Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் பதில்களை மேம்படுத்துதல்

உங்கள் பதில்களை மேம்படுத்துதல்

படிப்பு 18

உங்கள் பதில்களை மேம்படுத்துதல்

1கிறிஸ்தவர்கள் அனைவரும் நல்ல பதில்களை அளிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “உங்கள் பேச்சு இனியதாகவும், சாரமுள்ளதாகவும் இருக்கட்டும். இங்ஙனம் ஒவ்வொருவருக்கும் எவ்வாறு பதில் அளிக்க வேண்டுமென அறிந்துகொள்வீர்கள்.” (கொலோ. 4:6, கத்.பை.) நம்முடைய பதில்களை மேம்படுத்த நாம் முயற்சிசெய்வது இயற்கையே. நன்றாக பதிலளிக்கையில், அது நமக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது: “மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!”—நீதி. 15:23.

2தனிப்பட்டவர்களாக உங்கள் பதில்களை மேம்படுத்துவதற்கானத் தேவையை உணருகிறீர்களா? சபை கூட்டங்களில் உங்களுடைய பங்கெடுப்பில் நீங்கள் முழுமையாக திருப்தியுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அல்லது ஏதாவது முன்னேற்றம் செய்யப்பட்டால், உங்களுக்கு அதிகமான மகிழ்ச்சியை அது உண்மையில் கொண்டுவரக்கூடுமா? வெளி ஊழியத்தில், நிலைமையை வித்தியாசமாக கையாண்டிருந்திருக்கலாம் என்பதாக நீங்கள் விரும்பிய சமயங்கள் இருக்கின்றனவா? இது நம் அனைவரின் விஷயத்திலும் உண்மையாக இருக்கிறது, ஆகவே நம்முடைய பதில்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஒன்றாகச் சேர்ந்து சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கிறது.

3சபை கூட்டங்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய பெரும்பாலான சபைகளில் காவற்கோபுர படிப்பில், சபை புத்தகப் படிப்பில் அல்லது தேவராஜ்ய ஊழியப் பள்ளி வாய்மொழி மறுபார்வையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிலர் எப்போதும் பதில்களோடு தயாராக இருப்பது கவனிக்கப்படுகிறது. இது ஒரு தற்செயல் நிகழ்ச்சி அல்ல. அவர்கள் வருடக்கணக்கான படிப்பிலிருந்தும் யெகோவாவின் மக்களோடு கொண்டிருக்கும் கூட்டுறவிலிருந்தும் பெற்றுக்கொள்வதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்; ஆனால் பெரும்பாலானவர்களின் விஷயத்தில், அப்போது தயார் செய்வதும்கூட முக்கிய காரணக்கூறாக இருக்கிறது. புதிதாக கூட்டுறவுகொள்கிறவர்களும்கூட முன்கூட்டியே பொருளைப் படிப்பதற்கு தீர்மானித்திருப்பதன் மூலம் நல்ல பதில்களை அளிக்கமுடியும்.—நீதி. 15:28.

4ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் முதல் ஆளாக நீங்கள் இருந்தால், நேரடியான பதிலை அளித்து கவனத்தை நிறுத்துவது பொதுவாக நல்லதாய் இருக்கிறது. ஆனால் எவராவது ஒருவர் ஏற்கெனவே பதிலளித்திருந்தால், கலந்தாலோசிப்பு அங்கே முடிந்துவிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதே கேள்விக்குக் கூடுதலான குறிப்புகளுக்காக, இந்தக் காரியங்களில் எதையாவது நீங்கள் செய்யலாம்: பதிலை விரித்துரைக்கலாம், பாராவிலுள்ள வேதவசனங்கள் எவ்விதமாக பதிலோடு சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன என்பதைக் காண்பிக்கலாம் அல்லது சிந்திக்கப்படும் விஷயம் எவ்விதமாக நம்முடைய சொந்த வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டலாம். பொருள் உலக நிலைமைகளை அல்லது பொய் மத பழக்கவழக்கங்களைப் பற்றியதாக இருந்தால், பாரா சொல்வதிலிருக்கும் உண்மையை உயர்த்திக்காண்பிக்கும் ஓர் அனுபவம் அல்லது உள்ளூர் நிலைமையைப் பற்றிய குறிப்பைச் சொல்லலாம். இது கலந்தாலோசிப்புக்கு அதிகத்தைக் கூட்டுகிறது.

5பதில்கள் சுருக்கமாகவும் குறிப்பாகவும் இருக்கையில் அவை பொதுவாக அதிக செல்வாக்குச் செலுத்துவதாயும் செவிசாய்ப்பவர்களின் மனதில் அதிக ஆழமாக பதிந்துவிடுவதாயும் இருக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் இப்படிப்பட்ட பதில்களே பரிந்துரைக்கப்படுகின்றன. எவராவது ஒருவர் ஒரு முழு பாராவிலுமுள்ள கருத்துக்களையும் தொடர்பின்றி எடுத்துரைப்பாரேயானால் எதுவும் மேலெழுந்து நிற்பதில்லை, செவிசாய்ப்பவர்கள் பொதுவாக கேள்விக்குத் திட்டவட்டமான ஒரு பதிலை அறியாதவர்களாக இருக்கின்றனர். மேலும், குறிப்புச்சொல்பவரின் சொந்த வார்த்தைகளிலிருக்கும் பதில்கள் பொதுவாக அதிக பயனுள்ளவையாக இருக்கின்றன. இம்முறையில் குறிப்புசொல்வது பதிலளிப்பவர் தகவலைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள உதவிசெய்கிறது, பயன்படுத்தப்படும் சொல்லமைப்பு அநேகமாக அதற்கு முன்பாக அவர்கள் கவனத்தைத் தப்பியக் கருத்துக்களைக் கிரகித்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்கிறது. ஊழியப் பள்ளியில் உங்கள் பேச்சுக்கள் இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவிசெய்கின்றன.

6பதில்களோடு தயாராக இருப்பதிலும்கூட நீங்கள் மேம்பட முடியுமா? இது முன்கூட்டி தயாரிப்பதை உட்படுத்துகிறது. ஆனால் பாரா வாசிக்கப்படுகையில் அல்லது மற்றவர்கள் குறிப்பு சொல்லிக்கொண்டிருக்கையில் அந்தத் தயாரிப்பைச் செய்யாதீர்கள், ஏனென்றால் கூட்டத்தின் அதிகமான நன்மைகளை நீங்கள் இழந்துவிடுவீர்கள். உங்கள் பதில்களை முன்கூட்டியே குறித்துவைப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். நீளமான சொற்றொடர்கள் அல்லது வாக்கியங்களுக்குப் பதிலாக முக்கிய வார்த்தைகளை மாத்திரமே நீங்கள் அடிக்கோடிட்டிருந்தால், அந்த முக்கிய வார்த்தைகளை விரைவாக நோட்டமிடுவதே உங்கள் மனதுக்குக் கருத்தைத் திரும்பக்கொண்டுவரும், நீங்கள் பதிலளிக்கத் தயாராயிருப்பீர்கள். ஒரு பாராவிலுள்ள கேள்வி “அ” மற்றும் “ஆ” என்பதாக பிரிக்கப்பட்டிருந்தால், பொருளின் எந்தப் பகுதி “அ”-விற்கு உரியது, எது “ஆ”-விற்கு உரியது என்பதன் சம்பந்தமாக மார்ஜினில் குறித்துக்கொள்வது, நடத்துபவரை முந்திக்கொண்டு குறிப்புகளைச் சொல்வதை தவிர்க்க உங்களுக்கு உதவிசெய்யும். பொருள் தயாரிக்கப்பட்ட கேள்விகளைக் கொண்டில்லாமல் இருந்தாலும், சபையார் பங்கெடுப்பு இருக்கையில், அப்பொழுதும்கூட முக்கிய குறிப்புகளென நீங்கள் கருதுகிறவற்றை குறித்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கிறது. இது இயற்கையாக குறிப்புச் சொல்வதை சாத்தியமாக்கி, இவ்விதமாக ஒரு விறுவிறுப்பான கலந்தாலோசிப்புக்கு வகைசெய்யும். கூட்டத்தில் ஒரு முறை பதிலளித்தப் பின்னர், மீதமுள்ளவற்றுக்கு பதில்சொல்வதை மற்றவர்களுக்கு விட்டுவிடலாம் என்று முடிவுசெய்து நிறுத்திக்கொண்டுவிடாதீர்கள். தாராளமாக குறிப்புச்சொல்ல மனமுள்ளவர்களாயிருங்கள்.

7சிலர், மற்றவர்கள் தன்னிலும் மேலாக குறிப்புச்சொல்லமுடியும் என்பதாக நினைத்து பதில்களைக் கொடுப்பதில் வெட்கி ஒதுங்குகிறவர்களாக இருக்கலாம். ஆனால் பங்கெடுப்பதற்கு நம்முடைய தனிப்பட்ட உத்தரவாதத்தை மதித்துணரும்படியாக பைபிள் நம்மைத் துரிதப்படுத்துகிறது. அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; . . . மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்.” (எபி. 10:23-25) பதிலளிப்பதன் மூலம் நாம் மற்றவர்களை அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவிவிடுகிறவர்களாக இருக்கிறோம், அவர்களுடைய இருதயங்களை எழுச்சிகொள்ளச்செய்து, அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். மேலும், நாம்தாமேயும் நன்மைகளைப் பெறுகிறோம், ஏனென்றால் கொடுப்பதிலிருக்கும் சந்தோஷத்தை அனுபவிக்கிறோம், ஆகவே தனிப்பட்ட ஊக்குவிப்பையும் பெற்றுக்கொள்கிறோம்.

8வெளி ஊழியத்தில் மறுப்புகளுக்குப் பதிலளித்தல். தனிப்பட்ட படிப்பிலும் கூட்டங்களில் ஆஜராயிருப்பதிலும் நீங்கள் ஒழுங்காக இருந்தால், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் உங்களுக்கு எந்தக் கஷ்டமுமில்லாதிருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியாமலிருந்தால், அதை வீட்டுக்காரரிடம் சொல்ல தயங்கவேண்டாம். பின்னர் தகவலைப் பெற்றுக்கொண்டு திரும்பிவருவதாகச் சொல்லவும். அந்த நபர் உண்மை மனதுடையவராக இருந்தால், நீங்கள் அவ்விதமாகச் செய்வதில் மகிழ்ச்சியடைவார்.

9இப்படிப்பட்ட கேள்விகளைத் தவிர, நீங்கள் சில சமயங்களில் மறுப்புகளை எதிர்ப்படலாம். அவற்றை எவ்வாறு கையாளுவீர்கள்? மறுப்புகளுக்குப் பதிலளிப்பதற்கு முன்பாக அந்த நபரின் சிந்தனையைப்பற்றி ஏதோவொன்றை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கிறது. அவருடைய மறுப்புக்குக் காரணம் என்ன என்பதாக நீங்கள் கேட்கலாம். உதாரணமாக, நீங்கள் கிறிஸ்துவை நம்புவதில்லை என்பதாக ஒரு நபர் கேள்விப்பட்டிருப்பதாக மறுப்புத்தெரிவிக்கலாம், ஆனால் உண்மையில் அவர் வெறுமனே திரித்துவக் கோட்பாட்டின் காரணமாக குழம்பிப்போயிருக்கிறார். அநேக மறுப்புகள் இப்படிப்பட்ட தவறான புரிந்துகொள்ளுதலின் விளைவாகவே இருக்கின்றன. ஒரு கலந்துரையாடலில் இறங்குவதற்கு முன்பாக முக்கிய பதங்களின் அர்த்தத்தைப்பற்றிய பரஸ்பர புரிந்துகொள்ளுதலுக்கு வருவது முக்கியமாகும். உண்மையில், ஒருவேளை இது மறுப்புக்குப் பதிலளிப்பதாக இருந்து, அந்தக் குறிப்பைப் பற்றிய கூடுதலான கலந்துரையாடலை அவசியமற்றதாக்கிவிடும்.

10மறுப்புகள் எழுப்பப்படுகையில், அந்த விஷயம் உங்களை எதிராளிகளாக்குவதைவிட, சாத்தியமாயிருக்கையில், பரஸ்பர அக்கறைக்குரியதாக அதைக் கையாளுவதும்கூட நல்லது. ஆகவே ஒரு மறுப்பை விரும்பத்தகாததாக அல்லது வெறுப்பூட்டுவதாக கருதுவதற்குப் பதிலாக, வீட்டுக்காரர் உண்மையில் அக்கறையுடையவராய் இருக்கும் ஒரு குறிப்பாக மறுப்பைக் கருதுங்கள். இதை மனதில் கொண்டவர்களாக, அவர் இந்த விஷயத்தைக் கொண்டுவந்தது குறித்து நீங்கள் சந்தோஷப்படுவதாக அவருக்குச் சொல்லலாம். சம்பாஷணைத் தொடருவதற்கு திறவுகோலாக, பைபிள் சத்தியங்களை ஏற்றுக்கொள்வதற்கு அந்த நபரின் மனதை திறக்கக்கூடிய ஒன்றாக கருதுங்கள். நீங்கள் மறுப்புகளைச் சமாளிப்பதைத் தேவைப்படுத்தும் நிலைமைகளை உங்கள் பேச்சு அமைப்புகளில் சேர்த்துக்கொண்டு, இதை ஊழியப் பள்ளியில் ஏன் பழகிக்கொள்ளக்கூடாது?

11சில சமயங்களில் அக்கறையுள்ள ஒரு நபரோடு நீங்கள் பேசிக்கொண்டிருக்கையில், உங்கள் கலந்துரையாடலை தடைசெய்வதற்காக வேறொருவர் மறுப்புகளை எழுப்பலாம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மெய்ப்பிக்கும் பொறுப்பை மறுப்பு சொல்கிறவரிடமாக மாற்றிவிடலாம். இயேசு கிறிஸ்து தம்முடைய பிரசங்கிப்போடு குறுக்கிட முயற்சிசெய்த எதிராளிகளின் வாயடக்க எதிர்க் கேள்விகளைப் பயன்படுத்தினார். (மத். 22:41-46) ஆகவே ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து உறுதியாக சொல்பவர்மீதுதானே சரியாக மெய்ப்பிக்கும் பொறுப்பு இருப்பதை மனதில் கொள்வது நல்லது. உதாரணமாக, ஒரு வீட்டுக்காரர் உங்களிடம், “நீங்கள் திரித்துவத்தை நம்புவதில்லை,” என்பதாக, இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்குத் தேவை என்று பொருள்படும் ஒரு தொனியில் சொல்வாரேயானால், நீங்கள் இவ்விதமாகச் சொல்லலாம்: “பைபிள் போதிக்கும் அனைத்தையும் நான் நம்புகிறேன். நாம் ஏன் அந்தக் கோட்பாட்டை நம்ப வேண்டும் என்பதை பைபிளிலிருந்து நீங்கள் தயவாக எனக்குக் காட்டுவீர்களா?” அப்பொழுது அவர் சத்தியமென உரிமைபாராட்டுவதை ஆதரிப்பதற்கு மெய்ப்பிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்டவரின்மீது வருகிறது.

12வேதாகமத்தை ஏற்றுக்கொள்வதாக உரிமைபாராட்டும் எவருக்கும் அதிக அதிகாரத்துவமுள்ள பதில் நேரடியாக கடவுளுடைய சொந்த வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. தனிப்பட்டவிதமாக நாம் சொல்லக்கூடிய எதைக்காட்டிலும் அது மிக அதிகமாக சொல்வன்மையுள்ளதாக இருக்கிறது. நிச்சயமாகவே, பதில் அளிக்கையில், உங்களை கேள்வி கேட்பவரின் மனநிலை என்னவாக இருந்தாலும் எப்போதும் அமைதியாக இருந்து மரியாதை காண்பியுங்கள். இது கடவுளுடைய ஊழியருக்குத் தகுதியாயிருக்கிறது.

13பைபிள் படிப்புகளில். பைபிள் படிப்புகளில் பொதுவாக காரியங்களின்பேரில் நியாயமாகச் சிந்திப்பதற்கு உதவுகிற ஒரு சிநேகமான, தளர்த்தப்பட்ட சூழ்நிலை இருக்கிறது. ஆகவே ஒரு மாணாக்கரின் கேள்விக்குப் பதிலளித்த பின்னர், அவருக்கு அது திருப்தியாக இருந்ததா என்று கேட்பது ஒரு நல்ல பழக்கமாகும். ஒருவேளை சில குறிப்புகள் இன்னும் அவருடைய மனதில் தெளிவில்லாமல் இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு பதிலைக் குறித்து நீங்கள் நிச்சயமாயில்லையென்றால், அவருக்காக ஆராய்ந்து பார்க்க முன்வரவும். கூடுதலான உதவி தேவைப்பட்டால், அதிக அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபியிடம் நீங்கள் கேட்கலாம். பைபிள் செய்தியினுள் ஆழ்ந்த ஓர் உட்பார்வையை பெற்றுக்கொள்ள நீங்கள் ஒருவருக்கு உதவும்போது, எத்தியோப்பியனுடைய கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் சுவிசேஷகனாகிய பிலிப்பு அவருக்கு உதவிசெய்தது போலவே, ஜீவனுக்குப் போகும் வழியில் அவரை துவக்கிவைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.—அப். 8:26-39.

14காலப்போக்கில் ஒரு பைபிள் படிப்பின்போது எழுப்பப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்காமல், ஒருசிலவற்றை மேலுமாக நீங்கள் படிக்கையில் சிந்திப்பதற்காக சேர்த்துவைப்பது மேலானது. மேலும், மாணாக்கரின் சொந்த முன்னேற்றத்தை முன்னிட்டு, தானாகவே ஆராய்ச்சி செய்வதன் மூலம் எவ்விதமாக பதில்களை கண்டுபிடிக்கலாம் என்பதைக் காட்டுவது நல்லது. சொஸைட்டியின் பிரசுரங்களுக்குரிய அகரவரிசை அட்டவணைகள் (indexes) போன்ற பைபிள் படிப்பு உதவி புத்தகங்களை அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தில் ஒரு பொருத்தமான அதிகாரத்தை எடுத்துப்பார்க்கும்படியாக சொல்லலாம். பின்னர் அவர் என்ன தகவலை கண்டுபிடித்தார் எனவும் அதை புரிந்துகொண்டதைப் பற்றியும் கேட்கலாம். வெறுமனே அவருடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பதை அல்ல, அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சியை மனதில் கொண்டிருங்கள்.

15அதிகாரிகளுக்கு முன்பாக அழைக்கப்படுகையில். துன்புறுத்தல் விஷயத்தைப்பற்றி பேசுகையில், அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்: “ஆண்டவராகிய கிறிஸ்து பரிசுத்தர் என உங்கள் உள்ளத்தில் போற்றுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு விளக்கங்கூறும்படி யாராவது கேட்டால் தக்க விடை பகர எப்போதும் தயாராய் இருங்கள். ஆனால், விளக்கங்கூறும்போது சாந்தத்தோடும் மரியாதையோடும் பேசுங்கள்.” (1 இராய. 3:14, 16அ, கத்.பை.) நாம் என்ன நம்புகிறோம் மற்றும் ஏன் அந்த விதமாக நம்புகிறோம் என்று நம்மை கேட்க அதிகாரமுள்ள நீதிமன்றங்கள் அல்லது சட்டத்தின் பிரதிநிதிகளுக்கு முன்பாக விளக்கங்கூறும்படி நாம் அழைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. “ஆண்டவராகிய கிறிஸ்து பரிசுத்தர் என உங்கள் உள்ளத்தில் போற்றுங்கள்,” என்று அப்போஸ்தலன் புத்தி சொல்கிறார். உங்கள் இருதயத்தின் ஆழத்திலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மிக உயர்ந்த மரியாதையை, பரிசுத்தமான ஒரு ஸ்தானத்தை, புனிதத்தன்மை கெடுக்கப்படக்கூடாத ஒன்றை அளிப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது கவலைப்படுவதற்கு எந்தக் காரணமுமிராது. பூமி முழுவதன்மீதும் ராஜாவாக கடவுளால் அபிஷேகம்பண்ணப்பட்டிருப்பவரை பிரியப்படுத்தினால், உயர்ந்த ஸ்தானங்களிலிருக்கும் மனிதர்கள் எவ்விதமாக பிரதிபலிக்கின்றனர் என்பதைப் பற்றி மனக்குழப்பமடைவதற்கு எந்தக் காரணமுமில்லை.

16இருந்தபோதிலும், ரோமர் 13:1-7-ல் குறிப்பிடப்பட்டுள்ள புத்திமதிக்கு இசைவாக, அதிகாரத்திலிருப்பவர்களிடமாக மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள். உங்களைக் கேள்விகேட்கிறவர் தவறான உள்நோக்கங்களை உங்கள்மீது சுமத்துவதாக தோன்றினாலும் அல்லது யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதியாகத் தன்னை வெளிப்படுத்தினாலும் கடுமையாக பதில் அளித்து பழிவாங்கவேண்டாம். (ரோ. 12:17, 21; 1 பே. 2:21-23) நீங்கள் ஒரு சாட்சிகொடுக்கவே அங்கிருக்கிறீர்கள் என்பதை மனதில் வையுங்கள். அந்த அதிகாரிகளில் ஒருவர் ஒருவேளை பிரதிபலிக்கக்கூடுமா? குறைந்தபட்சம் பிரசங்க வேலையிடமாக அதிக சாதகமான மனநிலையில் அது விளைவடையக்கூடுமா? உங்கள் நடத்தையும் பேச்சும் சத்தியத்தின் வழிக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.—மத். 10:18-20.

17மிகக் குறைவானதையே சொல்வது ஞானமாக இருக்கும் சில சமயங்களும்கூட இருக்கலாம். அப்போஸ்தலன் பவுல் வழக்குவிசாரணையின்போது செய்தது போலவே மெய்ப்பிக்கும் பொறுப்பை எதிராளியின்மீது போட்டுவிட வெறுமனே நீங்கள் விரும்பலாம். (அப். 24:10-13) அல்லது மெளனமாக இருந்துவிடக்கூட தீர்மானிக்கலாம். தங்கள் கேள்விகளுக்குப் பதிலைப்பெறுவதற்கு எந்த உண்மையான ஆவலையும் கொண்டில்லாமல், பொல்லாங்கானவர்கள் உங்களை இடறச்செய்யவோ கேலிசெய்யவோ நாடும்போது இதுவே மிகச் சிறந்த போக்காக இருக்கும். (லூக். 23:8, 9) அல்லது உங்கள் மூலமாக உங்கள் உடன் சாட்சிகளுக்குத் தீங்கைக்கொண்டுவர அவர்கள் நாடும் காரணத்தால் மெளனமாக இருந்துவிடுவதே ஞானமுள்ளது என்பதாக நீங்கள் கருதலாம். சங்கீதக்காரன் தாவீது சொன்னார்: “துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன்.” (சங். 39:1, 2) குறிப்பாக உண்மை கிறிஸ்தவத்துக்குப் பயங்கரமான எதிர்ப்பு இருக்கும் தேசங்களில் ‘மவுனமாயிருப்பதற்குரிய காலத்திற்கும்,’ ‘பேசுவதற்குரிய காலத்திற்கும்’ இடையே வித்தியாசம் காணமுடிகிறவர்களாய் இருப்பதற்கு அவசியம் இருக்கிறது.—பிர. 3:7.

18கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு யெகோவாவின் ஊழியர்களுக்கிருக்கும் திறமையைக் குறித்து கருத்துத்தெரிவிப்பதாய், ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாள் சொல்வதற்கு இதைக் கொண்டிருந்தது: “ஒரு சாட்சி செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் பின்னால் வேதப்பூர்வமான ஒரு காரணமிருக்கிறது. ஆம், பைபிள் முழுவதுமாக, சொல்லர்த்தமாக மற்றும் பிரத்தியேகமாக உண்மையானது என்பதை அங்கீகரிப்பது அவர்களுடைய அடிப்படையான ஒரு கொள்கையாகும். இதில்தானே அவர்களுடைய இரண்டாவது பலமிருப்பதாக தெரிகிறது; அவர்களால் எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்க முடியும்.” அது கடவுளுடைய வார்த்தையாகும், மேலும் அதன்மீது நாம் சார்ந்திருப்பது மக்களைக் குழப்பமடையச்செய்யும் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமையைச் சாத்தியமாக்குகிறது. எல்லா பாராட்டும் கனமும் அவருக்கே செல்ல வேண்டும். ஆனால் நம்முடைய பதில்களை மேம்படுத்துவதற்கு நாடுவதன் மூலம் நாம் யெகோவாவுக்கு அதிகமான மகிமையை கொண்டுவருகிறோம், நம்முடைய சொந்த சந்தோஷத்தை அதிகரித்துக்கொள்கிறோம், மற்றவர்களைக் கடவுளோடு சமாதானமான வழிக்குள் வழிநடத்திச்செல்கிறோம்.

[கேள்விகள்]

1, 2. நல்ல பதில்களை அளிக்க நாம் அனைவரும் ஏன் ஊக்கமாக முயற்சிசெய்ய வேண்டும்?

3, 4. ஒரு கூட்டத்தின்போது ஒரே கேள்விக்கு எவ்விதமாக பல்வேறு குறிப்புகள் கொடுக்கப்படலாம்?

5. சுருக்கமாகவும் ஒருவருடைய சொந்த வார்த்தைகளிலும் பதிலளிப்பது ஏன் நல்லது?

6. கேள்வி கேட்கப்படுகையில் நம்முடைய பதில்களோடு தயாராயிருப்பதன் சம்பந்தமாக எவ்வாறு முன்னேற்றஞ்செய்யலாம்?

7. கூட்டங்களில் குறிப்புசொல்வதற்கு உத்தரவாதத்தை ஏன் நாம் அனைவரும் உணர வேண்டும்?

8-12. வெளி ஊழியத்தில் மறுப்புகளை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி ஒருசில ஆலோசனைகளைக் கொடுங்கள்.

13, 14. வீட்டு பைபிள் படிப்புகளில், மாணாக்கரிடமிருந்து வரும் கேள்விகள் எவ்வாறு கையாளப்படலாம்?

15-18.அதிகாரிகளிடத்தில் கேள்விகளுக்குப் பதிலளிக்க அழைக்கப்படுகையில் நாம் என்ன மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்?