Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

20-ஆம் நூற்றாண்டில் அந்த இரு ராஜாக்கள்

20-ஆம் நூற்றாண்டில் அந்த இரு ராஜாக்கள்

அதிகாரம் பதினைந்து

20-ஆம் நூற்றாண்டில் அந்த இரு ராஜாக்கள்

“பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பா, வரலாறு காணாத துடிப்போடு விளங்கியது” என எழுதுகிறார் சரித்திராசிரியர் நார்மன் டேவிஸ். “ஐரோப்பா செல்வாக்கென்னும் பாதையில் புதிய சரித்திரம் படைத்தது: தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில், கலாச்சாரத்தில், சர்வதேச அளவிலான வெளியுறவு விவகாரங்களில் பெரும் செல்வாக்குபெற்று மிளிர்ந்தது.” “ஐரோப்பா வெற்றி நடைபோட்ட ‘செல்வாக்குமிக்க நூற்றாண்டில்’ ” முன்னிலை வகித்தவை, “முதலில் கிரேட் பிரிட்டன் . . . பிற்பாடு ஜெர்மனி” என்றும் டேவிஸ் சொல்கிறார்.

“தீமை செய்ய நினைக்கும்”

219-ஆம் நூற்றாண்டின் முடிவில், ஜெர்மானிய சாம்ராஜ்யம் ‘வடதிசை ராஜாவாகவும்,’ பிரிட்டன் ‘தென்றிசை ராஜாவாகவும்’ திகழ்ந்தன. (தானியேல் 11:14, 15) யெகோவாவின் தூதர் சொன்னார்: “இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீங்கு செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுவார்கள்; ஆனால் அது வாய்ப்பதில்லை; ஏனெனில், முடிவு குறிக்கப்பட்ட காலத்தில் வரவிருக்கின்றது.”—தானியேல் 11:⁠27, NW.

3ஜனவரி 18, 1871-⁠ல் முதலாம் வில்ஹெல்ம், ஜெர்மன் ரைக் அல்லது பேரரசின் முதல் மன்னரானார். அவர் ஓட்டோ வான் பிஸ்மார்க்கை முக்கிய அமைச்சராக நியமித்தார். புதிய பேரரசை மேம்படுத்துவதில் குறியாக இருந்த பிஸ்மார்க், மற்ற தேசங்களோடு சண்டையிடுவதைத் தவிர்த்தார். மேலும் ஆஸ்திரிய-ஹங்கேரியோடும் இத்தாலியோடும் ஒப்பந்தம் செய்தார். இது முக்கூட்டு ஒப்பந்தம் (Triple Alliance) என அழைக்கப்பட்டது. ஆனால் விரைவில் இந்தப் புதிய வடதிசை ராஜாவின் லட்சியங்களுக்கு முட்டுக்கட்டையாக நின்றான் தென்றிசை ராஜா.

4முதலாம் வில்ஹெல்மும் அவரது வாரிசான மூன்றாம் ஃப்ரெட்ரிக்கும் 1888-⁠ல் இறந்தபோது, 29 வயதான இரண்டாம் வில்ஹெல்ம் அரியணை ஏறினார். இரண்டாம் வில்ஹெல்ம் அல்லது கெய்சர் வில்ஹெல்ம், பிஸ்மார்க்கை ராஜினாமா செய்ய பலவந்தப்படுத்தி, ஜெர்மானிய செல்வாக்கை உலகெங்கும் பரப்பும் திட்டத்தை மேற்கொண்டார். “இரண்டாம் வில்ஹெல்மின் ஆட்சியில், [ஜெர்மனிக்கு] செருக்கும் மூர்க்கமும் முளைத்தன” என்கிறார் ஒரு சரித்திராசிரியர்.

5ரஷ்ய சார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ், ஆகஸ்ட் 24, 1898-⁠ல் நெதர்லாந்தின் தி ஹாக் நகரில் சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோது, உலகெங்கும் பதற்ற நிலை நிலவியது. இக்கூட்டமும் அதற்கடுத்து 1907-⁠ல் நடைபெற்ற கூட்டமும், தி ஹாக் நகரில் நிரந்தர நடுவர் மன்றம் (Permanent Court of Arbitration) நிறுவப்பட அடிகோலின. இந்த மன்றத்தில் அங்கமானதன் மூலம் ஜெர்மானிய பேரரசும் கிரேட் பிரிட்டனும் சமாதானத்தை நாடுவதுபோல் நடித்தன. அவை ‘ஒரே பந்தியில்’ அமர்ந்து, சிநேகத்தோடு இருப்பதாய் காட்டிக்கொண்டன. ஆனால் ‘அவற்றின் இருதயம் தீமை செய்ய நினைத்தது.’ ‘ஒரே பந்தியிலிருந்து பொய்பேசும்’ அரசியல் தந்திரம் உண்மையான சமாதானத்தை உண்டாக்கவில்லை. அவற்றின் அரசியல், வர்த்தக, ராணுவ லட்சியங்கள் எதுவுமே ‘வாய்க்கவில்லை.’ ஏனெனில் இந்த இரு ராஜாக்களின் முடிவு யெகோவாவின் ‘குறிக்கப்பட்ட காலத்தில் வரவிருக்கின்றது.’

“பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக”

6“அவன் [வடதிசை ராஜா] மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, [“திறமையாய் செயல்பட்டு,” NW] தன் தேசத்துக்குத் திரும்பிப் போவான்.”​—⁠தானியேல் 11:⁠28.

7கெய்சர் வில்ஹெல்ம் “தேசத்துக்கு” அல்லது பூர்வ வடதிசை ராஜாவின் பூமிக்குரிய பண்புக்கு திரும்பினார். எப்படி? ஜெர்மானிய பேரரசை விரிவாக்கி அதன் செல்வாக்கை பெருக்க ஒரு ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதன் மூலமே. ஆப்பிரிக்காவிலும் மற்ற இடங்களிலும் குடியேற்றங்களை ஸ்தாபிக்கும் திட்டத்தை இரண்டாம் வில்ஹெல்ம் வகுத்தார். பிரிட்டிஷ் கப்பற்படையின் முதலிடத்தைத் தட்டிச்செல்ல, அவர் வலிமைமிக்க கப்பற்படை ஒன்றை உருவாக்க ஆரம்பித்தார். “இருந்த இடம் தெரியாதிருந்த ஜெர்மன் கப்பற்படை, பத்தாண்டுகளில் பிரிட்டனுக்கு அடுத்த இடத்தை பிடித்தது” என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள, பிரிட்டன் அதன் கப்பற்படையை பலப்படுத்த வேண்டியிருந்தது. பிரிட்டன் பிரான்ஸோடும் ரஷ்யாவோடும் நேச இணைப்பு (entente cordiale) என்ற நட்புறவு உடன்படிக்கை செய்தது. இதிலிருந்து உருவானதே முக்கூட்டு இணைப்பு (Triple Entente). இப்போது ஐரோப்பாவின் ராணுவம் இரண்டாக பிளவுபட்டது​—⁠ஒருபக்கம் முக்கூட்டு ஒப்பந்த நாடுகள், மறுபக்கம் முக்கூட்டு இணைப்பு நாடுகள்.

8ஜெர்மானிய பேரரசு ஆக்கிரமிப்புக் கொள்கையைப் பின்பற்றியது. இதனால் ஜெர்மனிக்கு ‘மகா சம்பத்து’ உண்டானது; ஏனெனில் அதுவே முக்கூட்டு ஒப்பந்தத்தின் முக்கிய நாடு. ஆஸ்திரிய-ஹங்கேரியும் இத்தாலியும் ரோமன் கத்தோலிக்க நாடுகள். ஆகவே முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு போப்பின் ஆதரவும் இருந்தது. ஆனால் தென்றிசை ராஜாவிற்கோ இந்த ஆதரவு கிட்டவில்லை. ஏனெனில் முக்கூட்டு இணைப்பு நாடுகள் பெரும்பாலும் கத்தோலிக்க நாடுகள் அல்ல.

9யெகோவாவின் மக்களைப் பற்றியென்ன? “புறஜாதியாரின் காலம்” 1914-⁠ல் முடிவடையும் என அவர்கள் வெகு காலத்திற்கு முன்பே அறிவித்திருந்தார்கள்.  a (லூக்கா 21:24) அவ்வருடத்தில் கடவுளது ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. தாவீது ராஜாவின் வம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவிடம் அது ஒப்படைக்கப்பட்டது. (2 சாமுவேல் 7:12-16; லூக்கா 22:28, 29) மார்ச் 1880-⁠ம் ஆண்டிலிருந்தே காவற்கோபுர பத்திரிகை, கடவுளது ராஜ்ய ஆட்சியை ‘புறஜாதிகளின் காலத்தின்’ அல்லது ‘தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலத்தின்’ (NW) முடிவோடு சம்பந்தப்படுத்திப் பேசியது. ஆனால் ஜெர்மானிய வடதிசை ராஜாவின் இருதயம் ‘பரிசுத்த ராஜ்ய உடன்படிக்கைக்கு விரோதமாய்’ இருந்தது. ராஜ்ய ஆட்சியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, கெய்சர் வில்ஹெல்ம், உலகையே ஆளுவதற்கு திட்டங்களை வகுப்பதன் மூலம் ‘திறமையாய் செயல்பட்டார்.’ இருந்தாலும் இது முதல் உலகப் போருக்கு வித்திட்டது.

போரினால் ‘மனநோவடைந்த’ ராஜா

10“குறிக்கப்பட்ட காலத்தில் அவன் [வடதிசை ராஜா] மறுபடியும் தென்னாட்டுக்கு வருவான்; ஆனால் இம்முறை முன்புபோல் இராது” என தூதன் முன்னறிவித்தார். (தானியேல் 11:29, பொ.மொ.) உலகில் புறஜாதியாரின் ஆதிக்கம் முடிவடைவதற்கான கடவுளது ‘குறித்தகாலம்’ 1914-⁠ல் வந்தது. அப்போது அவர் பரலோக ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அவ்வருடம் ஜூன் 28-⁠ம் தேதியன்று, ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸிஸ் ஃபெர்டினான்டும் அவர் மனைவியும் பாஸ்னியாவிலுள்ள சரஜெவோவில் செர்பிய தீவிரவாதி ஒருவனால் கொல்லப்பட்டார்கள். முதல் உலகப் போர் கொளுந்துவிட்டு எரியக் காரணமான தீப்பொறி இதுவே.

11செர்பியாவை பழிதீர்க்குமாறு ஆஸ்திரிய-ஹங்கேரியைத் தூண்டினார் கெய்சர் வில்ஹெல்ம். ஜெர்மனியின் ஆதரவு உறுதியளிக்கப்பட்டதால், ஆஸ்திரிய-ஹங்கேரி ஜூலை 28, 1914-⁠ல் செர்பியா மீது போர் அறிவிப்பு செய்தது. ஆனால் ரஷ்யா செர்பியாவின் உதவிக்கு வந்தது. ஜெர்மனி ரஷ்யாமீது போர் அறிவிப்பு செய்தபோது, பிரான்ஸ் (முக்கூட்டு இணைப்பு நாடுகளில் ஒன்று) ரஷ்யாவிற்கு ஆதரவளித்தது. அதன்பின் ஜெர்மனி பிரான்ஸ்மீது போர் தொடுத்தது. பாரிஸை சுலபமாய் கைப்பற்ற ஜெர்மனி பெல்ஜியம் மீது படையெடுத்தது. ஆனால் பெல்ஜியம் நடுநிலைமையைக் கடைப்பிடிக்கும் நாடு என்பது பிரிட்டன் எடுத்திருந்த தீர்மானம். ஆகவே ஜெர்மனிமீது பிரிட்டன் போர் தொடுத்தது. மற்ற நாடுகளும் சேர்ந்துகொண்டன; இத்தாலி கட்சி மாறியது. போரின்போது பிரிட்டன், பூர்வத்தில் தென்றிசை ராஜாவின் தேசமாக திகழ்ந்த எகிப்தை தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தது. இதற்குக் காரணம், சூயஸ் கால்வாயின் வழியை அடைப்பதன் மூலம் வடதிசை ராஜா எகிப்தின் மீது படையெடுத்துவிடுவதைத் தடுக்கவே.

12“நேசநாடுகள் அளவிலும் பலத்திலும் மேலோங்கியபோதும், ஜெர்மனியே போரில் வெற்றியடையப் போவதாய் தோன்றியது” என த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. இந்த இரு ராஜாக்களுக்கிடையே நடந்த முந்தைய போர்களில் வடதிசை ராஜாவாக ரோம சாம்ராஜ்யம் எப்போதுமே வெற்றிகளை அள்ளிச்சென்றது. ஆனால் இம்முறையோ நிலைமை ‘முன்புபோல் இல்லை.’ வடதிசை ராஜா போரில் தோல்வியைத் தழுவினார். இதற்கான காரணத்தை தூதன் சொன்னார்: ‘அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனநோவடைவான்.’ (தானியேல் 11:30அ) “கித்தீமின் கப்பல்கள்” என்பது என்ன?

13சீப்புரு, தானியேலின் காலத்தில் கித்தீம் என அழைக்கப்பட்டது. முதல் உலகப் போரின் ஆரம்பத்தில் சீப்புரு பிரிட்டனின் கைவசமானது. மேலும், கித்தீம் என்பது “பொதுவாக மேற்கு பகுதிகளை எல்லாம் உள்ளடக்கியது. ஆனால் குறிப்பாக மேற்கு கடலோரப் பகுதிகளைக் குறித்தது” என த சான்டர்வான் பிக்டோரியல் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் த பைபிள் சொல்கிறது. நியூ இன்டர்நேஷனல் வர்ஷன், “கித்தீமின் கப்பல்கள்” என்பதை “மேற்கு கரையோர பட்டணங்களின் கப்பல்கள்” என குறிப்பிடுகிறது. முதல் உலகப் போரின்போது, கித்தீமின் கப்பல்கள் முக்கியமாக ஐரோப்பாவின் மேற்குக் கரையோரமாய் இருந்த பிரிட்டனின் கப்பல்களையே குறித்தன.

14போர் மெதுவாய் நடந்துகொண்டிருக்கையில், பிரிட்டிஷ் கப்பற்படை மேன்மேலும் கித்தீமின் கப்பல்களால் வலுப்பெற்றது. மே 7, 1915-⁠ல், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலான U-20 அயர்லாந்தின் தென்கரையோரத்தில் லூசிதானியா என்ற பிரயாணிகளின் கப்பலை மூழ்கடித்தது. உயிரிழந்தவர்களில் 128 பேர் அமெரிக்கர்கள். பிற்பாடு, ஜெர்மனி அட்லாண்டிக்கில் நீர்மூழ்கிக் கப்பல் போரை தொடர்ந்தது. இதன் விளைவாய், ஏப்ரல் 6, 1917 அன்று, ஐ.மா. ஜனாதிபதி உட்ரோ வில்சன் ஜெர்மனிமீது போர் தொடுத்தார். ஐ.மா.-வின் போர்க்கப்பல்களாலும் படைகளாலும் பலப்படுத்தப்பட்ட தென்றிசை ராஜா​—இப்போது, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு​—⁠தன் எதிரி ராஜாவோடு முழுமூச்சாய் போரில் இறங்கினான்.

15ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் தாக்குதலால் வடதிசை ராஜா ‘மனநோவடைந்துபோய்,’ நவம்பர் 1918-⁠ல் தோல்வியை ஒப்புக்கொண்டார். இரண்டாம் வில்ஹெல்ம் நெதர்லாந்திற்குத் தப்பியோடினார்; ஜெர்மனியும் குடியரசானது. ஆனால் வடதிசை ராஜாவின் சரித்திரம் அத்தோடு முடிவடைந்துவிடவில்லை.

ராஜா ‘திறமையாய்’ செயல்படுகிறார்

16 “[வடதிசை ராஜா] திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் குரோதங்கொண்டு, திறமையாய் செயல்பட்டு, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்கள்மேல் கவனத்தைத் திருப்புவான்.” (தானியேல் 11:30ஆ, NW) இவ்வாறு தூதன் முன்னறிவித்தபடியே அனைத்தும் நடந்தேறின.

171918-⁠ல் போர் முடிந்த பிறகு, வெற்றிபெற்ற தோழமை நாடுகள் ஜெர்மனிமீது நிபந்தனைக்குரிய சமாதான ஒப்பந்தத்தை திணித்தன. இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளால் ஜெர்மானியர் மிகவும் நெருக்கப்பட்டனர். இப்புதிய குடியரசு, பிறந்ததிலிருந்தே பலவீனமாயிருந்தது. சில வருடங்களுக்கு ஜெர்மனி பயங்கர கஷ்டத்தில் உழன்றது. மாபெரும் பொருளாதார மந்தநிலையால், கடைசியில் அறுபது லட்சம்பேர் வேலையிழந்தனர். 1930-களின் ஆரம்பத்திலிருந்த நிலைமைகள், அடால்ஃப் ஹிட்லர் தோன்றுவதற்கு மிகச் சாதகமாயின. அவர் ஜனவரி 1933-⁠ல் முக்கிய அமைச்சர் ஆனார். அதற்கடுத்த வருடம் மூன்றாம் ரைக் என நாசிக்கள் அழைத்த பேரரசின் தலைவரானார்.  b

18அதிகாரத்திற்கு வந்தவுடனேயே ஹிட்லர் ‘பரிசுத்த உடன்படிக்கைக்கு’ விரோதமாய் கடும் தாக்குதலைத் தொடங்கினார். இது இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களை அடையாளப்படுத்துகிறது. (மத்தேயு 25:40) உத்தம கிறிஸ்தவர்களுக்கு எதிராக இவ்வாறு அவர் ‘திறமையாய்’ செயல்பட்டு, அவர்களில் அநேகரை கொடூரமாய் துன்புறுத்தினார். ஹிட்லர் பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றிகளைக் குவித்து, இந்தத் துறைகளிலும் ‘திறமையாய்’ செயல்பட்டார். சில வருடங்களுக்குள், ஜெர்மனியை உலக மேடையில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக்கினார்.

19ஹிட்லர் ‘பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்கள்மேல் கவனத்தைத் திருப்பினார்.’ இவர்கள் யார்? கிறிஸ்தவமண்டல தலைவர்களே. கடவுள் தங்களோடு உடன்படிக்கை செய்திருப்பதாக சொல்லிக்கொண்டாலும், இயேசு கிறிஸ்துவின் சீஷர்களென நிரூபிக்காதவர்கள்தான் இவர்கள். ‘பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களின்’ ஆதரவைப் பெறுவதில் ஹிட்லர் வெற்றிகண்டார். உதாரணத்திற்கு ரோமின் போப்போடு அவர் ஓர் உடன்படிக்கை செய்தார். மேலும் 1935-⁠ல், சர்ச் விவகாரங்களுக்கான ஓர் அமைச்சகத்தை நிறுவினார். இவான்ஜலிக்கல் சர்ச்சுகளை அரசு அதிகாரத்தின்கீழ் கொண்டு வருவதே அவரது குறிக்கோள்களில் ஒன்று.

ராஜாவினிடத்திலிருந்து “கரங்கள்” புறப்படுகின்றன

20இவ்வாறு தூதன் சரியாக முன்னறிவித்தபடியே, ஹிட்லர் விரைவில் போர் தொடுத்தார்: ‘அவனிடத்திலிருந்து புறப்படும் கரங்கள் எழும்பும்; அவை அரணான பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்தக்குலைச்சலாக்கி அன்றாட பலியை நீக்கும்.’ (தானியேல் 11:31அ, NW) இந்தக் “கரங்கள்,” இரண்டாம் உலகப் போரின்போது தென்றிசை ராஜாவை எதிர்த்து போரிட வடதிசை ராஜா பயன்படுத்திய ராணுவப் படைகளாகும். செப்டம்பர் 1, 1939 அன்று நாசிக்களின் “கரங்கள்” போலந்து மீது படையெடுத்தன. இரண்டு நாட்களுக்குப் பிறகு, போலந்துக்கு உதவியாக பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனியைத் தாக்கின. இப்படி ஆரம்பமானதுதான் இரண்டாம் உலகப் போர். போலந்து விரைவில் வீழ்ந்தது. அதன்பின் ஜெர்மானிய படைகள் டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், பிரான்ஸ் ஆகியவற்றை ஆக்கிரமித்தன. “1941-⁠ன் முடிவில் நாசி ஜெர்மனி அக்கண்டத்தையே ஆண்டது” என த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது.

21ஜெர்மனியும் சோவியத் யூனியனும் நட்பு, ஒத்துழைப்பு, எல்லை வரையறை ஆகியவற்றிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தபோதும், ஹிட்லர் ஜூன் 22, 1941 அன்று சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். இதனால் சோவியத் யூனியன் பிரிட்டனின் பக்கம் சேர்ந்தது. ஜெர்மானிய படைகள் பிரமிக்கவைக்கும் அளவுக்கு, எதிர்பார்த்ததற்கும் முன்னதாகவே திரண்டு வந்தபோதும் சோவியத் படை பெரும் பலத்தோடு எதிர்த்து நின்றது. டிசம்பர் 6, 1941 அன்று ஜெர்மானிய படை மாஸ்கோவில் தோல்விகண்டது. அதற்கடுத்த நாள், ஜெர்மனியோடு கூட்டுசேர்ந்திருந்த ஜப்பான் ஹவாயிலுள்ள பேர்ல் ஹார்பர்மீது குண்டுவீசியது. இதைக் கேள்விப்பட்ட ஹிட்லர், “இப்போது நமக்கு போரில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை” என தன் அதிகாரிகளிடம் சொன்னார். டிசம்பர் 11-ஆம் தேதி அவர் ஐக்கிய மாகாணங்கள்மீது கண்மூடித்தனமாய் போர் அறிவிப்பு செய்தார். சோவியத் யூனியன், ஐக்கிய மாகாணங்கள் ஆகிய இரண்டின் பலத்தையும் அவர் குறைவாக மதிப்பிட்டுவிட்டார். கிழக்கிலிருந்து சோவியத் படை தாக்க, மேற்கேயிருந்து பிரிட்டனும் அமெரிக்காவும் படையெடுத்து வர, ஹிட்லரின் நிலை விரைவில் தலைகீழானது. ஜெர்மானிய படை, நாடுகளையெல்லாம் ஒவ்வொன்றாக இழக்க ஆரம்பித்தது. ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளவே, ஜெர்மனி மே 7, 1945-⁠ல் நேச நாடுகளிடம் சரணடைந்தது.

22‘அவை [நாசி கரங்கள்] அரணான பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்தக்குலைச்சலாக்கி அன்றாட பலியை நீக்கும்’ என தூதன் சொன்னார். பூர்வ யூதாவில் பரிசுத்த ஸ்தலம் எருசலேம் ஆலயத்தில் இருந்தது. இருந்தாலும், யூதர்கள் இயேசுவை ஒதுக்கித்தள்ளியபோது யெகோவா அவர்களையும் அவர்களது ஆலயத்தையும் ஒதுக்கித்தள்ளினார். (மத்தேயு 23:37–24:2) பொ.ச. முதல் நூற்றாண்டு முதற்கொண்டு, யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயமே செயல்பட்டு வருகிறது. அதன் மகா பரிசுத்த ஸ்தலம் பரலோகத்திலும் ஆவிக்குரிய பிரகாரம் பூமியிலும் இருக்கிறது. இப்பிரகாரத்திலேயே பிரதான ஆசாரியரான இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் சேவிக்கிறார்கள். 1930-கள் முதற்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரோடு ‘திரள் கூட்டத்தாரும்’ ஒன்றுசேர்ந்து வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆகவே இவர்கள் ‘கடவுளுடைய ஆலயத்திலே’ சேவிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 15; 11:1, 2; எபிரெயர் 9:11, 12, 24) வடதிசை ராஜா, தன் அதிகாரத்திலிருந்த நாடுகளில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரையும் அவர்களது கூட்டாளிகளையும் கடுமையாய் துன்புறுத்தினான். இவ்வாறு ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தை பரிசுத்தக்குலைச்சலாக்கினான். துன்புறுத்துதல் அந்தளவு கடுமையாய் இருந்ததால், அந்நாடுகளில் ‘அன்றாட பலி’​—⁠யெகோவாவின் நாமத்திற்கான வெளியரங்க ஸ்தோத்திர பலி​—⁠நீக்கப்பட்டது. (எபிரெயர் 13:15) இருந்தாலும், பயங்கர துன்பத்தின் மத்தியிலும் உண்மையுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் “வேறே ஆடுகளும்” இரண்டாம் உலகப் போரின்போது இடைவிடாது பிரசங்கித்தார்கள்.​—யோவான் 10:⁠16.

‘அருவருப்பான ஒன்று ஏற்படுத்தப்படுகிறது’

23இரண்டாம் உலகப் போர் முடிவடையவிருந்த சமயம், மற்றொரு காரியம் நடந்தது. இதையும் தேவதூதன் இவ்வாறு முன்னறிவித்திருந்தார்: ‘அவை பாழாக்கும் அருவருப்பான ஒன்றை நிச்சயமாய் ஏற்படுத்தும்.’ (தானியேல் 11:31ஆ, NW) இயேசுவும் ‘அருவருப்பான’ ஒன்றைப் பற்றி பேசியிருந்தார். முதல் நூற்றாண்டில், அது யூத கலகத்தை அடக்க பொ.ச. 66-⁠ல் எருசலேமுக்கு வந்த ரோம படையைக் குறித்தது cமத்தேயு 24:15; தானியேல் 9:⁠27.

24நவீன காலங்களில் ‘அருவருப்பான’ எது ‘ஏற்படுத்தப்பட்டிருக்கிறது’? தெளிவாகவே, இது கடவுளுடைய ராஜ்யத்தின் ‘அருவருப்பான’ போலி ராஜ்யம். இது சர்வதேச சங்கமாய் இருந்தது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தபோது பாதாளத்திற்குள் சென்ற அல்லது உலக சமாதான அமைப்பாய் செயலிழந்த சிவப்புநிறமுள்ள மிருகம் இதுவே. (வெளிப்படுத்துதல் 17:8) இருந்தாலும் இந்த ‘மிருகம்’ ‘பாதாளத்திலிருந்து ஏறிவரவிருந்தது.’ அக்டோபர் 24, 1945-⁠ல் ஐக்கிய நாட்டு சங்கம் நிறுவப்பட்டபோது இது நிறைவேறியது. முன்னாளைய சோவியத் யூனியன் உள்ளிட்ட 50 தேசங்கள் அதன் அங்கமாய் இருந்தன. இவ்வாறு தூதன் முன்னறிவித்தபடியே ‘அருவருப்பான ஒன்று’​—⁠ஐக்கிய நாடுகள்​—⁠ஏற்படுத்தப்பட்டது.

25ஜெர்மனி இரண்டு உலகப் போர்களிலுமே தென்றிசை ராஜாவின் மகா எதிரியாக, வடதிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்றிருந்தது. இப்போது அதன் ஸ்தானத்தை வகிக்கப்போவது யார்?

[அடிக்குறிப்புகள்]

a இப்புத்தகத்தின் 6-ஆம் அதிகாரத்தைக் காண்க.

b புனித ரோமப் பேரரசே முதல் ரைக், ஜெர்மானிய பேரரசு இரண்டாவது ரைக்.

c இப்புத்தகத்தின் 11-ஆம் அதிகாரத்தைக் காண்க.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• 19-ஆம் நூற்றாண்டின் முடிவில், வடதிசை ராஜாவாகவும் தென்றிசை ராஜாவாகவும் ஸ்தானம் வகித்த வல்லரசுகள் எவை?

• முதல் உலகப் போரின்போது, எவ்வாறு வடதிசை ராஜாவின் நிலைமை ‘முன்புபோல் இல்லை’?

• முதல் உலகப் போரைப் பின்தொடர்ந்து, ஹிட்லர் எவ்வாறு ஜெர்மனியை உலக மேடையில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக்கினார்?

• இரண்டாம் உலகப் போரின்போது வடதிசை ராஜாவுக்கும் தென்றிசை ராஜாவுக்குமிருந்த விரோதத்தின் விளைவென்ன?

[கேள்விகள்]

1. 19-வது நூற்றாண்டு ஐரோப்பாவில் முன்னிலை வகித்தவை எவை என்று ஒரு சரித்திராசிரியர் கூறுகிறார்?

2. 19-ஆம் நூற்றாண்டின் முடிவில், ‘வடதிசை ராஜாவாகவும்,’ ‘தென்றிசை ராஜாவாகவும்’ திகழ்ந்த வல்லரசுகள் எவை?

3, 4. (அ) ஜெர்மன் ரைக்கின் முதல் மன்னரானது யார், என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது? (ஆ) கெய்சர் வில்ஹெல்ம் என்ன கொள்கையைப் பின்பற்றினார்?

5. இரண்டு ராஜாக்கள் எவ்வாறு ‘ஒரே பந்தியில்’ அமர்ந்தார்கள், அங்கே என்ன பேசினார்கள்?

6, 7. (அ) எந்த விதத்தில் வடதிசை ராஜா ‘தன் தேசத்துக்குத் திரும்பினான்’? (ஆ) வடதிசை ராஜாவின் செல்வாக்கு அதிகரித்ததைக் கண்ட தென்றிசை ராஜா என்ன செய்தான்?

8. ஜெர்மானிய பேரரசிற்கு எவ்வாறு ‘மகா சம்பத்து’ உண்டானது?

9. எவ்வாறு வடதிசை ராஜாவின் இருதயம் ‘பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய்’ இருந்தது?

10, 11. முதல் உலகப் போர் எவ்வாறு ஆரம்பமானது, அது எவ்வாறு ‘குறித்தகாலத்திலே’ நடந்தது?

12. முதல் உலகப் போரின்போது, எந்த விதத்தில் நிலைமை ‘முன்புபோல் இல்லை’?

13, 14. (அ) வடதிசை ராஜாவுக்கு எதிராக வந்த “கித்தீமின் கப்பல்கள்” முக்கியமாய் எதைக் குறித்தன? (ஆ) முதல் உலகப் போர் தொடர்ந்தபோது எவ்வாறு மேன்மேலும் கித்தீமின் கப்பல்கள் வந்தன?

15. வடதிசை ராஜா எப்போது ‘மனநோவடைந்துபோனார்’?

16. தீர்க்கதரிசனத்தின்படி, தோல்விகண்ட வடதிசை ராஜா என்ன செய்வார்?

17. அடால்ஃப் ஹிட்லர் தோன்றுவதற்கு சாதகமாயிருந்த நிலைமை என்ன?

18. ஹிட்லர் எவ்வாறு ‘திறமையாய்’ செயல்பட்டார்?

19. ஆதரவு பெறுவதற்காக ஹிட்லர் யாருடன் ஒப்பந்தம் செய்தார்?

20. வடதிசை ராஜா எந்தக் ‘கரங்களை’ பயன்படுத்தினார், யாருக்கு எதிராக?

21. இரண்டாம் உலகப் போரின்போது வடதிசை ராஜாவின் நிலைமை எவ்வாறு தலைகீழாய் மாறியது, அதன் விளைவென்ன?

22. வடதிசை ராஜா எவ்வாறு ‘பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்தக்குலைச்சலாக்கி அன்றாட பலியை நீக்கினான்’?

23. முதல் நூற்றாண்டில் ‘அருவருப்பானதாய்’ இருந்தது எது?

24, 25. (அ) நவீன காலங்களின் அந்த ‘அருவருப்பு’ எது? (ஆ) எப்போது, எப்படி அந்த ‘அருவருப்பு ஏற்படுத்தப்பட்டது’?

[பக்கம் 268-ன் வரைப்படம்/படங்கள்]

தானியேல் 11:27-31-⁠ல் சொல்லப்பட்டுள்ள ராஜாக்கள்

வடதிசை தென்றிசை

ராஜா ராஜா

தானியேல் 11:27-30அ ஜெர்மானிய பேரரசு பிரிட்டன், அதைத்

(முதல் உலகப் போர்) தொடர்ந்து ஆங்கிலோ-அமெரிக்க

உலக வல்லரசு

தானியேல் 11:30ஆ, 31 ஹிட்லரின் மூன்றாம் ஆங்கிலோ-அமெரிக்க

ரைக் (இரண்டாம் உலக வல்லரசு

உலகப் போர்)

[படம்]

ஜனாதிபதி உட்ரோ வில்சனும், மன்னர் ஐந்தாம் ஜார்ஜும்

[படம்]

அநேக கிறிஸ்தவர்கள் சித்திரவதை முகாம்களில் துன்புறுத்தப்பட்டார்கள்

[படம்]

கிறிஸ்தவமண்டல தலைவர்கள் ஹிட்லரை ஆதரித்தார்கள்

[படம்]

இளவரசர் ஃபெர்டினான்ட் கொலைசெய்யப்பட்ட வாகனம்

[படம்]

ஜெர்மானிய வீரர்கள், முதல் உலகப் போர்

[பக்கம் 257-ன் படங்கள்]

1945-ல் யால்டாவில், பிரிட்டிஷ் பிரதம மந்திரியான வின்ஸ்டன் சர்ச்சில், ஐ.மா. ஜனாதிபதியான ஃப்ரான்க்லின் டி. ரூஸ்வெல்ட், சோவியத் தலைமையமைச்சர் ஜோசஃப் ஸ்டாலின் ஆகியோர் ஜெர்மனியைக் கைப்பற்றவும், போலந்தில் புதிய அரசை நிறுவவும், ஐக்கிய நாட்டு சங்கத்தை ஏற்படுத்த மாநாடு நடத்தவும் திட்டமிட்டனர்

[பக்கம் 258-ன் படங்கள்]]

1. இளவரசர் ஃபெர்டினான்ட் 2. ஜெர்மானிய கப்பற்படை 3. பிரிட்டிஷ் கப்பற்படை 4. லூசிடானியா 5. ஐ.மா. போர் அறிவிப்பு

[பக்கம் 263-ன் படங்கள்]

ஜெர்மனியின் போர்க்கால நட்புநாடான ஜப்பான் பேர்ல் ஹார்பர்மீது குண்டுவீசியபோது அடால்ஃப் ஹிட்லர் தனக்கு வெற்றி நிச்சயமென நம்பினார்