Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 6

“இப்போதே உனக்கு அழிவு வந்துவிட்டது!”

“இப்போதே உனக்கு அழிவு வந்துவிட்டது!”

எசேக்கியேல் 7:3

முக்கியக் குறிப்பு: எருசலேமுக்கு எதிரான யெகோவாவின் தண்டனைத் தீர்ப்பு நிறைவேறிய விதம்

1, 2. (அ) எசேக்கியேல் வினோதமாக என்ன செய்கிறார்? (ஆரம்பப் படம்.) (ஆ) அவருடைய செயல் எதை முன்னறிவித்தது?

எசேக்கியேல் ஒரு வாரத்துக்கு யாரிடமும் பேசாமல் பிரமைபிடித்தவர்போல் உட்கார்ந்திருந்தார். பிறகு, திடுதிப்பென்று எழுந்து, வீட்டுக்குள் போய்க் கதவை அடைத்துக்கொண்டார். அவருக்கு என்ன ஆனது என்று புரியாமல் அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் குழம்பிப்போகிறார்கள். இப்போது அவர், தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே வந்து, ஒரு செங்கலை எடுத்து அதில் ஒரு படத்தைச் செதுக்குகிறார். பிறகு, ஒரு வார்த்தையும் பேசாமல், அந்தச் செங்கலைச் சுற்றி ஒரு சிறிய சுவரை, அதாவது வேலியை அமைக்கிறார். எசேக்கியேல் இப்படி வினோதமாக நடந்துகொள்ளும் செய்தி, சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனில் வாழ்கிற மக்கள் மத்தியில் காட்டுத்தீ போலப் பரவுகிறது.—எசே. 3:10, 11, 15, 24-26; 4:1, 2.

2 அவர் செய்துகொண்டிருப்பதை வேடிக்கை பார்க்க அதிகமதிகமான ஆட்கள் வருகிறார்கள். ‘அவர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்’ என்று அவர்கள் யோசித்திருக்கலாம். ஆனால், அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதை அந்த யூதர்கள் பிற்பாடுதான் முழுமையாகப் புரிந்துகொள்வார்கள். யெகோவாவின் நியாயமான கோபத்தை வெளிப்படுத்தும் பயங்கரமான சம்பவம் சீக்கிரத்தில் நடக்கப்போவதை அவருடைய செயல் அடையாளப்படுத்தியது. அது என்ன சம்பவம்? பூர்வகால இஸ்ரவேல் தேசத்தை அது எப்படிப் பாதித்தது? இன்று தூய வணக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் இதிலிருந்து என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

‘செங்கல் ஒன்றை எடு . . . கோதுமையை எடு . . . கூர்மையான ஒரு வாளை எடு’

3, 4. (அ) கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பின் என்ன மூன்று அம்சங்களை எசேக்கியேல் நடித்துக்காட்டினார்? (ஆ) எருசலேமின் முற்றுகையை எசேக்கியேல் எப்படி நடித்துக்காட்டினார்?

3 சுமார் கி.மு. 613-ல், எருசலேமுக்கு வரவிருந்த தண்டனைத் தீர்ப்பின் மூன்று அம்சங்களை நடித்துக்காட்டும்படி எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார். ஒன்று, நகரத்தின் முற்றுகை; இரண்டு, அதன் குடிமக்களுக்கு வரும் கஷ்டங்கள்; மூன்று, நகரத்துக்கும் அதிலுள்ள மக்களுக்கும் வரும் அழிவு. * இந்த மூன்று அம்சங்களையும் விளக்கமாகப் பார்க்கலாம்.

4 எருசலேமின் முற்றுகை. யெகோவா எசேக்கியேலிடம், ‘செங்கல் ஒன்றை எடுத்து உன் முன்னால் வை. . . . அதைச் சுற்றிலும் முற்றுகைச் சுவரைக் கட்டு’ என்று சொன்னார். (எசேக்கியேல் 4:1-3-ஐ வாசியுங்கள்.) எருசலேம் நகரத்தை அந்தச் செங்கல் அடையாளப்படுத்தியது. எருசலேமை அழிக்க யெகோவா பயன்படுத்தவிருந்த பாபிலோனியப் படையை எசேக்கியேல் அடையாளப்படுத்தினார். அந்தச் செங்கலைச் சுற்றி ஒரு சிறிய சுவரைக் கட்டும்படியும், மண்மேடுகளை எழுப்பும்படியும், மதில் இடிக்கும் இயந்திரங்களைச் செய்துவைக்கும்படியும் எசேக்கியேலுக்குச் சொல்லப்பட்டது. எதிரிகள் எருசலேமைச் சூழ்ந்துகொண்டு அதைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்போகும் கருவிகளை அவை அடையாளப்படுத்தின. அந்த நகரத்துக்கும் தனக்கும் நடுவில் “ஒரு இரும்புத் தகட்டை” எசேக்கியேல் வைக்க வேண்டியிருந்தது. எதிரி படையின் இரும்பு போன்ற பலத்தை அந்தத் தகடு அடையாளப்படுத்தியது. பிறகு, அவர் அந்த நகரத்துக்கு ‘நேராக தன் முகத்தை’ வைத்துக்கொண்டார். அவர் இப்படிச் செய்ததெல்லாம் “இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளமாக,” அதாவது அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்கப்போவதற்கு அடையாளமாக இருந்தது. கடவுளுடைய மக்களின் முக்கிய நகரத்தை... கடவுளுடைய ஆலயம் இருந்த எருசலேம் நகரத்தை... முற்றுகையிட யெகோவா ஒரு எதிரி படையைப் பயன்படுத்தப் போவதை அது குறித்தது.

5. எருசலேமில் குடியிருந்தவர்களுக்கு நடக்கவிருந்ததை எசேக்கியேல் எப்படி நடித்துக்காட்டினார் என்பதை விளக்குங்கள்.

5 எருசலேமின் குடிமக்களுக்கு வரும் கஷ்டங்கள். யெகோவா எசேக்கியேலிடம், ‘நீ கோதுமையையும், பார்லியையும், மொச்சையையும், பருப்புகளையும், தினையையும், மாக்கோதுமையையும் எடுத்து . . . ரொட்டி சுட்டுக்கொள். . . . தினமும் 20 சேக்கல் எடையுள்ள உணவை அளந்து சாப்பிடு’ என்று சொன்னார். பின்பு, “நான் பஞ்சத்தைக் கொண்டுவரப்போகிறேன்” என்று சொன்னார். (எசே. 4:9-16) இதையெல்லாம் செய்தபோது, எசேக்கியேல் பாபிலோனியப் படையை அல்ல, எருசலேமின் குடிமக்களை அடையாளப்படுத்தினார். முற்றுகையின்போது நகரத்தில் பஞ்சம் வரும் என்பதைக் காட்டுவதற்கு எசேக்கியேல் அப்படிச் செய்தார். வித்தியாசமான தானியங்களைச் சேர்த்து ரொட்டி சுட்டதன் மூலம், மக்கள் தங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட வேண்டியிருக்கும் என்பதைக் காட்டினார். அந்தப் பஞ்சம் எந்தளவு பயங்கரமாக இருக்கும்? உங்கள் மத்தியிலுள்ள “பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரையும் கொன்று சாப்பிடுவார்கள்” என்று எருசலேமில் குடியிருக்கிறவர்களிடம் சொல்வது போல, எசேக்கியேல் சொன்னார். கடைசியில், ‘பஞ்சத்தின் கொடிய அம்புகளினால்’ நிறைய பேர் கஷ்டப்பட்டு “அழிந்துபோவார்கள்” என்றும் சொன்னார்.—எசே. 4:17; 5:10, 16.

6. (அ) ஒரே சமயத்தில் எந்த இரண்டு பேரை அடையாளப்படுத்தும் விதத்தில் எசேக்கியேல் நடித்துக்காட்டினார்? (ஆ) ‘முடியைத் தராசில் எடைபோட்டு மூன்று பங்காகப் பிரிக்கும்படி’ கடவுள் கொடுத்த கட்டளை எதை அடையாளப்படுத்தியது?

6 எருசலேமுக்கும் அதிலுள்ள மக்களுக்கும் வரும் அழிவு. இந்தச் சம்பவத்தை நடித்து காட்டியபோது எசேக்கியேல், பாபிலோனியப் படையையும் அதே சமயத்தில் யூதர்களையும் அடையாளப்படுத்தினார். முதலில் யெகோவா செய்யப்போவதை எசேக்கியேல் நடித்துக்காட்டினார். அவர் எசேக்கியேலிடம், ‘கூர்மையான ஒரு வாளை நீ எடுத்து . . . ஒரு சவரக்கத்தியைப் போல’ அதைப் பயன்படுத்து என்று சொன்னார். (எசேக்கியேல் 5:1, 2-ஐ வாசியுங்கள்.) எசேக்கியேல் அந்த வாளைப் பயன்படுத்துவது, பாபிலோனியப் படையின் மூலம் யெகோவா தன்னுடைய தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றப்போவதை அடையாளப்படுத்தியது. இரண்டாவதாக, யூதர்களுக்கு நடக்கப்போவதை எசேக்கியேல் நடித்துக்காட்டினார். யெகோவா எசேக்கியேலிடம், “உன்னுடைய தலைமுடியையும் தாடியையும் சிரைக்க வேண்டும்” என்று சொன்னார். எசேக்கியேலின் தலைமுடி சிரைக்கப்படுவது, யூதர்கள் தாக்கப்பட்டு, அழிக்கப்படப்போவதை அடையாளப்படுத்தியது. “அந்த முடியைத் தராசில் எடைபோட்டு மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும்” என்று யெகோவா கட்டளை கொடுத்தார். எருசலேமுக்குக் கிடைக்கவிருந்த தண்டனை, யெகோவா தீர்மானித்தபடி முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதை அது அடையாளப்படுத்தியது.

7. யெகோவா ஏன் எசேக்கியேலிடம் அந்த முடியை மூன்று பங்காகப் பிரிக்கும்படியும், ஒவ்வொரு பங்கையும் ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்தும்படியும் சொன்னார்?

 7 யெகோவா ஏன் எசேக்கியேலிடம் அந்த முடியை மூன்று பங்காகப் பிரிக்கும்படியும், ஒவ்வொரு பங்கையும் ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்தும்படியும் சொன்னார்? (எசேக்கியேல் 5:7-12-ஐ வாசியுங்கள்.) எசேக்கியேல் அதில் ஒரு பங்கை எடுத்து ‘நகரத்துக்குள் சுட்டெரித்தது,’ எருசலேம் குடிமக்களில் சிலர் நகரத்துக்குள் கொல்லப்படுவார்கள் என்பதை அடையாளப்படுத்தியது. இன்னொரு பங்கை எடுத்து “நகரத்தைச் சுற்றிலும்” வாளால் வெட்டிப்போட்டது, சிலர் நகரத்துக்கு வெளியே கொல்லப்படுவார்கள் என்பதை அடையாளப்படுத்தியது. கடைசி பங்கை எடுத்து காற்றில் பறக்கவிட்டது, மற்ற தேசங்களுக்குச் சிலர் சிதறடிக்கப்படுவார்கள் என்பதையும், ஆனாலும், அவர்களுக்குப் ‘பின்னால் ஒரு வாள் அனுப்பப்படும்’ என்பதையும் அடையாளப்படுத்தியது. அப்படியானால், அவர்கள் எங்கு தப்பித்து போனாலும் அவர்களால் நிம்மதியாக வாழ முடியாது.

8. (அ) எசேக்கியேல் நடித்துக்காட்டியதில் நம்பிக்கை தரும் என்ன ஒரு விஷயமும் அடங்கியிருந்தது? (ஆ) முடியில் “கொஞ்சத்தை” எடுத்து முடிந்துகொள்வதைப் பற்றிய தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?

8 எசேக்கியேல் நடித்துக்காட்டியதில் நம்பிக்கை தரும் ஒரு விஷயமும் அடங்கியிருந்தது. “அந்தக் கடைசி பங்கிலிருந்து கொஞ்சத்தை எடுத்து உன்னுடைய அங்கியின் ஓரங்களில் முடிந்துகொள்” என்று எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார். (எசே. 5:3) மற்ற தேசங்களுக்குச் சிதறடிக்கப்பட்ட யூதர்களில் கொஞ்சம் பேர் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை இது காட்டியது. அந்தக் ‘கொஞ்சம்’ பேரில், 70 வருஷ சிறையிருப்புக்குப் பிறகு பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வரப்போகிறவர்களும் இருப்பார்கள். (எசே. 6:8, 9; 11:17) அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியதா? ஆம், சிதறடிக்கப்பட்ட யூதர்களில் சிலர் எருசலேமுக்குத் திரும்பி வந்ததாக, அந்த 70 வருஷ சிறையிருப்புக் காலம் முடிந்து பல வருஷங்களுக்குப் பிறகு ஆகாய் தீர்க்கதரிசி குறிப்பிட்டார். அவர்கள், ‘முன்பிருந்த ஆலயத்தை [சாலொமோனின் ஆலயத்தை] கண்ணால் பார்த்திருந்த பெரியோர்கள்.’ (எஸ்றா 3:12; ஆகா. 2:1-3) யெகோவா, தான் வாக்குக் கொடுத்தபடியே தூய வணக்கம் அழிந்துபோகாதபடி பார்த்துக்கொண்டார். இதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 9-ஆம் அதிகாரத்தில் விளக்கமாகப் பார்ப்போம்.—எசே. 11:17-20.

எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி இந்தத் தீர்க்கதரிசனம் என்ன சொல்கிறது?

9, 10. எசேக்கியேல் நடித்துக் காட்டிய விஷயங்கள், என்ன முக்கியமான எதிர்கால சம்பவங்களை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன?

9 எசேக்கியேல் நடித்துக் காட்டிய விஷயங்கள், பைபிள் முன்னறிவிக்கிற முக்கியமான எதிர்கால சம்பவங்களை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. அந்தச் சம்பவங்களில் சில யாவை? பூர்வ எருசலேம் நகரத்துக்கு நடந்தது போல பூமியிலுள்ள எல்லா பொய் மத அமைப்புகளுக்கும் நடக்கும். யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்கும்படி யெகோவா செய்வார். அதாவது, பொய் மத அமைப்புகள் எல்லாவற்றையும் தாக்குவதற்கு அரசியல் சக்திகளை யெகோவா பயன்படுத்துவார். (வெளி. 17:16-18) எருசலேமுக்கு வந்த அழிவு ‘அதுவரை வராத’ ஒரு அழிவாக இருந்தது. அது போல, ‘மிகுந்த உபத்திரவமும்’ அதன் முடிவில் வரும் அர்மகெதோன் போரும் ‘இதுவரை வந்திராத’ ஒன்றாக இருக்கும்.—எசே. 5:9; 7:5; மத். 24:21.

10 பொய் மதம் அழியும்போது அதன் ஆதரவாளர்களில் பெரும்பாலோர் தப்பிப்பார்கள் என பைபிள் காட்டுகிறது. இவர்கள் பயந்துபோய் மற்ற ஆட்களோடு சேர்ந்து மறைந்துகொள்வதற்கான இடத்தைத் தேடுவார்கள். (சக. 13:4-6; வெளி. 6:15-17) பூர்வ கால எருசலேமின் அழிவிலிருந்து தப்பித்து, மற்ற தேசங்களுக்குச் சிதறடிக்கப்பட்ட மக்களின் நிலைமையைப் போல அவர்களுடைய நிலைமையும் இருக்கும்.  பாரா 7-ல் பார்த்தபடி, அவர்கள் அப்போது உயிர்தப்பினாலும், அவர்களுக்குப் பின்னால் யெகோவா ‘ஒரு வாளை அனுப்பினார்.’ (எசே. 5:2) அதேபோல, மதங்கள் தாக்கப்படும்போது தப்பிக்கிறவர்கள் மறைவான எந்த இடத்துக்கு ஓடிப்போனாலும், யெகோவாவின் வாளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. அர்மகெதோன் போரில், வெள்ளாடுகளைப் போன்ற மற்ற எல்லாரோடும் சேர்த்து அவர்களும் கொல்லப்படுவார்கள்.—எசே. 7:4; மத். 25:33, 41, 46; வெளி. 19:15, 18.

நாமும் நல்ல செய்தியைச் சொல்லாமல் ‘மவுனமாக’ இருப்போம்

11, 12. (அ) எருசலேமின் முற்றுகையைப் பற்றிய தீர்க்கதரிசனத்திலிருந்து ஊழியம் சம்பந்தமாக நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) நம்முடைய பிரசங்க வேலையிலும் நாம் சொல்லும் செய்தியிலும் என்ன மாற்றம் ஏற்படலாம்?

11 இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து, ஊழியத்தைப் பற்றியும் அதை எந்தளவு அவசர உணர்வோடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? மக்கள் யெகோவாவின் ஊழியர்களாக ஆவதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். ஏனென்றால், ‘எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குவதற்கு’ கொஞ்சக் காலமே மீந்திருக்கிறது. (மத். 28:19, 20; எசே. 33:14-16) மதத்தை, “பிரம்பு,” அதாவது அரசியல் சக்திகள், தாக்க ஆரம்பித்தவுடன் மீட்பின் செய்தியைச் சொல்வதை நாம் நிறுத்திவிடுவோம். (எசே. 7:10) எசேக்கியேல் தன்னுடைய ஊழியக் காலத்தின் ஒரு கட்டத்தில் கடவுளுடைய செய்தியை அறிவிப்பதை நிறுத்திவிட்டு ‘மவுனமாக’ இருந்தது போல, நாமும் நல்ல செய்தியைச் சொல்லாமல் ‘மவுனமாக’ இருப்போம். (எசே. 3:26, 27; 33:21, 22) பொய் மதத்தின் அழிவுக்குப் பிறகு, ஒரு கருத்தில் “தரிசனத்துக்காக ஜனங்கள் தீர்க்கதரிசியைத் தேடிப்போவார்கள்.” ஆனாலும், தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தேவையான எந்த ஆலோசனையும் அவர்களுக்குக் கிடைக்காது. (எசே. 7:26) அப்படிப்பட்ட ஆலோசனையைப் பெற்று, கிறிஸ்துவின் சீஷராக ஆவதற்கான காலம் கடந்துபோயிருக்கும்.

12 ஆனாலும், நம்முடைய பிரசங்க வேலை முடிவுக்கு வராது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், மிகுந்த உபத்திரவத்தின்போது ஆலங்கட்டிகள் போன்ற தண்டனைத் தீர்ப்பின் செய்தியை நாம் அறிவிக்க வேண்டியிருக்கும். அந்தச் செய்தி, பொல்லாத உலகத்தின் அழிவு நெருங்கிவிட்டது என்பதற்குத் தெளிவான அடையாளமாக இருக்கும்.—வெளி. 16:21.

“இதோ, அந்த நாள் வருகிறது!”

13. யெகோவா எசேக்கியேலை ஏன் இடது பக்கமாகவும் பிறகு வலது பக்கமாகவும் படுக்கும்படி சொன்னார்?

13 எருசலேம் எப்படி அழிக்கப்படும் என்பதை நடித்துக் காட்டியதோடு, அது எப்போது அழிக்கப்படும் என்பதையும் எசேக்கியேல் நடித்துக் காட்டினார். 390 நாட்களுக்கு இடது பக்கமாகவும், 40 நாட்களுக்கு வலது பக்கமாகவும் படுக்கும்படி அவரிடம் யெகோவா சொன்னார். ஒரு நாள் ஒரு வருஷத்துக்குச் சமமாக இருந்தது. (எசேக்கியேல் 4:4-6-ஐ வாசியுங்கள்; எண். 14:34) ஒவ்வொரு நாளிலும், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் அவர் அப்படிப் படுத்திருப்பார். எந்த வருஷத்தில் எருசலேம் அழிக்கப்படும் என்பதை அது துல்லியமாகக் காட்டியது. 12 கோத்திர இஸ்ரவேல் ராஜ்யம் கி.மு. 997-ல் இரண்டாகப் பிரிந்தது. இஸ்ரவேல் ராஜ்யம் செய்த குற்றம் அந்த வருஷத்தில் ஆரம்பித்து 390 வருஷங்களுக்குத் தொடர்ந்தது. (1 ரா. 12:12-20) யூதா ராஜ்யம் செய்த குற்றம் கி.மு. 647-ல் ஆரம்பித்திருக்கலாம். ஏனென்றால், அந்த வருஷத்தில்தான் யூதா ராஜ்யத்துக்கு வரப்போகும் அழிவைப் பற்றி தெள்ளத் தெளிவாக எச்சரிப்பதற்கு எரேமியாவை யெகோவா ஒரு தீர்க்கதரிசியாக நியமித்தார். யூதா ராஜ்யம் செய்த குற்றம் 40 வருஷங்களுக்குத் தொடர்ந்தது. (எரே. 1:1, 2, 17-19; 19:3, 4) அந்த இரண்டு காலப்பகுதிகளும் கி.மு. 607-ல் முடிவுக்கு வந்தன. யெகோவா முன்கூட்டியே சொன்னபடி, சரியாக அந்த வருஷத்தில்தான் எருசலேம் வீழ்த்தப்பட்டு, அழிக்கப்பட்டது. *

எருசலேம் சரியாக எந்த வருஷத்தில் அழிக்கப்படும் என்பதை எசேக்கியேல் எப்படிச் சுட்டிக்காட்டினார்? (பாரா 13)

14. (அ) காலம் தவறாதவரான யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்திருந்ததை எசேக்கியேல் எப்படிக் காட்டினார்? (ஆ) எருசலேமின் அழிவுக்கு முன் என்னென்ன சம்பவங்கள் நடந்தன?

14 அந்த 390 நாட்களையும், 40 நாட்களையும் பற்றிய தீர்க்கதரிசன செய்தி எசேக்கியேலுக்குக் கிடைத்தபோது எருசலேமின் அழிவு சரியாக எந்த வருஷத்தில் வரும் என்பது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், யூதர்களுக்கு யெகோவா கொடுக்கப்போகும் தண்டனைத் தீர்ப்பின் செய்தியை, அந்த அழிவு வரும்வரை அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். “இப்போதே உனக்கு அழிவு வந்துவிட்டது!” என்று அவர் அறிவித்தார். (எசேக்கியேல் 7:3, 5-10-ஐ வாசியுங்கள்.) யெகோவா காலம் தவறாதவர், தான் சொன்னதை சரியான சமயத்தில் செய்துமுடிப்பவர் என்பதில் எசேக்கியேலுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. (ஏசா. 46:10) எருசலேம் ஒட்டுமொத்தமாக அழிவதற்கு முன் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பதையும் எசேக்கியேல் முன்னறிவித்தார். “அழிவுக்கு மேல் அழிவு வரும்,” அதாவது கஷ்டங்களுக்குமேல் கஷ்டம் வரும் என்று அவர் சொன்னார். அப்படிப்பட்ட கஷ்டங்களின் விளைவாக, சமுதாயத்தில் நிலைமைகள் படுமோசமாக ஆகிவிடும். மதத் தலைவர்கள் ஆன்மீக விஷயங்களை முன்நின்று வழிநடத்த மாட்டார்கள். ஆட்சியாளர்களால் மக்களை ஆட்சி செய்யவும் முடியாமல் போய்விடும்.—எசே. 7:11-13, 25-27.

முற்றுகை போடப்பட்ட எருசலேம், “அடுப்பில்” வைக்கப்பட்ட “பானையை” போல இருந்தது (பாரா 15)

15. எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தின் என்ன சம்பவங்கள் கி.மு. 609-லிருந்து நிறைவேற ஆரம்பித்தன?

15 எருசலேம் வீழ்த்தப்படும் என்று எசேக்கியேல் அறிவித்து சில வருஷங்களில் அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்தது. கி.மு. 609-ல் எருசலேமுக்கு எதிரான தாக்குதல் ஆரம்பித்துவிட்டது என்பதை எசேக்கியேல் தெரிந்துகொண்டார். அந்தச் சமயத்தில், எக்காளம் ஊதப்பட்டபோது நகரத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் கூடிவரவில்லை. எசேக்கியேல் முன்னறிவித்தபடியே ‘யாரும் போருக்குப் போகவில்லை.’ (எசே. 7:14) ஆம், பாபிலோனியப் படையை எதிர்த்து போர் செய்ய எருசலேம் மக்கள் யாரும் போகவில்லை. யெகோவா தங்களைக் காப்பாற்றுவார் என யூதர்கள் சிலர் நினைத்திருக்கலாம். ஏனென்றால், இதற்கு முன் அசீரியர்கள் எருசலேமைத் தாக்க வந்தபோது ஒரேவொரு தூதனை அனுப்பி அவர்களுடைய படையின் பெரும்பகுதியை யெகோவா அழித்தார். (2 ரா. 19:32) ஆனால், இந்த முறை அப்படிப்பட்ட எந்த உதவியும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. சீக்கிரத்திலேயே முழு நகரமும் “அடுப்பில்” வைக்கப்பட்ட “பானையை” போல ஆனது; நகரத்திலுள்ள மக்கள் எல்லாரும் பானைக்குள் போடப்பட்ட “இறைச்சித் துண்டுகளை” போல இருந்தார்கள். (எசே. 24:1-10) 18 மாதங்களுக்கு நீடித்த கொடூரமான அந்த முற்றுகைக்குப் பிறகு எருசலேம் அழிக்கப்பட்டது.

“பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்”

16. காலம் தவறாதவரான யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்திருப்பதை இன்று நாம் எப்படிக் காட்டலாம்?

16 எசேக்கியேல் சொன்ன இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? ஊழியத்தில் நாம் சொல்லும் செய்தியோடும் அதற்கு மக்கள் பிரதிபலிக்கிற விதத்தோடும் இந்தத் தீர்க்கதரிசனம் சம்பந்தப்பட்டிருக்கிறதா? பொய் மதத்தை எப்போது அழிக்க வேண்டுமென்று யெகோவா தீர்மானித்துவிட்டார். அதைச் சரியான நேரத்தில் செய்து முடிப்பார். அவர் காலம் தவறாதவர். (2 பே. 3:9, 10; வெளி. 7:1-3) அது எப்போது நடக்கும் என்பது நமக்குத் துல்லியமாகத் தெரியாது. ஆனால் எசேக்கியேலைப் போல நாமும் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, “இப்போதே உனக்கு அழிவு வந்துவிட்டது!” என்று மக்களை எச்சரித்துக்கொண்டே இருக்கிறோம். இந்தச் செய்தியை நாம் ஏன் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்? எசேக்கியேல் எந்தக் காரணத்துக்காக அந்தச் செய்தியைச் சொன்னாரோ அதே காரணத்துக்காகத்தான் நாமும் சொல்ல வேண்டும். * எருசலேமின் வீழ்ச்சியைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை எசேக்கியேல் அறிவித்தபோது பெரும்பாலான மக்கள் அதை நம்பவில்லை. (எசே. 12:27, 28) ஆனால், சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனில் இருந்த யூதர்கள் சிலர் பிற்பாடு மனம் திருந்தினார்கள், தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிவந்தார்கள். (ஏசா. 49:8) அதேபோல இன்றும், இந்த உலகத்தின் அழிவு நெருங்கிவிட்டது என்று நாம் சொல்வதை நிறைய பேர் நம்புவதில்லை. (2 பே. 3:3, 4) ஆனாலும், கடவுள் குறித்திருக்கும் காலம் முடிவதற்குள் முடிவில்லாத வாழ்வுக்குப் போகும் பாதையைக் கண்டுபிடிக்க நல்மனமுள்ளவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.—மத். 7:13, 14; 2 கொ. 6:2.

நம் செய்தியை நிறைய பேர் கேட்காவிட்டாலும், நல்மனமுள்ள ஆட்களை நாம் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறோம் (பாரா 16)

பூர்வ எருசலேம் மக்கள் ஏன் ‘தங்களுடைய வெள்ளியை வீதிகளில் வீசினார்கள்’? (பாரா 17)

17. மிகுந்த உபத்திரவத்தின் போது இருக்கும் நிலைமைகளையும் சம்பவங்களையும் பற்றி என்ன சொல்லலாம்?

17 எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் இன்னொரு விஷயத்தையும் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. பொய் மத அமைப்புகள் தாக்கப்படும்போது அவற்றின் உறுப்பினர்கள் தங்கள் மதத்தைப் பாதுகாக்க ‘போருக்குப் போக மாட்டார்கள்,’ அதாவது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். உதவிக்காக “கர்த்தாவே, கர்த்தாவே” என்று அவர்கள் கதறும்போது அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. அப்போது, “அவர்களுடைய கைகள் தளர்ந்துவிடும்.” அவர்கள் பயத்தில் ‘நடுநடுங்குவார்கள்.’ (எசே. 7:3, 14, 17, 18; மத். 7:21-23) அவர்கள் வேறு என்ன செய்வார்கள்? (எசேக்கியேல் 7:19-21-ஐ வாசியுங்கள்.)  “அவர்கள் தங்களுடைய வெள்ளியை வீதிகளில் வீசிவிடுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். பூர்வ எருசலேம் மக்களைப் பற்றிச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள், மிகுந்த உபத்திரவத்தின்போதும் நிறைவேறும். வரப்போகும் அழிவிலிருந்து பணம் தங்களைக் காப்பாற்றாது என்பதை அப்போது மக்கள் புரிந்துகொள்வார்கள்.

18. முதலிடம் கொடுக்கும் விஷயத்தில், எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?

18 எசேக்கியேல் சொன்ன இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம். இதை யோசித்துப் பாருங்கள்: எருசலேமுக்கு அழிவு வந்துவிட்டதைப் பார்த்த பிறகுதான்... தப்பிப்பதற்கு வழியே இல்லை என்ற நிலை வந்த பிறகுதான்... பணமும் பொருளும் தங்களுடைய உயிரைக் காப்பாற்றாது என்பதைப் புரிந்துகொண்ட பிறகுதான்... வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களைச் செய்தார்கள். தங்களிடம் இருந்த விலைமதிப்புள்ள பொருள்களை அவர்கள் வீசியெறிந்தார்கள். ‘தரிசனத்துக்காக . . . தீர்க்கதரிசியைத் தேடிப்போக’ ஆரம்பித்தார்கள். எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை அப்போதுதான் அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால், காலம் கடந்துவிட்டது. (எசே. 7:26) இன்று, இந்தப் பொல்லாத உலகத்தின் அழிவு நெருங்கிவிட்டது என்று நமக்கு நன்றாகத் தெரியும். கடவுளுடைய வாக்குறுதிகள்மேல் விசுவாசம் வைத்திருப்பதால், சரியான விஷயங்களுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க நாம் தூண்டப்படுகிறோம். அதனால், பரலோகத்தில் நம்முடைய சொத்துகளைச் சேர்ப்பதில் சுறுசுறுப்பாக இருக்கிறோம். அவற்றின் மதிப்பு ஒருபோதும் குறையாது. அவை ஒருபோதும் ‘வீதிகளில் வீசப்படாது.’மத்தேயு 6:19-21, 24-ஐ வாசியுங்கள்.

19. எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனம் என்ன செய்ய நம்மைத் தூண்டுகிறது?

19 எருசலேமின் அழிவைப் பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனம் என்ன செய்ய நம்மைத் தூண்டுகிறது? கடவுளுடைய ஊழியர்களாக ஆவதற்கு மக்களுக்கு உதவ கொஞ்சக் காலமே இருக்கிறது. அதனால், சீஷராக்கும் வேலையை நாம் அவசர உணர்வோடு செய்கிறோம். நல்மனமுள்ள ஆட்கள் நம் அப்பாவான யெகோவாவை வணங்க ஆரம்பிக்கும்போது நாம் ரொம்பச் சந்தோஷப்படுகிறோம். ஆனால், அந்த முக்கியமான படியை எடுக்காதவர்களுக்கு எசேக்கியேலைப் போல நாமும், “இப்போதே உனக்கு அழிவு வந்துவிட்டது!” என்று எச்சரிப்பு கொடுக்கிறோம். (எசே. 3:19, 21; 7:3) அதேசமயத்தில், யெகோவாமீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கவும் தூய வணக்கத்துக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கவும் நாம் தீர்மானமாக இருக்கிறோம்.—சங். 52:7, 8; நீதி. 11:28; மத். 6:33.

^ பாரா. 3 மற்றவர்களுடைய கண் முன்னால் இதையெல்லாம் எசேக்கியேல் நடித்துக்காட்டியிருக்க வேண்டும். ஏனென்றால், ரொட்டி சுடுவது, மூட்டைமுடிச்சுகளை எடுத்துக்கொண்டு போவது போன்ற விஷயங்களை “அவர்களுடைய கண்களுக்கு முன்பாக” நடித்துக்காட்டும்படி யெகோவாவே எசேக்கியேலுக்குக் கட்டளையிட்டிருந்தார்.—எசே. 4:12; 12:7.

^ பாரா. 13 எருசலேம் அழிந்துபோகும்படி விட்டுவிடுவதன் மூலம், இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்துக்கு எதிராக மட்டுமல்ல, பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்துக்கு எதிராகவும் யெகோவா தன்னுடைய தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றினார். (எரே. 11:17; எசே. 9:9, 10) வேதாகமங்களின்பேரில் உட்பார்வை என்ற ஆங்கிலப் புத்தகம், தொகுதி 1, பக். 462-ல், “க்ரோனாலஜி—கி.மு. 997-லிருந்து எருசலேமின் அழிவுவரை” என்ற தலைப்பில் பாருங்கள்.

^ பாரா. 16 எசேக்கியேல் 7:5-7 வசனங்களில், “வரும்,” “வருகிறது,” “வந்துவிட்டது” என்ற வார்த்தைகள் சுமார் ஆறு தடவை குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.