Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 10

“நீங்கள் உயிர் அடைவீர்கள்”

“நீங்கள் உயிர் அடைவீர்கள்”

எசேக்கியேல் 37:5

முக்கியக் குறிப்பு: ‘காய்ந்துபோன எலும்புகள்’ உயிர் அடைவது பற்றிய தரிசனமும் அதன் பெரிய நிறைவேற்றமும்

1-3. பாபிலோனில் இருந்த யூதர்களின் நம்பிக்கை சுக்குநூறாகிப்போவதற்கு எது காரணமாக இருந்தது? (ஆரம்பப் படம்.)

பாபிலோனில் இருந்த யூதர்களின் மனப்பான்மையை மாற்றுவதற்கு எசேக்கியேல் சுமார் ஐந்து வருஷங்களாக படாத பாடு பட்டார். ஆனால், எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. கடவுள் சொன்ன செய்தியை அவர் அறிவித்தார், அதை நடித்துக் காட்டினார், உவமைகள் மூலமாகவும் சொன்னார். இப்படியெல்லாம் செய்தும்கூட, எதிரிகள் எருசலேமை அழிப்பதற்கு யெகோவா விட்டுவிடுவார் என்பதை அந்த மக்கள் நம்பவே இல்லை. பாபிலோனியப் படை எருசலேமை முற்றுகை போட்டிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட அவர்கள் நம்பவே இல்லை. அங்கே குடியிருப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது அவர்களுடைய நம்பிக்கை சுக்குநூறாகிவிட்டது. ஏன்?

2 முற்றுகை போடப்பட்டு இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, எருசலேமிலிருந்து பாபிலோனுக்குத் தப்பித்து ஓடிவந்த ஒருவன், “நகரம் அழிந்துவிட்டது!” என்று சொன்னான். அதைக் கேட்டதும் பாபிலோனில் இருந்த யூதர்கள் அப்படியே இடிந்துபோய்விட்டார்கள். அவர்கள் நெஞ்சார நேசித்த நகரம், பரிசுத்த ஆலயம், அருமையான தேசம் என எல்லாமே அழிந்துவிட்டது என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. அதுவரை அவர்களுக்கு இருந்த நம்பிக்கையெல்லாம் வீண்போனது.—எசே. 21:7; 33:21.

3 அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்பிக்கை தரும் ஒரு தரிசனத்தை எசேக்கியேலுக்கு யெகோவா கொடுத்தார். மனமுடைந்துபோன யூதர்களுக்கு அந்தத் தரிசனம் என்ன நம்பிக்கையை அளித்தது? இன்று கடவுளுடைய மக்களுக்கு அந்தத் தரிசனம் எப்படிப் பொருந்துகிறது? அதிலிருந்து தனிப்பட்ட விதமாக நாம் எப்படி நன்மை அடையலாம்? அதைத் தெரிந்துகொள்ள, எசேக்கியேலுக்கு யெகோவா காட்டிய அந்தத் தரிசனத்தைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

“இந்த எலும்புகளைப் பற்றித் தீர்க்கதரிசனம் சொல்,” “காற்றைப் பார்த்துத் தீர்க்கதரிசனம் சொல்”

4. தரிசனத்தில் எசேக்கியேலுக்கு என்னென்ன விஷயங்கள் பளிச்சென்று தெரிந்தன?

4 எசேக்கியேல் 37:1-10-ஐ வாசியுங்கள். ஒரு தரிசனத்தில் எசேக்கியேல் ஒரு சமவெளியில் கொண்டுபோய் விடப்பட்டார். அந்த சமவெளி முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன. அந்தத் தரிசனத்தின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்காக, சிதறிக்கிடந்த ‘அந்த எலும்புகளைச் சுற்றி நடக்கும்படி’ எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார். அவர் அப்படி நடந்தபோது, இரண்டு விஷயங்கள் அவருக்குப் பளிச்சென்று தெரிந்தன. ஒன்று, அந்த எலும்புகளின் எண்ணிக்கை; மற்றொன்று, அவற்றின் நிலைமை. அவை, “ஏராளமாக” இருப்பதையும் ‘மிகவும் காய்ந்துபோய்’ கிடப்பதையும் அவர் பார்த்தார்.

5. எசேக்கியேலுக்கு யெகோவா எந்த இரண்டு கட்டளைகளைக் கொடுத்தார்? அந்தக் கட்டளைகளின்படி எசேக்கியேல் செய்தபோது என்ன நடந்தது?

5 பிறகு, அந்த எலும்புகளைப் படிப்படியாக உயிர் பெற வைக்கும் இரண்டு கட்டளைகளை எசேக்கியேலுக்கு யெகோவா கொடுத்தார். அந்த “எலும்புகளைப் பற்றித் தீர்க்கதரிசனம் சொல்”; அவற்றைப் பார்த்து ‘உயிர் அடையுங்கள்’ என்று சொல் என்பதுதான் முதல் கட்டளை. (எசே. 37:4-6) எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொன்னதுமே, “எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. அவை ஒன்றோடு ஒன்று இணைந்தன.” அதன் பிறகு, “தசைநாண்களும் சதைகளும் அவற்றை மூடின. தோல் அவற்றைப் போர்த்தியது.” (எசே. 37:7, 8) அந்த உடல்கள்மேல் ‘வீசும்படி’ “காற்றைப் பார்த்துத் தீர்க்கதரிசனம் சொல்” என்பதுதான் இரண்டாவது கட்டளை. எசேக்கியேல் அப்படிச் சொன்னதும், “அவர்களுக்குள் மூச்சுக்காற்று வந்தது. அவர்கள் உயிர் பெற்று, ஒரு மாபெரும் படை போல எழுந்து நின்றார்கள்.”—எசே. 37:9, 10.

“எங்களுடைய எலும்புகள் காய்ந்துவிட்டன, எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது”

6. அந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள யெகோவா சொன்ன என்ன வார்த்தைகள் எசேக்கியேலுக்கு உதவின?

6 அடுத்ததாக அந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள எசேக்கியேலுக்கு யெகோவா உதவினார். “இந்த எலும்புகள் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் குறிக்கின்றன” என்று சொன்னார். சொல்லப்போனால், எருசலேமின் அழிவைப் பற்றி சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் இறந்த நிலையில் இருப்பதாக உணர்ந்தார்கள். அதனால் அவர்கள், “எங்களுடைய எலும்புகள் காய்ந்துவிட்டன, எங்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது, நாங்கள் ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளப்பட்டோம்” என்று புலம்பினார்கள். (எசே. 37:11; எரே. 34:20) ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக யெகோவா ஒரு செய்தியைச் சொன்னார். காய்ந்துபோன எலும்புகள் பற்றிய இந்தத் தரிசனத்தில் அந்த நம்பிக்கையூட்டும் செய்தி அடங்கியிருந்தது.

7. எசேக்கியேல் 37:12-14-ல் சொல்லப்பட்டபடி எசேக்கியேலுக்கு யெகோவா எதை வெளிப்படுத்தினார்? சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு யெகோவா என்ன உறுதியை அளித்தார்?

7 எசேக்கியேல் 37:12-14-ஐ வாசியுங்கள். இந்தத் தரிசனத்தின் மூலம், சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதாக யெகோவா உறுதி அளித்தார். அவர்களைத் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்து அங்கே வாழ வைப்பதாக அவர் சொன்னார். அதுமட்டுமல்ல, முன்பு போலவே திரும்பவும் அவர்களை “என் ஜனங்களே” என்று அவர் அழைத்தார். சோர்ந்துபோயிருந்த யூதர்களுக்கு அந்த வார்த்தைகள் எவ்வளவு தெம்பளித்திருக்கும்! தாய்நாட்டுக்குத் திரும்புவது சம்பந்தமான அந்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் என்று அவர்களால் ஏன் உறுதியாக நம்ப முடிந்தது? ஏனென்றால், யெகோவாதான் அந்த வாக்குறுதியைக் கொடுத்தார். “யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்தேன்” என்று அவர் சொன்னார்.

8. (அ) ‘இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே’ எப்படி இறந்த நிலையில் இருந்தார்கள்? (ஆ) இஸ்ரவேல் ஜனங்கள் அடையாள அர்த்தத்தில் இறந்துபோனதற்கான காரணத்தை எசேக்கியேல் 37:9 எப்படிக் காட்டுகிறது? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

8 இந்தத் தரிசனத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் வருத்தமான விஷயம் இஸ்ரவேலர்களிடம் எப்படி நிறைவேறியது? கி.மு. 740-ல் பத்துக் கோத்திர ராஜ்யம் வீழ்ச்சியடைந்து அதன் மக்கள் சிறைபிடிக்கப்பட்ட சமயத்திலேயே அது நிறைவேற ஆரம்பித்தது. அதன் பிறகு, சுமார் 130 வருஷங்களுக்குப் பின், யூதா மக்களும் நாடுகடத்தப்பட்டார்கள். இப்படி, ‘இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே’ சிறையிருப்புக்குத் தள்ளப்பட்டார்கள். (எசே. 37:11) அந்தச் சமயத்தில், சிறையிருப்பில் இருந்த எல்லாருமே, தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த எலும்புகளைப் போல ஆன்மீக விதத்தில் இறந்த நிலையில் இருந்தார்கள். * எசேக்கியேல், “மிகவும் காய்ந்துபோன” எலும்புகளைப் பார்த்ததாகச் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவர்கள் ரொம்பக் காலமாகவே இறந்த நிலையில் இருந்ததை இது காட்டுகிறது. இஸ்ரவேல் ராஜ்யமும் யூதா ராஜ்யமும் சேர்ந்து மொத்தம், 200 வருஷங்களுக்கும் மேல், அதாவது கி.மு. 740-லிருந்து கி.மு. 537 வரை, அந்த நிலையில் இருந்தன.—எரே. 50:33.

9. பூர்வ இஸ்ரவேலர்களுக்கும் ‘கடவுளுடைய இஸ்ரவேலர்களுக்கும்’ என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?

9 இஸ்ரவேலர்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவது சம்பந்தமாக எசேக்கியேலும் மற்ற தீர்க்கதரிசிகளும் சொன்ன தீர்க்கதரிசனங்களுக்கு பெரியளவு நிறைவேற்றம் இருக்கிறது. (அப். 3:21) பூர்வ இஸ்ரவேல் தேசத்தார் ‘கொல்லப்பட்டு’ அடையாள அர்த்தத்தில் ரொம்பக் காலத்துக்கு இறந்த நிலையில் இருந்தார்கள். அதே போல, ‘கடவுளுடைய இஸ்ரவேலர்களான’ பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் அடையாள அர்த்தத்தில் கொல்லப்பட்டு, ரொம்பக் காலத்துக்கு இறந்த நிலையில், அதாவது ஆன்மீக சிறையிருப்பில், இருந்தார்கள். (கலா. 6:16) சொல்லப்போனால், பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் ஆன்மீக சிறையிருப்பு பல காலத்துக்கு நீடித்ததால் அவர்களுடைய ஆன்மீக நிலைமை “மிகவும் காய்ந்துபோன” எலும்புகளைப் போல இருந்தது. (எசே. 37:2) முந்தின அதிகாரத்தில் பார்த்தபடி, பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் ஆன்மீகச் சிறையிருப்பு இரண்டாவது நூற்றாண்டிலேயே ஆரம்பித்தது. கோதுமைப் பயிர்கள் மற்றும் களைகள் பற்றிய உவமையில் இயேசு சொன்னது போல அந்தச் சிறையிருப்பு பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.—மத். 13:24-30.

தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த “மிகவும் காய்ந்துபோன” எலும்புகள், பரலோக நம்பிக்கையுள்ள யெகோவாவின் மக்கள் நீண்ட காலத்துக்கு ஆன்மீகச் சிறையிருப்பில் இருந்ததைக் காட்டின (பாராக்கள் 8, 9)

எலும்புகள் “ஒன்றோடு ஒன்று இணைந்தன”

10. (அ) கடவுளுடைய மக்களுக்குப் படிப்படியாக என்ன நடக்கும் என்று எசேக்கியேல் 37:7, 8 சொல்கிறது? (ஆ) சிறைபிடிக்கப்பட்டிருந்த கடவுள்பயமுள்ள மக்களின் விசுவாசத்தை என்னென்ன விஷயங்கள் படிப்படியாக பலப்படுத்தியிருக்கும்?

10 தன்னுடைய மக்கள் படிப்படியாக உயிர் அடைவார்கள் என்று யெகோவா முன்னறிவித்தார். (எசே. 37:7, 8) சிறையிருப்பில் இருந்த கடவுள்பயமுள்ள மக்களுக்கு, தாய்நாட்டுக்குத் திரும்பப் போக முடியும் என்ற நம்பிக்கை எப்படிப் படிப்படியாக அதிகமானது? முன்பிருந்த தீர்க்கதரிசிகள் சொன்ன வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கும். உதாரணத்துக்கு, மீதியாக இருக்கும் “பரிசுத்தமான ஒரு சந்ததி” தாய்நாட்டுக்குத் திரும்பி வரும் என்று ஏசாயா முன்னறிவித்தார். (ஏசா. 6:13, அடிக்குறிப்பு; யோபு 14:7-9) அதுமட்டுமல்ல, தாய்நாட்டுக்குத் திரும்புவது சம்பந்தமாக எசேக்கியேல் எழுதியிருந்த நிறைய தீர்க்கதரிசனங்களும் அவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதோடு, தானியேல் தீர்க்கதரிசியைப் போன்ற விசுவாசமுள்ள ஆட்கள் அந்தச் சமயத்தில் பாபிலோனில் இருந்ததும், கி.மு. 539-ல் பாபிலோன் நகரம் வியக்கவைக்கும் விதத்தில் வீழ்ச்சி அடைந்ததும் சிறைபிடிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தியிருக்கும்.

11, 12. (அ) “கடவுளுடைய இஸ்ரவேலர்கள்” எப்படிப் படிப்படியாக உயிர் அடைந்தார்கள்? (“தூய வணக்கம்—படிப்படியாக நிலைநாட்டப்பட்டது” என்ற பெட்டியையும் பாருங்கள்.) (ஆ) எசேக்கியேல் 37:10-ல் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் என்ன கேள்வியை எழுப்புகிறது?

11 ‘கடவுளுடைய இஸ்ரவேலர்களான’ பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படிப் படிப்படியாக உயிர் அடைந்தார்கள்? பல நூற்றாண்டுகளாக, இறந்த நிலையில் இருந்த பிறகு, “எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.” அதாவது, கடவுள்பயமுள்ள நபர்கள் உண்மை வணக்கத்தின் சார்பாக அப்போது செயல்பட ஆரம்பித்தார்கள். உதாரணத்துக்கு, 16-ஆம் நூற்றாண்டில் வில்லியம் டின்டேல் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனால், சாதாரண மக்களால்கூட பைபிளை வாசிக்க முடிந்தது. ரோமன் கத்தோலிக்கக் குருமார்கள் கோபத்தில் கொதித்துப்போய் டின்டேலைக் கொன்றுபோட்டார்கள். ஆனாலும், தைரியமுள்ள ஆட்கள் பைபிளை இன்னும் சில மொழிகளில் தொடர்ந்து மொழிபெயர்த்தார்கள். அதனால், நிறைய பேரால் கடவுளுடைய வார்த்தையை வாசிக்க முடிந்தது.

12 அதற்குப் பிறகு, சார்ல்ஸ் டி. ரஸலும் அவருடைய நண்பர்களும் பைபிள் சத்தியங்களை மறுபடியும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர கடினமாக முயற்சி செய்ய ஆரம்பித்தபோது, எலும்புகளின்மேல் “தசைநாண்களும் சதைகளும்” வந்ததுபோல் இருந்தது. நல்மனமுள்ள ஜனங்கள் பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ள சீயோனின் காவற்கோபுரம் என்ற பத்திரிகையும் மற்ற பிரசுரங்களும் உதவின. அதனால், அவர்கள் பரலோக நம்பிக்கையுள்ள கடவுளின் ஊழியர்களோடு சேர்ந்துகொண்டார்கள். 1900-களின் ஆரம்பத்தில், “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற படமும் நிறைவேறித்தீர்ந்த இரகசியம் என்ற ஆங்கிலப் புத்தகமும், கடவுளுடைய மக்களை இன்னும் பலப்படுத்தின. அதன் பிறகு, அவர்கள் ‘எழுந்து நிற்பதற்கு’ கடவுள் குறித்திருந்த நேரம் வந்தது. (எசே. 37:10) அந்தச் சம்பவம் எப்போது நடந்தது, எப்படி நடந்தது? இதைத் தெரிந்துகொள்ள பூர்வ பாபிலோனில் நடந்த சம்பவங்கள் நமக்கு உதவும்.

“அவர்கள் உயிர் பெற்று . . . எழுந்து நின்றார்கள்”

13. (அ) எசேக்கியேல் 37:10, 14-லுள்ள வார்த்தைகள் கி.மு. 537-லிருந்து எப்படி நிறைவேறின? (ஆ) பத்துக் கோத்திர ராஜ்யத்தைச் சேர்ந்த சிலர் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்ததைப் பற்றி எந்தெந்த வசனங்கள் சொல்கின்றன?

13 கி.மு. 537-லிருந்து இந்தத் தரிசனம் நிறைவேறியதை பாபிலோனில் இருந்த யூதர்கள் பார்த்தார்கள். எப்படி? அவர்களைச் சிறையிருப்பிலிருந்து யெகோவா விடுதலை செய்து இஸ்ரவேலுக்குத் திரும்பிப் போக அனுமதித்தார். இதன் மூலம், அவர்களுக்கு உயிர் கொடுத்து ‘எழுந்து நிற்க’ வைத்தார். 42,360 இஸ்ரவேலர்களும், இஸ்ரவேலர்கள் அல்லாத சுமார் 7,000 பேரும், பாபிலோனிலிருந்து இஸ்ரவேலுக்குக் கிளம்பிப்போனார்கள். எருசலேமையும் அதன் ஆலயத்தையும் திரும்பக் கட்டி இஸ்ரவேலில் குடியிருப்பதற்காகப் போனார்கள். (எஸ்றா 1:1-4; 2:64, 65; எசே. 37:14) இது நடந்து கிட்டத்தட்ட 70 வருஷங்களுக்குப் பிறகு, சிறையிருப்பில் இருந்த இன்னும் சுமார் 1,750 பேர் எஸ்றாவோடு சேர்ந்து எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். (எஸ்றா 8:1-20) மொத்தம் 44,000-க்கும் அதிகமான யூதர்கள் திரும்பிப் போனார்கள். அவர்கள் உண்மையிலேயே ஒரு “மாபெரும் படை” போல இருந்தார்கள். (எசே. 37:10) அவர்கள் மட்டுமல்ல, பத்துக் கோத்திர ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களும் ஆலயத்தைத் திரும்ப கட்டும் வேலைக்கு உதவ இஸ்ரவேலுக்குப் போனதாக கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. இவர்களுடைய முன்னோர்கள் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் அசீரியர்களால் நாடுகடத்தப்பட்டிருந்தார்கள்.—1 நா. 9:3; எஸ்றா 6:17; எரே. 33:7; எசே. 36:10.

14. (அ) எசேக்கியேல் 37:24-லுள்ள தீர்க்கதரிசனம் எப்போது பெரியளவில் நிறைவேறும் என்பதைத் தெரிந்துகொள்ள அந்த வசனத்திலுள்ள வார்த்தைகள் நமக்கு எப்படி உதவுகின்றன? (ஆ) 1919-ல் என்ன நடந்தது? (“‘காய்ந்துபோன எலும்புகளும்’ ‘இரண்டு சாட்சிகளும்’—இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

14 எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் இந்த வார்த்தைகள் எப்போது பெரியளவில் நிறைவேறின? பெரிய தாவீதான இயேசு கிறிஸ்து ராஜாவாக ஆகி கொஞ்சக் காலத்துக்குப் பிறகு பெரியளவில் நிறைவேறின. எசேக்கியேலுக்கு யெகோவா சொன்ன இன்னொரு தீர்க்கதரிசனத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். * (எசே. 37:24) ஆம், 1919-ல் யெகோவா தன்னுடைய மக்களுக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்தபோது அவர்கள் ‘உயிர் அடைந்து’ மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்றார்கள். (ஏசா. 66:8) அதன் பிறகு, அவர்களைத் தங்களுடைய ‘தேசத்தில்,’ அதாவது ஆன்மீகப் பூஞ்சோலையில், குடியிருக்க யெகோவா அனுமதித்தார். ஆனால், பூர்வ கால இஸ்ரவேலர்களைப் போல யெகோவாவின் நவீன கால மக்கள் எப்படி ஒரு ‘மாபெரும் படையாக’ ஆகியிருக்கிறார்கள்?

15, 16. (அ) இன்று யெகோவாவின் மக்கள் எப்படி ஒரு ‘மாபெரும் படையாக’ ஆகியிருக்கிறார்கள்? (ஆ) பிரச்சினைகளைச் சமாளிக்க எசேக்கியேலின் இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி உதவுகிறது? (“திரும்பவும் எழுந்து நிற்க உதவி” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

15 1919-ல் உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை இயேசு கிறிஸ்து நியமித்த சில காலத்திலேயே, சகரியா சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்ததை கடவுளுடைய ஊழியர்கள் பார்த்தார்கள். தாய்நாட்டுக்குத் திரும்பியவர்கள் மத்தியில் அவர் தீர்க்கதரிசியாகச் சேவை செய்துவந்தார். ‘பல இனங்களையும் பலம்படைத்த தேசங்களையும் சேர்ந்தவர்கள் . . . யெகோவாவைத் தேடி வருவார்கள்’ என்று அவர் முன்னறிவித்தார். அந்த மக்களைத்தான் “மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களிலும் பத்துப் பேர்” என்று சகரியா குறிப்பிட்டார். இவர்கள் ‘ஒரு யூதனை,’ அதாவது ஆன்மீக இஸ்ரவேலர்களை, இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, “கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்” என்று சொல்வார்கள்.—சக. 8:20-23.

16 இன்று ஆன்மீக இஸ்ரவேலர்களும் (பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோர்) அவர்களோடு சேர்ந்துகொள்கிற ‘பத்துப் பேரும்’ (வேறே ஆடுகள்) ஒட்டுமொத்தமாக “ஒரு மாபெரும் படை” போல லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். (எசே. 37:10) கிறிஸ்துவின் படைவீரர்களாகிய நாம் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் அதிகமாகிக்கொண்டே போகிறோம். ராஜாவாகிய இயேசுவை நெருக்கமாகப் பின்பற்றி எதிர்கால ஆசீர்வாதங்களை நோக்கி முன்னேறிச் செல்கிறோம்.—சங். 37:29; எசே. 37:24; பிலி. 2:25; 1 தெ. 4:16, 17.

17. அடுத்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 இப்படித் தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்டிருப்பதால் நமக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. அது என்ன? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள, எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பே எசேக்கியேலுக்கு யெகோவா கொடுத்த நியமிப்பைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். அடுத்த அதிகாரத்தில் இதைப் பற்றிப் பார்ப்போம்.

^ பாரா. 8 தரிசனத்தில் எசேக்கியேல், இயற்கையாகவே இறந்துபோனவர்களின் எலும்புகளை அல்ல, ‘கொல்லப்பட்ட ஜனங்களின்’ எலும்புகளைத்தான் பார்த்தார். (எசே. 37:9) அடையாள அர்த்தத்தில் ‘இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே’ கொல்லப்பட்டார்கள். முதலில் பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தை அசீரியர்களும், பிறகு இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்தை பாபிலோனியர்களும் கைப்பற்றி, அந்த மக்களைச் சிறைபிடித்து, நாடுகடத்தியபோது இது நடந்தது.

^ பாரா. 14 மேசியாவைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனம் இந்தப் புத்தகத்தின் 8-ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டது.