Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

யெகோவாவை நேசிக்கும் அன்பு உள்ளங்களே:

1971-ஆம் வருஷம், “தெய்வீகப் பெயர்” என்ற மாவட்ட மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் நிறைய புதிய பிரசுரங்களைப் பெற்றுகொண்டபோது பூரித்துப்போனார்கள். “நாங்கள் இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லி சந்தோஷப்பட்டார்கள். “எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களைப் பற்றி இவ்வளவு விறுவிறுப்பான தகவல்களை இதுவரை நான் படித்ததே இல்லை!” என்று அந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு சகோதரர் சொன்னார். அது எந்தப் புத்தகம்? “நான் யெகோவா என்று தேசத்தார் அறிந்துகொள்வார்கள்”—எப்படி? என்ற ஆங்கிலப் புத்தகம்தான் அது! அந்த புத்தகம் ஏன் அவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியது? எசேக்கியேல் புத்தகத்தில் இருக்கிற தீர்க்கதரிசனங்களுக்கான புதிய விளக்கங்கள் அதில் கொடுக்கப்பட்டிருந்தன. மனிதகுலத்தின் எதிர்காலத்தையே முடிவுசெய்யும் தீர்க்கதரிசனங்கள் அவை!

அந்தப் புத்தகம் வெளியான சமயத்திலிருந்து கடவுளுடைய மக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது—15 லட்சத்திலிருந்து 80 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. (ஏசா. 60:22) இவர்கள் 900-க்கும் அதிகமான மொழிகளைப் பேசுகிறார்கள். (சக. 8:23) கடவுளுடைய சக்தியால் எசேக்கியேல் பதிவு செய்த தீர்க்கதரிசனங்களை விளக்கும் ஒரு புத்தகத்தை இவர்களில் பலர் படித்ததே இல்லை.

அதுமட்டுமல்ல, 1971-லிருந்து வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசித்திருப்பதால், பைபிள் சத்தியங்களை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. (நீதி. 4:18) உதாரணத்துக்கு 1985-ல், “வேறே ஆடுகள்” எப்படி கடவுளின் நண்பர்களாகவும் நீதிமான்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டோம். (யோவா. 10:16; ரோ. 5:18; யாக். 2:23) “மிகுந்த உபத்திரவம்” நடக்கிற சமயத்தில்தான் “செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்” நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்பதை 1995-ல் முதல்முறையாகப் புரிந்துகொண்டோம். (மத். 24:21; 25:31, 32) இதனால், எசேக்கியேல் புத்தகத்தை நாம் புரிந்துகொண்ட விதத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

“மனிதகுமாரனே, உற்றுப் பார், கவனமாகக் கேள், நான் காட்டுகிற எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனி. அதற்காகத்தான் உன்னை இங்கே கொண்டுவந்திருக்கிறேன்.”​—எசேக்கியேல் 40:4

சமீப வருஷங்களில், வெளிச்சம் இன்னும் அதிகமாகப் பிரகாசித்திருக்கிறது. இயேசு சொன்ன உவமைகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். புதிய விளக்கங்கள் கிடைத்த பிறகு, அந்த உவமைகளில் இருக்கும் பாடங்களை நம்மால் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அவர் சொன்ன நிறைய உவமைகள், சீக்கிரத்தில் வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தின்போது நடக்கப்போகிற சம்பவங்களைக் குறிக்கின்றன. இந்த உவமைகளுக்குப் புதிய விளக்கம் கிடைத்தது போலவே, எசேக்கியேல் புத்தகத்தில் இருக்கிற சில தீர்க்கதரிசனங்களுக்கும் புதிய விளக்கம் கிடைத்திருக்கிறது. உதாரணத்துக்கு, (1) மாகோகு தேசத்தின் கோகு (38, 39 அதிகாரங்கள்), (2) செயலாளருடைய மைப் பெட்டியை வைத்திருப்பவர் செய்யும் வேலை (9-ஆம் அதிகாரம்), (3) சமவெளியில் கிடந்த காய்ந்துபோன எலும்புகள் மற்றும் அடையாள அர்த்தத்தில் ஒன்றுசேர்க்கப்பட்ட இரண்டு கோல்கள் (37-ஆம் அதிகாரம்) போன்ற தீர்க்கதரிசனங்களைச் சொல்லலாம். இந்தப் புதிய விளக்கங்கள், “நான் யெகோவா என்று தேசத்தார் அறிந்துகொள்வார்கள்”—எப்படி? என்ற ஆங்கிலப் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட விளக்கங்களை மாற்றீடு செய்கின்றன.

அதனால்தான், ‘எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களுக்கான புதிய விளக்கங்கள் அடங்கிய புத்தகம் எப்போது கிடைக்கும்?’ என்று யெகோவாவின் மக்களில் பலர் கேட்டிருக்கிறார்கள். தூய வணக்கம்—பூமியெங்கும்! என்ற புத்தகம், அவர்கள் எல்லாருடைய ஆசையையும் கண்டிப்பாகத் திருப்திசெய்யும். இந்தப் புத்தகத்தில் 22 அதிகாரங்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்து, அதில் இருக்கிற அழகான படங்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பதற்காக எந்தளவு ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது என்பதை நினைத்து நீங்கள் ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள். எசேக்கியேல் என்ற அற்புதமான பைபிள் புத்தகத்தை யெகோவா ஏன் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் ஆழமாக யோசித்தோம், உருக்கமாக ஜெபம் செய்தோம். பின்வரும் கேள்விகளுக்கு அதிக கவனம் செலுத்தினோம்: எசேக்கியேலின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும், நம் காலத்தில் வாழ்கிறவர்களுக்கும் தேவையான என்னென்ன பாடங்கள் எசேக்கியேல் புத்தகத்தில் இருக்கின்றன? எந்தெந்த தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களைப் பற்றிச் சொல்கின்றன? எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டிருக்கிற ஒவ்வொரு விஷயத்துக்கும் அடையாள அர்த்தம் இருக்கிறதா என நாம் யோசிக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், நாம் விரும்பிப் படிக்கிற எசேக்கியேல் புத்தகத்தை இதுவரை இல்லாத அளவுக்குத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவியிருக்கின்றன.

எசேக்கியேல் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை படிக்கும்போது, யெகோவாவுடைய அமைப்பின் பரலோகப் பாகத்தை பார்த்து நீங்கள் பிரமித்துப்போவீர்கள்! யெகோவா ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவரை வணங்க விரும்புகிறவர்கள், பரலோகத்தில் இருந்தாலும் சரி, பூமியில் இருந்தாலும் சரி, அவர்கள் எல்லாருக்கும் உயர்ந்த நெறிமுறைகளை அவர் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் படிக்கும்போது அசந்துபோய்விடுவீர்கள்! தன்னுடைய மக்களுக்காக யெகோவா ஏற்கெனவே செய்திருக்கிற விஷயங்களுக்கும், எதிர்காலத்தில் செய்யப்போகிற விஷயங்களுக்கும் அதிக நன்றியுள்ளவர்களாக இருக்க தூய வணக்கம் என்ற இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். முக்கியமான இரண்டு விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். (1) யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால், அவர்தான் இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசர் என்பதை தெரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். (2) யெகோவா ஏற்றுக்கொள்கிற விதத்தில் நாம் அவரை வணங்க வேண்டும், அதாவது அவருடைய உயர்ந்த நெறிமுறைகளின்படி வாழ வேண்டும்.

யெகோவாவின் மகத்தான, பரிசுத்தமான பெயருக்குப் புகழ்சேர்க்கும் விதத்தில் அவரை வணங்க வேண்டும் என்று நீங்கள் ஏற்கெனவே தீர்மானம் எடுத்திருப்பீர்கள். இந்தப் புத்தகம் உங்கள் தீர்மானத்தை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதேசமயத்தில், யெகோவா யார் என்பதை எல்லா தேசங்களும் புரிந்துகொள்ளும் காலத்துக்காக ஆவலோடு காத்திருக்கவும் இந்தப் புத்தகம் உங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்!—எசே. 36:23; 38:23.

எசேக்கியேல் தீர்க்கதரிசி, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதிய புத்தகத்தைப் புரிந்துகொள்வதற்காக நீங்கள் எடுக்கிற எல்லா முயற்சியையும் நம் அன்புத் தகப்பனான யெகோவா ஆசீர்வதிக்கட்டும்!

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு