Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 20

‘தேசத்தை சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுங்கள்’

‘தேசத்தை சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுங்கள்’

எசேக்கியேல் 45:1

முக்கியக் குறிப்பு: தேசம் பங்கிடப்படுவதன் அர்த்தம்

1, 2. (அ) எசேக்கியேலிடம் என்ன செய்யும்படி யெகோவா சொல்கிறார்? (ஆ) என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்ப்போம்?

எசேக்கியேல் இப்போதுதான் ஒரு தரிசனத்தைப் பார்த்திருக்கிறார். சுமார் 900 வருஷங்களுக்கு முன், மோசே மற்றும் யோசுவாவின் காலத்தில் நடந்த விஷயத்தை அந்தத் தரிசனம் அவருக்கு ஞாபகப்படுத்தியிருக்கும். அந்தக் காலத்தில், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் எல்லைகளைப் பற்றி மோசேயிடம் யெகோவா விவரமாகச் சொல்லியிருந்தார். பிற்பாடு, அந்தத் தேசத்தை இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு எப்படிப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று யோசுவாவிடம் சொல்லியிருந்தார். (எண். 34:1-15; யோசு. 13:7; 22:4, 9) இப்போது கி.மு. 593-ல், மறுபடியும் அந்தத் தேசத்தை இஸ்ரவேல் கோத்திரங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி எசேக்கியேலிடமும் அவரோடு இருந்த சிறைபிடிக்கப்பட்ட மக்களிடமும் யெகோவா சொல்கிறார்.—எசே. 45:1; 47:14; 48:29.

2 எசேக்கியேலும் அவரோடு இருந்த மக்களும் இந்தத் தரிசனத்திலிருந்து என்ன தெரிந்துகொண்டார்கள்? இன்றுள்ள கடவுளுடைய மக்களுக்கு இந்தத் தரிசனம் எப்படி உற்சாகத்தைத் தருகிறது? எதிர்காலத்தில் இது பெரியளவில் நிறைவேறுமா?

நான்கு வாக்குறுதிகள் அடங்கிய தரிசனம்

3, 4. (அ) எசேக்கியேல் பார்த்த கடைசி தரிசனத்தில், சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்காக என்ன நான்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன? (ஆ) இந்த அதிகாரத்தில், எந்த வாக்குறுதியைப் பற்றிப் பார்ப்போம்?

3 எசேக்கியேல் பார்த்த கடைசித் தரிசனத்தைப் பற்றி, அவர் எழுதிய புத்தகத்தின் கடைசி ஒன்பது அதிகாரங்கள் சொல்கின்றன. (எசே. 40:1–48:35) திரும்பவும் நல்ல நிலைமைக்கு மாறிய இஸ்ரவேல் தேசத்தைப் பற்றிய நான்கு வாக்குறுதிகளை, சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தரிசனம் கொடுத்தது. நம்பிக்கையூட்டும் அந்த வாக்குறுதிகள் இவைதான்: (1) கடவுளுடைய ஆலயத்தில் தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும். (2) நீதியுள்ள குருமார்களும் மேய்ப்பர்களும் அந்தத் தேசத்தை வழிநடத்துவார்கள். (3) இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பி வருகிற எல்லாருக்குமே சொந்தமாக இடம் கொடுக்கப்படும். (4) யெகோவா திரும்பவும் அவர்கள் மத்தியில் தங்கி அவர்களோடு இருப்பார்.

4 இவற்றில் முதல் இரண்டு வாக்குறுதிகள் எப்படி நிறைவேறும் என்பதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 13, 14 அதிகாரங்களில் பார்த்தோம். இந்த அதிகாரத்தில், தேசம் பங்கிடப்படுவது சம்பந்தமான மூன்றாவது வாக்குறுதியைப் பற்றிப் பார்ப்போம். அடுத்த அதிகாரத்தில், யெகோவா தன்னுடைய மக்களோடு தங்கியிருப்பதாகக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிப் பார்ப்போம்.—எசே. 47:13-21; 48:1-7, 23-29.

‘இந்தத் தேசம் . . . உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கப்படுகிறது’

5, 6. (அ) எசேக்கியேலின் தரிசனத்தில் எந்தத் தேசம் பங்குபோட்டுக் கொடுக்கப்படவிருந்தது? (ஆரம்பப் படம்.) (ஆ) எதற்காக இந்தத் தரிசனத்தை யெகோவா கொடுத்தார்?

5 எசேக்கியேல் 47:14-ஐ வாசியுங்கள். தரிசனத்தில் எசேக்கியேலுக்கு “ஏதேன் தோட்டத்தை” போல மாறவிருந்த தேசத்தின் ஒரு பகுதியை யெகோவா காட்டினார். (எசே. 36:35) பிறகு அவரிடம், “இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுக்கு இந்தத் தேசத்தைத்தான் நீங்கள் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்” என்று யெகோவா சொன்னார். (எசே. 47:13) ‘இந்தத் தேசம்,’ திரும்பவும் நல்ல நிலைமைக்கு மாறிய இஸ்ரவேல் தேசத்தைக் குறித்தது. சிறைபிடிக்கப்பட்ட மக்கள் அந்தத் தேசத்துக்குத்தான் திரும்பி வரவிருந்தார்கள். அடுத்ததாக, எசேக்கியேல் 47:15-21-ல் சொல்லப்பட்டுள்ளபடி, அந்தத் தேசத்தின் எல்லைகளைப் பற்றி யெகோவா துல்லியமாக விளக்கினார்.

6 எதற்காக இந்தத் தரிசனத்தை யெகோவா கொடுத்தார்? துல்லியமாக அளக்கப்பட்ட எல்லைகளைப் பற்றி யெகோவா சொன்னபோது, தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய் அங்கே வாழ முடியும் என்ற நம்பிக்கை எசேக்கியேலுக்கும் அவரோடு இருந்த மக்களுக்கும் கிடைத்திருக்கும். யெகோவா தெளிவாகவும் விளக்கமாகவும் கொடுத்த அந்த வாக்குறுதி, அவர்களுக்கு நிச்சயம் தெம்பளித்திருக்கும். கடவுளுடைய மக்களுக்கு உண்மையிலேயே, அந்தத் தேசம் சொத்தாகக் கிடைத்ததா? ஆம், கிடைத்தது.

7. (அ) கி.மு. 537-ல் என்னென்ன சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன, அது நமக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? (ஆ) எந்தக் கேள்விக்கான பதிலை இப்போது பார்ப்போம்?

7 எசேக்கியேலுக்கு இந்தத் தரிசனம் கிடைத்து, சுமார் 56 வருஷங்களுக்குப் பிறகு இது நடந்தது. கி.மு. 537-ல் ஆயிரக்கணக்கான மக்கள் சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பி வரவும், அதில் வாழவும் ஆரம்பித்தார்கள். பல காலத்துக்கு முன் நடந்த குறிப்பிடத்தக்க இந்தச் சம்பவங்கள், நம் நாளில் கடவுளுடைய மக்கள் மத்தியில் நடந்துவருகிற அதேபோன்ற விஷயத்தை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. ஒரு விதத்தில், இவர்களுக்கும் தேசம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. எப்படி? தன்னுடைய ஊழியர்கள் ஆன்மீகத் தேசத்துக்கு வரவும் அதில் வாழவும் யெகோவா அனுமதித்தார். அன்று, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசம் மறுபடியும் நல்ல நிலைமைக்கு மாறியது. அதிலிருந்து, இன்று கடவுளுடைய மக்களின் ஆன்மீகத் தேசம் நல்ல நிலைமைக்கு மாறுவது சம்பந்தமான சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இந்த விஷயங்களைப் பார்ப்பதற்கு முன், “இன்று உண்மையிலேயே ஒரு ஆன்மீகத் தேசம் இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் ஏன் வருகிறோம்?” என்று பார்க்கலாம்.

8. (அ) இஸ்ரவேலர்களுக்குப் பதிலாக யாரை யெகோவா தேர்ந்தெடுத்தார்? (ஆ) ஆன்மீகத் தேசம், அதாவது ஆன்மீகப் பூஞ்சோலை, எதைக் குறிக்கிறது? (இ) அது எப்போது உருவானது, அதில் யார் வாழ ஆரம்பித்தார்கள்?

8 இஸ்ரவேல் தேசம் திரும்பவும் நல்ல நிலைமைக்கு வருவது சம்பந்தமான தீர்க்கதரிசனங்கள், யெகோவாவின் “ஊழியனாகிய தாவீது,” அதாவது இயேசு கிறிஸ்து, ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது பெரியளவில் நிறைவேறும். இதைப் பற்றி முன்பு ஒரு தரிசனத்தின் மூலம் எசேக்கியேலுக்கு யெகோவா தெரியப்படுத்தினார். (எசே. 37:24) இயேசு 1914-ல் ராஜாவாக ஆனார். அதற்கும் பல காலத்துக்கு முன்பே இஸ்ரவேலர்களுக்குப் பதிலாக ஆன்மீக இஸ்ரவேலர்களை தன்னுடைய மக்களாக கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர்கள், கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள். (மத்தேயு 21:43; 1 பேதுரு 2:9-ஐ வாசியுங்கள்.) அவர் இஸ்ரவேல் மக்களுக்குப் பதிலாக ஆன்மீக இஸ்ரவேலர்களைத் தேர்ந்தெடுத்தது போல, இஸ்ரவேலர்களின் தேசத்துக்குப் பதிலாக ஒரு ஆன்மீகத் தேசத்தை, அதாவது ஒரு ஆன்மீகப் பூஞ்சோலையை, ஏற்படுத்தினார். (ஏசா. 66:8) இந்தப் புத்தகத்தின் 17-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, ஆன்மீகத் தேசம் என்பது ஒரு ஆன்மீகச் சூழலைக் குறிக்கிறது. அங்குதான், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் மீதியாக இருப்பவர்கள் 1919-லிருந்து யெகோவாவை வணங்கிவருகிறார்கள். (“1919 என்று எப்படிச் சொல்கிறோம்?” என்ற பெட்டி 9ஆ-வைப் பாருங்கள்) காலப்போக்கில், பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள “வேறே ஆடுகளும்” இந்த ஆன்மீகத் தேசத்தில் வாழ ஆரம்பித்தார்கள். (யோவா. 10:16) ஆன்மீகப் பூஞ்சோலையில் வாழ்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதன் அழகும் கூடிக்கொண்டே போகிறது. ஆனாலும், அதில் கிடைக்கும் ஆசீர்வாதங்களை அர்மகெதோனுக்குப் பிறகுதான் நாம் முழுமையாக அனுபவிப்போம்.

தேசத்தைத் துல்லியமாகவும் சரிசமமாகவும் பிரிப்பது

9. தேசத்தைப் பங்கிடுவதைப் பற்றிய விளக்கமான என்னென்ன தகவல்களை யெகோவா கொடுத்தார்?

9 எசேக்கியேல் 48:1, 28-ஐ வாசியுங்கள். தேசத்தின் எல்லைகளைப் பற்றி குறிப்பிட்ட பிறகு, தேசத்தை எப்படிப் பங்கிட வேண்டுமென்று யெகோவா விளக்கமாகச் சொன்னார். 12 கோத்திரங்களுக்குக் கொடுக்க வேண்டிய சொத்தைத் துல்லியமாகவும் சரிசமமாகவும் பிரிக்கும்படி அவர் சொன்னார். வடக்கே, தாண் கோத்திரத்திலிருந்து தெற்கே, காத் கோத்திரம்வரை அதைச் சரிசமமாகப் பிரிக்கும்படி சொன்னார். ஒவ்வொரு கோத்திரத்துக்கும் கிழக்கிலிருந்து மேற்குவரையாக சரிசமமான ஒரு பகுதி சொத்தாகக் கொடுக்கப்பட்டது. தேசத்தின் கிழக்கு எல்லையிலிருந்து, மேற்கே பெருங்கடல்வரை, அதாவது மத்தியதரைக் கடல்வரை, அந்தப் பகுதி இருந்தது.—எசே. 47:20.

10. இந்தத் தரிசனம், சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நம்பிக்கையைக் கொடுத்திருக்கலாம்?

10 இந்தத் தரிசனம், சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நம்பிக்கையைக் கொடுத்திருக்கலாம்? தேசத்தைப் பங்கிடுவது சம்பந்தமாக எசேக்கியேல் சொன்ன விலாவாரியான தகவல்களைக் கேட்ட பிறகு, அந்த வேலை நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் செய்யப்படும் என்ற நம்பிக்கை அந்த மக்களுக்குக் கிடைத்திருக்கும். 12 கோத்திரங்களுக்கும் தேசம் துல்லியமாகப் பிரித்துக்கொடுக்கப்படும் என்ற விஷயம் எதை வலியுறுத்திக் காட்டியது? சிறையிருப்பிலிருந்து திரும்பி வருகிற ஒவ்வொருவருக்கும் சொந்தமாக இடம் கிடைக்கும் என்பதை வலியுறுத்திக் காட்டியது. திரும்பி வருகிற யாருக்குமே நிலமோ வீடோ இல்லாமல் போகாது.

11. இந்தத் தரிசனத்திலிருந்து என்னென்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்? (“தேசம் பங்கிடப்படுதல்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

11 இந்தத் தரிசனத்திலிருந்து உற்சாகமூட்டும் என்னென்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்? வாக்குக் கொடுக்கப்பட்ட தேசம் திரும்பவும் நல்ல நிலைமைக்கு மாறியபோது, அதில் குருமார்களுக்கும், லேவியர்களுக்கும், தலைவர்களுக்கும் மட்டுமல்ல 12 கோத்திரங்களைச் சேர்ந்த எல்லாருக்கும் இடம் கிடைத்தது. (எசே. 45:4, 5, 7, 8) அதேபோல், இன்றுள்ள ஆன்மீகப் பூஞ்சோலையில் பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோருக்கும், முன்நின்று வழிநடத்துகிற ‘திரள் கூட்டத்தை’ சேர்ந்தவர்களுக்கும் மட்டுமல்ல, திரள் கூட்டத்தைச் சேர்ந்த எல்லாருக்குமே இடம் இருக்கிறது. * (வெளி. 7:9) கடவுளுடைய அமைப்பில் நம்முடைய பங்கு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், இந்த ஆன்மீகத் தேசத்தில் நமக்கென்று ஒரு இடமும், மதிப்புள்ள வேலையும் இருக்கிறது. இந்த உண்மை நம் இதயத்தைத் தொடவில்லையா?

கடவுளுடைய அமைப்பில் நாம் எந்த வேலையைச் செய்தாலும் சரி, நாம் எடுக்கும் முயற்சியை யெகோவா உயர்வாக மதிக்கிறார் (பாரா 11)

முக்கியமான இரண்டு வித்தியாசங்களும் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களும்

12, 13. கோத்திரங்களுக்கு நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுப்பது சம்பந்தமாக திட்டவட்டமான என்னென்ன தகவல்களை யெகோவா கொடுத்தார்?

12 தேசத்தைப் பங்கிடுவது சம்பந்தமாக யெகோவா சொன்ன சில விஷயங்கள் எசேக்கியேலுக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், இது சம்பந்தமாக கடவுள் மோசேயிடம் சொன்னதற்கும் எசேக்கியேலிடம் சொன்னதற்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. அவற்றில் இரண்டு வித்தியாசங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒன்று, நிலம் சம்பந்தப்பட்டது; மற்றொன்று, குடிமக்கள் சம்பந்தப்பட்டது.

13 நிலம். சிறிய கோத்திரங்களைவிட பெரிய கோத்திரங்களுக்கு அதிகமான நிலத்தைக் கொடுக்கும்படி மோசேயிடம் கடவுள் சொன்னார். (எண். 26:52-54) ஆனால் எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்தில், எல்லா கோத்திரங்களுக்கும் “சமமான பங்கு” கொடுக்கும்படி யெகோவா திட்டவட்டமாகச் சொன்னார். (எசே. 47:14) அப்படியானால், ஒவ்வொரு கோத்திரத்தின் வடக்கு எல்லைக்கும் தெற்கு எல்லைக்கும் இடைப்பட்ட தூரம் சரிசமமான அளவில் இருக்க வேண்டியிருந்தது. நீர்வளமுள்ள அந்தத் தேசத்தில் விளையும் எல்லாமே இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் சரிசமமாகக் கிடைக்கவிருந்தது. அவர்கள் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி!

14. மற்ற தேசத்து ஜனங்கள் சம்பந்தமாக, திருச்சட்டத்தில் சொல்லப்பட்டதைவிட மேலான என்ன விஷயத்தை எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார்?

14 குடிமக்கள். மற்ற தேசத்து ஜனங்களுக்கு திருச்சட்டம் பாதுகாப்பு அளித்தது; யெகோவாவை வணங்க அவர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால், தேசத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் கொடுக்கப்படவில்லை. (லேவி. 19:33, 34) இருந்தாலும், திருச்சட்டத்தில் சொல்லப்பட்டதைவிட மேலான ஒரு விஷயத்தை எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார். “[மற்ற தேசத்து ஜனங்கள்] எந்தக் கோத்திரத்துக்குச் சொந்தமான இடத்தில் குடியிருக்கிறார்களோ அந்த இடத்திலேயே அவர்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டும்” என்று சொன்னார். இந்த ஒரே கட்டளையின் முலம், ‘இஸ்ரவேல் குடிமக்களுக்கும்’ மற்ற தேசத்து ஜனங்களுக்கும் இருந்த மிகப் பெரிய வித்தியாசத்தை யெகோவா நீக்கிவிட்டார். (எசே. 47:22, 23) திரும்பவும் நல்ல நிலைமைக்கு மாறிய அந்தத் தேசத்தில் மக்கள் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் ஒற்றுமையாக யெகோவாவை வணங்கியதை தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்தார்.—லேவி. 25:23.

15. நிலத்தையும் குடிமக்களையும் பற்றி யெகோவா சொன்ன தகவல்கள், மாறாத என்ன உண்மையை வலியுறுத்தின?

15 நிலத்தையும் குடிமக்களையும் பற்றி எசேக்கியேலிடம் சொல்லப்பட்ட இந்த அருமையான இரண்டு தகவல்கள், சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கும். இஸ்ரவேலர்களாக இருந்தாலும் சரி யெகோவாவை வணங்கிய மற்ற தேசத்து ஜனங்களாக இருந்தாலும் சரி, எல்லாருக்குமே தேசத்தில் சரிசமமான பங்கை யெகோவா கொடுப்பார் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். (எஸ்றா 8:20; நெ. 3:26; 7:6, 25; ஏசா. 56:3, 8) அதோடு, தன்னுடைய ஊழியர்கள் எல்லாரையுமே யெகோவா மதிப்புமிக்க செல்வங்களாகக் கருதுகிறார் என்ற உற்சாகமூட்டும் மாறாத உண்மையை இந்தத் தகவல்கள் வலியுறுத்தின. (ஆகாய் 2:7-ஐ வாசியுங்கள்.) நமக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, இதே உண்மை நம்மையும் உற்சாகப்படுத்துகிறது.

16, 17. (அ) நிலத்தையும் குடிமக்களையும் பற்றிய இந்தத் தகவல்களிலிருந்து நாம் எப்படி நன்மை அடைகிறோம்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

16 நிலத்தையும் குடிமக்களையும் பற்றிய இந்தத் தகவல்களிலிருந்து நாம் எப்படி நன்மை அடைகிறோம்? நம்முடைய உலகளாவிய சகோதரக் குடும்பத்தில் சமத்துவமும் ஒற்றுமையும் இருப்பது பளிச்சென தெரிய வேண்டும் என்பதை இவை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. யெகோவா பாரபட்சம் காட்டாதவர். அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘யெகோவாவைப் போல நானும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்கிறேனா? நம் சகோதர சகோதரிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒவ்வொருவரையும் நான் உள்ளப்பூர்வமாக மதிக்கிறேனா?’ (ரோ. 12:10) ஆன்மீகப் பூஞ்சோலையில் நம் எல்லாருக்குமே சமமான பங்கை யெகோவா கொடுத்திருப்பதை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம். அங்கே, நம் பரலோகத் தகப்பனுக்கு முழு மூச்சோடு பரிசுத்த சேவை செய்கிறோம்; அவரிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கிறோம்.—கலா. 3:26-29; வெளி. 7:9.

யெகோவாவைப் போல பாரபட்சம் காட்டாமல் இருக்கிறோமா, மற்றவர்களை உள்ளப்பூர்வமாக மதிக்கிறோமா? (பாரா 15, 16)

17 அடுத்ததாக, சிறைபிடிக்கப்பட்ட மக்களோடு தான் இருக்கப்போவதாக யெகோவா வாக்கு கொடுக்கிறார். அதுதான், எசேக்கியேல் பார்த்த கடைசித் தரிசனத்தின் முடிவான பாகத்தில் சொல்லப்பட்டுள்ள நான்காவது வாக்குறுதி. அதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? அதைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் பார்க்கலாம்.

^ பாரா. 11 ஆன்மீகத் தேசத்தில் குருமார்களுக்கும் தலைவர்களுக்கும் யெகோவா கொடுத்திருக்கிற விசேஷ பொறுப்பையும் நியமிப்பையும் பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தின் 14-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.