Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 15

“நான் உன்னுடைய விபச்சாரத்துக்கு ஒரு முடிவுகட்டுவேன்”

“நான் உன்னுடைய விபச்சாரத்துக்கு ஒரு முடிவுகட்டுவேன்”

எசேக்கியேல் 16:41

முக்கியக் குறிப்பு: எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விபச்சாரிகளைப் பற்றிய விவரிப்பிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் விஷயங்கள்

1, 2. எப்படிப்பட்ட விபச்சாரியைப் பார்த்து நாம் அருவருப்பாக உணருவோம்?

ஒரு பெண், விபச்சாரியாக ஆனதைப் பார்க்கும்போது நமக்கு வேதனையாக இருக்கும். இந்தச் சகதியில் இவள் எப்படி விழுந்தாள் என நாம் யோசிப்போம். ஒருவேளை சின்ன வயதிலேயே, வீட்டில் அடி உதையை தாங்க முடியாமல், சித்திரவதையை பொறுக்க முடியாமல் ஓடி வந்துவிட்டாளா? வறுமை வாட்டியதால் தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டாளா? கொடுமைக்கார கணவனிடமிருந்து தப்பிக்க நினைத்து இந்தச் சாக்கடையில் விழுந்துவிட்டாளா? விபச்சாரத்தில் விழுந்த பலருக்குப் பின்னால் இப்படிப்பட்ட சோகக் கதைகள் இருப்பதைக் கேட்டிருப்போம். அதனால்தான், விபச்சாரிகள் சிலரிடம் இயேசு கிறிஸ்து ரொம்ப கனிவாக நடந்துகொண்டார். அவர்கள் மனம் திருந்தி, நல்ல வழியில் நடந்தால் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.—மத். 21:28-32; லூக். 7:36-50.

2 இப்போது, முற்றிலும் வித்தியாசமான ஒரு விபச்சாரியைப் பற்றிப் பார்க்கலாம். அவள் வேண்டுமென்றே இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கிறாள். அதைக் கேவலமாக நினைக்காமல், கவுரவமாக நினைக்கிறாள். இதன் மூலம் கிடைக்கிற பணத்துக்கும் செல்வாக்குக்கும் ஆசைப்படுகிறாள். இதைவிட கேவலம் என்னவென்றால், விபச்சாரம் செய்வதற்காக, தனக்கு உண்மையாக இருக்கிற அருமையான கணவனுக்கு வேண்டுமென்றே துரோகம் செய்கிறாள். அவளையும், அவள் தேர்ந்தெடுத்திருக்கிற வாழ்க்கையையும் நினைக்கும்போதே அருவருப்பாக இருக்கிறது, அல்லவா? இப்படிப்பட்ட விபச்சாரியைப் பார்க்கும்போது நமக்கு எப்படி அருவருப்பாக இருக்கிறதோ, அப்படித்தான் பொய் மதத்தைப் பார்க்கும்போது யெகோவாவுக்கும் அருவருப்பாக இருக்கிறது. அதனால்தான், பொய் மதத்தை ஒரு விபச்சாரிக்கு ஒப்பிட்டு அவர் அடிக்கடி சொல்கிறார்.

3. எசேக்கியேல் புத்தகத்தின் எந்த இரண்டு அதிகாரங்களிலுள்ள விஷயங்களைப் பார்க்கப்போகிறோம்?

3 இஸ்ரவேலையும் யூதாவையும் சேர்ந்த கடவுளுடைய மக்கள் அவருக்குச் செய்த படு மோசமான துரோகத்தைப் பற்றி எசேக்கியேல் புத்தகத்தின் இரண்டு அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் செய்த துரோகத்தை விபச்சாரத்தோடு ஒப்பிட்டு அந்த அதிகாரங்கள் சொல்கின்றன. (எசேக்கியேல் அதிகாரங்கள் 16 மற்றும் 23) இந்த அதிகாரங்களில் உள்ள விஷயங்களைச் சிந்திப்பதற்கு முன், அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ள இன்னொரு விபச்சாரியைப் பற்றி நாம் பார்ப்போம். அவள் எசேக்கியேலின் காலத்துக்கு முன்பே, அதுவும் இஸ்ரவேல் தேசம் உருவாவதற்கு முன்பே, விபச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். இன்றுவரை அதைச் செய்துவருகிறாள். இந்த விபச்சாரி யாரென்பதை, பைபிளின் கடைசி புத்தகமான வெளிப்படுத்துதல் சொல்கிறது.

‘விபச்சாரிகளுக்குத் தாய்’

4, 5. “மகா பாபிலோன்” யாரைக் குறிக்கிறது? அது நமக்கு எப்படித் தெரியும்? (ஆரம்பப் படம்.)

4 முதல் நூற்றாண்டின் கடைசியில் அப்போஸ்தலன் யோவானுக்கு இயேசு ஒரு தரிசனத்தைக் காட்டினார். அதிலிருந்து, இந்த விபச்சாரியைப் பற்றிய நுணுக்கமான விவரங்களை யோவான் தெரிந்துகொண்டார். அவள் “பேர்போன விபச்சாரி” என்றும் ‘விபச்சாரிகளுக்குத் தாயான’ “மகா பாபிலோன்” என்றும் அழைக்கப்படுகிறாள். (வெளி. 17:1, 5) அவள் யாரைக் குறிக்கிறாள் என்பது மதத் தலைவர்களுக்கும் பைபிள் அறிஞர்களுக்கும் பல நூற்றாண்டுகளாகவே குழப்பமாக இருந்திருக்கிறது. அதனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். அவள் பாபிலோனை, ரோமை, அல்லது ரோமன் கத்தோலிக்க சர்ச்சை குறிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், இந்த “பேர்போன விபச்சாரி” யாரைக் குறிக்கிறாள் என்பதை யெகோவாவின் சாட்சிகள் பல வருஷங்களுக்கு முன்பே புரிந்துகொண்டார்கள். அவள் பொய் மத உலகப் பேரரசைக் குறிக்கிறாள். எதை வைத்து அப்படிச் சொல்கிறோம்?

5 இந்த விபச்சாரி, ‘பூமியின் ராஜாக்களோடு,’ அதாவது அரசியல் அமைப்புகளோடு, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதால் அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுக்கப்படுவதாக வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. அதனால், அவள் நிச்சயம் ஒரு அரசியல் அமைப்பாக இருக்க முடியாது. ‘உலகத்தில் இருக்கிற வியாபாரிகள்,’ அதாவது வர்த்தக அமைப்புகள், அவளுக்கு வந்த அழிவைப் பார்த்து அழுது புலம்புவதாகவும் வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. அதனால், அவள் வர்த்தக அமைப்பாக இருக்க முடியாது. அப்படியானால், அவள் யார்? ‘ஆவியுலகத் தொடர்பு,’ சிலை வழிபாடு, ஏமாற்று வேலை போன்ற குற்றங்களில் அவள் ஈடுபடுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றங்கள் எல்லாம் யாருக்குப் பொருந்துகின்றன? இந்த உலகத்தின் ஊழல் நிறைந்த மத அமைப்புகளுக்குத்தான் அப்படியே பொருந்துகின்றன. இந்த விபச்சாரி உலகத்தின் அரசியல் அமைப்புகள்மீது உட்கார்ந்து சவாரி செய்துகொண்டிருப்பதாகவும், அதாவது அவற்றின்மீது ஓரளவு செல்வாக்கு செலுத்துவதாகவும், விவரிக்கப்படுகிறாள். அதுமட்டுமல்ல, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களை அவள் துன்புறுத்துகிறாள். (வெளி. 17:2, 3; 18:11, 23, 24) இன்றுவரையாக பொய் மதங்கள்தானே இதையெல்லாம் செய்துவருகின்றன?

எல்லா விதமான பொய் மதப் பழக்கவழக்கங்களும், தத்துவங்களும், மத அமைப்புகளும் பாபிலோன் என்று பிற்பாடு அழைக்கப்பட்ட பூர்வ பாபேலிலிருந்து பரவின (பாரா 6)

6. மகா பாபிலோன், ‘விபச்சாரிகளுக்குத் தாய்’ என்று ஏன் அழைக்கப்படுகிறாள்?

6 இந்த மகா பாபிலோன் “பேர்போன விபச்சாரி” என்று அழைக்கப்படுவதோடு ‘விபச்சாரிகளுக்குத் தாய்’ என்றும் அழைக்கப்படுகிறாள். ஏன்? பொய் மதத்தில் கணக்குவழக்கில்லாத நிறைய பிரிவுகளும், உட்பிரிவுகளும் இருக்கின்றன. பூர்வ பாபேலில், அதாவது பாபிலோனில், மொழியில் குழப்பம் ஏற்பட்ட சமயத்திலிருந்து, எல்லா விதமான பொய் மத நம்பிக்கைகளும் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தன. அதனால், புதிது புதிதாக ஏராளமான மதங்கள் உருவாயின. பொய் மதங்களின் பிறப்பிடமாக இருந்த பாபிலோன் நகரத்திலிருந்து “மகா பாபிலோன்” என்ற பெயர் வந்திருப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! (ஆதி. 11:1-9) அப்படியானால், இந்த மதங்கள் எல்லாவற்றையுமே, ஒரே அமைப்பின், அதாவது பேர்போன ஒரே விபச்சாரியின், “மகள்கள்” என்று சொல்லலாம். சாத்தான், இந்தப் பொய் மதங்களைப் பயன்படுத்தி மக்களை ஆவியுலகத் தொடர்பிலும், சிலை வழிபாட்டிலும், கடவுளை அவமதிக்கிற நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களிலும் சிக்க வைக்கிறான். அதனால்தான், உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஊழல் நிறைந்த இந்த அமைப்பைப் பற்றி கடவுளுடைய மக்களுக்கு இப்படி எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது: ‘என் மக்களே, அவளுடைய பாவங்களுக்குத் துணைபோகாமல் . . . இருக்க வேண்டுமென்றால் அவளைவிட்டு வெளியே வாருங்கள்.’வெளிப்படுத்துதல் 18:4, 5-ஐ வாசியுங்கள்.

7. மகா பாபிலோனைவிட்டு ‘வெளியே வரும்படி’ கொடுக்கப்பட்ட எச்சரிப்புக்கு நாம் ஏன் கீழ்ப்படிகிறோம்?

7 இந்த எச்சரிப்புக்கு நீங்கள் கீழ்ப்படிந்திருக்கிறீர்களா? இதை யோசித்துப் பாருங்கள். மனிதர்களை ‘ஆன்மீக விஷயங்களுக்கான ஆர்வப்பசியோடு’ படைத்தது யெகோவாதான். (மத். 5:3) அப்படியானால், தூய வணக்கத்தை யெகோவாவுக்குச் செலுத்துவதன் மூலம் மட்டுமே அந்தப் பசியைச் சரியான விதத்தில் நம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். யெகோவாவின் ஊழியர்கள் ஆன்மீக விபச்சாரத்திலிருந்து விலகியிருக்கவே எப்போதும் விரும்புகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட விபச்சாரத்தில் கடவுளுடைய மக்களைச் சிக்க வைக்க பிசாசாகிய சாத்தான் குறியாக இருக்கிறான். பல தடவை அதில் அவன் வெற்றியும் அடைந்திருக்கிறான். எசேக்கியேலின் காலத்துக்குள், கடவுளுடைய மக்கள் பல தடவை ஆன்மீக விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அதைப் பற்றி நாம் ஆழமாகப் படிக்கும்போது யெகோவாவுடைய நெறிமுறைகளைப் பற்றியும் அவருடைய நீதி, இரக்கம் ஆகிய குணங்களைப் பற்றியும் நம்மால் கற்றுக்கொள்ள முடிகிறது.

‘நீ ஒரு விபச்சாரியாக ஆனாய்’

8-10. (அ) தூய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் என்ன? (ஆ) தன்னுடைய மக்கள் பொய் மதத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது யெகோவா எப்படி உணருகிறார்? விளக்குங்கள்.

8 தன்னுடைய மக்கள் செய்த துரோகம் தன்னை எந்தளவுக்கு பாதித்தது என்பதை விளக்க ஒரு விபச்சாரியின் உதாரணத்தை எசேக்கியேல் புத்தகத்தில் யெகோவா பயன்படுத்துகிறார். எசேக்கியேல், கடவுளுடைய சக்தியினால் தூண்டப்பட்டு இரண்டு அதிகாரங்களில் அதைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். யெகோவாவின் மக்கள் அவருக்கு உண்மையில்லாமல் ஒழுக்கக்கேடாக நடந்தது, அவருக்குத் துரோகம் செய்தது போல இருந்தது என்றும், அது அவருடைய மனதை ரொம்பவே புண்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கடவுள் தன்னுடைய மக்களை ஏன் விபச்சாரிகளோடு ஒப்பிட்டார்?

9 இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, தூய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தை நாம் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 5-ஆம் அதிகாரத்தில் நாம் ஏற்கெனவே பார்த்தோம். இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த திருச்சட்டத்தில் யெகோவா இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: “என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது. . . . நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” (யாத். 20:3, 5) இதே விஷயத்தை இன்னொரு சந்தர்ப்பத்திலும் இப்படி வலியுறுத்தினார்: “வேறொரு தெய்வத்தை நீங்கள் வணங்கக் கூடாது. யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுள் என்பது எல்லாருக்கும் தெரியும். உண்மையில், அவர் முழு பக்தியை எதிர்பார்க்கும் கடவுள்.” (யாத். 34:14) இந்த விஷயத்தை யெகோவா எவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கிறார்! யெகோவா நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நாம் அவரை மட்டுமே வணங்க வேண்டும்.

10 இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, கணவன்-மனைவியின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். தன்னுடைய மனைவி தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டுமென்று ஒரு கணவர் எதிர்பார்ப்பது நியாயம்தான். அதேபோல், மனைவியும் எதிர்பார்ப்பது நியாயம்தான். ஒரு கணவனோ மனைவியோ வேறொருவரிடம் காதல் உணர்வோடு அல்லது பாலியல் ஆசையோடு பழகுவதைப் பார்க்கும்போது அவருடைய அல்லது அவளுடைய துணை எரிச்சல்படுவதும், தனக்குத் துரோகம் செய்யப்பட்டதுபோல் உணருவதும் நியாயம்தான். (எபிரெயர் 13:4-ஐ வாசியுங்கள்.) அதேபோல், தனக்கு மட்டுமே சொந்தமான மக்கள், தன்னை வணங்காமல் பொய் தெய்வங்களை வணங்குவதைப் பார்க்கும்போது அவர்கள் தனக்குத் துரோகம் செய்துவிட்டதுபோல் யெகோவா உணருகிறார். அதைப் பற்றி எசேக்கியேல் 16-ஆம் அதிகாரத்தில் வலிமையான வார்த்தைகளால் விளக்கியிருக்கிறார்.

11. எருசலேம் நகரத்தைப் பற்றியும் ஆரம்பத்தில் அதன் நிலைமையைப் பற்றியும் யெகோவா என்ன சொல்கிறார்?

11 யெகோவா பேசிய நிறைய பதிவுகள் எசேக்கியேல் புத்தகத்தில் இருக்கின்றன. அவற்றில் எசேக்கியேல் 16-ஆம் அதிகாரத்திலுள்ள பதிவுதான் மிகவும் நீளமான பதிவு. எபிரெய வேதாகமத்தில் இருக்கிற மிகவும் நீளமான தீர்க்கதரிசனப் பதிவுகளில் இதுவும் ஒன்று. எருசலேம் நகரத்தைப் பற்றி யெகோவா அதில் சொல்கிறார். அந்த நகரம், அவருக்கு உண்மையில்லாமல் போன யூதா மக்களுக்கு அடையாளமாக இருந்தது. அந்த நகரம் உருவான கதையையும், பிற்பாடு அது தனக்குத் துரோகம் செய்ததையும் பற்றிய அதிர்ச்சியூட்டும் விஷயத்தை அவர் சொல்கிறார். ஆரம்பத்தில் அந்த நகரம் நிர்க்கதியாக விடப்பட்ட ஒரு குழந்தையைப் போல இருந்தது. அசுத்தமாக, கேட்பாரற்று கிடந்தது. பொய் வணக்கத்தாரான கானானியர்கள்தான் அதன் பெற்றோர்கள். ஏனென்றால், எருசலேம் நகரத்தை தாவீது கைப்பற்றும்வரையில் அது கானான் தேசத்தைச் சேர்ந்த எபூசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆதரவற்ற குழந்தையைப் போல இருந்த அந்த நகரத்தைப் பார்த்து யெகோவா பரிதாபப்பட்டார். அதைச் சுத்தப்படுத்தி, தேவையானதையெல்லாம் கொடுத்து பராமரித்தார். காலப்போக்கில், அந்த நகரம் அவருடைய மனைவியைப் போல் ஆனது. மோசேயின் காலத்தில், இஸ்ரவேலர்களோடு யெகோவா ஒரு ஒப்பந்தம் செய்தபோது அதற்குக் கட்டுப்படுவதாக அவர்கள் மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டார்கள். பிற்பாடு அவர்கள் எருசலேம் நகரத்தில் குடியேறியபோது அந்த நகரம் யெகோவாவுக்கு மனைவியைப் போல் ஆனது. (யாத். 24:7, 8) எருசலேம் அந்தத் தேசத்தின் தலைநகரமாக ஆன பிறகு, யெகோவா அந்த நகரத்தை ஆசீர்வதித்தார், வளமாக்கினார். வசதியும், செல்வாக்கும் உள்ள ஒரு கணவர், தன்னுடைய மனைவிக்கு அழகான நகைகளைப் போட்டு அழகு பார்ப்பது போல அவரும் அந்த நகரத்தை அழகுபடுத்தினார்.—எசே. 16:1-14.

சாலொமோன், வேறு தேசங்களைச் சேர்ந்த தன்னுடைய மனைவிகளைப் பிரியப்படுத்துவதற்காக, எருசலேமைப் பொய் வணக்கத்தால் கறைபடுத்தினார் (பாரா 12)

12. எருசலேமில் பொய் வணக்கம் எப்படித் தலைதூக்க ஆரம்பித்தது?

12 அடுத்து என்ன நடந்தது? “நீ உன்னுடைய அழகையே நம்பினாய். உனக்கு இருந்த புகழைப் பயன்படுத்தி ஒரு விபச்சாரியாக ஆனாய். போவோர் வருவோர் எல்லாருடனும் உல்லாசமாக இருந்தாய். உன்னையே அவர்களுக்குக் கொடுத்தாய்” என்று யெகோவா சொன்னார். (எசே. 16:15) சாலொமோனின் காலத்தில், யெகோவா தன்னுடைய மக்களுக்கு ஏராளமான செல்வத்தையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்ததால், எருசலேம் நகரம் உலகத்திலேயே பேரும் புகழும் பெற்ற ஒரு நகரமாக ஆனது. (1 ரா. 10:23, 27) ஆனால், பொய் வணக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே தலைதூக்க ஆரம்பித்தது. வேறு தேசங்களைச் சேர்ந்த தன்னுடைய மனைவிகளைப் பிரியப்படுத்துவதற்காக, சாலொமோன் பொய் வணக்கத்தால் எருசலேமைக் கறைபடுத்த ஆரம்பித்தார். (1 ரா. 11:1-8) அவருக்குப் பின் ராஜாவாக ஆன சிலர், அவரைவிடவும் மோசமாக நடந்துகொண்டார்கள்; தேசம் முழுவதையும் பொய் வணக்கத்தால் கறைபடுத்தினார்கள். இப்படி, அவர்கள் ஆன்மீக விபச்சாரத்தில் ஈடுபட்டு தனக்குத் துரோகம் செய்ததைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார்? “இதெல்லாம் நடக்கவே கூடாது; ஒருபோதும் நடக்கக் கூடாது” என்று அவர் சொன்னார். (எசே. 16:16) ஆனால், அடங்காமல் போன அந்த மக்கள் இன்னும் படு கேவலமாக நடக்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரவேலர்கள் சிலர் தங்களுடைய பிள்ளைகளை மோளேகைப் போன்ற பொய் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்

13. எருசலேமில் கடவுளுடைய மக்கள் என்ன மோசமான செயலைச் செய்தார்கள்?

13 தான் தேர்ந்தெடுத்த மக்கள் செய்த மோசமான செயலைப் பற்றி யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நீ எனக்குப் பெற்ற மகன்களையும் மகள்களையும் அந்த உருவங்களுக்கு நரபலி கொடுத்தாய். நீ செய்கிற விபச்சாரத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது! என்னுடைய மகன்களை நீ வெட்டிப்போட்டாய்; அவர்களை நெருப்பில் பலி கொடுத்தாய்.” (எசே. 16:20, 21) அவருடைய வேதனையையும் அந்த மக்கள்மீது அவருக்கு இருந்த வெறுப்பையும் இந்த வார்த்தைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் செய்த படு பயங்கரமான செயல்களிலிருந்து சாத்தான் எவ்வளவு மோசமானவன் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. யெகோவாவின் மக்களை இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களில் ஈடுபட வைப்பதில் அவனுக்கு எவ்வளவு சந்தோஷம்! ஆனால் யெகோவா எல்லாவற்றையும் பார்க்கிறார். சாத்தான் செய்யும் அட்டூழியங்கள், அக்கிரமங்கள் எல்லாவற்றையும் அவர் ஒழித்துக்கட்டுவார்; அவர் நிச்சயம் நீதி வழங்குவார்.யோபு 34:24-ஐ வாசியுங்கள்.

14. யெகோவா சொன்ன உதாரணத்தில், எருசலேமுக்கு அக்காவாகவும் தங்கையாகவும் இருந்தவர்கள் யார்? இந்த மூன்று பேரில் படு மோசமாக நடந்துகொண்டது யார்?

14 ஆனால், அவள் (எருசலேம்) எவ்வளவு மோசமாக நடந்துகொண்டிருந்தாள் என்பதை உணரவே இல்லை. அவள் தொடர்ந்து விபச்சாரம் செய்துகொண்டிருந்தாள். சொல்லப்போனால், மற்ற விபச்சாரிகளைவிட படு கேவலமாக நடந்துகொண்டதாக யெகோவா சொன்னார். ஏனென்றால், தன்னோடு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கு மற்றவர்களுக்கு அவள் கூலி கொடுத்தாள். (எசே. 16:34) எருசலேம், அதன் “தாயை” போல, அதாவது ஒரு காலத்தில் அந்தத் தேசத்தில் ஆதிக்கம் செலுத்திய பொய் வணக்கத்தாரைப் போல, இருப்பதாக கடவுள் சொன்னார். (எசே. 16:44, 45) எருசலேமுக்கு முன்பே ஆன்மீக விபச்சாரத்தில் ஈடுபட்ட சமாரியாவை, எருசலேமின் அக்கா என்று அவர் சொன்னார். ஆணவத்தாலும், கீழ்த்தரமான நடத்தையாலும் பல காலத்துக்கு முன்பே அழிக்கப்பட்ட சோதோமை எருசலேமின் தங்கை என்று சொன்னார். அருவருப்பான காரியங்களைச் செய்வதில் எருசலேம் தன்னுடைய சகோதரிகளான சமாரியாவையும், சோதோமையும் மிஞ்சிவிட்டாள் என்று சொன்னார். (எசே. 16:46-50) எத்தனையோ முறை எச்சரிப்பு கொடுக்கப்பட்டும், கடவுளுடைய மக்கள் அதையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, அருவருப்பான செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டார்கள்.

15. யெகோவா ஏன் எருசலேம் மக்களைத் தண்டிக்கவிருந்தார்? அவர்களுக்கு என்ன நம்பிக்கையை அளித்தார்?

15 அவர்களை என்ன செய்யப்போவதாக யெகோவா சொன்னார்? “உன்னோடு உல்லாசமாக இருந்த எல்லாரையும், நீ காதலித்த எல்லாரையும், . . . ஒன்றுகூட்டுவேன்” என்றும், “உன்னை அவர்களுடைய கையில் கொடுப்பேன்” என்றும் அவர் திட்டவட்டமாகச் சொன்னார். அவருடைய மக்களின் கூட்டாளிகளான பொய் வணக்கத்தார் அவளை அழித்து, அவளுடைய அழகைக் கெடுத்து, அவளிடமிருந்த விலைமதிப்புள்ள பொருள்களைப் பிடுங்கிக்கொள்வார்கள். “அவர்கள் உன்மேல் கல்லெறிவார்கள், உன்னை வாளால் வெட்டிப்போடுவார்கள்” என்று அவர் சொன்னார். யெகோவா ஏன் இப்படியொரு தண்டனையைக் கொடுக்கப்போவதாகச் சொன்னார்? தன்னுடைய மக்களைப் பூண்டோடு அழிப்பதற்காக அல்ல, அவர்களுடைய ‘விபச்சாரத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்காகவே’ அப்படிச் சொன்னார். “என்னுடைய ஆக்ரோஷம் அடங்கும்வரை உன்னைத் தண்டிப்பேன். அதன்பின், கோபத்தை விட்டுவிட்டு அமைதியாகிவிடுவேன்” என்று அவர் சொன்னார். இந்தப் புத்தகத்தின் 9-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, சிறையிருப்புக்குப் பிறகு தன்னுடைய மக்களைத் திரும்பவும் அவர்களுடைய தாய்நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் யெகோவாவின் நோக்கம். அது நமக்கு எப்படித் தெரியும்? “உன்னுடைய சிறுவயதில் நான் உன்னோடு செய்த ஒப்பந்தத்தை நான் நினைத்துப் பார்ப்பேன்” என்று அவர் சொன்னதிலிருந்து அதைத் தெரிந்துகொள்கிறோம். (எசே. 16:37-42, 60) இஸ்ரவேலர்களைப் போல் இல்லாமல் யெகோவா எப்போதும் உண்மையாக இருப்பார்.வெளிப்படுத்துதல் 15:4-ஐ வாசியுங்கள்.

16, 17. (அ) அகோலாளும் அகோலிபாளும், கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறார்கள் என்று நாம் ஏன் இப்போதெல்லாம் சொல்வதில்லை? (“விபச்சார சகோதரிகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) (ஆ) எசேக்கியேல் 16 மற்றும் 23 அதிகாரங்களிலிருந்து என்ன நடைமுறையான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?

16 எசேக்கியேல் 16-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னுடைய நீண்ட, வலிமையான பேச்சின் மூலம், தன்னுடைய நீதிநெறிகளையும் மகா இரக்கம், நீதி ஆகிய குணங்களையும் பற்றி நிறைய விஷயங்களை யெகோவா நமக்குக் கற்றுத்தருகிறார். எசேக்கியேல் 23-ஆம் அதிகாரத்திலும் இதுபோன்ற விஷயங்கள் இருக்கின்றன. தன்னுடைய மக்கள் செய்த விபச்சாரத்தைப் பற்றி யெகோவா தெள்ளத் தெளிவாகச் சொன்ன விஷயங்களை உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் மனதில் பதிய வைக்க வேண்டும். யூதாவையும் எருசலேமையும் போல நாம் ஒருபோதும் யெகோவாவின் மனதைப் புண்படுத்த கூடாது. அதனால், எல்லா விதமான சிலை வழிபாட்டையும் நாம் அடியோடு ஒதுக்கித்தள்ள வேண்டும். பேராசையும் பொருளாசையும் சிலை வழிபாட்டுக்குச் சமமாக இருப்பதால், அவற்றைக்கூட நாம் தவிர்க்க வேண்டும். (மத். 6:24; கொலோ. 3:5) நம்மீதுள்ள இரக்கத்தால், இந்தக் கடைசி நாட்களில் யெகோவா தூய வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டியிருப்பதற்காக நாம் நன்றியோடு இருக்க வேண்டும். அது திரும்பவும் கறைபட்டுப்போக அவர் ஒருபோதும் விட மாட்டார்! அவர் ஆன்மீக இஸ்ரவேலர்களோடு “நிரந்தரமான ஒப்பந்தத்தை” செய்திருக்கிறார். இந்த ஒப்பந்தம் ஒருபோதும் முறிக்கப்படாது. ஏனென்றால், ஆன்மீக இஸ்ரவேலர்கள் உண்மையில்லாமல் நடந்துகொள்ளவோ ஆன்மீக விபச்சாரத்தில் ஈடுபடவோ மாட்டார்கள். (எசே. 16:60) அதனால், இன்று யெகோவாவுடைய சுத்தமான மக்களின் பாகமாக இருப்பதற்கு நமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பெரிய பாக்கியமாக நினைக்க வேண்டும்.

17 எசேக்கியேல் புத்தகத்தில் விபச்சாரிகளைப் பற்றி யெகோவா சொன்ன விஷயங்களிலிருந்து, ‘பேர்போன விபச்சாரியான’ மகா பாபிலோனைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

“இனி ஒருபோதும் இல்லாமல்போகும்”

18, 19. எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள விபச்சாரிகளுக்கு இடையே என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?

18 யெகோவா மாறுவதில்லை. (யாக். 1:17) இந்தப் பேர்போன விபச்சாரியைப் பற்றி யெகோவா அன்று எப்படி உணர்ந்தாரோ அப்படித்தான் இன்றும் உணருகிறார். அதனால்தான், எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விபச்சாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கும், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள ‘பேர்போன விபச்சாரிக்கு’ கொடுக்கப்படும் தண்டனைத் தீர்ப்புக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

19 உதாரணத்துக்கு, எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டுள்ள விபச்சாரிகளுக்கு யெகோவாவிடமிருந்து நேரடியாக தண்டனை கிடைக்கவில்லை. அவர்கள் எந்தத் தேசங்களோடு ஆன்மீக ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார்களோ அந்தத் தேசங்களிடமிருந்தே தண்டனை கிடைத்தது. அதேபோல, பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோன், ‘பூமியின் ராஜாக்களோடு’ அப்படிப்பட்ட ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதால் அவள் கண்டனம் செய்யப்படுகிறாள். அவளுக்கு யாரிடமிருந்து தண்டனை கிடைக்கும்? ‘பூமியின் ராஜாக்கள்,’ அதாவது அரசியல் அமைப்புகள், “அந்த விபச்சாரிமீது வெறுப்படைந்து அவளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு அவளை நிர்வாணமாக்கிவிடும். பின்பு, அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடும்” என்று வெளிப்படுத்துதல் புத்தகத்தில் வாசிக்கிறோம். இந்த உலகத்தின் அரசாங்கங்கள் ஏன் திடீரென்று இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கும்? ஏனென்றால், ‘கடவுள் தன்னுடைய எண்ணத்தை அவர்களுடைய இதயங்களில் வைப்பார்.’—வெளி. 17:1-3, 15-17.

20. பாபிலோனுக்குக் கொடுக்கப்படும் தண்டனையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை எது காட்டுகிறது?

20 கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பல பிரிவுகள் உட்பட பொய் மதங்கள் எல்லாவற்றுக்கும் தண்டனை கொடுக்க இந்த உலகத்தின் அரசாங்கங்களை யெகோவா பயன்படுத்துவார். இந்தத் தண்டனையில் எந்த மாற்றமும் இருக்காது. பொய் மதங்களுக்கு மன்னிப்பும் கிடைக்காது, அவற்றின் வழிகளை மாற்றிக்கொள்ள இனியும் வாய்ப்பு கொடுக்கப்படாது. பாபிலோன் “இனி ஒருபோதும் இல்லாமல்போகும்” என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. (வெளி. 18:21) அவளுக்கு வரும் கதியைப் பார்க்கும் தேவதூதர்கள் சந்தோஷத்தில் இப்படிச் சொல்வார்கள்: “‘யா’வைப் புகழுங்கள்! . . . அவள் எரிவதால் உண்டாகிற புகை என்றென்றும் மேலே போய்க்கொண்டிருக்கிறது.” (வெளி. 19:3) இது என்றென்றைக்குமாக கொடுக்கப்பட்ட தண்டனையாக இருக்கும். அதன் பிறகு, எந்தவொரு பொய் மதமும் தலைதூக்கவோ தூய வணக்கத்தைக் கறைபடுத்தவோ ஒருபோதும் அனுமதிக்கப்படாது. பாபிலோன், நெருப்புக்கு இரையாகும்போது உண்டாகிற புகை அடையாள அர்த்தத்தில் என்றென்றைக்கும் மேலே எழும்பிக்கொண்டே இருக்கும்.

மகா பாபிலோன் பல காலமாக எந்தத் தேசங்களோடு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருக்கிறதோ அந்தத் தேசங்களே அவளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவளை அழித்துப்போடும் (பாராக்கள் 19, 20)

21. பொய் மதம் அழியும்போது, எது ஆரம்பிக்கும்? அதன் முடிவில் என்ன நடக்கும்?

21 இந்த உலகத்தின் அரசாங்கங்கள் மகா பாபிலோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, உண்மையிலேயே யெகோவாவின் தண்டனைத் தீர்ப்பைத்தான் அவை நிறைவேற்றும். இது யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதோடு சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய சம்பவம். வரலாறு காணாத ஒரு மிகுந்த உபத்திரவம் அப்போது ஆரம்பிக்கும். (மத். 24:21) அந்த உபத்திரவத்தின் முடிவில் அர்மகெதோன் போர் நடக்கும். அது, இந்தப் பொல்லாத உலகத்துக்கு எதிராக யெகோவா செய்யும் ஒரு போர். (வெளி. 16:14, 16) மிகுந்த உபத்திரவம் எப்படி ஆரம்பமாகும் என்பதைப் பற்றி எசேக்கியேல் புத்தகம் ஏராளமான விஷயங்களைச் சொல்கிறது. இந்தப் புத்தகத்தில் அடுத்து வரும் அதிகாரங்களில் அதைப் பற்றிப் பார்ப்போம். இப்போது, எசேக்கியேல் 16-ஆம் அதிகாரத்திலும் 23-ஆம் அதிகாரத்திலும் உள்ள நடைமுறையான என்னென்ன பாடங்களை நம் மனதில் பதிய வைத்து பின்பற்ற வேண்டுமென்று பார்க்கலாம்.

இந்த உலகத்தின் அரசாங்கங்கள் மகா பாபிலோனுக்கு எதிராகச் செயல்படுவதன் மூலம் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் (பாரா 21)

22, 23. எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள விபச்சாரிகளைப் பற்றிப் பார்த்த பிறகு, தூய வணக்கம் சம்பந்தமாக நாம் என்ன செய்யத் தீர்மானமாக இருக்க வேண்டும்?

22 தூய வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களைத் தவறான வழிக்குக் கொண்டுபோக வேண்டுமென்று சாத்தான் துடிக்கிறான். தூய வணக்கத்திலிருந்து நம்மை விலக்குவதற்கும் எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விபச்சாரிகளைப் போல நம்மை ஆக்குவதற்கும் சாத்தானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவன் ரொம்பச் சந்தோஷப்படுவான். அந்த மாதிரி சமயத்தில் நாம் ஒரு விஷயத்தை ஞாபகம் வைக்க வேண்டும். தனக்கு உண்மையில்லாமல் போவதையும் வேறு தெய்வங்களை வணங்குவதையும் யெகோவா ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார். (எண். 25:11) அதனால், பொய் மதத்திலிருந்து விலகியிருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். கடவுளுடைய பார்வையில் ‘அசுத்தமான எதையும் தொடாமல்’ இருக்க வேண்டும். (ஏசா. 52:11) அதேபோல், இந்தப் பிளவுபட்ட உலகத்தின் அரசியல் சண்டை சச்சரவுகளில் நாம் நடுநிலையோடு இருக்க வேண்டும். (யோவா. 15:19) தேசப்பற்றையும் சாத்தான் பயன்படுத்துகிற ஒருவிதமான பொய் மதமாக நாம் கருதுகிறோம். அதனால்தான், அதை நாம் அறவே தவிர்க்கிறோம்.

23 எல்லாவற்றுக்கும் மேலாக, சுத்தமான, தூய்மையான ஆன்மீக ஆலயத்தில் யெகோவாவை வணங்குவது நமக்குக் கிடைத்திருக்கிற பெரிய பாக்கியம் என்பதை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும். இந்த அருமையான ஏற்பாட்டை நாம் உயர்வாக நினைத்தால், பொய் மதத்திலிருந்தும் அதன் விபச்சார செயல்களிலிருந்தும் விலகியிருக்க திடத் தீர்மானமாக இருப்போம்.