Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 7

திருப்தியான வாழ்க்கை—கைநழுவி போவதேன்?

திருப்தியான வாழ்க்கை—கைநழுவி போவதேன்?

எதற்காக வாழ்கிறோம் என தெரியாமல் அநேகர் தத்தளிப்பது ஏன்? “பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி. மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர். நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.” (யோபு 14:1, 2, பொ.மொ.) மனிதகுலத்தின் ஒளிமயமான எதிர்காலத்தைக் குலைத்துப்போட்ட ஒரு சம்பவம் பரதீஸில் இருந்த முதல் தம்பதியினருடைய வாழ்க்கையில் ஏற்பட்டது.

2 மனித குடும்பம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால் கடவுளோடு நல்ல உறவை வைத்துக்கொள்ள வேண்டும்—இது மனப்பூர்வமாக செய்ய வேண்டிய ஒன்று, கட்டாயத்தினால் அல்ல. (உபாகமம் 30:15-20; யோசுவா 24:15) அன்பினால் தூண்டப்பட்டு உள்ளத்திலிருந்து வரும் கீழ்ப்படிதலையும் வணக்கத்தையும் யெகோவா எதிர்பார்க்கிறார். (உபாகமம் 6:5) ஆகவே, ஏதேன் தோட்டத்தில் யெகோவா ஒரு கட்டுப்பாட்டை விதித்தார். இது, உள்ளப்பூர்வமான விசுவாசத்தை நிரூபிக்க அந்த முதல் மனிதனுக்கு வாய்ப்பளித்தது. “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்” என ஆதாமிடம் கடவுள் சொன்னார். “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்றார். (ஆதியாகமம் 2:16, 17) இது ஓர் எளிய பரிட்சைதான். தோட்டத்தில் இருந்த அநேக மரங்களில் ஒரேவொரு மரத்தின் கனியைத்தான் புசிக்க வேண்டாம் என யெகோவா கூறினார். நன்மை எது தீமை எது என்பதை தீர்மானிக்கும் உரிமை சர்வ ஞானமும் பொருந்திய படைப்பாளருக்கு இருப்பதை அந்த மரம் அடையாளப்படுத்தியது. தனக்கு ‘ஏற்ற துணையாக’ யெகோவா தந்த மனைவியிடமும் இந்தக் கட்டளையை முதல் மனிதன் சொன்னான். (ஆதியாகமம் 2:18) அவர்கள் இருவரும் இந்த ஏற்பாட்டில்—கடவுளுடைய அரசதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதில்—திருப்தியடைந்தனர். மேலும், நன்றியோடு அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, படைப்பாளரும் உயிர் கொடுத்தவருமாகிய கடவுளிடம் அன்புகாட்டி வந்தனர்.

3 ஒருநாள் சர்ப்பம் ஏவாளிடம் இவ்வாறு கேட்டது: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” அதற்கு ஏவாள், ‘நாங்கள் சாகாதபடிக்கு’ நன்மை தீமை அறியத்தக்க விருட்சமாகிய “தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின்” கனியை மட்டும் சாப்பிடக் கூடாது என பதிலளித்தாள்.—ஆதியாகமம் 3:1-3.

4 இந்த சர்ப்பம் யார்? “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும்” அழைக்கப்படுபவனே அந்த ‘ஆதி சர்ப்பம்’ (NW) என பைபிளில் வெளிப்படுத்துதல் புத்தகம் அடையாளம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) பிசாசாகிய சாத்தானை கடவுள் படைத்தாரா? இல்லை, யெகோவாவின் படைப்புகள் யாவும் பூரணமானது, சிறந்தது. (உபாகமம் 32:4) இந்த ஆவி சிருஷ்டி தன்னை பிசாசாகிய சாத்தானாக மாற்றிக்கொண்டான். பிசாசு என்றால் “பழிதூற்றுபவன்” என்றும், சாத்தான் என்றால் “எதிர்ப்பவன்” என்றும் அர்த்தம். அவன் “தன் சுய இச்சையினாலே,” அதாவது கடவுளுடைய ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என்ற இச்சையினாலே “இழுக்கப்பட்டு” படைப்பாளருக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தான்.—யாக்கோபு 1:14.

5 இப்போது ஏவாளிடம் பிசாசாகிய சாத்தான் இவ்வாறு கூறினான்: “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” (ஆதியாகமம் 3:4, 5) நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை புசிப்பதை சாத்தான் கவர்ச்சியாக தோன்ற செய்தான். சுருக்கமாகச் சொன்னால், ‘கடவுள் நன்மையான ஏதோ ஒன்றை உங்களிடமிருந்து மறைத்து வைக்கிறார். இந்த மரத்தின் கனியை சும்மா பறித்து சாப்பிடுங்கள், நீங்கள் கடவுளை மாதிரி ஆகிவிடுவீர்கள், எது நல்லது எது கெட்டது என்பதையும் நீங்களாகவே தீர்மானித்துக் கொள்ள முடியும்’ என அவன் விவாதித்தான். இன்றும்கூட, கடவுளை சேவிப்பதிலிருந்து அநேகரை தடுப்பதற்கு இதே நியாய விவாதத்தைத்தான் சாத்தான் பயன்படுத்தி வருகிறான். ‘உங்களுக்கு உயிர் கொடுத்தவரை மறந்துவிடுங்கள், உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்கள்’ என கூறுகிறான்.—வெளிப்படுத்துதல் 4:11.

6 விலக்கப்பட்ட அந்த மரத்தின் கனி திடீரென அவ்வளவு கவர்ச்சியாக, சுண்டி இழுப்பதாக தோன்றியது! ஏவாள் அதைப் பறித்து சாப்பிட்டாள், தன் கணவனுக்கும் கொடுத்தாள். அதனால் வரும் விளைவுகளை நன்கு அறிந்திருந்தபோதிலும், ஆதாம் தன் மனைவியின் சொல்லைக் கேட்டு அந்தக் கனியைச் சாப்பிட்டான். அதன் விளைவு? அந்த ஸ்திரீக்கு பின்வரும் தீர்ப்பை யெகோவா வழங்கினார்: “நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” ஆதாமுக்கு என்ன தீர்ப்பை வழங்கினார்? “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” இப்போது, மகிழ்ச்சியும் திருப்தியுமான வாழ்க்கையை அவர்களே தேடிக்கொள்ள வேண்டியதாயிற்று. கடவுளுடைய நோக்கத்திலிருந்து விலகி, திருப்தியாக வாழ மனிதரே எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா? பூங்காவனம் போன்ற பரதீஸை பராமரித்து, அதைப் போலவே முழு பூமியையும் மாற்றும் மனநிறைவான வேலையை அவர்கள் இழந்தார்கள். மாறாக, தங்கள் படைப்பாளருடைய மகிமைக்கென்று எதையும் செய்யாமல், அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே சலிப்போடு கடினமாக உழைக்க வேண்டியதாயிற்று.—ஆதியாகமம் 3:6-19.

7 நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை சாப்பிட்ட நாளிலேயே கடவுளுடைய பார்வையில் இந்த முதல் தம்பதியினர் இறந்தவர்களானார்கள். பின்பு படிப்படியாக சரீரப்பிரகாரமான மரணத்தை நோக்கியும் சென்றுகொண்டிருந்தார்கள். கடைசியில் அவர்கள் இறந்தபோது அவர்களுக்கு என்ன நேரிட்டது? இறந்தவர்களின் நிலையைப் பற்றி பைபிள் தெளிவான விளக்கத்தைத் தருகிறது. “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.” (பிரசங்கி 9:5; சங்கீதம் 146:4) மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து உயிர் வாழும் “ஆத்துமா” என்ற ஒன்று இல்லை. பாவத்திற்கு தண்டனை மரணம், என்றென்றும் வாதிக்கப்படும் எரிநரகம் அல்ல. மேலும், பரலோகத்தில் நித்திய ஆசீர்வாதத்தை அனுபவிக்கவும் மரணம் வழிவகுப்பதில்லை. *

8 ஒடுக்கு விழுந்த பாத்திரத்தில் செய்யப்பட்ட ரொட்டியிலும் அந்த ஒடுக்கின் அடையாளம் இருக்கும். அது போலவே, இப்போது அபூரணரான இந்தத் தம்பதியும் அபூரண குழந்தைகளையே பிறப்பிக்க முடிந்தது. பைபிள் இதை இவ்வாறு விளக்குகிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) இப்படி நாம் அனைவருமே பாவத்தில் பிறந்ததால், மாயையான வாழ்க்கைக்கு கீழ்ப்பட்டுவிட்டோம். ஆதாமின் சந்ததியினருடைய வாழ்க்கை சலிப்பும் சங்கடமுமாகவே ஆனது. ஆனால் இதிலிருந்து விடுபட வழியுண்டா?

^ பாரா. 7 நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்) என்ற சிற்றேடு உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது. இறந்தவர்களின் நிலையைப் பற்றி ஆர்வமூட்டும் விளக்கங்களை நீங்கள் இதில் காணலாம்.