Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எவ்விதமாக வாசித்து நினைவில் வைப்பது

எவ்விதமாக வாசித்து நினைவில் வைப்பது

படிப்பு 4

எவ்விதமாக வாசித்து நினைவில் வைப்பது

1வெறுமனே நேரப்போக்குக்காக, தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக வாசிப்பவர்களுக்கு அவர்கள் வாசிப்பதை நினைவில் வைப்பது முக்கியத்துவமற்றதாக இருக்கிறது. ஆனால் ஒரு வாழ்க்கைத்தொழிலுக்காக படிக்கும் ஒருவருக்கு, தன் பாடப்புத்தகங்களில் தான் வாசிப்பதை நினைவில் வைப்பது அத்தியாவசியமாகும். ஒரு தேர்வில் தேர்ச்சிபெற்று தெரிந்துகொண்ட வேலையில் நுழைவது அதன்மீது சார்ந்திருக்கிறது. இருப்பினும் கிறிஸ்தவ ஊழியர், தற்செயலாகவோ கருத்தூன்றியோ வாசித்தாலும்சரி, தான் வாசிப்பதை நினைவில் வைப்பதற்கு அதிகமான தேவை இருக்கிறது. யெகோவாவிடம் நெருங்கிவருவதும், யெகோவாவுக்குத் துதியுண்டாக தன்னுடைய ஊழியத்தை முன்னேற்றுவிப்பதும் அவருடைய நோக்கமாகும்.—உபா. 17:19, 20.

2ஒரு கிறிஸ்தவனின் முக்கிய வாசிப்புப் பொருள் பைபிளும் பைபிளைப் புரிந்துகொள்வதில் உண்மையான உதவியை அளிக்கும் பிரசுரங்களுமே. பைபிளில் காணப்படும் அறிவுதானே நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார். இந்த வாசிப்புதானே பலன்தரத்தக்க ஊழியராவதற்கு அவரை ஆயத்தம் செய்கிறது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் இந்த வாசிப்பில்தானே நாம் முக்கியமாக அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம்.

3நாம் வாசிப்பின் மூலம் தகவலை மனதிற்குள் எடுத்துக்கொள்வது, வயிற்றுக்குள் உணவை கொண்டுசெல்வதற்கு ஒப்பிடப்படலாம். இரண்டு விஷயங்களிலுமே நாம் தேர்ந்தெடுக்கும் திறனுள்ளவர்களாக இருக்க வேண்டும். சாப்பிடுகிறவர், வெறுமனே தன் பசியார்வத்தை திருப்திசெய்துகொள்கையிலும்கூட, ஜீரணிக்கமுடியாததை அல்லது உடலுக்கு உண்மையான எந்த நன்மையையும் அளிக்காததை அல்லது இன்னும் மோசமாக தனக்கு நஞ்சூட்டக்கூடியதாக இருக்கும் எதையும் உட்கொள்வது முட்டாள்தனமாக இருக்கிறது. மிகச் சிறந்த பலன்களுக்கு, நீடித்த நன்மைகளுக்கு, உணவு எளிதில் ஜீரணிக்கமுடிகிறதாய் இருந்து நம்முடைய உடல்களால் உறிஞ்சிக்கொள்ளப்பட வேண்டும்.

4அதேவிதமாகத்தான் நம் வாசிப்பும்கூட இருக்கிறது. அது தற்செயலாகவோ கருத்தூன்றி வாசிப்பதாகவோ இருந்தாலும்சரி, நாம் உட்கொள்வது மனதின்பிரகாரமாக ஜீரணிக்கமுடிகிறதாயும் நம்முடைய மனங்களுக்கு நீடித்த நன்மை பயக்கும் ஒன்றாயும் இருத்தல் வேண்டும். உண்மையல்லாத, கடவுள் நம்பிக்கையில்லாத அல்லது ஒழுக்கக்கேடாக இருந்து, ஆகையால் ஆவிக்குரிய அஜீரணத்தை உண்டுபண்ணுகிறவற்றால் மனதை போஷிப்பது ஞானமற்றதாய் இருப்பது தெளிவாக இருக்கிறது. (பிலி. 4:8) பிரயோஜனமில்லாத பொருளை வாசித்து ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? சாப்பிடுவதில் தேர்ந்தெடுக்கும் திறனுள்ளவர்களாக இருப்பது போலவே நாம் வாசிப்பதிலும் இருக்க வேண்டும்.

5தனிப்பட்ட வாசிப்புக்காக அட்டவணை. வாசிப்பதற்கு சரியான வகையான பொருளை தேர்ந்தெடுத்தப் பிறகு, நீங்கள் அடுத்த படியை எடுப்பது அவசியமாகும். இது வாசிப்பதற்கு உங்களுடைய குறிப்பிட்ட வாழ்க்கை மாதிரியினுள் பொருந்தக்கூடிய ஓர் அட்டவணையை நிர்மாணிப்பதாகும். வாசிப்பதற்காக நீங்கள் திட்டவட்டமான நாட்களை அல்லது மாலைப்பொழுதுகளை தனியே ஒதுக்கிவைக்கத் தவறினால், உங்கள் முயற்சிகள் மிகவும் ஒழுங்கற்றதாயிருப்பதன் காரணமாக, பெரும்பாலும் அவை வெற்றிகரமாயிராது.—அப். 17:11.

6கருத்தூன்றிய வாசிப்பு, போதுமான நேரத்தையும் ஆராயப்படும் பொருளை ஆழ்ந்து சிந்திப்பதற்கு சாதகமான சூழ்நிலைகளையும் தேவைப்படுத்துகிறது. ஆனால் உங்கள் எல்லா வாசிப்புமே நீடித்த படிப்பு காலங்களில் செய்யப்படுவதாய் இருக்காது. கொஞ்சம் வாசிப்பதற்காக ஒழுங்காக ஒவ்வொரு நாளும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களை உங்களால் ஒதுக்கிவைக்க முடிந்தாலும்கூட, நீங்கள் எவ்வளவு சாதிக்கமுடியும் என்பதைக் குறித்து ஆச்சரியப்படுவீர்கள். சில ஆட்கள் இந்த வாசிப்பை அதிகாலையில் அல்லது இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் செய்கின்றனர். மற்றவர்கள் உலகப்பிரகாரமான வேலை செய்யுமிடத்துக்கு அல்லது பள்ளிக்கு போகிற வழியில் பொது போக்குவரத்தில் பயணம்செய்கையில் அல்லது தங்கள் மதிய உணவு வேளையில் வாசிக்கின்றனர். சில வீடுகளில், ஒவ்வொரு நாளும் ஓர் உணவுக்குப் பின் அல்லது படுக்கைக்குச் செல்வதற்குச் சற்றுமுன் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் முழு குடும்பமும் ஒன்றாகச் சேர்ந்து வாசிக்கின்றனர். ஒழுங்கானமுறையில், ஒவ்வொரு நாளும் கொஞ்சம் வாசிப்பது நல்ல பலன்களை உண்டுபண்ணுகிறது.

7உங்கள் தனிப்பட்ட அட்டவணை, பைபிளைத்தானேயும் வாசிப்பதற்கு நேரத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆரம்பம் முதல் முடிவுவரையாக அதை வாசிப்பது அதிக மதிப்புள்ளதாயிருக்கிறது. இதை ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களை அல்லது பக்கங்களை வாசிப்பதன் மூலம் செய்துமுடிக்க முடியும். இருப்பினும் வாசிப்பதில் உங்கள் இலக்கு வெறுமனே பொருளை வாசித்து முடிப்பதாக ஒருபோதுமிருக்கக்கூடாது, ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளும் நோக்கத்தோடு அனைத்தையும் உள்ளிட்ட நோக்குநிலையைப் பெறுவதாகவே இருக்க வேண்டும். அது என்ன சொல்கிறது என்பதை ஆழ்ந்து யோசிக்க நேரமெடுத்துக்கொள்ளுங்கள். பைபிளை வாசிக்கையில் எடுப்பதற்கிருக்கும் மிகச் சிறந்த ஆவிக்குரிய உணவில் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள் என்பதைக்குறித்து எப்பொழுதும் நம்பிக்கையாக இருக்கலாம்.

8 காவற்கோபுர படிப்பிலும் மற்ற சபை கூட்டங்களிலும் சிந்திக்கப்படவிருக்கும் பொருளைத் தயாரிக்க வாசிப்பதற்கும்கூட நேரம் தேவையாயிருக்கிறது. கூட்டங்களில் குறிப்புசொல்வதை மனதில்கொண்டிருப்பது நல்லது, ஆனால் பதில்களைக் கண்டுபிடிப்பதையே உங்களுடைய முக்கிய நோக்கமாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். மாறாக, நீங்கள் வாசிப்பதைப் புரிந்துகொள்ளவும் அது எவ்வாறு உங்கள் சொந்த வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை சிந்திக்கவும் நாடுங்கள்.

9அடுத்து, சபை வாராந்தர படிப்பில் பயன்படுத்தப்படுகிறவை அல்லாத மற்ற காவற்கோபுர கட்டுரைகளும் இருக்கின்றன. விழித்தெழு! பத்திரிகையும்கூட அதன் பக்கங்களில் மிக அதிகளவான அறிவை வளர்க்கும் பொருளை அளிக்கிறது. மேலும் உங்களுடைய சொந்த மொழியில் சொஸைட்டியின் பழைய பிரசுரங்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா? பொருளை வாசிப்பதற்கு நீங்கள் நேரத்தை ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்கு, உங்களுக்கு ஆசீர்வாதம் காத்திருக்கிறது. ஒருவருடைய ஆவிக்குரிய வளர்ச்சிவேகம், பேரளவில் ஒருவருடைய வாசிப்பு பழக்கங்களில் ஒழுங்கோடும் தரத்தோடும் தொடர்புடையதாயிருக்கிறது.

10நினைவாற்றலுக்கு உபகரணங்கள். வாசிப்பதிலிருந்து முழுமையாக பயனடைய அதை நாம் நினைவில் வைப்பது அவசியமாகும். மோசமான நினைவாற்றல் தங்களுக்கிருப்பதால், தங்களால் நினைவில் வைக்க முடிவதில்லை என்பதாக அடிக்கடி மக்கள் சொல்வர். இருப்பினும் அநேகருடைய விஷயத்தில் அது வெறும் பயிற்றுவிக்கப்படாத அல்லது வேலைசெய்யாத நினைவாற்றலாக இருக்கக்கூடும். நாம் செய்யும் வாசிப்பிலிருந்து மிக அதிகத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிசெய்வது ஞானமான போக்காகும். வாசிக்கப்பட்ட பொருள் வேகமாக மறக்கப்பட்டுபோனால் மிகுதியான நன்மைகள் இழக்கப்பட்டுவிடும். நினைவில் வைக்கும்பொருட்டு எவ்விதமாக வாசிப்பது என்பதை நாம் கற்றுக்கொள்வது அவசியமாகும். அனுபவமுள்ள வாசகர்களுக்கு நல்ல பயனை அளித்திருக்கும் அநேக ஆலோசனைகள் இருக்கின்றன. உங்களுக்கு அவை உதவலாம்.

11நீங்கள் வாசிக்கையில், தனித்தனியாக வார்த்தைகளை அல்லாமல் சொற்றொடர்களை அல்லது வார்த்தை தொகுதிகளை வாசிக்க முயற்சிசெய்யுங்கள். இது வேகமாக வாசிப்பதை சாத்தியமாக்கி வார்த்தைகளோடு போராடிக்கொண்டிருப்பதற்கு பதிலாக கருத்துக்களை கிரகித்துக்கொள்ள உங்களுக்கு உதவிசெய்யும். வழக்கமாகச் செய்யப்படும் வாசிப்பில், நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும்போது வார்த்தைகளை வாய்விட்டு சொல்லவோ உங்கள் உதடுகளை அசைக்கவோ வேண்டாம். முக்கியமான ஒரு கருத்தை மனதில் பதியவைப்பதற்காக இருந்தாலொழிய மறுபடியுமாக வாசிப்பதற்கு பின்னால் செல்வதை பழக்கமாக்கிக்கொள்ளாதீர்கள். நிச்சயமாகவே, முக்கியத்துவம்வாய்ந்த சிக்கலான பொருளுக்கு சரியான கருத்தைப் பெற்றுக்கொள்வதை நிச்சயப்படுத்திக்கொள்ள நீங்கள் வேகத்தைக் குறைப்பது அவசியமாகும். சப்தமாகவோ தாழ்வான குரலிலோகூட வாசிக்க விரும்பலாம். (சங். 1:2, NW) உதாரணமாக சங்கீதமும் நீதிமொழிகளும் வேகமாக வாசிப்பதற்கு அல்ல, தியானிப்பதற்கே எழுதப்பட்டன.—சங். 77:11, 12.

12கையில் ஒரு பென்சிலை வைத்துக்கொண்டு, முக்கிய வார்த்தைகளையும் மற்றபடி மறுபடியுமாக நீங்கள் வாசிக்க விரும்பும் விசேஷித்த குறிப்புகளையும் அடிக்கோடிட்டுக்கொண்டு வாசிப்பதும்கூட உங்களுக்கு உதவியாக இருக்கும். இருப்பினும் அடிக்கோடிடுதல் மிகக் குறைவாகவே செய்யப்பட வேண்டும், ஏனென்றால் அளவுக்கு அதிகமாக செய்யப்பட்டால், முக்கிய குறிப்புகளை தனிப்படுத்தும் நோக்கத்தை அது தோல்வியுறச்செய்யும். குறிப்பாக பயனுள்ள ஏதோவொரு விளக்கத்தை அல்லது வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஏதோவொரு பொதுவான ஆட்சேபணையை எதிர்ப்படுவதற்கு பயன்படுத்தப்படக்கூடிய ஒரு விவாதத்தை நீங்கள் வாசிக்க நேரிடும்போது, உங்கள் புத்தகத்தின் பின்புறத்தில் பக்கம் மற்றும் பாராவை குறித்துவைப்பது பிரயோஜனமாக இருக்கும். பின்னர் தேவைப்படுகையில் அதை வேகமாக கண்டுபிடித்துவிடலாம். ஒரு புத்தகம் உங்களுடைய சொந்த உடைமையாக இருந்தாலொழிய அதில் ஒருபோதும் குறிக்காதீர்கள்.

13ஒரு கட்டுரையை அல்லது ஒரு புத்தகத்தை நிறுத்தமில்லாமலும், சிந்தனைசெய்யாமலும், தலைப்புப் பொருளின்பேரில் ஏற்கெனவே நீங்கள் அறிந்துள்ள உண்மைகளோடு தகவலை ஒப்பிட்டுப்பார்க்காமலும் வெறுமனே முழுவதுமாக வாசித்துவிடமுடியாது—முக்கியமான குறிப்புகளை நினைவில் வைக்க நீங்கள் உண்மையில் விரும்பினால் அவ்விதமாகச் செய்யமுடியாது. அளிக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவாகக் கொடுக்கப்படும் காரணங்களையும் விவாதங்களையும் கவனத்தில்கொண்டு நீங்கள் வாசிப்பதை அலசிப்பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். மேலுமாக, உங்கள் வாழ்க்கைக்குப் பொருந்துகின்றதும், அன்றாட வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும் நியமங்களைக் கவனிக்க விழிப்பாயிருங்கள். அவற்றை எவ்வாறு பொருத்தலாம் என்பதைச் சிந்திக்க இடையில் சிறிது நிறுத்துங்கள்.

14சொஸைட்டியின் பவுண்ட் புத்தகங்களில் ஒன்றை கருத்தூன்றி வாசிக்கையில், முதலில் புத்தகத்தின் பெயரையும் பொருளடக்கத்தின் தர்க்கரீதியான வரிசைமுறையையும் சிந்திப்பது அடிக்கடி பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. இது அனைத்தையும் உள்ளிட்டத் தலைப்பை உங்கள் மனதில் பதியவைக்கும். நீங்கள் பத்திரிகையில் ஒரு கட்டுரையை அல்லது புத்தகத்தில் ஓர் அதிகாரத்தை வாசிக்க தயாராகையில், முதலில் பல்வேறு உபதலைப்புகளையும் பாருங்கள். தலைப்பு படிப்படியாக எந்த வரிசைமுறையில் விரிவுபடுத்தப்படும் என்பதை இவை காண்பிக்கும். ஒவ்வொரு பாராவின் ஆரம்பத்திலும் பொதுவாக காணப்படும் கருத்துத் தொடர்களைக் கவனிக்க விழிப்பாயிருங்கள். அநேகமாக பாரா எதைப்பற்றியது என்பதை அது இரத்தினச்சுருக்கமாக உங்களுக்குச் சொல்லும். நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் தலைப்புப் பொருளின்பேரில் அனைத்தையும் உள்ளிட்ட நோக்கைப் பெறுவதில் கவனத்தை ஊன்றவையுங்கள்.

15மற்றொரு ஆலோசனை நீங்கள் வாசிப்பதை கற்பனைசெய்துபார்க்க, நினைவில் வைக்க ஓர் உபகரணமாக மனக்காட்சிகளை உருவாக்கிக்கொள்ள முயற்சிப்பதாகும். கற்பனையில் கதாபாத்திரங்களையும் பின்னணியையும் பாருங்கள், சப்தங்களையும் குரல்களையும் கேளுங்கள், நறுமணங்களை நுகர்ந்துபாருங்கள். உணவையும் பானத்தையும் ருசித்துப்பாருங்கள், நிலைமையின் சந்தோஷத்தில் அல்லது துயரத்தில் பங்கெடுங்கள். வருணிக்கப்படும் காட்சியில் உங்களை வைத்துப்பார்க்க முயற்சிசெய்யுங்கள். பைபிள் பதிவை தெளிவாக மறுபடியும் உருவாக்குவதற்கு ஒவ்வொரு உணர்வையும் கற்பனையில் பங்குகொள்ள செய்யலாம். பைபிள் வரலாற்றின் பகுதிகள் இவ்விதமாக அதிக எளிதில் மனப்பாடம் செய்யப்படலாம்.

16அதிகாரத்தின் முடிவுக்கு வருகையில் இறுதியாக சுருக்கமாக மனதில் ஒரு மறுபார்வையைக் கொண்டிருங்கள். பின்னர் உங்கள் மனதிலுள்ள குறிப்புத்தாளை எழுதப்பட்ட பொருளோடு மறுபடியும் ஒப்பிட்டுப்பாருங்கள்.

17கூடுமானால், அவை மனதைவிட்டு நீங்காதிருக்கும்போதே நீங்கள் வாசித்த குறிப்புகளை எவராவது ஒருவருடன் கலந்துபேசுங்கள். வாய்விட்டு சொல்வது அவற்றை உங்கள் மனதில் ஆழமாக பதிக்கிறது, அதே சமயத்தில் அடுத்த நபர் பொருளின்பேரில் உங்கள் அறிவுவளத்தோடு அதிகத்தைக் கூட்டக்கூடியவராகவும் இருக்கலாம். நடைமுறையில் பயனுள்ள வெளி ஊழிய குறிப்புகள் எதையாவது நீங்கள் கண்டுபிடித்தால், கூடியவரையில் விரைவில் உங்கள் பிரசங்க ஊழியத்தில் அவற்றை பயன்படுத்துங்கள். இதுவும்கூட பொருளை உங்கள் நினைவில் பதியவைத்துவிடும்.

18பலன்தரத்தக்க வாசிப்பின் மதிப்பு. வாசிப்பது நேரடியாக நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது. நாம் செய்யும் வகையான வேலை, நாம் வளர்த்துக்கொள்ளும் திறமைகள், வாழ்க்கையை நாம் அனுபவிப்பது, நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி ஆகிய அனைத்துமே நம்முடைய வாசிக்கும் திறமையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. வாசிக்கும் இந்தத் திறமையின்றி, ஒருவர் கல்வி மற்றும் அனுபவத்தின் வளப்பத்தில் அதிகம் மறுக்கப்படுகிறார். பெற்றோர் வீட்டில் ஒழுங்கான ஒரு வாசிப்பு திட்டத்தின் மூலமாக தங்கள் பிள்ளைகள் வாசிப்பதற்கு அவர்களை பயிற்றுவிக்க உதவலாம். அவ்வப்போது சப்தமாக வாசிக்கும்படியாக உங்கள் பிள்ளைகளை அழைப்பது நல்லதாக இருக்கும். உதாரணமாக தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் சிறுபுத்தகத்திலிருந்து அந்நாளுக்குரிய வசனத்தையும் குறிப்புகளையும் வாசிக்கச் சொல்லலாம். நீங்கள் சரளமாக வாசிப்பவராக இல்லையென்றால், ஒவ்வொரு நாளும் பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்களுக்கு வாசிக்கப் பழகிக்கொள்வது உபயோகமுள்ளதாக இருக்கும். ஒருசில மாதங்களில் நீங்கள் மனநிறைவளிக்கும் விளைவுகளை அனுபவிப்பீர்கள்.

19நல்ல படிப்பு பழக்கங்கள், வாசிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு அட்டவணையிடப்பட்ட நேரங்கள், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ஆலோசனைகளின் உபயோகம் ஆகியவை உங்கள் ஊழியத்திறமைகளை வெகுவாக முன்னேற்றுவிக்கும். உங்களுடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் அவற்றைப் பொருத்தும்படிக்கு கடவுளுடைய விலையேறப்பெற்ற வார்த்தைகளை அதிகமாக நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறவர்களாக இருப்பீர்கள். இங்கே அளிக்கப்பட்டுள்ள குறிப்புகளை வயதான ஆட்களும் பழகிக்கொள்வார்களேயானால், அவர்களும்கூட நினைவில் வைக்கும் தங்கள் திறமையை முன்னேற்றுவித்துக்கொள்ள முடியும். எவருமே நன்மையடைய தனக்கு அதிக வயதாகிவிட்டது என்பதாக நினைக்கக்கூடாது.

20கடவுள் தம்முடைய மகத்தான நோக்கங்களை ஒரு புத்தகத்தில் எழுதும்படி செய்திருப்பதற்கு காரணம், அவருடைய எல்லா அதிசயமான கிரியைகளும் மனிதரின் பிள்ளைகளுக்கு அறிவிக்கப்பட்டு நீண்டகாலமாக நினைவுகூரப்பட வேண்டும் என்பதற்கே. (சங். 78:5-7) இந்த விஷயத்தில் ஜீவனைக்கொடுக்கும் அந்த வார்த்தையை வாசிப்பதிலும் நினைவில் வைப்பதிலும் நம்முடைய தளராத ஊக்கத்தினால் அவருடைய தயாள குணத்துக்கு நம்முடைய போற்றுதல் மிகச் சிறந்த வகையில் காண்பிக்கப்படுகிறது.

[கேள்விகள்]

1, 2. வாசிப்பதை நினைவில் வைப்பது நமக்கு ஏன் முக்கியமாக இருக்கிறது?

3, 4. வாசிப்பதில் நாம் ஏன் தேர்ந்தெடுக்கும் திறனுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?

5, 6. தனிப்பட்ட வாசிப்புக்காக நாம் ஏன் நேரத்தை திட்டமிட வேண்டும், இப்படிப்பட்ட வாசிப்பு எப்பொழுது செய்யப்படலாம்?

7. பைபிள் வாசிப்பில் நம்முடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டும்?

8, 9. நம்முடைய வாசிப்பு திட்டத்தில் வேறு என்ன பொருளையும் சேர்த்துக்கொள்வது பிரயோஜனமுள்ளதாயிருக்கும்?

10-17.வாசிப்பதில் அதிகத்தை நினைவில் வைப்பதற்கு நமக்கு என்ன பழக்கங்கள் உதவிசெய்யும்?

18-20. நன்றாக வாசிக்கக் கற்றுக்கொள்வது ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது?