்லை. ‘விவரம் தெரிந்த இவர்களே இவ்வளவு தெளிவான கட்டளையை மீறுவதா, அதுவும் இவ்வளவு கடும் தண்டனை கிடைக்கும் என தெரிந்தும்’ என அவர் நினைத்திருக்கலாம்.​—தானியேல் 3:13, 14.

15இந்த மூன்று எபிரெயர்களுக்கும் நேபுகாத்நேச்சார் மற்றொரு வாய்ப்பளித்து சொன்னதாவது: “இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்.”—தானியேல் 3:⁠15.

16 (தானியேல் 2-ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள) சொப்பனத்துச் சிலை புகட்டிய பாடம் நேபுகாத்நேச்சாரின் மனதிலும் இதயத்திலும் ஆழமாய் பதியவில்லை என்றே தோன்றுகிறது. ‘உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும் ஆவார்’ என தானியேலிடம் வாயார புகழ்ந்ததை அவர் மறந்துவிட்டார் போலும். (தானியேல் 2:47) இப்போது நேபுகாத்நேச்சார் யெகோவாவிடமே சவால் விட்டார், அவரால்கூட எபிரெயர்களை தண்டனையிலிருந்து தப்புவிக்க முடியாது என்றார்.

17சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவிற்கு மறுயோசனை என்ற பேச்சிற்கே அவசியமில்லாமல் இருந்தது. சிறிதும் தயங்காமல் உடனடியாக இப்படிப் பதிலளித்தார்கள்: “நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.”​—தானியேல் 3:16-18.

அக்கினிச் சூளைக்குள்ளே!

18நேபுகாத்நேச்சார் கடுங்கோபங்கொண்டு சூளையை வழக்கமாய் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவிட்டார். பின், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை கட்டி, ‘எரிகிற அக்கினிச் சூளையின்’ நடுவே போடும்படி “இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக்” கட்டளையிட்டார். அவர்களும் ராஜாவின் கட்டளைப்படியே, மூன்று எபிரெயர்களையும் அவர்களது ஆடைகளோடு அப்படியே கட்டி நெருப்பில் தூக்கி எறிந்தனர். நெருப்பு கப்பென்று பிடித்துக்கொண்டு, சீக்கிரமே அவர்களை எரித்து சாம்பலாக்குவதற்காக இப்படி ஆடைகளோடு தூக்கி எறிந்திருக்கலாம். இருந்தாலும் அவர்களைத் தூக்கிக்கொண்டு போன நேபுகாத்நேச்சாரின் ஊழியர்கள்தான் நெருப்புக்குப் பலியானார்கள்.—தானியேல் 3:19-22.

19சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவிற்கோ பேரதிசயம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அக்கினிச் சூளைக்குள் இருந்தாலும் நெருப்பு அவர்களை தீண்டவில்லை. நேபுகாத்நேச்சார் எந்தளவு திகைப்படைந்திருப்பார்! நன்றாக கட்டப்பட்டு எரிகிற நெருப்புக்குள் போடப்பட்டாலும் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருந்தார்கள். உயிரோடு மட்டுமா, நெருப்புக்குள் உலாவிக்கொண்டும் இருந்தார்களே! நேபுகாத்நேச்சார் இன்னொன்றையும் கவனித்தார். “மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம்” என தன் மந்திரிமார்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் “ஆம், ராஜாவே” என்றார்கள். அதற்கு நேபுகாத்நேச்சார், “இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது” என்றார்.​—தானியேல் 3:23-25.

20நேபுகாத்நேச்சார் அக்கினிச் சூளையின் வாசலண்டைக்குச் சென்று, “உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள்” என்றார். மூன்று எபிரெயர்களும் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். இந்த அதிசயத்தை கண்கூடாகப் பார்த்த​—⁠தேசாதிபதிகளும் அதிகாரிகளும் ஆளுநர்களும் மந்திரிமார்களும் உட்பட​—⁠அனைவரும் வாயடைத்து நின்றனர்! இந்த மூன்று வாலிபர்களும் சூளையின் பக்கமே செல்லாததுபோலல்லவா தோன்றினார்கள்! நெருப்பின் வாடைகூட அவர்களிடத்தில் வீசவில்லை, ஏன், அவர்களது தலைமயிரில் ஒன்றுகூட கருகவில்லை.—தானியேல் 3:26, 27.

21யெகோவாவே உன்னதமான கடவுள் என ராஜா நேபுகாத்நேச்சார் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம். “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்” என அறிக்கையிட்டார். அதன்பின் ராஜா இந்த கடும் எச்சரிக்கையைக் கொடுத்தார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை.” அதன்பின் மூன்று எபிரெயர்களும் ராஜாவின் தயவைப் பெற்று, ‘பாபிலோன் தேசத்திலே உயர்த்தப்பட்டார்கள்.’​—தானியேல் 3:28-30.

கடுஞ்சோதனையும் நம் விசுவாசமும்

22சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ எதிர்ப்பட்ட அதே சூழ்நிலைகளை இன்று யெகோவாவின் வணக்கத்தாரும் எதிர்ப்படுகின்றனர். இன்று கடவுளுடைய ஜனங்கள் சொல்லர்த்தமாக நாடுகடத்தப்பட்டில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் தம் சீஷர்கள் ‘உலகத்தாராய் இருக்கமாட்டார்கள்’ என இயேசு சொன்னார். (யோவான் 17:14) தங்களைச் சுற்றியிருப்பவர்களின் வேதப்பூர்வமற்ற கலாச்சாரங்களையும் மனப்பான்மைகளையும் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொள்ளாததன் கருத்தில் அவர்கள் “அயல்நாட்டவர்.” அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபடி, கிறிஸ்தவர்கள் ‘இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாதிருக்கிறார்கள்.’​—ரோமர் 12:⁠2.

23அந்த மூன்று எபிரெயர்களும் பாபிலோனிய பழக்கவழக்கங்களைப் பின்பற்ற மறுத்துவிட்டனர். கல்தேயரின் ஞானத்தின்படி அவர்கள் முழுமையாய் போதிக்கப்பட்டாலும் அவர்கள் வழுவிவிடவில்லை. வணக்கத்தைப் பொறுத்தவரை சமரச பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, அவர்களது பக்தி யெகோவாவிற்கே. இன்றும் கிறிஸ்தவர்களுக்கு அதே உறுதி தேவை. உலகத்தாரிலிருந்து வித்தியாசமாய் இருப்பதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால், “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்.” (1 யோவான் 2:17) ஆகவே அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகைப் பின்பற்ற நினைப்பது முட்டாள்தனம், பிரயோஜனமற்றதும்கூட.

24கிறிஸ்தவர்கள் எல்லாவித உருவ வழிபாட்டிற்கும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும், மறைமுகமானவற்றிற்கும்தான் e (1 யோவான் 5:21) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ கீழ்ப்படிதலோடும் மரியாதையோடும் பொற்சிலைக்கு முன்பாக நின்றார்கள், ஆனால் அதற்குத் தலைவணங்குவது வெறும் மரியாதைக்குரிய செயல் அல்ல என்பதை உணர்ந்தார்கள். அது வணக்கத்திற்குரிய செயல், யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக்கும் செயல். (உபாகமம் 5:8-10) ஜான் எஃப். உவால்வூர்ட் இவ்வாறு எழுதுகிறார்: “அது ஒருவித கொடி வணக்கம்தான். இருந்தாலும், மதப்பற்றும் தேசப்பற்றும் பின்னிப்பிணைந்திருந்ததால் அதற்கு மத பின்னணியும் இருந்திருக்கலாம்.” இன்று உண்மைக் கிறிஸ்தவர்களும் விக்கிரகாராதனைக்கு எதிராக அதேவித உறுதியான நிலைநிற்கை எடுக்கின்றனர்.

25சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ பற்றிய பைபிள் பதிவு, யெகோவாவிற்கு தனிப்பட்ட பக்தி காட்ட தீர்மானித்திருக்கும் அனைவருக்கும் ஒரு அருமையான பாடம். அப்போஸ்தலனாகிய பவுல், விசுவாசமாயிருந்த அநேகரைப் பற்றி சொல்கையில், “அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்” என இந்த மூன்று எபிரெயர்களை மனதில் கொண்டே குறிப்பிட்டிருப்பார் என்பது தெளிவாகிறது. (எபிரெயர் 11:33, 34) அதேபோன்று விசுவாசம் காட்டும் அனைவருக்கும் யெகோவா வெகுமதி அளிப்பார். இந்த மூன்று எபிரெயர்களையும் அக்கினிச் சூளையிலிருந்து காப்பாற்றினார். அதேசமயம் உத்தமத்தைக் காப்பதற்காக உயிர் துறந்த அனைவரையும் அவர் உயிர்த்தெழுப்பி நித்திய ஜீவன் அளிப்பார் என்பதிலும் நாம் உறுதியாயிருக்கலாம். இந்த இரு விதங்களிலும், யெகோவா “தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.”​—சங்கீதம் 97:⁠10.

[அடிக்குறிப்புகள்]

a பாபிலோனிய சாம்ராஜ்யம் உருவாகக் காரணமென கருதப்பட்ட மார்டுக், தெய்வமாக்கப்பட்ட நிம்ரோதுதான் என சிலர் நினைக்கிறார்கள். இருந்தாலும் இதை ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியாது.

b “பெல்தெஷாத்சார்” என்றால் “ராஜாவின் உயிரைக் காத்திடு” என அர்த்தம். “சாத்ராக்” என்பதன் அர்த்தம், “ஆக்கூவின் கட்டளை.” ஆக்கூ என்பது சுமேரியர்களின் சந்திரக் கடவுள். “மேஷாக்” என்பது ஒரு சுமேரிய கடவுளைக் குறிக்கலாம். “ஆபேத்நேகோ” என்பதன் அர்த்தம் நேபோ அல்லது “நேகோவின் ஊழியன்.”

c அச்சிலை அவ்வளவு பிரமாண்டமாக இருந்ததால் அது மரத்தால் செய்யப்பட்டு தங்கத் தகடிடப்பட்டிருக்க வேண்டுமென சில பைபிள் அறிஞர்கள் நம்புகிறார்கள்.

d “குற்றஞ்சாற்றினார்கள்” என்பதற்கான அரமிய பதம், ஒருவரை ‘கண்டந்துண்டமாக்கி விழுங்குவது’ என அர்த்தம். அவதூறு பேசியே ஒருவரை மென்று விழுங்குவது எனவும் சொல்லலாம்.

e உதாரணத்திற்கு, பைபிள் பெருந்திண்டியையும் பேராசையையும் விக்கிரகாராதனை என அழைக்கிறது.​—⁠பிலிப்பியர் 3:18, 19; கொலோசெயர் 3:⁠5.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஏன் நேபுகாத்நேச்சார் நிறுத்திய பொற்சிலையை வணங்க மறுத்துவிட்டனர்?

• மூன்று எபிரெயர்களும் சிலையை வணங்க மறுத்ததை அறிந்த நேபுகாத்நேச்சார் என்ன செய்தார்?

• மூன்று எபிரெயர்களும் காட்டிய விசுவாசத்திற்காக யெகோவா எவ்வாறு அவர்களுக்கு வெகுமதியளித்தார்?

• சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் உண்மைக் கதைக்கு கவனம் செலுத்தியதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

[கேள்விகள்]

1. கடவுள் பக்தியையும் தேச பக்தியையும் பற்றி அநேகர் என்ன நினைக்கிறார்கள்?

2. பாபிலோன் ராஜா எவ்வாறு மதம், அரசியல் இரண்டிலுமே பங்கேற்றார்?

3. நேபுகாத்நேச்சார் மிகுந்த மதப்பற்றுள்ளவர் என எது காட்டுகிறது?

4. பாபிலோனின் மத சூழலை விளக்குக.

5. பாபிலோனின் மத சூழல் நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு என்ன சவாலை முன்வைத்தது?

6. பாபிலோனில் வாழ்வது முக்கியமாய் தானியேலுக்கும் அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கும் ஏன் மிகச் சிரமமாய் இருந்தது?

7. (அ) நேபுகாத்நேச்சார் நிறுத்திய பொற்சிலையை விவரியுங்கள். (ஆ) அச்சிலை எதற்காக நிறுத்தப்பட்டது?

8. (அ) சிலையின் திறப்புவிழாவிற்கு யாரெல்லாம் அழைக்கப்பட்டார்கள், அவர்கள் என்ன செய்யவேண்டியிருந்தது? (ஆ) சிலைக்கு முன்பாக தாழ விழுந்து பணிந்துகொள்ளாதவர்களுக்கு என்ன தண்டனை காத்திருந்தது?

9. நேபுகாத்நேச்சார் நிறுத்திய சிலையை தாழ விழுந்து வணங்குவது எதை அர்த்தப்படுத்தியிருக்கும்?

10. நேபுகாத்நேச்சாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் யூதரல்லாதவர்களுக்கு ஏன் எந்த ஆட்சேபணையும் இல்லை?

11. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் ஏன் சிலைக்கு முன் தாழ விழுந்து வணங்க மறுத்தனர்?

12. சில கல்தேயர்கள் மூன்று எபிரெயர்கள்மீது என்ன குற்றஞ்சாட்டினார்கள், ஏன்?

13, 14. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ சிலையை வணங்காததைப் பற்றி கேள்விப்பட்ட நேபுகாத்நேச்சார் என்ன செய்தார்?

15, 16. அந்த மூன்று எபிரெயர்களுக்கு நேபுகாத்நேச்சார் என்ன வாய்ப்பளித்தார்?

17. ராஜா அளித்த வாய்ப்பிற்கு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் பிரதிபலிப்பு என்ன?

18, 19. மூன்று எபிரெயர்களையும் அக்கினிச் சூளையிலே போட்டபோது என்ன நடந்தது?

20, 21. (அ) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ சூளையிலிருந்து வெளியே வந்தபோது நேபுகாத்நேச்சார் எதைக் கவனித்தார்? (ஆ) நேபுகாத்நேச்சாருக்கு எதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது?

22. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ எதிர்ப்பட்ட அதே சூழ்நிலைகளை இன்று யெகோவாவின் வணக்கத்தாரும் எவ்வாறு எதிர்ப்படுகின்றனர்?

23. மூன்று எபிரெயர்களும் எவ்வாறு உறுதியோடு இருந்தார்கள், இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

24. அந்த மூன்று எபிரெயர்களைப் போலவே உண்மைக் கிறிஸ்தவர்களும் என்ன நிலைநிற்கை எடுக்கின்றனர்?

25. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் உண்மைக் கதையிலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்?

[பக்கம் 68-ன் முழுபடம்]

[பக்கம் 70-ன் படங்கள்]

1. பாபிலோனிலுள்ள (சிகூரட்) கோயில் கோபுரம்

2. மார்டுக் ஆலயம்

3. மார்டுக் தெய்வமும் (இடது) நேபோ தெய்வமும் (வலது) டிராகன்கள்மீது நிற்பதாய் காட்டும் வெண்கல அலங்காரத் தட்டு

4. கட்டுமானப் பணிகளுக்கு பெயர்போன நேபுகாத்நேச்சாரின் உருவம்கொண்ட கல்

[பக்கம் 76-ன் முழுபடம்]

[பக்கம் 78-ன் முழுபடம்]