தகவல் பெட்டி 1ஆ
எசேக்கியேல் புத்தகம்—ஒரு பார்வை
பொதுவாக, எசேக்கியேல் புத்தகத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
அதிகாரங்கள் 1-3
கி.மு. 613-ல் எசேக்கியேல் சிறைபிடிக்கப்பட்ட யூதர்களோடு பாபிலோனில் வாழ்கிறார். அப்போது யெகோவா காட்டிய தரிசனங்களைப் பார்க்கிறார். கேபார் ஆற்றுக்குப் பக்கத்தில் வாழ்கிற யூதர்களிடம் தீர்க்கதரிசனம் சொல்ல அவர் நியமிக்கப்படுகிறார்.
அதிகாரங்கள் 4-24
எருசலேம் நகரத்துக்கும் சிலை வழிபாட்டில் ஈடுபடுகிற கலகக்கார யூத மக்களுக்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பை, கி.மு. 613-க்கும் 609-க்கும் இடைப்பட்ட காலத்தில் எசேக்கியேல் சொல்கிறார்.
அதிகாரங்கள் 25-32
கி.மு. 609-ல், பாபிலோனியர்கள் கடைசி முறையாக எருசலேமை முற்றுகையிட ஆரம்பிக்கிறார்கள். எசேக்கியேல் அந்த வருஷத்திலிருந்து, எருசலேமுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு சொல்வதை விட்டுவிட்டு, அதைச் சுற்றியிருக்கும் எதிரி தேசங்களான அம்மோன், ஏதோம், எகிப்து, மோவாப், பெலிஸ்தியா, சீதோன் மற்றும் தீருவுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பைச் சொல்கிறார்.
அதிகாரங்கள் 33-48
கி.மு. 606-லிருந்து, எருசலேம் நகரமும் அதன் ஆலயமும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. எருசலேமிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் வாழ்கிற எசேக்கியேல் நம்பிக்கையூட்டும் செய்தியைச் சொல்கிறார். அதுதான் தூய வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படுவதைப் பற்றிய சிலிர்ப்பூட்டும் செய்தி!
எசேக்கியேல் புத்தகம் காலவரிசைப்படியும், பொருளுக்கேற்றபடியும் எழுதப்பட்டிருக்கிறது. எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் முதலில் சொல்லப்பட்டிருக்கின்றன. பிறகு, தூய வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படுவதைப் பற்றிய நிறைய தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆலயத்தில் யெகோவாவின் வணக்கம் நின்றுபோன பிறகு, தூய வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படுவது சம்பந்தமான தீர்க்கதரிசனங்களைச் சொல்லியிருப்பது நியாயமானதாக இருக்கிறது.
எருசலேமுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பின் செய்தி சொல்லப்பட்ட பிறகு, அதைச் சுற்றியிருந்த எதிரி தேசங்களுக்கு எதிரான தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டன. (அதிகாரங்கள் 25-32) அதன் பிறகு, தூய வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டன. மற்ற தேசங்களுக்கு எதிராக எசேக்கியேல் சொன்ன தண்டனைத் தீர்ப்பின் செய்தியைப் பற்றி ஒரு அறிஞர் இப்படிச் சொல்கிறார்: “கடவுளுடைய கோபத்தை வெளிக்காட்டும் செய்தியைச் சொன்ன பிறகு அவருடைய மக்களுக்கு இரக்கத்தின் செய்தியைச் சொல்வது பொருத்தமானது. ஏனென்றால், எதிரிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை ஒருவிதத்தில் அவருடைய மக்களுக்குக் கிடைக்கும் விடுதலையைக் குறிக்கிறது.”