Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 1

திருப்தியான வாழ்க்கை—வெறும் கனவா?

திருப்தியான வாழ்க்கை—வெறும் கனவா?

வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் சகல வசதிகளும் படைத்த ஒரு வீடு சொர்க்கபோகமாக காட்சியளிக்கலாம். ஆனால் அந்த வீட்டிற்குள் நுழைந்தால் ஒருவேளை நீங்கள் எதைப் பார்க்கலாம்? நிம்மதியோ மகிழ்ச்சியோ இல்லாத சூழல். அப்பா அம்மாவிடம் சலிப்போடு “ஆமா,” “இல்ல” என்ற முத்தான வார்த்தையோடு பேச்சை முடித்துக்கொள்ளும் பருவ வயது பிள்ளைகள். புருஷனுடைய அன்புக்காக ஏங்கும் மனைவி. ‘ஆளைவிட்டால் போதும்’ என்ற பாவனையில் நடையைக் கட்டும் கணவர். எங்கோ ஒரு மூலையில் தனிமையில் வாடிக்கொண்டு, மாதக்கணக்காக தங்களை வந்து எட்டிப்பார்க்காத பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் அரவணைக்கத் துடிக்கும் வயதான பெற்றோர்கள். மறுபட்சத்தில், இதுபோன்ற சூழலை சந்திக்கும் குடும்பங்கள் பிரச்சினைகளையெல்லாம் சமாளித்து உண்மையிலேயே மகிழ்ச்சியோடு வாழ முடிந்திருக்கிறது. எப்படி என்று யோசிக்கிறீர்களா?

2 இப்பொழுது உலகின் மறுகோடியில், வளர்ந்துவரும் நாட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தை கவனிக்கலாம். அந்தக் குடும்பத்திலுள்ள ஏழு பேரும், இன்றைக்கோ நாளைக்கோ விழப்போகும் நிலையில் இருக்கும் ஒரு குடிசையில் குடித்தனம் நடத்துகின்றனர். அடுத்த வேளை சாப்பாடு எப்போது என்று அவர்களுக்கே தெரியாது. பசியும் வறுமையும் ஆதிக்கம் செலுத்தும் உலகை மனிதனால் வெல்ல முடியவில்லை என்பதற்கு இது வருந்தத்தக்க ஒரு நினைப்பூட்டுதல். ஆனாலும், வறுமையை மகிழ்ச்சியோடு எதிர்ப்படும் குடும்பங்கள் பல இந்தப் பூமியில் இருக்கத்தான் செய்கின்றன. எப்படி அவர்களால் முடிகிறது?

3 செல்வச் செழிப்பான நாடுகளிலும் பணப் பிரச்சினைகள் படையெடுக்கலாம். ஜப்பானில் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருந்த சமயத்தில், ஒரு குடும்பத்தினர் வீடு வாங்கினார்கள். பின்னால் ஊதிய உயர்வு கிட்டும் என நம்பி, அதற்காக பெரும் தொகையை கடன் வாங்கினார்கள். ஆனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோதோ அவர்களால் பணத்தையும் கட்ட முடியாமல் போய்விட்டது, வீட்டையும் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டியதாகிவிட்டது. இப்போது வீட்டையும் இழந்து, கடனையும் கட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சுமையோடு, கடன் அட்டைகளை சரியாக பயன்படுத்தாததால் ஏற்பட்ட தண்டச் செலவை கட்டவும் போராடுகிறார்கள். குதிரை பந்தயங்களில் தகப்பன் ஈடுபடுவதால், குடும்பம் மேலும் மேலும் கடனுக்குள் மூழ்குகிறது. என்றாலும், பல குடும்பங்கள் மாற்றங்களை செய்து, மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கையை அனுபவிக்கின்றன. எப்படி என நீங்கள் அறிய விரும்புகிறீர்களா?

4 நீங்கள் எங்கு வாழ்ந்தாலும்சரி, மனித உறவுகளும்கூட சதா தொல்லையுண்டாக்கி வாழ்க்கையை திருப்தியற்றதாக்குகின்றன. வேலை செய்யும் இடங்களில் மற்றவர்கள் உங்களைப் பற்றி புறங்கூறலாம். உங்களுடைய சாதனைகளில் பொறாமை கொண்டு யாராவது அநியாயமாக குறைகூறலாம். நீங்கள் அன்றாடம் தொடர்புகொள்ள வேண்டிய நபர் அவருடைய அதிகாரத்தால் உங்களை அதட்டி எரிச்சல் உண்டாக்கலாம். பள்ளியில் உங்கள் பிள்ளை மிரட்டப்படலாம், தொல்லைப்படுத்தப்படலாம், அல்லது புறக்கணிக்கப்படலாம். நீங்கள் ஒற்றை பெற்றோராக இருந்தால், மற்றவர்களுடன் பழகும் விஷயத்தில் பிரச்சினைகள் உங்களையும் விட்டுவைப்பதில்லை என்பதை அறிவீர்கள். இப்படிப்பட்ட எல்லா பிரச்சினைகளும் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடில்லாமல் இன்று அநேகருடைய வாழ்க்கையை பாதித்து மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

5 இப்படி மன அழுத்தத்தினால் வரும் விளைவுகள் நாளுக்கு நாள் “சப்தமில்லாமல்” அதிகரித்து, நினையாத நேரத்தில் மீளமுடியா படுகுழியில் ஒருவரை திடீரென தள்ளிவிடலாம். ஆகவே, மன அழுத்தம் என்பது மௌனமாக கொல்லும் கொலையாளி என்றும், தீராத மன அழுத்தம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷம் என்றும் அழைக்கப்படுகிறது. “இன்று மன அழுத்தங்களும் அதனால் வரும் நோய்களும் கிட்டத்தட்ட உலகின் எல்லா மூலைமுடுக்குகளிலும் உள்ள தொழிலாளர்களை பாதிக்கின்றன” என மினசோட்டா பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட் எல். வெனிங்கா கூறுகிறார். மன அழுத்தம் சம்பந்தப்பட்ட வியாதிகள் அமெரிக்காவுக்கு ஓர் ஆண்டில் 20,000 கோடி டாலர் செலவை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. மன அழுத்தம் அமெரிக்காவின் ‘லேட்டஸ்ட்’ ஏற்றுமதி பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. உலகின் முக்கியமான மொழிகள் பலவற்றில் “மன அழுத்தம்” என்ற வார்த்தையை கேட்க முடிகிறது. மன அழுத்தத்தால் உங்களுடைய வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிக்க முடியாமல் போகும்போது குற்றவுணர்வு உங்களை அலைக்கழிக்கலாம். சராசரி நபர் ஒருவர் நாளொன்றுக்கு இரண்டு மணிநேரத்தை குற்றவுணர்விலேயே கழிப்பதாக நவீன ஆய்வு ஒன்று அறிக்கை செய்கிறது. இருந்தாலும், இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மன அழுத்தத்தை சமாளித்து வாழ்க்கையில் சிலர் வெற்றிநடை போட்டிருக்கிறார்கள்.

6 இப்படிப்பட்ட அன்றாட பிரச்சினைகளையெல்லாம் சமாளித்து, எப்படி உங்களால் திருப்தியான வாழ்க்கை வாழ முடியும்? நிபுணர்களால் வெளியிடப்பட்ட சுய-உதவி புத்தகங்களையும் கையேடுகளையும் சிலர் அலசிப் பார்க்கிறார்கள். இப்புத்தகங்கள் நம்பகமானவையா? பிள்ளை வளர்ப்பு சம்பந்தமான ஒரு புத்தகம் 42 மொழிகளில் கிட்டத்தட்ட ஐந்து கோடி பிரதிகள் விற்பனையானது. இந்தப் புத்தகத்தை எழுதிய டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் ஒருசமயம் இவ்வாறு கூறினார்: “கண்டிப்புடன் இருக்க முடியாததே . . . இன்றைய அமெரிக்க பெற்றோர்களின் பொதுவான பிரச்சினை.” இதற்கு தானும் மற்ற வல்லுநர்களுமே பெரிதும் காரணம் என பின்னால் அவர் கூறினார். “அறிவுரை வழங்குவதில் நாங்கள்தான் கில்லாடிகள் என்ற எங்களுடைய நினைப்பு பெற்றோரின் தன்னம்பிக்கையை எந்தளவுக்கு இழக்கச் செய்தது என்பதை இப்போதுதான் புரிந்துகொண்டோம்” என அவர் ஒப்புக்கொண்டார். ஆகவே, நாம் இவ்வாறு கேட்கலாம்: ‘இன்றும் என்றும் திருப்தியாக வாழ யாருடைய ஆலோசனையை நாம் பயமின்றி பின்பற்றலாம்?’