பாகம் 8
மீண்டும் திருப்தியான வாழ்க்கைக்கு
தெய்வீக ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ததால் மனித வாழ்க்கை மாயையாக மாறிவிட்டாலும், எந்த நம்பிக்கையும் இல்லாமல் மனிதரை கடவுள் கைவிட்டு விடவில்லை. பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” (ரோமர் 8:20, 21) ஆம், முதல் மானிட ஜோடியிலிருந்து தோன்றிய சந்ததியாருக்கு நம்பிக்கையை கடவுள் அளித்தார். சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதகுலம் விடுதலை பெறும் என்ற உறுதியான நம்பிக்கை அது. அவர்கள் மறுபடியும் யெகோவா தேவனோடு நெருங்கிய உறவுக்குள் வர முடியும். எப்படி?
2 ஆதாம் ஏவாள் பாவம் செய்ததால், இந்தப் பூமியில் என்றென்றும் திருப்தியாக வாழும் எதிர்பார்ப்பை தங்கள் சந்ததியினரிடமிருந்து பறித்துவிட்டனர். எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்கும் சுதந்திரத்திற்கு ஈடாக தங்கள் வருங்கால சந்ததியினரை பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைகளாக விற்றனர். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளை திக்கு தெரியாத தீவில் கொடூரமான அரசர்களின்கீழ் தவிக்கும் அடிமைகளுக்கு ஒப்பிடலாம். உண்மையில், மரணம் என்ற அரசன் பாவம் என்ற மற்றொரு அரசனால் அடிமையாக்கப்பட்ட மனிதகுலத்தை ஆண்டு வந்திருக்கிறான். (ரோமர் 5:14, 21) அவர்களை விடுவிப்பதற்கு ஒருவரும் இல்லை என்பது போல் தோன்றுகிறது. ஏன், அவர்களுடைய ஆதி பெற்றோரே அவர்களை அடிமைத்தனத்திற்குள் விற்றுப்போட்டார்களே! ஆனால் பரந்த உள்ளம் படைத்த ஒருவர், அடிமைப்பட்டிருக்கும் அனைவரையும் விடுவிப்பதற்குத் தேவைப்படும் முழு விலையோடு தன் மகனை அனுப்புகிறார்.—சங்கீதம் 51:5; 146:4; ரோமர் 8:2.
3 இந்த உதாரணத்தில், அடிமைகளை விடுவித்தவர் யெகோவா தேவன். அவர்களை விடுவிப்பதற்குத் தேவைப்படும் விலையை கொண்டு சென்ற மகன் இயேசு கிறிஸ்து. இவர் மனிதனாக பிறப்பதற்கு முன்பே கடவுளுடைய ஒரேபேறான குமாரனாக வாழ்ந்து வந்தார். (யோவான் 3:16) யெகோவாவின் முதல் படைப்பும் அவரே. மற்ற அனைத்து சிருஷ்டிகளும் அவர் மூலமாகவே படைக்கப்பட்டன. (கொலோசெயர் 1:15, 16) இந்த ஆவிக்குரிய குமாரனின் உயிரை யெகோவா அற்புதமாய் ஒரு கன்னியின் கருப்பைக்கு மாற்றினார். இவ்வாறு, அந்தக் குழந்தை பரிபூரண மனிதனாக பிறந்து, தெய்வீக நீதியை சரிக்கட்ட தேவையான விலையை செலுத்துவதை சாத்தியமாக்கியது.—லூக்கா 1:26-31, 34, 35.
4 இயேசு சுமார் 30 வயதாக இருந்தபோது, யோர்தான் நதியில் முழுக்காட்டுதல் பெற்றார். முழுக்காட்டப்படுகையில் பரிசுத்த ஆவியால் அல்லது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தியால் அபிஷேகம் பண்ணப்பட்டார். இவ்வாறு கிறிஸ்து ஆனார்; அதன் அர்த்தம் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்.” (லூக்கா 3:21, 22) பூமியில் இயேசு மூன்றரை வருடம் ஊழியம் செய்தார். அப்போது, தம்மை பின்பற்றுவோருக்கு “தேவனுடைய ராஜ்யத்தை,” அதாவது பரலோக அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கித்தார். இந்த அரசாங்கத்தின்கீழ் மனிதகுலம் யெகோவா தேவனுடன் சமாதான உறவுக்குள் வரும். (லூக்கா 4:43; மத்தேயு 4:17) மனிதரை மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் பாதையை இயேசு அறிந்திருந்தார், சந்தோஷமாக வாழ்வதற்கான சில வழிகளையும் தம் சீஷர்களுக்கு காண்பித்தார். மலைப்பிரசங்கத்தில் இயேசு கொடுத்த போதனைகள் மத்தேயு 5 முதல் 7 வரையுள்ள அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உங்களுடைய பைபிளை திறந்து அவற்றில் சிலவற்றை நீங்களும் வாசித்துப் பார்க்கலாமே.
உங்கள் அடிமை விலங்கை தகர்த்தெறிந்தவருக்கு உள்ளப்பூர்வமாக நன்றி சொல்ல மாட்டீர்களா?
5 ஆதாமைப்போல் அல்லாமல், இயேசுவோ தன் வாழ்க்கையில் எல்லா காரியங்களிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். “அவர் பாவஞ்செய்யவில்லை.” (1 பேதுரு 2:22; எபிரெயர் 7:26) சொல்லப்போனால், அவருக்கு இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் உரிமை இருந்தது. ஆனால், ஆதாம் இழந்ததை கடவுளுக்கு திரும்பச் செலுத்துவதற்காக ‘தம்முடைய ஜீவனை கொடுத்தார்.’ இயேசு தம்முடைய பரிபூரண மனித உயிரையே கழுமரத்தில் சமர்ப்பித்தார். (யோவான் 10:17; 19:17, 18, 28-30; ரோமர் 5:19, 21; பிலிப்பியர் 2:8) இவ்வாறு மீட்கும்பொருளை இயேசு அளித்தார், அதாவது மனிதகுலத்தை பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கான விலையை செலுத்தினார். (மத்தேயு 20:28) நீங்கள் கொத்தடிமை போல் ஓர் இடத்தில் வேலை செய்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்தவருக்கும் உங்களுக்கு உயிரளிக்க தன் உயிரையே தியாகம் செய்ய முன்வந்தவருக்கும் மனமார நன்றி செலுத்த மாட்டீர்களா? மீட்கும்பொருள் என்ற இந்த ஏற்பாடு கடவுளுடைய சர்வலோக குடும்பத்தில் மீண்டும் சேர்வதற்கும், பாவம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து விடுபட்டு உண்மையிலேயே திருப்தியளிக்கும் வாழ்க்கை வாழவும் வழிவகுக்கிறது.—2 கொரிந்தியர் 5:14, 15.
6 யெகோவாவின் இந்தத் தகுதியற்ற தயவை அறிந்து அதற்கு போற்றுதல் தெரிவியுங்கள். இப்படி செய்வது, பைபிளில் காணப்படும் பொன் மொழிகளை உங்களுடைய சொந்த வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு இன்னும் அதிகமாக உங்களை தூண்டும். உதாரணமாக, வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமான ஒரு நியமத்தை, அதாவது உங்களை புண்படுத்தியவரை மன்னிக்கும் நியமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாடம் 2-ல் நாம் பார்த்த கொலோசெயர் 3-ம் அதிகாரம் 12 முதல் 14 வரையான வசனங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? மற்றவர்களை குறைகூற உங்களுக்கு நியாயமான காரணம் இருந்தாலும், அவர்களை மன்னிப்பதற்கு அந்த வசனங்கள் உங்களை தூண்டின. ஏன் என்பதை சூழமைவு விளக்குகிறது: “யெகோவா உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (NW) யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் மனிதகுலத்திற்காக செய்திருப்பவற்றை மனமார போற்றுவீர்கள் என்றால், மற்றவர்கள் உங்களுக்கு எதிராக என்ன துரோகம் செய்திருந்தாலும், அதுவும் மனந்திரும்பி மன்னிப்பு கேட்கையில் அவர்களை மன்னிப்பதற்கு உந்துவிக்கப்படுவீர்கள்.