Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குரல் முன்னேற்றமும் ஒலிவாங்கிகளின் உபயோகமும்

குரல் முன்னேற்றமும் ஒலிவாங்கிகளின் உபயோகமும்

படிப்பு 13

குரல் முன்னேற்றமும் ஒலிவாங்கிகளின் உபயோகமும்

1“மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?” என்பது படைப்பாளராகிய யெகோவா தேவன் மோசேயிடம் கேட்ட ஒரு கேள்வியாக இருக்கிறது. (யாத். 4:10, 11) மனித பேச்சாற்றலை உண்டுபண்ணுவதற்கு எல்லா அதிசயமான சாதனங்களையும் படைத்தது யார்? என்பதையும்கூட நாம் சரியாகவே சேர்த்துக்கொள்ளலாம். மோசே தான் “திக்குவாயும் மந்த நாவும்” உள்ளவனாக இருந்தபோதிலும் பேசுவதற்குப் பயன்படுகிற குரலை முன்னேற்றுவிக்க கடவுள் அவருக்கு உதவமுடியும் மற்றும் உதவினார் என்பதை இறுதியில் கற்றுக்கொண்டார். அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேல் தேசத்தாரிடம் பலன்தரத்தக்கவிதமாக பேசுவதற்கு உதவியளிக்கப்பட்டார்.

2இன்று தங்களுடைய சொந்த பேச்சாற்றலின் பலவீனங்களைக் குறித்து நன்றாகவே அறிந்திருக்கும் கடவுளுடைய ஊழியர்கள் அநேகர் இருக்கின்றனர். சிலருக்குப் பலவீனமான குரலும் மற்றவர்களுக்கு கீச்சென்றக் குரலும், இன்னும் மற்றவர்களுக்கு ஒரு கடுகடுப்பான அல்லது கம்மிய குரலுமிருக்கிறது. சிணுங்கும் குரல், மூக்கு வழியாக ஒலிக்கும் தொனி, கரகரத்த வகையான குரல் கேட்பதற்கு இன்பமாக இருப்பதில்லை. உணர்ச்சியற்ற, உயிரற்ற தொனி எவருக்கும் ஊக்கமளிப்பதில்லை. உங்களுடைய குரல் இந்தப் பலவீனங்களில் ஒன்றைக் காட்டுவதாக இருந்தால், தைரியங்கொள்ளுங்கள். எந்தத் திருத்தமோ முன்னேற்றமோ சாத்தியமில்லாதது போல அந்தச் சூழ்நிலையில் நீங்கள் நம்பிக்கை இழக்கவேண்டிய அவசியமில்லை.

3நிச்சயமாகவே, முன்னேற்றம் செய்வதற்கு தனிப்பட்டவரின் பங்கில், அவர் முன்னேறுவதற்கு வேலைசெய்ய வேண்டிய தனிப்பட்ட பலவீனத்தைக் குறித்த முன்னுணர்வு இருக்க வேண்டும். இங்குதானே ஊழியப் பள்ளி கண்காணியின் பயனுள்ள ஆலோசனையோடுகூடிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி, குரல் பலவீனம் ஏதேனுமிருந்தால் அதை காண உங்களுக்கு உதவக்கூடும். மேலும் பதிவுசெய்யப்பட்ட உங்களுடைய சொந்தக் குரலைக் கேட்பது உதவியாயிருக்கிறது. நீங்கள் இதை இன்னும் செய்யாமலிருந்தால், ஒருவேளை ஆச்சரியம் உங்களுக்குக் காத்திருக்கலாம். ஏனென்றால் நீங்கள் பேசும்போது எலும்புகளின் அதிர்வை உங்கள் சொந்த தலையில் நீங்கள் உணருகிறீர்கள். இந்த அதிர்வுகள் தாழ்ந்த தொனிகளுக்கு ஆதரவாயிருக்கின்றன. அப்படியிருக்க ஒரு டேப் ரிக்கார்டர் மற்றவர்களுக்கு எவ்வாறு நீங்கள் ஒலிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. குரல் முன்னேற்றத்துக்கு ஓர் அஸ்திவாரத்தைத் தயார் செய்வதற்கு உங்கள் குரலின் செயல்நுட்பத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது சரியாகவே இருக்கிறது. பொதுவாக இதைக் குறித்து நீங்கள் சிந்திக்காமலே அதை பயன்படுத்துகிறீர்கள்.

4பேச்சு எவ்விதமாக பிறக்கிறது. வாய்விட்டு உரைக்கப்படும் எல்லா வார்த்தைகளுக்கும் ஆதாரமாயிருப்பது துருத்தியைப் போன்று செயல்படும் நுரையீரல்களிலிருந்து நீங்கள் மேலே அனுப்பிவைக்கும் காற்றாக இருக்கிறது. மேலே காற்றுக்குழாயின் வழியாக உங்கள் தொண்டையின் நடுவிலிருக்கிற, அடிக்கடி குரல்பெட்டி என்றழைக்கப்படும் குரல்வளைக்குள் காற்று நுழைகிறது. உங்கள் குரல்வளைக்கு உள்ளே குரல் நாண்கள் என்றழைக்கப்படும் இரண்டு சின்னஞ்சிறிய தசை மடிப்புகள் இருக்கின்றன. இவையே முக்கியமாக ஒலியை உண்டுபண்ணுபவையாகும். இந்த நாண்கள் அல்லது “குரல் மடிப்புகள்” என்றும்கூட அழைக்கப்படுகிறவை, உங்கள் குரல்வளையின் பக்கச்சுவரிலுள்ள அசையக்கூடிய நிலையடுக்குத்தட்டுகளைப் போன்று இருக்கின்றன. காற்றை உள்ளே அனுமதிக்கவும் வெளியேற்றவும் திறந்து மூடுவதும் உங்கள் நுரையீரல்களுக்குள் தேவையற்ற பொருட்கள் வருவதை தடைசெய்வதுமே அவற்றின் முக்கிய நோக்கமாகும். உங்கள் நுரையீரல்களிலிருந்து வரும் மூச்சு இந்த நாண்களை அசையச் செய்கின்றன. காற்று அவற்றை கடந்து வலிமையாகச் செல்ல அவை இவ்விதமாக அதிர்வுறும்போது ஒலியை உண்டுபண்ணுகின்றன. இதை விளக்குவதற்கு: ஒரு பலூனை நீங்கள் ஊதி, கழுத்துப்பகுதியை குத்தி கழுத்துப்பகுதியின் வழியாக காற்றை வெளியேற்றினால், ரப்பர் அதிர்வுற்று ஒலியை உண்டுபண்ணுகிறது. ஆகவே நீங்கள் பேசும்போது உங்கள் குரல்வளையிலுள்ள மடிப்புகள் அல்லது நாண்கள் ஒன்றாக உறுதியாய்ச் சேருகின்றன. அவற்றிற்கிடையே உள்ள V-வடிவ இடைவெளி மூடப்படுகிறது. இந்த நாண்கள் எவ்வளவு இறுக்கமாக விரிகிறதோ அவ்வளவு வேகமாக அவை அதிர்வுற்றும் பிறப்பிக்கப்படும் ஒலிகளின் தொனிகள் பலமாகவும் இருக்கின்றன. மறுபட்சத்தில் அவை அதிக தளர்ந்த நிலையில் இருக்கையில் தாழ்ந்த தொனிகளே பிறப்பிக்கப்படுகின்றன.

5குரல்வளையை விட்டு புறப்பட்ட பின்பு, காற்றலை முன்தொண்டை என்றழைக்கப்படும் உங்கள் தொண்டையின் மேல்பாகத்திற்குள் நுழைகிறது. பின்னர் அது உங்கள் வாய்க்குள்ளும் உங்கள் மூச்சுக்குழல்களுக்குள்ளும் செல்கிறது. இங்கே மூலத்தொனிக்கு மேல்தொனி கூட்டப்படுகிறது. இந்த மேல்தொனிகள் தொனியை சிறிது மாற்றி, அதிகப்படுத்தி மற்றும் பலப்படுத்துகின்றன. புரிந்துகொள்ளமுடிகிற பேச்சு வடிவில் ஒலி வெளியே வருவதற்காக அண்ணம், நாக்கு, பற்கள், ஈறுகள், தாடை மற்றும் உதடுகள் சேர்ந்து அதிர்வுறும் ஒலி அலைகளைச் சிதைத்து உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் உருவாக்குவதற்காக ஒருங்கிணைகின்றன.

6நிச்சயமாகவே மனித குரல் ஓர் அதிசயமாக, பலவித திறமைகளைக் கொண்டிருப்பதில் மனிதனால் உண்டுபண்ணப்படும் எந்தக் கருவியையும்விட இணையற்றதாயிருக்கிறது. கனிவுள்ள, மென்மையான அன்பிலிருந்து கடுமையான மற்றும் உக்கிரமான பகைமைவரையாக மனக்கிளர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்கு அது திறமைப்பெற்றதாயிருக்கிறது. அபூரணத்திலும்கூட மனித குரல் மூன்று எட்டாம் இசைவரையாக உள்ளடக்கவும், அழகிய இசை ஒலிகளை மட்டுமல்ல, ஆனால் சரியாக விருத்திசெய்யப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டால் இருதயத்துக்குக் கிளர்ச்சியூட்டும் பேச்சு மாதிரிகளையும்கூட வழங்கக்கூடும். குரல் முன்னேற்றத்துக்கு, நாம் பார்க்கப்போகிற விதமாகவே இரண்டு முக்கிய இன்றியமையாத கூறுகள் உண்டு.

7காற்று சப்ளையைக் கட்டுப்படுத்துதல். மிகச் சிறந்த பலன்களுக்கு ஒரு பேச்சாளருக்குச் சரியான சுவாசக் கட்டுப்பாடோடுகூட நல்ல சீரான காற்று சப்ளையும் தேவையாகும். அநேகருக்குப் பேசும்போது எவ்விதமாக மூச்சு வாங்குவது மூச்சு விடுவது என்பது தெரியாமலிருக்கிறது. இதன் விளைவாக அவர்கள் நுரையீரல்களின் மேற்பகுதியை மட்டுமே உபயோகிக்கின்றனர், ஆகவே வேகமாக பேசும்போது மூச்சு திணரவேண்டியிருக்கிறது. பொதுவான கருத்துக்கு எதிர்மாறாக, நுரையீரல்களின் பரந்தகன்ற பகுதி மார்பறையின் மேல்புறத்தில் இல்லை; இந்தப் பகுதி நம்முடைய தோள்பட்டை எலும்புகளின் காரணமாக வெறுமனே பரந்தகன்று தோன்றுகிறது. மாறாக நுரையீரல் சரியாக உதரவிதானத்துக்கு மேல்தானே மிக அகலமாக இருக்கிறது. இது ஒரு பம்ப் போல செயல்பட்டு, சுத்தமான காற்றை உள்ளிழுத்து, பயன்படுத்தப்பட்ட காற்றை வெளியேற்ற உங்கள் நுரையீரல்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆற்றலுள்ள, வளைவடிவ தசையாகும். விலாவெலும்புகளோடு இணைக்கப்பட்ட உதரவிதானம் மார்பை அடிவயிற்றுப் பகுதியிலிருந்து பிரிக்கிறது. இந்தக் கவிகை மாட வடிவ தசையே சுவாசித்தலில் முக்கியமாக பயன்படுகிறது. உதரவிதானத்தின் இந்தக் கவிகை மேல்நோக்கி அசையும்போது, அது உங்கள் நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியே தள்ளுகிறது. அது கீழ்நோக்கி அசையும்போது, காற்று உங்கள் நுரையீரல்களுக்குள் தள்ளப்படுகிறது.

8உங்கள் காற்று சப்ளையைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வதே உங்கள் குரலை முன்னேற்றுவிப்பதற்கு வேலைசெய்ய வேண்டிய முதல் காரியம். பேசுவதற்காக நீங்கள் மூச்சை உள்ளே இழுக்கும்போது உங்கள் மார்பறையின் ஆழமற்ற மேற்பகுதி விசாலிப்பதை தவிர்க்க உணர்வுடன் முயற்சிசெய்யுங்கள். உங்கள் கீழ் நுரையீரல்களை விசாலிக்கச் செய்யுங்கள். பின்னர் காற்றின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துங்கள். வயிற்றுப்பகுதி தசைகளினால் வலுப்படுத்தப்படும் மென்மையான உதரவிதான அழுத்தத்தின் மூலமாக படிப்படியாக அதை வெளியேற்றுங்கள். இது காற்று வேகமாக தள்ளிக்கொண்டு வெளியேச்செல்வதைத் தடைசெய்யும். அது கட்டுப்படுத்தப்படாவிட்டால் பேச்சாளர் விரைவில் மூச்சுத்திணறிவிட அவருடைய தொனி மூச்சுவாங்கிக்கொண்டும் அடங்கியும்விடுகிறது.

9அநேகருடைய சுபாவம் தொண்டையை இறுக்கிக்கொள்வதன் மூலம் காற்று சப்ளையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகும். ஆனால் இது கரகரப்பையும், களைப்பான குரலையும் மாத்திரமே உண்டுபண்ணுகிறது. அதைத் தவிர்ப்பதற்கு, உங்கள் தொண்டை தசைகளைத் தளர்ந்த நிலையில் வைக்க முயற்சிசெய்யுங்கள்.

10ஓடுபவர் ஒரு பந்தயத்துக்காக பழகிக்கொள்வது போலவே, ஒரு பேச்சாளர் பயிற்சியின் மூலமாக உதரவிதானக் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர் நேராக நிமிர்ந்து நின்று, ஆழமாக சுவாசித்து, படிப்படியாக மூச்சை வெளிவிட்டு முடிந்தவரை அகரவரிசையில் எழுத்துக்களைச் சொல்லவோ அல்லது ஒரே மூச்சில் எத்தனை அதிகமாக எண்ணமுடியுமோ அத்தனை அதிகமாக எண்ணவோ செய்யலாம். மேலும் சப்தமாக வாசிப்பதன் மூலமும் பழகிக்கொள்ளலாம்.

11விறைப்பான தசைகளைத் தளர்த்துதல். பெரும்பாலான குரல் பிரச்சினைகளை மேற்கொள்வதில் மற்றொரு இன்றியமையாத கூறு ஓர் எளிய பரிகாரம்—தளர்த்துதலாகும்! ஒருவர் எவ்விதமாக தளர்த்துவது என்பதை கற்றாலன்றி, அவருடைய குரலை மேம்படுத்த உதவிசெய்வதற்கு அதிகமாக எதையும் செய்யமுடியாது. ஆனால் பேசும்போது தளர்ந்த நிலையிலிருக்க கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் என்ன முன்னேற்றஞ்செய்யலாம் என்பது உண்மையில் வியப்படையச் செய்கிறது. மனதும் உடலும் தளர்ந்த நிலையிலிருக்க வேண்டும். ஏனென்றால் மனதின் இறுக்கம், தசை இறுக்கத்தை உண்டுபண்ணும். பெரும்பாலும் யெகோவாவின் மக்களாலான உங்கள் கேட்போரைப் பற்றிய சரியான நோக்குநிலையைப் பெறுவதன் மூலம் மன இறுக்கத்தை தளர்த்திக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள், வெறுமனே அவர்கள் வரிசைகளில் அமர்ந்திருப்பதன் காரணமாக திடீரென்று உங்கள் பகைவர்களாகிவிடுகின்றனரா? நிச்சயமாகவே இல்லை. நாம் வழக்கமாக எதிர்ப்படுவது போன்ற இப்பேர்ப்பட்ட சிநேகப்பான்மையான அன்புள்ள கேட்போர் கூட்டத்தை உலகிலுள்ள எந்த ஜனமும் எதிர்ப்படுவதில்லை.

12முதலில் நீங்கள் உணர்வுடன் தளர்த்துவது அவசியமாக இருக்கலாம். பேசுவதற்குச் சற்று முன்பாக நடுக்கத்தின் காரணமாக சுவாசித்தல் ஆழமற்றும் உதறலாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். உங்கள் தொண்டை தசைகளைத் தளர்த்த முயற்சித்துக்கொண்டே நிதானமாக, மெதுவாக, சீராக சுவாசிப்பதன் மூலம் இது சரிசெய்யப்படலாம்.

13நாம் கற்றுக்கொண்ட விதமாகவே, குரல்நாண்களின்மீது அதிகரிக்கும் இறுக்கம், சுருதியைக் கூட்டுகிறது. ஆகவே அதிக இறுக்கமாக அவற்றை விரிவாக்க, நீங்கள் உண்டுபண்ணும் ஒலிகளும் உரத்ததாய் இருக்கின்றன. இது கேட்போரை விறைப்பாக உணரச்செய்யும் விறைப்பாக தொனிக்கும் கீச்சென்ற குரலில் விளைவடையக்கூடும். இதை மேற்கொள்ள என்ன செய்யப்படலாம்? ஆம், உங்கள் குரல் நாண்கள் அவற்றை கடந்துசெல்லும் காற்றினால் அதிர்வுறுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு வயலின் தந்தியினுடைய தொனி அது இறுக்கப்படுகையில் அல்லது தளர்த்தப்படுகையில் மாறுவது போலவே, தசைகள் அவற்றை இறுக்கவோ தளர்த்தவோ செய்கையில் அவற்றின் தொனி மாறுகிறது. குரல் நாண்களை நீங்கள் தளர்த்தும்போது தொனி குறைகிறது. ஆகவே செய்யவேண்டிய காரியம் தொண்டை தசைகளைத் தளர்த்துவதாகும். இறுக்கமும்கூட விழுங்குவதற்கு பயன்படும் தசைகளை குரல் நாண்களைக் கட்டுப்படுத்துகின்றவற்றிற்கு எதிராக வேலைசெய்யும்படிச் செய்து, கேட்கப்பொறுக்காதக் குரலை உண்டுபண்ணிவிடும். உணர்வுடன் நீங்கள் தளர்த்துகையில் முன்னேற்றம் ஏற்படுகிறது.

14சில சமயங்களில் தொண்டை மற்றும் வாயின் தசைகளை இறுக்குவதன் மூலம் அந்த நபர் மூக்குக்குழலை மூடிக்கொண்டுவிட, காற்றினால் தடையின்றி கடந்துசெல்ல முடியாமல் போய்விடுகிறது. இது மூக்கினால் பேசுவதில் முடிவடைகிறது. இதைத் தவிர்ப்பதற்கு மறுபடியுமாக அங்கே தளர்த்துவது அவசியமாயிருக்கிறது. இருந்தபோதிலும் சிலருடைய விஷயத்தில் இது மூக்கடைப்பினால் ஏற்படக்கூடும்.

15தாடையும்கூட தளர்த்தப்படுவது அவசியமாகும். அது இறுக்கமாக இருந்தால், வாய் சரியாக திறக்காது, ஒலி பற்களின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இது கரகரப்பான, அடங்கிய ஓசையில், தெளிவற்ற பேச்சில் விளைவடைகிறது. இருப்பினும், தாடையைத் தளர்த்துவது பேச்சுப்பழக்கங்களில் சோம்பேறியாவதை அர்த்தப்படுத்துவதில்லை. தெளிவான பேச்சு இருக்கும்பொருட்டு ஒலிகளை உருவாக்கும் பழக்கத்தோடு அது சமநிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

16பொதுவான தசை இறுக்கத்தைத் தளர்த்துவது அதிர்வொலிக்கு உதவ அதிகத்தைச் செய்கிறது. தளர்த்தப்பட்ட தொண்டை தெளிவான தொனிகளை உண்டுபண்ணிய பின்பு, குரலை எடுத்துச்செல்லும் திறமையைக் கொடுப்பதற்கு அதிர்வொலி மேல்தொனிகள் அவற்றை பலப்படுத்த வேண்டும். முழு உடலையும் ஓர் ஓசைப்பெருக்குக் கட்டையாக பயன்படுத்துவதன் மூலம் அதிர்வொலி உண்டுபண்ணப்படுகிறது. ஆனால் இது இறுக்கத்தினால் தடைசெய்யப்படுகிறது. குரல்வளை உண்டுபண்ணும் தொனி, மூக்கு துவாரங்களில் மட்டுமல்ல ஆனால் மார்பின் எலும்புக்கூடு, பற்கள், அண்ணம் மற்றும் தசைப்பைகளுக்கு எதிராக எதிரொலிக்கிறது. இவை அனைத்தும் அதிர்வொலியின் பண்புக்குப் பங்களிக்கக்கூடும். ஒரு வயலினின் ஓசைப்பெருக்குக்கட்டைமீது ஒரு பளுவை ஒருவர் வைத்தால், ஒலி குன்றிவிடுகிறது. அது அதிர்வுறுவதற்குத் தடையில்லாமல் இருத்தல் வேண்டும். ஆக, தசைகளால் உறுதியாக நிறுத்தப்படும் நம்முடைய உடலின் எலும்புக் கூடுகளின் சம்பந்தமாகவும் இவ்விதமாகவே இருக்கிறது. அதிர்வொலியோடு நீங்கள் சுலபமாக அதிக முயற்சியின்றி உங்கள் குரலை முழுவதுமாக உபயோகிக்காமல் பெரிய கேட்போர் கூட்டத்தைச் சென்றெட்ட முடிகிறவர்களாக இருப்பீர்கள். எதிரொலி இல்லாமல், குரலை எடுத்துச்செல்ல செய்வது, சரியாக அதை மாற்றி அமைப்பது அல்லது வித்தியாசமான உணர்ச்சிகளை வெளியிடுவது கடினமாக இருக்கிறது.

17வாய் திறவாது பாடும் பயிற்சிகளை, உடலை உணர்வுடன் தளர்த்திக்கொள்வதோடுகூட சேர்த்து செய்வதன் மூலம் அதிர்வொலியை முன்னேற்றுவிக்கலாம். உதடுகள் இலேசாக மட்டுமே தொட்டுக்கொண்டிருக்க வேண்டும், இறுக்கமாக சேர்ந்து மூடியிருக்கக்கூடாது. அந்த முறையில், இறுக்கமான தசைகள் தொனி அதிர்வுகளுக்கு இடையூறாக இருக்காது அல்லது மூக்கின் வழியாக தள்ளப்படாது. ஒருசில வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப கூறுவதும், ng, m, n, மற்றும் l ஆகியவற்றால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஒலிகளை நீட்டிய அதிர்வொலியோடு ஒலித்துக்கொண்டிருப்பதும் உதவியாயிருப்பது காணப்படும். குரலின் பண்பை முன்னேற்றுவிப்பதில் உதவியாயிருக்கும் மற்றொரு பயிற்சி தொண்டையைத் திறந்து, தாடையைத் தளர்த்தி, குறைந்த சப்தத்தோடு உயிரெழுத்துக்களை நெடிலாக்கிச் சொல்லிப்பார்ப்பதாகும்.

18ஒலிவாங்கிகளைச் சரிவர பயன்படுத்துதல். பெரிய கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மனித ஒலியை மின்னணு வாயிலாக பெருக்குவது அவசியமாக இருக்கிறது. பேச்சாளரின்மீதுள்ள பாரத்தைக் குறைக்கவும், கேட்போருக்கு இன்பகரமானதாக இருப்பதற்கும் இது செய்யப்படுகிறது. இதன் காரணமாக பேச்சாளர் சப்தத்தை அடைவதற்கு அதிகமாக முயற்சிசெய்வது அவசியமிராது. கேட்போரும் சொல்லப்படுவதை தெரிந்துகொள்ள தங்கள் காதுகளைச் சிரமப்படுத்த வேண்டிய அவசியமிராது. ஒலிவாங்கிகள், அநேக சபைகளில் மேடையின்மீது மட்டுமல்ல, ஆனால் எல்லா குறிப்புகளும் நன்றாகக் கேட்கப்படும்படி கேட்போர் பகுதியிலிருந்து குறிப்புசொல்பவர்களாலும்கூட பயன்படுத்தப்படுகின்றன. ஒலிவாங்கிகள் உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் பயன்படுத்தப்படாவிட்டாலும்கூட, அவை பொதுவாக அசெம்பிளிகளின் நிகழ்ச்சிநிரலில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே அவற்றை எவ்விதமாக சரிவர பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம்.

19நம்முடைய வாய் ஒலிவாங்கிக்கு எவ்வளவு அருகாமையில் இருக்க வேண்டும்? பொதுவாக நான்கிலிருந்து ஆறு அங்குலங்கள். ஒலிவாங்கி உபயோகத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினை, பேச்சாளர் அதிலிருந்து அதிக தூரத்தில் இருப்பதாகும். ஆகவே தூரத்தைக் கவனியுங்கள். மேலும் உங்கள் குரலை ஒலிவாங்கியிடமாகவும் அதனுடைய மின்சார சாதன மாதிரிக்குள்ளேயும் செலுத்துங்கள். இது செய்யப்பட்டாலொழிய, ஒலி இயக்குபவருக்கு கேட்போர் நல்ல தெளிவோடு கேட்பதற்காக சரிப்படுத்தல்களைச் செய்வது கடினமாக இருக்கும். ஒலிவாங்கியின் அருகே இருமுதல், தும்முதல் அல்லது தொண்டையைச் சரிசெய்துகொள்ளுதல் நிச்சயமாகவே தவிர்க்கப்பட வேண்டும்.

20ஒலிவாங்கியைப் பயன்படுத்தும்போது, ஒலிபெருக்கி வழியாக வருகையில் உங்கள் குரல் எவ்வாறு ஒலிக்கிறது என்பதைக் கவனித்துக் கேளுங்கள். பின்னர் நீங்கள் சப்தத்தை அளவிட்டு தேவையானால் உங்கள் நிலையை சரிப்படுத்திக்கொள்ளலாம். ஒலிவாங்கிக்கு அருகாமையில் அடியெடுத்து வைப்பதன் மூலமோ அல்லது அதிலிருந்து ஓரிரண்டு அங்குலங்கள் பின்னுக்குச் சென்றோ சரிசெய்துகொள்ளமுடியும். சில பேச்சாளர்கள் அளவுக்கு அதிகமான சப்தத்தை தவிர்ப்பது அவசியம், ஏனென்றால் அது அவர்களுடைய குரலை மாற்றி, கேட்போருக்கு எரிச்சலாயும் வெறுப்பூட்டுவதாயுமே இருக்கும். பதியவைப்பதற்காக அங்கும் இங்குமாக பேச்சு முழுவதிலுமே உங்கள் குரலை நீங்கள் தாழ்த்த விரும்பினால், இந்த நவீன ஒலிபெருக்க அதிசயத்தால் தாழ்ந்த குரலில் பேசினாலும் கேட்போர் கேட்க முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

21ஒலிவாங்கி உபயோகத்தின்பேரில் கவனத்தைத் தேவைப்படுத்தும் மற்ற எச்சரிக்கைகளும்கூட இருக்கின்றன. “p” சில சமயங்களில் ஒரு வெடிப்பொலியை உண்டுபண்ணுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இது வெகு அருகாமையில் இருந்துகொண்டு நேரடியாக ஒலிவாங்கியினுள் ஒரு நபர் பேசும்போது சம்பவிக்கிறது. கீச்சான “s” ஒலிகளும்கூட பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடும். அவை அடக்கி ஒலிக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவை ஒலிபெருக்கத்தினால் மிகைப்படுத்தப்பட்டு ‘உஸ்’ என்ற சப்தமாக வெளிவருகின்றன. பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்பதை நீங்கள் அறிந்திருக்கையில், அதைச் செய்வது கடினமாக இல்லை.

22நம்முடைய குரல் செயல்நுட்பம் நம்முடைய படைப்பாளரிடமிருந்து வந்த அதிசயமான பரிசாகும். மின்சாரமும் புதியனவற்றை கண்டுபிடிக்கும் மனதும்கூட அவருடைய பரிசுகளாகும். ஒலிவாங்கி மூலம் பேசுவதை அவை சாத்தியமாக்கியிருக்கின்றன. ஒலிவாங்கி சாதனத்தோடும் அல்லது அது இல்லாமலும் நம்முடைய குரலைப் பயன்படுத்தும்போதெல்லாம் பேச்சாற்றலைத் தோற்றுவித்தவரை கனப்படுத்தும் முறையில் அவ்விதமாகச் செய்வோமாக.

[கேள்விகள்]

1-3. குரல் தரத்தில் உள்ள ஒருசில பலவீனங்கள் யாவை, ஒருவருடைய தனிப்பட்ட பிரச்சினையைக் கண்டுபிடிப்பதில் எது உதவக்கூடும்?

4-6. பேச்சு எவ்விதமாக பிறக்கிறது?

7-10. ஒருவருடைய காற்று சப்ளை எவ்விதமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஏன்?

11-15. தசை விறைப்பு என்ன விதத்தில் கீச்சென்ற தொனி, மூக்கினால் பேசுவது, தெளிவற்ற பேச்சு தரம் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?

16, 17. ஒருவருடைய அதிர்வொலியை முன்னேற்றுவிக்க எது உதவிசெய்யும், அது ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது?

18-22. ஒலிவாங்கியின் திறம்பட்ட உபயோகத்தின் சம்பந்தமாக என்ன ஆலோசனையை நாம் மனதில்கொள்ள வேண்டும்?