Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தானியேல் புத்தகம்—விசாரணைக் கூண்டில்

தானியேல் புத்தகம்—விசாரணைக் கூண்டில்

அதிகாரம் இரண்டு

தானியேல் புத்தகம்—விசாரணைக் கூண்டில்

நீங்கள் ஒரு நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். முக்கியமான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. மோசடி குற்றம்சாட்டப்பட்டவர் கூண்டில் நிற்கிறார். அவரை குற்றவாளியென அடித்துச்சொல்லி வாதாடுகிறார் அரசாங்க வக்கீல். ஆனாலும் கூண்டில் நிற்பவர் வருடக்கணக்காக உண்மைக்குப் பெயர்போனவர். எதிர்வாதத்தைக் கேட்க ஆவலாய் இருப்பீர்கள் அல்லவா?

2பைபிள் புத்தகமாகிய தானியேலைப் பொறுத்தவரை நீங்கள் இதே நிலையில்தான் இருக்கிறீர்கள். அதன் எழுத்தாளர் உண்மைக்குப் பெயர்போனவர். அவரது பெயரைத் தாங்கிநிற்கும் இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மிக உயர்வாய் மதிக்கப்பட்டு வந்திருக்கிறது. பொ.ச.மு. ஏழாவது, ஆறாவது நூற்றாண்டுகளில் வாழ்ந்த எபிரெய தீர்க்கதரிசியான தானியேலால் எழுதப்பட்ட நம்பத்தகுந்த சரித்திரம் என இப்புத்தகம் தன்னை அறிமுகப்படுத்துகிறது. திருத்தமான பைபிள் காலக்கணக்குப்படி, இப்புத்தகம், சுமார் பொ.ச.மு. 618 முதல் 536 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்குகிறது. பின்குறிப்பிடப்பட்ட ஆண்டில் எழுதி முடிக்கப்பட்டது. ஆனாலும் இது விசாரணைக் கூண்டில் ஏற்றப்பட்டிருக்கிறது. சில என்ஸைக்ளோப்பீடியாக்களும் இதர புத்தகங்களும், இதன் நம்பகத்தன்மையை நேரடியாகவோ மறைமுகமாகவோ சாடுகின்றன.

3உதாரணத்திற்கு, தானியேல் புத்தகம், “உண்மை தீர்க்கதரிசனங்கள் அடங்கிய மெய் சரித்திரம் என பொதுவாக கருதப்பட்டு வந்தது” என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா ஒப்புக்கொள்கிறது. ஆனாலும் உண்மையில் அது “வெகு காலத்திற்கு பின்பு, தேசிய நெருக்கடி நிலவிய சமயத்தில், அதாவது [சிரியாவின் ராஜாவான] நான்காம் ஆண்டியோகஸ் எப்பிஃபேனீஸ் யூதர்களை கடுமையாய் துன்புறுத்திய சமயத்தில் எழுதப்பட்டது” என்று அதே பிரிட்டானிக்கா சொல்கிறது. அது பொ.ச.மு. 167-⁠க்கும் 164-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகவும் சொல்கிறது. தானியேல் புத்தகத்தின் எழுத்தாளர் எதிர்காலத்தைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்லவில்லை, வெறுமனே “நடந்து முடிந்த சரித்திரங்களைத்தான் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களைப்போல் எழுதினார்” என்றும் அது ஆணித்தரமாக சொல்கிறது.

4இப்படிப்பட்ட கருத்துக்கள் எங்கிருந்து உதயமாகின்றன? தானியேல் புத்தகத்தைக் குற்றஞ்சாட்டுவது புதிதே அல்ல. பொ.ச. மூன்றாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமான ஒன்றுதான். இதற்கு வித்திட்டவர் போர்ஃபரி என்ற தத்துவஞானி. ரோம சாம்ராஜ்யத்திலிருந்த அநேகரைப் போலவே அவரும் கிறிஸ்தவத்தின் செல்வாக்கைப் பார்த்து பயந்தார். இந்தப் “புதிய” மதத்தை கவிழ்ப்பதற்காக 15 புத்தகங்களை எழுதினார். அதில் 12-வது, தானியேல் புத்தகத்திற்கு எதிரானது. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஒரு யூதன் எழுதிய போலிப் புத்தகம் என தானியேலை போர்ஃபரி குற்றஞ்சாட்டினார். 18-ஆம், 19-ஆம் நூற்றாண்டுகளிலும் அதேபோன்ற எதிர்ப்புகள் எழும்பின. தீர்க்கதரிசனம் சொல்வது, அதாவது எதிர்கால சம்பவங்களை முன்னதாகவே சொல்வது முடியாத காரியம் என்கிறார்கள் பைபிள் திறனாய்வாளர்களும் பகுத்தறிவுவாதிகளும். இவர்கள் கையில் வசமாக மாட்டிக்கொண்டார் தானியேல். சொல்லப்போனால், அவரும் அவரது புத்தகமும் விசாரணைக் கூண்டில் ஏற்றப்பட்(ர்)டது. யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த சமயத்தில் தானியேல் இப்புத்தகத்தை எழுதவில்லை, ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வேறு எவரோதான் எழுதினார் என்பதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக விமர்சகர்கள் சொல்லிக்கொண்டார்கள் a இப்படிப்பட்ட தாக்குதல்கள் குவிந்ததால் ஓர் எழுத்தாளர் அவற்றை மறுத்து, விமர்சகர்களின் கெபியில் தானியேல் என்ற ஆங்கில புத்தகத்தை எழுதினார்.

5விமர்சகர்களின் இந்த உறுதியான வாதங்களுக்கு ஆதாரம் உண்டா? அல்லது உள்ள ஆதாரமும் எதிர்வாதத்தை ஆதரிக்கிறதா? இதற்கான பதில்தான் பல விஷயங்களைத் தீர்மானிக்கும். இந்தப் பழம்பெரும் புத்தகத்தின் மதிப்பு மட்டுமல்ல, நம் எதிர்காலமும் இதில் உட்பட்டிருக்கிறது. தானியேல் புத்தகம் போலியென்றால், மனிதவர்க்கத்தின் எதிர்காலத்தைப் பற்றி அது சொல்வதெல்லாம் வீண். ஆனால் அதில் உண்மை தீர்க்கதரிசனங்கள் அடங்கியிருந்தால்? இன்று அவற்றின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளத் துடிப்பீர்கள் அல்லவா? இதை நினைவில்கொண்டு, தானியேல்மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றங்கள் சிலவற்றை ஆராயலாம்.

6உதாரணத்திற்கு, தானியேலில் “[பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டது போன்ற] அநேக ஆரம்பகால சரித்திரப்பூர்வ உண்மைகள் படுமோசமாய் திரித்துக் கூறப்பட்டிருக்கின்றன” என த என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா குற்றஞ்சாட்டுகிறது. இது உண்மையா? தவறு என குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்கு வரும் மூன்று விஷயங்களை இப்போது ஒவ்வொன்றாக கவனிக்கலாம்.

அறியப்படாத அரசரைப் பற்றிய வழக்கு

7பாபிலோன் வீழ்ச்சியடைந்த சமயத்தில் நேபுகாத்நேச்சாரின் “குமாரனாகிய” பெல்ஷாத்சார் அரசாண்டதாக தானியேல் எழுதினார். (தானியேல் 5:1, 11, 18, 22, 30) இதை விமர்சகர்கள் வெகுகாலமாய் தாக்கிவந்திருக்கின்றனர். ஏனென்றால் பெல்ஷாத்சாரின் பெயர் பைபிளைத் தவிர வேறெங்குமே குறிப்பிடப்படவில்லை. பூர்வ சரித்திராசிரியர்களின் கருத்துப்படி, நேபுகாத்நேச்சாருக்குப் பின் அரசரானவர் நபோனிடஸ்; அவரே பாபிலோனின் கடைசி ராஜா. ஆகவே எழுத்தாளரின் கற்பனைக் கதாபாத்திரமே பெல்ஷாத்சார் என்பதில் சந்தேகமேயில்லை என 1850-⁠ல் ஃபெர்டினான்ட் ஹிட்சிக் சொன்னார். ஆனால் அவர் சொல்வதைப் பார்த்தால், தீர ஆராய்ந்து முடிவுக்கு வந்ததாகவா தெரிகிறது? அந்த ராஜா வாழ்ந்த காலத்தைப் பற்றிய சரித்திர பதிவுகளோ குறைவு; அப்படியிருக்கும்போது அவர் பெயர் எங்குமே குறிப்பிடப்படாத ஒரே காரணத்தை வைத்து அப்படி ஒருவர் உண்மையில் வாழவே இல்லை என நிரூபிக்க முடியுமா? ஒருவழியாக 1854-⁠ல், தென் ஈராக்கில், அதாவது பண்டைய பாபிலோன் நகரான ஊர் பட்டணத்து இடிபாடுகளில் சிறிய களிமண் உருளைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆப்புவடிவ எழுத்துக்கள்கொண்ட இவற்றில், “என் மூத்த மகன் பெல்-சார்-உஸ்ஸுருக்காக” என சொல்லி நபோனிடஸ் செய்த ஜெபமும் இடம்பெற்றுள்ளது. பிறகென்ன, இவர்தான் தானியேல் புத்தகம் குறிப்பிட்ட பெல்ஷாத்சார் என விமர்சகர்களே ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

8ஆனாலும் விமர்சகர்கள் முழுமையாய் திருப்தியடைந்துவிடவில்லை. ‘இதை ஒரு ஆதாரமாகவே எடுத்துக்கொள்ள முடியாதே’ என எச். எஃப். டால்பட் என்ற விமர்சகர் எழுதினார். சிறு பிள்ளை என்ற கருத்திலேயே மகன் என அந்த உருளை குறிப்பிட்டிருக்கலாம்; தானியேலோ அவரை அரசாட்சி செய்த ராஜா என்றல்லவா குறிப்பிடுகிறார் என்பது டால்பட்டின் குற்றச்சாட்டு. ஆனால் அவர் கருத்து வெளிவந்த அடுத்த வருடமே இன்னுமதிக க்யூனிஃபார்ம் (ஆப்புவடிவ எழுத்துக்கள்கொண்ட) பலகைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பெல்ஷாத்சாருக்கு செயலாளர்களும் அரண்மனை பணியாட்களும் இருந்ததாக சொல்கின்றன. ஆக, நிச்சயமாகவே அவர் சிறு பிள்ளை அல்ல! கடைசியாக, இன்னும் பல பலகைகள் கண்டெடுக்கப்பட, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நபோனிடஸ் அவ்வப்பொழுது பல வருடங்கள் சேர்ந்தாற்போல் பாபிலோனில் தங்கவில்லை என அவை சொல்கின்றன. அப்படி அவர் அங்கே தங்காத சமயங்களில் தனது மூத்த மகனிடம் (பெல்ஷாத்சாரிடம்) பாபிலோனின் “ராஜ்யபாரத்தை ஒப்படைத்தார்” என்றும் அப்பலகைகள் காட்டுகின்றன. ஆகவே அச்சமயங்களில் பெல்ஷாத்சார் உண்மையில் ஒரு ராஜாவாகவே, அதாவது தன் தகப்பனின் துணை அரசராக செயல்பட்டார்.  b

9இதுவும் சில விமர்சகர்களை திருப்திப்படுத்தியதாக தெரியவில்லை. பைபிள் பெல்ஷாத்சாரை நேபுகாத்நேச்சாரின் மகன் என்றுதானே சொல்கிறது, நபோனிடஸின் மகன் என்று சொல்லவில்லையே என குறைசொல்கிறார்கள். நபோனிடஸைப் பற்றி தானியேல் ஜாடைமாடையாகக்கூட எதுவும் சொல்லவில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் விசாரணையில் இந்த இரண்டு வாதங்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நபோனிடஸ் நேபுகாத்நேச்சாரின் மகளை திருமணம் செய்ததாகத் தெரிகிறது. அப்படியென்றால் பெல்ஷாத்சார் நேபுகாத்நேச்சாரின் பேரன். எபிரெய மொழியிலும் சரி அரமிய மொழியிலும் சரி “தாத்தா” அல்லது “பேரன்” என்பதற்கு வார்த்தைகளே கிடையாது. ஆகவே ‘ஒருவரது குமாரன்’ என்று சொல்லும்போது அவரது ‘பேரனாகவும்’ இருக்கலாம், வெறுமனே அவரது ‘வம்சத்தினராகவும்’ இருக்கலாம். (மத்தேயு 1:1-ஐ ஒப்பிடுக.) மேலும் பைபிள் பதிவு, பெல்ஷாத்சாரை நபோனிடஸின் குமாரன் என அடையாளங்காண உதவுகிறது. சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகளைப் பார்த்து கதிகலங்கிப்போன பெல்ஷாத்சார், அதன் அர்த்தத்தை எப்படியும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற வெறியில், அதை விளக்கும் எவரையும் ராஜ்யத்தின் மூன்றாம் அதிபதியாக்குவதாக சொல்கிறார். (தானியேல் 5:7) ஏன் இரண்டாம் அதிபதியென்று சொல்லாமல் மூன்றாம் அதிபதியென்றார்? இதிலிருந்தே தெரிகிறது, ஏற்கெனவே முதல் அதிபதியும் இரண்டாம் அதிபதியும் இருந்தார்கள். அவர்கள் வேறு யாருமில்லை​—⁠நபோனிடஸும் அவர் மகன் பெல்ஷாத்சாரும்தான்.

10ஆகவே பெல்ஷாத்சாரைப் பற்றி தானியேல் எழுதியது, ‘படுமோசமாய் திரித்துக் கூறப்பட்ட’ சரித்திரமல்ல. தானியேல் பாபிலோனின் சரித்திரத்தை எழுதவில்லை என்றாலும், அதன் அரசர்களைக் குறித்து ஹேரோடெட்டஸ், செனஃபோன், பராஸஸ் போன்ற பூர்வ சரித்திராசிரியர்கள் குறிப்பிடுவதைவிட அதிக நுணுக்கமான விவரங்களை நமக்குத் தருகிறார். இவர்களே தவறவிட்ட உண்மைகளை தானியேலால் எப்படி பதிவுசெய்ய முடிந்தது? அவர் பாபிலோனில் இருந்த காரணத்தினாலேயே. கண்கண்ட சாட்சி எழுதிய புத்தகமே இது, பல நூற்றாண்டுகளுக்குப் பின் எவரோ ஒரு ஆள் மாறாட்டக்காரர் எழுதியது அல்ல.

மேதியனாகிய தரியு யார்?

11பாபிலோன் வீழ்ச்சியடைந்த பிறகு “மேதியனாகிய தரியு” அரசாள ஆரம்பித்ததாய் தானியேல் பதிவுசெய்கிறார். (தானியேல் 5:31) இந்தப் பெயர் சரித்திர புத்தகங்களிலும் புதைபொருட்களிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே இந்தத் தரியு சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு “கற்பனைக் கதாபாத்திரமே” என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.

12சில அறிஞர்கள் இதில் கொஞ்சம் உஷாராகவே இருந்திருக்கிறார்கள். பெல்ஷாத்சாரையும் “கற்பனைக் கதாபாத்திரம்” என்றுதானே ஒருசமயத்தில் விமர்சகர்கள் சொன்னார்கள். அதேபோன்றுதான் இதுவும் ஆகப்போகிறது. ஏற்கெனவே கிடைத்திருக்கும் க்யூனிஃபார்ம் பலகைகள், பெர்சியரான கோரேசு பாபிலோனைக் கைப்பற்றிய உடனேயே “பாபிலோனின் ராஜா” என்ற பட்டத்தை ஏற்கவில்லை என காட்டுகின்றன. ஓர் ஆராய்ச்சியாளர் சொல்கிறார்: “ ‘பாபிலோனின் ராஜா’ என்ற பட்டப்பெயரைத் தாங்கியவர் கோரேசு அல்ல, ஆனால் கோரேசின்கீழ் ஆண்ட சிற்றரசன்.” அப்படியென்றால் தரியு என்பது பாபிலோனின்மீது பொறுப்பேற்ற வல்லமைபடைத்த மேதிய அதிகாரியின் ஆட்சிப் பெயர் அல்லது பட்டப்பெயராய் இருந்திருக்குமோ? குபாரூ என்பவரே தரியு என சிலர் சொல்கின்றனர். கோரேசு குபாரூவை பாபிலோனிய ஆளுநராக்கினார். அவர் மிகுந்த அதிகாரத்தோடு ஆட்சி செய்ததாய் சரித்திரப் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன. க்யூனிஃபார்ம் பலகை ஒன்றின்படி அவர் பாபிலோனில் துணை ஆளுநர்களையும் நியமித்தார். தரியு பாபிலோனிய ராஜ்யத்தை ஆளுவதற்காக 120 தேசாதிபதிகளை நியமித்ததாக தானியேல் பதிவுசெய்திருப்பது சுவாரஸ்யமளிக்கிறது.​—தானியேல் 6:⁠1.

13இந்த ராஜா உண்மையிலேயே யார் என்பதற்கு காலப்போக்கில் தெள்ளத்தெளிவான அத்தாட்சி ஒருவேளை கிடைக்கலாம். எது எப்படியோ, புதைபொருள் அத்தாட்சி இல்லை என்பதற்காக தரியு ஒரு “கற்பனைக் கதாபாத்திரம்” என முத்திரை குத்திவிட முடியாது, தானியேல் புத்தகத்தையும் பொய்யென்று ஒதுக்கிவிட முடியாது. அதை, கண்கண்ட சாட்சி எழுதிய ஒன்றாகவும், தற்போதைய சரித்திரப் பதிவுகளைவிட அதிக விவரமளிக்கும் ஒன்றாகவும் கருதுவதே நியாயமானது.

யோயாக்கீமின் அரசாட்சி

14தானியேல் 1:1 சொல்கிறது: ‘யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றுகை போட்டான்.’ விமர்சகர்கள் இந்த வசனத்தில் குறை கண்டுபிடித்திருக்கின்றனர். ஏனென்றால் இது எரேமியா சொன்னதோடு ஒத்துப்போவதாய் தெரியவில்லையாம். எரேமியாவின்படி யோயாக்கீம் அரசாண்ட நான்காவது வருடமே நேபுகாத்நேச்சாரின் முதல் வருடம். (எரேமியா 25:1; 46:2) அப்படியென்றால், தானியேல் எரேமியாவோடு முரண்பட்டாரா? அதிகத் தகவலைத் திரட்டுகையில், குழப்பம் உடனடியாக தெளிந்துவிடுகிறது. பார்வோன் நேகோ பொ.ச.மு. 628-⁠ல் யோயாக்கீமை முதன்முதலாக ராஜாவாக்கியபோது அவர் அந்த எகிப்திய அரசரின் கைப்பாவை ஆனார். சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, அதாவது பொ.ச.மு. 624-⁠ல் நேபுகாத்நேச்சார் தன் தகப்பனுக்கு அடுத்ததாக பாபிலோனிய அரியணையில் ஏறினார். அதன்பின் விரைவில் (பொ.ச.மு. 620-⁠ல்) நேபுகாத்நேச்சார் யூதாவின்மீது படையெடுத்து, யோயாக்கீமை பாபிலோனின்கீழ் சிற்றரசராக்கினார். (2 இராஜாக்கள் 23:34; 24:1) பாபிலோனில் வாழ்ந்த ஒரு யூதருக்கு, யோயாக்கீமின் “மூன்றாம் வருஷம்” என்பது, பாபிலோனின்கீழ் சிற்றரசராய் அவர் சேவித்த மூன்றாம் வருடத்தை அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும். தானியேல் இந்தக் கோணத்தில்தான் எழுதினார். ஆனால் எரேமியாவோ எருசலேமில் வசித்துவந்த யூதர்களின் கோணத்தில் எழுதினார். ஆகவே பார்வோன் நேகோ யோயாக்கீமை ராஜாவாக்கிய அந்த வருடத்தையே அவரது அரசாட்சியின் ஆரம்ப வருடமாக குறிப்பிட்டார்.

15அப்படியென்றால், முரண்பாடு என சொல்லப்படும் இது உண்மையில் கூடுதல் அத்தாட்சியையே அளிக்கிறது; அதாவது நாடுகடத்தப்பட்ட யூதர்களோடு பாபிலோனில் வசிக்கையிலேயே தானியேல் இதை எழுதினார் என்பதற்கான அத்தாட்சியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, தானியேல் புத்தகத்திற்கு எதிரான இந்த வாக்குவாதத்தில் இன்னொரு பெரிய ஓட்டையும் இருக்கிறது. தானியேல் புத்தகத்தின் எழுத்தாளரிடம் எரேமியா புத்தகம் இருந்தது, அவர் அதைக் குறிப்பிட்டும் காட்டினார் என்பதை நினைவில் வையுங்கள். (தானியேல் 9:2) விமர்சகர்கள் சொல்கிறபடி தானியேல் புத்தகத்தை எழுதியவர் தந்திரமான சதிகாரர் என்பது உண்மையானால், அவ்வளவு உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு புத்தகமான எரேமியாவிற்கு முரணாக, அதுவும் எடுத்த எடுப்பிலேயே, முதல் வசனத்திலேயே எழுதத் துணிவாரா? நிச்சயமாக மாட்டார்!

அசத்தும் நுட்ப விவரங்கள்

16இப்போது குறைசொல்லப்படும் விஷயங்களை விட்டுவிட்டு, பாராட்டுதலுக்குரிய விஷயங்களுக்கு வரலாம். தானியேல் புத்தகத்திலுள்ள மற்ற விவரங்களுக்கு இப்போது சற்று கவனம் செலுத்தலாம். இதன் எழுத்தாளர் நேரடி தகவலைத்தான் எழுதினார் என்பதை இவை சுட்டிக்காட்டுகின்றன.

17பூர்வ பாபிலோனைப் பற்றிய நுணுக்கமான விவரங்களையும் தானியேல் அறிந்திருந்தார். அவரது பதிவின் நம்பகத்தன்மைக்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்! உதாரணத்திற்கு, நேபுகாத்நேச்சார் எல்லாரும் வணங்குவதற்காக ஒரு மாபெரும் சிலையை நிறுத்தியதாய் தானியேல் 3:1-6 சொல்கிறது. இந்த ராஜா தேசிய, மத பழக்கவழக்கங்களில் மக்களை அதிகம் ஈடுபடுத்த முயற்சி செய்ததைக் காட்டும் மற்ற அத்தாட்சிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அதேவிதமாய் நேபுகாத்நேச்சார் தனது கட்டுமானப் பணிகளைக் குறித்து செருக்கடைந்ததாய் தானியேல் எழுதியிருக்கிறார். (தானியேல் 4:30) நேபுகாத்நேச்சார் உண்மையிலேயே ஏராளமான கட்டடங்களை பாபிலோனில் கட்டியதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த நவீன காலத்தில்தான் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்கள். இம்மனிதர் செங்கற்களில்கூட தன் பெயரைப் பதித்திருப்பதைப் பார்க்கையில், இவரது செருக்கு விளங்குகிறது! விமர்சகர்கள் சொல்வதுபோல், மக்கபேயர் காலத்தில் (பொ.ச.மு. 167-63) வாழ்ந்த ஒரு போலி ஆசாமி தானியேல் புத்தகத்தை எழுதியிருந்தால், அந்த ஆசாமிக்கு, சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கட்டுமான திட்டங்களைப் பற்றி எப்படி தெரிந்தது? அதுமட்டுமல்ல, அந்த ஆசாமி இறந்துபோய் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களே அவற்றைக் கண்டுபிடித்திருக்க அவர் எவ்வாறு அதை எழுதினார்? இந்த இரு கேள்விகளுக்கும் விமர்சகர்களால் பதிலளிக்கவே முடியவில்லை.

18பாபிலோனிய சட்டதிட்டங்களுக்கும் மேதிய-பெர்சிய சட்டதிட்டங்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் சிலவற்றையும் தானியேல் புத்தகம் வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. உதாரணத்திற்கு, பாபிலோனிய சட்டத்தின்படி, தானியேலின் மூன்று நண்பர்களும் ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் எரிகிற அக்கினிச் சூளையிலே போடப்பட்டார்கள். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, தானியேல் தன் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு பெர்சிய சட்டத்திற்கு இணங்க மறுத்ததால் சிங்கக் கெபியில் தள்ளப்பட்டார். (தானியேல் 3:6; 6:7-9) எரிகிற அக்கினிச் சூளை என்பது வெறும் கட்டுக்கதை என சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட தண்டனையைப் பற்றி குறிப்பாக சொல்லும் ஓர் அசல் கடிதத்தை பூர்வ பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். மேதியர்களும் பெர்சியர்களுமோ நெருப்பை புனிதமாய் கருதியதால், வேறு விதமான கொடூர தண்டனை அளித்தார்கள். ஆகவே சிங்கக் கெபியைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.

19இப்போது மற்றுமொரு வித்தியாசத்திற்கு வருவோம். நேபுகாத்நேச்சார் நினைத்த மாத்திரத்தில் சட்டங்களை இயற்றுவார், மாற்றவும் செய்வார் என தானியேல் காண்பிக்கிறார். ஆனால் தரியுவுக்கோ, ‘மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் இருந்த பிரமாணங்களை,’ தான் இயற்றியதாகவே இருந்தாலும் மாற்றுவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. (தானியேல் 2:5, 6, 24, 46-49; 3:10, 11, 29; 6:12-16) சரித்திராசிரியர் ஜான் சி. விட்கோம் எழுதுகிறார்: “பாபிலோனுக்கும் மேதிய-பெர்சியாவுக்கும் உள்ள இந்த வித்தியாசத்திற்கு பூர்வ சரித்திரம் பக்கபலமாய் அமைகிறது. மேதிய-பெர்சியாவில் ராஜா சட்டத்தின் கையிலிருக்க, பாபிலோனிலோ சட்டம் ராஜாவின் கையிலிருந்தது.”

20பெல்ஷாத்சார் ஏற்பாடு செய்த விருந்தைப் பற்றிய மெய்சிலிர்க்கவைக்கும் பதிவு, தானியேல் 5-ஆம் அதிகாரத்தில் உள்ளது. அது தரும் விவரங்களோ ஏராளம். திராட்சரசத்தைப் பற்றி அநேக இடங்களில் குறிப்பிடப்படுவதால், அவ்விருந்தில் மனம்போன போக்கில் புசித்துக் குடித்து வெறித்துப் போனார்கள் என்பது தெளிவாகிறது. (தானியேல் 5:1, 2, 4) சொல்லப்போனால், அதுபோன்ற விருந்துகளைப் பற்றிய செதுக்கோவியங்கள், திராட்சரசம் மட்டுமே பருகப்படுவதை சித்தரிக்கின்றன. ஆக, திராட்சரசங்கள் இன்றி அப்படிப்பட்ட கொண்டாட்டங்களே இல்லை எனலாம். அவ்விருந்தில் பெண்களும்​—⁠ராஜாவின் மனைவிகளும் வைப்பாட்டிகளும்​—⁠கலந்துகொண்டதாய் தானியேல் குறிப்பிடுகிறார். (தானியேல் 5:3, 23) பாபிலோனிய கலாச்சாரத்தைப் பற்றிய இவ்விவரத்தை தொல்பொருள் ஆதரிக்கிறது. மக்கபேயரின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும் கிரேக்கர்களுமோ, மனைவிமார்கள் கணவர்களோடு சேர்ந்து விருந்துகளில் கலந்துகொள்ளும் பழக்கத்தை ஆட்சேபித்தார்கள். ஒருவேளை இதனால்தான், தானியேல் புத்தகத்தின் ஆரம்பகால கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்புகள் இப்பெண்களைப் பற்றி குறிப்பிடுவதில்லை போலும் c இப்போது கவனிக்க வேண்டிய குறிப்பு: தானியேல் புத்தகத்தின் போலி எழுத்தாளர், அதே கிரேக்க கலாச்சாரத்தில், அதுவும் செப்டுவஜின்ட் எழுதப்பட்ட அதே சகாப்தத்தில் வாழ்ந்தவர் என்றல்லவா கருதப்படுகிறார்!

21இப்படிப்பட்ட துல்லிய விவரங்களைக் கவனிக்கையில், தானியேல் புத்தகத்தை எழுதியவர் நாடுகடத்தப்பட்ட காலத்தைப் பற்றி ‘மேலோட்டமான, திருத்தமில்லாத’ தகவலைத்தான் பெற்றிருந்தார் என பிரிட்டானிக்கா சொல்வது துளியும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. பூர்வ பாபிலோனிய, பெர்சிய கலாச்சாரங்களைப் பற்றி, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்த மோசடிக்காரர் ஒருவர் எப்படி நுணுக்கமாக தெரிந்துவைத்திருக்க முடியும்? அதுமட்டுமல்ல, அந்த இரண்டு சாம்ராஜ்யங்களுமே, பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு வெகு முன்னதாகவே வீழ்ச்சியடைந்துவிட்டன என்பதையும் நினைவில் வையுங்கள். அப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எவருமே கிடையாது. அப்போது வாழ்ந்த யூதர்கள், அந்நிய கலாச்சாரங்களும் சரித்திரங்களும் தங்களுக்கு அத்துப்படியென பெருமை பாராட்டவும் இல்லை. ஆக, தானியேல் புத்தகத்தை எழுதியது தீர்க்கதரிசியாகிய தானியேலாகத்தான் இருக்க வேண்டும். அவரே அப்புத்தகம் குறிப்பிடும் காலத்தில் வாழ்ந்தவரும் அதில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களுக்குக் கண்கண்ட சாட்சியுமாவார்.

இதர அத்தாட்சிகளின்படி தானியேல் புத்தகம் போலியா?

22எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் தானியேல் புத்தகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பற்றியும் முக்கிய வாக்குவாதம் நடந்துவந்திருக்கிறது. பண்டைய ரபீக்கள் எபிரெய வேதாகமத்தின் புத்தகங்களை மூன்று பாகங்களாக பிரித்தனர்: பிரமாணங்கள், தீர்க்கதரிசிகள், சங்கீதங்கள். அவர்கள் தானியேலை தீர்க்கதரிசிகளின் வரிசையில் சேர்க்காமல் சங்கீதங்களின் வரிசையில் சேர்த்தார்கள். அப்படியென்றால், மற்ற தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் திரட்டப்பட்டபோது இப்புத்தகம் அறியப்படாத ஒன்றாகவே இருந்திருக்க வேண்டுமென விமர்சகர்கள் வாதாடுகிறார்கள். ஒருவேளை அது பிற்பாடு சேகரிக்கப்பட்டதால் சங்கீதங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

23இருந்தாலும் ரபீக்கள் இப்புத்தகங்களை மிகவும் கறாராக வகைப்படுத்தினர் என்றோ, தானியேல் புத்தகத்தை தீர்க்கதரிசிகளின் வரிசையில் சேர்க்கவேயில்லை என்றோ எல்லா பைபிள் ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் அப்படியே ரபீக்கள் தானியேல் புத்தகத்தை சங்கீதங்களின் வரிசையில் சேர்த்திருந்தாலும், அது வெகு நாட்களுக்குப் பிறகு எழுதப்பட்டதென்று அர்த்தமாகுமா? ஆகாது. ரபீக்கள் தானியேல் புத்தகத்தை தீர்க்கதரிசிகளின் வரிசையில் சேர்க்காததற்கான பலதரப்பட்ட காரணங்களை பெயர்பெற்ற அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை அப்புத்தகம் ரபீக்களுக்கு கோபமூட்டியிருக்கலாம், அல்லது தானியேல் அந்நிய நாட்டில் அரச பதவியில் இருந்ததால் அவரை மற்ற தீர்க்கதரிசிகளிலிருந்து வேறுபட்டவராய் கருதியிருக்கலாம். எதுவாயிருந்தாலும் சரி, நமக்கு வேண்டிய விஷயமே இதுதான்: பூர்வ யூதர்கள் தானியேல் புத்தகத்தை மிக உயர்வாக மதித்தார்கள், அதை நம்பத்தகுந்த புத்தகமாக கருதினார்கள். மேலும், அத்தாட்சியின்படி எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியல், பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு வெகு காலத்திற்கு முன்பே முற்றுப்பெற்றது. அதற்குப்பின், பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில புத்தகங்கள் உட்பட, வேறெந்த புத்தகங்களும் அதில் சேர்க்கப்பட அனுமதிக்கப்படவில்லை.

24இப்படி பிற்பாடு எழுதப்பட்ட புத்தகங்களில் ஒன்றே, தள்ளுபடி ஆகமங்களைச் சேர்ந்த சீராக் ஆகமம். இதை சுமார் பொ.ச.மு. 180-⁠ல் ஜீசஸ் பென் சீராக் எழுதினார். இதைத்தான், தானியேல் புத்தகத்தைப் போலியென காட்டுவதற்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் விமர்சகர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, இப்புத்தகத்திலுள்ள நீதிமான்களின் நீண்ட பட்டியலில் தானியேல் இடம்பெறவில்லை என சொல்கிறார்கள். இதனால், தானியேலை அச்சமயத்தில் எவரும் அறியவில்லை என அவர்கள் தரப்பில் நியாயங்காட்டுகிறார்கள். பல அறிஞர்கள் இக்கருத்தை ஆமோதிக்கிறார்கள். ஆனால் இதைக் கொஞ்சம் கவனியுங்கள்: அதே பட்டியல் எஸ்றாவையும், மொர்தெகாயையும் (இவர்கள் இருவருமே நாடுகடத்தப்பட்ட யூதர்களின் கண்களில் மாவீரர்கள்), நல்ல அரசரான யோசபாத்தையும், உத்தமரான யோபுவையும் குறிப்பிடுவதில்லை. அதுமட்டுமல்ல, நியாயாதிபதிகளில் சாமுவேலை மட்டும்தான் குறிப்பிடுகிறது d இவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இல்லை என்பதற்காக இவர்கள் எல்லாருமே கற்பனைக் கதாபாத்திரங்கள் என சொல்லிவிட முடியுமா? அதுவும் அந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ள சீராக் ஆகமம், அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லை; மேலும் அது முழுமையான பட்டியல் என உரிமை கொண்டாடுவதும் இல்லை. ஆக மொத்தத்தில், இந்தக் கருத்தே அபத்தமாய் இருக்கிறது.

தானியேலுக்கு சாதகமான இதர அத்தாட்சிகள்

25இப்போது மறுபடியும் பாராட்டத்தக்க விஷயங்களுக்கு வருவோம். எபிரெய புத்தகங்களில், தானியேலைவிட அதிக சான்றளிக்கப்பட்ட புத்தகம் வேறெதுவும் இல்லை என சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு: புகழ்பெற்ற யூத சரித்திராசிரியரான ஜோசிஃபஸ் இப்புத்தகத்தின் உண்மைத்தன்மைக்கு சான்றளிக்கிறார். மகா அலெக்ஸாந்தர் பொ.ச.மு. நான்காவது நூற்றாண்டில் பெர்சியர்களுக்கு எதிராக போரிட்டபோது எருசலேமுக்கு வந்ததாகவும் அங்கே ஆசாரியர்கள் அவருக்கு தானியேல் புத்தகத்தைக் காட்டியதாகவும் சொல்கிறார். அலெக்ஸாந்தரிடம் காட்டப்பட்ட தானியேலின் தீர்க்கதரிசன வார்த்தைகள், பெர்சியருக்கு எதிராக தான் படையெடுத்துவந்த சம்பவத்தைத்தான் குறிப்பிடுகின்றன என அவரே ஒப்புக்கொண்டார் e இது, “போலி” புத்தகம் எழுதப்பட்டதாய் விமர்சகர்கள் சொல்லும் காலத்திற்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு நடந்திருக்கும். இருந்தாலும் இப்படிச் சொன்னதற்காக ஜோசிஃபஸை விமர்சகர்கள் தாக்காமல் இல்லை. தானியேல் புத்தகத்திலுள்ள சில தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின என சொன்னதற்காகவும் அவரைத் தாக்குகின்றனர். ஆனால் சரித்திராசிரியர் ஜோசஃப் டி. வில்சன் சொன்னபடி, “உலகிலுள்ள எல்லா விமர்சகர்களையும்விட [ஜோசிஃபஸ்] அதிகம் தெரிந்துவைத்திருந்தார்.”

26இஸ்ரவேலிலுள்ள கும்ரான் குகைகளில் சவக்கடல் சுருள்கள் கண்டெடுக்கப்பட்டபோது, தானியேல் புத்தகத்தின் உண்மைத்தன்மைக்கான ஆதாரம் வலுவானது. 1952-⁠ல் கண்டெடுக்கப்பட்ட அநேக சுருள்களும் நகல்களின் துண்டுகளும் தானியேல் புத்தகத்தைச் சேர்ந்தவை என்பது வியப்பளிக்கும் விஷயம். அவற்றில் மிகப் பழமையானது, பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது. ஆகவே அவ்வளவு முன்னதாகவே தானியேல் புத்தகம் மிகப் பிரபலமானதாகவும் நன்கு மதிக்கப்பட்டதாகவும் இருந்தது தெரியவருகிறது. த சாண்டர்வான் பிக்டோரியல் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் த பைபிள் சொல்கிறது: “தானியேல் எழுதப்பட்டதற்கும் அதன் பிரதிகள் மக்கபேய மதப் பிரிவினரின் நூலகத்தில் வைக்கப்பட்டதற்கும் இடையே போதிய காலம் இருந்திருக்க முடியாது என்றால், அது மக்கபேயரின் காலத்தில் எழுதப்பட்டதென்ற கருத்தை கைவிட வேண்டியதுதான்.”

27இருந்தாலும், தானியேல் புத்தகத்திற்கு இதைவிட பழமையான அதிக நம்பத்தகுந்த சான்று இருக்கிறது. தானியேல் காலத்தில் வாழ்ந்த ஒருவர்தான் தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல். யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட சமயத்தில் அவரும் தீர்க்கதரிசியாக சேவித்தார். எசேக்கியேல் தன் புத்தகத்தில் அநேகம் முறை தானியேலை பெயர் சொல்லிக் குறிப்பிடுகிறார். (எசேக்கியேல் 14:14, 20; 28:3) இவற்றின்படி பார்த்தால், தானியேல் பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில், அதாவது அவர் வாழ்ந்த காலத்திலேயே, நீதிமானாகவும் ஞானியாகவும் நன்கு அறியப்பட்டிருந்தார். தேவபயமுள்ள நோவாவுக்கும் யோபுக்கும் சமமாக கருதப்பட்டார்.

மிக முக்கிய சாட்சி

28இறுதியாக தானியேலின் நம்பகத்தன்மைக்கு மாபெரும் சான்றளித்தவரைப் பற்றி சிந்திக்கலாம். அவர் வேறு எவருமில்லை, இயேசு கிறிஸ்துவேதான். கடைசி நாட்களைப் பற்றி பேசுகையில், இயேசு ‘தானியேல் தீர்க்கதரிசியைப்’ பற்றியும் தானியேலின் தீர்க்கதரிசனங்களில் ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டார்.​—மத்தேயு 24:15; தானியேல் 11:31; 12:⁠11.

29மக்கபேய காலத்தில் எழுதப்பட்டதென்ற விமர்சகர்களின் கருத்து சரியென்றால், இந்த இரண்டில் ஒன்று உண்மையாய் இருக்க வேண்டும்: இயேசு இந்தப் போலி புத்தகத்தால் ஏமாந்துவிட்டார் அல்லது மத்தேயுவின் பதிவிலுள்ளதை அவர் சொல்லியிருந்திருக்கவே மாட்டார். இரண்டுக்குமே வாய்ப்பில்லை. மத்தேயுவின் சுவிசேஷ பதிவையே நாம் நம்பாவிட்டால் பைபிளின் வேறெந்த பதிவைத்தான் நம்புவோம்? பரிசுத்த வேதாகமத்திலிருந்து இந்த வாக்கியங்களையே நீக்கிவிட்டால், அடுத்ததாக வேறெந்தெந்த வாக்கியங்களை நீக்குவோம்? அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. . . . அவைகள் உபதேசத்துக்கும், . . . சீர்திருத்தலுக்கும் பிரயோஜனமுள்ளவை.’ (2 தீமோத்தேயு 3:16, 17) ஆகவே தானியேல் மோசடிக்காரர் என்றால், பவுலும் அதே ரகம்தான்! இயேசு ஏமாந்துபோயிருப்பாரா? வாய்ப்பே இல்லை. தானியேல் புத்தகம் எழுதப்பட்ட சமயத்தில் அவர் பரலோகத்தில் உயிருடன் இருந்தார். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றும் இயேசு சொன்னார். (யோவான் 8:58) தானியேலின் நம்பகத்தன்மையைப் பற்றி கேட்டு தெரிந்துகொள்ள, இயேசுவைத் தவிர தகுதிவாய்ந்தவர் வேறெவராவது இருக்க முடியுமா? அவரிடம் நாம் இப்போது கேட்க வேண்டியதுகூட இல்லை. நாம் பார்த்திருக்கிறபடி, அவர் ஏற்கெனவே தெள்ளத்தெளிவான சான்றளித்துவிட்டார்.

30இயேசு, முழுக்காட்டுதல் எடுத்த சமயத்திலேயும் தானியேல் புத்தகத்தை நம்பத்தகுந்ததாய் காட்டினார். அப்போது அவர் மேசியாவாகி, 69 வார-வருடங்களைப் பற்றிய தானியேல் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். (தானியேல் 9:25, 26; இப்புத்தகத்தின் 11-ஆம் அதிகாரத்தைக் காண்க.) தானியேல் வெகு காலத்திற்குப் பிற்பாடு எழுதப்பட்டதென்பது உண்மையாகவே இருந்தாலும், எழுத்தாளரால் சுமார் 200 வருடங்களுக்கு முன்பாகவே எதிர்காலத்தைப் பற்றி சொல்ல முடிந்தது என்றுதானே அர்த்தம். கடவுள் ஒரு மோசடிக்காரரை ஏவி, புனைபெயரில் உண்மை தீர்க்கதரிசனங்களைச் சொல்ல வைக்கவே மாட்டார். இயேசுவின் சாட்சியை தேவநம்பிக்கையுள்ள மக்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறார்கள். உலகத்திலுள்ள எல்லா நிபுணர்களும் எல்லா விமர்சகர்களும் ஒன்றுசேர்ந்து தானியேல் மீது குற்றச்சாட்டுகளைக் குவித்தாலும், அவை அனைத்தையும் தவறென நிரூபிப்பதற்கு இயேசுவின் சாட்சியே போதும். ஏனென்றால் அவர் ‘உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி.’​—வெளிப்படுத்துதல் 3:⁠14.

31ஆனால் இந்த சாட்சியமும் அநேக பைபிள் விமர்சகர்களைத் திருப்திப்படுத்துவதில்லை. விஷயத்தை முற்று முழுக்க அலசிப் பார்த்த பிறகு, இவ்வளவு என்ன, இன்னும் எவ்வளவு அத்தாட்சிகளைக் கொடுத்தாலும் அவர்கள் திருப்தியடையப் போவதில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் எழுதியபடி, “ ‘அற்புத தீர்க்கதரிசனம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது’ என்ற வறட்டு பிடிவாதம் நிலவும்வரை, எதிர்ப்புகளுக்கு வெறுமனே பதிலளிப்பதில் பயனே இல்லை.” ஆக, அவர்கள் பிடிவாதமே அவர்கள் கண்களை மறைக்கிறது. என்றாலும் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை, அவர்கள் இஷ்டம் அவர்கள் நஷ்டம்.

32நீங்கள் எப்படி? தானியேல் புத்தகத்தைப் பற்றி சந்தேகப்படுவதற்கு ஒன்றுமில்லை என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் ஆர்வத்தைத் தூண்டும் ஆய்வுப் பயணம் போகலாம், தயாராகுங்கள்! தானியேலிலுள்ள வரலாறு உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்; அதன் தீர்க்கதரிசனங்களால் அசந்துபோவீர்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாய், அதிகாரம் அதிகாரமாய் படிக்கப் படிக்க உங்கள் விசுவாசம் அதிகரித்துக்கொண்டே போவதை உணருவீர்கள். தானியேல் தீர்க்கதரிசனத்தைக் கூர்ந்து ஆராய்ந்ததற்காக ஒருநாளும் வருத்தப்பட மாட்டீர்கள்!

[அடிக்குறிப்புகள்]

a அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லாத பழங்காலத்து புத்தகங்கள் சில, புனைபெயரில் எழுதப்பட்டன. அவ்வாறே இப்புத்தகமும் தானியேல் என்ற புனைபெயரில் எழுதப்பட்டதென்று சில விமர்சகர்கள் சொல்கிறார்கள். இவ்வாறு மோசடிக் குற்றச்சாட்டை சற்று தணிக்கப் பார்க்கிறார்கள். இருந்தாலும் பைபிள் விமர்சகரான ஃபெர்டினான்ட் ஹிட்சிக் இப்படிச் சொன்னார்: “தானியேல் புத்தகத்தின் [எழுத்தாளர்] வேறொருவர் என்றால், அதை போலி புத்தகம் என்றே சொல்லமுடியும். புனைபெயரில் எழுதப்பட்டதென்ற பேச்சிற்கே இடமில்லை. வாசிப்பவர்களின் நன்மைக்காக என்றாலும் அவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் எழுதப்பட்ட ஒன்றாகிவிடும்.”

b பாபிலோன் வீழ்ச்சியடைந்தபோது நபோனிடஸ் அங்கில்லை. ஆகவே அந்தச் சமயம் பெல்ஷாத்சார் அரசராக விவரிக்கப்படுவது பொருத்தமானதே. ஆனால் சரித்திர பதிவுகள் பெல்ஷாத்சாருக்கு ராஜா என்ற பட்டத்தை அளிப்பதேயில்லை என சொல்லி விமர்சகர்கள் விஷயத்தைப் பெரிதுபடுத்துகின்றனர். இருந்தாலும் பூர்வ ஆதாரங்களின்படி, ஆளுநரைக்கூட மக்கள் ராஜாவென அந்நாட்களில் அழைத்தார்களாம்.

c எபிரெய அறிஞர் சி. எஃப். கைல் தானியேல் 5:3-ஐப் பற்றி இவ்வாறு எழுதினார்: “மக்கெதோனியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோரின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறே, இவ்வசனத்திலும் 23-ஆம் வசனத்திலேயும் LXX. (செப்டுவஜின்ட்) பெண்களைப் பற்றி குறிப்பிடுவதில்லை.”

d இதற்கு மாறானது, எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் பவுல் கடவுளுடைய ஏவுதலால் எழுதிய, விசுவாசமுள்ள நபர்களின் பட்டியல். அதில் தானியேல் பதிவுசெய்திருக்கும் சம்பவங்கள் மறைமுகமாய் குறிப்பிடப்பட்டுள்ளன. (தானியேல் 6:16-24; எபிரெயர் 11:32, 33) இருந்தாலும் அப்போஸ்தலனின் இப்பட்டியலும் முழுமையானது அல்ல. ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்ற நிறைய பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதற்காக அவர்கள் யாருமே வாழவில்லை என சொல்லவா முடியும்?

e பெர்சியர்களின் வெகுநாளைய தோழர்களான யூதர்களை அலெக்ஸாந்தர் தயவோடு நடத்தியதற்கான காரணம் இதுதான் என சில சரித்திராசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அச்சமயத்தில் பெர்சியர்களோடு தோழமை கொண்டிருந்த அனைவரையும் அழிக்கும் படலத்தில் அலெக்ஸாந்தர் இறங்கியிருந்தார்.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• தானியேல் புத்தகத்தின்மீது என்ன குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது?

• தானியேல் புத்தகத்தைப் பற்றி விமர்சகர்கள் சொல்லும் குறைகள் ஏன் ஆதாரமற்றவை?

• தானியேல் புத்தகத்தின் நம்பகத்தன்மைக்கு ஆதரவளிக்கும் அத்தாட்சிகள் எவை?

• தானியேல் புத்தகம் உண்மை என்பதற்கு மிகத் திருப்தியளிக்கும் அத்தாட்சி எது?

[கேள்விகள்]

1, 2. எந்த அர்த்தத்தில் தானியேல் புத்தகம் விசாரணைக் கூண்டில் ஏற்றப்பட்டிருக்கிறது, எதிர்வாதத்திலுள்ள நியாயங்களைக் கவனித்துக் கேட்பது ஏன் முக்கியம் என நினைக்கிறீர்கள்?

3. தானியேல் புத்தகத்தின் நம்பகத்தன்மையைப் பற்றி த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா என்ன சொல்கிறது?

4. எப்போதுமுதல் தானியேல் புத்தகம் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது, சமீப நூற்றாண்டுகளில் அதேபோன்ற குற்றச்சாட்டுகள் எழும்ப எது காரணம்?

5. தானியேல் புத்தகம் உண்மையானதா என்பதை தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

6. தானியேலில் பதிவுசெய்யப்பட்டுள்ள சரித்திரத்தின்மீது என்ன குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது?

7. (அ) தானியேல் பெல்ஷாத்சாரைப் பற்றிக் குறிப்பிட்டதை, விமர்சகர்கள் ஏன் வெகுகாலமாய் தாக்கிவந்திருக்கின்றனர்? (ஆ) பெல்ஷாத்சார் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான் என்ற கருத்து என்னவாயிற்று?

8. பெல்ஷாத்சாரை அரசாளும் ராஜாவாக தானியேல் விவரித்தது எவ்வாறு உண்மையென காட்டப்பட்டிருக்கிறது?

9. (அ) பெல்ஷாத்சாரை நேபுகாத்நேச்சாரின் மகனென எந்த அர்த்தத்தில் தானியேல் குறிப்பிட்டிருப்பார்? (ஆ) தானியேல் நபோனிடஸைப் பற்றி ஜாடைமாடையாய்கூட குறிப்பிடவில்லை என விமர்சகர்கள் சொல்வது ஏன் தவறு?

10. பாபிலோனிய அரசர்களைப் பற்றிய தானியேலின் பதிவு, ஏன் மற்ற பூர்வ சரித்திராசிரியர்களின் பதிவைவிட அதிக நுணுக்கமான விவரமளிக்கிறது?

11. தானியேலின்படி, மேதியனாகிய தரியு யார், அவரைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

12. (அ) பைபிள் விமர்சகர்கள், மேதியனாகிய தரியு வெறும் கற்பனைக் கதாபாத்திரம் என அடித்துச் சொல்வதற்குப் பதிலாக, தீர ஆராய்வது ஏன் மேலானது? (ஆ) மேதியனாகிய தரியு யாராக இருந்திருக்கலாம், இதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

13. மேதியனாகிய தரியுவை தானியேல் புத்தகம் குறிப்பிடுகிறபோதிலும் மற்ற சரித்திரப் பதிவுகள் குறிப்பிடாததற்கு நியாயமான காரணம் என்ன?

14. யோயாக்கீம் அரசாண்ட வருடங்களைப் பற்றி தானியேலும் எரேமியாவும் சொன்னவற்றில் ஏன் எந்த முரண்பாடும் இல்லை?

15. தானியேல் 1:1-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கணக்கைப் பற்றி விவாதிப்பது ஏன் வீண்?

16, 17. பின்வரும் தானியேல் பதிவுகளுக்கு என்ன புதைபொருள் அத்தாட்சி இருக்கிறது: (அ) நேபுகாத்நேச்சார் எல்லாரும் வணங்குவதற்காக ஒரு மாபெரும் சிலையை நிறுத்தினார். (ஆ) நேபுகாத்நேச்சார் பாபிலோனில் தனது கட்டுமானப் பணிகளைக் குறித்து செருக்கடைந்தார்.

18. பாபிலோனிய ஆட்சியிலும் பெர்சிய ஆட்சியிலும் வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டதைக் குறித்து தானியேல் செய்த பதிவு ஏன் திருத்தமானது?

19. பாபிலோனிய மற்றும் மேதிய-பெர்சிய சட்ட ஒழுங்குமுறைகளுக்கு இருந்த என்ன வித்தியாசத்தை தானியேல் புத்தகம் தெளிவாக்குகிறது?

20. பெல்ஷாத்சாரின் விருந்து சம்பந்தமாய் தானியேல் தரும் என்ன விவரங்கள், அவர் பாபிலோனிய பழக்கவழக்கங்களைக் குறித்து நேரடி தகவல் பெற்றவர் என காட்டுகின்றன?

21. பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட சமயத்தைப் பற்றியும் பழக்கவழக்கங்களைப் பற்றியும் தானியேல் தெள்ளத்தெளிவாய் அறிந்துவைத்திருந்ததற்கு என்ன நியாயமான விளக்கம் தரலாம்?

22. எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் தானியேலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைப் பற்றி விமர்சகர்கள் சொல்வது என்ன?

23. பூர்வ யூதர்கள் தானியேல் புத்தகத்தை எப்படிக் கருதினார்கள், அது நமக்கு எப்படித் தெரியும்?

24. தானியேல் புத்தகத்தைக் குறைசொல்ல, தள்ளுபடி ஆகமங்களைச் சேர்ந்த சீராக் ஆகமம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இந்த விளக்கம் தவறென எது காட்டுகிறது?

25. (அ) தானியேல் பதிவின் உண்மைத்தன்மைக்கு ஜோசிஃபஸ் எவ்வாறு சான்றளித்தார்? (ஆ) மகா அலெக்ஸாந்தரைப் பற்றியும் தானியேல் புத்தகத்தைப் பற்றியும் ஜோசிஃபஸ் பதிவுசெய்திருப்பது, எவ்வாறு சரித்திரத்தோடு ஒத்துப்போகிறது? (27-⁠ம் பக்கத்தின் அடிக்குறிப்பைக் காண்க.) (இ) மொழியியல் அத்தாட்சி எவ்வாறு தானியேல் புத்தகத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது? (பக்கம் 26-ஐக் காண்க.)

26. தானியேல் புத்தகத்தின் நம்பகத்தன்மையை சவக்கடல் சுருள்கள் எவ்வாறு ஆதரிக்கின்றன?

27. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட சமயத்தில் உண்மையிலேயே வாழ்ந்த, நன்கு அறியப்பட்ட ஒருவர்தான் தானியேல் என்பதற்கு மிகப் பழமையான அத்தாட்சி என்ன?

28, 29. (அ) தானியேல் புத்தகம் நம்பத்தகுந்தது என்பதற்கு மிகத் திருப்தியளிக்கும் அத்தாட்சி எது? (ஆ) இயேசு அளித்த சான்றை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

30. தானியேல் புத்தகத்தின் உண்மைத்தன்மைக்கு இயேசு எவ்வாறு கூடுதல் சான்றளித்தார்?

31. தானியேல் புத்தகத்தின் நம்பகத்தன்மையைக் குறித்து ஏன் அநேக பைபிள் விமர்சகர்கள் இன்னும் திருப்தியடையவில்லை?

32. தானியேலைப் பற்றி என்ன படிக்கவிருக்கிறோம்?

[பக்கம் 26-ன் பெட்டி]

மொழி எழுப்பிய சர்ச்சை

தானியேல் புத்தகம் சுமார் பொ.ச.மு. 536-⁠ல் எழுதி முடிக்கப்பட்டது. அது எபிரெய மொழியிலும் அரமிய மொழியிலும் எழுதப்பட்டது. ஒருசில கிரேக்க வார்த்தைகளும் பெர்சிய வார்த்தைகளும் இதில் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட கலவை அபூர்வம்தான், ஆனால் வேதவாக்கியங்களைப் பொறுத்தவரை அது அவ்வளவு அரிது அல்ல. மற்றொரு பைபிள் புத்தகமாகிய எஸ்றாவும் எபிரெய, அரமிய மொழிகளில் எழுதப்பட்டது. இருந்தாலும் தானியேல் புத்தகத்தை எழுதியவரின் மொழிநடையைப் பார்த்தால் பொ.ச.மு. 536-⁠க்கு பிற்பாடே எழுதியிருக்க வேண்டும் என்பது நிரூபணமாகிறது என சில விமர்சகர்கள் சொல்கிறார்கள். தானியேலில் கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, பிற்காலத்தில் அது எழுதப்பட்டதற்கு உறுதியான அத்தாட்சி என்றும்; எபிரெய மொழி பயன்படுத்தப்பட்டிருப்பது இதை ஆதரிக்கிறது என்றும்; அரமிய மொழி பயன்படுத்தப்பட்டிருப்பது இதோடு முரண்படுவதில்லை என்றும் ஒரு விமர்சகர் தெரிவித்த கருத்து பிரபலமானது. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில்கூட எழுதப்பட்டதற்கு வாய்ப்பிருப்பதாய் அவர் உறுதியாய் சொன்னார்.

இருந்தாலும் மொழி வல்லுநர்கள் அனைவரும் இதை ஒப்புக்கொள்வதில்லை. தானியேல் புத்தகத்தின் எபிரெய மொழி எசேக்கியேல், எஸ்றா புத்தகங்களோடு ஒத்திருப்பதாகவும் பிற்பாடு எழுதப்பட்ட சீராக் போன்ற தள்ளுபடி ஆகமங்களிலிருந்து வித்தியாசப்படுவதாகவும் சிலர் சொல்கின்றனர். தானியேல் பயன்படுத்தியிருக்கும் அரமிய மொழியைப் பொறுத்ததில், சவக்கடல் சுருள்களின் இரண்டு ஆவணங்களைக் கவனியுங்கள். அவையும் அரமிய மொழியில் எழுதப்பட்டவை. பொ.ச.மு. முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளுக்கிடையே எழுதப்பட்டவை. இது தானியேல் புத்தகம் எழுதப்பட்டதாய் விமர்சகர்கள் சொல்லும் காலத்திற்கு வெகு பிந்தி இல்லை. ஆனால் இந்த ஆவணங்களிலுள்ள அரமிய மொழிக்கும் தானியேல் புத்தகத்திலுள்ள அரமிய மொழிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக நிபுணர்கள் கண்டிருக்கிறார்கள். ஆகவே தானியேல் புத்தகம் விமர்சகர்கள் சொல்லும் காலப்பகுதிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டிருக்க வேண்டுமென சிலர் சொல்கின்றனர்.

தானியேல் புத்தகத்திலுள்ள “பிரச்சினைக்குரிய” கிரேக்க வார்த்தைகளைப் பற்றியென்ன? இவற்றில் சில, கிரேக்க வார்த்தைகளே அல்ல, பெர்சிய வார்த்தைகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! கிரேக்க வார்த்தைகள் என இன்னும் நம்பப்படுபவை, மூன்று இசைக்கருவிகளின் பெயர்கள் மட்டுமே. இம்மூன்றே மூன்று வார்த்தைகள், தானியேல் புத்தகம் பிற்பாடு எழுதப்பட்டதற்கு உறுதியான அத்தாட்சியாகுமா? ஆகாது. கிரீஸ் உலக வல்லரசாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்க கலாச்சாரம் பரவியிருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள். மேலும், கிரேக்க கலாச்சாரமும் மொழியும் எங்கும் பரவியிருந்த பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் தானியேல் புத்தகம் எழுதப்பட்டிருந்தால், மூன்றே மூன்று கிரேக்க வார்த்தைகள் மட்டுமே அதில் இருக்குமா? நிச்சயம் இருக்காது. இன்னும் அதிகம் இருந்திருக்கும். ஆக, மொழியியல் அத்தாட்சி தானியேலின் நம்பகத்தன்மையை உண்மையில் ஆதரிக்கிறது.

[பக்கம் 12-ன் முழுபடம்]

[பக்கம் 20-ன் படங்கள்]

(கீழே) நபோனிடஸ் ராஜாவின் பெயரும் அவர் மகன் பெல்ஷாத்சாரின் பெயரும் பொறிக்கப்பட்ட பாபிலோனிய ஆலய உருளை

(மேலே) நேபுகாத்நேச்சார் தனது கட்டுமான பணிகளைக் குறித்து செருக்கடைந்ததைக் காட்டும் கல்வெட்டு

[பக்கம் 21-ன் படம்]

நபோனிடஸ் செய்திப் பட்டியலின்படி, கோரேசின் படை போரிடாமலேயே பாபிலோனுக்குள் நுழைந்தது

[பக்கம் 22-ன் படங்கள்]

(வலது) நபோனிடஸ் தனது மூத்த மகனிடம் ராஜ்யபாரத்தை ஒப்படைத்ததாய் குறிப்பிடும் “நபோனிடஸ் செய்யுள் விவரப்பதிவு”

(இடது) நேபுகாத்நேச்சார் யூத தேசத்தின்மீது படையெடுத்ததை விவரிக்கும் பாபிலோனிய பதிவு