Skip to content

துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!

துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!

துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!

‘ஏன்தான் இவ்வளவு துன்பமோ?’ என வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் நீங்கள் கேட்டிருக்கலாம். போர்கள், வறுமை, பேரழிவுகள், குற்றச்செயல், அநீதி, வியாதி, மரணம் ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பெருமளவு துன்பப்பட்டிருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில், வரலாறு காணாத அளவுக்கு மனிதகுலம் துன்பத்தை அனுபவித்திருக்கிறது. இவையெல்லாம் என்றாவது முடிவுக்கு வருமா?

நிச்சயம் முடிவுக்கு வரும், அதுவும் மிக விரைவில், என்பதே ஆறுதலளிக்கும் பதில்! கடவுளுடைய வார்த்தையான பைபிள் இவ்வாறு கூறுகிறது: “துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மன மகிழ்ச்சியாயிருப்பார்கள்.” எவ்வளவு காலத்திற்கு? “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”​—சங்கீதம் 37:10, 11, 29.

துன்மார்க்கத்திற்கும் துன்பத்திற்கும் கடவுள் முடிவு கட்டிய பிறகு, இந்தப் பூமியைப் பூங்காவனம் போன்ற பரதீஸாக மாற்றுவார். அப்பொழுது, மக்கள் பூரண ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் என்றென்றும் வாழ்வார்கள். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்று கடவுளுடைய வார்த்தை முன்னறிவிக்கிறது.​—வெளிப்படுத்துதல் 21:⁠4.

அந்தப் புதிய உலகில், இறந்தவர்களும்கூட மீண்டும் உயிருக்குக் கொண்டுவரப்பட்டு, அத்தகைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்’ என பைபிள் வாக்குறுதி தருகிறது. (அப்போஸ்தலர் 24:15) அதனால்தான், குற்றவாளி ஒருவன் மனந்திரும்பி இயேசுமீது விசுவாசம் வைத்தபோது, “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று இயேசு சொன்னார்.​—லூக்கா 23:⁠43.

ஏன் துன்பம் வந்தது?

மனிதருக்கு இத்தகைய மகத்தான எதிர்காலத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் கடவுளுடைய நோக்கமென்றால், துன்பம் உண்டாக அவர் ஏன் அனுமதித்தார்? அதுவும் இவ்வளவு காலத்திற்கு ஏன் அனுமதித்திருக்கிறார்?

ஆதாம் ஏவாளைக் கடவுள் படைத்தபோது, உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் எந்தக் குறையுமின்றி அவர்களைப் பரிபூரணர்களாக படைத்தார். அவர்களைப் பரதீஸ் தோட்டத்தில் குடி வைத்து, திருப்தியான வேலையையும் கொடுத்தார். “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது” என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:31) அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்திருந்தால், பரிபூரண பிள்ளைகளைப் பெற்றெடுத்திருப்பார்கள், இந்த முழு பூமியும் பரதீஸாக ஆகியிருக்கும், அதில் எல்லா மக்களும் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள்.

ஆதாம் ஏவாளைப் படைக்கும்போதே, அவர்களுக்குச் சுயமாகத் தீர்மானமெடுக்கும் அற்புத சுதந்தரத்தைக் கடவுள் கொடுத்திருந்தார். யோசிக்க முடியாத ரோபாட்டுகளைப் போல் அவர்களைக் கடவுள் படைக்கவில்லை. என்றாலும், சுயமாகத் தீர்மானமெடுக்கும் அந்தச் சுதந்திரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தும்போது மட்டுமே, அதாவது கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது மட்டுமே, அவர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ முடியும். ஏனென்றால், “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்று கடவுள்தாமே சொல்கிறார். (ஏசாயா 48:17) சுயமாகத் தீர்மானமெடுக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது அழிவில்தான் முடிவடையும், ஏனென்றால் கடவுளுடைய துணையின்றி வெற்றிகரமாக வாழும் விதத்தில் மனிதர்கள் படைக்கப்படவில்லை. “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும்” பைபிள் கூறுகிறது.​—எரேமியா 10:⁠23.

வருத்தகரமாக, கடவுளுடைய துணையின்றி சுயமாக வாழ முடியும், வெற்றிகரமாக வாழ முடியுமென நம் ஆதி பெற்றோர் நினைத்தார்கள். அதனால் கடவுளுடைய அரசாட்சியை ஒதுக்கித் தள்ளினார்கள், அப்போது அவருடைய ஆதரவையும் இழந்தார்கள், பரிபூரணத்தையும் இழந்தார்கள். விளைவு? படிப்படியாகச் சீரழிந்து கடைசியில் முதுமையடைந்து இறந்து போனார்கள். மரபியல் விதிப்படி, அவர்களுடைய பிள்ளைகளான நாம் அபூரணத்தையும் மரணத்தையும் அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறோம்.​—ரோமர் 5:⁠12.

முக்கிய விவாதம்​—⁠ஆளும் உரிமை யாருக்கு இருக்கிறது?

ஆதாமையும் ஏவாளையும் அழித்துவிட்டு கடவுள் ஏன் மற்றொரு மானிட ஜோடியைப் படைக்கவில்லை? ஏனெனில் கடவுளுடைய சர்வலோக அரசுரிமை, அதாவது அவருடைய ஆளும் உரிமை, சவால் விடப்பட்டது. எழுப்பப்பட்ட கேள்வி என்னவென்றால்: ஆளும் உரிமை யாருக்கு இருக்கிறது, யாருடைய ஆட்சி சரியானது? இன்னும் சொல்லப்போனால், கடவுளுடைய ஆட்சியின்றி மனிதர்களால் மேம்பட்ட வாழ்க்கை வாழ முடியுமா? என்பதே அந்தக் கேள்வி. மனிதர்கள் சுயமாக ஆட்சி செய்து பார்ப்பதற்குப் போதிய காலத்தைக் கடவுள் அனுமதித்திருப்பதன் மூலம் அந்தக் கேள்விக்கு நிரந்தரமாக பதிலளிப்பார். இதற்காக, எல்லா வகையான அரசாங்கங்களையும், சமூக, பொருளாதார மற்றும் மத அமைப்புகளையும் முயன்று பார்ப்பதற்குப் போதுமான காலத்தை கடவுள் அனுமதிக்க வேண்டியிருந்தது.

இதன் விளைவு என்ன? மேலும் மேலும் துன்பம்தான், இதையே ஆயிரக்கணக்கான ஆண்டுகால மனித சரித்திரம் நிரூபிக்கிறது. கடந்த நூற்றாண்டில், மனிதர்கள் கடுந்துன்பத்தை அனுபவித்தார்கள். லட்சோபலட்சம் பேர் நாசிக்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். கோடானுகோடி பேர் போர்களில் பலியானார்கள். வன்முறையும் குற்றச்செயலும் இப்போது எங்கும் தலைவிரித்தாடுகின்றன. போதைப்பொருள் துஷ்பிரயோகம் கொள்ளைநோய் போல் உலகெங்கிலும் பரவி வருகிறது. பாலியல் நோய்கள் தொடர்ந்து அநேகரைத் தாக்கி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் பசியினாலும் நோயினாலும் மாண்டு போகிறார்கள். குடும்ப வாழ்க்கையும் தார்மீக நெறிமுறைகளும் எங்கு பார்த்தாலும் சீர்குலைந்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு எந்தவொரு மனித அரசாங்கத்திடமும் பரிகாரம் இல்லை. வியாதியையோ வயோதிகத்தையோ மரணத்தையோ ஒருவராலும் ஒழிக்க முடியவில்லை.

பைபிள் முன்னறிவித்தபடியே இன்று மனிதர்களுடைய நிலை இருக்கிறது. நாம் வாழும் காலத்தை இந்த உலகத்தின் ‘கடைசி நாட்கள்’ என்றும், ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்’ என்றும் பைபிள் விவரிக்கிறது. பைபிள் சொன்னபடியே, ‘பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாக ஆகியிருக்கிறார்கள்.’​—2 தீமோத்தேயு 3:1-5, 13.

துன்பத்திற்கு முடிவு நெருங்குகிறது

கடவுளுடைய துணையின்றி தன்னிச்சையாக வாழ மனிதனுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடையப் போகிறது என்பதை எல்லா அத்தாட்சிகளும் காட்டுகின்றன. கடவுளுடைய உதவியின்றி மனிதன் சுயமாக ஆளுவது ஒருபோதும் வெற்றி பெறாது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கடவுளுடைய ஆட்சியே சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பூரண ஆரோக்கியத்தையும் நித்திய வாழ்வையும் தர முடியும். எனவே, துன்மார்க்கத்திற்கும் துன்பத்திற்கும் யெகோவா சீக்கிரத்தில் முடிவுகட்டப் போகிறார். விரைவில் மனித விவகாரங்களில் தலையிட்டு, இந்தப் பொல்லாத உலகம் முழுவதையும் அழிக்கப் போகிறார்.

பைபிள் தீர்க்கதரிசனம் இவ்வாறு கூறுகிறது: “அந்த ராஜாக்களின் [இன்றைய மனித அரசாங்கங்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில்] எழும்பப் பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் [தற்போதைய அரசாங்கங்களையெல்லாம்] நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) இந்தப் பரலோக ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் அரசுரிமை சரியானதென நிரூபிக்கப்படும் என்பதே பைபிளின் மையப் பொருள். ‘கடைசி நாட்களின்’ முக்கிய அம்சங்களைப் பற்றி முன்னுரைத்தபோது இயேசு இவ்வாறு கூறினார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”​—மத்தேயு 24:⁠14.

முடிவு வரும்போது, யார் தப்பிப்பிழைப்பார்கள்? பைபிள் பதிலளிக்கிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்.” (நீதிமொழிகள் 2:21, 22) யெகோவாவின் சித்தத்தைக் கற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறவர்களே செவ்வையானவர்கள். இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) ஆம், இந்த ‘உலகம் . . . ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.’​—1 யோவான் 2:⁠17.

பைபிள் மேற்கோள்கள் அனைத்தும் தமிழ் யூனியன் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவை.