Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 15அ

விபச்சார சகோதரிகள்

விபச்சார சகோதரிகள்

உண்மையற்ற மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கடும் தீர்ப்பைப் பற்றி எசேக்கியேல் 23-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இது, 16-ஆம் அதிகாரத்தோடு பல விதங்களில் ஒத்துப்போகிறது. 23-ஆம் அதிகாரமும் விபச்சாரியைப் பற்றிச் சொல்கிறது. எருசலேமைத் தங்கையாகவும், சமாரியாவை அக்காவாகவும் இது விவரிக்கிறது. இந்தத் தங்கை, தன் அக்காவைப் போல் விபச்சாரம் செய்ததையும், பிறகு அக்கிரமத்திலும் ஒழுக்கக்கேட்டிலும் அக்காவையே மிஞ்சியதையும் பற்றி இரண்டு அதிகாரங்களுமே சொல்கின்றன. 23-ஆம் அதிகாரத்தில் யெகோவா இவர்களின் பெயர்களைச் சொல்கிறார். பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரமான சமாரியாவை அகோலாள் என்றும், யூதாவின் தலைநகரமான எருசலேமை அகோலிபாள் என்றும் சொல்கிறார். *எசே. 23:1-4.

இரண்டு அதிகாரங்களுக்கும் இன்னும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை: விபச்சாரம் செய்த இந்தச் சகோதரிகள் ஆரம்பத்தில் யெகோவாவுக்கு மனைவிகளைப் போல் இருக்கிறார்கள். பிற்பாடு, அவருக்குத் துரோகம் செய்கிறார்கள். அதோடு, இந்த அதிகாரங்களில் நம்பிக்கை தரும் ஒரு வாக்குறுதியும் இருக்கிறது. அதிகாரம் 23-ல் அவர்களுக்குக் கிடைக்கப்போகிற மீட்பைப் பற்றி அவ்வளவு தெளிவாகச் சொல்லப்படவில்லை என்றாலும் அதிகாரம் 16-ல் யெகோவா அதை இப்படித் தெளிவாகச் சொல்கிறார்: “உன்னுடைய வெட்கங்கெட்ட விபச்சாரத்துக்கு நான் முடிவுகட்டுவேன்.”—எசே. 16:16, 20, 21, 37, 38, 41, 42; 23:4, 11, 22, 23, 27, 37.

அவர்கள் கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமா?

அகோலாளும் அகோலிபாளும், கிறிஸ்தவமண்டலத்தின் முக்கியப் பிரிவுகளான கத்தோலிக்க மதத்தையும் புராட்டஸ்டன்ட் மதத்தையும் குறிப்பதாக நம் பிரசுரங்களில் முன்பு சொல்லப்பட்டிருந்தது. ஆனால், ஆழமாக யோசித்துப் பார்த்ததாலும், கூடுதலாக ஆராய்ச்சி செய்ததாலும், இது சம்பந்தமாக சில கேள்விகள் எழும்பின. கிறிஸ்தவமண்டலம் எப்போதாவது யெகோவாவின் மனைவிக்கு அடையாளமாக இருந்திருக்கிறதா? கிறிஸ்தவமண்டலத்தோடு எப்போதாவது அவர் ஒப்பந்தம் செய்திருக்கிறாரா? இல்லை. ஆன்மீக இஸ்ரவேலர்களோடு இயேசு “புதிய ஒப்பந்தம்” செய்த சமயத்தில் கிறிஸ்தவமண்டலம் தோன்றவே இல்லை. அதோடு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அடங்கிய ஆன்மீக தேசத்தின் பாகமாக கிறிஸ்தவமண்டலம் இருந்ததே இல்லை. (எரே. 31:31; லூக். 22:20) அப்போஸ்தலர்கள் இறந்து பல காலத்துக்குப் பிறகுதான், சொல்லப்போனால், நான்காவது நூற்றாண்டில்தான் இந்த விசுவாசதுரோக அமைப்பு தோன்றியது. இதில் இருப்பவர்கள் எல்லாரும் போலிக் கிறிஸ்தவர்கள். கோதுமைப் பயிர்கள் மற்றும் களைகள் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்திலுள்ள “களைகள்” இவர்கள்தான்.—மத். 13:24-30.

இன்னொரு முக்கியமான வித்தியாசம்: உண்மையற்ற எருசலேமையும் சமாரியாவையும் மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவரப்போவதாக யெகோவா நம்பிக்கை அளித்திருந்தார். (எசே. 16:41, 42, 53-55) ஆனால், கிறிஸ்தவமண்டலத்துக்கு அப்படியொரு நம்பிக்கை இருப்பதாக பைபிள் சொல்கிறதா? இல்லை. மகா பாபிலோனிலுள்ள மற்ற மதங்களுக்கு என்ன கதி ஏற்படுமோ அதே கதிதான் கிறிஸ்தவமண்டலத்துக்கும் ஏற்படும்.

அப்படியானால், அகோலாளும் அகோலிபாளும் கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்க முடியாது என்பது தெரிகிறது. ஆனாலும், இவர்களிடமிருந்து முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, தன் மக்கள் என்று சொல்லிக்கொண்டு, தன் பரிசுத்த பெயரை அவமதிக்கிறவர்களையும் தூய வணக்கத்துக்கான நெறிமுறைகளை மீறுகிறவர்களையும் பற்றி யெகோவா எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விஷயத்தில் கிறிஸ்தவமண்டலம் அதிக குற்றத்தைச் சுமக்கிறது. ஏனென்றால், அதிலுள்ள ஏராளமான சர்ச்சுகள் பைபிளில் சொல்லப்பட்டுள்ள கடவுளை வணங்குவதாகச் சொல்லிக்கொள்கின்றன. யெகோவாவின் அன்பு மகனான இயேசு கிறிஸ்துவை தங்களுடைய தலைவர் என்றும் சொல்லிக்கொள்கின்றன. ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கின்றன. எப்படி? இயேசு, திரித்துவக் கடவுளின் ஒரு பாகமாக இருக்கிறார் என்று சொல்கின்றன. அதோடு, இந்த “உலகத்தின் பாகமாக” இருக்கக் கூடாது என்று அவர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை. (யோவா. 15:19) கிறிஸ்தவமண்டலம், சிலை வழிபாட்டிலும் அரசியல் விவகாரங்களிலும் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம், “பேர்போன விபச்சாரி” என்று அழைக்கப்படுகிற மகா பாபிலோனின் முக்கிய பாகமாக இருப்பதை நிரூபித்திருக்கிறது. (வெளி. 17:1) சீக்கிரத்தில் பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோன் அழிக்கப்படும்போது, அதனோடு சேர்த்து கிறிஸ்தவமண்டலமும் அழிக்கப்படும்.

^ பாரா. 3 இந்தப் பெயர்கள் மிக பொருத்தமானவை. அகோலாள் என்றால் “அவளுடைய [வணக்கத்துக்கான] கூடாரம்” என்று அர்த்தம். இஸ்ரவேலர்கள், வணக்கத்துக்காக எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்தைப் பயன்படுத்தாமல், வேறு இடங்களை அமைத்துக்கொண்டதை இது காட்டியது. அகோலிபாள் என்றால் “[வணக்கத்துக்கான] என் கூடாரம் அவளிடம் இருக்கிறது” என்று அர்த்தம். யெகோவாவை வணங்குவதற்கான ஆலயம் எருசலேமில் இருந்ததை இது காட்டியது.