Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 18

“என்னுடைய கோபம் நெருப்பாகப் பற்றியெரியும்”

“என்னுடைய கோபம் நெருப்பாகப் பற்றியெரியும்”

எசேக்கியேல் 38:18

முக்கியக் குறிப்பு: கோகுவின் தாக்குதல் யெகோவாவின் கோபத்தைக் கிளறுகிறது; அர்மகெதோன் போரில் யெகோவா தன்னுடைய மக்களைப் பாதுகாக்கிறார்

1-3. (அ) யெகோவாவின் கோபம் பற்றியெரியும்போது என்ன நடக்கும்? (ஆரம்பப் படம்.) (ஆ) இந்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எல்லாரும் ஒன்றாக எழுந்து நின்று ராஜ்யப் பாடலைப் பாடுகிறார்கள். அதற்குப் பிறகு, ஒரு மூப்பர் உருக்கமாக ஜெபம் செய்கிறார், தங்களைப் பாதுகாக்கும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கிறார். யெகோவா தங்களைப் பாதுகாப்பார் என்பதில் சபையாருக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஆறுதலும் உற்சாகமும் தேவைப்படுகிறது. வெளியே, போரின் சத்தம் காதைப் பிளக்கிறது. அர்மகெதோன் ஆரம்பித்துவிட்டது!—வெளி. 16:14, 16.

2 அர்மகெதோன் போரில், யெகோவா ‘பற்றியெரியும் கோபத்தோடு’ மக்களை அழிப்பார். (எசேக்கியேல் 38:18-ஐ வாசியுங்கள்.) அவர் தன்னுடைய கடும் கோபத்தை ஒரு படைக்கு எதிராகவோ ஒரு தேசத்துக்கு எதிராகவோ அல்ல, உலகம் முழுவதும் இருக்கிற கணக்குவழக்கில்லாத மக்களுக்கு எதிராகக் காட்டுவார். அந்த நாளில், “யெகோவாவினால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை கிடப்பார்கள்.”—எரே. 25:29, 33.

3 யெகோவா அன்பே உருவானவர், ‘இரக்கமும் கரிசனையும் உள்ளவர்,’ “சீக்கிரத்தில் கோபப்படாதவர்.” (யாத். 34:6; 1 யோ. 4:16) அப்படிப்பட்ட கடவுள், ‘பற்றியெரியும் கோபத்தோடு’ இப்படியொரு நடவடிக்கை எடுப்பதற்குக் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளும்போது, நமக்கு அதிக ஆறுதலும், தைரியமும், பிரசங்கிப்பதற்கான தூண்டுதலும் கிடைக்கும். எப்படியென்று இப்போது பார்க்கலாம்.

யெகோவாவின் ‘கோபம் பற்றியெரிவதற்கு’ காரணம் என்ன?

4, 5. கடவுளுடைய கோபத்துக்கும், பாவ இயல்புள்ள மனிதர்களுடைய கோபத்துக்கும் என்ன வித்தியாசம்?

4 யெகோவாவின் கோபம், பாவ இயல்புள்ள மனிதர்களுடைய கோபத்தைப் போன்றது அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கோபம் தலைக்கேறும்போது, மனிதர்கள் கண்மூடித்தனமாக நடந்துகொள்கிறார்கள். அதனால், படு மோசமான விளைவுகளே ஏற்படுகின்றன. உதாரணத்துக்கு, ஆதாமின் முதல் மகனான காயீனுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் ஆபேலின் காணிக்கையை யெகோவா ஏற்றுக்கொண்டபோது, காயீனுக்கு “பயங்கர கோபம் வந்தது.” அதனால், நீதிமானாக இருந்த தன்னுடைய தம்பியை அவன் கொலை செய்தான். (ஆதி. 4:3-8; எபி. 11:4) யெகோவாவின் இதயத்துக்குப் பிடித்தமானவராக இருந்த தாவீதைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள். (அப். 13:22) அவரும்கூட கோபத்தில், ஒரு பயங்கரமான குற்றத்தைச் செய்யுமளவுக்குப் போய்விட்டார். பணக்காரனாக இருந்த நாபால், தாவீதையும் அவருடைய ஆட்களையும் ஒருசமயம் கண்டபடி திட்டினான். அதைக் கேள்விப்பட்டதும் தாவீது கோபத்தில் கொதித்துப்போனார். நன்றிகெட்ட நாபாலை மட்டுமல்ல அவனுடைய வீட்டிலிருந்த ஆண்கள் எல்லாரையுமே கொன்றுபோடுவதற்கு, அவரும் அவருடைய ஆட்களும் ‘வாளை இடுப்பில் கட்டிக்கொண்டு’ புறப்பட்டார்கள். நல்லவேளையாக, நாபாலின் மனைவி அபிகாயில், தாவீதையும் அவருடைய ஆட்களையும் சமாதானப்படுத்தி பழி வாங்காதபடி அவர்களைத் தடுத்தாள். (1 சா. 25:9-14, 32, 33) “கோபப்படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நிறைவேற்ற முடியாது” என்று யாக்கோபு மூலமாக யெகோவா சொன்னது எவ்வளவு சரியானது!—யாக். 1:20.

யெகோவாவின் கோபம் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது, அவர் கோபப்படுவதற்கான காரணமும் தெளிவாக இருக்கிறது

5 மனிதர்களைப் போல் அல்லாமல், யெகோவா எப்போதுமே கோபத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவர் கோபப்படுவதற்கான காரணத்தையும் நம்மால் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். கோபம் பற்றியெரியும் சமயத்தில்கூட அவர் நீதியோடு நடந்துகொள்கிறார். அவர் நடவடிக்கை எடுக்கும்போது, “பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களை” அழிப்பதில்லை. (ஆதி. 18:22-25) அதுமட்டுமல்ல, நியாயமான காரணங்களுக்காக மட்டுமே அவர் கோபப்படுகிறார். அப்படிப்பட்ட இரண்டு காரணங்களையும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள முடிந்த பாடங்களையும் இப்போது பார்க்கலாம்.

6. தன்னுடைய பெயர் கெடுக்கப்படும்போது யெகோவா என்ன செய்கிறார்?

6 காரணம்: யெகோவாவின் பெயர் கெடுக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவை வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு, கெட்ட காரியங்களைச் செய்பவர்கள் அவருடைய பெயரைக் கெடுக்கிறார்கள். அது அவருடைய கோபத்தைக் கிளறிவிடுகிறது. (எசே. 36:23) இந்தப் புத்தகத்தின் முந்தின அதிகாரங்களில் பார்த்தபடி, இஸ்ரவேல் ஜனங்கள் யெகோவாவின் பெயரை ரொம்பவே களங்கப்படுத்தினார்கள். அவர்களுடைய மனப்பான்மையும் செயல்களும் யெகோவாவைக் கோபப்படுத்தின. ஆனாலும் யெகோவா அவர்களைக் கண்மூடித்தனமாகத் தண்டிக்காமல், சரியான அளவுக்கு மட்டுமே தண்டித்தார். (எரே. 30:11) தண்டனை கொடுப்பதற்கான நோக்கம் நிறைவேறிய பிறகு, அவர் தொடர்ந்து கோபமாகவே இருக்கவில்லை.—சங். 103:9.

7, 8. இஸ்ரவேலர்களோடு யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?

7 பாடங்கள்: இஸ்ரவேலர்களோடு யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். அவர்களைப் போல, நாமும் யெகோவாவின் பெயரைத் தாங்கிய மக்களாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆம், நாம் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறோம். (ஏசா. 43:10) நம் சொல்லும் செயலும் நாம் வணங்கும் கடவுளுக்கு நல்ல பெயரையோ கெட்ட பெயரையோ கொண்டுவரலாம். அதனால், வேண்டுமென்றே கெட்ட விஷயங்களைச் செய்து, யெகோவாவின் பெயரைக் கெடுக்க நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம். நாம் வெளிவேஷம் போட்டால், அது யெகோவாவின் கோபத்தைக் கண்டிப்பாகக் கிளறிவிடும். அதனால், தன்னுடைய நல்ல பெயரைக் காப்பாற்ற அவர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.—எபி. 3:13, 15; 2 பே. 2:1, 2.

8 யெகோவாவுக்குப் பற்றியெரியும் அளவுக்குக் கோபம் வரும் என்பதைத் தெரிந்துகொண்டதால், அவரிடம் நெருங்கிப்போக நாம் பயப்பட வேண்டுமா? வேண்டியதில்லை. அவர் பொறுமையுள்ளவர், மன்னிக்கிறவர் என்று நமக்குத் தெரியும். (ஏசா. 55:7; ரோ. 2:4) அதேநேரத்தில், தேவைப்படும் சமயத்தில் கண்டிக்காமல் விட்டுவிட மாட்டார் என்றும் நமக்குத் தெரியும். சொல்லப்போனால், தொடர்ந்து பாவம் செய்கிறவர்கள்மேல் அவருடைய கோபம் பற்றியெரியும் என்பதையும், அவர்களைத் தன்னுடைய மக்களின் பாகமாக இருக்க விடமாட்டார் என்பதையும் தெரிந்துகொள்ளும்போது அவர்மீதுள்ள மதிப்பு மரியாதை அதிகமாகிறது. (1 கொ. 5:11-13) எப்படிப்பட்ட விஷயங்கள் தன்னைக் கோபப்பட வைக்கும் என்பதை யெகோவா நமக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அப்படியானால், அவருடைய கோபத்தைக் கிளறும் மனப்பான்மைகளையும் செயல்களையும் தவிர்ப்பது நம் கையில்தான் இருக்கிறது.—யோவா. 3:36; ரோ. 1:26-32; யாக். 4:8.

9, 10. தன்னுடைய உண்மையுள்ள மக்கள் அச்சுறுத்தப்படும்போது யெகோவா என்ன செய்கிறார்? உதாரணங்களைச் சொல்லுங்கள்.

9 காரணம்: யெகோவாவின் உண்மையுள்ள மக்கள் எதிரிகளால் அச்சுறுத்தப்படுவது. தன்னிடம் தஞ்சம் தேடிவரும் உண்மையுள்ள மக்களை எதிரிகள் தாக்கும்போது யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது. உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வெளியேறியபோது, பார்வோனும் அவனுடைய பலம் படைத்த வீரர்களும் அவர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள். இஸ்ரவேலர்கள் செங்கடலின் கரையில் ஆதரவில்லாமல் நிற்பதாக அவர்கள் நினைத்தார்கள். இஸ்ரவேலர்கள் செங்கடலின் காய்ந்த தரை வழியாக போனபோது எகிப்தியர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள். அப்போது, அவர்களுடைய போர் ரதங்களின் சக்கரங்களை யெகோவா கழன்றுபோகச் செய்தார்; அவர்களைக் கடலில் மூழ்கடித்தார். “ஒருவர்கூட தப்பிப்பதற்குக் கடவுள் விடவில்லை.” (யாத். 14:25-28) தன்னுடைய மக்கள்மீது இருந்த “மாறாத அன்பினால்” எகிப்தியர்களுக்கு எதிராக யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது.யாத்திராகமம் 15:9-13-ஐ வாசியுங்கள்.

எசேக்கியாவின் காலத்தில், அசீரியர்களிடமிருந்து கடவுளுடைய மக்களை ஒரு தேவதூதர் பாதுகாத்ததுபோல், நம்மையும் தேவதூதர்கள் பாதுகாப்பார்கள் (பாராக்கள் 10, 23)

10 அதேபோல், எசேக்கியா ராஜாவின் காலத்திலும் தன்னுடைய மக்கள்மீது இருந்த அன்பினால்தான் யெகோவா நடவடிக்கை எடுத்தார். அந்தக் காலத்தில், மாவீரர்கள் என்றும், கொடூரமானவர்கள் என்றும் பெயர் எடுத்திருந்த அசீரியர்கள், எருசலேம் நகரத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தார்கள். நகரத்தை முற்றுகை போடப்போவதாக மிரட்டினார்கள். யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவதிப்பட்டு சாக வேண்டியிருக்கும் என்றும் பயமுறுத்தினார்கள். (2 ரா. 18:27) அப்போது, யெகோவா ஒரேவொரு தேவதூதரை அனுப்பினார். அந்தத் தேவதூதர் ஒரே ராத்திரியில் 1,85,000 அசீரிய வீரர்களைக் கொன்றுபோட்டார்! (2 ரா. 19:34, 35) அடுத்த நாள் காலையில் அசீரியர்களுடைய முகாம் எப்படியிருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். ஈட்டிகளும், கேடயங்களும், வாள்களும், இருந்த இடத்தில் அப்படியே இருந்தன. வீரர்களை எழுப்புவதற்கான எக்காளச் சத்தமும் கேட்கவில்லை, அவர்களை அணி திரட்டுவதற்கான கட்டளைகளின் சத்தமும் கேட்கவில்லை. அங்கே மயான அமைதி நிலவியது. எங்கும் பிணங்கள்தான் கிடந்தன.

11. தன்னுடைய மக்கள் அச்சுறுத்தப்படும்போது, யெகோவா எப்படி நடந்துகொள்கிறார் என்பதற்கான உதாரணங்கள் நமக்கு எப்படி ஆறுதலையும் தைரியத்தையும் தருகின்றன?

11 பாடங்கள்: தன்னுடைய மக்கள் அச்சுறுத்தப்படும்போது, யெகோவா எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அந்த உதாரணங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. கடவுளுடைய கோபத்தைக் கிளறிவிடுகிற நம்முடைய எதிரிகளுக்கு அவை ஒரு எச்சரிப்பாகவும் இருக்கின்றன. ஆம், “உயிருள்ள கடவுளுடைய கைகளில் சிக்கிக்கொள்வது பயங்கரமாக இருக்கும்.” (எபி. 10:31) ஆனால், அந்த உதாரணங்கள் நமக்கு ஆறுதலையும் தைரியத்தையும் தருகின்றன. அதோடு, நம்முடைய முக்கிய எதிரியான சாத்தான் வெற்றி அடைய மாட்டான் என்பதைத் தெரிந்துகொள்வதும் நமக்கு ஆறுதலைத் தருகிறது. அவனுக்கு “கொஞ்சக் காலம்தான் இருக்கிறது”; அவனுடைய ஆதிக்கம் சீக்கிரத்தில் முடிவுக்கு வரப்போகிறது. (வெளி. 12:12) அதனால், நாம் கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதை எந்தவொரு மனிதனாலோ அமைப்பாலோ அரசாங்கத்தாலோ தடுக்க முடியாது என்ற நம்பிக்கையோடு தைரியமாக யெகோவாவுக்குச் சேவை செய்யலாம். (சங்கீதம் 118:6-9-ஐ வாசியுங்கள்.) “கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?” என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் சொன்னது போல நம்மாலும் உறுதியாகச் சொல்ல முடியும்.—ரோ. 8:31.

12. மிகுந்த உபத்திரவத்தின்போது, எது யெகோவாவின் கோபத்தைக் கிளறும்?

12 எகிப்தியர்களிடம் மாட்டிக்கொண்ட இஸ்ரவேலர்களையும், அசீரியர்களின் முற்றுகைக்கு ஆளான எருசலேம் மக்களையும் பாதுகாக்க யெகோவா நடவடிக்கை எடுத்தார். அதே போல, வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தின்போது நம்மைப் பாதுகாக்கவும் அவர் நடவடிக்கை எடுப்பார். எதிரிகள் நம்மை அழிக்க முயற்சி செய்யும்போது, நம்மீது இருக்கும் அளவுகடந்த அன்பினால் யெகோவா கோபத்தில் பொங்கியெழுவார். எதிரிகள் நம்மைத் தாக்க நினைப்பது முட்டாள்தனம்; அது யெகோவாவின் கண்மணியைத் தொடுவதற்குச் சமம். அப்போது அவர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பார். (சக. 2:8, 9) அதனால் ஏற்படும் அழிவு, வரலாறு காணாதளவுக்கு படு பயங்கரமானதாக இருக்கும். எதிரிகள்மீது யெகோவா தன்னுடைய கோபத்தைக் காட்டும்போது அவர்கள் ஆச்சரியப்படுவதற்கு எந்தக் காரணமும் இருக்காது. ஏன் அப்படிச் சொல்கிறோம்?

யெகோவா என்ன எச்சரிப்புகளைக் கொடுத்திருக்கிறார்?

13. யெகோவா என்ன எச்சரிப்புகளைக் கொடுத்திருக்கிறார்?

13 யெகோவா, ‘சீக்கிரத்தில் கோபப்பட மாட்டார்.’ தன்னை எதிர்க்கிறவர்களையும் தன்னுடைய மக்களை அச்சுறுத்துகிறவர்களையும் அழிக்கப்போவதைப் பற்றி அவர் பல முறை எச்சரித்திருக்கிறார். (யாத். 34:6, 7) தீர்க்கதரிசிகளான எரேமியா, எசேக்கியேல், தானியேல் போன்றவர்களையும், கிறிஸ்து இயேசுவையும், அப்போஸ்தலர்களான பேதுரு, பவுல், மற்றும் யோவானையும் பயன்படுத்தி ஒரு மாபெரும் போரைப் பற்றி யெகோவா எச்சரித்தார்.—“மாபெரும் போரைப் பற்றி யெகோவா எச்சரிக்கிறார்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

14, 15. யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார், ஏன்?

14 இந்த எச்சரிப்புகள் எல்லாம் பைபிளில் பதிவு செய்யப்படும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். அதோடு, எந்தவொரு புத்தகத்தையும்விட அதிகமான மொழிகளில் கிடைக்கிற... அதிகமாக வினியோகிக்கப்படுகிற... புத்தகமாக பைபிள் இருக்கும்படியும் அவர் பார்த்துக்கொண்டார். அதுமட்டுமல்ல, தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்த மக்களை உலகம் முழுவதிலிருந்தும் யெகோவா திரட்டியிருக்கிறார். (சங். 110:3) தன்னோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவவும், தன்னுடைய ‘மகா நாளை’ பற்றிய எச்சரிப்பைக் கொடுக்கவும் அவர்களைத் திரட்டியிருக்கிறார். (செப். 1:14; சங். 2:10-12) பைபிள் படிப்புக்கு உதவும் பிரசுரங்களை நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்க தன்னுடைய மக்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார். பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளையும் எச்சரிப்புகளையும் பற்றிப் பேசுவதற்கு ஒவ்வொரு வருஷமும் கோடிக்கணக்கான மணிநேரங்களைச் செலவிடவும் அவர்களைத் தூண்டியிருக்கிறார்.

15 இதையெல்லாம் யெகோவா ஏன் செய்திருக்கிறார்? ஏனென்றால், “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.” (2 பே. 3:9) நம்முடைய அன்பான, பொறுமையான கடவுளின் வேலையாட்களாக இருப்பதும், அவருடைய செய்தியை அறிவிப்பதில் ஒரு சிறிய பங்கைக் கொண்டிருப்பதும் நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஆனால், எச்சரிப்புகளைக் கேட்டு, தேவையான மாற்றங்களைச் செய்யாதவர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கும் காலம் சீக்கிரத்தில் முடியப்போகிறது.

யெகோவாவின் கோபம் எப்போது “நெருப்பாகப் பற்றியெரியும்”?

16, 17. கடைசிப் போருக்கான நாளை யெகோவா குறித்துவிட்டாரா? விளக்குங்கள்.

16 கடைசிப் போருக்கான நாளை யெகோவா குறித்துவிட்டார். தன்னுடைய மக்கள் எப்போது தாக்கப்படுவார்கள் என்பது அவருக்கு ஏற்கெனவே தெரியும். (மத். 24:36) எதிரிகள் எப்போது தாக்குவார்கள் என்று அவருக்கு எப்படித் தெரியும்?

17 ‘உன் வாயில் கொக்கிகளை மாட்டுவேன்’ என்று யெகோவா கோகுவிடம் சொன்னதைப் பற்றி முந்தின அதிகாரத்தில் நாம் பார்த்தோம். அந்த மாபெரும் போருக்காக தேசங்களை யெகோவாதான் வர வைப்பார். (எசே. 38:4) அதற்காக, அந்தப் போர் ஆரம்பமாவதற்கு யெகோவா காரணம் என்றோ, எதிரிகளை அவர் கட்டாயப்படுத்தி போரில் ஈடுபட வைக்கிறார் என்றோ அர்த்தம் கிடையாது. எதிரிகளின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதும் யெகோவாவுக்குத் தெரியும் என்பதைத்தான் இது காட்டுகிறது.—சங். 94:11; ஏசா. 46:9, 10; எரே. 17:10.

18. மனிதர்கள் சர்வவல்லமையுள்ள கடவுளை எதிர்க்குமளவுக்குப் போகக் காரணம் என்ன?

18 யெகோவா போரை ஆரம்பிப்பதோ, எதிரிகளைக் கட்டாயப்படுத்தி தன்னோடு போர் செய்ய வைப்பதோ இல்லை என்று நாம் தெரிந்துகொண்டோம். அப்படியானால், சாதாரண மனிதர்கள் சர்வவல்லமையுள்ள கடவுளை எதிர்க்குமளவுக்குப் போகக் காரணம் என்ன? ஒரு காரணம், அந்தச் சமயத்துக்குள்ளாக அவர்கள் கடவுளே இல்லை என்றோ மனிதர்களுடைய விஷயங்களில் அவர் தலையிட மாட்டார் என்றோ முடிவு செய்திருப்பார்கள். ஒருவேளை, பூமியிலுள்ள பொய் மத அமைப்புகள் எல்லாவற்றையும் சற்றுமுன் அவர்கள் அழித்திருப்பதால் அப்படி யோசிக்கலாம். கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரை வணங்குவதாகச் சொல்லிக்கொள்கிற அமைப்புகளை அவர் கண்டிப்பாகப் பாதுகாப்பார் என்று அவர்கள் நியாயங்காட்டலாம். ஆனால், அந்தப் பொய் மத அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதற்கான எண்ணத்தை அவர்களுடைய இதயத்தில் வைத்ததே கடவுள்தான் என்பது அவர்களுக்குத் தெரியாது.—வெளி. 17:16, 17.

19. பொய் மதம் அழிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கலாம்?

19 பொய் மதம் அழிக்கப்பட்ட பிறகு, ஒரு கடுமையான எச்சரிப்பின் செய்தியைச் சொல்வதற்கு யெகோவா தன்னுடைய மக்களைப் பயன்படுத்துவார். வெளிப்படுத்துதல் புத்தகம் அந்தச் செய்தியை ஆலங்கட்டிகளுக்கு ஒப்பிடுகிறது. அந்த ஆலங்கட்டிகள் ஒவ்வொன்றும் சுமார் 20 கிலோ எடையுள்ளது. (வெளி. 16:21, அடிக்குறிப்பு) அது ஒருவேளை, அரசியலுக்கும் வியாபார அமைப்புகளுக்கும் சீக்கிரத்தில் முடிவுகட்டப்படும் என்ற அறிவிப்பாக இருக்கலாம். இதைக் கேட்கிறவர்கள் பயங்கரமாக எரிச்சலடைந்து கடவுளை நிந்திக்குமளவுக்குப் போய்விடுவார்கள். தேசங்கள் கோபாவேசத்தோடு கடவுளுடைய மக்களைத் தாக்குவதற்கு இந்த அறிவிப்பு காரணமாக இருக்கலாம். நம்மைப் பாதுகாக்க யாருமில்லை என்று அவர்கள் நினைக்கலாம், அதனால் நம்மைச் சுலபமாகத் தீர்த்துக்கட்டிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடலாம். அது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்!

யெகோவா தன்னுடைய கோபத்தை எப்படிக் காட்டுவார்?

20, 21. கோகு யார், அவனுக்கு என்ன நடக்கும்?

20 இந்தப் புத்தகத்தின் 17-வது அதிகாரத்தில் பார்த்தபடி, நம்மைத் தாக்க வருகிற தேசங்களின் கூட்டணியைக் குறிப்பதற்கு “மாகோகு தேசத்தின் கோகு” என்ற பெயரை எசேக்கியேல் பயன்படுத்தியிருக்கிறார். (எசே. 38:2) இந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் பெயருக்குத்தான் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக்கொண்டிருப்பார்கள். ஒற்றுமையாக இருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டாலும், அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும், பெருமையும், அதிகாரவெறியும் புகைந்துகொண்டுதான் இருக்கும். “வீரர்கள் தங்கள் படையிலுள்ள வீரர்களையே” வாளால் வெட்டும்படி செய்வது யெகோவாவுக்கு பெரிய விஷயமாகவே இருக்காது. (எசே. 38:21) ஆனாலும் இந்தத் தேசங்களின் அழிவு, மனிதர்களால் வந்த அழிவாக இருக்காது.

21 நம்முடைய எதிரிகள் அழிந்துபோவதற்கு முன்னால், மனிதகுமாரனுடைய அடையாளத்தைப் பார்ப்பார்கள். (மத். 24:30) யெகோவாவும் இயேசுவும் தங்களுடைய வல்லமையை அற்புதமான ஒரு விதத்தில் வெளிக்காட்டுவதை இது குறிக்கலாம். தங்கள் கண் முன்னால் நடப்பவற்றைப் பார்த்து எதிரிகள் கதிகலங்கிப்போவார்கள். இயேசு முன்னறிவித்தபடி, “உலகத்துக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தில் மக்களுக்குத் தலைசுற்றும்.” (லூக். 21:25-27) யெகோவாவின் மக்களைத் தாக்கியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது புரியும்போது அவர்கள் பயத்தில் உறைந்துபோவார்கள். படைப்பாளர் ஒரு படைத் தளபதியாகச் செயல்படுகிறார் என்பதையும், அவர் பரலோகப் படைகளின் யெகோவா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும் (சங். 46:6-11; எசே. 38:23) அந்தச் சமயத்தில் யெகோவா பரலோகப் படைகளையும் இயற்கைச் சக்திகளையும் பயன்படுத்துவார். அப்போது, எதிரிகள் மட்டும்தான் ஒழிக்கப்படுவார்கள், அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.2 பேதுரு 2:9-ஐ வாசியுங்கள்.

தன்னுடைய மக்கள் அச்சுறுத்தப்படும்போது, பரலோகப் படைகள் மூலம் யெகோவா தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுவார் (பாரா 21)

22, 23. கடவுளுடைய மக்களை யாரெல்லாம் பாதுகாப்பார்கள்? போரில் கலந்துகொள்வதைப் பற்றி அவர்கள் எப்படி உணருவார்கள்?

யெகோவாவின் நாளைப் பற்றித் தெரிந்துகொண்டது நம்மை என்ன செய்யத் தூண்டுகிறது?

22 பரலோகப் படைக்கு இயேசு தலைமைதாங்கி எதிரிகளை ஒழித்துக்கட்டுவார். அதேசமயத்தில், தன்னுடைய தகப்பனை நேசித்து அவருக்குச் சேவை செய்கிறவர்களை அவர் பாதுகாப்பார். இதைச் செய்வதற்கு அவர் எவ்வளவு ஆர்வமாக இருப்பார் என்பதை யோசித்துப்பாருங்கள்! பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் அந்தச் சமயத்தில் எப்படி உணருவார்கள் என்பதையும் யோசித்துப்பாருங்கள். போரில் இயேசுவோடு 1,44,000 பேரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அர்மகெதோன் ஆரம்பமாவதற்கு முன், பூமியில் மீதியிருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோகத்துக்கு எழுப்பப்படுவார்கள். (வெளி. 17:12-14) இந்தக் கடைசி நாட்களில் பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் நிறைய பேர், வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களோடு வேலை செய்திருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சோதனைகள் வந்தபோது, தங்களுக்குத் துணையாக இருந்து ஆதரவு கொடுத்தவர்களைப் பாதுகாப்பதற்கான அதிகாரமும் வல்லமையும் பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும்.—மத். 25:31-40.

23 இயேசுவின் பரலோகப் படையில் தேவதூதர்களும் இருப்பார்கள். (2 தெ. 1:7; வெளி. 19:14) சாத்தானையும் பேய்களையும் பரலோகத்திலிருந்து தள்ளுவதற்கு அவர்கள் ஏற்கெனவே உதவி செய்திருக்கிறார்கள். (வெளி. 12:7-9) யெகோவாவை வணங்க விரும்புகிறவர்களைக் கூட்டிச்சேர்க்கிற வேலையிலும் பங்கெடுத்திருக்கிறார்கள். (வெளி. 14:6, 7) அதனால், உண்மையுள்ள மக்களைப் பாதுகாக்க தேவதூதர்களை யெகோவா பயன்படுத்துவார். கடவுளுடைய எதிரிகளை அழிப்பதற்கு உதவுவதன் மூலம், அவருடைய பெயரைப் புனிதப்படுத்தி, அதற்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கியதை நினைத்து யெகோவாவின் படையில் இருக்கிற எல்லாரும் பெருமைப்படுவார்கள்.—மத். 6:9, 10.

24. வேறே ஆடுகளின் பாகமாக இருக்கிற திரள் கூட்டத்தார் என்ன செய்வார்கள்?

24 வேறே ஆடுகளின் பாகமாக இருக்கிற திரள் கூட்டத்தாரைப் பாதுகாப்பதற்கு, வல்லமையும் ஆர்வத்துடிப்பும் உள்ள ஒரு படை இருப்பதால் அவர்கள் பயந்து நடுங்க வேண்டிய அவசியமே இல்லை. சொல்லப்போனால், அவர்கள் “நேராக நிமிர்ந்து நின்று, தங்களுடைய தலைகளை உயர்த்துவார்கள்; ஏனென்றால், அவர்களுடைய விடுதலை நெருங்கிவருகிறது.” (லூக். 21:28) யெகோவா நம்மைப் பாதுகாக்கிற இரக்கமுள்ள தகப்பனாக இருக்கிறார். அவருடைய நாள் வருவதற்குமுன், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவரை நேசிக்கவும் எத்தனை பேருக்குக் கற்றுக்கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்குக் கற்றுக்கொடுப்பது ரொம்ப முக்கியம்!செப்பனியா 2:2, 3-ஐ வாசியுங்கள்.

அர்மகெதோன் போரின்போது, யெகோவாவின் மக்கள் சண்டை போட வேண்டியிருக்காது. எதிரிகள் ஒருவரை ஒருவர் தாக்கும்போது, தேவதூதர்கள் யெகோவாவின் மக்களைப் பாதுகாப்பார்கள்.—எசே. 38:21 (பாராக்கள் 22-24)

25. அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

25 மனிதர்களுடைய போர்களுக்குப் பிறகு குழப்பமும் துன்பமும்தான் மிஞ்சும். ஆனால், அர்மகெதோனுக்குப் பிறகு ஒழுங்கும் சந்தோஷமும்தான் நிலவும். யெகோவாவின் கோபம் தணிந்த பிறகு... அவருடைய வீரர்களின் வாள்கள் உறைக்குள் போடப்பட்ட பிறகு... அந்த மாபெரும் போரின் சத்தம் அடங்கிய பிறகு... நிலைமை எப்படி இருக்கும்? அந்த அருமையான காலத்தைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் பார்க்கலாம்.