Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 9

திருப்தியான வாழ்க்கை—இன்றும் என்றும்!

திருப்தியான வாழ்க்கை—இன்றும் என்றும்!

கடவுளை உங்களுடைய நண்பராக்கிக் கொண்டால் நீங்களும் திருப்தியான வாழ்க்கை வாழலாம்

பைபிள் சரித்திரத்தில் விசுவாசத்திற்கு இலக்கணமாக திகழ்பவர் ஆபிரகாம். ஊர் என்ற செல்வச் செழிப்புமிக்க நகரத்தில் அனுபவித்த நிறைவான வாழ்க்கையை அவர் துறந்தார். ஆரானில் சிலகாலம் தங்கியபின் மீதமுள்ள காலத்தை நாடோடியாகவே கழித்தார், குடியிருப்பதற்கு நிரந்தரமான இடமின்றி கூடாரங்களில் தங்கினார். (ஆதியாகமம் 12:1-3; அப்போஸ்தலர் 7:2-7; எபிரெயர் 11:8-10) இருந்தாலும், ‘ஆபிரகாம் முதியவராகி நிறைந்த [திருப்தியான] வாழ்நாள்களை கடந்து நல்ல நரை வயதில் இறந்தார்’ என அவரைப் பற்றி பைபிள் பதிவு சொல்கிறது. (ஆதியாகமம் 25:8, பொ.மொ.) அப்படியானால், அவருடைய வாழ்க்கையை அந்தளவு திருப்தியாக்கியது எது? அவர் தன்னுடைய வாழ்நாளில் சாதித்த சாதனைகளை எண்ணி, சாக கிடக்கும்போது திருப்திப்பட்டுக் கொண்ட ஒரு முதியவர் மட்டுமே அல்ல. கடவுள் மீது வைத்திருந்த ஆழமான விசுவாசத்தால் “யெகோவாவின் நண்பர்” என அவர் பிற்பாடு அழைக்கப்பட்டார். (யாக்கோபு 2:23, NW; ஏசாயா 41:8) படைப்பாளரோடு ஆபிரகாம் வளர்த்திருந்த இந்த அர்த்தமுள்ள உறவே அவருடைய வாழ்வை திருப்தியுள்ளதாக்கியது.

ஆபிரகாமின் வாழ்க்கையைவிட உங்கள் வாழ்க்கை அதிக திருப்தியானதாக இருக்க முடியுமா?

2 கடவுளை உங்களுடைய நண்பராக்கிக் கொண்டால், சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபிரகாமைப் போலவே நீங்களும் அர்த்தமுள்ள, திருப்தியான வாழ்க்கை வாழ முடியும். இப்பிரபஞ்சத்தின் படைப்பாளருக்கு நண்பராக இருப்பதை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அவருடைய நண்பராக முடியும். எப்படி? அவரை நன்கு அறிந்து அவரில் அன்புகூர வேண்டும். (1 கொரிந்தியர் 8:3; கலாத்தியர் 4:9) படைப்பாளரோடு வைக்கும் இந்த உறவினால் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கையாக, திருப்தியான வாழ்க்கையாக மாறும்.

3 இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியை மனமார ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு, மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஆலோசனைகளை யெகோவா கொடுத்திருக்கிறார். (ஏசாயா 48:17) எது சரி எது தவறு என்பதை தானே தீர்மானித்துக்கொண்டு, கடவுளுக்கு எதிராக ஆதாம் கலகம் செய்தான் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். யெகோவா தம் குமாரனுடைய மீட்கும் பலியினால் மனித குடும்பத்தை மீட்டு, பாவம் மற்றும் மரணத்தின் அடிமை விலங்கிலிருந்து விடுதலை பெறும் வழியை காட்டியிருக்கிறார் என்றாலும், தனிப்பட்ட விதமாக நாம் ஒவ்வொருவரும் கிரயபலியை ஏற்றுக்கொள்ள வேண்டும், நன்மை எது தீமை எது என்பதை நாமே வகுத்துக்கொள்ளும் மனநிலையை அடியோடு ஒழிக்க வேண்டும். இயேசுவின் கிரயபலியை ஏற்றுக்கொள்பவர்களுக்கு கடவுள் கொடுக்கும் சட்டங்களையும் நியமங்களையும் ஏற்றுக்கொண்டு நாம் அதற்கு கீழ்ப்படிய வேண்டும்.

“உம்முடைய வழியை எனக்கு அறிவியும்”

4 தொடர்ந்து பைபிள் படித்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் நியமங்களை கடைப்பிடிக்கையில், நன்மை எது தீமை எது என்பதைப் பற்றிய கடவுளுடைய தராதரத்தின் மதிப்பை நீங்கள் போற்றுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. (சங்கீதம் 19:7-9) யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய மோசே சொன்னதுபோல நீங்களும் சொல்வதற்கு தூண்டப்படுவீர்கள்: “உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்.” (யாத்திராகமம் 33:13; சங்கீதம் 25:4) “கையாளுவதற்குக் கடினமான [இந்தக்] கொடிய காலங்களில்” எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு தேவைப்படும் நியமங்களை பைபிள் நமக்கு தருகிறது. (2 தீமோத்தேயு 3:1, NW) அவற்றை பின்பற்றும்போது உங்களுடைய நன்றியுணர்வு பெருகும், யெகோவாவை இன்னும் நன்கு அறிவதற்கும் அவருடன் உங்களுடைய நட்பை பலப்படுத்துவதற்கும் வழிநடத்தும்.

5 ஆபிரகாம் ‘திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து பூரண ஆயுசில்’ இறந்தார். ஆனால் என்னதான் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தாலும் மரணம் என்ற ஒன்று இருக்கும்வரை ஒருவருடைய ஆயுசு குறுகியதாகவே இருக்கிறது. தள்ளாடும் வயதானாலும், வாழ வேண்டும் என்ற இயல்பான ஆசை நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனென்றால், “மனிதருடைய இருதயங்களில் [கடவுள்] நித்தியத்துவத்தையும் வைத்திருக்கிறார். ஆனாலும், ஆதிமுதல் அந்தம் வரை கடவுள் செய்துவரும் கிரியையை அவர்களால் ஆழங்காண முடியாது.” (பிரசங்கி 3:11, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) நித்திய காலமாக வாழ்ந்தாலும் யெகோவாவின் அனைத்து படைப்புகளையும் ஒருபோதும் ஆழங்காண முடியாது. யெகோவாவின் அற்புதமான கிரியைகளை கவனித்து ஆராய்ந்து மகிழ்வதற்கு எல்லையே இல்லை!—சங்கீதம் 19:1-4; 104:24; 139:14.

6 இன்றைய பிரச்சினைகள் நிறைந்த இந்தப் பூமியில் என்றென்றும் வாழ ஒருவேளை நாம் ஆசைப்பட மாட்டோம். ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பைபிள் நமக்கு இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) ‘புதிய வானங்கள்’ என்பது புதிய பரலோக அரசாங்கத்தை—முழு பூமியையும் ஆளப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தை—குறிக்கிறது. “புதிய பூமி” என்பது அந்த ராஜ்யத்தின் ஆட்சிக்குக் கீழ்ப்படியும் புதிய மனித சமுதாயத்தைக் குறிக்கிறது. இந்த வாக்குறுதியை மெய்மையாக்க, ‘பூமியைக் கெடுப்பவர்கள்’ மீது யெகோவா விரைவில் நடவடிக்கை எடுப்பார்.—வெளிப்படுத்துதல் 11:18; 2 பேதுரு 3:10.

7 அது எவ்வளவு சீக்கிரமாக வரும்? இந்த ‘ஒழுங்குமுறையின் முடிவுக்கு அடையாளமாக’ (NW) தேசங்களுக்கு இடையே யுத்தங்கள் நடைபெறும் என்றும், ‘பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்’ என்றும், ‘அக்கிரமம் மிகுதியாகும்’ என்றும் இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். (மத்தேயு 24:3-13; லூக்கா 21:10, 11; 2 தீமோத்தேயு 3:1-5) “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்” என்றும் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். (லூக்கா 21:31) உண்மையாகவே, யெகோவா துன்மார்க்கரை அழிப்பதற்கான காலம் மிக வேகமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. *

8 ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில்’ துன்மார்க்கரை இந்தப் பூமியிலிருந்து யெகோவா துடைத்தழித்த பிறகு பூமி பூங்காவனம் போன்ற பரதீஸாக மாறும். (வெளிப்படுத்துதல் 16:14, 16; ஏசாயா 51:3) அப்போது, “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) ஆனால் இறந்தவர்களைப் பற்றியென்ன? “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்” என இயேசு சொன்னார். “ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” (யோவான் 5:28, 29) தனிப்பட்ட ஒவ்வொருவர் மீதும் யெகோவா அக்கறை காட்டுவதால், மரணத்தில் உறங்கிக் கொண்டிருப்பவர்களை மீண்டும் உயிருக்குக் கொண்டுவர விரும்புகிறார். மரபணு தொழில்நுட்பத்தைக் கொண்டு ‘குளோனிங்’ முறையில் ஒரு மனிதனைப் போன்ற வேறொரு மனிதனை விஞ்ஞானிகள் உருவாக்க முயற்சி செய்யலாம். ஆனால் படைப்பாளருக்கு இந்த முறையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. உயிர்த்தெழுவதற்கு தகுதி படைத்த ஒவ்வொருவரை பற்றிய எல்லா நுணுக்க விவரங்களையும் அவரால் ஞாபகத்தில் வைக்க முடியும், அவர்களை மறுபடியும் உயிருக்குக் கொண்டுவரவும் முடியும். ஆகவே, இறந்துபோன அன்பானவர்களை பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் மறுபடியும் காணும் எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கிறது!

9 பரதீஸில் வாழ்க்கை எப்படி இருக்கும்? படைப்பாளரை ஒன்று சேர்ந்து துதிக்கும் சந்தோஷமுள்ள மக்களால் இந்தப் பூமி நிரப்பப்பட்டிருக்கும். “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24; 54:13) ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மன அழுத்தமோ உணர்ச்சி அல்லது மனோ ரீதியில் கோளாறுகளோ யாருக்கும் ஏற்படாது. சாப்பிடுவதற்கு ஏராளமாக உணவு கிடைக்கும். கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக செய்யப்படும் அர்த்தமுள்ள வேலையில் அனைவரும் மகிழ்ச்சி காண்பார்கள். (சங்கீதம் 72:16; ஏசாயா 65:23) மிருகங்களோடும் சக மனிதர்களோடும் சமாதானமாக வாழ்வார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘தேவனிடத்தில் சமாதானமாக’ இருப்பார்கள்.—ரோமர் 5:1; சங்கீதம் 37:11; 72:7; ஏசாயா 11:6-9.

10 அந்தப் பரதீஸில் முழு திருப்தியான வாழ்க்கையை அனுபவித்து மகிழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) ஆகவே, யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்; கடவுள் உங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அப்போது உங்களால் யெகோவா தேவனை பிரியப்படுத்த முடியும். இது உங்கள் வாழ்க்கையை அதிக திருப்தியுள்ளதாக்கும்.

^ பாரா. 7 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 9-ஆம் அதிகாரத்தில் இந்த தீர்க்கதரிசனத்தைப் பற்றிய கூடுதலான விளக்கங்களை நீங்கள் அறியலாம்.