Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 4

‘நான்கு முகங்களுள்ள ஜீவன்கள்’​—⁠யார்?

‘நான்கு முகங்களுள்ள ஜீவன்கள்’​—⁠யார்?

எசேக்கியேல் 1:15

முக்கியக் குறிப்பு: நான்கு ஜீவன்களும் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களும்

1, 2. தன்னுடைய ஊழியர்களுக்குத் தன்னைப் பற்றிய உண்மைகளைத் தெரியப்படுத்த யெகோவா ஏன் சில சமயங்களில் தரிசனங்களைக் கொடுத்தார்?

ஒரு குடும்பம் ஒன்றுசேர்ந்து பைபிளைப் படிப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தக் குடும்பத்தில் சின்ன பிள்ளைகள் இருக்கிறார்கள். பைபிளிலிருக்கும் உண்மைகளை அந்தப் பிள்ளைகள் சுலபமாகப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடைய அப்பா, சில படங்களைக் காட்டுகிறார். பிள்ளைகளுடைய முகத்தில் தெரிகிற சிரிப்பும், அவர்கள் சுவாரஸ்யமாகச் சொல்கிற பதில்களும், அப்பா சொல்வதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இப்படிப் படங்களைப் பயன்படுத்தி கற்றுக்கொடுக்கும்போது அவர்களால் யெகோவாவைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இல்லையென்றால், அவர்களால் அதையெல்லாம் புரிந்துகொள்ளவே முடியாது.

2 யெகோவாவும், தன்னுடைய பிள்ளைகளான மனிதர்களுக்கு தரிசனங்கள், கனவுகள் போன்றவற்றின் மூலம் பரலோகத்திலிருக்கிற சில விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறார். உதாரணத்துக்கு, மனதைத் தொடும் காட்சிகள் அடங்கிய ஒரு தரிசனத்தை எசேக்கியேலுக்கு யெகோவா காட்டினார். அதன் மூலம், தன்னைப் பற்றிய ஆழமான சில உண்மைகளை அவர் விளக்கினார். போன அதிகாரத்தில் அப்படிப்பட்ட ஒரு காட்சியைப் பற்றிப் பார்த்தோம். இப்போது, அந்த மாபெரும் தரிசனத்திலுள்ள ஒரு விஷயத்துக்கு நாம் கவனம் செலுத்தலாம். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது, யெகோவாவிடம் நெருங்கி வர நமக்கு எப்படி உதவும் என்றும் பார்க்கலாம்.

நான்கு ஜீவன்கள் போலத் தெரிந்தன

3. (அ) எசேக்கியேல் 1:4, 5-ன்படி தரிசனத்தில் எசேக்கியேல் எதைப் பார்த்தார்? (ஆரம்பப் படம்.) (ஆ) அவற்றைப் பற்றி எசேக்கியேல் பதிவு செய்த விதத்திலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?

3 எசேக்கியேல் 1:4, 5-ஐ வாசியுங்கள். தேவதூதர்களுக்கும், மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இருப்பதைப் போன்ற சில அம்சங்கள் அந்த நான்கு ஜீவன்களுக்கும் இருந்ததாக எசேக்கியேல் விவரிக்கிறார். எசேக்கியேல் புத்தகத்தின் முதல் அதிகாரத்திலுள்ள முழு தரிசனத்தையும் நீங்கள் வாசிக்கும்போது, “போன்ற,” “போலவும்,” “போல” ஆகிய வார்த்தைகளை அவர் அடிக்கடி பயன்படுத்தியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். (எசே. 1:13, 24, 26) ஏனென்றால், தான் பார்க்கிற ஒவ்வொன்றும், பரலோகத்திலிருக்கிற பார்க்க முடியாத விஷயங்களை அடையாளப்படுத்துவதை எசேக்கியேல் புரிந்துகொண்டார்.

4. (அ) அந்தத் தரிசனத்தைப் பார்த்த பிறகு எசேக்கியேல் எப்படி உணர்ந்தார்? (ஆ) கேருபீன்களைப் பற்றி எசேக்கியேலுக்கு என்ன விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தது?

4 அந்தத் தரிசனத்தில், எசேக்கியேல் பார்த்த காட்சிகளும் கேட்ட சத்தங்களும் அவரைப் பிரமித்துப்போக வைத்திருக்கும். அந்த நான்கு ஜீவன்களும் பார்ப்பதற்கு, “எரிகிற நெருப்புத் தணலை” போல இருந்தன. அவற்றின் வேகம், “மின்னல்” போல இருந்தது. அவற்றின் சிறகுகளின் சத்தம், “வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போலவும்” அவை அங்குமிங்கும் போனபோது உண்டான சத்தம், “ஒரு போர்ப் படையின் சத்தத்தைப் போலவும்” இருந்தது. (எசே. 1:13, 14, 24-28; ‘நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்’ என்ற பெட்டியைப் பாருங்கள்.) எசேக்கியேல் பிற்பாடு பார்த்த தரிசனத்தில் அந்த நான்கு ஜீவன்களை ‘கேருபீன்கள்,’ அதாவது வல்லமையுள்ள தேவதூதர்கள், எனக் குறிப்பிட்டார். (எசே. 10:2) கேருபீன்கள் எப்போதுமே யெகோவாவுக்குப் பக்கத்தில் நின்று சேவை செய்பவர்கள் என்பது எசேக்கியேலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஏனென்றால், அவர் குருமார் வம்சத்தைச் சேர்ந்தவர்.—1 நா. 28:18; சங். 18:10.

‘ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன’

5. (அ) யெகோவாவின் வல்லமையையும் மகிமையையும் பற்றி கேருபீன்களிடமிருந்தும் அவர்களுடைய நான்கு முகங்களிலிருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) இந்தத் தரிசனம் கடவுளுடைய பெயரின் அர்த்தத்தைப் பற்றி ஏன் நமக்கு ஞாபகப்படுத்துகிறது? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

5 எசேக்கியேல் 1:6, 10-ஐ வாசியுங்கள். ஒவ்வொரு கேருபீனுக்கும் மனுஷ முகம், சிங்க முகம், காளை முகம், கழுகு முகம் என நான்கு முகங்கள் இருந்ததை எசேக்கியேல் பார்த்தார். அந்த நான்கு முகங்களைப் பார்த்தபோது யெகோவாவுடைய மகா வல்லமையையும் மகிமையையும் பற்றி எசேக்கியேல் நன்றாகப் புரிந்திருப்பார். ஏன் அப்படிச் சொல்கிறோம்? அந்த நான்கு முகங்கள் கம்பீரம், பலம், ஆற்றல் ஆகியவற்றை அடையாளப்படுத்துகின்றன. சிங்கம், கம்பீரமான ஒரு காட்டு மிருகம். காளை, பலமுள்ள ஒரு வீட்டு விலங்கு. கழுகு, அதிக ஆற்றலுள்ள ஒரு பறவை. மனிதன், பூமியிலுள்ள எல்லா படைப்புகளையும்விட உயர்ந்தவன். பூமியில் இருக்கிற மற்ற எல்லா உயிரினங்கள்மீதும் அவனுக்கு அதிகாரம் இருக்கிறது. (சங். 8:4-6) ஒவ்வொரு கேருபீனுக்கும் இருக்கிற நான்கு முகங்கள், படைப்புகளை அடையாளப்படுத்துகிற பலம் வாய்ந்த நான்கு உயிரினங்களைக் குறிக்கின்றன. அவையெல்லாம் உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சிம்மாசனத்துக்குக் கீழே இருக்கின்றன. தன்னுடைய படைப்புகளைப் பயன்படுத்தி, தன் நோக்கத்தை நிறைவேற்ற யெகோவாவினால் முடியும் என்பதை இந்தத் தரிசனம் அழகாக விவரிக்கிறது. * யெகோவாவின் “மகத்துவம் வானத்தையும் பூமியையும்விட உயர்ந்தது” என்று சங்கீதக்காரன் சொன்னது ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது.—சங். 148:13.

அந்த நான்கு ஜீவன்களும் அவற்றின் நான்கு முகங்களும் யெகோவாவின் வல்லமை, மகிமை, மற்றும் தலைசிறந்த குணங்களைப் பற்றி எதை வெளிப்படுத்துகின்றன? (பாராக்கள் 5, 13)

6. அந்த நான்கு முகங்களைப் பற்றிக் கூடுதலாகப் புரிந்துகொள்ள எது எசேக்கியேலுக்கு உதவியிருக்கும்?

6 அந்தத் தரிசனத்தைப் பற்றி எசேக்கியேல் பின்பு யோசித்துப் பார்த்திருப்பார். தனக்கு முன் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள், மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிட்டுச் சொன்னது அவருக்கு ஞாபகம் வந்திருக்கும். உதாரணத்துக்கு யாக்கோபு, தன் மகன் யூதாவை சிங்கத்துக்கும், பென்யமீனை ஓநாய்க்கும் ஒப்பிட்டார். (ஆதி. 49:9, 27) ஏனென்றால், சிங்கத்துக்கும் ஓநாய்க்கும் இருக்கிற விசேஷக் குணங்கள் அவர்களிடம் பளிச்சென்று தெரிந்தன. இந்த விஷயங்களை வைத்து, கேருபீன்களின் முகங்களும், தலைசிறந்த விசேஷக் குணங்களைக் குறித்ததாக எசேக்கியேல் முடிவு செய்திருக்கலாம். ஆனால், எந்தக் குணங்களை?

யெகோவாவுக்கும் அவருடைய பரலோகக் குடும்பத்துக்கும் இருக்கிற குணங்கள்

7, 8. கேருபீன்களின் முகங்கள் பெரும்பாலும் எந்தக் குணங்களோடு சம்பந்தப்படுத்தி சொல்லப்பட்டிருக்கின்றன?

7 எசேக்கியேலுக்கு முன் வாழ்ந்த பைபிள் எழுத்தாளர்கள், சிங்கத்துக்கும் கழுகுக்கும் காளைக்கும் என்ன விசேஷக் குணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள்? பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்: “சிங்கம் போல வீரமாக இருக்கிறவன்.” (2 சா. 17:10; நீதி. 28:1) ‘கழுகு மேலே பறக்கிறது,’ “தொலைவிலிருந்து அதன் கண்கள் நோட்டமிடுகின்றன.” (யோபு 39:27, 29) “காளையின் பலத்தால் அறுவடை அமோகமாக இருக்கும்.” (நீதி. 14:4) அதனால்தான் சிங்கத்தின் முகம், தைரியத்தோடு செலுத்தப்படும் நீதியையும், கழுகின் முகம் தொலைநோக்கு பார்வையோடு கூடிய ஞானத்தையும், காளையின் முகம் மகா வல்லமையையும் குறிப்பதாக நம் பிரசுரங்களில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது.

8 அப்படியானால், ‘மனுஷ முகம்’ எதைக் குறிக்கிறது? (எசே. 10:14) அது எந்த மிருகத்தாலும் காட்ட முடியாத... கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களால் மட்டுமே காட்ட முடிந்த... குணத்தைக் குறிக்க வேண்டும். (ஆதி. 1:27) அது மனிதர்களுக்கு மட்டுமே உரிய குணம் என்பதைக் கடவுள் கொடுத்த பின்வரும் கட்டளைகளிலிருந்து தெரிந்துகொள்கிறோம்: “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் முழு இதயத்தோடு . . . அன்பு காட்ட வேண்டும்,” “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.” (உபா. 6:5; லேவி. 19:18) இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து சுயநலமில்லாத அன்பை நாம் காட்டும்போது, யெகோவாவைப் போல் அன்பு காட்டுகிறோம். அப்போஸ்தலன் யோவான் சொன்னதுபோல், “கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்.” (1 யோ. 4:8, 19) அப்படியானால், ‘மனுஷ முகம்’ அன்பை அடையாளப்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது.

9. கேருபீன்களின் முகங்கள் யாருடைய குணங்களை அடையாளப்படுத்துகின்றன?

9 இவையெல்லாம் யாருடைய குணங்கள்? அந்த நான்கு கேருபீன்கள் யெகோவாவின் பரலோகக் குடும்பத்தைச் சேர்ந்த உண்மையுள்ள தேவதூதர்கள் எல்லாரையும் அடையாளப்படுத்துகிறார்கள். அதனால், அந்த நான்கு கேருபீன்களுக்கு இருக்கும் குணங்கள் தேவதூதர்கள் எல்லாருக்கும் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. (வெளி. 5:11) இந்தக் கேருபீன்கள் எல்லாருக்கும் உயிர் கொடுத்தவர் யெகோவாதான்; அவர்களுக்கு இருக்கிற குணங்களைக் கொடுத்தவரும் அவர்தான். (சங். 36:9) அதனால், அந்தக் கேருபீன்களின் முகங்கள் யெகோவாவின் குணங்களைத்தான் அடையாளப்படுத்துகின்றன. (யோபு 37:23; சங். 99:4; நீதி. 2:6; மீ. 7:18) இந்த அருமையான குணங்களை யெகோவா காட்டுகிற சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

10, 11. யெகோவா காட்டும் நான்கு தலைசிறந்த குணங்களிலிருந்து நாம் எப்படி நன்மை அடைகிறோம்?

10 நீதி: யெகோவா நீதி ‘நியாயத்தை நேசிக்கிற’ கடவுள்; அவர் “யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்.” (சங். 37:28; உபா. 10:17) அதனால், நம்முடைய அந்தஸ்து, பின்னணி எதுவாக இருந்தாலும் சரி, நாம் எல்லாருமே அவருடைய ஊழியர்களாக ஆக முடியும். தொடர்ந்து அவருக்கு ஊழியம் செய்யவும், முடிவில்லாத ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். ஞானம்: ஞானமுள்ள கடவுளான யெகோவா, ‘நடைமுறையான ஞானம்’ நிறைந்த ஒரு புத்தகத்தை, அதாவது பைபிளை, நமக்குத் தந்திருக்கிறார். (யோபு 9:4; நீதி. 2:7, அடிக்குறிப்பு) அதிலுள்ள ஞானமான ஆலோசனைகளைப் பின்பற்றினால் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்ப்படும் சவால்களைச் சமாளிக்க முடியும்; அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும் முடியும். வல்லமை: யெகோவா “மகா வல்லமை உள்ளவர்.” அவர் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ தந்து நமக்கு உதவுகிறார். கடுமையான, வேதனையான எந்தச் சோதனை வந்தாலும் அதைச் சமாளிக்க இந்தச் சக்தி நமக்குப் பலத்தைத் தருகிறது.—நாகூ. 1:3; 2 கொ. 4:7; சங். 46:1.

11 அன்பு: யெகோவா “மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.” தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களை அவர் ஒருபோதும் கைவிட மாட்டார். (சங். 103:8; 2 சா. 22:26) ஒருவேளை நோய் அல்லது முதுமையின் காரணமாக, நம்மால் முன்பு போல இப்போது யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியாமல் இருக்கலாம். அதை நினைத்து நாம் கவலைப்படலாம். ஆனால், நாம் யெகோவாவுக்கு அன்போடு செய்த சேவையை அவர் ஒருபோதும் மறக்க மாட்டார். (எபி. 6:10) இதை யோசித்துப் பார்ப்பது நமக்கு ஆறுதலாக இருக்கிறது, இல்லையா? யெகோவாவின் நீதி, ஞானம், வல்லமை, அன்பு ஆகிய குணங்களால் இன்று நாம் அதிக நன்மை அடைகிறோம். இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தொடர்ந்து நன்மை அடைவோம்.

12. யெகோவாவின் குணங்களைப் புரிந்துகொள்ளும் விஷயத்தில் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?

12 மனிதர்களாகிய நம்மால் யெகோவாவுடைய குணங்களைப் பற்றி ஓரளவுதான் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். நமக்குத் தெரிந்ததெல்லாம், “அவருடைய வழிகளின் ஓரங்கள்தான்!” (யோபு 26:14) “சர்வவல்லமையுள்ளவரை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.” ஏனென்றால் “அவருடைய மகத்துவம் ஆராய முடியாதது.” (யோபு 37:23; சங். 145:3) யெகோவாவுடைய குணங்களை எண்ண முடியாது. அவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பதால் அவற்றைத் தனித்தனியாக வகைப்படுத்தவும் முடியாது. (ரோமர் 11:33, 34-ஐ வாசியுங்கள்.) கடவுளுக்கு ஏராளமான குணங்கள் இருப்பதை எசேக்கியேல் பார்த்த தரிசனமே தெளிவாகக் காட்டுகிறது. (சங். 139:17, 18) இந்த முக்கியமான உண்மையை, அந்தத் தரிசனத்தின் எந்தப் பகுதி காட்டுகிறது?

“நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும்”

13, 14. கேருபீன்களின் நான்கு முகங்கள் எதை அடையாளப்படுத்துகின்றன, ஏன் அப்படிச் சொல்கிறோம்?

13 அந்தத் தரிசனத்தில் ஒவ்வொரு கேருபீனுக்கும் நான்கு முகங்கள் இருந்ததை எசேக்கியேல் பார்த்தார். பைபிளில் நான்கு என்ற எண் முழுமையைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஏசா. 11:12; மத். 24:31; வெளி. 7:1) நான்கு என்ற எண்ணை இந்தத் தரிசனத்தில் மட்டும் ஒன்பது முறை எசேக்கியேல் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள். (எசே. 1:5-18) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நான்கு கேருபீன்கள் உண்மையுள்ள எல்லா தேவதூதர்களையும் அடையாளப்படுத்துவது போல, அந்தக் கேருபீன்களின் நான்கு முகங்களைச் சேர்த்துப் பார்க்கும்போது அவை யெகோவாவின் எல்லா குணங்களையும் அடையாளப்படுத்துகின்றன என்பதைத் தெரிந்துகொள்கிறோம். *

14 கேருபீன்களுடைய நான்கு முகங்களும் வெறுமனே நான்கு குணங்களை மட்டுமே குறிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கு, இந்தத் தரிசனத்திலுள்ள சக்கரங்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாம். அந்த நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் மிகப் பிரமாண்டமாக இருந்தாலும், அவற்றைச் சேர்த்துப் பார்க்கும்போது, அவை அந்த ரதத்தின் அடிப்படை பாகமாக இருப்பது தெரிகிறது. அதேபோல, அந்த நான்கு முகங்கள் ஒவ்வொன்றும் அற்புதமான ஒரு குணத்தைக் குறிப்பதாக இருந்தாலும், அவற்றைச் சேர்த்துப் பார்க்கும்போது அவை யெகோவாவின் பிரமிப்பூட்டும் சுபாவத்தின் அடிப்படை குணங்களாக இருப்பது தெரிகிறது.

யெகோவா தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களின் பக்கத்தில் இருக்கிறார்

15. தனக்குக் கிடைத்த முதல் தரிசனத்திலிருந்து எசேக்கியேல் ஆறுதலான என்ன உண்மையைத் தெரிந்துகொண்டார்?

15 இந்த முதல் தரிசனத்தின் மூலம், யெகோவாவோடு தனக்கிருக்கும் பந்தத்தைப் பற்றிய ஒரு முக்கியமான... ஆறுதலான... உண்மையை எசேக்கியேல் தெரிந்துகொண்டார். எசேக்கியேல் புத்தகத்தின் ஆரம்ப வார்த்தைகள், இந்த உண்மையை வெளிப்படுத்துகின்றன. தான், ‘கல்தேயர்களின் தேசத்தில்’ இருந்ததாக எசேக்கியேல் சொன்ன பிறகு, “அங்கே யெகோவாவின் சக்தியால் நிரப்பப்பட்டேன்” என்று குறிப்பிடுகிறார். (எசே. 1:3) அங்கே என்ற வார்த்தை, எசேக்கியேலுக்கு அந்தத் தரிசனம் எருசலேமில் இருந்தபோது அல்ல, சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனில் இருந்தபோதுதான் கிடைத்தது என்பதைக் காட்டுகிறது. * இதிலிருந்து எசேக்கியேல் என்ன புரிந்துகொண்டார்? அவர் சிறைபிடிக்கப்பட்டுப்போய் சாதாரண நிலையில் இருந்தாலும்... எருசலேம் மற்றும் அதன் ஆலயத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தாலும்... யெகோவாவிடமிருந்தும் அவருடைய வணக்கத்திலிருந்தும் அவர் பிரிக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொண்டார். அவர் பாபிலோனில் இருந்தபோது அந்தத் தரிசனம் கிடைத்ததால், தூய வணக்கத்தில் ஈடுபட தான் வாழ்கிற இடமோ தன்னுடைய சூழ்நிலையோ முக்கியமல்ல என்பதை எசேக்கியேல் புரிந்துகொண்டார். தன்னுடைய மனநிலையும் யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையும்தான் முக்கியம் என்பதைத் தெரிந்துகொண்டார்.

16. (அ) எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து நாம் என்ன ஆறுதலைப் பெறுகிறோம்? (ஆ) முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்ய எது உங்களைத் தூண்டுகிறது?

16 எசேக்கியேல் கற்றுக்கொண்ட இந்த உண்மை, இன்று நமக்கு அதிக ஆறுதலைத் தருகிறது. ஏனென்றால், முழு மனதோடு நாம் யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது, அவர் நமக்குப் பக்கத்திலேயே இருப்பார் என்ற வாக்குறுதியை இது தருகிறது. ஆம், நாம் எங்கு வாழ்ந்தாலும்... எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும்... எவ்வளவு வேதனையில் இருந்தாலும்... அவர் நம் பக்கத்திலேயே இருப்பார். (சங். 25:14; அப். 17:27) தன்னுடைய ஊழியர்கள் ஒவ்வொருவர்மீதும் யெகோவா மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுவதால், அவர்களைவிட்டு அவர் எளிதில் விலகுவதில்லை. (யாத். 34:6) யெகோவாவுடைய மாறாத அன்பைப் பெறுவதிலிருந்து எதுவும் நம்மைத் தடுக்க முடியாது. (சங். 100:5; ரோ. 8:35-39) அதோடு, யெகோவாவுடைய பரிசுத்தத்தையும் மகா வல்லமையையும் சித்தரிக்கிற இந்தப் பிரமிப்பூட்டும் தரிசனம், வணக்கத்தைப் பெற யெகோவா மட்டுமே தகுதியானவர் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. (வெளி. 4:9-11) தரிசனங்களைப் பயன்படுத்தி தன்னைப் பற்றியும் தன்னுடைய குணங்களைப் பற்றியும் சில முக்கியமான உண்மைகளைப் புரிய வைத்ததற்காக, நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க வேண்டும், இல்லையா? யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வது, அவரிடம் நெருங்கிப் போக நமக்கு உதவுகிறது. அதோடு, முழு இதயத்தோடும், முழு பலத்தோடும் அவரைப் புகழவும் அவருக்குச் சேவை செய்யவும் நம்மைத் தூண்டுகிறது.—லூக். 10:27.

யெகோவாவுடைய மாறாத அன்பைப் பெறுவதிலிருந்து எதுவுமே நம்மைத் தடுக்க முடியாது (பாரா 16)

17. அடுத்து வரும் அதிகாரங்களில் எந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?

17 ஆனால், எசேக்கியேலின் காலத்தில் தூய வணக்கம் கறைபடுத்தப்பட்டது, களங்கப்படுத்தப்பட்டது. எப்படி? அப்போது யெகோவா என்ன செய்தார்? அன்று நடந்த சம்பவங்கள் இன்று நமக்கு ஏன் முக்கியமானவையாக இருக்கின்றன? அடுத்து வரும் அதிகாரங்களில் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

^ பாரா. 5 எசேக்கியேல் புத்தகத்திலுள்ள இந்த ஜீவன்களைப் பற்றிய விவரிப்பு கடவுளின் பெயரை, அதாவது யெகோவா என்ற பெயரை, நமக்கு ஞாபகப்படுத்துகிறது. “ஆகும்படி செய்பவர்” என்பதே அந்தப் பெயரின் அர்த்தம் என நாம் புரிந்துகொள்கிறோம். அந்தப் பெயரின் ஒரு அம்சம் காட்டுகிறபடி, யெகோவாவினால் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தன்னுடைய படைப்புகளை எப்படி வேண்டுமானாலும் ஆக வைக்க முடியும்.—புதிய உலக மொழிபெயர்ப்பில் இணைப்பு A4-ஐப் பாருங்கள்.

^ பாரா. 13 நம்முடைய பிரசுரங்களில் இதுவரை யெகோவாவின் குணங்களில் கிட்டத்தட்ட 50 குணங்களைப் பற்றி விளக்கப்பட்டிருக்கின்றன.—யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில்யெகோவா தேவன்” என்ற தலைப்புக்குக் கீழே “யெகோவாவின் குணங்கள்” என்ற தலைப்பில் பாருங்கள்.

^ பாரா. 15 “வேறு எந்த வார்த்தையையும்விட, ‘அங்கே’ என்ற அந்த ஒரு வார்த்தையே எசேக்கியேல் எந்தளவு ஆச்சரியப்பட்டிருப்பார் என்பதைக் காட்டுகிறது. . . . கடவுள் அங்கே பாபிலோனில் இருக்கிறார்! இது அவருக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!” என்று ஒரு பைபிள் அறிஞர் சொல்கிறார்.