Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதிய விளக்கங்களின் சுருக்கம்

புதிய விளக்கங்களின் சுருக்கம்

கடந்த வருஷங்களில், எசேக்கியேல் தீர்க்கதரிசனத்திலுள்ள பல விஷயங்களுக்கான புதிய விளக்கங்கள் காவற்கோபுர பத்திரிகையில் கொடுக்கப்பட்டன. தூய வணக்கம்—பூமியெங்கும்! என்ற இந்தப் புத்தகத்தில் இன்னும் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடிகிறதா என்று பாருங்கள்.

நான்கு ஜீவன்களுக்கு இருக்கிற நான்கு முகங்கள் எதை அடையாளப்படுத்துகின்றன?

பழைய புரிந்துகொள்ளுதல்: 4 ஜீவன்களுக்கு இருக்கிற ஒவ்வொரு முகமும் யெகோவாவின் 4 முக்கிய குணங்களில் ஒன்றைக் குறிக்கிறது.

புதிய விளக்கம்: 4 ஜீவன்களுக்கு இருக்கிற ஒவ்வொரு முகமும் யெகோவாவின் 4 முக்கிய குணங்களில் ஒரு குணத்தைக் குறிப்பது உண்மைதான். ஆனாலும், அவற்றைச் சேர்த்துப் பார்க்கும்போது, அவை அவருடைய எல்லா குணங்களையும் குறிக்கின்றன. அதோடு, அந்த முகங்களிலிருந்து யெகோவாவின் மகா வல்லமையையும் மகிமையையும் புரிந்துகொள்கிறோம்.

காரணம்: பைபிளில், 4 என்ற எண் முழுமையைக் குறிக்கிறது. அதனால், அந்த 4 முகங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, அவை வெறுமனே தனித்தனி குணங்களாக அல்லாமல், யெகோவாவின் வியக்கவைக்கும் சுபாவத்தின் அடிப்படை குணங்களாக இருப்பது தெரிகிறது. அதோடு, ஒவ்வொரு முகமும் கம்பீரம், பலம், ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட ஒவ்வொரு உயிரினத்தைக் குறிக்கிறது. ஆம், ஒவ்வொரு கேருபீனின் 4 முகங்களும், படைப்புகளை அடையாளப்படுத்துகிற பலமுள்ள 4 உயிரினங்களைக் குறிக்கின்றன. ஆனாலும், அவை யெகோவாவின் சிம்மாசனத்துக்குக் கீழேதான் இருக்கின்றன. யெகோவாதான் எல்லா படைப்புகளுக்கும் உன்னதப் பேரரசர் என்பதை இது காட்டுகிறது.

செயலாளருடைய மைப் பெட்டியை வைத்திருப்பவர் யாருக்கு அடையாளமாக இருக்கிறார்?

பழைய புரிந்துகொள்ளுதல்: மைப் பெட்டியை வைத்திருப்பவர், பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோரைக் குறிக்கிறார். இவர்கள், பிரசங்கித்து சீஷராக்கும் வேலை மூலம் ஒரு கருத்தில் அடையாளம் போடுகிறார்கள். இப்போது ‘திரள் கூட்டத்தின்’ பாகமாக ஆகிறவர்களின் நெற்றியில் இவர்கள் அடையாளம் போடுகிறார்கள்.—வெளி. 7:9.

புதிய விளக்கம்: செயலாளரின் மைப் பெட்டியை வைத்திருப்பவர் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறார். ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ செம்மறியாடுகளாக நியாயந்தீர்க்கப்படுகிற திரள் கூட்டத்தாருக்கு அவர் அடையாளம் போடுவார்.—மத். 24:21.

காரணம்: நியாயந்தீர்க்கிற அதிகாரத்தை யெகோவா தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். (யோவா. 5:22, 23) மத்தேயு 25:31-33 சொல்கிறபடி, ‘செம்மறியாடுகள்’ யார், ‘வெள்ளாடுகள்’ யார் என்ற இறுதி தீர்ப்பை இயேசு வழங்குவார்.

விபச்சாரம் செய்த சகோதரிகளான அகோலாளும் அகோலிபாளும் கிறிஸ்தவமண்டலப் பிரிவுகளான கத்தோலிக்க மதத்துக்கும் புராட்டஸ்டண்ட் மதத்துக்கும் அடையாளமாக இருக்கிறார்களா?

பழைய புரிந்துகொள்ளுதல்: அக்காவான அகோலாள் (இஸ்ரவேலின் தலைநகரமான சமாரியா), கத்தோலிக்க மதத்தைக் குறிக்கிறாள். தங்கையான அகோலிபாள் (யூதாவின் தலைநகரமான எருசலேம்), புராட்டஸ்டண்ட் மதத்தைக் குறிக்கிறாள்.

புதிய விளக்கம்: அவர்கள் கிறிஸ்தவமண்டலத்தின் எந்தப் பிரிவையும் குறிப்பதில்லை. இந்தப் பதிவு, ஒருசமயம் தனக்கு உண்மையாக இருந்தவர்கள் ஆன்மீக விபச்சாரம் செய்யும்போது யெகோவா எப்படி உணருகிறார் என்பதைக் காட்டுகிறது. எல்லா பொய் மதங்களைப் பற்றியும் அவர் அப்படித்தான் உணருகிறார்.

காரணம்: அந்தச் சகோதரிகள் கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறார்கள் என்பதற்கு பைபிளில் ஆதாரமில்லை. இஸ்ரவேலும் யூதாவும் ஒருசமயம் யெகோவாவின் உண்மையுள்ள மனைவிகளைப் போல இருந்தார்கள். ஆனால், கிறிஸ்தவமண்டலத்துக்கும் யெகோவாவுக்கும் அப்படிப்பட்ட உறவு இருந்ததில்லை. அதோடு, எசேக்கியேல் 16, 23 அதிகாரங்கள் உண்மையற்ற மக்களை விபச்சாரிகளுக்கு ஒப்பிட்டாலும், அவர்கள் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படுவார்கள் என்ற நம்பிக்கையைத் தருகின்றன. ஆனால், கிறிஸ்தவமண்டலத்துக்கு அப்படியொரு நம்பிக்கை இருப்பதாக பைபிள் சொல்வதில்லை.

பூர்வ கால எருசலேம் கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறதா?

பழைய புரிந்துகொள்ளுதல்: கடவுளுக்கு உண்மையில்லாமல் போன எருசலேம், கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறது. அதனால், எருசலேமின் அழிவு கிறிஸ்தவமண்டலத்தின் அழிவுக்கு அடையாளமாக இருந்தது.

புதிய விளக்கம்: உண்மையற்ற எருசலேமில் இருந்த நிலைமைகள், அதாவது சிலை வழிபாடும் ஊழலும், கிறிஸ்தவமண்டலத்தில் நடப்பதை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. ஆனாலும், கிறிஸ்தவமண்டலத்துக்கு எருசலேம் அடையாளமாக இருப்பதாக நாம் இனியும் சொல்வதில்லை.

காரணம்: எருசலேம், கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறது என்பதற்கு பைபிளில் ஆதாரம் இல்லை. பூர்வ எருசலேம் மக்கள் கடவுளுக்குத் தூய வணக்கத்தைச் செலுத்தியது போல, கிறிஸ்தவமண்டலம் ஒருபோதும் செலுத்தியதில்லை. எருசலேம் மக்கள் கடவுளின் மன்னிப்பு பெற்று சில காலம் நன்றாக வாழ்ந்தார்கள். ஆனால் கிறிஸ்தவமண்டலத்துக்கு அதற்கான வாய்ப்பே இல்லை.

சமவெளியில் கிடந்த காய்ந்துபோன எலும்புகளைப் பற்றிய தரிசனம் எப்படி நிறைவேறியது?

பழைய புரிந்துகொள்ளுதல்: துன்புறுத்தப்பட்ட பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் 1918-ல் மகா பாபிலோனுக்கு அடிமைகளானார்கள். அதனால், எதுவும் செய்ய முடியாத நிலையில், இறந்த நிலையில், இருந்தார்கள். பிரசங்கிப்பதற்காக 1919-ல் அவர்களை யெகோவா உயிரடையச் செய்தபோது அந்த அடிமைத்தனம் முடிவடைந்தது.

புதிய விளக்கம்: அந்த ஆன்மீக அடிமைத்தனம், அதாவது இறந்த நிலை, ரொம்பக் காலம் நீடித்தது. 1918-க்கும் பல காலத்துக்கு முன்பே ஆரம்பித்தது. அது, 2-ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து 1919-ல் முடிவுக்கு வந்தது. இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட கோதுமைப் பயிர்களும் களைகளும் சேர்ந்தே வளர்கிற நீண்ட காலப்பகுதி, இந்தக் காலப்பகுதிக்கு ஓரளவு ஒத்திருக்கிறது.

காரணம்: பூர்வ இஸ்ரவேலர்கள் நீண்ட காலம் சிறையிருப்பில் இருந்தார்கள். அது, கி.மு. 740-ல் ஆரம்பித்து கி.மு. 537-ல் முடிவடைந்தது. எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் அந்த எலும்புகளை, “காய்ந்துபோன” அல்லது “மிகவும் காய்ந்துபோன” எலும்புகள் என்கிறது. அந்த எலும்புகளைப் போன்றவர்கள் நீண்ட காலம் இறந்த நிலையில் இருந்ததை இது காட்டுகிறது. இந்த எலும்புகள் உயிர்பெறுவது படிப்படியாக நடப்பதால், அதற்குக் காலம் எடுக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

இரண்டு கோல்கள் ஒரே கோலாக ஆவதன் அர்த்தம் என்ன?

பழைய புரிந்துகொள்ளுதல்: முதல் உலகப் போரின் சமயத்தில், பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோர் மத்தியில் சில காலம் ஒற்றுமை இல்லாமல் போனது. பிறகு, 1919-ல் அவர்கள் திரும்பவும் ஒன்றுபட்டார்கள்.

புதிய விளக்கம்: தன் வணக்கத்தாரை யெகோவா ஒன்றுபடுத்துவார் என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. 1919-க்குப் பின், பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள நிறைய பேர் மீதியானோரோடு சேர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். இந்த இரண்டு தொகுதியினரும் ஒன்றுபட்டு யெகோவாவை வணங்குகிறார்கள்.

காரணம்: இரண்டாக உடைக்கப்பட்ட ஒரு கோல், பிற்பாடு ஒன்றுசேர்க்கப்படுவதைப் பற்றி இந்தத் தீர்க்கதரிசனம் விளக்குவதில்லை. அப்படியானால், இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஒரு தொகுதி பிற்பாடு ஒன்றுசேர்க்கப்படுவதைப் பற்றி இது சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, இரண்டு வித்தியாசப்பட்ட தொகுதிகள் எப்படி ஒன்றுசேர்க்கப்படும் என்றே சொல்கிறது.

மாகோகு தேசத்தின் கோகு யார்?

பழைய புரிந்துகொள்ளுதல்: மாகோகு தேசத்தின் கோகு என்ற பெயர், பரலோகத்திலிருந்து சாத்தான் வெளியேற்றப்பட்ட பிறகு அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசன பெயர்.

புதிய விளக்கம்: மாகோகு தேசத்தின் கோகு, மிகுந்த உபத்திரவத்தின்போது தூய வணக்கத்தாரைத் தாக்கப்போகும் தேசங்களின் கூட்டணியைக் குறிக்கிறது.

காரணம்: கோகு, ஆவி உடலில் இருக்கும் ஒரு நபராக இருக்க முடியாது. ஏனென்றால், அவன் பறவைகளுக்கு இரையாகக் கொடுக்கப்படுவான் என்றும், அவனைப் புதைப்பதற்கு பூமியில் ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொல்கிறது. அதோடு, கோகுவின் தாக்குதல், தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள தாக்குதலோடு ஒத்திருக்கிறது. அதாவது, கடவுளுடைய மக்களுக்கு எதிரான தேசங்களின் தாக்குதலோடு ஒத்திருக்கிறது.—தானி. 11:40, 44, 45; வெளி. 17:14; 19:19.

எசேக்கியேல் சுற்றிப்பார்த்த ஆலயமும், அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு விளக்கிய மாபெரும் ஆன்மீக ஆலயமும் ஒன்றுதானா?

பழைய புரிந்துகொள்ளுதல்: தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயமும் அப்போஸ்தலன் பவுல் விளக்கிய ஆன்மீக ஆலயமும் ஒன்றுதான்.

புதிய விளக்கம்: எசேக்கியேல், கி.பி. 29-ல் உருவான ஆன்மீக ஆலயத்தைப் பார்க்கவில்லை. தாய்நாடு திரும்பியவர்கள் திருச்சட்டத்தின்படி தூய வணக்கத்தை எப்படிச் செலுத்த வேண்டும் என்பதைப் பற்றிய தரிசனத்தையே பார்த்தார். பவுல், கி.பி. 29-லிருந்து கி.பி. 33 வரை மிகப் பெரிய தலைமைக் குருவான இயேசு ஆன்மீக ஆலயத்தில் செய்த வேலை பற்றி எழுதினார். எசேக்கியேலின் தரிசனம், தலைமைக் குருவைப் பற்றிச் சொல்வதில்லை. அது, 1919-ல் தூய வணக்கம் நிலைநாட்டப்பட்டதைப் பற்றிச் சொல்கிறது. அதனால், எசேக்கியேல் பார்த்த ஆலயத்தின் எல்லா அம்சங்களுக்கும் அளவுகளுக்கும் அடையாள அர்த்தம் இருக்கிறதா என்று நாம் பார்ப்பதில்லை. மாறாக, தூய வணக்கத்துக்கான நெறிமுறைகளைப் பற்றி அது கற்றுத்தரும் பாடங்களுக்கே கவனம் செலுத்துகிறோம்.

காரணம்: எசேக்கியேல் பார்த்த ஆலயத்துக்கும் ஆன்மீக ஆலயத்துக்கும் சில முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன. எசேக்கியேல் பார்த்த ஆலயத்தில் பல மிருகங்கள் பலி செலுத்தப்பட்டன. ஆன்மீக ஆலயத்தில் “எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக” ஒரேவொரு பலி செலுத்தப்பட்டது. (எபி. 9:11, 12) கிறிஸ்து வருவதற்கு முந்தின நூற்றாண்டுகளில், ஆன்மீக ஆலயத்தைப் பற்றிய ஆழமான சத்தியங்களைத் தெரியப்படுத்துவதற்கான யெகோவாவின் நேரம் வரவில்லை.