Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 2

திருப்தியான வாழ்க்கைக்கு சில ஆலோசனைகள்

திருப்தியான வாழ்க்கைக்கு சில ஆலோசனைகள்

உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் ஆலோசனைக்காக யாரிடம் செல்வீர்கள்? நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பரிடமோ அல்லது அனுபவமிக்க ஆலோசகரிடமோ செல்லலாம். நூலகத்திற்கு சென்று நிறைய விஷயங்களை வாசிப்பதும்கூட உதவியாக இருக்கலாம். அல்லது “பெரியவர்களுடைய” அறிவுரையை கேட்கலாம். உங்களுக்குப் பிடித்த எந்த முறையானாலும் சரி, பிரச்சினையை தீர்ப்பதற்கு இரத்தினச் சுருக்கமான பொன் மொழிகள் இருந்தால் அவற்றை ஆலோசித்து பார்ப்பதே நல்லது. உங்களுக்கு பயனளிக்கும் சிறந்த ஆலோசனைக்கு இதோ, சில எடுத்துக்காட்டுகள்!

“பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து”

2 குடும்ப வாழ்க்கை: தரங்கெட்ட இந்த உலகில் பிள்ளைச் செல்வங்களை வளர்ப்பது பற்றி அநேக பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். பின்வரும் ஆலோசனையை சிந்தித்துப் பார்ப்பது உதவும்: “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” 1 பிள்ளைகள் வளர வளர, நடக்க வேண்டிய “வழி,” அதாவது கடைப்பிடிக்க வேண்டிய தராதரங்கள் அவர்களுக்கு தேவைப்படுகின்றன. பயன்தரும் விதிமுறைகளை பிள்ளைகளுக்கு வகுத்துக்கொடுப்பது அவசியம் என்பதை நிபுணர்கள் பலர் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். பெற்றோரின் ஞானமான தராதரங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு உணர்வை தருகின்றன. அதுமட்டுமல்ல, “பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.” 2 “பிரம்பு” என்ற வார்த்தை, பிள்ளைகள் தவறான வழியில் செல்வதைத் தடுக்க பெற்றோர் அன்போடு பயன்படுத்த வேண்டிய அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது. இத்தகைய அதிகாரத்தை பிரயோகிப்பது பிள்ளைகளை எவ்விதத்திலும் துஷ்பிரயோகம் செய்வதை அர்த்தப்படுத்துவதில்லை. இது பெற்றோருக்கு கொடுக்கப்படும் ஆலோசனை: “உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.” 3

“அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்”

3 கணவன் மனைவிக்கு இடையே நல்ல உறவே குடும்ப மகிழ்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது. அப்படிப்பட்ட உறவுக்கு என்ன தேவைப்படுகிறது? “அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் ஆழ்ந்த மரியாதையுள்ளவளாக இருக்கக்கடவள்.” 4 அன்பும் மரியாதையும் குடும்பம் எனும் இயந்திரத்தின் உராய்வைப் போக்கும் எண்ணெய்யாக செயல்படுகின்றன. இந்த அறிவுரையை நடைமுறைப்படுத்துவதற்கு பேச்சுத்தொடர்பு இன்றியமையாதது. ஏனென்றால், “அந்தரங்கமான பேச்சு இல்லையென்றால் திட்டங்கள் வெற்றியடையாது.” 5 மனம்விட்டு பேசும் பழக்கத்தை வளர்ப்பதற்கு, நம்முடைய துணையின் உணர்ச்சிகளை ஊடுருவிப் பார்க்க முயல வேண்டும். அதற்காக, கணவனோ அல்லது மனைவியோ உண்மையில் எப்படி உணருகிறார் என்பதை கண்டறிய வேண்டும். “[ஒருவருடைய] மனம் கிணற்றிலுள்ள ஆழமான தண்ணீர் போலிருக்கிறது; ஆனால், புத்தியுள்ள ஆணோ [அல்லது பெண்ணோ] அதை மொண்டெடுப்பார்” 6 என்ற புத்திமதியை மனதில் வைப்பது ஞானமானது.

நம்பிக்கையான மனநிலையை கொண்டிருங்கள், மகிழ்ச்சி பொங்கும் நல்லுறவை நாட முயலுங்கள்

4 பெற்றோருக்கு பிள்ளைகள் மரியாதை காட்டும் வழக்கம் இருந்த நாடுகளிலுங்கூட, இப்போது வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனியாமல் விட்டுவிடுவதால் அந்திம காலத்தில் அவர்கள் தனிமையில் வாடுகிறார்கள். இருந்தாலும், பின்வரும் நீதிமொழிகளை பிள்ளைகள் கவனிப்பது நல்லது: “தாய் தந்தையை மதித்து நட.” 7 “உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே.” 8 “தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக் கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்.” 9 அதேசமயத்தில், வயதான பெற்றோர்களுக்கு நம்பிக்கையான மனநிலையும் மற்றவர்களுடன் மகிழ்ச்சி பொங்கும் நல்லுறவை வளர்த்துக்கொள்ள முயலும் குணமும் அவசியம். “பிரிந்துபோகிறவன் [“தனிமைப்படுத்திக் கொள்கிறவன்,” NW] தன் இச்சையின்படி செய்யப் பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.” 10

5 மதுபானம் அருந்துதல்: “திராட்சை மது வாழ்க்கையில் களிப்புத்தரும்” 11 என்பதும், மதுபானம் அருந்துவது “துன்பத்தை நினையாதிருக்க” 12 உதவும் என்பதும் உண்மைதான். ஆனால், “திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல” 13 என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிதமிஞ்சி குடிப்பதால் வரும் விளைவுகளை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: “பிறகோ அது [மதுபானம்] பாம்பு போலக் கடிக்கும்; விரியனைப் போலத் தீண்டும். உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும். . . . ‘நான் எப்பொழுது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன்.’” 14 மதுபானங்களை மிதமாக குடிப்பது நன்மை தரலாம், ஆனால் மிதமிஞ்சி குடிப்பதை எப்பொழுதும் அறவே தவிர்க்க வேண்டும்.

6 பணத்தை நிர்வகித்தல்: சிலருடைய விஷயத்தில், பணத்தை ஞானமாக பயன்படுத்துவதால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். இந்த அறிவுரைக்கு செவிகொடுங்கள்: “மதுபானப் பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப் பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் [“உண்டு குடித்த மயக்கம்,” பொது மொழிபெயர்ப்பு] கந்தைகளை உடுத்துவிக்கும்.” 15 சூதாட்டம் போன்ற பழக்கவழக்கங்களோடு மதுபானம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்றவற்றையும் தவிர்ப்பதன் மூலம் நம் பணத்தை குடும்பத்தின் நலனுக்காக பயன்படுத்தலாம். ஆனால் பலர் வரவுக்கு மிஞ்சி செலவு செய்வதால், கடனை கட்டி முடிப்பதற்கே கடினமாக உழைக்க வேண்டியதாகிவிடுகிறது. வட்டியை கட்டுவதற்காக சிலர் மறுபடியும் கடன் வாங்குகிறார்கள். பின்வரும் பொன் மொழிகளை மனதில் வைத்திருப்பது உங்களுக்கு உதவும்: “வீணானவற்றை நோக்குவோனுக்குத் தரித்திரம் நிறையும்.” 16 நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் வாங்க விரும்புகிற பொருட்கள் உண்மையிலேயே எனக்கு அவசியம்தானா? எத்தனை பொருட்களை ஓரிரு முறை மட்டும் உபயோகித்துவிட்டு பின் அலமாரியில் வெட்டியாக அடைத்து வைத்திருக்கிறேன்?’ பத்திரிகை எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “மனிதனுடைய தேவைகள் குறைவு—விருப்பங்களுக்கோ முடிவே இல்லை.” பின்வரும் ஞானமுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். . . . பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” 17

7 சுறுசுறுப்புடன் உழைப்பதே பணப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு சிறந்த வழி. “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். . . . இன்னுங்கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போல . . . வரும்.” 18 கவனமாக திட்டமிடுவதும் வரவுக்கேற்ற பட்ஜெட் போடுவதும் உதவலாம்: “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, . . . அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?” 19

“தன் வேலையில் திறமையுள்ளவனை பார்த்திருக்கிறாயா?”

8 நம்முடைய தவறு ஏதுமின்றி வறுமை நம் வாசலுக்குள் நுழைந்துவிட்டால் என்ன செய்வது? உதாரணமாக, நாம் கடினமாக உழைக்க முன்வந்தாலும், சமுதாயத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நாம் வேலையை இழந்துவிடலாம். அல்லது பெரும்பான்மையோர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருக்கும் தேசத்தில் நாம் வாழலாம். அப்போது என்ன செய்வது? “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.” 20 மேலும், இந்த அறிவுரையையும் கவனியுங்கள்: “தன் வேலையில் திறமையுள்ளவனை பார்த்திருக்கிறாயா? அவன் அரசர் முன் நிற்பானே.” 21 ஒரு வேலை கிடைப்பதற்கு தேவையான திறமைகளை நாம் கற்றுக்கொள்ள முடியுமா?

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்”

9 பின்வரும் ஆலோசனை முற்றிலும் முரணாக தோன்றலாம், ஆனால், அது உண்மையிலேயே பலனளிக்கும் ஒன்று: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். . . . நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.” 22 பதிலுக்குத் திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு கொடுப்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, தாராளமாக கொடுக்கும் குணத்தில் இன்னும் முன்னேறுவதற்கு இந்த அறிவுரை உதவுகிறது: “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” 23 கஷ்ட காலங்களில் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன்மூலம் நம்முடைய தாராள குணத்தை விருத்தி செய்கிறோம், அதன் பலனை நாம் பின்னால் அறுப்போம்.

10 மனித உறவுகள்: ஞானமுள்ள ஓர் அரசன் இவ்வாறு சொன்னார்: “மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.” 24 போட்டி மனப்பான்மை அநேகரை முட்டாள்தனமான செயலுக்கு வழிநடத்தியுள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் 32 இன்ச் டிவி செட் வாங்கியதை பார்த்தவுடன், தன்னுடைய 27 இன்ச் டிவி செட் நல்ல கண்டிஷனில் இருந்தாலும், 36 இன்ச் டிவி செட் வாங்குவதற்கு சட்டுபுட்டென்று ஒருவர் கிளம்புகிறார். இப்படிப்பட்ட போட்டி மனப்பான்மை வீணான செயலே; அது காற்றைப் பிடிக்க முயல்வதை—வீணாக ஓடி ஓடி அலைவதை—போன்றது. இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா?

கடுங்கோபத்தை நாம் எப்படி சமாளிக்கலாம்?

11 மற்றவர்கள் ஏதோ சொல்லிவிட்டதற்காக நாம் கோபப்படலாம். ஆனால் இந்த ஆலோசனைக்கு கவனம் செலுத்துங்கள்: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.” 25 உண்மைதான், சில சந்தர்ப்பங்களில் கோபப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” 26 என பூர்வ எழுத்தாளர் ஒருவர் சொல்கிறார். ஆனால் கடுங்கோபத்தை எப்படி சமாளிக்கலாம்? “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” 27 ஆகவே நமக்குத் தேவைப்படுவது விவேகம். நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘ஏன் அவர் அப்படி நடந்துகொண்டார்? சூழ்நிலை காரணமாக இருந்திருக்குமோ?’ விவேகமாக நடந்துகொள்வதைத் தவிர, கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வேறு சில பண்புகளும் இருக்கின்றன. “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” 28 ஆம், மனித உறவுகளில் ஏற்படும் அநேக பிரச்சினைகளை அன்பு தீர்த்து வைக்கிறது.

12 என்றபோதிலும், சமாதானமான உறவுகளை குலைத்துவிடும் ‘சிறிய அவயவம்’ ஒன்றும் உள்ளது. அதுவே நாவு. பின்வரும் இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை: “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.” 29 இந்த ஆலோசனையையும் மனதில் கொள்வது முக்கியம்: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” 30 இருந்தாலும், சமாதானத்தை மேற்பூச்சாக காட்டிக்கொள்வதற்காக பாதி உண்மை பாதி பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.” 31

13 நாம் மற்றவர்களோடு எப்படி நல்ல உறவை வைத்துக்கொள்ளலாம்? நல்வழி காட்டும் இந்த நியமத்தை கவனியுங்கள்: “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.” 32 இப்படி செய்வதால் பொன்விதி என அநேகர் அழைக்கும் இந்த வார்த்தைகளுக்கு இசைய வாழ்பவர்களாய் இருப்போம்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” 33

14 மன அழுத்தம்: அழுத்தம் நிறைந்த இந்த உலகில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி? “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோ துக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.” 34 நமக்கு சரியென தோன்றுபவற்றை மற்றவர்கள் அசட்டை செய்யும்போது உடனே நாம் ‘மன மகிழ்ச்சியை’ இழந்துவிடலாம். ஆனாலும் பின்வரும் வார்த்தைகளை மனதில் கொள்வது நல்லது: “மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?” 35 மறுபட்சத்தில், வாழ்க்கையின் கவலைகள் எப்போதும் நம்மை வாட்டி வதைக்கலாம். அப்போது என்ன செய்யலாம்? இந்த வார்த்தைகளை நம் நினைவில் வைக்கலாம்: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” 36 நமக்கு தெம்பூட்டும் ‘நல்வார்த்தையையே’ எப்போதும் சிந்திக்கலாம். மனச்சோர்வை உண்டாக்கும் சூழ்நிலைகள் இருந்தாலும், நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருப்பது நம் ஆரோக்கியத்திற்குக்கூட உதவும்: “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து.” 37 மற்றவர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை என நினைத்து வேதனைப்படுகையில் இந்த நியமத்தை கடைப்பிடிக்க முயற்சிக்கலாம்: “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி.” 38 நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருந்தால், ஒவ்வொரு நாளும் எதிர்ப்படும் மன அழுத்தத்தைச் சமாளிக்கலாம்.

15 மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொன் மொழிகள் யாவும் 21-ம் நூற்றாண்டில் வாழும் உங்களுக்கு பிரயோஜனமளிக்கும் என நினைக்கிறீர்களா? உண்மையில், இந்த வார்த்தைகள் பழமையான புத்தகமாகிய பைபிளில் காணப்படுகின்றன. ஆனால், ஆலோசனையை தரும் மற்ற எத்தனையோ வழிகள் இருக்க, நாம் ஏன் பைபிளை படிக்க வேண்டும்? ஒரு காரணம் என்னவென்றால், பைபிளில் காணப்படும் நியமங்களுக்கு காலவரம்பற்ற மதிப்பு உண்டு. உதாரணமாக, பெண்களின் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட யாசுஹிரோவையும் கயோகோவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இருவரும் திருமணம் செய்ததற்கு ஒரே காரணம், யாசுஹிரோவின் குழந்தையை கயோகோ சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுதான். இருந்தாலும், பணப் பிரச்சினைகளாலும், ஒருவருக்கொருவர் ஒத்துப்போகாததாலும் விரைவிலேயே விவாகரத்து செய்துகொண்டனர். பின்னால், ஒருவருக்கொருவர் அறியாமலேயே யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிள் படிக்க ஆரம்பித்தனர். ஒருவரிலொருவர் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததை இருவரும் கவனித்தனர். யாசுஹிரோவும் கயோகோவும் மீண்டும் மணம் செய்துகொள்ள தீர்மானித்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் இன்னும் பிரச்சினைகள் வந்தாலும் இருவருமே பைபிள் நியமங்களை பின்பற்றி அவற்றை தீர்த்துக் கொள்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய வாழ்க்கையில் பைபிள் நியமங்களை பின்பற்றுவதால் நல்ல பலன்களை அனுபவிப்பதை நீங்கள் காண்பீர்கள். பைபிளின்படி வாழ முயற்சி செய்யும் அந்த ஜனங்களுடன் பழகுவதற்காக நீங்களும் அவர்களுடைய சபை கூட்டத்திற்கு சென்று பார்க்கலாமே.

16 மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் யாவும் பைபிள் எனும் தங்கச் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில பொன் மொழிகளே. இந்த பைபிள் நியமங்களை யெகோவாவின் சாட்சிகள் ஏன் தங்கள் வாழ்க்கையில் மனப்பூர்வமாக பின்பற்றுகிறார்கள் என்பதற்கு காரணங்கள் உள்ளன. அவர்கள் மனதார ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களையும் பைபிளின் சில அடிப்படை உண்மைகளையும் ஏன் தெரிந்துகொள்ளக் கூடாது?