Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 16அ

எருசலேம் கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறதா?

எருசலேம் கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறதா?

விசுவாசதுரோக எருசலேம், கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருப்பதாக முன்பு நம்முடைய பிரசுரங்களில் சொல்லப்பட்டிருந்தது. கடவுளுக்கு உண்மையில்லாமல் போன எருசலேமில் இருந்த நிலைமைகள், அதாவது சிலை வழிபாடும் பரவலாக இருந்த ஊழலும், கிறிஸ்தவமண்டலத்தில் நடக்கிற விஷயங்களை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. ஆனால், இந்தப் புத்தகமும் சரி, கடந்த சில வருஷங்களாக வெளிவந்த மற்ற பிரசுரங்களும் சரி, பைபிளில் நேரடியான ஆதாரம் இருந்தால் தவிர ஒரு தீர்க்கதரிசனத்துக்கு அடையாள அர்த்தம் இருப்பதாக விளக்குவதில்லை. எருசலேம், கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறது என்பதற்கு பைபிளில் திட்டவட்டமான ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இல்லை.

பின்வரும் விஷயங்களைக் கவனியுங்கள்: எருசலேம், ஒரு காலத்தில் தூய வணக்கத்துக்கான முக்கிய இடமாக இருந்தது. பிற்பாடு, அதன் குடிமக்கள் விசுவாசதுரோகிகளாக மாறிவிட்டார்கள். ஆனால், கிறிஸ்தவமண்டலம் ஒருபோதும் தூய வணக்கத்தில் ஈடுபடவில்லை. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவமண்டலம் ஆரம்பமானதிலிருந்தே, அது எப்போதும் பொய்யான போதனைகளைத்தான் கற்றுக்கொடுத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, எருசலேமை பாபிலோனியர்கள் அழித்த பிறகு, யெகோவா கருணை காட்டி அந்த நகரத்தைத் திரும்பவும் பழைய நிலைமைக்கு கொண்டுவந்து அதை உண்மை வணக்கத்தின் முக்கிய இடமாக ஆக்கினார். ஆனால், கிறிஸ்தவமண்டலத்துக்கு கடவுள் ஒருபோதும் கருணை காட்டியதில்லை. மிகுந்த உபத்திரவத்தின்போது அது ஒரேயடியாக அழிக்கப்படும். அதன் பிறகு, அது திரும்பவும் உருவெடுக்காது.

நாம் சிந்தித்த இந்த விஷயங்களிலிருந்து என்ன முடிவுக்கு வருகிறோம்? உண்மையில்லாமல் போன எருசலேமின்மீது நிறைவேறிய பைபிள் தீர்க்கதரிசனங்களை ஆராயும்போது, ‘இதே மாதிரிதானே கிறிஸ்தவமண்டலத்திலும் நடக்கிறது’ என்று நாம் ஒருவேளை சொல்லலாம். ஆனால் எருசலேம், கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறது என்று சொல்வதற்கு எந்த பைபிள் ஆதாரமும் இல்லை.