Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 12

“அவர்களை ஒரே தேசமாக்குவேன்”

“அவர்களை ஒரே தேசமாக்குவேன்”

எசேக்கியேல் 37:22

முக்கியக் குறிப்பு: தன்னுடைய மக்களை ஒன்றுசேர்ப்பதாக யெகோவா கொடுத்த வாக்குறுதியும் இரண்டு கோல்களைப் பற்றிய தீர்க்கதரிசனமும்

1, 2. (அ) சிறைபிடிக்கப்பட்டவர்கள் பயந்துபோனதற்கு எது காரணமாக இருந்திருக்கலாம்? (ஆ) அவர்கள் ஆச்சரியப்படும்படி என்ன நடந்தது? (இ) என்ன கேள்விகளுக்கான பதில்களை நாம் பார்க்கப்போகிறோம்?

கடவுள் கொடுத்த பல தீர்க்கதரிசனங்களை, பாபிலோனில் சிறைப்பட்டிருந்த யூதர்களின் கண் முன்னால் எசேக்கியேல் நடித்துக்காட்டியிருக்கிறார். அவர் நடித்துக்காட்டிய முதல் தீர்க்கதரிசனமும் அடுத்தடுத்த தீர்க்கதரிசனங்களும் நியாயத்தீர்ப்புச் செய்திகளாக இருந்தன. (எசே. 3:24-26; 4:1-7; 5:1; 12:3-6) சொல்லப்போனால், அவர் நடித்துக்காட்டிய எல்லா தீர்க்கதரிசனங்களும் யூதர்களுக்கு எதிராகக் கடவுள் சொன்ன கடுமையான நியாயத்தீர்ப்புச் செய்திகளாக இருந்தன.

2 அதனால், இன்னொரு தீர்க்கதரிசனத்தை நடித்துக்காட்ட அவர்கள் முன்னால் எசேக்கியேல் நின்றபோது அவர்களுக்கு எவ்வளவு பயமாக இருந்திருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். ‘திடுக்கிடவைக்கும் என்ன செய்தியை இந்தத் தடவை கேட்கப் போகிறோமோ?’ என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஆச்சரியப்படும் விதமான ஒன்று நடந்தது. ரொம்ப வித்தியாசமான ஒன்றை இந்த முறை எசேக்கியேல் நடித்துக்காட்டினார். அது திகில் கிளப்பும் நியாயத்தீர்ப்புச் செய்தியாக இல்லாமல் நம்பிக்கையூட்டும் ஒரு வாக்குறுதியாக இருந்தது. (எசே. 37:23) அது என்ன வாக்குறுதி? அதன் அர்த்தம் என்ன? இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்களுக்கு அது எப்படிப் பொருந்துகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

“அவை என் கையில் ஒரே கோலாக இருக்கும்”

3. (அ) “யூதாவுக்கு” என்று எழுதப்பட்ட கோல் எதை அடையாளப்படுத்தியது? (ஆ) ‘எப்பிராயீமைக் குறிக்கும் கோல்’ ஏன் பத்துக் கோத்திர ராஜ்யத்தை அடையாளப்படுத்தியது?

3 இரண்டு கோல்களை எடுக்கும்படி எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார். ஒரு கோலில் “யூதாவுக்கு” என்றும் மற்றொன்றில், ‘எப்பிராயீமைக் குறிக்கும் யோசேப்பின் கோல்’ என்றும் எழுதும்படி சொன்னார். (எசேக்கியேல் 37:15, 16-ஐ வாசியுங்கள்.) இந்த இரண்டு கோல்களும் எதைக் குறித்தன? “யூதாவுக்கு” என்று எழுதப்பட்ட கோல், யூதாவும் பென்யமீனும் சேர்ந்த இரண்டு கோத்திர ராஜ்யத்தை அர்த்தப்படுத்தியது. யூத வம்சத்தில் வந்த ராஜாக்கள் அந்த இரண்டு கோத்திரங்களையும் ஆட்சி செய்தார்கள். அதோடு குருமார்கள், எருசலேமிலிருந்த ஆலயத்தில் சேவை செய்ததால், அவர்களும் யூதா ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். (2 நா. 11:13, 14; 34:30) அதனால், தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்களும் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த குருமார்களும் யூதா ராஜ்யத்தில் இருந்தார்கள். ‘எப்பிராயீமைக் குறிக்கும் கோல்’ இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தை அர்த்தப்படுத்தியது. எந்த விதத்தில் அந்தக் கோல் எப்பிராயீமோடு சம்பந்தப்பட்டிருந்தது? பத்துக் கோத்திர ராஜ்யத்தின் முதல் ராஜாவான யெரொபெயாம், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தார். காலப்போக்கில், எப்பிராயீம் இஸ்ரவேல் தேசத்தின் முக்கியமான கோத்திரமாக ஆனது. (உபா. 33:17; 1 ரா. 11:26) இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தாவீதின் வம்சத்திலுள்ள ராஜாக்களோ லேவி கோத்திரத்தைச் சேர்ந்த குருமார்களோ இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை.

4. இரண்டு கோல்களை எசேக்கியேல் சேர்த்துப் பிடித்தது எதற்கு அடையாளமாக இருந்தது? (ஆரம்பப் படம்.)

4 பிறகு, அந்த “இரண்டு கோலும் ஒரே கோலாக ஆகும்படி அவற்றைச் சேர்த்துப் பிடி” என்று எசேக்கியேலுக்குச் சொல்லப்பட்டது. எசேக்கியேலைப் பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்த யூதர்கள், “இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொல்ல மாட்டீர்களா?” என்று அவரிடம் கேட்டார்கள். தான் நடித்துக்காட்டியது, யெகோவா செய்யப்போகிற விஷயத்துக்கு அடையாளமாக இருந்தது என்று எசேக்கியேல் சொன்னார். அந்த இரண்டு கோல்களைப் பற்றி யெகோவா இப்படிச் சொன்னார்: “அவற்றை ஒரே கோலாக்குவேன். அவை என் கையில் ஒரே கோலாக இருக்கும்.”—எசே. 37:17-19.

5. எசேக்கியேல் நடித்துக்காட்டிய விஷயத்தின் அர்த்தம் என்ன? (“இரண்டு கோல்களை ஒன்றுசேர்ப்பது” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

5 பிறகு, இரண்டு கோல்களை ஒரே கோலாக்குவதன் அர்த்தத்தை யெகோவா விளக்கினார். (எசேக்கியேல் 37:21, 22-ஐ வாசியுங்கள்.) இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்திலிருந்தும் பத்துக் கோத்திர இஸ்ரவேல் (எப்பிராயீம்) ராஜ்யத்திலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்கள், இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பவும் கொண்டுவரப்படுவார்கள்... அங்கே அவர்கள் ‘ஒரே தேசமாக’ இருப்பார்கள்... என்று சொன்னார்.—எரே. 30:1-3; 31:2-9; 33:7.

6. ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட என்ன இரண்டு தீர்க்கதரிசனங்கள் எசேக்கியேல் 37-ஆம் அதிகாரத்தில் இருக்கின்றன?

6 எசேக்கியேல் 37-ஆம் அதிகாரத்தில், “காய்ந்துபோன எலும்புகள்,” ‘இரண்டு கோல்கள்’ என திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமான வியக்கவைக்கும் தீர்க்கதரிசனங்களைப் பார்த்தோம். இந்த இரண்டு தீர்க்கதரிசனங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. ஆம், யெகோவா தன்னுடைய மக்களைச் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கும் கடவுளாக இருப்பதோடு (வசனங்கள் 1-14) அவர்களைத் திரும்பவும் ஒன்றுசேர்க்கும் கடவுளாகவும் இருப்பார் (வசனங்கள் 15-28). இந்த இரண்டு தீர்க்கதரிசனங்களிலுள்ள நம்பிக்கையூட்டும் செய்தி இதுதான்: யெகோவாவினால் தன்னுடைய மக்களைச் சிறையிருப்பிலிருந்து விடுதலை செய்யவும் முடியும், அவர்களைத் திரும்பவும் ஒன்றுசேர்க்கவும் முடியும்.

அவர்களை யெகோவா எப்படி ‘கூட்டிச்சேர்த்தார்’?

7. “கடவுளால் எல்லாமே செய்ய முடியும்” என்பதை 1 நாளாகமம் 9:2, 3 எப்படி உறுதிப்படுத்துகிறது?

7 மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், சிறைபிடிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவதும் அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவதும் முடியாத விஷயமாகத் தெரியலாம். * ஆனால், “கடவுளால் எல்லாமே செய்ய முடியும்.” (மத். 19:26) யெகோவா, தான் சொன்ன தீர்க்கதரிசனத்தை அப்படியே நிறைவேற்றினார். பாபிலோனில் இருந்த யூதர்களுடைய சிறையிருப்பின் காலம் கி.மு. 537-ல் முடிவடைந்தது. அதன் பிறகு, இரண்டு ராஜ்யங்களைச் சேர்ந்தவர்களும் எருசலேமுக்குத் திரும்பி வந்து உண்மை வணக்கத்தை மீண்டும் நிலைநாட்ட உதவினார்கள். இந்த விஷயத்தைக் கடவுளுடைய வார்த்தை உறுதிப்படுத்துகிறது. “யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே ஆகியோரின் வம்சத்தைச் சேர்ந்த சிலர் எருசலேமில் குடியேறினார்கள்” என்று அது சொல்கிறது. (1 நா. 9:2, 3; எஸ்றா 6:17) ஆம், யெகோவா சொன்னபடியே பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களோடு ஒன்றுசேர்க்கப்பட்டார்கள்.

8. (அ) ஏசாயா எதை முன்னறிவித்தார்? (ஆ) எசேக்கியேல் 37:21-ல் என்ன இரண்டு முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன?

8 இஸ்ரவேல் மற்றும் யூதா மக்களுடைய சிறையிருப்பின் காலம் முடிந்த பிறகு என்ன நடக்கும் என்பதைப் பற்றி சுமார் 200 வருஷங்களுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருந்தார். யெகோவா, ‘சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களையும்’ “அசீரியா” உட்பட ‘பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களையும் ஒன்றுசேர்க்க’ ஆரம்பிப்பார் என்று அவர் முன்னறிவித்திருந்தார். (ஏசா. 11:12, 13, 16) ஆம், யெகோவா சொன்னபடியே, “இஸ்ரவேலர்களை அவர்கள் சிதறிப்போன தேசங்களிலிருந்து கூட்டிக்கொண்டு” வந்தார். (எசே. 37:21) இதில் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனியுங்கள்: சிறைபிடிக்கப்பட்டவர்களை, யெகோவா “யூதா,” “எப்பிராயீம்” என்று தனித்தனியாக அழைக்காமல் ஒரே தொகுதியாக, “இஸ்ரவேலர்கள்” என்று அழைத்தார். அதோடு, இஸ்ரவேலர்களை பாபிலோன் தேசத்திலிருந்து மட்டுமே கூட்டிச்சேர்ப்பதாக அவர் சொல்லவில்லை. அவர்களை, “நாலாபக்கத்திலிருந்து,” அதாவது பல தேசங்களிலிருந்து கூட்டிச்சேர்ப்பதாகச் சொன்னார்.

9. சிறைபிடிக்கப்பட்டவர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்த பிறகு, அவர்கள் ஒற்றுமையாக இருக்க யெகோவா எப்படி உதவினார்?

9 சிறைபிடிக்கப்பட்டவர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்த பிறகு, அவர்கள் ஒற்றுமையாக இருக்க யெகோவா எப்படி உதவினார்? செருபாபேல், தலைமை குருவான யோசுவா, எஸ்றா, நெகேமியா போன்ற ஆன்மீக மேய்ப்பர்கள் கொடுத்து உதவினார். அதோடு அவர்களுக்கு உதவ ஆகாய், சகரியா, மல்கியா ஆகிய தீர்க்கதரிசிகளை நியமித்தார். விசுவாசமுள்ள இந்த மனிதர்கள், கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கும்படி முழு தேசத்தையும் உற்சாகப்படுத்தினார்கள். (நெ. 8:2, 3) அதோடு, எதிரிகள் போட்ட சதித்திட்டங்களை முறியடித்து இஸ்ரவேல் தேசத்தை யெகோவா பாதுகாத்தார்.—எஸ்தர் 9:24, 25; சக. 4:6.

தன்னுடைய மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு ஆன்மீக மேய்ப்பர்களை யெகோவா நியமித்தார் (பாரா 9)

10. கடவுளுடைய மக்கள் எதை அனுபவிக்காதபடி சாத்தான் தடுத்திருந்தான்?

10 யெகோவா அன்போடு இவ்வளவு செய்தும், பெரும்பாலான இஸ்ரவேலர்கள் தூய வணக்கத்தை விட்டுவிட்டார்கள். அவர்கள் செய்த செயல்களெல்லாம் சிறையிருப்புக்குப் பிறகு எழுதப்பட்ட பைபிள் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. (எஸ்றா 9:1-3; நெ. 13:1, 2, 15) இஸ்ரவேலர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்து நூறு வருஷங்களுக்குள்ளேயே தூய வணக்கத்தைவிட்டு ரொம்பவே விலகிப்போய்விட்டார்கள். அதனால், “என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று யெகோவா அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியிருந்தது. (மல். 3:7) இயேசு இந்தப் பூமிக்கு வருவதற்குள் யூத மதத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டிருந்தன. விசுவாசமில்லாத மேய்ப்பர்கள் அவற்றுக்குத் தலைவர்களாக இருந்தார்கள். (மத். 16:6; மாற். 7:5-8) கடவுளுடைய மக்கள் முழுமையான ஒற்றுமையை அனுபவிக்காதபடி சாத்தான் தடுத்திருந்தான். ஆனாலும், தன்னுடைய மக்களை ஒன்றுசேர்ப்பதாக யெகோவா சொன்னது கண்டிப்பாக நிறைவேறும். எப்படி?

“என் ஊழியனாகிய தாவீது அவர்களுடைய ராஜாவாக இருப்பான்”

11. (அ) ஒன்றுசேர்ப்பது சம்பந்தமான தீர்க்கதரிசனத்தைப் பற்றி யெகோவா எதைத் தெரியப்படுத்தினார்? (ஆ) பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்ட பிறகு, சாத்தான் மீண்டும் என்ன செய்ய முயற்சி செய்தான்?

11 எசேக்கியேல் 37:24-ஐ வாசியுங்கள். தன்னுடைய “ஊழியனாகிய தாவீது,” அதாவது இயேசு, ராஜாவாக ஆன பிறகுதான் ஒன்றுசேர்ப்பது சம்பந்தமான தீர்க்கதரிசனம் முழுமையான அளவில் நிறைவேறும் என்று யெகோவா சொல்லியிருந்தார். இயேசு 1914-ல் ராஜாவாக ஆனார். * (2 சா. 7:16; லூக். 1:32) அந்தச் சமயத்துக்குள், இஸ்ரவேல் மக்களுக்கு இருந்த வாய்ப்பு ஆன்மீக இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. (எரே. 31:33; கலா. 3:29) சாத்தான், முக்கியமாக, பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்ட பிறகு, மீண்டும் கடவுளுடைய மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையைக் கெடுத்துப்போட தீவிர முயற்சியில் இறங்கினான். (வெளி. 12:7-10) உதாரணத்துக்கு, 1916-ல் சகோதரர் ரஸல் இறந்த பிறகு, விசுவாசதுரோகிகளைப் பயன்படுத்தி பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த சாத்தான் முயற்சி செய்தான். ஆனால், சீக்கிரத்திலேயே அந்த விசுவாசதுரோகிகள் அமைப்பைவிட்டு விலகிப்போய்விட்டார்கள். அதற்குப் பிறகு, அமைப்பை முன்நின்று வழிநடத்திய சகோதரர்களைச் சிறையில் தள்ள அவன் வழிசெய்தான். ஆனாலும், யெகோவாவின் மக்களுக்கு முடிவுகட்ட அவனால் முடியவில்லை. யெகோவாவுக்கு உண்மையாக இருந்த பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தார்கள்.

12. ஆன்மீக இஸ்ரவேலர்களின் ஒற்றுமையைக் குலைக்க சாத்தான் எடுத்த முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்திருக்கின்றன?

12 இஸ்ரவேல் மக்களைப் போல் இல்லாமல், இந்த ஆன்மீக இஸ்ரவேலர்கள், தங்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்த சாத்தான் போட்ட சூழ்ச்சிகளை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறார்கள். சாத்தானுடைய முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்திருக்கின்றன? ஏனென்றால், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தங்களால் முடிந்தவரை யெகோவாவுடைய நெறிமுறைகளின்படி நடந்திருக்கிறார்கள். அதனால், அவர்களுடைய ராஜாவான இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பு அவர்களுக்கு எப்போதும் இருந்திருக்கிறது; அவர் சாத்தானுக்கு எதிராகத் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறார்.—வெளி. 6:2.

யெகோவா தன்னுடைய வணக்கத்தாரை ஒன்றுசேர்ப்பார்

13. இரண்டு கோல்களை ஒன்றுசேர்ப்பதைப் பற்றிய தீர்க்கதரிசனத்திலிருந்து, முக்கியமான என்ன உண்மையைக் கற்றுக்கொள்கிறோம்?

13 இரண்டு கோல்களை ஒன்றுசேர்ப்பதைப் பற்றிய தீர்க்கதரிசனம் நம் நாளுக்கு எப்படிப் பொருந்துகிறது? இரண்டு தொகுதிகள் எப்படி ஒன்றுசேரும் என்பதைப் பற்றி விளக்குவதற்காகவே இந்தத் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டது. அதைவிட முக்கியமாக, அந்தத் தொகுதிகளை ஒன்றுசேர்ப்பது யெகோவாதான் என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் சிறப்பித்துக் காட்டுகிறது. அப்படியானால், இரண்டு கோல்கள் சம்பந்தமாகச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம், தூய வணக்கத்தைப் பற்றிய முக்கியமான என்ன உண்மையைச் சிறப்பித்துக் காட்டுகிறது? சுருக்கமாகச் சொன்னால், தன்னுடைய வணக்கத்தார் ஒன்றுசேர்வதற்கு யெகோவாதான் காரணமாக இருப்பார் என்பதைச் சிறப்பித்துக் காட்டுகிறது.—எசே. 37:19.

14. இரண்டு கோல்கள் ஒன்றுசேர்க்கப்படுவது சம்பந்தமான தீர்க்கதரிசனம், 1919-லிருந்து எப்படிப் பெரியளவில் நிறைவேறியிருக்கிறது?

14 1919-லிருந்து, அதாவது கடவுளுடைய மக்கள் ஆன்மீக விதத்தில் சுத்தமாக்கப்பட்டு ஆன்மீகப் பூஞ்சோலைக்குள் போக ஆரம்பித்த சமயத்திலிருந்து, இரண்டு கோல்கள் ஒன்றுசேர்க்கப்படுவது சம்பந்தமான தீர்க்கதரிசனம் பெரியளவில் நிறைவேறத் தொடங்கியது. அந்தச் சமயத்தில் அப்படி ஒன்றுசேர்க்கப்பட்ட பெரும்பாலான நபர்களுக்கு பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்யும் நம்பிக்கை இருந்தது. (வெளி. 20:6) பரலோக நம்பிக்கையுள்ள இந்தக் கிறிஸ்தவர்கள்தான், “யூதாவுக்கு” என்று எழுதப்பட்ட கோலுக்கு அடையாளமாக இருந்தார்கள். அதாவது, தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்களையும் லேவி கோத்திரத்தில் வந்த குருமார்களையும் கொண்ட தேசத்துக்கு அடையாளமாக இருந்தார்கள். ஆனாலும், காலம் போகப்போக பரலோக நம்பிக்கையுள்ள இந்தக் கிறிஸ்தவர்களோடு, பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள நிறைய பேர் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள், ‘எப்பிராயீமைக் குறிக்கும் கோலுக்கு’ அடையாளமாக இருந்தார்கள். அதாவது, தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்களோ லேவி கோத்திரத்தில் வந்த குருமார்களோ இல்லாத தேசத்துக்கு அடையாளமாக இருந்தார்கள். யெகோவாவின் மக்களாக இருக்கும் இந்த இரண்டு தொகுதியினரும், தங்களுடைய ராஜாவான இயேசு கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்ந்து சேவை செய்கிறார்கள்.—எசே. 37:24.

“அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்”

15. எசேக்கியேல் 37:26, 27-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இன்று எப்படி நிறைவேறிவருகின்றன?

15 நிறைய பேர் பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு சேர்ந்து தூய வணக்கத்தில் ஈடுபட தூண்டப்படுவார்கள் என்று எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. தன்னுடைய மக்களைப் பற்றி, “நான் அவர்களை . . .  ஏராளமாகப் பெருக வைப்பேன்” என்றும், “என் கூடாரம் அவர்களோடு இருக்கும்” என்றும் யெகோவா சொன்னார். (எசே. 37:26, 27; அடிக்குறிப்பு.) இந்த வார்த்தைகள், எசேக்கியேலின் காலத்துக்குச் சுமார் 700 வருஷங்களுக்குப் பிறகு அப்போஸ்தலன் யோவானுக்குச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை நம் ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறது. “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர் இவர்கள்மேல் [திரள் கூட்டமான மக்கள்மேல்] தன்னுடைய கூடாரத்தை விரிப்பார்” என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (வெளி. 7:9, 15; அடிக்குறிப்பு.) இன்று பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் திரள் கூட்டத்தாரும் ஒரே தேசமாக, அதாவது கடவுளுடைய மக்களாக, அவருடைய பாதுகாப்பான கூடாரத்தின் கீழ் வாழ்கிறார்கள்.

16. பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவது பற்றி சகரியா தீர்க்கதரிசி என்ன சொன்னார்?

16 சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த சகரியாவும் இதே போன்ற ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொன்னார். அதாவது, பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள் என்று சொன்னார். “மற்ற தேசங்களைச் சேர்ந்த . . . பத்துப் பேர் ஒரு யூதனுடைய உடையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்’ என்று சொல்வார்கள்” என்பதாகக் குறிப்பிட்டார். (சக. 8:23) ‘ஒரு யூதன்’ என்பது ஒரேவொரு நபரை அல்ல, ஒரு தொகுதியைக் குறிக்கிறது. இந்தத் தொகுதி, ஆன்மீக யூதர்களை, அதாவது பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் இன்று மீதியாக இருப்பவர்களை, குறிக்கிறது. (ரோ. 2:28, 29) “பத்துப் பேர்” என்பது, பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களைக் குறிக்கிறது. அவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்களை “இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு” ‘அவர்களோடு வருகிறார்கள்.’ (ஏசா. 2:2, 3; மத். 25:40) “இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு” மற்றும் “உங்களோடு வருகிறோம்” என்ற வார்த்தைகள் இந்த இரண்டு தொகுதியினரும் முழுமையாக ஒன்றுசேர்க்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

17. இன்று நாம் அனுபவிக்கும் ஒற்றுமையைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?

17 இயேசு, தான் ஒரு மேய்ப்பர் என்றும், தன்னுடைய வழிநடத்துதலின் கீழ் தன்னுடைய ஆடுகளும் (பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்) “வேறே ஆடுகளும்” (பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள்) ‘ஒரே மந்தையாக’ ஆகும் என்றும் சொன்னார்; ஒருவேளை, ஒன்றுசேர்ப்பது சம்பந்தமாக எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தை மனதில் வைத்து அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். (யோவா. 10:16; எசே. 34:23; 37:24, 25) நமக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, இயேசுவும் பூர்வ கால தீர்க்கதரிசிகளும் சொன்னபடி இன்று நமக்குள் எவ்வளவு அழகான ஆன்மீக ஒற்றுமை இருக்கிறது! பொய் மதம் இன்று ஆயிரக்கணக்கான பிரிவுகளாக பிரிந்துகிடப்பதைப் பார்க்கும்போது, நமக்குள் இருக்கிற ஒற்றுமை ஓர் அற்புதம்தான்!

இன்று, பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் “வேறே ஆடுகளும்” ஒன்றுசேர்ந்து ‘ஒரே மந்தையாக’ யெகோவாவை வணங்குகிறார்கள் (பாரா 17)

‘என்னுடைய ஆலயம் அவர்கள் நடுவில் என்றென்றும் இருக்கும்’

18. எசேக்கியேல் 37:28-ன்படி கடவுளுடைய மக்கள் “இந்த உலகத்தின் பாகமாக” இல்லாதிருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

18 ஒன்றுசேர்க்கப்படுவது சம்பந்தமாக எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தின் கடைசி வார்த்தைகள், நம்முடைய ஒற்றுமை என்றென்றைக்கும் நிலைத்திருப்பதற்கான காரணத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. (எசேக்கியேல் 37:28-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் ஆலயம், அதாவது தூய வணக்கம், அவருடைய மக்களின் “நடுவில்” இருப்பதால்தான் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களை, ‘புனிதமாக’ அல்லது ‘பரிசுத்தமாக’ வைத்துக்கொள்ளும்வரை, அதாவது சாத்தானுடைய உலகத்திலிருந்து பிரிந்திருக்கும்வரை, அவருடைய ஆலயம் அவர்கள் நடுவில் இருக்கும். (1 கொ. 6:11; வெளி. 7:14) தன்னுடைய சீஷர்கள் இந்த உலகத்தின் பாகமாக இருக்கக் கூடாது என்பதை இயேசு வலியுறுத்தினார். தான் இறப்பதற்கு முந்தின இரவில் தன்னுடைய சீஷர்களுக்காக அவர் உருக்கமாக ஜெபம் செய்தார். அப்போது, “பரிசுத்த தகப்பனே, . . . இவர்களும் ஒன்றாயிருப்பதற்காக . . . இவர்களைக் காத்துக்கொள்ளுங்கள். . . . இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை. சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்” என்று சொன்னார். (யோவா. 17:11, 16, 17) ‘ஒன்றாயிருப்பதற்கும்,’ “உலகத்தின் பாகமாக” இல்லாதிருப்பதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி இயேசு இங்கு சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்.

19. (அ) நாம் ‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்கள்’ என்பதை எப்படிக் காட்டுகிறோம்? (ஆ) இயேசு தன்னுடைய மரணத்துக்கு முந்தின இரவில், ஒற்றுமையைப் பற்றிய என்ன முக்கியமான உண்மையை வலியுறுத்தினார்?

19 கடவுளை, “பரிசுத்த தகப்பனே” என்று இயேசு அழைத்ததாக இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யெகோவா மிகவும் தூய்மையானவர், எப்போதுமே நீதியாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்பவர். இஸ்ரவேலர்களிடம், “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று யெகோவா கட்டளையிட்டார். (லேவி. 11:45) நாம் ‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதால்’ நம்முடைய நடத்தை எல்லாவற்றிலும் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம். (எபே. 5:1; 1 பே. 1:14, 15) மனிதர்கள் “பரிசுத்தமாக” இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன? அவர்கள் “தங்களைத் தனியாகப் பிரித்து வைத்துக்கொள்ள” வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். இயேசுவும், தன்னுடைய சீஷர்கள் உலகத்திலிருந்தும், அதன் பிரிவினை உண்டாக்கும் மனப்பான்மையிலிருந்தும் விலகியிருக்கும்வரை அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடியும் என்று தன்னுடைய மரணத்துக்கு முந்தின இரவில் குறிப்பிட்டார்.

‘பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டும்’

20, 21. (அ) யெகோவாவின் பாதுகாப்பு நமக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையை எது அதிகமாக்குகிறது? (ஆ) என்ன செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

20 “பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று” தன்னுடைய சீஷர்களுக்காக யெகோவாவிடம் இயேசு விண்ணப்பித்தார். (யோவான் 17:14, 15-ஐ வாசியுங்கள்.) அதற்கு யெகோவா பதிலளித்தாரா? நிச்சயமாக! இன்று உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் பளிச்சென தெரியும் ஒற்றுமைதான், அதற்கு அத்தாட்சி. கடவுளுடைய மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையை சாத்தானால் குலைக்க முடியாமல் போயிருப்பதைப் பார்க்கும்போது, கடவுளுடைய பாதுகாப்பு நமக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை இன்னும் அதிகமாகிறது. இரண்டு கோல்கள் தன்னுடைய கையில் ஒரே கோலாக ஆகும் என்று எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தில் யெகோவா சொன்னார். இதிலிருந்து, யெகோவாதான் தன்னுடைய பாதுகாப்பான கைக்குள் தன் மக்களை அற்புதமாக ஒன்றுசேர்த்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. யெகோவாவின் கைக்குள் இருப்பவர்களை சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது!

21 அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? நாம் அனுபவிக்கிற இந்த அருமையான ஒற்றுமையைக் காத்துக்கொள்வதில் நம் பங்கைச் செய்ய தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். இதைச் செய்வதற்கான முக்கிய வழி, யெகோவாவின் ஆன்மீக ஆலயத்தில் தவறாமல் தூய வணக்கத்தைச் செலுத்துவதுதான். அந்த வணக்கத்தில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதை அடுத்து வரும் அதிகாரங்களில் பார்க்கலாம்.

^ பாரா. 7 எசேக்கியேலுக்கு இந்தத் தீர்க்கதரிசனம் கிடைப்பதற்கு சுமார் 200 வருஷங்களுக்கு முன், பத்துக் கோத்திர ராஜ்யத்தைச் சேர்ந்த மக்களை (‘எப்பிராயீமின் கோல்’) அசீரியர்கள் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள்.—2 ரா. 17:23.

^ பாரா. 11 இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 8-ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.