Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மேசியா தோன்றும் காலத்தை தெரிவித்தல்

மேசியா தோன்றும் காலத்தை தெரிவித்தல்

அதிகாரம் பதினொன்று

மேசியா தோன்றும் காலத்தை தெரிவித்தல்

யெகோவா எதையும் காலத்தோடு செய்வதில் நிகரற்றவர். அவரது நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா காலங்களும் வேளைகளும் அவரது கையிலேயே உள்ளன. (அப்போஸ்தலர் 1:7) அவரது எண்ணப்படி இந்தக் காலங்களிலும் வேளைகளிலும் நடக்க வேண்டிய எல்லா சம்பவங்களும் கண்டிப்பாக நடந்தேறும். தவறவே தவறாது.

2தீர்க்கதரிசியாகிய தானியேல் வேதவாக்கியங்களை கருத்தூன்றி படித்தார். ஆக, சம்பவங்கள் நடக்கவேண்டிய காலங்களை தீர்மானித்து, அவை நடைபெறும்படி பார்த்துக்கொள்ள யெகோவாவிற்கு திறனிருக்கிறது என்பதில் நம்பிக்கை வைத்தார். குறிப்பாக எருசலேமின் அழிவைக் குறித்த தீர்க்கதரிசனங்களில் தானியேல் அதிக ஆர்வம் காட்டினார். இந்தப் பரிசுத்த நகரம் எவ்வளவு காலம் பாழாய் கிடக்கும் என்பதைக் குறித்து கடவுள் வெளிப்படுத்தியதை எரேமியா பதிவுசெய்திருந்தார். இந்தத் தீர்க்கதரிசனத்தை தானியேல் மிகக் கவனமாக சிந்தித்தார். அவர் எழுதினதாவது: “கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.”​—தானியேல் 9:1, 2; எரேமியா 25:⁠11.

3அப்போது “கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல்” மேதியனாகிய தரியு அரசாண்டு வந்தார். சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு தானியேல் சொன்ன அர்த்தம் உண்மையென ஏற்கெனவே நிரூபணம் ஆகிவிட்டது. பாபிலோனிய சாம்ராஜ்யம் அழிந்துவிட்டிருந்தது. அது பொ.ச.மு. 539-⁠ல் “மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது.”​—தானியேல் 5:24-28, 30, 31.

யெகோவாவிடம் பணிவோடு மன்றாடுகிறார் தானியேல்

4எருசலேமின் 70 வருட பாழ்க்கடிப்பு முடிவிற்கு வரவிருந்ததை தானியேல் உணர்ந்தார். அடுத்ததாக என்ன செய்வார்? அவரே சொல்கிறார்: ‘நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்தேன்.’ (தானியேல் 9:3, 4) கடவுளது இரக்கத்தால் விடுதலை பெற, சரியான இருதய நிலை தேவைப்பட்டது. (லேவியராகமம் 26:31-46; 1 இராஜாக்கள் 8:46-53) விசுவாசமும் பணிவும் காட்ட வேண்டியிருந்தது. நாடுகடத்தப்பட்டு அடிமையாவதற்குக் காரணமான பாவங்களிலிருந்து முழுமையாய் மனந்திரும்பவும் வேண்டியிருந்தது. பாவமுள்ள மக்களின் சார்பாக கடவுளை அணுக தானியேல் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். எப்படி? உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலுக்கு அறிகுறியாக, உபவாசமிருந்து, இரட்டுடுத்தி, துக்கம்கொண்டாடினார்.

5எரேமியாவின் தீர்க்கதரிசனம் தானியேலுக்கு நம்பிக்கை அளித்தது. ஏனெனில் அது, யூதர்கள் தங்கள் தாயகமான யூதாவிற்கு விரைவில் திரும்பவிருந்ததைச் சுட்டிக்காட்டியது. (எரேமியா 25:12; 29:10) சந்தேகமில்லாமல், நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதில் தானியேலுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. ஏனெனில் கோரேசு என்பவர் பெர்சிய ராஜாவாக ஏற்கெனவே ஆட்சிசெய்து வந்தார். எருசலேமையும் அதன் ஆலயத்தையும் திரும்பக் கட்டும்படி யூதர்களை கோரேசு விடுவிப்பார் என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார் அல்லவா? (ஏசாயா 44:28–45:3) ஆனால் அது எப்படி நிறைவேறுமென தானியேலுக்கு தெள்ளத்தெளிவாய் தெரியவில்லை. ஆகவே தொடர்ந்து யெகோவாவிடம் விண்ணப்பித்தார்.

6தானியேல் கடவுளது இரக்கத்தின் மீதும் அன்பின் மீதுமே கவனத்தைத் திருப்பினார். யூதர்கள் கலகம் செய்து, யெகோவாவின் கட்டளைகளிலிருந்து விலகி, அவரது தீர்க்கதரிசிகளை புறக்கணித்ததன் மூலம் பாவம் செய்ததை அவர் தாழ்மையோடு ஒப்புக்கொண்டார். ‘துரோகத்திற்கு’ உரிய தண்டனையாக கடவுள் அவர்களை ‘சிதறடித்திருந்தார்.’ (NW) தானியேல் இவ்வாறு ஜெபித்தார்: “ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம். அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.”—தானியேல் 9:5-11; யாத்திராகமம் 19:5-8; 24:3, 7, 8.

7இஸ்ரவேலர்கள் தமக்குக் கீழ்ப்படியாமல், தமது உடன்படிக்கையை புறக்கணித்தால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து கடவுள் ஏற்கெனவே அவர்களுக்கு எச்சரித்திருந்தார். (லேவியராகமம் 26:31-33; உபாகமம் 28:15; 31:17) கடவுளது செயல்கள் நீதியுள்ளவையே என்பதை தானியேல் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார். மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை. ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.”—தானியேல் 9:12-14.

8தானியேல் தனது ஜனத்தாரின் செயல்களை நியாயப்படுத்த முயலவில்லை. நாடுகடத்தப்பட்டது அவர்களுக்கு உரிய தண்டனைதான். ஆகவே, “நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்” என அவர் தயங்காமல் ஒப்புக்கொண்டார். (தானியேல் 9:15) அதேசமயம் துன்பத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதில் மட்டுமே அவர் குறியாக இருக்கவில்லை. யெகோவாவின் மகிமையையும் கனத்தையும் கருத்தில்கொண்டே அவர் இந்த வேண்டுதலைச் செய்தார். யூதர்களை மன்னித்து, அவர்களது தாயகத்திற்கு திரும்பச்செய்வதன் மூலம் கடவுள் எரேமியாவின் மூலம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்; தமது பரிசுத்த நாமத்தையும் புனிதப்படுத்துவார். ஆக, தானியேல் இவ்வாறு மன்றாடினார்: “ஆண்டவரே, உம்முடைய சர்வ நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.”—தானியேல் 9:⁠16.

9தானியேல் தொடர்ந்து இவ்வாறு ஊக்கமாக ஜெபித்தார்: “இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே.” (தானியேல் 9:17-19) கடவுள் தமது மக்களை ஒருபோதும் மன்னிக்காமல் நாடுகடத்தப்பட்ட நிலையிலேயே விட்டுவிட்டு, தமது பரிசுத்த நகரமான எருசலேம் சதா காலங்களுக்கும் பாழாய் கிடக்கும்படி அனுமதித்திருந்தால், உலகம் அவரை சர்வலோகப் பேரரசராய் மதித்திருக்குமா? பாபிலோனிய கடவுட்களின் வல்லமையோடு ஒப்பிட, யெகோவாவை துச்சமாக அல்லவா நினைத்திருப்பார்கள்? ஆம், யெகோவாவின் பெயருக்கு இழுக்கு ஏற்படும். இந்தக் கவலைதான் தானியேலை வாட்டியது. தானியேல் புத்தகத்தில் கடவுளது பெயரான யெகோவா தோன்றும் 19 இடங்களில் 18, இந்த ஜெபத்தோடு சம்பந்தப்பட்டவை!

காபிரியேல் விரைகிறார்

10தானியேல் ஜெபம்செய்து கொண்டிருக்கையிலேயே காபிரியேல் தூதன் தோன்றி இவ்வாறு சொல்கிறார்: “தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.” தானியேல் ஏன் அவரை “புருஷனாகிய [“மனிதனாகிய,” NW] காபிரியேல்” என குறிப்பிடுகிறார்? (தானியேல் 9:20-23) வெள்ளாட்டுக்கடாவையும் செம்மறியாட்டுக் கடாவையும் குறித்த முந்தின தரிசனத்தின் அர்த்தத்தை அறிய தானியேல் முற்படுகையில், ‘மனுஷசாயலான ஒருவர்’ அவருக்குமுன் தோன்றினார். அவர், தானியேலுக்கு புரிந்துகொள்ளுதலை அளிப்பதற்காக அனுப்பப்பட்ட காபிரியேல் தூதன். (தானியேல் 8:15-17) அதேவிதமாய், தானியேல் ஜெபம் செய்த பிற்பாடு இந்தத் தூதன் மனுஷ உருவத்தில் அவரருகே வந்து, மனிதர் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் விதமாகவே பேசினார்.

11காபிரியேல் “அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே” வருகிறார். எருசலேமில் யெகோவாவின் பலிபீடம் ஆலயத்தோடு சேர்த்து அழிக்கப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியாரான பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டிருந்தனர். ஆகவே அங்கு, அதாவது பாபிலோனில் யூதர்கள் கடவுளுக்கு பலிகளைச் செலுத்தவில்லை. என்றாலும் அங்கிருந்த பக்தியுள்ள யூதர்கள், நியாயப்பிரமாணத்தின்படி பலிகள் செலுத்த வேண்டிய அந்தந்த நேரங்களில் யெகோவாவைத் துதித்து அவரிடம் விண்ணப்பிப்பதை பொருத்தமாக கண்டனர். தெய்வபக்திமிக்க தானியேல் “மிகவும் பிரியமானவன்” என அழைக்கப்பட்டார். ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவா அவரில் பிரியங்கொண்டார். ஆகவே தானியேலின் விசுவாசமுள்ள ஜெபத்திற்கு பதிலளிக்க காபிரியேல் உடனடியாக அனுப்பப்பட்டார்.​—சங்கீதம் 65:⁠2.

12யெகோவாவிடம் ஜெபிப்பது அவரது உயிருக்கே ஆபத்தாயிருந்த சமயத்திலும், தானியேல் தினந்தினம் மூன்று முறை தவறாமல் ஜெபித்தார். (தானியேல் 6:10, 11) இப்படிப்பட்டவர் யெகோவாவிற்கு பிரியமானவராக இருப்பதில் ஆச்சரியமேதும் இல்லையே! ஜெபம் செய்ததோடு தானியேல் கடவுளது வார்த்தையை தியானிக்கவும் செய்தார். யெகோவாவின் சித்தம் என்னவென்பதைப் புரிந்துகொள்ள இது அவருக்கு உதவியது. தானியேல் ஜெபத்தில் தரித்திருந்தார். ஜெபங்களுக்கு பதில் பெறும் விதத்தில், யெகோவாவை சரியாக அணுக வேண்டிய முறையையும் அவர் அறிந்திருந்தார். ஜெபத்தில் கடவுளது நீதியையே சிறப்பித்துக் காட்டினார். (தானியேல் 9:7, 14, 16) அவரது எதிரிகளால்கூட அவரிடம் எந்த குற்றம் குறையும் காண முடிவில்லை; இருந்தாலும் கடவுளது பார்வையில் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்து அவர் பாவத்திற்காக தயங்காமல் மன்னிப்பு கேட்டார்.—தானியேல் 6:4; ரோமர் 3:⁠23.

பாவங்களைத் தொலைக்க “எழுபது வாரங்கள்”

13உள்ளப்பூர்வமாய் ஜெபித்த தானியேலுக்கு என்னே பதில் கிடைக்கிறது! யூதர்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவார்கள் என்ற உறுதியை அளித்ததோடு யெகோவா, அதைக் காட்டிலும் மிக முக்கியமான ஒன்றையும் வெளிப்படுத்துகிறார். அதாவது முன்னறிவிக்கப்பட்ட மேசியா தோன்றும் காலத்தைத் தெரியப்படுத்துகிறார். (ஆதியாகமம் 22:17, 18; ஏசாயா 9:6, 7) காபிரியேல் தானியேலிடம் சொல்கிறார்: “மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை [“பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதை,” NW] அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் [“அகழிகளும்,” NW] மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.”தானியேல் 9:24, 25.

14இது எப்பேர்ப்பட்ட நற்செய்தி! எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு, புதிய ஆலயத்தில் உண்மை வணக்கம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுவதோடு, குறித்த காலத்தில் ‘பிரபுவாகிய மேசியாவும்’ தோன்றுவார். இது ‘எழுபது வாரங்களுக்குள்’ நடைபெறும். காபிரியேல் நாட்களைப் பற்றி குறிப்பிடாததால் இவை ஏழு நாட்கள் கொண்ட வாரங்கள் அல்ல. அதாவது வெறும் 490 நாட்களைக்கொண்ட, ஒரு வருடம் நான்கு மாதங்கள் அல்ல. முன்னறிவித்தபடி எருசலேம் ‘வீதிகளோடும் அகழிகளோடும்’ மீண்டும் கட்டப்படுவதற்கு இதைக் காட்டிலும் வெகு காலம் எடுத்தது. இங்கே வாரங்கள் என்பது வருடங்களை, அதாவது வார-வருடங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு வாரமும் ஏழு வருடங்கள் அடங்கியது என்பதை அநேக நவீன மொழிபெயர்ப்புகள் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, ஜூயிஷ் பப்ளிகேஷன் சொஸைட்டி பிரசுரித்த, தனாக்​—⁠பரிசுத்த வேதாகமத்தில் (ஆங்கிலம்) தானியேல் 9:24-⁠ன் அடிக்குறிப்பு, ‘எழுபது வார-வருடங்கள்’ என குறிப்பிடுகிறது. அன் அமெரிக்கன் ட்ரான்ஸ்லேஷன் இவ்வாறு வாசிக்கிறது: “உம் மக்களுக்கும் உம் பரிசுத்த நகருக்கும் எழுபது வார-வருடங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.” இதேவிதமாய் மொஃபட், ரதர்ஹாம் மொழிபெயர்ப்புகளும் குறிப்பிடுகின்றன.

15தூதனின் வார்த்தைகளின்படி, “எழுபது வாரங்கள்” மூன்று காலப்பகுதிகளாக பிரிக்கப்படும்: (1“ஏழு வாரங்கள்,” (2“அறுபத்திரண்டு வாரங்கள்,” (3ஒரு வாரம். ஆகவே 49 வருடங்களும், 434 வருடங்களும், 7 வருடங்களுமாய் மொத்தம் 490 வருடங்களைக் குறிக்கின்றன. த ரிவைஸ்டு இங்லிஷ் பைபிள் இவ்வாறு சொல்வது சுவாரஸ்யமளிக்கிறது: “கடவுள் உன் ஜனத்தாருக்கும் உன் பரிசுத்த நகரத்திற்கும் எழுபது ஏழு-வருடங்களைக் குறித்திருக்கிறார்.” பாபிலோனில் 70 வருடங்களாக நாடுகடத்தப்பட்டு துன்பம் அனுபவித்த பிறகு, யூதர்கள் 70 X 7 = 490 வருடங்களுக்கு கடவுளிடமிருந்து விசேஷ தயவைப் பெறுவார்கள். ‘எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்டதும்’ இந்தக் காலப்பகுதி ஆரம்பித்துவிடும். இது எப்போது நடக்கும்?

“எழுபது வாரங்கள்” ஆரம்பம்

16‘எழுபது வாரங்களின்’ ஆரம்பம் சம்பந்தமாக மூன்று முக்கிய சம்பவங்களை சிந்திப்பது பயன்மிக்கது. முதல் சம்பவம் பொ.ச.மு. 537-⁠ல் நடைபெற்றது. அவ்வருடம், யூதர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பலாம் என கோரேசு ஆணை பிறப்பித்தார். அது வாசிப்பதாவது: “பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் [“யெகோவாவின் வீட்டை,” NW] கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன். அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.” (எஸ்றா 1:2-4) இந்த ஆணையின் குறிப்பான நோக்கம், ‘யெகோவாவின் வீடாகிய’ ஆலயத்தை அதன் முந்தைய இடத்திலேயே திரும்பக் கட்டுவதாகும்.

17இரண்டாம் சம்பவம், பெர்சிய ராஜாவான அர்தசஷ்டாவினுடைய (முதலாம் சஷ்டாவின் குமாரனாகிய அர்தசஷ்டா லாங்கிமானஸ்) ஆட்சிக்காலத்தின் ஏழாம் வருடத்தில் நடைபெற்றது. அப்போது வேதாகமத்தை நகலெடுப்பவரான எஸ்றா பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு நான்கு மாத பயணத்தை மேற்கொண்டார். அவர் ராஜாவிடமிருந்து ஒரு விசேஷ கடிதத்தை எடுத்துவந்தார், ஆனால் அது எருசலேமைத் திரும்பக் கட்டுவதற்கு அனுமதியளிக்கவில்லை. மாறாக, யெகோவாவின் ‘ஆலயத்தை அலங்கரிப்பதே’ எஸ்றாவுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவு. ஆகவேதான் தங்கம், வெள்ளி, பரிசுத்த பாத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி அக்கடிதம் குறிப்பிட்டது. மேலும், ஆலயத்திலேயே உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காக கோதுமை, திராட்சரசம், எண்ணெய், உப்பு போன்றவற்றை நன்கொடையாக அளிப்பதைப் பற்றியும், ஆலயத்தில் பணிவிடை செய்பவர்கள் வரி செலுத்தவேண்டியதில்லை என்றும் அது குறிப்பிட்டது.—எஸ்றா 7:6-27.

18மூன்றாம் சம்பவம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் 20-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்போது நெகேமியா “சூசான் என்னும் அரமணையில்” ராஜாவின் பானபாத்திரக்காரராய் சேவித்துவந்தார். பாபிலோனிலிருந்து திரும்பியிருந்த மீதியானோர் எருசலேமை ஓரளவுக்கு திரும்பக் கட்டியிருந்தனர். ஆனாலும் நிலைமை அவ்வளவு திருப்திகரமாக இல்லை. ‘எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடப்பதை’ நெகேமியா அறியவந்தார். இதனால் மிகவும் கலக்கமுற்றார்; அவர் நெஞ்சில் வேதனை குடிகொண்டது. துக்கமுகமாயிருப்பது ஏன் என ராஜா விசாரித்தபோது நெகேமியா இவ்வாறு பதிலளித்தார்: “ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி”?—நெகேமியா 1:1-3; 2:1-3.

19நெகேமியாவின் பதிவு இவ்வாறு தொடர்கிறது: “அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்பவேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.” இது ராஜாவுக்கும் சரியென தோன்றியதால் நெகேமியாவின் பின்வரும் வேண்டுகோளுக்கு இணங்கினார்: “ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப்போய்ச் சேருமட்டும், [ஐப்பிராத்து] நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும், தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர் அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக.” இவை எல்லாவற்றிலும் யெகோவா உதவிபுரிந்ததை நெகேமியா ஒப்புக்கொண்டு இவ்வாறு சொன்னார்: “என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை [கடிதங்களை] எனக்குக் கட்டளையிட்டார்.”—நெகேமியா 2:4-8.

20அர்தசஷ்டாவினுடைய ஆட்சியின் 20-ஆம் வருட ஆரம்பத்தில், நிசான் மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டாலும், சரியாக ‘எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை’ பல மாதங்களுக்குப் பிற்பாடே செயல்படுத்தப்பட்டது. அதாவது நெகேமியா எருசலேமுக்கு வந்து புதுப்பிக்கும் வேலையை துவங்கியபோதுதான் இது நடந்தது. எஸ்றா நான்கு மாதங்கள் பயணம் செய்திருந்தார். ஆனால் சூசான் பாபிலோனுக்கு கிழக்கே 322 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில், அதாவது எருசலேமைவிட அதிக தொலைவில் இருந்தது. அப்படியென்றால் நெகேமியா, அர்தசஷ்டாவின் 20-ஆம் ஆண்டு முடிவடையவிருந்த சமயத்தில் அல்லது பொ.ச.மு. 455-ல் எருசலேமுக்கு வந்திருக்க வேண்டும். அப்போதுதான் முன்னறிவிக்கப்பட்ட “எழுபது வாரங்கள்” அல்லது 490 ஆண்டுகள் ஆரம்பமாயின. அவை பொ.ச. 36-ன் பிற்பகுதியில் முடிவடையும்.—பக்கம் 197-ல் உள்ள, “அர்தசஷ்டா ஆட்சிசெய்ய துவங்கியது எப்போது?” என்ற தலைப்பின்கீழ் பார்க்கவும்.

“பிரபுவாகிய மேசியா” தோன்றுகிறார்

21எருசலேம் திரும்ப கட்டி முடிக்கப்படுவதற்கு உண்மையில் எவ்வளவு வருடங்கள் எடுத்தன? இந்நகர் “இடுக்கமான காலங்களில்” புதுப்பிக்கப்படும், ஏனெனில் யூதர்களுக்குள்ளாகவே பிரச்சினைகள் இருந்தன. போதாததற்கு சமாரியர்களும் மற்றவர்களும் வேறு எதிர்த்தனர். அத்தாட்சிகளின்படி, சுமார் பொ.ச.மு. 406-க்குள்—‘ஏழு வாரத்திற்குள்,’ அல்லது 49 வருடங்களுக்குள்—போதிய அளவு வேலை முடிக்கப்பட்டது. (தானியேல் 9:25) அதன் பிறகு 62 வாரங்கள் அல்லது 434 வருடங்கள்கொண்ட காலப்பகுதி தொடரும். இந்தக் காலப்பகுதிக்குப் பிற்பாடு, வெகுகாலத்திற்கு முன் வாக்குறுதியளிக்கப்பட்ட மேசியா தோன்றுவார். பொ.ச.மு. 455-லிருந்து 483 (49 + 434) வருடங்களை சேர்த்தால் பொ.ச. 29-⁠க்கு வருகிறோம். அப்போது என்ன நடந்தது? சுவிசேஷக எழுத்தாளரான லூக்கா இவ்வாறு எழுதுகிறார்: “திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும் . . . இருந்த காலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று. . . . அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.” அச்சமயத்தில் மேசியாவை ‘ஜனங்கள் எதிர்பார்த்திருந்தனர்.’ (தி.மொ.)லூக்கா 3:1-2, 6, 15.

22வாக்குப்பண்ணப்பட்ட மேசியா யோவான் அல்ல. ஆனால் பொ.ச. 29-ன் இலையுதிர் காலத்தில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது யோவான் தான் கண்டவற்றைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன்.” (யோவான் 1:32-34) ஞானஸ்நானத்தின்போது இயேசு அபிஷேகம் செய்யப்பட்டவராக, அதாவது மேசியா அல்லது கிறிஸ்துவாக ஆனார். விரைவிலேயே, யோவானின் சீஷரான அந்திரேயா அபிஷேகம் செய்யப்பட்ட இயேசுவை சந்தித்தார். பின், “மேசியாவைக் கண்டோம்” என சீமோன் பேதுருவிடம் சொன்னார். (யோவான் 1:41) இவ்வாறு, சிறிதும் கால தாமதமின்றி, சரியாக 69 வாரங்களின் முடிவில் “பிரபுவாகிய மேசியா” தோன்றினார்!

இறுதி வார சம்பவங்கள்

2370-ஆம் வாரத்தில் என்ன நிறைவேறவிருந்தது? “மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை [“பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதை,” NW] அபிஷேகம்பண்ணுகிறதற்கும்” “எழுபது வாரங்கள்” குறிக்கப்பட்டிருந்ததாய் காபிரியேல் சொல்லியிருந்தார். இது நிறைவேற “பிரபுவாகிய மேசியா” இறக்க வேண்டியிருந்தது. எப்போது? காபிரியேல் சொன்னார்: “அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல. . . . அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்.” (தானியேல் 9:26அ, 27அ) முக்கிய காலக்கட்டம், “அந்த வாரம் பாதி சென்ற” சமயம், அதாவது, கடைசி வார-வருடத்தின் மத்திபம்.

24இயேசு கிறிஸ்துவின் ஊழியம் பொ.ச. 29-⁠ன் பிற்பகுதியில் ஆரம்பித்து, மூன்றரை வருடங்கள் நீடித்தது. முன்னறிவிக்கப்பட்டபடியே, பொ.ச. 33-⁠ன் ஆரம்பத்தில், கிறிஸ்து ‘சங்கரிக்கப்பட்டார்.’ அப்போது அவர் கழுமரத்தில் அறையப்பட்டு, தம் மானிட உயிரை மனிதவர்க்கத்திற்கு மீட்கும்பொருளாக அளித்தார். (ஏசாயா 53:8; மத்தேயு 20:28) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தாம் பலிகொடுத்த மனித உயிரின் மதிப்பை பரலோகத்தில் கடவுளிடம் சமர்ப்பித்தபோது, நியாயப்பிரமாணம் தேவைப்படுத்திய மிருக பலிகளும் காணிக்கைகளும் முடிவுக்கு வந்தன. பொ.ச. 70-ல் எருசலேம் ஆலயம் அழிக்கப்படும்வரை யூத ஆசாரியர்கள் தொடர்ந்து பலிகளை செலுத்திவந்தபோதிலும், அவற்றை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை எல்லாவற்றிற்கும் பதிலாக எல்லா காலத்திற்கும் ஒரே சிறந்த பலி செலுத்தப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: ‘[கிறிஸ்து] பாவங்களுக்காக ஒரேபலியைச் செலுத்தினார். . . . ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.’—எபிரெயர் 10:12, 14.

25பாவமும் மரணமும் தொடர்ந்து மனிதவர்க்கத்தை வாட்டுவது உண்மையே. ஆனால் இயேசு மரணத்தில் சங்கரிக்கப்பட்டு, பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டது தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது. அது ‘மீறுதலைத் தவிர்த்து, பாவங்களைத் தொலைத்து, அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணி, நித்திய நீதியை வருவித்தது.’ யூதர்களை பாவிகளென காட்டி கண்டனம் செய்த நியாயப்பிரமாண உடன்படிக்கையை கடவுள் நீக்கியிருந்தார். (ரோமர் 5:12, 19, 20; கலாத்தியர் 3:13, 19; எபேசியர் 2:15; கொலோசெயர் 2:13, 14) ஆக, மனந்திரும்புகிறவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் தண்டனை நீக்கப்படுவதற்கும் வாய்ப்பு திறக்கப்பட்டது. மேசியாவின் கிருபாதார பலியில் விசுவாசம் வைப்பவர்கள் கடவுளோடு ஒப்புரவாவது சாத்தியமாயிற்று. ‘இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்’ என்ற கடவுளது பரிசை அவர்கள் எதிர்நோக்கலாம்.—ரோமர் 3:21-26; 6:22, 23; 1 யோவான் 2:1, 2.

26ஆகவே பொ.ச. 33- ல் இயேசு கிறிஸ்து இறந்ததோடு, யெகோவா நியாயப்பிரமாண உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்தார். அப்படியென்றால் மேசியா ‘ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்துவார்’ என எப்படிச் சொல்ல முடியும்? எப்படியெனில் ஆபிரகாமிய உடன்படிக்கையை அவர் நீக்காமல் உறுதிப்படுத்தினார். 70-ஆம் வாரம் முடிவடையும்வரை, கடவுள் ஆபிரகாமின் எபிரெய வம்சத்தாருக்கு அந்த உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை அருளினார். ஆனால் பொ.ச. 36-⁠ல் அந்த “எழுபது வாரங்கள்” முடிவடைந்தபோது அப்போஸ்தலனாகிய பேதுரு, பக்திமிக்க இத்தாலியரான கொர்நேலியுவிடமும் அவரது குடும்பத்தாரிடமும் மற்ற புறஜாதியினரிடமும் பிரசங்கித்தார். அந்நாள் முதற்கொண்டு நற்செய்தி எல்லா தேசத்து மக்களுக்கும் அறிவிக்கப்பட துவங்கியது.—அப்போஸ்தலர் 3:25, 26; 10:1-48; கலாத்தியர் 3:8, 9, 14.

27‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது’ அபிஷேகம் செய்யப்படுவதையும் அத்தீர்க்கதரிசனம் முன்னறிவித்தது. இது எருசலேம் ஆலயத்தின் உட்புற அறையான மகா பரிசுத்த ஸ்தலம் அபிஷேகம் செய்யப்படுவதைக் குறிக்கவில்லை. ‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது’ என்ற பதம் கடவுளது பரலோக ஸ்தலத்தைக் குறிக்கிறது. அங்கே இயேசு தமது மானிட பலியின் மதிப்பை தமது தந்தையின்முன் செலுத்தினார். அந்தப் பலி, இந்தப் பரலோக ஸ்தலத்தை அபிஷேகம் செய்தது, அதாவது பிரத்தியேகமான ஒன்றாய் ஒதுக்கிவைத்தது. பூமியிலிருந்த ஆசரிப்புக் கூடாரத்திலும் பிற்பாடு ஆலயத்திலும் இருந்த மகா பரிசுத்த ஸ்தலம் இதையே பிரதிநிதித்துவம் செய்தது.—எபிரெயர் 9:11, 12.

கடவுள் ஊர்ஜிதப்படுத்திய தீர்க்கதரிசனம்

28காபிரியேல் தூதன் மேசியாவைக் குறித்து முன்னறிவிக்கையில், ‘தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதை’ பற்றி குறிப்பிட்டார். அப்படியென்றால், மேசியாவைப் பற்றி முன்னறிவிக்கப்பட்ட அனைத்தும்—தமது பலியின் மூலம் அவர் சாதித்த காரியங்கள், உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்குச் சென்றது, 70-ஆம் வாரத்தில் நடைபெற்ற மற்ற சம்பவங்கள் ஆகிய அனைத்தும்—தெய்வீக அங்கீகாரம் என்ற முத்திரையிடப்படும், உண்மையென நிரூபிக்கப்படும், நம்பத்தகுந்தவையாயும் இருக்கும். தரிசனம் முத்திரிக்கப்படுவதன் அர்த்தம், அது மேசியாவுக்கு மட்டுமே பொருந்தும். அது அவரிலும் அவர் செய்யும் கடவுளது சேவையிலும் மட்டுமே நிறைவேறும். முன்னறிவிக்கப்பட்ட மேசியாவின் விஷயத்திலேயே தரிசனத்தின் சரியான அர்த்தத்தை தெரிந்துகொள்வோம். வேறெதுவும் அதன் அர்த்தத்தை வெளிப்படுத்தாது.

29எருசலேம் திரும்பக் கட்டப்படும் என காபிரியேல் முன்னரே சொல்லியிருந்தார். இப்போது திரும்பக் கட்டப்பட்ட அந்நகரமும் அதன் ஆலயமும் அழியவிருப்பதை இவ்வாறு முன்னறிவிக்கிறார்: “நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. . . . அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான்; நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும்.” (தானியேல் 9:26ஆ, 27ஆ) இந்நாசம் ‘எழுபது வாரங்களுக்குப்’ பிற்பாடே நடக்கும் என்றாலும், அந்த இறுதி ‘வாரத்தின்போது’ நடந்தவற்றின் நேரடி விளைவாக இருக்கும். அவ்வாரத்தில் யூதர்கள் கிறிஸ்துவை மறுதலித்து அவரைக் கொன்றார்கள்.—மத்தேயு 23:37, 38.

30பொ.ச. 66-⁠ல் சிரியாவின் ஆளுநரான செஸ்டியஸ் கேலஸின் தலைமையின்கீழ் ரோம சேனைகள் எருசலேமை சூழ்ந்தன என்று சரித்திர பதிவுகள் காட்டுகின்றன. யூதர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியபோதிலும், ரோம படைகள் தங்கள் விக்கிரகாராதனைக்குரிய கொடிகளை அல்லது சின்னங்களை எடுத்துக்கொண்டு நகருக்குள் நுழைந்து வடக்கேயிருந்த ஆலய சுவரின்கீழ் சுரங்கம்போல் தோண்ட ஆரம்பித்தன. அங்கே நின்ற அவை, முழுமையான பாழ்க்கடிப்பை உண்டாக்கும் ‘அருவருப்பான’ காரியமாயின. (மத்தேயு 24:15, 16) தளபதி டைட்டஸின் தலைமையில் ரோமர்கள் “ஜலப்பிரவாகம்போல” திரண்டுவந்து இந்நகரையும் அதன் ஆலயத்தையும் பொ.ச. 70-⁠ல் நாசமாக்கினார்கள். எதுவும் அவர்களை தடுக்க முடியவில்லை. ஏனெனில் இது கடவுளால் தீர்மானிக்கப்பட்டது அல்லது “நியமிக்கப்பட்டது.” எதையும் காலத்தோடு செய்யும் யெகோவா, தாம் சொல் தவறாதவரென மீண்டும் நிரூபித்துவிட்டார்!

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• எருசலேமின் 70 வருட பாழ்க்கடிப்பு முடிவுக்கு வரவிருந்தபோது தானியேல் யெகோவாவிடம் என்ன வேண்டுதல் செய்தார்?

• “எழுபது வாரங்கள்” எவ்வளவு காலம் நீடித்தன, எப்போது ஆரம்பித்து முடிவடைந்தன?

• “பிரபுவாகிய மேசியா” எப்போது தோன்றினார், எந்த முக்கிய கட்டத்தில் ‘சங்கரிக்கப்பட்டார்’?

• ‘ஒரு வாரமளவும் உறுதிப்படுத்தப்பட்ட உடன்படிக்கை’ எது?

• ‘எழுபது வாரங்களுக்குப்’ பிறகு என்ன நடந்தது?

[கேள்விகள்]

1. யெகோவா எதையும் காலத்தோடு செய்பவர் என்பதால், எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்?

2, 3. எந்தத் தீர்க்கதரிசனத்தை தானியேல் கவனமாய் சிந்தித்தார், அச்சமயத்தில் எந்த சாம்ராஜ்யம் பாபிலோனை ஆண்டுவந்தது?

4. (அ) கடவுளின் தயவால் விடுதலைபெற என்ன தேவைப்பட்டது? (ஆ) யெகோவாவை அணுக தானியேல் எவ்வாறு தன்னை தயார்படுத்திக்கொண்டார்?

5. யூதர்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவார்கள் என்று தானியேல் ஏன் உறுதியாய் நம்பினார்?

6. தானியேல் ஜெபத்தில் எதை ஒப்புக்கொண்டார்?

7. யூதர்கள் நாடுகடத்தப்படும்படி யெகோவா அனுமதித்தது நீதியே என எப்படிச் சொல்லலாம்?

8. எதை முன்னிட்டு தானியேல் யெகோவாவிடம் வேண்டுதல் செய்தார்?

9. (அ) எந்த வேண்டுதல்களோடு தானியேல் தன் ஜெபத்தை முடிக்கிறார்? (ஆ) தானியேலை வாட்டியது எது, ஆனால் அவர் எவ்வாறு கடவுளது பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்தார்?

10. (அ ) தானியேலிடம் யார் அனுப்பப்பட்டது, எதற்காக? (ஆ) காபிரியேலை ‘மனிதன்’ என தானியேல் அழைத்தது ஏன்?

11, 12. (அ) பாபிலோனில் பலிபீடமும் ஆலயமும் இல்லாதபோதிலும், பக்திமிக்க யூதர்கள் இந்த நியாயப்பிரமாண ஏற்பாடுகளுக்கு எவ்வாறு மரியாதை காட்டினார்கள்? (ஆ) தானியேல் “மிகவும் பிரியமானவன்” என ஏன் அழைக்கப்பட்டார்?

13, 14. (அ) காபிரியேல் என்ன முக்கிய விஷயத்தை தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார்? (ஆ) “எழுபது வாரங்கள்” எவ்வளவு காலம் நீடித்தன, நமக்கு எப்படித் தெரியும்?

15. ‘எழுபது வாரங்கள்’ எந்த மூன்று காலப்பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன, அவை எப்போது ஆரம்பமாகும்?

16. கோரேசு எந்த நோக்கத்திற்காக யூதர்களை அவர்களது தாயகத்திற்கு அனுப்பியதாய் அவரது ஆணை காட்டுகிறது?

17. எஸ்றாவுக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தின்படி, அவர் எருசலேமுக்கு செல்ல காரணமென்ன?

18. எந்தச் செய்தி நெகேமியாவை கலக்கமடையச் செய்தது, ராஜாவான அர்தசஷ்டா அதை எவ்வாறு தெரிந்துகொண்டார்?

19. (அ) ராஜா அர்தசஷ்டா விசாரித்தபோது, நெகேமியா முதலில் என்ன செய்தார்? (ஆ) நெகேமியா என்ன வேண்டுதல் செய்தார், இதில் கடவுளது பங்கை எவ்வாறு ஒப்புக்கொண்டார்?

20. (அ) ‘எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான’ கட்டளை எப்போது செயல்படுத்தப்பட்டது? (ஆ) “எழுபது வாரங்கள்” எப்போது ஆரம்பித்து, எப்போது முடிவடைந்தன? (இ) ‘எழுபது வாரங்கள்’ ஆரம்பமாகி முடிவடைந்த தேதிகள் திருத்தமானவை என்பதற்கு என்ன அத்தாட்சி உண்டு?

21. (அ) முதல் ‘ஏழு வாரங்களில்’ என்ன நிறைவேறவிருந்தது, எந்த சூழ்நிலைகளின் மத்தியிலும்? (ஆ) மேசியா எந்த வருடத்தில் தோன்றவிருந்தார், அச்சமயத்தில் என்ன நடந்ததாய் லூக்காவின் சுவிசேஷ பதிவு சொல்கிறது?

22. இயேசு எப்போது, எப்படி முன்னறிவிக்கப்பட்ட மேசியாவானார்?

23. “பிரபுவாகிய மேசியா” ஏன் இறக்க வேண்டியிருந்தது, இது எப்போது நடக்கவிருந்தது?

24, 25. (அ) முன்னறிவிக்கப்பட்டபடியே, கிறிஸ்து எப்போது இறந்தார், அவர் இறந்து உயிர்த்தெழுப்பப்பட்டது எதை முடிவுக்குக் கொண்டுவந்தது? (ஆ) இயேசுவின் மரணம் என்ன வாய்ப்பை திறந்துவைத்தது?

26. (அ) நியாயப்பிரமாண உடன்படிக்கை நீக்கப்பட்டாலும், வேறெந்த உடன்படிக்கை ‘ஒரு வாரமளவும் உறுதிப்படுத்தப்பட்டது’? (ஆ) 70-ஆம் வாரத்தின் முடிவில் என்ன நடந்தது?

27. ‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமான’ எது அபிஷேகம் செய்யப்பட்டது, எப்படி?

28. ‘தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறது’ எதை அர்த்தப்படுத்தியது?

29. திரும்பக் கட்டப்பட்ட எருசலேமுக்கு என்ன நடக்கவிருந்தது, ஏன்?

30. சரித்திர பதிவு காண்பிக்கிறபடி, எதையும் காலத்தோடு செய்பவரின் தீர்மானம் எவ்வாறு நிறைவேறியது?

[பக்கம் 197-ன் பெட்டி/படம்]

அர்தசஷ்டா ஆட்சிசெய்ய துவங்கியது எப்போது?

பெர்சிய ராஜாவான அர்தசஷ்டா ஆட்சிசெய்ய துவங்கிய வருடத்தைக் குறித்து சரித்திராசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. அவர் பொ.ச.மு. 465-⁠ல் அரியணை ஏறியதாக சிலர் சொல்கின்றனர். ஏனெனில் அவரது தந்தை சஷ்டா, பொ.ச.மு. 486-⁠ல் ஆளுகையைத் துவங்கி, 21-ஆம் ஆண்டில் இறந்தார். இருந்தாலும் அர்தசஷ்டா பொ.ச.மு. 475-⁠ல் அரியணை ஏறி, பொ.ச.மு. 474-⁠ல் ஆளுகையை துவங்கினார் என்பதற்கு அத்தாட்சி உண்டு.

பூர்வ பெர்சிய தலைநகரான பர்செபலஸில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும் சிற்பங்களும், சஷ்டாவும் அவரது தந்தை முதலாம் தரியுவும் உடன் அரசர்களாயிருந்ததைக் காட்டுகின்றன. இவர்கள் ஒன்றாக சேர்ந்து 10 வருடங்களும், பொ.ச.மு. 486-⁠ல் தரியு இறந்தபின் சஷ்டா மட்டும் மற்றொரு 11 வருடங்களும் ஆட்சி செய்திருந்தால், அர்தசஷ்டாவின் ஆட்சி துவங்கியது பொ.ச.மு. 474-ஆக இருக்கும்.

இப்போது இரண்டாவது அத்தாட்சிக்கு வருவோம். பொ.ச.மு. 480-⁠ல் சஷ்டாவின் படைகளை வீழ்த்திய ஆதன்ஸ் தளபதி தெமிஸ்டோகில்ஸ் சம்பந்தப்பட்டது இது. இவர் பிற்பாடு கிரேக்கர்களின் ஆதரவை இழந்து, தேச துரோகியென குற்றம்சாட்டப்பட்டார். தெமிஸ்டோகில்ஸ் தப்பியோடி பெர்சிய அரசவையில் அடைக்கலம் நாடினார், அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கிரேக்க சரித்திராசிரியரான தூசைடைடிஸின்படி, இது நிகழ்ந்தபோது அர்தசஷ்டா “அண்மையில்தான் அரியணை ஏறியிருந்தார்.” பொ.ச.மு. 471-⁠ல் தெமிஸ்டோகில்ஸ் இறந்ததாக கிரேக்க சரித்திராசிரியரான டையடோரஸ் சிகலஸ் சொல்கிறார். ராஜா அர்தசஷ்டாவை முறைப்படி சந்திப்பதற்கு முன் பெர்சிய மொழியைக் கற்றுக்கொள்ள தெமிஸ்டோகில்ஸ் ஒரு வருடம் அவகாசம் கேட்டிருந்ததால், அவர் பொ.ச.மு. 473-⁠ல் ஆசியா மைனருக்கு வந்திருக்க வேண்டும். இத்தேதியை ஜெரோமின் க்ரானிக்கல் ஆஃப் யூசிபியஸ் புத்தகம் ஆதரிக்கிறது. பொ.ச.மு. 473-⁠ல் தெமிஸ்டோகில்ஸ் ஆசியாவிற்கு வந்தபோது அர்தசஷ்டா “அண்மையில்தான் அரியணை ஏறியிருந்தார்” என்பதால், அவரது ஆட்சி பொ.ச.மு. 474-⁠ல் ஆரம்பமானதென மற்ற புத்தகங்களைப் போலவே க்ரிஸ்டாலஜி ஆஃப் தி ஓல்டு டெஸ்டமென்ட் என்ற புத்தகமும் குறிப்பிடுகிறது. இதன் எழுத்தாளர் ஜெர்மானிய அறிஞரான எர்னஸ்ட் ஹெங்ஸ்டன்பெர்க் ஆவார். “கிறிஸ்துவுக்கு முன் 455-ஆம் ஆண்டே அர்தசஷ்டாவின் இருபதாம் ஆண்டு” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

[படம்]

தெமிஸ்டோகில்ஸின் உருவச்சிலை

[பக்கம் 188,189-ன் வரைப்படம்/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

“எழுபது வாரங்கள்”

பொ.ச.மு. 455 பொ.ச. 406 29 33 பொ.ச. 36

‘எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் மேசியா தோன்றுகிறார் மேசியா கட்டுகிறதற்கான கட்டளை’ சங்கரிக்கப் படுகிறார்

திரும்பக் கட்டப்பட்ட எருசலேம் எழுபது வாரங்களின் முடிவு

வாரங்கள்

7 வாரங்கள் 62 வாரங்கள் 1 வாரம்

49 வருடங்கள் 434 வருடங்கள் 7 வருடங்கள்

[பக்கம் 180-ன் முழுபடம்]

[பக்கம் 193-ன் முழுபடம்]