Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 17

“கோகுவே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன்”

“கோகுவே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன்”

எசேக்கியேல் 38:3

முக்கியக் குறிப்பு: “கோகு” யார், அவன் தாக்குகிற ‘தேசம்’ எது என்பதைப் பற்றிய விளக்கம்

1, 2. சீக்கிரத்தில் வரப்போகும் மிகப் பெரிய போர் எது? அது சம்பந்தமாக என்னென்ன கேள்விகள் எழும்புகின்றன? (ஆரம்பப் படம்.)

மனிதர்கள் செய்த போர்களால், ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்தப் பூமி இரத்தக்கறை படிந்ததாக இருக்கிறது. 20-ஆம் நூற்றாண்டில் நடந்த இரண்டு பெரிய உலகப் போர்களின்போது இந்த உலகம் இரத்தத்தில் குளித்தது என்றே சொல்லலாம். ஆனால், வரலாறு காணாத மிகப் பெரிய போர் சீக்கிரத்தில் நடக்கப்போகிறது. இது, சுயநல காரணங்களுக்காக நாடுகளுக்கு இடையே நடக்கப்போகும் போர் அல்ல. ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்.’ (வெளி. 16:14) ஆணவம் பிடித்த ஒரு எதிரி, கடவுளுக்கு அருமையாக இருக்கும் ஒரு தேசத்தைத் தாக்கும்போது இந்தப் போர் ஆரம்பமாகும். அப்போது உன்னதப் பேரரசரான யெகோவா, அந்த எதிரியை அழிப்பதற்கு தன்னுடைய வல்லமையை மிகப் பெரிய அளவில் காட்டுவார். அப்படிப்பட்ட வல்லமையை அதுவரை மனிதர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள்.

2 இப்போது, சில முக்கியமான கேள்விகள் நம் மனதுக்கு வரலாம். அந்த எதிரி யார்? அவன் தாக்கப்போகும் தேசம் எது? அந்தத் தேசத்தை அவன் தாக்கப்போவது எப்போது, ஏன், எப்படி? சீக்கிரத்தில் நடக்கப்போகும் இந்தச் சம்பவம், யெகோவாவின் தூய வணக்கத்தாரான நம்மைப் பாதிக்கப்போவதால் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்வது அவசியம். எசேக்கியேல் 38, 39 அதிகாரங்களிலுள்ள சிலிர்க்க வைக்கும் தீர்க்கதரிசனத்திலிருந்து இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள முடியும்.

அந்த எதிரி​—மாகோகு தேசத்தின் கோகு

3. மாகோகு தேசத்தின் கோகு பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனத்திலுள்ள முக்கியக் குறிப்புகள் என்ன?

 3 எசேக்கியேல் 38:1, 2, 8, 16, 18; 39:4, 11-ஐ வாசியுங்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தின் முக்கியக் குறிப்புகள் இவைதான்: “கடைசி நாட்களில்” “மாகோகு தேசத்தின் கோகு” என்ற எதிரி, கடவுளுடைய மக்கள் வாழும் “தேசத்தை” தாக்க வருவான். அவன் கடுமையாகத் தாக்கும்போது, யெகோவாவின் “கோபம்” நெருப்பாகப் பற்றியெரியும். அவர் உடனடியாகத் தலையிட்டு, கோகுவைத் தோற்கடிப்பார். * வெற்றிவீரரான யெகோவா, அந்த எதிரியையும் அவனோடு சேர்ந்த எல்லாரையும், ‘பிணம் தின்னும் எல்லா விதமான பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் . . . இரையாக்குவார்.’ கடைசியில், கோகுவை ‘புதைக்க ஒரு இடத்தை’ யெகோவா கொடுப்பார். இந்தத் தீர்க்கதரிசனம் சீக்கிரத்தில் எப்படி நிறைவேறப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, கோகு யார் என்பதை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

4. மாகோகு தேசத்தின் கோகுவைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ள முடிகிறது?

4 மாகோகு தேசத்தின் கோகு யார்? இந்த கோகு, தூய வணக்கத்தாரின் எதிரி என்பதை எசேக்கியேலின் விவரிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. கோகு என்ற பெயர், உண்மை வணக்கத்தின் முக்கிய எதிரியான சாத்தானைக் குறிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனப் பெயரா? நம்முடைய பிரசுரங்களில் பல வருஷங்களாகவே அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தைக் கூடுதலாக ஆராய்ச்சி செய்த பிறகு, நம்முடைய புரிந்துகொள்ளுதலில் மாற்றம் தேவை என்பதைத் தெரிந்துகொண்டோம். மாகோகு தேசத்தின் கோகு என்ற பட்டப்பெயர், ஆவி உடலில் இருக்கும் ஒருவரைக் குறிக்கவில்லை; அதற்குப் பதிலாக, கண்ணுக்குத் தெரிந்த ஒரு மனித எதிரியை, அதாவது தூய வணக்கத்துக்கு எதிராகப் போர் செய்யும் தேசங்களின் கூட்டணியை, குறிக்கிறது என காவற்கோபுரம் விளக்கியது. * எதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம் என்பதைப் பார்ப்பதற்கு முன், கோகு என்ற பெயர் ஆவி உடலில் இருக்கும் ஒருவரைக் குறிக்கவில்லை என்பதற்கு எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தகவல்களைப் பார்க்கலாம்.

5, 6. மாகோகு தேசத்தின் கோகு, ஆவி உடலில் இருக்கும் ஒருவரைக் குறிக்கவில்லை என்பதற்கு எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில் என்ன தகவல்கள் இருக்கின்றன?

5“பிணம் தின்னும் எல்லா விதமான பறவைகளுக்கும் . . . உன்னை இரையாக்குவேன்.”  (எசே. 39:4) தான் கொடுக்கப்போகும் தண்டனைத் தீர்ப்பைப் பற்றி கடவுள் எச்சரிக்கும்போது, ‘பிணங்கள் பறவைகளுக்கு இரையாகும்’ என்ற வார்த்தைகளை பைபிளில் பல தடவை பயன்படுத்தியிருக்கிறார். கடவுள் இப்படிப்பட்ட எச்சரிப்புகளை இஸ்ரவேலர்களுக்கு மட்டுமல்ல, மற்ற தேசத்தாருக்கும் கொடுத்திருக்கிறார். (உபா. 28:26; எரே. 7:33; எசே. 29:3, 5) இந்த எச்சரிப்புகள், ஆவி உடலில் இருப்பவர்களுக்கு அல்ல, மாமிசமும் இரத்தமும் உள்ள மனிதர்களுக்கே கொடுக்கப்பட்டன என்பதைக் கவனியுங்கள். ஏனென்றால், பறவைகளாலும் காட்டு மிருகங்களாலும் ஆவி உடலைச் சாப்பிட முடியாது, மாமிசத்தைத்தான் சாப்பிட முடியும். அப்படியானால், எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிப்பிலிருந்து, கோகு என்ற பெயர், ஆவி உடலில் இருக்கும் ஒருவரைக் குறிக்கவில்லை என்று தெரிகிறது.

6“கோகுவைப் புதைக்க இஸ்ரவேலில் நான் ஒரு இடத்தைத் தருவேன்.”  (எசே. 39:11) ஆவி உடலில் இருப்பவர்கள் பூமியில் புதைக்கப்படுவதாக பைபிள் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, சாத்தானும் அவனுடைய பேய்களும் 1,000 வருஷங்களுக்கு அதலபாதாளத்துக்குள் தள்ளப்படுவார்கள் என்றும், பிற்பாடு அடையாள அர்த்தமுள்ள நெருப்பு ஏரியில் தள்ளப்படுவார்கள் என்றும் சொல்கிறது. இது, அவர்கள் அடியோடு அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. (லூக். 8:31; வெளி. 20:1-3, 10) ஆனால், கோகுவைப் புதைப்பதற்கு பூமியில் ஒரு இடம் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருப்பதால், அவன் ஆவி உடலில் இருக்கும் ஒரு நபரைக் குறிக்கவில்லை என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

7, 8. “வடதிசை ராஜா” எப்போது தன்னுடைய முடிவைச் சந்திப்பான்? மாகோகு தேசத்தின் கோகுவும் வடதிசை ராஜாவும் எப்படி ஒரே விதமான முடிவைச் சந்திப்பார்கள்?

7 அந்த கோகு, ஆவி உடலில் இருக்கும் ஒரு நபர் கிடையாது என்றால், தூய வணக்கத்தாருக்கு எதிராக கடைசித் தாக்குதலை நடத்தப்போகும் அந்த எதிரி யாரை, அல்லது எதைக் குறிக்கிறான்? மாகோகு தேசத்தின் கோகு யார் என்பதைத் தெரிந்துகொள்ள இரண்டு தீர்க்கதரிசனங்களை இப்போது பார்க்கலாம்.

8“வடதிசை ராஜா.”  (தானியேல் 11:40-45-ஐ வாசியுங்கள்.) தானியேல், தன்னுடைய காலத்திலிருந்து நம்முடைய காலம்வரையுள்ள உலக வல்லரசுகளைப் பற்றி முன்னறிவித்தார். அதோடு, எதிரும் புதிருமாக இருக்கும் ஆட்சியாளர்களைப் பற்றியும், அதாவது “தென்திசை ராஜா” மற்றும் “வடதிசை ராஜா” பற்றியும், அந்தத் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்டார். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பல நூற்றாண்டுகளாகவே பல்வேறு தேசங்கள் போர் செய்திருக்கின்றன. அந்தக் காலக்கட்டத்தில், பல ராஜாக்கள் அல்லது தேசங்கள் இந்த இரண்டு ராஜாக்களுக்கு அடையாளமாக இருந்திருக்கிறார்கள். “முடிவு காலத்தில்,” வடதிசை ராஜா தொடுக்கப்போகும் கடைசிப் போர் பற்றி தானியேல் இப்படிச் சொன்னார்: “[அவன்] பலரை அழிக்கவும் ஒழித்துக்கட்டவும் மிகுந்த ஆவேசத்தோடு புறப்பட்டுப் போவான்.” யெகோவாவை வணங்குகிறவர்கள்தான் வடதிசை ராஜாவின் முக்கிய குறியாக இருக்கிறார்கள். * ஆனால், மாகோகு தேசத்தின் கோகுவைப் போலவே இந்த வடதிசை ராஜாவும், கடவுளுடைய மக்களுக்கு எதிரான தாக்குதலில் தோல்வி அடைந்து, “தன் முடிவைச் சந்திப்பான்.”

9. மாகோகு தேசத்தின் கோகுவும் ‘பூமி முழுவதுமுள்ள ராஜாக்களும்’ எப்படி ஒரே விதமான முடிவைச் சந்திப்பார்கள்?

9‘பூமி முழுவதுமுள்ள ராஜாக்கள்.’  (வெளிப்படுத்துதல் 16:14, 16; 17:14; 19:19, 20-ஐ வாசியுங்கள்.) ‘பூமியின் ராஜாக்கள்,’ “ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக” இருக்கும் இயேசுவோடு போர் செய்வதைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. பரலோகத்தில் ராஜாவாக இருக்கும் இயேசுவை அவர்களால் தாக்க முடியாது என்பதால், பூமியில் இருக்கும் அவருடைய ஆதரவாளர்களைத் தாக்குவார்கள். கடைசியில் பூமியின் ராஜாக்கள் அர்மகெதோன் போரில் தோல்வி அடைவார்கள். யெகோவாவின் மக்களைத் தாக்கிய பிறகுதான் அவர்கள் தங்களுடைய முடிவைச் சந்திப்பார்கள் என்பதைக் கவனியுங்கள். இதேபோன்ற முடிவைத்தான் மாகோகு தேசத்தின் கோகுவும் சந்திப்பான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. *

10. மாகோகு தேசத்தின் கோகுவைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரலாம்?

10 இந்த இரண்டு தீர்க்கதரிசனங்களிலிருந்து, கோகுவைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரலாம்? கோகு, ஆவி உடலில் இருக்கும் ஒரு நபர் கிடையாது; அவன், கடவுளுடைய மக்களைச் சீக்கிரத்தில் தாக்கப்போகும் தேசங்களைக் குறிக்கிறான் என்ற முடிவுக்கு வரலாம். அந்தத் தேசங்கள் ஒரு கூட்டணியை அமைக்கும், அதாவது ஏதோவொரு விதத்தில் ஒன்றுசேரும். கடவுளுடைய மக்கள் உலகம் முழுவதும் இருப்பதால், அவர்களைத் தாக்குவதற்கு அந்தத் தேசங்கள் தங்களுடைய எண்ணத்திலும் செயலிலும் ஒன்றுசேர வேண்டியிருக்கும். (மத். 24:9) இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவன், பொல்லாத சதிகாரனான சாத்தான்தான் என்பதில் சந்தேகமே இல்லை. உண்மை வணக்கத்தை எதிர்ப்பதற்கு இந்த உலகத்தின் தேசங்களை அவன் பல காலமாகவே பயன்படுத்தியிருக்கிறான். (1 யோ. 5:19; வெளி. 12:17) ஆனால், மாகோகு தேசத்தின் கோகுவைப் பற்றிய எசேக்கியேலின் தீர்க்கதரிசனம், யெகோவாவின் மக்களைத் தாக்குவதில் பூமியிலுள்ள தேசங்களுக்கு இருக்கும் பங்கைப் பற்றியே சொல்கிறது. *

‘தேசம்’ எதைக் குறிக்கிறது?

11. மாகோகு தேசத்தின் கோகு தாக்கப்போகும் “தேசத்தை” பற்றி எசேக்கியேல் தீர்க்கதரிசனம் எப்படி விவரிக்கிறது?

11  பாரா 3-ல் நாம் பார்த்தபடி, மாகோகு தேசத்தின் கோகு, யெகோவாவுக்கு அருமையாக இருக்கும் ஒரு தேசத்தைத் தாக்குவதன் மூலம் அவருடைய கடும் கோபத்தைக் கிளறுவான். இந்தத் தேசம் எதைக் குறிக்கிறது? இதைத் தெரிந்துகொள்ள எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தை நாம் மறுபடியும் பார்க்கலாம். (எசேக்கியேல் 38:8-12-ஐ வாசியுங்கள்.) “தாக்குதலிலிருந்து மீண்ட ஜனங்களுடைய தேசத்தை,” அதாவது “மற்ற தேசங்களிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களை,” கோகு தாக்குவான் என்று அதில் வாசிக்கிறோம். அந்தத் தேசத்தில் வாழ்கிற வணக்கத்தாரைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்: அவர்கள், “பாதுகாப்பாக வாழ்கிற” ஜனங்கள்; “மதில்களோ கதவுகளோ தாழ்ப்பாள்களோ இல்லாத ஊர்களில் வாழ்கிறவர்கள்”; “நிறைய சொத்துப்பத்துகளைச் சேர்த்து வைக்கிறவர்கள்.” பூமியெங்கும் இருக்கிற யெகோவாவின் தூய வணக்கத்தார் இந்தத் தேசத்தில்தான் வாழ்கிறார்கள். இது எந்தத் தேசம் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

12. பூர்வ இஸ்ரவேல் தேசத்தில் எது திரும்பவும் நிலைநாட்டப்பட்டது?

12 பூர்வ இஸ்ரவேலில் தூய வணக்கம் எப்படித் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது என்பதைக் கவனியுங்கள். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பல நூற்றாண்டுகளாக அந்தத் தேசத்தில்தான் வாழ்ந்துவந்தார்கள்; அங்குதான் அவர்கள் வேலை செய்தார்கள்; யெகோவாவை வணங்கினார்கள். அவர்கள் உண்மையில்லாமல் போனபோது, அவர்களுடைய தேசம் அழிக்கப்பட்டு, பாழாக விடப்படும் என்று எசேக்கியேல் மூலம் யெகோவா முன்னறிவித்தார். (எசே. 33:27-29) அதேசமயத்தில், பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டவர்களில் மனம் திருந்திய சிலர் தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பவும் வந்து தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவார்கள் என்றும் முன்னறிவித்தார். யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு இஸ்ரவேல் தேசம் புதுப்பிக்கப்பட்டு “ஏதேன் தோட்டத்தைப் போல” மாறும் என்றும் சொன்னார். (எசே. 36:34-36) இது, கி.மு. 537-ல் நிறைவேற ஆரம்பித்தது. அப்போது, சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்து தங்களுடைய அருமையான தாய்நாட்டில் உண்மை வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டினார்கள்.

13, 14. (அ) ஆன்மீகத் தேசம் எதைக் குறிக்கிறது? (ஆ) இந்த ஆன்மீகத் தேசம் யெகோவாவுக்கு ஏன் அருமையானது?

13 நவீன கால தூய வணக்கத்தாரின் அனுபவமும் இதுதான். இந்தப் புத்தகத்தின் 9-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, நீண்ட காலமாக மகா பாபிலோனின் அடிமைத்தனத்தில் இருந்த கடவுளுடைய மக்கள், 1919-ல் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த வருஷத்தில், தன்னுடைய வணக்கத்தாரை ஒரு ஆன்மீகத் தேசத்துக்குள் யெகோவா கொண்டுவந்தார். இந்தத் தேசம் ஆன்மீகப் பூஞ்சோலையைக் குறிக்கிறது. பாதுகாப்பும், ஆன்மீகச் செழுமையும் உள்ள இந்தத் தேசத்தில்தான் நாம் உண்மைக் கடவுளான யெகோவாவை வணங்குகிறோம். இந்தத் தேசத்தில், நாம் பாதுகாப்போடும், மன நிம்மதியோடும் ஒன்றுபட்டு வாழ்கிறோம். (நீதி. 1:33) இங்கே, நமக்கு ஏராளமான ஆன்மீக உணவு கிடைக்கிறது. அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்கும் திருப்தியான வேலையும் நிறைய இருக்கிறது. சொல்லப்போனால், “யெகோவா தரும் ஆசீர்வாதம்தான் ஒருவருக்குக் கிடைக்கும் சொத்து. அதனோடு சேர்த்து அவர் எந்த வேதனையையும் கொடுக்க மாட்டார்” என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நம் சொந்த அனுபவத்தில் பார்க்கிறோம். (நீதி. 10:22) நாம் இந்த உலகத்தில் எங்கு இருந்தாலும் சரி, நம்முடைய சொல்லாலும் செயலாலும் தூய வணக்கத்துக்கு முழுமையான ஆதரவைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், நாம் இந்தத் தேசத்தில், அதாவது ஆன்மீகப் பூஞ்சோலையில், வாழ்கிறோம் என்று சொல்ல முடியும்.

14 இந்த ஆன்மீகத் தேசம் யெகோவாவுக்கு அருமையானது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், அவருடைய பார்வையில் அதன் குடிமக்கள் ‘எல்லா தேசங்களின் அருமையான பொக்கிஷங்களாக’ இருக்கிறார்கள்; அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் தூய வணக்கத்தின் பக்கம் ஈர்த்திருக்கிறார். (ஆகா. 2:7, அடிக்குறிப்பு; யோவா. 6:44) அவர்கள் கடவுளுடைய உயர்ந்த குணங்களைக் காட்டுவதற்கு, அதாவது புதிய சுபாவத்தை அணிந்துகொள்வதற்கு, கடுமையாக முயற்சி செய்கிறார்கள். (எபே. 4:23, 24; 5:1, 2) தூய வணக்கத்தாராக, அவர்கள் கடவுளுடைய சேவைக்குத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கிறார்கள்; அவரை மகிமைப்படுத்தும் விதத்திலும் அவர்மீதுள்ள அன்பைக் காட்டும் விதத்திலும் அந்தச் சேவையைச் செய்கிறார்கள். (ரோ. 12:1, 2; 1 யோ. 5:3) இந்த ஆன்மீகத் தேசத்தை அழகுபடுத்த தன்னுடைய வணக்கத்தார் கடுமையாக உழைப்பதை பார்த்து யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்! இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: உங்கள் வாழ்க்கையில் தூய வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்கும்போது ஆன்மீகப் பூஞ்சோலையை நீங்கள் அழகுபடுத்துவதோடு, யெகோவாவின் இதயத்தையும் சந்தோஷப்படுத்துகிறீர்கள்!—நீதி. 27:11.

நாம் இந்த உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் சரி, தூய வணக்கத்தில் மும்முரமாக ஈடுபடும்வரையில் நாம் ஆன்மீகத் தேசத்தில் இருக்கிறோம் என்று சொல்லலாம் (பாராக்கள் 13, 14)

அந்தத் தேசத்தை கோகு தாக்கப்போவது எப்போது, ஏன், எப்படி?

15, 16. திரும்ப நிலைநாட்டப்பட்ட நம்முடைய ஆன்மீகத் தேசத்தை மாகோகு தேசத்தின் கோகு எப்போது தாக்குவான்?

15 பூமியிலுள்ள தேசங்களின் ஒரு கூட்டணி, சீக்கிரத்தில் நம்முடைய அருமையான ஆன்மீகத் தேசத்தைத் தாக்கும் என்பதை மனதில் வைப்பது முக்கியம். இந்தத் தாக்குதல், யெகோவாவின் தூய வணக்கத்தாரான நம்மைப் பாதிக்கப்போவதால், இதைப் பற்றி நாம் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் மனதுக்கு வரும் மூன்று கேள்விகளை இப்போது பார்க்கலாம்.

16மாகோகு தேசத்தின் கோகு, திரும்ப நிலைநாட்டப்பட்ட நம் ஆன்மீகத் தேசத்தை எப்போது தாக்குவான்?  “கடைசி நாட்களில்” கோகு, கடவுளுடைய மக்களுக்கு எதிராக வருவான் என்று எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (எசே. 38:16) இந்த உலகத்தின் முடிவுக்குச் சற்று முன் இது நடக்கும் என்பதை இந்த வசனம் காட்டுகிறது. பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோனின் அழிவோடு மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். பொய் மத அமைப்புகள் அழிக்கப்பட்ட பின்பு, அதேசமயத்தில், அர்மகெதோன் போர் ஆரம்பமாவதற்கு முன்பு, உண்மை வணக்கத்தார்மீது கோகு முழு வீச்சோடு தன்னுடைய கடைசித் தாக்குதலை நடத்துவான்.

17, 18. மிகுந்த உபத்திரவத்தின்போது எல்லா காரியங்களையும் யெகோவா எப்படி வழிநடத்துவார்?

17தூய வணக்கத்தாருடைய திரும்பவும் நிலைநாட்டப்பட்ட தேசத்தை கோகு ஏன் தாக்குவான்?  எசேக்கியேலின் தீர்க்கதரிசனம், அதற்கான இரண்டு விஷயங்களைச் சொல்கிறது. ஒன்று, யெகோவாவின் வழிநடத்துதல்; இரண்டு, கோகுவின் கெட்ட உள்நோக்கம்.

18 யெகோவாவின் வழிநடத்துதல். (எசேக்கியேல் 38:4, 16-ஐ வாசியுங்கள்.) கோகுவிடம் யெகோவா சொல்வதைக் கவனியுங்கள்: “உன் வாயில் கொக்கிகளை மாட்டி,” “நான் உன்னை என்னுடைய தேசத்துக்கு எதிராக வர வைப்பேன்.” அப்படியானால், தன்னுடைய வணக்கத்தாரைத் தாக்குவதற்கு தேசங்களை யெகோவாவே வற்புறுத்துவார் என்று அர்த்தமா? நிச்சயம் இல்லை. தன்னுடைய மக்களுக்குக் கெட்டது நடக்க அவர் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டார். (யோபு 34:12) ஆனால், யெகோவாவுக்குத் தன்னுடைய எதிரிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் தூய வணக்கத்தாரை வெறுப்பார்கள் என்பதும், தூய வணக்கத்தாரை அழிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவவிட மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். (1 யோ. 3:13) அதனால், கோகுவின் வாயில் கொக்கிகளை மாட்டி இழுத்து வருவதுபோல், யெகோவா காரியங்களை வழிநடத்துவார். அப்போது, அடுத்தடுத்து நடக்க வேண்டிய சம்பவங்கள், அவருடைய விருப்பத்தின்படியும், அவர் குறித்திருக்கிற நேரத்திலும் நடக்கும். மகா பாபிலோனின் அழிவுக்குப் பிறகு ஒரு கட்டத்தில், தேசங்கள் தங்களுடைய இதயத்தில் ஏற்கெனவே நினைத்ததை நிறைவேற்ற யெகோவா ஏதோ ஒருவிதத்தில் அவர்களைத் தூண்டலாம். ஆம், அந்தத் தேசங்கள் தாக்குதலை நடத்துவதற்கு யெகோவா வழிசெய்வார். இது மிகப் பெரிய போரான அர்மகெதோனுக்கு வழிநடத்தும். அதன் பிறகு, அவர் தன்னுடைய மக்களை விடுதலை செய்து, தன்னுடைய பேரரசுரிமையை மகிமைப்படுத்தி, தன்னுடைய புனிதமான பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்.—எசே. 38:23.

தூய வணக்கத்தையும் அதில் ஈடுபடுகிறவர்களையும் வெறுப்பதால், தூய வணக்கத்தை நம்மிடமிருந்து கைப்பற்ற தேசங்கள் முயற்சி செய்யும்

19. தூய வணக்கத்தை எப்படியாவது கைப்பற்ற எது கோகுவைத் தூண்டும்?

19 கோகுவின் கெட்ட உள்நோக்கம். தேசங்கள், ‘ஒரு சதித்திட்டத்தைத் தீட்டும்.’ யெகோவாவின் வணக்கத்தார், ‘மதில்களோ கதவுகளோ தாழ்ப்பாள்களோ இல்லாத ஊர்களில் வாழ்வது’ போல தேசங்களுக்குத் தெரிவதால், பல காலமாக அவர்கள்மீது இருந்த கோபத்தையும் பகையையும் வெளிக்காட்ட அவை முயற்சி செய்யும். அதோடு, அவர்கள் சேர்த்து வைத்திருக்கிற ‘சொத்துப்பத்துகள்’ “எல்லாவற்றையும் கைப்பற்றவும்” ரொம்ப ஆர்வமாக இருக்கும். (எசே. 38:10-12) அவர்கள் எப்படிப்பட்ட “சொத்துப்பத்துகளை” சேர்த்து வைத்திருக்கிறார்கள்? அவர்களிடம் ஆன்மீகச் சொத்துகள் ஏராளமாக இருக்கின்றன. யெகோவாவுக்கு மட்டுமே நாம் செலுத்துகிற தூய வணக்கம்தான் நம்மிடம் இருக்கும் சொத்துகளிலேயே மிகவும் அருமையான சொத்து. தேசங்கள், அந்தத் தூய வணக்கத்தை நம்மிடமிருந்து கைப்பற்ற முயற்சி செய்யும். தூய வணக்கத்தை மதிப்பதால் அல்ல, அந்த வணக்கத்தையும் அதில் ஈடுபடுகிறவர்களையும் வெறுப்பதால்தான் அப்படிச் செய்யும்.

தூய வணக்கத்தைத் துடைத்தழிக்க கோகு ‘ஒரு சதித்திட்டத்தைத் தீட்டுவான்.’ ஆனால், அது வெற்றி பெறாது (பாரா 19)

20. ஆன்மீகத் தேசத்தை, அதாவது ஆன்மீகப் பூஞ்சோலையை, கோகு எப்படித் தாக்குவான்?

20ஆன்மீகத் தேசத்தை, அதாவது ஆன்மீகப் பூஞ்சோலையை, கோகு எப்படித் தாக்குவான்?  நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்தவும், நம்முடைய வணக்கத்துக்குத் தடை போடவும் தேசங்கள் முயற்சி செய்யலாம். உதாரணத்துக்கு, ஆன்மீக உணவு நமக்குக் கிடைப்பதைத் தடுக்கலாம்; கூட்டங்களுக்கு ஒன்றுகூடி வருவதைத் தடுக்கலாம்; நாம் அனுபவிக்கிற ஒற்றுமையைக் கெடுத்துப்போடலாம்; கடவுளுடைய செய்தியை நாம் ஆர்வத்தோடு அறிவிப்பதைத் தடை செய்யலாம். இவையெல்லாம், ஆன்மீகப் பூஞ்சோலையில் நாம் அனுபவிக்கிற விஷயங்கள். தேசங்கள் சாத்தானின் தூண்டுதலால், உண்மை வணக்கத்தாரையும் தூய வணக்கத்தையும் பூமியிலிருந்து பூண்டோடு அழிக்க முயற்சி செய்யும்.

21. சீக்கிரத்தில் நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றி யெகோவா எச்சரிப்பு கொடுத்திருப்பதற்கு நீங்கள் ஏன் நன்றியோடு இருக்கிறீர்கள்?

21 கடவுள் கொடுத்த ஆன்மீகத் தேசத்தில் வாழ்கிற உண்மை வணக்கத்தார் எல்லாருமே, மாகோகு தேசத்தின் கோகு நடத்தப்போகும் தாக்குதலுக்கு ஆளாவார்கள். சீக்கிரத்தில் நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றி யெகோவா நமக்கு எச்சரிப்பு கொடுத்திருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! மிகுந்த உபத்திரவத்துக்காக நாம் காத்துக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், தூய வணக்கத்துக்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கத் தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், திரும்ப நிலைநாட்டப்பட்ட தேசத்துக்கு நாம் இப்போதே அழகு சேர்ப்போம். சீக்கிரத்தில், அற்புதமான ஒரு விஷயத்தைப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். ஆம், அர்மகெதோன் போரில் யெகோவா தன்னுடைய மக்களுக்காகவும், தன்னுடைய பரிசுத்தப் பெயருக்காகவும் செயல்படுவார். இதைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.

^ பாரா. 3 மாகோகு தேசத்தின் கோகுமீது யெகோவாவின் பற்றியெரியும் கோபம் எப்படிக் காட்டப்படும்... எப்போது காட்டப்படும்... தூய வணக்கத்தாருக்கு அது எதை அர்த்தப்படுத்தும்... என்பதையெல்லாம் அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.

^ பாரா. 4 காவற்கோபுரம், மே 15, 2015, பக். 29-30-ல் “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 8 வடதிசை ராஜா கடவுளுடைய மக்களைக் குறிவைப்பான் என்று தானியேல் 11:45 காட்டுகிறது. ஏனென்றால், “பெருங்கடலுக்கும் [மத்தியதரைக் கடல்] சிங்காரமான பரிசுத்த மலைக்கும் [ஒருகாலத்தில் அங்குதான் கடவுளுடைய ஆலயம் இருந்தது. அங்குதான், கடவுளுடைய மக்கள் கடவுளை வணங்கினார்கள்] இடையில் தன்னுடைய ராஜ கூடாரங்களைப் போடுவான்” என்று அது சொல்கிறது.

^ பாரா. 9 கடவுளுடைய மக்களைத் துடைத்தழிக்க முயற்சி செய்யும் நவீன கால ‘அசீரியர்களின்’ தாக்குதலைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. (மீ. 5:5) கடவுளுடைய மக்களுக்கு எதிராக வரப்போகும் நான்கு தாக்குதல்களும், அதாவது மாகோகு தேசத்தின் கோகு, வடதிசை ராஜா, பூமியின் ராஜாக்கள், அசீரியர்கள் ஆகியோரின் நான்கு தாக்குதல்களும், வித்தியாசமான பெயர்களில் சொல்லப்பட்டுள்ள ஒரே தாக்குதலைக் குறிக்கலாம்.

^ பாரா. 10 வெளிப்படுத்துதல் 20:7-9-ல் சொல்லப்பட்டுள்ள ‘கோகுவும் மாகோகுவும்’ யார் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தின் 22-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.