Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாதுரியம் என்றாலும் உறுதி

சாதுரியம் என்றாலும் உறுதி

படிப்பு 14

சாதுரியம் என்றாலும் உறுதி

1இயேசு தம்முடைய சீஷர்களை பிரசங்கிக்க வெளியே அனுப்பியபோது, அவர்கள் சொல்லும் மற்றும் செய்யும் காரியங்களில் விவேகத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அவர்களோடு தாம் இருப்பதாக அவர் வாக்களித்தபோதிலும், தேவையில்லாத கஷ்டங்களை உண்டுபண்ணும் வகையில் அவர்கள் செயல்படக்கூடாது. (மத். 10:16) கிறிஸ்தவர்கள், தங்கள் மத்தியிலேயுங்கூட ஒருவரையொருவர் முன்யோசனையின்றி புண்படுத்திக்கொள்ளாதபடிக்கு தங்கள் பேச்சிலும் செயல்களிலும் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும். (நீதி. 12:8, 18, NW) ஆகவே சாதுரியத்தை வளர்த்துக்கொள்வதற்கு தேவை இருக்கிறது.

2சாதுரியம் என்பது, “மற்றவர்களுடன் கொண்டுள்ள செயல்தொடர்புகளில் எதைச் சொல்லுதல் அல்லது செய்தல் பொருத்தமானது என்பதைப் பகுத்தறிதல்” மற்றும் “உணர்ச்சி புண்படாமல் மற்றவர்களுடன் செயல்படும் திறமை” என்று விளக்கப்படுகிறது. சாதுரியமாக இருத்தல் என்பதற்கு மற்றவர்களைப் புண்பட்ட உணர்வுகளிலிருந்து விடுவிப்பதற்கு பேசுவதிலும் செயல்படுவதிலும் போதிய அளவு கிருபை பொருந்தியிருத்தல் என்பது பொருளாகும். நாம் காரியங்களைச் சொல்லும் மற்றும் செய்யும் விதத்தினால் எவரையும் புண்படுத்த விரும்புவதில்லை. இருந்தபோதிலும், இது நாம் சொல்லும் அல்லது செய்யும் காரியங்களினால் மற்றவர்களை ஒருபோதும் புண்படுத்தமாட்டோம் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை, ஏனென்றால் பைபிளின் செய்திதானே சிலருக்கு வெறுப்பூட்டுவதாய் இருக்கிறது. (ரோ. 9:33; 2 கொ. 2:15, 16) ஆகவே, நாம் நடத்தையில் சாதுரியமாக இருக்கையில், கடவுளுடைய சத்தியத்துக்காக உறுதியுள்ளவர்களாயும் இருக்கிறோம்.

3நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிப்படுத்துவோமானால், சாதுரியமாக இருப்பது கடினமாயில்லை. அந்தக் கனிகளே சாதுரியத்துக்கு ஆதாரமாக அல்லது அஸ்திவாரமாக இருக்கிறது. (கலா. 5:22, 23) உதாரணமாக, அன்பினால் தூண்டப்பட்ட ஒருவர் மற்றவர்களுக்கு எரிச்சல் உண்டாக்க விரும்புகிறதில்லை, ஆனால் அவர்களுக்கு உதவிசெய்ய உண்மையான விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். தயவைக் காண்பிக்கும் ஒருவர் காரியங்களைச் செய்யும் முறையில் பண்புள்ளவராக இருப்பார். தன்னடக்கத்தை வளர்த்துக்கொண்டு சோதனையான சூழ்நிலைகளில் அமைதியாய் இருப்பவர், பெரும்பாலும் தன்னுடைய நோக்குநிலைக்கு மற்றவரை ஆதாயப்படுத்தக்கூடியவராய் இருப்பார். மறுபட்சத்தில் எளிதில் கிளர்ச்சியடைந்துவிடுகிற அல்லது உணர்ச்சிவசப்படுகிற நபர், காரியங்களைத் துடுக்காகச் சொல்லிவிட்டு இவ்விதமாக அவர் யாரிடம் பேசுகிறாரோ அவருடைய விரோதத்தை எழுப்புகிறவராக இருப்பார். (நீதி. 15:18) நம்முடைய பேச்சும் நம்முடைய செயல்களும் நியாயமான மனதுள்ள ஆட்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும், வெறுப்புணர்ச்சிக்கொள்ள செய்யக்கூடாது.

4சாதுரியத்தை வெளி ஊழியத்தில் பொருத்திப் பிரயோகித்தல். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் வீட்டுக்காரருக்குக் கவலையுண்டுபண்ணும் விஷயங்களோடு உங்கள் உரையாடலை ஆரம்பித்து, கடவுளுடைய ராஜ்யம் எவ்விதமாக பரிகாரமளிக்கும் என்பதைக் காண்பிப்பதன் மூலம் சாதுரியத்தை நீங்கள் காட்டலாம். நீதியின் பேரிலுள்ள அந்த நபரின் அன்புக்கு, அவருடைய மெய்யறிவுக்கு, மேம்பட்ட காரியங்களுக்கான அவருடைய ஆசைக்கு கவனத்தைக் கவர்ந்திழுங்கள். அவருடைய மதசம்பந்தமான கருத்துக்களைப் பரிகசிப்பது அல்லது கண்டனம் செய்வது அவருடைய மனதை மூடிவிடவே செய்யும். ஆகவே, வாக்குவாதத்தைத் தூண்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, மக்கள் பொதுவாக சரியென ஒப்புக்கொள்ளும் காரியங்களுக்குக் கவனத்தைக் கவர்ந்திழுங்கள். தர்க்கத்திற்கு இடமளிக்கிற ஏதோவொன்றுக்கு முன்னேறிச்செல்வது அவசியமாக இருந்தால், முதலில் வீட்டுக்காரரோடு ஏதாவது ஓர் ஒருமித்தக் கருத்தைக் கண்டுபிடித்து பின்னர் அந்தக் கருத்து ஒற்றுமையை அழுத்திக் காண்பியுங்கள். ராஜ்யத்தையும் அதன் ஆசீர்வாதங்களையும் பற்றிய நம்பிக்கையைத் தூண்டும் சத்தியங்களை வீட்டுக்காரருடைய மனதில் உங்களால் பதிய வைக்க முடிந்தால், அந்த நபர் கடவுளுடைய தகுதியற்ற தயவை போற்றுகிறவராகும்போது, மற்ற காரியங்கள் நாளாவட்டத்தில் சரிசெய்யப்பட்டுவிடும்.

5பேசிக்கொண்டிருக்கும் நபர் உரையாடலில் பிரவேசிக்கவும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும் அவரை ஊக்குவிக்க சாதுரியமுள்ள நபர் எல்லா முயற்சியையும் எடுக்கிறார். நற்செய்தியின் சார்பாக ஆதரவான வலிமைமிக்க விவாதங்களை மேம்பட்டவிதமாக கொண்டுவரும்படிக்கு பவுல் தான் சாட்சிகொடுத்த நபர்களின் நோக்குநிலையிலிருந்து சிந்திக்க முயற்சிசெய்தார். (1 கொ. 9:20-22) நாம் அதையே செய்ய வேண்டும். மற்ற ஆட்களின் சூழ்நிலைகள், அவர்கள் இருக்கிறபடியாக ஏன் இருக்கின்றனர், அவர்கள் செய்கிறபடியாக ஏன் நம்புகின்றனர் மற்றும் பேசுகின்றனர் என்பதை அனுதாபத்தோடு நோக்குவது, அவர்களைச் சாதுரியமாக ஒற்றுணர்வோடு கையாள ஒருவருக்கு உதவிசெய்யும். வாழ்க்கையில் வித்தியாசமான சூழ்நிலைகள், வித்தியாசமான அனுபவங்கள் அல்லது வித்தியாசமான அதிகாரத்தின்பேரில் சார்ந்திருத்தல் ஆகியவை அவர்கள் அவ்விதமாகச் சிந்திப்பதற்கு காரணமாயிருக்கலாம். அடுத்த சாராருடைய சிந்தனையைப் பற்றி ஏதாவது குறிப்பு உங்களுக்குத் தெரிந்தால், நம்பிக்கையான ஒரு முறையில் நற்செய்தியின் உங்கள் அளிப்புக்குள் வழிநடத்தலாம். அடுத்த நபர் எவ்விதமாகச் சிந்திக்கிறார், அவ்விதமாகச் சிந்திப்பதற்கு அவருக்கிருக்கும் காரணங்களை அறியாதிருப்பதன் காரணமாக அவசியமில்லாமல் புண்படுத்துவதற்குப் பதிலாக அப்படிச் செய்யலாம்.

6மற்றவரின் நோக்குநிலையைச் சிந்திப்பது சரியானதை விட்டுக்கொடுப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. சாதுரியம் என்பது உண்மைகளைத் திரித்துக்கூறுவது இல்லை. எல்லா சமயங்களிலும் சரியானதை உறுதியாக கடைப்பிடித்தல் வேண்டும். மற்றபடி ஒரு நபர் சாதுரியமாக இருப்பதற்குப் பதிலாக சத்தியத்தை தான் விட்டுக்கொடுப்பதைக் காண்பார். நீதியின் பேரிலான அன்புக்குப் பதிலாக மனித பயத்தினால் தான் தூண்டப்படுவதை அவர் காணலாம். இருந்தபோதிலும், சாதுரியம் சத்தியத்தை விட்டுக்கொடுப்பதை உட்படுத்தாதிருக்கும்போது, அது காலத்தை அதாவது ஒருசில தகவல்களைக் கொடுப்பதற்குச் சரியான நேரத்தைத் தீர்மானிப்பதை உட்படுத்துகிறது. சில சமயங்களில், சொல்லப்பட்ட ஏதோவொன்றை கண்டும் காணாதது போல இருந்துவிடுவதே சாதுரியமாக இருக்கிறது. ஒருசில காரியங்களைப் பிற்காலத்துக்கு, அந்த நபர் அவற்றிற்குத் தயாராயிருக்கும்வரை விட்டுவைப்பது மிகச் சிறந்ததாக இருக்கலாம். இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னவிதமாகவே: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.” (யோவா. 16:12) நாம் பேசிக்கொண்டிருப்பவரோடு ஒத்துப்போகாதிருந்தாலும், தவறான ஒவ்வொரு கருத்தையும் உடனடியாக நாம் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. நாம் அதைச் செய்தால், அது அவருடைய மனதை மூடிக்கொண்டுவிடவும், கூடுதலான கலந்தாலோசிப்பை தவிர்க்கவுமே செய்யும்.

7ஒரு வீட்டுக்காரர் உரையாடலின்போது, பைபிளிலிருந்து அவர் தவறு என்று சொல்லும் அநேக காரியங்களைக் கொண்டுவருகையில், குறுகிய நேரத்தில் ஒவ்வொரு மறுப்பையும் சாதுரியமாக தவறென நிரூபிப்பது கடினமாகும். அநேகமாக வெறுமனே அவற்றில் பெரும்பாலானவற்றை கண்டும் காணாதது போல் இருந்துவிட்டு சிந்திக்கப்படும் குறிப்பிட்ட விஷயத்தோடு சம்பந்தப்பட்டதை மாத்திரமே கலந்தாலோசிப்பதே மிகச் சிறந்ததாகும். அல்லது வீட்டுக்காரர் உலகப்பிரகாரமான விவாதங்களுக்குள் உங்களை இழுக்க முற்படலாம். சாதுரியமாக உட்படுவதைத் தவிர்த்து, இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்குப் பைபிளின் பதிலைக் கொடுங்கள். இவ்விதமாக நீங்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவீர்கள்.—மத். 22:15-22.

8கோபமாக இருக்கும் ஒரு வீட்டுக்காரரைச் சந்திக்கையில் சாதுரியமாக ஆனால் உறுதியாக இருங்கள். அவரை அமைதிப்படுத்த முயற்சிப்பதற்காக சத்தியத்தை விட்டுக்கொடாதீர்கள். மாறாக, அவர் உணரும் விதமாக ஏன் உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள், ஒருவேளை அவர் ஏன் அந்த நோக்குநிலையைக் கொண்டிருக்கிறார் என்றுங்கூட அவரைக் கேட்கலாம். அவர் கருத்து தெரிவிப்பாரானால், நீங்கள் உணரும் விதமாக உணருவதற்கு என்ன காரணம் என்பதை அவருக்குத் தெரிவிக்க விரும்புவதைச் சொல்லலாம். ஆனால் உரையாடலை எந்தளவுக்கு நீங்கள் தொடர முடிந்தாலும்சரி, சாதுரியமே மிகச் சிறந்த பலன்களைப் பெற்றுத்தரும். நீதிமொழிகள் 15:1-லுள்ள புத்திமதியை மனதில் கொள்ளுங்கள்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” இருந்தபோதிலும், ஒருசில ஆட்கள் தங்களை நியாயமற்றவர்களாக காட்டும்போது, வெறுமனே புறப்பட்டுவிடுவதே மிகச் சிறந்தது.—மத். 7:6.

9கிறிஸ்தவ சகோதரர்களோடு சாதுரியம். யெகோவாவை அறியாதவர்களிடம் செயல்தொடர்பு கொள்ளும்போது சாதுரியத்தை வளர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், நம்முடைய ஆவிக்குரிய சகோதரர்களோடு செயல்தொடர்பு கொள்ளும்போதுகூட அது தேவைப்படுகிறது. சில சமயங்களில் வெளி ஊழியத்தில் மிகவும் சாதுரியமாக இருக்கும் சகோதர சகோதரிகள் தங்கள் சகோதர உறவுகளில் சாதுரியமாக இருக்கவேண்டிய அவசியத்தை மறந்துவிடலாம். யெகோவாவின் அமைப்புக்குள்ளே அன்பின் ஆவியையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்புவதற்கும் தினசரி நல்ல உறவுகளைக் கொண்டிருப்பதற்கும் பேச்சிலும் செயல்களிலும் சாந்தமாக இருத்தல் அத்தியாவசியமாகும். பவுல் சொன்னார்: “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.”—கலா. 6:10.

10நாம் அனைவருமே யெகோவாவின் அமைப்பில் இருப்பதன் காரணமாக நம்முடைய சகோதரர்களில் குறிப்பாக அவர்களுடைய ஆவிக்குரிய அக்கறைகளில், அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம். (பிலி. 2:2, 4) இருந்தபோதிலும் சாதுரியமுள்ள ஒரு நபர், தன் சகோதரர்களில் அக்கறை கொள்ளும்போது, ஒருவேளை கேட்பதற்கு எந்த உரிமையுமில்லாத சங்கடமான கேள்விகளைக் கேட்டு அவர்களுடைய சொந்த விஷயங்களில் தலையிடக்கூடாது என்பதை மதித்துணருகிறார். சாதுரியமானது “அந்நிய காரியங்களில் தலையிட்டு” கொள்வதைத் தவிர்க்க நமக்கு உதவிசெய்யும்.—1 பே. 4:15.

11சபையின் பிரச்சினைகளைக் கையாளும் மூப்பர்களுக்குச் சாதுரியம் விசேஷமாக முக்கியமாய் இருக்கிறது. கிறிஸ்தவ சபையில் தன்னிச்சையாக நடப்பவர்களோடு எவ்வாறு செயல்தொடர்பு கொள்ள வேண்டும் என்பதன்பேரில் அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரைகளை வழங்கியபோது, அவர் மென்மையாயும் தயவாயும் இருக்கவேண்டியதன் அவசியத்தை இவ்வாறு சொல்லி அழுத்திக் காண்பித்தார்: “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும் . . . தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்கள் . . . மறுபடியும் மயக்கந்தெளிந்து [பிசாசானவனுடைய, NW] கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்.” (2 தீ. 2:24-26) அதேவிதமாகவே தான் அறியுமுன்னே தவறான படியை எடுத்து வைத்திருக்கும் ஒரு சகோதரனை அணுகும்போது, “சாந்தமுள்ள ஆவி”யைப் பயன்படுத்துமாறு அப்போஸ்தலன் ஆலோசனை கொடுத்தார். (கலா. 6:1) இப்படிப்பட்டவர்களுக்குப் புத்திமதி கொடுக்கையில் மூப்பர்கள் சாதுரியமாக ஆனால் அதேசமயத்தில் நீதியின் நியமங்களுக்கு உறுதியாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

12மற்றவர்களோடு செயல்தொடர்புகொள்ளும்போது நம்முடைய சாதுரியம் குடும்ப வட்டாரத்திற்குள் இருப்பவர்களை உட்படுத்த வேண்டும். நாம் அவர்களை நன்கு அறிந்திருக்கும் காரணத்தால் குடும்பத்திற்குள் இருக்கும் ஆட்களிடம் துடுக்காக அல்லது தயவற்றவராக இருப்பதற்கு எந்தக் காரணமுமில்லை. அவர்களும்கூட சாதுரியமாக நடத்தப்பட தகுதியுள்ளவர்கள். அவர்கள் துடுக்கான, கேலியான மற்றும் கடுமையான சொற்களினால் வெறுப்புணர்ச்சியே கொள்வர். மற்ற குடும்ப அங்கத்தினர்கள் யெகோவாவின் ஊழியர்களாக இல்லாவிட்டால், அவர்களிடம் பேசும்போது சாதுரியத்தை கைவிட்டுவிடலாம் என்பதை அது அர்த்தப்படுத்துகிறதா? ஒருக்காலும் இல்லை, அவிசுவாசிகளோடு கொள்ளும் செயல்தொடர்புகளில் சாதுரியம் அவர்கள் ஒருநாள் உண்மை வணக்கத்தை ஏற்றுக்கொள்வதில் விளைவடையலாம்.—1 பே. 3:1, 2.

13நாம் பொதுமக்களோடு, நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளோடு, நம்முடைய சொந்த குடும்பங்களோடு செயல்தொடர்பு கொண்டாலும்சரி, தேவாட்சிக்கடுத்த சாதுரியத்தின் உபயோகம் அதிகமாக நல்ல கனியைப் பிறப்பிக்கிறது. நீதிமொழிகள் 16:24 காண்பிக்கிறவிதமாகவே அது கேட்போர்மீது இனிமையான ஒரு பாதிப்பைக் கொண்டிருக்கிறது: “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.” அப்படியென்றால் எல்லா வழிவகையின் மூலமாகவும் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் நன்மைசெய்ய வேண்டும் என்ற பலமான ஆசையினால் தூண்டப்பட்டு சாதுரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

[கேள்விகள்]

1. சாதுரியத்தை நாம் ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்?

2. சாதுரியம் என்பதன் பொருள் என்ன?

3. ஆவியின் கனிகள் எவ்விதமாக சாதுரியத்துக்கு ஆதாரமாக இருக்கிறது என்பதை விளக்கவும்.

4-8. ()நம்முடைய வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நாம் எவ்விதமாக சாதுரியத்தைக் காண்பிக்கலாம்? ()சாதுரியம் விட்டுக்கொடுப்பதை தேவைப்படுத்துகிறதா? அது எதை உட்படுத்துகிறது?

9, 10. நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களோடு செயல்தொடர்பு கொள்ளும்போது சாதுரியம் தேவைப்படுகிறதா?

11. சபையிலுள்ள மூப்பர்களின் பங்கில் சாதுரியத்துக்கானத் தேவையை வேதவசனங்கள் எவ்வாறு சுட்டிக்காட்டுகின்றன?

12, 13.நம்முடைய வீடுகளுக்குள் சாதுரியம் ஏன் முக்கியமாய் இருக்கிறது?