Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 22

“கடவுளை வணங்கு”

“கடவுளை வணங்கு”

வெளிப்படுத்துதல் 22:9

முக்கியக் குறிப்பு: எசேக்கியேல் புத்தகத்திலுள்ள முக்கியமான பாடங்களும், நம் காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அவை பொருந்தும் விதமும்

1, 2. (அ) நாம் என்ன முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டும்? (ஆ) உண்மையுள்ள ஒரு தேவதூதருக்கு வணக்கம் செலுத்தப்பட்டபோது அவர் என்ன சொன்னார்?

‘நான் யாரை வணங்குவேன்?’ என்ற முக்கியமான கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். இது ரொம்பச் சிக்கலான விஷயம் என்பதாகவும், யாரை வணங்குவது என்பதே குழப்பமாக இருப்பதாகவும் பலர் சொல்லலாம். ஆனால், இந்த விஷயத்தில் குழம்பிப்போவதற்கு அவசியமே இல்லை. ஒன்று, நாம் யெகோவா தேவனை வணங்க வேண்டும் அல்லது பிசாசாகிய சாத்தானை வணங்க வேண்டும்.

2 எல்லாரும் தன்னை வணங்க வேண்டுமென்று சாத்தான் துடியாய்த் துடிக்கிறான். முக்கியமாக, அவன் இயேசுவைச் சோதித்தபோது இது தெளிவாகத் தெரிந்தது. இந்தப் புத்தகத்தின் 1-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, இயேசுவுக்கு சாத்தான் ஒரு பெரிய பரிசை, அதாவது உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களின் மீதும் அவருக்கு அதிகாரத்தை, கொடுக்க முன்வந்தான். அதற்குப் பதிலாக இயேசுவிடமிருந்து சாத்தான் எதை எதிர்பார்த்தான்? ‘ஒரேவொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கு’ என்று இயேசுவிடம் சொன்னான். (மத். 4:9) ஆனால், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்களை அப்போஸ்தலன் யோவானுக்குத் தெரியப்படுத்திய தேவதூதர் இதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார். (வெளிப்படுத்துதல் 22:8, 9-ஐ வாசியுங்கள்.) யோவான், அவரை வணங்குவதற்காகக் காலில் விழுந்தபோது, தாழ்மையுள்ள அந்தத் தேவதூதர், “இப்படிச் செய்யாதே!” என்று சொன்னார். ‘என்னை வணங்கு’ என்று சொல்லாமல், “கடவுளை வணங்கு” என்று சொன்னார்.

3. (அ) இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன? (ஆ) இப்போது நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 அந்தத் தேவதூதர் சொன்னபடி, யெகோவா தேவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தை உறுதிப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். (உபா. 10:20; மத். 4:10) எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்கள் மற்றும் தரிசனங்களிலிருந்து தூய வணக்கம் சம்பந்தமாக நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம். பிறகு, எதிர்காலத்தில் ஒவ்வொரு நபரும் எதிர்படப் போகிற கடைசி சோதனையைப் பற்றி பைபிளிலிருந்து ஆராயலாம். அந்தச் சோதனையில் வெற்றி பெறுபவர்கள், தூய வணக்கம் முழுமையாக... என்றென்றைக்குமாக... மீண்டும் நிலைநாட்டப்படுவதைப் பார்ப்பார்கள்.

எசேக்கியேல் புத்தகம் வலியுறுத்துகிற மூன்று பாடங்கள்

4. எசேக்கியேல் புத்தகத்தில் என்ன மூன்று விஷயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன?

4 தூய வணக்கத்தில் ஈடுபடுவதற்கு மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டுமென எசேக்கியேல் புத்தகம் நமக்குக் கற்றுத்தருகிறது. (1) யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், (2) தொடர்ந்து ஒற்றுமையோடு தூய வணக்கத்தில் ஈடுபட வேண்டும், (3) மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களும் தரிசனங்களும் இந்த மூன்று பாடங்களை எப்படி வலியுறுத்துகின்றன என்று இப்போது பார்க்கலாம்.

முதல் பாடம்: யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்

5-9. யெகோவாவுக்கு மட்டுமே வணக்கத்தைச் செலுத்துவதைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொண்டோம்?

5 அதிகாரம் 3: * யெகோவாவைச் சுற்றி ஒரு வானவில் இருப்பதையும், சக்தி படைத்த கேருபீன்கள்மீது அவர் சவாரி செய்வதையும் பற்றிய வியக்கவைக்கும் தரிசனம் இந்த அதிகாரத்தில் விளக்கப்பட்டது. சர்வவல்லமையுள்ளவர் மட்டுமே நம் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர் என்ற அடிப்படை உண்மையை இந்தத் தரிசனம் நம் மனதில் பதிய வைக்கிறது.—எசே. 1:4, 15-28.

6 அதிகாரம் 5: யெகோவாவின் ஆலயம் அசுத்தமாக்கப்படுவதைப் பற்றிய தரிசனத்தை இந்த அதிகாரத்தில் பார்த்தோம். அது எவ்வளவு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது! யெகோவாவின் பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியாது என்பதை இந்தத் தரிசனம் காட்டுகிறது. தன்னுடைய மக்கள் சிலைகளை வணங்குவது போன்ற கெட்ட செயல்களில் ஈடுபடும்போது அதை அவர் பார்க்கிறார். அவை மனித கண்களுக்கு மறைவாகச் செய்யப்பட்டாலும்கூட அவர் பார்க்கிறார். அவை அவருடைய மனதைக் காயப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்களை அவர் தண்டிப்பார்.—எசே. 8:1-18.

7 அதிகாரம் 7: சுற்றியிருந்த தேசங்கள் இஸ்ரவேலர்களை “கேலியும் கிண்டலும்” செய்ததால் அந்தத் தேசங்களைத் தண்டிக்கப்போவதாக யெகோவா சொன்னார். தன்னுடைய மக்களை மோசமாக நடத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் விடமாட்டார் என்பதை இது காட்டுகிறது. (எசே. 25:6) அதேசமயத்தில், அந்தத் தேசங்களோடு இஸ்ரவேலர்கள் தொடர்பு வைத்துக்கொண்டதிலிருந்து நாம் இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதனால், யெகோவாவை வணங்காத நம் சொந்தக்காரர்களைப் பிரியப்படுத்துவதற்காக அவருடைய சட்டதிட்டங்களை நாம் ஒருபோதும் மீறக் கூடாது. அதோடு, யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக சொத்துப்பத்துகள்மீது நம்பிக்கை வைக்க கூடாது. அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது; நடுநிலையைக் காத்துக்கொள்வதன் மூலம் யெகோவாவுக்கு மட்டுமே உண்மையோடு இருக்க வேண்டும்.

8 அதிகாரங்கள் 13, 14: மாபெரும் மலைமீதுள்ள ஆலயத்தைப் பற்றிய தரிசனம், யெகோவாதான் எல்லா கடவுள்களுக்கும் மேலானவர் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது; அவருடைய உயர்ந்த நெறிமுறைகளின்படி நாம் வாழ வேண்டும் என்பதையும் கற்றுத்தருகிறது.—எசே. 40:1–48:35.

9 அதிகாரம் 15: இஸ்ரவேலையும் யூதாவையும் விபச்சாரிகளாக தீர்க்கதரிசனத்தில் விவரித்திருப்பதை இந்த அதிகாரத்தில் பார்த்தோம். ஆன்மீக விபச்சாரத்தில் ஈடுபடுவதை, அதாவது தனக்குத் துரோகம் செய்வதை, யெகோவா எந்தளவுக்கு வெறுக்கிறார் என்பதை இது நமக்கு ஞாபகப்படுத்துகிறது.—எசே., அதி. 16, 23.

இரண்டாவது பாடம்: தொடர்ந்து ஒற்றுமையோடு தூய வணக்கத்தில் ஈடுபட வேண்டும்

10-14. தூய வணக்கத்தில் ஒன்றுபட்டிருப்பது முக்கியம் என்பது எப்படி வலியுறுத்தப்பட்டிருக்கிறது?

10 அதிகாரம் 8: தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்வதற்காக “ஒரே மேய்ப்பனை” யெகோவா ஏற்படுத்தப் போவதாக தீர்க்கதரிசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை இந்த அதிகாரத்தில் பார்த்தோம். இயேசுவின் தலைமையின் கீழ் நாம் ஒற்றுமையோடும் சமாதானத்தோடும் வேலை செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது.—எசே. 34:23, 24; 37:24-28.

11 அதிகாரம் 9: கடவுளுடைய மக்கள் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிப் போவதைப் பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்களை இந்த அதிகாரத்தில் பார்த்தோம். யெகோவாவுக்குப் பிரியமாக நடக்க விரும்புகிறவர்கள் அந்தத் தீர்க்கதரிசனங்களிலிருந்து ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளலாம். தூய வணக்கத்தில் ஈடுபடுகிறவர்கள், பொய் மதப் பழக்கவழக்கங்களை விட்டுவிட வேண்டும்; அவற்றால் கறைபடாதபடி தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். நாம் வித்தியாசப்பட்ட இனம், மதம், மற்றும் பொருளாதார அந்தஸ்திலிருந்து வந்திருந்தாலும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கடவுளுடைய மக்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள்.—எசே. 11:17, 18; 12:24; யோவா. 17:20-23.

12 அதிகாரம் 10: காய்ந்த எலும்புகள் உயிர்பெறுவதைப் பற்றிய தரிசனம், ஒற்றுமையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டியது. திரும்பவும் உயிர்பெற்று, ஒரு படைபோல் ஒன்றுசேர்ந்து வேலை செய்கிற தூய வணக்கத்தாரின் பாகமாக நாம் இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!—எசே. 37:1-14.

13 அதிகாரம் 12: இரண்டு கோல்கள் ஒரே கோலாக ஆவதைப் பற்றிய தீர்க்கதரிசனம், ஒற்றுமையாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டியது. பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் வேறே ஆடுகளும் இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதைப் பார்ப்பது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது, இல்லையா? மதமும் அரசியலும் தூண்டிவிடுகிற பகையினால் இந்த உலகம் பிளவுபட்டிருக்கிறது. இப்படிப்பட்ட உலகத்தில் வாழ்ந்தாலும், நாம் அன்போடும் உண்மையோடும் நடந்துகொள்வதால் ஒன்றுபட்ட மக்களாக நிலைத்திருக்கிறோம்.—எசே. 37:15-23.

14 அதிகாரம் 16: செயலாளருடைய மைப் பெட்டியை வைத்திருப்பவரையும் நொறுக்குவதற்கான ஆயுதங்களை வைத்திருப்பவர்களையும் பற்றிய தரிசனத்தில் ஒரு முக்கியமான எச்சரிக்கை உட்பட்டிருக்கிறது. ‘மிகுந்த உபத்திரவத்துக்கு’ முன்பே தூய வணக்கத்தாராக இருப்பவர்கள் மட்டும்தான் தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தைப் பெறுவார்கள்.—மத். 24:21; எசே. 9:1-11.

மூன்றாவது பாடம்: மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டும்

15-18. நாம் ஏன் தொடர்ந்து அன்பு காட்ட வேண்டும், அதை நாம் எப்படிச் செய்யலாம்?

15 அதிகாரம் 4: நான்கு ஜீவன்களைப் பற்றிய தரிசனத்திலிருந்து யெகோவாவின் குணங்களை, முக்கியமாக அன்பை, பற்றிக் கற்றுக்கொண்டோம். நம்முடைய பேச்சிலும் செயலிலும் அன்பைக் காட்டினால், யெகோவாதான் நம் கடவுள் என்பதை நிரூபிப்போம்.—எசே. 1:5-14; 1 யோ. 4:8.

16 அதிகாரங்கள் 6, 11: எசேக்கியேலைப் போன்ற காவல்காரர்களை நியமிக்க கடவுளைத் தூண்டியது அன்புதான். பூமியில் சாத்தானுடைய ஆதிக்கத்துக்கு அவர் முடிவுகட்டும்போது, யாருமே அழிந்துபோகக் கூடாது என்று அவர் விரும்புவதற்குக் காரணமும் அன்புதான். (2 பே. 3:9) கடவுளைப் போல அன்பு காட்டுவதற்கான வாய்ப்பு நமக்கும் இருக்கிறது. இன்று காவல்காரருடைய வேலையைச் செய்கிறவர்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் இதை நாம் செய்யலாம்.—எசே. 33:1-9.

17 அதிகாரங்கள் 17, 18: தான் இரக்கம் காட்டினாலும் நிறைய பேர் அதை ஒதுக்கித்தள்ளிவிடுவார்கள் என்றும், தன்னை உண்மையோடு வணங்குகிறவர்களைத் துடைத்தழிக்க அவர்கள் முயற்சி செய்வார்கள் என்றும் யெகோவாவுக்குத் தெரியும். தன்னுடைய உண்மையுள்ள மக்கள்மீது யெகோவாவுக்கு அன்பு இருப்பதால், ‘மாகோகு தேசத்தின் கோகுவின்’ தாக்குதலிலிருந்து அவர்களைப் பாதுகாப்பார். தன்னுடைய மக்களைக் கொடுமைப்படுத்துகிறவர்களை யெகோவா அழிப்பார் என்று முடிந்தவரையில் நிறைய பேரை எச்சரிப்பதற்கு அன்பு நம்மைத் தூண்டுகிறது.—எசே. 38:1–39:20; 2 தெ. 1:6, 7.

18 அதிகாரங்கள் 19, 20, 21: உயிரளிக்கும் தண்ணீர் பாய்ந்தோடுவதையும் தேசத்தைப் பங்கிடுவதையும் பற்றிய தரிசனங்களை இந்த அதிகாரங்களில் பார்த்தோம். மக்கள்மீது யெகோவாவுக்கு எந்தளவு அன்பு இருக்கிறது என்பதை இந்தத் தரிசனங்களிலிருந்து தெரிந்துகொண்டோம். இந்தத் தரிசனங்கள் யெகோவா காட்டிய மாபெரும் அன்பினால் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி விவரிக்கின்றன. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக நாம் பரிபூரண வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் யெகோவா தன்னுடைய மகனின் உயிரையே நமக்காகக் கொடுத்து அந்த அன்பைக் காட்டியிருக்கிறார். தன்னுடைய மகன்மீது விசுவாசம் வைப்பவர்களுக்கு, யெகோவா ஏற்படுத்தியிருக்கும் அருமையான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்வதுதான் மக்கள்மீது நமக்கிருக்கும் அன்பைக் காட்டுவதற்கான மிகச் சிறந்த வழி.—எசே. 45:1-7; 47:1–48:35; வெளி. 21:1-4; 22:17.

ஆயிர வருஷ ஆட்சிக்குப்பின், மனத்தாழ்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

19. ஆயிர வருஷ ஆட்சியின்போது இயேசு என்ன செய்வார்? (“கடைசி சோதனையைச் சந்தித்தல்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

19 இறந்துபோன கோடிக்கணக்கான மக்களை இயேசு தன்னுடைய ஆயிர வருஷ ஆட்சியின்போது உயிர்த்தெழுப்புவார். இதன் மூலம், நம்முடைய ‘எதிரியான மரணத்தால்’ ஏற்பட்ட வலியைப் போக்குவார். (1 கொ. 15:26; மாற். 5:38-42; அப். 24:15) மனித சரித்திரம் முழுவதுமே கண்ணீரால் எழுதப்பட்ட கதையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், மனிதர்களை இயேசு உயிர்த்தெழுப்பும்போது, கண்ணீர், கவலை இல்லாத புதிய வாழ்க்கையை அவர்களுக்குக் கொடுப்பார். நோய், போர், பஞ்சம் ஆகியவற்றால் ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் மீட்பு பலியின் மூலமாக அவர் சரிசெய்வார். எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய வேதனைக்கு ஆணிவேராக இருக்கும் பாவத்தை, அதாவது, ஆதாமிடமிருந்து நாம் பெற்ற பாவத்தைப் பிடுங்கியெறிய அவர் நமக்கு உதவுவார். (ரோ. 5:18, 19) இயேசு முழுமையாக ‘பிசாசின் செயல்களை ஒழிப்பார்.’ (1 யோ. 3:8) பிறகு என்ன நடக்கும்?

உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் கண்ணீர், கவலை இல்லாத புதிய வாழ்க்கையை அனுபவிப்பார்கள்

20. இயேசுவும் 1,44,000 பேரும் எப்படி மிகச் சிறந்த விதத்தில் மனத்தாழ்மையைக் காட்டுவார்கள்? விளக்குங்கள். (ஆரம்பப் படம்.)

20 1 கொரிந்தியர் 15:24-28-ஐ வாசியுங்கள். மனிதர்கள் எல்லாரும் பரிபூரணர்களாக ஆன பிறகு... யெகோவா ஆரம்பத்தில் விரும்பியபடி இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறிய பிறகு... இயேசுவும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யும் 1,44,000 பேரும் மிகச் சிறந்த விதத்தில் மனத்தாழ்மையைக் காட்டுவார்கள். ஆம், அவர்கள் அரசாங்கத்தை யெகோவாவிடம் ஒப்படைப்பார்கள். ஆயிரம் வருஷமாக அவர்களிடம் இருந்த அதிகாரத்தை மனப்பூர்வமாகவும், சந்தோஷமாகவும் யெகோவாவிடம் ஒப்படைப்பார்கள். அந்த அரசாங்கத்தின் சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கடைசி சோதனை

21, 22. (அ) ஆயிர வருஷத்துக்குப் பிறகு, இந்த உலகம் எப்படியிருக்கும்? (ஆ) சாத்தானையும் பேய்களையும் யெகோவா ஏன் விடுதலை செய்வார்?

21 ஆயிர வருஷ ஆட்சிக்குப் பிறகு, பூமியில் வாழ்கிற மக்கள்மீது தனக்கு எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டும் விதத்தில் யெகோவா ஒன்றைச் செய்வார். ஆயிரம் வருஷங்களாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த சாத்தானையும் பேய்களையும் அதலபாதாளத்திலிருந்து விடுதலை செய்யும்படி அவர் கட்டளையிடுவார். (வெளிப்படுத்துதல் 20:1-3-ஐ வாசியுங்கள்.) விடுதலையாகி வரும்போது, சாத்தானும் அவனுடைய பேய்களும் ரொம்பவே வித்தியாசமான உலகத்தைப் பார்ப்பார்கள். அர்மகெதோனுக்கு முன்பு, பெரும்பாலான மக்கள் சாத்தானால் ஏமாற்றப்பட்டிருந்தார்கள்; பகையும் பாகுபாடும் அவர்களுடைய ஒற்றுமையைக் குலைத்துப்போட்டிருந்தது. (வெளி. 12:9) ஆனால், ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில், மனிதர்கள் எல்லாருமே ஒரே குடும்பமாக அன்போடும் ஒற்றுமையோடும் யெகோவாவை வணங்கிக்கொண்டிருப்பார்கள். இந்தப் பூமி ஒரு அமைதிப் பூங்காவாக மாறியிருக்கும்.

22 படு மோசமான குற்றவாளிகளான சாத்தானையும் பேய்களையும் யெகோவா இந்த அமைதியான பூஞ்சோலைக்குள் ஏன் வரவிடுகிறார்? ஏனென்றால், ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் வாழ்கிற பெரும்பாலான மக்கள், யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்களா என்ற சோதனையை அதுவரை எதிர்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் யெகோவாவைப் பற்றித் தெரியாமலேயே இறந்துபோய், பூஞ்சோலையில் உயிர்த்தெழுந்து வந்தவர்கள். யெகோவா அவர்களை உயிர்த்தெழுப்பியதோடு அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளையும் மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்திருப்பார். அவர்களைத் தப்பு செய்யத் தூண்டுகிறவர்கள் யாரும் அங்கே இருந்திருக்க மாட்டார்கள், நல்லது செய்யத் தூண்டுகிறவர்கள்தான் இருந்திருப்பார்கள். யெகோவாவை நேசித்து அவரை வணங்குகிற மக்களே அவர்களைச் சுற்றிலும் இருந்திருப்பார்கள். அதனால், யோபுமீது சுமத்திய அதே குற்றச்சாட்டை உயிர்த்தெழுந்து வந்தவர்கள்மீதும் சாத்தான் சுமத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதாவது, யெகோவா பாதுகாத்து ஆசீர்வதிப்பதால்தான் அவர்கள் அவரை வணங்குகிறார்கள் என்று அவன் சொல்லலாம். (யோபு 1:9, 10) அதனால், நம் தகப்பனும் பேரரசருமான யெகோவாவுக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க நமக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். அதன் பிறகுதான், வாழ்வின் சுருளில் நம்முடைய பெயரை யெகோவா நிரந்தரமாக எழுதுவார்.—வெளி. 20:12, 15.

23. ஒவ்வொருவரும் என்ன சோதனையைச் சந்திக்க வேண்டியிருக்கும்?

23 கடவுளை வணங்குவதிலிருந்து மனிதர்களை விலக்க கொஞ்சக் காலத்துக்கு சாத்தான் அனுமதிக்கப்படுவான். அப்போது எப்படிப்பட்ட சோதனையைச் சந்திக்க வேண்டியிருக்கும்? ஆதாம்-ஏவாள் சந்தித்தது போன்ற ஒரு சோதனையை ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டியிருக்கும். யெகோவாவின் சட்டதிட்டங்களை ஏற்றுக்கொண்டு, அவருடைய ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து, அவரை வணங்குவதா அல்லது அவருக்கு எதிராகக் கலகம் செய்து சாத்தானை ஆதரிப்பதா என்ற சோதனையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

24. கலகம் செய்பவர்கள் ஏன் கோகு மற்றும் மாகோகு என்று அழைக்கப்படுகிறார்கள்?

24 வெளிப்படுத்துதல் 20:7-10-ஐ வாசியுங்கள். ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் கலகம் செய்கிறவர்கள், கோகு என்றும் மாகோகு என்றும் அழைக்கப்படுவது, குறிப்பிடத்தக்க விஷயம். மிகுந்த உபத்திரவத்தின்போது கடவுளுடைய மக்களைத் தாக்கும் கலகக்கார கும்பலைப் போலவே இவர்களும் நடந்துகொள்வார்கள். அந்தக் கலகக்கார கும்பல், அதாவது, “மாகோகு தேசத்தின் கோகு” யெகோவாவின் ஆட்சியை எதிர்க்கும் வித்தியாசப்பட்ட தேசங்களாக இருந்தார்கள். (எசே. 38:2) கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் கலகம் செய்கிறவர்களையும் ‘தேசங்கள்’ என்றுதான் பைபிள் விவரிக்கிறது. இது ஆர்வத்துக்குரிய விவரிப்பு என்று ஏன் சொல்லலாம்? ஏனென்றால், ஆயிர வருஷ ஆட்சியின்போது மக்கள் வித்தியாசப்பட்ட தேசங்களாகப் பிரிந்திருக்க மாட்டார்கள். எல்லாருமே ஒரே அரசாங்கத்தின், அதாவது கடவுளுடைய அரசாங்கத்தின், குடிமக்களாக இருப்பார்கள். நாம் எல்லாருமே ஒரே தேசத்தின் குடிமக்களாக இருப்போம். அப்படியிருக்கும்போது, இந்தக் கலகக்காரர்களை கோகு மற்றும் மாகோகு என்றும் ‘தேசங்கள்’ என்றும் தீர்க்கதரிசனம் ஏன் குறிப்பிடுகிறது? ஏனென்றால், கடவுளுடைய மக்கள் சிலரின் மத்தியில் சாத்தான் பிரிவினைகளை ஏற்படுத்துவான். அப்போது, சாத்தானைப் பின்பற்றும்படி யாரும் வற்புறுத்தப்பட மாட்டார்கள். அது, ஒவ்வொரு பரிபூரண நபருடைய சொந்தத் தீர்மானமாக இருக்கும்.

கலகம் செய்கிறவர்கள் கோகு என்றும் மாகோகு என்றும் அழைக்கப்படுவார்கள் (பாரா 24)

25, 26. சாத்தானோடு எத்தனை பேர் சேர்ந்துகொள்வார்கள்? அவர்களுக்கு என்ன நடக்கும்?

25 எத்தனை பேர் சாத்தானோடு சேர்ந்துகொள்வார்கள்? கலகம் செய்பவர்கள், “கடற்கரை மணலைப் போல் எண்ண முடியாத அளவுக்கு இருப்பார்கள்.” இந்த வார்த்தைகளை வைத்து, பெரும் எண்ணிக்கையான மக்கள் கலகம் செய்வார்கள் என்று சொல்லிவிட முடியாது. அது நமக்கு எப்படித் தெரியும்? ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியை யோசித்துப் பாருங்கள். ஆபிரகாமின் சந்ததி, “கடற்கரை மணலைப் போல” பெருகும் என்று யெகோவா சொன்னார். (ஆதி. 22:17, 18) ஆனால், அந்தச் சந்ததியின் மொத்த எண்ணிக்கை 1,44,001 மட்டுமே. (கலா. 3:16, 29) இது ஒரு பெரிய எண்ணிக்கையாக இருந்தாலும், இதுவரை பூமியில் வாழ்ந்த மக்களுடைய எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது இது கடுகளவுதான். அதேபோல், பெரும் எண்ணிக்கையான மக்கள் சாத்தானோடு சேர்ந்துகொண்டாலும் அவர்களுடைய எண்ணிக்கை மலைத்துப்போகும் அளவுக்கு அதிகமாக இருக்காது. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களை அவர்களால் அழித்துப்போட முடியாது.

26 ஆனால், அந்தக் கலகக்கார கும்பலைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் சீக்கிரத்திலேயே அழிக்கப்படுவார்கள். இவர்கள் திரும்பவும் உயிரோடு வர வாய்ப்பே இல்லை. சாத்தானோடும் பேய்களோடும் சேர்ந்து இவர்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், இவர்கள் எடுத்த தவறான முடிவுகள், அதனால் வந்த விளைவுகள் காலத்துக்கும் மறக்கப்படாது.—வெளி. 20:10.

27-29. கடைசி சோதனையில் வெற்றி பெறுகிறவர்களுக்கு என்ன காத்திருக்கிறது?

27 கடைசி சோதனையை வெற்றிகரமாகத் தாண்டியவர்களின் பெயர்கள் “வாழ்வின் புத்தகத்தில்” நிரந்தரமாக எழுதப்படும். (வெளி. 20:15) அப்போது, யெகோவாவின் உண்மையுள்ள மகன்கள், மகள்கள் எல்லாரும் ஒரே குடும்பமாக இருப்பார்கள்; அவருக்கு மட்டுமே சேர வேண்டிய வணக்கத்தை அவர்கள் செலுத்துவார்கள்.

28 அந்த வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அங்கே நல்ல வேலை இருக்கும், நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களுக்கும் உங்களுடைய பிரியமானவர்களுக்கும் எந்தக் கஷ்டமும் வராது. பாவத்தின் சுவடே இல்லாமல் யெகோவாவுக்கு முன் சுத்தமானவர்களாக இருப்பீர்கள். ஒவ்வொருவருமே எந்தத் தடையும் இல்லாமல் யெகோவாவுடன் நட்பு வைத்துக்கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, பரலோகத்திலும் சரி, பூமியிலும் சரி, தூய வணக்கம் முழுமையாகச் செலுத்தப்படும். அப்போதுதான், தூய வணக்கம் நிரந்தரமாக நிலைநாட்டப்படும்!

நீங்கள் பரிபூரணராக ஆகும்போது, பாவத்தின் சுவடே இல்லாமல் யெகோவாவுக்கு முன் சுத்தமானவர்களாக இருப்பீர்கள் (பாரா 28)

29 அந்த மகத்தான நாளைப் பார்க்க நீங்கள் அங்கே இருப்பீர்களா? எசேக்கியேல் புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட மூன்று முக்கியமான பாடங்களை தொடர்ந்து பின்பற்றினால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். அதாவது, யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், தொடர்ந்து ஒற்றுமையோடு தூய வணக்கத்தில் ஈடுபட வேண்டும், மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். எசேக்கியேல் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனங்களிலிருந்து கடைசியாக ஒரு அடிப்படை விஷயத்தைக் கற்றுக்கொள்ள முடியும். அது என்ன?

பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லா படைப்புகளும் கடைசியில் ஒன்றுபட்டு தூய வணக்கத்தில் ஈடுபடும் சந்தோஷத்தை கற்பனை செய்து பாருங்கள் (பாராக்கள் 27-29)

‘நான் யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்’

30, 31. ‘நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்’ என்ற வார்த்தைகள் (அ) கடவுளுடைய எதிரிகளுக்கு எதைக் குறிக்கும்? (ஆ) கடவுளுடைய மக்களுக்கு எதைக் குறிக்கும்?

30 எசேக்கியேல் புத்தகம் முழுவதிலும் ‘நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்’ என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுள்ளன. (எசே. 6:10; 39:28) கடவுளுடைய எதிரிகளுக்கு அந்த வார்த்தைகள் போரையும் அழிவையும் குறிக்கின்றன. யெகோவா இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும். அவருடைய மகத்தான பெயரின் அர்த்தத்தையும், அதாவது அவர் “ஆகும்படி செய்பவர்” என்பதையும் அவர்கள் அடிபட்டுதான் தெரிந்துகொள்வார்கள். “பரலோகப் படைகளின் யெகோவா” ‘ஒரு மாவீரராக’ அவர்களை எதிர்த்துப் போர் செய்யும்போது அவருடைய மகத்தான பெயரின் அர்த்தத்தை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். (1 சா. 17:45; யாத். 15:3) அவருடைய நோக்கம் நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்ற அடிப்படை உண்மையை அவர்கள் புரிந்துகொள்ளும்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.

31 ஆனால் கடவுளுடைய மக்களுக்கு, ‘நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்’ என்ற வார்த்தைகள் சமாதானத்தையும் வாழ்வையும் குறிக்கும். யெகோவா தன்னுடைய ஆரம்ப நோக்கத்தின்படியே தன்னுடைய குணங்களை அப்படியே வெளிக்காட்டுகிற மகன்களாகவும் மகள்களாகவும் நம்மை ஆக்குவார். (ஆதி. 1:26) அவர், ஏற்கெனவே நம்முடைய அன்பான அப்பாவாகவும் அரவணைக்கும் மேய்ப்பராகவும் ஆகியிருக்கிறார். சீக்கிரத்தில், வெற்றி வாகை சூடும் ராஜாவாக ஆவார். அந்த நாள் வருவதற்குமுன், எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நம் மனதில் பதிய வைக்க வேண்டும். யெகோவா யார் என்பதையும் அவருடைய பெயரின் அர்த்தத்தையும் நாம் தெரிந்திருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் நம்முடைய சொல்லிலும் செயலிலும் காட்ட வேண்டும். அப்படிச் செய்தால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது நாம் தைரியமாக இருப்போம். அதோடு, நம்முடைய விடுதலை நெருங்கிவிட்டதை அறிந்து, நம் தலைகளை உயர்த்துவோம். (லூக். 21:28) அதுவரையில், வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள தகுதியுள்ள ஒரே கடவுளைப் பற்றி, அதாவது யெகோவா என்ற மகத்தான பெயரைக் கொண்ட கடவுளைப் பற்றி, தெரிந்துகொள்ளவும் அவரை நேசிக்கவும் எல்லா மக்களுக்கும் நாம் உதவ வேண்டும்.—எசே. 28:26.

^ பாரா. 5 இங்கு அதிகாரம் என்று சொல்லப்பட்டிருப்பது, இந்தப் புத்தகத்தின் அதிகாரத்தைக் குறிக்கிறது.