Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 3

நம்பகமான வழிகாட்டு நூல்

நம்பகமான வழிகாட்டு நூல்

“மனித நாகரிகத்தையும் வாழ்க்கை சரிதைகளையும் ஒருங்கிணைக்கும் தன்னிகரற்ற புத்தகமே பைபிள்” என சீனாவில் க்வாங்சௌ என்ற இடத்திலுள்ள ச்சோங் ஷாங் பல்கலைக்கழகம் வெளியிட்ட பத்திரிகை கூறுகிறது. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இம்மானுவல் கான்ட் என்ற செல்வாக்குமிக்க தத்துவஞானி இவ்வாறு சொன்னதாக அது குறிப்பிடுகிறது: “மக்களுக்காக இன்று வரை தொடர்ந்து இருந்துவரும் பைபிள், மனிதகுலம் இதுவரை ருசித்துப் பார்த்திராத மிகப் பெரிய நன்மையை தருகிறது. அதன் மதிப்பை குறைக்க எடுக்கும் எல்லா முயற்சிகளும் . . . மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்.” த என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இவ்வாறு கூறுகிறது: “பைபிள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமே உரிய ஒன்றல்ல . . . இது, நன்னெறி மற்றும் மதம் சார்ந்த பொக்கிஷம் என இப்போது கருதப்படுகிறது. உலக நாகரிகம் முன்னேறும் என்ற நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க, பைபிளின் குறைவற்ற போதனைகளின் மதிப்பும் கூடும் என்றும் கருதப்படுகிறது.”

2 உங்களுடைய மதம் எதுவாக இருந்தாலும், இப்பேர்ப்பட்ட ஒரு புத்தகத்தைப் பற்றி நீங்கள் அறிய விரும்பமாட்டீர்களா? 20-ம் நூற்றாண்டின் முடிவுக்குள் பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ 2,200-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆகவே, படித்துப் புரிந்துகொள்வதற்கு ஏற்றவாறு பெரும்பான்மையோரின் சொந்த மொழியிலேயே பைபிள் கிடைக்கிறது. அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் முறையை கண்டுபிடித்ததிலிருந்து சுமார் 400 கோடி பைபிள்கள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

3 இப்போது, உங்களிடம் பைபிள் இருந்தால், தயவுசெய்து அதை திறந்து அதன் பொருளடக்கத்தை பாருங்கள். பைபிள் புத்தகங்களின் பெயர்களை அதில் காண்பீர்கள். அது ஆதியாகமத்தில் ஆரம்பித்து வெளிப்படுத்துதல் புத்தகத்தோடு முடிவடைகிறது. சுமார் 40 வித்தியாசப்பட்ட மனிதரால் எழுதப்பட்ட 66 புத்தகங்களை கொண்ட நூலகமே இந்த பைபிள். 39 புத்தகங்கள் அடங்கிய அதன் முதல் பாகத்தை பழைய ஏற்பாடு என பலர் அழைக்கிறார்கள். ஆனால் இப்பகுதி பெரும்பாலும் எபிரெய மொழியில் எழுதப்பட்டிருப்பதால் எபிரெய வேதாகமம் என அழைப்பது பொருத்தமானது. அதேபோல், 27 புத்தகங்கள் அடங்கிய அதன் இரண்டாம் பாகத்தை புதிய ஏற்பாடு என அநேகர் அழைக்கிறார்கள். ஆனால் இப்பகுதியை கிறிஸ்தவ எழுத்தாளர்கள் கிரேக்க மொழியில் எழுதியதால் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் என அழைப்பது சரியானது. பைபிளை எழுதி முடிப்பதற்கு, பொ.ச.மு. 1513 முதல் பொ.ச. 98 வரை 1,600-க்கும் அதிகமான வருடங்கள் எடுத்தன. இந்த எழுத்தாளர்கள் ஒருபோதும் ஆலோசனைக்காக ஒன்றுகூடவில்லை. அந்தப் புத்தகங்களில் சில, ஒரே சமயத்தில் ஆனால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வசித்த நபர்களால் எழுதப்பட்டன. இருந்தாலும், பைபிள் முழுவதற்கும் ஒரே கருப்பொருள்தான் இருக்கிறது. அது ஒன்றுக்கொன்று முரண்படாமல், முழுவதும் ஒத்திசைவுடன் இருக்கிறது. ‘16 நூற்றாண்டுகள் அடங்கிய காலப்பகுதியில் வாழ்ந்த 40-க்கும் அதிகமான மனிதர் துளியும் பிசகாமல் ஒத்திசைவுடன் எப்படி ஒரு புத்தகத்தை தொகுத்தார்கள்?’ என்பதை நினைத்து நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

“[கடவுள்] உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார்”

4 பைபிள் எழுதி முடிக்கப்பட்டு 1,900-க்கும் அதிகமான வருடங்கள் கடந்துவிட்டன. இருந்தாலும், அதில் அடங்கியிருக்கும் விஷயங்கள் நவீனகால மக்களின் மனதை ஈர்க்கின்றன. உதாரணத்திற்கு உங்கள் பைபிளை திறந்து யோபு 26:7-ஐ கவனியுங்கள். இந்த வசனம் பொ.ச.மு. 15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பது நினைவிருக்கட்டும். அதில் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘[கடவுள்] உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார்.’ அடுத்து உங்கள் பைபிளை ஏசாயா 40:22-க்குத் திருப்புங்கள். ஏசாயா புத்தகம் பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்த வசனத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.” இந்த இரண்டு வசனங்களையும் வாசிக்கும்போது உங்கள் மனதுக்கு வருவது என்ன? கோள வடிவில் இருக்கும் ஒரு பொருள் விண்வெளியில் ‘தொங்குகிறது’ என்பதே. நவீன விண்கலத்திலிருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். ‘விஞ்ஞான அடிப்படையில் இவ்வளவு திருத்தமான விளக்கத்தை பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களால் எப்படி குறிப்பிட முடிந்தது?’ என நீங்கள் யோசிக்கலாம்.

5 பைபிள் சம்பந்தப்பட்ட மற்றொரு கேள்வியை இப்போது நாம் கவனிக்கலாம். சரித்திரப்பூர்வமாக பைபிள் உண்மையானதா? கட்டுக்கதைகள் அடங்கிய தொகுப்புதான் பைபிள், அதற்கு சரித்திரப்பூர்வ ஆதாரமே கிடையாது என சிலர் நினைக்கின்றனர். பிரசித்திபெற்ற இஸ்ரவேல் அரசனாகிய தாவீதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். தாவீது ஒரு சரித்திர புருஷர் என்பதற்கு சமீபகாலம் வரை ஆதாரம் அளித்த ஒரே புத்தகம் பைபிள். இவர் உண்மையிலேயே வாழ்ந்த ஒரு நபர் என்பதை பிரபல சரித்திராசிரியர்கள் ஒத்துக்கொள்கிறபோதிலும், சில சந்தேகவாதிகள் யூத பிரச்சாரவாதிகளின் கற்பனை கதாபாத்திரமே தாவீது எனக் கூறி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன?

“தாவீதின் வீட்டார்” என குறிப்பிட்டுள்ள கல்வெட்டு

6 தாண் எனும் பண்டைய இஸ்ரவேல் பட்டணத்தின் இடிபாடுகளிலிருந்து “தாவீதின் வீட்டார்” என குறிப்பிடும் ஒரு கல்வெட்டு 1993-ல் கண்டெடுக்கப்பட்டது. இது பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது; இஸ்ரவேலரின் எதிரிகள் எழுப்பிய வெற்றிச் சின்னத்தின் ஒரு பகுதியே இந்தக் கல்வெட்டு. தாவீது வாழ்ந்தார் என்பதற்கு பைபிள் சாராத பூர்வ கால நிரூபணம் திடீரென கிடைத்துவிட்டது! இந்தக் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததா? இந்தக் கண்டுபிடிப்பை பற்றி டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இஸ்ரேல் ஃபிங்கிள்ஸ்டீன் இவ்வாறு கூறினார்: “தாவீதைப் பற்றிய கல்வெட்டு பைபிளுக்கு எதிரான வாதத்தை ஒரே நொடியில் தகர்த்தெறிந்தது.” பல பத்தாண்டுகளாக பாலஸ்தீனாவில் அகழ்வாராய்ச்சி நடத்திவந்த பேராசிரியர் வில்லியம் எஃப். ஆல்பிரைட் என்பவர் ஆர்வமூட்டும் விஷயத்தை ஒருசமயம் சொன்னார்: “புதுப் புது கண்டுபிடிப்புகள் அனைத்தும் எண்ணற்ற நுணுக்க விவரங்களை உண்மையென நிரூபித்து, சரித்திர உண்மைகளை வழங்கும் விஷயத்தில் பைபிளின் மதிப்பை கூட்டியிருக்கின்றன.” மேலுமாக நாம் இவ்வாறு கேட்கலாம்: ‘காப்பியங்களையோ கட்டுக்கதைகளையோ போல அல்லாமல், பழமையான இப்புத்தகம் எப்படி சரித்திரப்பூர்வமாய் இந்தளவு துல்லியமாக இருக்க முடியும்?’ பைபிளுக்கு மற்றொரு முக்கிய அம்சமும் உண்டு.

மகா அலெக்ஸாண்டரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்

7 பைபிள் ஒரு தீர்க்கதரிசன புத்தகமும்கூட. (2 பேதுரு 1:20, 21) ‘தீர்க்கதரிசனம்’ என்று சொன்னால் சட்டென்று பொய் தீர்க்கதரிசிகளின் நிறைவேறாத வார்த்தைகளே உங்கள் மனதிற்கு வரலாம். ஆனால் அந்த ஒரே கோணத்திலேயே யோசிக்காமல் திறந்த மனதோடு உங்கள் பைபிளை தானியேல் 8-ம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள். இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவுக்கும் ‘விசேஷித்த கொம்புடைய’ உரோமமுள்ள வெள்ளாட்டுக்கடாவுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைப் பற்றிய தரிசனத்தை தானியேல் இங்கே விவரிக்கிறார். இந்தப் போராட்டத்தில் வெள்ளாட்டுக்கடா வெற்றி பெறுகிறது. ஆனால் அதன் பெரிய கொம்பு முறிந்துவிடுகிறது. அந்தக் கொம்பு இருந்த இடத்திலிருந்து நான்கு கொம்புகள் முளைக்கின்றன. இத்தரிசனத்தின் அர்த்தம் என்ன? தானியேலின் பதிவு தொடர்ந்து சொல்கிறது: “நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோன பின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.”—தானியேல் 8:3-22.

“புதுப் புது கண்டுபிடிப்புகள் அனைத்தும் எண்ணற்ற நுணுக்க விவரங்களை உண்மையென நிரூபித்து, சரித்திர உண்மைகளை வழங்கும் விஷயத்தில் பைபிளின் மதிப்பை கூட்டியிருக்கின்றன.”—பேராசிரியர் வில்லியம் எஃப். ஆல்பிரைட்

8 இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியதா? தானியேல் புத்தகம் சுமார் பொ.ச.மு. 536-ல் எழுதி முடிக்கப்பட்டது. 180 வருடங்களுக்குப் பின்பு, அதாவது பொ.ச.மு. 356-ல் பிறந்த மக்கெதோனிய அரசன் மகா அலெக்ஸாண்டர் பெர்சிய வல்லரசை வென்றார். ‘ரோமமுள்ள வெள்ளாட்டுக்கடாவின்’ கண்களுக்கு நடுவே காணப்பட்ட அந்தப் “பெரிய கொம்பு” இவரே. பெர்சியாவை தோற்கடிப்பதற்கு முன்பு எருசலேமுக்கு வந்தபோது அலெக்ஸாண்டருக்கு தானியேல் புத்தகம் காட்டப்பட்டது என யூத வரலாற்று ஆசிரியர் ஜொஸிஃபஸ் கூறினார். அலெக்ஸாண்டரிடம் காட்டப்பட்ட தானியேலின் தீர்க்கதரிசன வார்த்தைகள், பெர்சியருக்கு எதிராக தான் படையெடுத்து வந்த சம்பவத்தைத்தான் குறிப்பிடுகின்றன என அவரே ஒப்புக்கொண்டார். மேலும், பொ.ச.மு. 323-ல் அலெக்ஸாண்டரின் மரணத்திற்குப்பின் அவருடைய பேரரசு என்ன ஆனது என்பதை உலக சரித்திர புத்தகங்களிலிருந்து நீங்கள் அறியலாம். அந்தப் “பெரிய கொம்பு”க்கு பதிலாக தோன்றிய “நாலு கொம்புகள்,” அதாவது அவருடைய நான்கு தளபதிகள், பொ.ச.மு. 301-ல் ராஜ்யத்தை நான்கு பகுதிகளாக பிரித்து ஆளும் உரிமையை எடுத்துக்கொண்டனர். மறுபடியும் கேள்வி எழும்புகிறது: ‘சுமார் 200 வருடங்களுக்குப்பின் நடக்கவிருந்த சம்பவத்தை அந்தப் புத்தகம் எப்படி அந்தளவுக்கு தெளிவாகவும் துல்லியமாகவும் முன்னுரைக்க முடிந்தது?’

9 இந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள்தாமே விடையளிக்கிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது [“ஏவப்பட்டிருக்கிறது,” NW ] . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) ‘தேவ ஆவியினால் ஏவப்பட்டிருக்கிறது’ என்ற கிரேக்க வார்த்தையின் சொல்லர்த்தமான பொருள், “கடவுள் ஊதினார்” என்பதாகும். நாம் பைபிளில் காணும் விஷயங்கள் அனைத்தும் சுமார் 40 மனிதர்களின் மனங்களில் கடவுள் “ஊதின” தகவல்களே. விஞ்ஞானம், சரித்திரம் மற்றும் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் நாம் கவனித்த சில உதாரணங்கள் நம்மை இந்த உறுதியான ஒரே முடிவுக்கு வரச் செய்கின்றன: தன்னிகரற்ற புத்தகமாகிய இந்த பைபிள் மனிதனின் படைப்பு அல்ல, ஆனால் தெய்வீக ஊற்றுமூலத்திலிருந்து வந்தது. இருந்தாலும், அதன் நூலாசிரியராகிய கடவுள் உண்மையில் இருக்கிறாரா என இன்று பலர் சந்தேகிக்கிறார்கள். நீங்கள்?