அதிகாரம் 5
“அவர்கள் செய்கிற அக்கிரமங்களையும் அருவருப்பான காரியங்களையும் பார்”
முக்கியக் குறிப்பு: விசுவாசதுரோகிகளான யூத மக்களின் ஆன்மீக மற்றும் ஒழுக்கச் சீர்குலைவு
1-3. எருசலேம் ஆலயத்தில், எசேக்கியேல் எதைப் பார்க்க வேண்டுமென்று யெகோவா விரும்பினார், ஏன்? (பகுதி 2-ன் ஆரம்ப வார்த்தைகளையும், படத்தையும் பாருங்கள்.)
எசேக்கியேல், ஒரு ஆலய குருவின் மகன். அவர் திருச்சட்டத்தை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். எருசலேம் ஆலயத்தைப் பற்றியும் அங்கே யெகோவாவுக்குச் செலுத்தப்பட வேண்டிய தூய வணக்கத்தைப் பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (எசே. 1:3; மல். 2:7) ஆனால், கி.மு. 612-ல் யெகோவாவுடைய ஆலயத்தில் நடந்த விஷயங்கள் எசேக்கியேலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். அவருக்கு மட்டுமல்ல, விசுவாசமுள்ள எந்தவொரு யூதருக்கும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
2 ஆலயத்தில் நடக்கிற வேதனை தரும் விஷயங்களை எசேக்கியேல் பார்க்க வேண்டுமென்றும் அதைத் தன்னுடைய வீட்டில் கூடியிருந்த ‘யூதாவின் பெரியோர்களிடம்’ சொல்ல வேண்டுமென்றும் யெகோவா விரும்பினார். அந்தப் பெரியோர்களும் சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள்தான். (எசேக்கியேல் 8:1-4-ஐ வாசியுங்கள்; எசே. 11:24, 25; 20:1-3) எசேக்கியேல், பாபிலோனில் இருக்கும் கேபார் ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள தெல்-ஆபீபில் தன்னுடைய வீட்டில் இருக்கிறார். யெகோவா, தன்னுடைய சக்தியின் மூலம் பாபிலோனுக்கு மேற்கே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற எருசலேமுக்கு அவரை ஒரு தரிசனத்தில் கொண்டுபோகிறார். அங்கே ஆலயத்திலுள்ள உட்பிரகாரத்தின் வடக்கு வாசலில் அவரைக் கொண்டுபோய் விடுகிறார். பிறகு, அந்த ஆலயத்தை யெகோவா சுற்றிக்காட்டுகிறார்.
3 அதிர்ச்சியூட்டும் நான்கு காட்சிகளை எசேக்கியேல் அங்கே பார்க்கிறார். தேசத்தில் தூய வணக்கம் எந்தளவுக்குக் கறைபட்டிருக்கிறது என்பதை அவை
காட்டுகின்றன. யெகோவாவுக்குச் செலுத்தப்பட வேண்டிய தூய வணக்கத்துக்கு என்ன ஆனது? இந்தத் தரிசனத்திலிருந்து இன்று நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அதைத் தெரிந்துகொள்ள எசேக்கியேலோடு சேர்ந்து நாமும் போகலாம். ஆனால் முதலில், யெகோவா தன்னுடைய வணக்கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.“நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும்”
4. யெகோவா தன்னுடைய வணக்கத்தாரிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்?
4 தன்னுடைய வணக்கத்தாரிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை எசேக்கியேலின் காலத்துக்கு சுமார் 900 வருஷங்களுக்கு முன்பே யெகோவா தெளிவாகச் சொன்னார். இஸ்ரவேலர்களுக்கு * கொடுத்த பத்துக் கட்டளைகளில் இரண்டாவது கட்டளையில் அவர் இப்படிச் சொன்னார்: “நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” (யாத். 20:5) தன்னுடைய வணக்கத்தார் வேறு கடவுள்களை வணங்கினால் அதை யெகோவா பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. தூய வணக்கத்தின் முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 2-ஆம் அதிகாரத்தில் பார்த்தோம். யெகோவா மட்டும்தான் நம்முடைய வணக்கத்தைப் பெறத் தகுதியானவர் என்பதுதான் முதல் அம்சம். அதனால், அவரை வணங்குகிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அவருக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும். (யாத். 20:3) சுருக்கமாகச் சொன்னால், தன்னை வணங்குகிறவர்கள் உண்மை வணக்கத்தோடு பொய் வணக்கத்தைக் கலக்கக் கூடாது, வணக்கம் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். கி.மு. 1513-ல், இஸ்ரவேலர்கள் திருச்சட்ட ஒப்பந்தத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள். அப்படிச் செய்ததன் மூலம் யெகோவாவை மட்டுமே வணங்குவதாக ஒத்துக்கொண்டார்கள். (யாத். 24:3-8) யெகோவா, எப்போதும் தான் செய்த ஒப்பந்தங்களை மீறாமல் அதற்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். இஸ்ரவேலர்களும் திருச்சட்ட ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு, அதற்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார்.—உபா. 7:9, 10; 2 சா. 22:26.
5, 6. இஸ்ரவேலர்கள் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்த்தார்?
5 இஸ்ரவேலர்கள் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்த்தது நியாயமானதா? ஆம், அதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால், அவர் சர்வவல்லமையுள்ள கடவுள், உன்னதப் பேரரசர், உயிரின் ஊற்றுமூலர், உயிர்வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பவர். (சங். 36:9; அப். 17:28) இஸ்ரவேலர்களுக்கு அவர் விடுவிக்கிறவராகவும் இருந்தார். அவர்களுக்கு பத்துக் கட்டளைகளைக் கொடுத்தபோது, “எகிப்து தேசத்தில் அடிமைகளாக அடைபட்டிருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான்” என்று ஞாபகப்படுத்தினார். (யாத். 20:2) ஆம், இஸ்ரவேலர்களின் வணக்கத்தைப் பெற யெகோவா மட்டுமே தகுதியானவராக இருந்தார்.
6 யெகோவா மாறாதவர். (மல். 3:6) தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று அவர் எப்போதுமே வலியுறுத்தியிருக்கிறார். எசேக்கியேலுக்கு தரிசனத்தில் காட்டிய வேதனைதரும் நான்கு காட்சிகளைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
முதல் காட்சி: எரிச்சல் மூட்டுகிற சிலை
7. (அ) ஆலயத்தின் வடக்கு வாசலில், விசுவாசதுரோக யூதர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள், அதைப் பார்த்து யெகோவா எப்படி உணர்ந்தார்? (ஆரம்பப் படம்.) (ஆ) என்ன அர்த்தத்தில் யெகோவா எரிச்சலடைந்தார்? (அடிக்குறிப்பு 2.)
7 எசேக்கியேல் 8:5, 6-ஐ வாசியுங்கள். இந்தக் காட்சியைப் பார்த்து எசேக்கியேல் ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருப்பார். ஆலயத்தின் வடக்கு வாசலில், விசுவாசதுரோக யூதர்கள் ஒரு சிலையை வணங்கிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிலை, அஷேரா என்ற பெண் தெய்வத்துக்கு அடையாளமான பூஜைக் கம்பமாக இருந்திருக்கலாம். கானானியர்கள் இந்தத் தெய்வத்தை பாகாலின் மனைவியாகக் கருதினார்கள். எப்படியிருந்தாலும் சரி, சிலைகளை வணங்கிய அந்த இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டார்கள். அவருக்கு மட்டுமே முழுமையாகச் செலுத்த வேண்டிய பக்தியை ஒரு சிலைக்குக் கொடுப்பதன் மூலம் அவர்கள் அவருக்கு எரிச்சல் மூட்டினார்கள். யெகோவாவுக்கு வந்த கோபம் நியாயமானதுதான். * (உபா. 32:16; எசே. 5:13) இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: 400 வருஷங்களுக்கும் மேலாக, ஆலயத்தில் யெகோவாவின் பிரசன்னம் இருந்தது. (1 ரா. 8:10-13) ஆனால், யெகோவா “ஆலயத்தைவிட்டுத் தூரமாகப் போகுமளவுக்கு” அவர்கள் அந்த ஆலய வளாகத்துக்குள்ளேயே சிலை வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.
8. எரிச்சல் மூட்டுகிற சிலையைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 எரிச்சல் மூட்டுகிற சிலையைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? விசுவாசதுரோகம் செய்த யூதா தேசம், இன்றுள்ள கிறிஸ்தவமண்டலத்தை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் சிலை வழிபாடு சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது. அதனால், மக்கள் அங்கே கடவுளை வணங்குவதாகச் சொல்லிக்கொண்டாலும், அவர்களுடைய வணக்கத்தை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. விசுவாசதுரோகம் செய்த யூதா தேசத்தின் மீது அவர் தன்னுடைய நியாயமான கோபத்தைக் காட்டியது போலவே கிறிஸ்தவமண்டலத்தின் மீதும் அவர் கோபத்தைக் காட்டுவார். ஏனென்றால், யெகோவா மாறாதவர். (யாக். 1:17) இன்றுள்ள கிறிஸ்தவமண்டலத்தை விட்டு அவர் தூரமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
9, 10. ஆலயத்தில், சிலை வழிபாட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து எச்சரிப்பூட்டும் என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?
9 ஆலயத்தில், சிலை வழிபாட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து எச்சரிப்பூட்டும் என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவுக்கு முழு பக்தியைக் காட்ட வேண்டுமென்றால், நாம் ‘சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓட’ வேண்டும். (1 கொ. 10:14) ஒருவேளை, ‘நான் உருவங்களையோ சிலைகளையோ வைத்து யெகோவாவை வணங்குவதில்லையே’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், மறைமுகமான விதங்களில்கூட நாம் சிலை வழிபாட்டில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. ஒரு பைபிள் ஆராய்ச்சிப் புத்தகம் சொல்கிறபடி, கடவுளைவிட வேறு எதையாவது அதிக முக்கியமானதாக, மதிப்புள்ளதாக அல்லது உயர்ந்ததாக நாம் நினைத்தால் ஒருவிதத்தில் சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறோம் என்றுதான் அர்த்தம். அப்படியானால், நம் வாழ்க்கையில் வேறு எதற்காவது முதலிடம் கொடுத்து, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய முழு பக்தியை செலுத்தாமல் போய்விட்டால் அதுவும் சிலை வழிபாடுதான். உதாரணத்துக்கு, சொத்துப்பத்து, பணம், பொருள், செக்ஸ், பொழுதுபோக்கு என வேறு எதற்கு முதலிடம் கொடுத்தாலும் அது சிலை வழிபாடுதான். (மத். 6:19-21, 24; எபே. 5:5; கொலோ. 3:5) எல்லா விதமான சிலை வழிபாட்டிலிருந்தும் நாம் விலகியிருக்க வேண்டும். ஏனென்றால், யெகோவா மட்டுமே நம் வணக்கத்தைப் பெறத் தகுதியானவர்.—1 யோ. 5:21.
10 முதல் காட்சியில், மக்கள் செய்த “மோசமான காரியங்களை . . . அருவருப்பான காரியங்களை” எசேக்கியேலுக்கு யெகோவா காட்டினார். ஆனாலும், யெகோவா தன்னுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசியிடம், “இதைவிட அருவருப்பான காரியங்களை நீ பார்க்கப்போகிறாய்” என்று சொன்னார். ஆலய வளாகத்தில், எரிச்சல் மூட்டுகிற சிலையை வைத்து வழிபடுவதைவிட அருவருப்பான விஷயம் வேறு எதுவாக இருக்கும்?
இரண்டாம் காட்சி: பெரியோர்கள் 70 பேர் பொய்க் கடவுள்களுக்குத் தூபம் காட்டுகிறார்கள்
11. பலிபீடத்துக்குப் பக்கத்திலிருந்த உட்பிரகாரத்துக்குப் போன பிறகு, வேதனைதரும் என்ன காட்சியை எசேக்கியேல் பார்த்தார்?
11 எசேக்கியேல் 8:7-12-ஐ வாசியுங்கள். சுவரிலிருந்த ஓட்டையைப் பெரிதாக்கி பலிபீடத்துக்குப் பக்கத்திலிருந்த உட்பிரகாரத்துக்கு எசேக்கியேல் போனபோது வேதனைதரும் ஒரு காட்சியைப் பார்த்தார். “ஊரும் பிராணிகளின் உருவங்களும், அருவருப்பான மிருகங்களின் உருவங்களும், . . . எல்லா அருவருப்பான சிலைகளும்” சுவர் முழுக்க செதுக்கப்பட்டிருந்ததை அவர் பார்த்தார். * அவை பொய்க் கடவுள்களின் உருவங்களாக இருந்தன. அடுத்ததாக, இதைவிட வேதனைதரும் விஷயத்தை எசேக்கியேல் பார்த்தார். “இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்களில் 70 பேர் . . . இருட்டான உள்ளறைகளில்” அந்தப் பொய்க் கடவுள்களுக்கு தூபம் காட்டிக்கொண்டிருந்தார்கள். திருச்சட்டத்தின்படி, நல்ல வாசனை தரும் தூபப்பொருளை எரிப்பது, உண்மை வணக்கத்தார் செய்யும் ஜெபங்களுக்கு அடையாளமாக இருந்தது. (சங். 141:2) ஆனால், அந்த 70 பெரியோர்கள் பொய்க் கடவுள்களுக்குக் காட்டிய தூபம், யெகோவாவின் பார்வையில் அசுத்தமானதாக, துர்நாற்றம் வீசுவதாக இருந்தது. அவர்களுடைய ஜெபங்கள் அவருக்கு அருவருப்பானதாக இருந்தன. (நீதி. 15:8) அந்தப் பெரியோர்கள், “யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை” என்று சொல்லி தங்களையே ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களை யெகோவா பார்த்துக்கொண்டுதான் இருந்தார். தன்னுடைய ஆலயத்தில் அவர்கள் செய்துகொண்டிருந்த எல்லாவற்றையும் எசேக்கியேலுக்குக் காட்டினார்.
12. ‘இருட்டான உள்ளறைகளில்கூட’ நாம் ஏன் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்? இந்த விஷயத்தில், முக்கியமாக யார் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும்?
12 பொய்க் கடவுள்களுக்குத் தூபம் காட்டிய அந்த 70 பெரியோர்களைப் பற்றிய எசேக்கியேலின் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுள் நம்முடைய ஜெபங்களைக் கேட்க வேண்டுமென்றால், அதாவது நம்முடைய வணக்கம் அவருக்கு முன் சுத்தமானதாக இருக்க வேண்டுமென்றால், ‘இருட்டான உள்ளறைகளில்கூட’ நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். (நீதி. 15:29) நாம் செய்யும் எல்லாவற்றையும் யெகோவாவினால் பார்க்க முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. யெகோவா நமக்கு நிஜமானவராக இருந்தால், தனியாக இருக்கும்போதுகூட அவருக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டோம். (எபி. 4:13) முக்கியமாக, பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதில், மூப்பர்கள் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும். (1 பே. 5:2, 3) தங்கள் முன்னால் நின்று கூட்டங்களைத் தலைமைதாங்கி நடத்துகிற ஒரு மூப்பர், ‘இருட்டான உள்ளறைகளில்கூட,’ அதாவது மற்றவர்கள் பார்க்காதபோதுகூட பைபிள் நியமங்களின்படி வாழ வேண்டுமென்று சபையார் எதிர்பார்ப்பது நியாயமானதுதான்.—சங். 101:2, 3.
மூன்றாம் காட்சி: “பெண்கள் . . . தம்மூஸ் தெய்வத்துக்காக அழுதுகொண்டிருந்தார்கள்”
13. ஆலயத்தின் ஒரு வாசலில், விசுவாசதுரோகப் பெண்கள் என்ன செய்துகொண்டிருந்ததை எசேக்கியேல் பார்த்தார்?
13 எசேக்கியேல் 8:13, 14-ஐ வாசியுங்கள். அருவருப்பான இரண்டு காட்சிகளை காட்டிய பிறகு, யெகோவா மறுபடியும் எசேக்கியேலிடம், “அவர்கள் இதைவிட மிகவும் அருவருப்பான காரியங்கள் செய்வதை நீ பார்க்கப்போகிறாய்” என்று சொன்னார். அப்படியானால், அடுத்ததாக எசேக்கியேல் எதைப் பார்த்தார்? ‘ஆலயத்தின் வடக்கு நுழைவாசலில் . . . பெண்கள் உட்கார்ந்து தம்மூஸ் தெய்வத்துக்காக அழுதுகொண்டிருந்ததை’ அவர் பார்த்தார். மெசொப்பொத்தாமியாவில் இருந்தவர்கள் தம்மூஸ் என்ற தெய்வத்தை வணங்கினார்கள். * இது, கருவள தெய்வமான இஷ்டாருடைய காதலனாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தம்மூசின் மரணத்தோடு சம்பந்தப்பட்ட ஏதோவொரு மதச் சடங்கின் பாகமாக அந்த இஸ்ரவேல் பெண்கள் அழுதுகொண்டிருந்தார்கள். யெகோவாவின் ஆலயத்தில் தம்மூசுக்காக அழுதுகொண்டிருந்ததன் மூலம், தூய வணக்கம் செலுத்தப்பட வேண்டிய இடத்தில் ஒரு பொய் மதச் சடங்கை அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். ஒரு பொய் மதச் சடங்கு கடவுளுடைய ஆலயத்தில் செய்யப்பட்டதால் அவர் அதை ஏற்றுக்கொண்டாரா? இல்லவே இல்லை. விசுவாசதுரோகிகளான அந்தப் பெண்கள் செய்தது யெகோவாவின் பார்வையில் ‘அருவருப்பாக’ இருந்தது.
14. விசுவாசதுரோகப் பெண்கள் செய்ததை யெகோவா கருதிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 அந்தப் பெண்கள் செய்ததை யெகோவா கருதிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நம்முடைய வணக்கம் சுத்தமானதாக இருக்க வேண்டுமென்றால், நாம் ஒருபோதும் பொய் மதப் பழக்கங்களில் ஈடுபடக் கூடாது. பொய் மதத்திலிருந்து வந்த எந்தவொரு கொண்டாட்டத்திலும் நாம் ஈடுபடக் கூடாது. ஒரு பண்டிகையின் ஆரம்பத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது அந்தளவு முக்கியமா? முக்கியம்தான்! இன்று கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகைகளோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தோன்றலாம். ஆனால், நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. இன்று கொண்டாடப்படும் பண்டிகைகள், பொய் மதப் பழக்கங்களிலிருந்து வந்தவைதான் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். பொய் மதப் பழக்கவழக்கங்களை மக்கள் பல காலமாகச் செய்துவருவதாலோ, தூய வணக்கத்தோடு கலப்பதாலோ அவற்றை அந்தளவுக்கு அருவருப்பாக யெகோவா கருத மாட்டார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை.—2 கொ. 6:17; வெளி. 18:2, 4.
நான்காம் காட்சி: 25 ஆண்கள் “சூரியனைக் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்”
15, 16. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் 25 ஆண்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அவர்களுடைய செயல்கள் யெகோவாவின் மனதை ஏன் ரொம்பவே புண்படுத்தின?
15 எசேக்கியேல் 8:15-18-ஐ வாசியுங்கள். ஒவ்வொரு காட்சியையும் காட்டுவதற்கு முன் சொன்ன அதே வார்த்தைகளைச் சொல்லி நான்காவது காட்சியை எசேக்கியேலுக்கு யெகோவா காட்டினார். “இதைவிட அதிக அருவருப்பான காரியங்களை நீ பார்க்கப்போகிறாய்” என்று சொன்னார். ‘இதுவரை பார்த்த காட்சிகளைவிட மோசமானவை ஏதாவது இருக்க முடியுமா?’ என்று எசேக்கியேல் ஒருவேளை நினைத்திருக்கலாம். அவர் இப்போது ஆலயத்தின் உட்பிரகாரத்தில் இருக்கிறார். அங்கே, ஆலயத்தின் நுழைவாசலில் 25 ஆண்கள் “கிழக்கே பார்த்து சூரியனைக் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.” இப்படிச் செய்ததன் மூலம் அவர்கள் யெகோவாவை ரொம்பவே அவமதித்தார்கள். எந்த விதத்தில்?
16 இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்: கடவுளுடைய ஆலயத்தின் நுழைவாசல் கிழக்கே பார்த்தபடி இருந்தது. அதனால், ஆலயத்துக்குள் வருபவர்கள் கிழக்கிலிருந்து மேற்கே பார்த்தபடி உள்ளே நுழைவார்கள். அப்போது அவர்களுடைய முதுகு கிழக்கே சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்தபடி இருக்கும். ஆனால், தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த அந்த 25 ஆண்கள், “ஆலயத்தின் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு, கிழக்கே பார்த்து சூரியனைக் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.” இப்படி, ‘யெகோவாவின் ஆலயத்துக்கு’ அவர்கள் முதுகைக் காட்டியது யெகோவாவுக்கே முதுகைக் காட்டியதுபோல் இருந்தது. (1 ரா. 8:10-13) அந்த 25 ஆண்கள் விசுவாசதுரோகிகளாக இருந்தார்கள். அவர்கள் யெகோவாவை ஒதுக்கித்தள்ளினார்கள். அதோடு உபாகமம் 4:15-19-லுள்ள கட்டளையை மீறினார்கள். முழு பக்தியையும் பெறத் தகுதியுள்ள கடவுளை அவர்கள் எந்தளவுக்கு அவமதித்திருக்கிறார்கள்!
தன்னுடைய வணக்கத்தாரிடமிருந்து முழு பக்தியையும் பெற யெகோவா மட்டுமே தகுதியானவர்
17, 18. (அ) சூரியனைக் கும்பிட்டவர்களைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் யாருடைய பந்தத்தையெல்லாம் இழந்தார்கள், எப்படி?
17 சூரியனைக் கும்பிட்டவர்களைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நம் வணக்கம் சுத்தமானதாக இருக்க வேண்டுமென்றால் புரிந்துகொள்ளுதலுக்காகவும் ஞானத்துக்காகவும் நாம் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். “கடவுளாகிய யெகோவா ஒரு சூரியன்” என்பதையும் அவருடைய வார்த்தை நம் பாதைக்கு ‘வெளிச்சம்’ என்பதையும் மனதில் வையுங்கள். (சங். 84:11; 119:105) அவருடைய வார்த்தை மற்றும் அமைப்பு தரும் பிரசுரங்கள் மூலம் அவர் நமக்கு ஞானத்தைத் தருகிறார். இது நல்ல தீர்மானங்களை எடுக்க நமக்கு உதவும். அதன்மூலம் இப்போது திருப்தியான வாழ்க்கையை வாழவும், எதிர்காலத்தில் முடிவில்லாத வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த உலகத்தின் ஞானத்தை நம்பியிருந்தால், நாம் யெகோவாவுக்கு நம் முதுகைக் காட்டுகிறவர்களாக இருப்போம். அவரை இப்படி ரொம்பவே அவமதிப்பது, அவருடைய மனதுக்கு அதிக வேதனையாக இருக்கும். நம் கடவுளிடம் அப்படி நடந்துகொள்ள நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம். எசேக்கியேலின் தரிசனம் மற்றொரு எச்சரிப்பையும் நமக்குத் தருகிறது: சத்தியத்தை ஒதுக்கித்தள்ளுகிற விசுவாசதுரோகிகளை நாமும் ஒதுக்கித்தள்ள வேண்டும்.—நீதி. 11:9.
18 சிலை வழிபாடு மற்றும் பொய் வணக்கம் சம்பந்தமாக எசேக்கியேல் பார்த்த அதிர்ச்சியூட்டும் நான்கு காட்சிகளைப் பற்றி இதுவரை சிந்தித்தோம். விசுவாசதுரோகிகளான யூதா மக்களின் வணக்கம் எந்தளவுக்கு அருவருப்பாக இருந்தது என்பதை அந்தக் காட்சிகள் காட்டின. அதனால், கடவுளோடு அவர்கள் வைத்திருந்த பந்தம் பாதிக்கப்பட்டது. வணக்க விஷயத்தில் அசுத்தமாக இருப்பவர்கள் கண்டிப்பாக ஒழுக்க விஷயத்திலும் அசுத்தமாகத்தான் இருப்பார்கள். இஸ்ரவேலர்கள் விசுவாசதுரோகிகளாக ஆன பிறகு, எல்லா விதமான ஒழுக்கங்கெட்ட விஷயங்களிலும் ஈடுபட்டார்கள். அதனால், கடவுளோடு அவர்களுக்கு இருந்த பந்தம் மட்டுமல்ல, மற்றவர்களோடு அவர்களுக்கு இருந்த பந்தமும் பாதிக்கப்பட்டது. இப்போது, விசுவாசதுரோக யூதா தேசத்து மக்களின் ஒழுக்கச் சீர்குலைவைப் பற்றி கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் என்ன சொல்கிறார் என்பதை பார்க்கலாம்.
ஒழுக்கச் சீர்குலைவு—‘ஆபாசமாக நடக்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்’
19. ஒழுக்க விஷயத்தில் யெகோவாவின் மக்கள் படு மோசமாக நடந்துகொண்டதை எசேக்கியேல் எப்படி விவரித்தார்?
19 எசேக்கியேல் 22:3-12-ஐ வாசியுங்கள். தேசத்திலிருந்த ஆட்சியாளர்களும் சரி, மக்களும் சரி, ஒழுக்கக்கேட்டில் ஊறிப்போயிருந்தார்கள். “தலைவர்கள்” தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களைக் கொலை செய்தார்கள். தங்களுடைய தலைவர்களைப் போலவே மக்களும் திருச்சட்டத்தை அவமதித்தார்கள். குடும்பத்தில், பிள்ளைகள் தங்களுடைய அப்பாவையும் அம்மாவையும் ‘மதிக்கவில்லை.’ அதோடு, நெருங்கிய இரத்தச் சொந்தங்களோடு உறவுகொள்வது சர்வசாதாரணமாக இருந்தது. கலகக்கார இஸ்ரவேலர்கள், தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருந்தவர்களை ஏமாற்றினார்கள். அப்பா இல்லாத பிள்ளைகளையும் விதவைகளையும் மோசமாக நடத்தினார்கள். இஸ்ரவேல் ஆண்கள், அடுத்தவர்களுடைய மனைவிகளைப் பலாத்காரம் செய்தார்கள். பேராசை பிடித்த மக்கள் மற்றவர்களிடம் லஞ்சம் வாங்கினார்கள், பணத்தைப் பறித்தார்கள், அநியாயமாக வட்டி வாங்கினார்கள். இப்படி, தான் அன்போடு கொடுத்த சட்டங்களை தன்னுடைய மக்கள் ஒதுக்கித்தள்ளி, அவற்றை அவமதித்ததைப் பார்த்து யெகோவா எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்! ஒழுக்க விஷயத்தில், அவர்கள் படு மோசமாக நடந்துகொண்டது யெகோவாவின் மனதை ரொம்பவே புண்படுத்தியது. ஒழுக்கங்கெட்ட அந்த மக்களிடம் போய், ‘நீங்கள் என்னை அடியோடு மறந்துவிட்டீர்கள்’ என்று சொல்லும்படி எசேக்கியேலிடம் அவர் சொன்னார்.
20. ஒழுக்க விஷயத்தில், யூதா மக்கள் மோசமாக நடந்துகொண்டதைப் பற்றிய எசேக்கியேலின் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
20 ஒழுக்க விஷயத்தில், யூதா மக்கள் மோசமாக நடந்துகொண்டதைப் பற்றிய எசேக்கியேலின் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இன்றுள்ள மக்களும் ஒழுக்க விஷயத்தில் விசுவாசதுரோக யூதா மக்களைப் போலவே இருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பொதுமக்களை அடக்கி ஒடுக்கியிருக்கிறார்கள். மதத் தலைவர்கள், முக்கியமாக, கிறிஸ்தவமண்டல குருமார்கள், கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பதற்குக் காரணமாக இருந்த போர்களை ஆசீர்வதித்திருக்கிறார்கள். அதோடு,
பாலியல் சம்பந்தமாக பைபிளில் சொல்லப்பட்டுள்ள தூய்மையான, தெளிவான ஒழுக்க நெறிகளை அசட்டை செய்திருக்கிறார்கள். அதனால், இந்த உலகத்தின் ஒழுக்க நெறிகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகின்றன. விசுவாசதுரோக யூதா மக்களிடம், ‘நீங்கள் என்னை அடியோடு மறந்துவிட்டீர்கள்’ என்று யெகோவா சொன்னது போலவே கிறிஸ்தவமண்டலத்திடமும் சொல்வார்.21. பூர்வ யூதா மக்கள் ஒழுக்க விஷயத்தில் அசுத்தமாக நடந்துகொண்டதிலிருந்து, நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
21 பூர்வ யூதா மக்கள் ஒழுக்க விஷயத்தில் அசுத்தமாக நடந்துகொண்டதிலிருந்து, யெகோவாவின் மக்களாகிய நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவா விரும்பும் விதத்தில் அவரை நாம் வணங்க வேண்டுமென்றால், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நம்முடைய நடத்தை சுத்தமாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தில் கறைபட்டுப்போன இந்த உலகத்தில் ஒழுக்கமாக வாழ்வது ஒரு சாதாரண விஷயமே கிடையாது. (2 தீ. 3:1-5) எல்லா விதமான ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றியும் யெகோவா எப்படி உணர்கிறார் என்பது நமக்குத் தெரியும். (1 கொ. 6:9, 10) யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் நாம் நேசிப்பதால், நாம் அவருடைய ஒழுக்க நெறிகளுக்குக் கீழ்ப்படிகிறோம். (சங். 119:97; 1 யோ. 5:3) ஒழுக்க விஷயத்தில் அசுத்தமானவர்களாக ஆகிவிட்டால், பரிசுத்தமான, தூய்மையான நம் கடவுள்மீது நமக்கு அன்பு இல்லை என்றுதான் அர்த்தம். யெகோவா நம்மைப் பார்த்து, “நீ . . . என்னை அடியோடு மறந்துவிட்டாய்” என்று சொல்வதற்கு நாம் கொஞ்சமும் இடம்கொடுக்கக் கூடாது.
22. (அ) பூர்வ யூதா மக்களைப் பற்றி யெகோவா வெளிச்சம்போட்டு காட்டிய விஷயங்களைப் படித்த பிறகு, நீங்கள் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
22 பூர்வ யூதா மக்களின் ஆன்மீக மற்றும் ஒழுக்கச் சீர்குலைவை யெகோவா வெளிச்சம்போட்டு காட்டியதைப் பற்றி இதுவரை பார்த்தோம். அதிலிருந்து முக்கியமான சில பாடங்களைக் கற்றுக்கொண்டோம். நம் முழு பக்தியையும் பெறத் தகுதியுள்ளவரான யெகோவாவுக்கே நம் வணக்கத்தைச் செலுத்துவோம் என்ற தீர்மானத்தில் இன்னும் உறுதியாக இருக்க இது உதவியிருக்கிறது. அதனால், எல்லா விதமான சிலை வழிபாட்டையும் நாம் தவிர்க்க வேண்டும்; ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருக்க வேண்டும். தனக்கு உண்மையில்லாமல் போன அந்த மக்களை யெகோவா என்ன செய்தார்? ஆலயத்தில் நடந்த விஷயங்களைக் காட்டிய பிறகு, எசேக்கியேலிடம், “நான் கோபத்தில் கொதித்தெழுவேன்” என்று யெகோவா சொன்னார். (எசே. 8:17, 18) உண்மையில்லாமல் போன அந்த யூதா தேசத்துக்கு எதிராக யெகோவா என்ன செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் விரும்புகிறோம். ஏனென்றால், இந்தப் பொல்லாத உலகத்துக்கும் அதே தீர்ப்புதான் கிடைக்கப்போகிறது. யூதா தேசத்துக்கு எதிரான யெகோவாவின் தண்டனைத் தீர்ப்புகள் எப்படி நிறைவேறின என்று அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.
^ பாரா. 4 எசேக்கியேல் புத்தகத்தில், “இஸ்ரவேல்” என்று சொல்லப்பட்டுள்ள வார்த்தை, பொதுவாக யூதா மற்றும் எருசலேம் குடிமக்களைக் குறிக்கிறது.—எசே. 12:19, 22; 18:2; 21:2, 3.
^ பாரா. 7 “எரிச்சல் மூட்டுகிற” என்ற சொற்றொடர், தன்னுடைய மக்கள் தனக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பதை யெகோவா எந்தளவு முக்கியமானதாகக் கருதுகிறார் என்பதைக் காட்டுகிறது. ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு உண்மையில்லாமல் போகும்போது, அவர் பொறாமையால், அதாவது எரிச்சலால், கொதித்தெழுவதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. (நீதி. 6:34) தன்னுடைய மக்கள் சிலை வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் தனக்கு உண்மையில்லாமல் போகும்போது, யெகோவாவும் அந்தக் கணவரைப் போலவே கொதிப்படைகிறார். ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “கடவுள் எரிச்சல்படுவது . . . அவருடைய பரிசுத்தத்தன்மையின் வெளிக்காட்டாக இருக்கிறது. அவர் மட்டுமே பரிசுத்தமானவர். . . . தனக்குச் சேர வேண்டிய வணக்கத்தை வேறு யாருக்கும் அவர் விட்டுக்கொடுக்க மாட்டார்.”—யாத். 34:14.
^ பாரா. 11 ‘அருவருப்பான சிலைகள்’ என்பதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்பதற்கான எபிரெய வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
^ பாரா. 13 நிம்ரோதின் இன்னொரு பெயர்தான் தம்மூஸ் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரம் எதுவுமில்லை. இந்தப் பெயர், சுமேரியப் பிரதிகளில் டுமுசீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.