Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தலைப்பையும் பிரதான குறிப்புகளையும் உயர்த்திக்காண்பித்தல்

தலைப்பையும் பிரதான குறிப்புகளையும் உயர்த்திக்காண்பித்தல்

படிப்பு 27

தலைப்பையும் பிரதான குறிப்புகளையும் உயர்த்திக்காண்பித்தல்

1ஒவ்வொரு பேச்சுக்கும் அதற்கு உந்துவிக்கும் நோக்கத்தையளித்து அதனுடைய எல்லா பாகங்களையும் மனநிறைவளிக்கும் விதமாக ஒன்றாய் இணைப்பதற்கு ஒரு தலைப்பு அவசியமாயிருக்கிறது. உங்கள் தலைப்பு எதுவாக இருந்தாலும், அது பேச்சு முழுவதிலுமாக வியாபித்திருக்க வேண்டும். அது உங்கள் பேச்சின் சாராம்சமாக இருக்கிறது; அது ஒரே வாக்கியத்தில் ஒருவேளை வெளிப்படுத்தப்படலாம், என்றாலும் அளிக்கப்படும் பொருளின் ஒவ்வொரு அம்சத்தையும் உட்படுத்துவதாக இருக்கும். தலைப்பு கேட்போர் கூட்டத்திலுள்ள அனைவருக்கும் தெளிவாக இருத்தல் வேண்டும், சரியாக வலியுறுத்தப்பட்டால் அது அவ்வாறே இருக்கும்.

2ஒரு பேச்சின் தலைப்பு “விசுவாசம்” என்பது போல வெறுமனே பொதுப்படையானத் தலைப்புப் பொருளாக இல்லை; அந்தத் தலைப்புப் பொருள் கலந்தாலோசிக்கும் குறிப்பிட்ட ஓர் அம்சமாக இருக்கிறது. உதாரணமாக, தலைப்பு “உங்கள் விசுவாசம்—அது எவ்வளவு தூரம் சென்றெட்டுகிறது?” அல்லது “கடவுளைப் பிரியப்படுத்த விசுவாசம் தேவை” அல்லது “உங்கள் விசுவாசத்தின் அஸ்திவாரம்” அல்லது “விசுவாசத்தில் வளர்ந்துகொண்டே இருங்கள்” என்பதாக இருக்கலாம். இந்தத் தலைப்புகள் அனைத்துக்கும் விசுவாசமே மையமாக இருந்தபோதிலும், ஒவ்வொன்றும் தலைப்புப் பொருளை வித்தியாசமான விதத்தில் நோக்குகின்றன மற்றும் முற்றிலும் வித்தியாசமான கோணங்களில் விரிவாக்கப்படுவதைத் தேவைப்படுத்துகின்றன.

3சில சந்தர்ப்பங்களில் உங்கள் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக பொருளைச் சேகரிக்கவேண்டியிருக்கலாம். ஆனால் பேச்சு குறிப்புத்தாளில் தயாரிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்லது பிரதான குறிப்புகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக தலைப்பு தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுவிட வேண்டும். உதாரணமாக, ஒவ்வொரு வீட்டு பைபிள் படிப்பையும் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பைப் பற்றி நீங்கள் கலந்தாலோசிக்க விரும்பலாம். இது ஒரு பொதுப்படையான தலைப்புப் பொருள். இந்தத் தலைப்புப் பொருளின் பேரில் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு, உங்கள் கேட்போர் கூட்டத்தையும் உங்கள் பேச்சின் நோக்கத்தையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இதன் அடிப்படையில் நீங்கள் ஒரு தலைப்பைத் தெரிந்துகொள்வீர்கள். புதிய நபர் ஒருவரை நீங்கள் ஊழியத்தில் துவக்கி வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தால், யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதன் மூலம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றனர் என்பதைக் காண்பிக்க தீர்மானிக்கலாம். அதுவே உங்கள் தலைப்பாக இருக்கும். நீங்கள் சொல்வது அனைத்துமே யெகோவாவின் சாட்சிகள் என்ற பொதுப்படையான தலைப்புப் பொருளின் அந்த அம்சத்தை விரிவுபடுத்துவதற்காகவே இருக்கும்.

4உங்கள் பேச்சில் ஒரு தலைப்பை எவ்வாறு நீங்கள் அழுத்திக்காண்பிக்கலாம்? முதலாவது, உங்கள் நோக்கத்துக்கு உகந்ததாய் இருக்கும் பொருத்தமான ஒரு தலைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இது முன்கூட்டியே தயாரிப்பதைத் தேவைப்படுத்துகிறது. ஒரு முறை தலைப்பு தெரிந்துகொள்ளப்பட்டு அதைச் சுற்றி உங்கள் பேச்சு விரிவுபடுத்தப்படுமானால், நீங்கள் தயாரித்திருக்கும் குறிப்புத்தாளின் பேரில் பேச்சுக் கொடுத்தால், அது ஏறக்குறைய தானாகவே வலியுறுத்தப்பட்டிருக்கும். இருந்தபோதிலும், உண்மையில் பேச்சைக் கொடுக்கையில், அவ்வப்போது முக்கிய வார்த்தைகளை அல்லது தலைப்பிலுள்ள மையக் கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது தலைப்பு மனதில் பதிய வைக்கப்படுவதை அதிக உடனடியாக உறுதிப்படுத்துகிறது.

5பொருத்தமான தலைப்பு. தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பொருத்தமான ஒரு தலைப்பைக் கொண்டிருப்பது அநேகமாக ஒரு பிரச்சினையாக இல்லை, ஏனென்றால் அது பெரும்பாலான சமயங்களில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் நீங்கள் கொடுக்கும்படியாக அழைக்கப்படும் ஒவ்வொரு பேச்சிலும் இது உண்மையாக இருக்காது. ஆகவே தலைப்புக்குக் கருத்துடன் கவனம் செலுத்துவது ஞானமுள்ள காரியமாகும்.

6ஒரு தலைப்புப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை எது தீர்மானிக்கிறது? பல்வேறு காரியங்கள். உங்கள் கேட்போர் கூட்டத்தையும் உங்கள் நோக்கத்தையும் கையாளும்படி உங்களுக்கு நியமிக்கப்பட்ட பொருள் இருக்குமானால் அதையும் ஆலோசித்துப்பார்க்க வேண்டும். எந்த ஒரு தலைப்பும் வலியுறுத்தப்படாத பேச்சுக்களை கொடுப்பதாக கண்டால், எந்த ஒரு மையக் கருத்தையும் சுற்றி உங்கள் பேச்சை நீங்கள் உண்மையில் அமைத்துக்கொண்டில்லாமல் இருக்கலாம். நீங்கள் ஒருவேளை தலைப்புக்கு உண்மையில் பங்களிக்காத அளவுக்கு அதிகமான குறிப்புகளை உங்கள் பேச்சில் சேர்த்துக்கொண்டிருக்கலாம்.

7தலைப்பு  வார்த்தைகளை அல்லது கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்.  பேச்சின் எல்லா பாகங்களும் தலைப்பை உயர்த்திக் காண்பிக்கச் செய்வதற்கு ஒரு வழி, தலைப்பிலுள்ள முக்கிய வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது அல்லது தலைப்பின் மையக் கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது ஆகும். இசையில், தலைப்பு என்பது முழு இசைப்பாட்டுக்கும் தனித்தன்மையளிக்க போதிய அளவு அடிக்கடி திரும்பத் திரும்ப இசைக்கப்படும் இன்னிசையாகும். உண்மையில் அந்தப் பாட்டை அடையாளம் கண்டுகொள்ள பொதுவாக ஒருசில சந்தங்களே போதுமானதாக இருக்கின்றன. இன்னிசை அதே வடிவில் எப்பொழுதும் திரும்ப வருவதில்லை. சில சமயங்களில் இன்னிசையின் ஓரிரு சிறு துணுக்குகள் மாத்திரமே வருகின்றன, எப்போதாவது தலைப்பின்பேரில் மாறுபாடுகள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் முழுவதிலுமாக அது வியாபித்து அதற்குத் தனித்தன்மையளிக்கும் வரையாக ஏதாவது ஒரு வகையில், இயற்றுபவர் திறமையாக தன்னுடைய இன்னிசையை இசைப்பாட்டின் உள்ளேயும் வெளியேயும் புகுத்திவிடுகிறார்.

8பேச்சின் தலைப்பும் இப்படியே இருக்க வேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லப்படும் முக்கிய வார்த்தைகள் அல்லது தலைப்புக் கருத்து ஓர் இசைப்பாட்டில் தொடர்ந்து வருகிற இன்னிசையைப் போல் இருக்கிறது. இந்த வார்த்தைகளின் ஒரே பொருள் குறித்த பல சொற்கள் அல்லது மறுபடியும் சொல்தொகுப்பு செய்யப்பட்ட மையத் தலைப்பு கருத்து தலைப்பின்பேரில் மாறுபாடாக சேவிக்கிறது. இப்படிப்பட்ட வழிவகைகள் சலிப்புத்தட்டுவதாக ஆகாதபடிக்கு விவேகமாக பயன்படுத்தப்பட்டால், பொருளின் தலைப்பு முழு பேச்சின் சிறப்பியல்பான தோற்றத்தை அளிக்கச் செய்யும், உங்கள் கேட்போர் கூட்டம் எடுத்துச்செல்லும் பிரதான எண்ணமாக அது இருக்கும்.

**********

9உங்கள் பேச்சின் தலைப்பைத் தீர்மானித்தப் பிறகு, தயாரிப்பில் அடுத்த படி, அதை விரிவாக்குவதற்கு நீங்கள் பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் பிரதான குறிப்புகளைத் தேர்ந்தெடுப்பதாகும். உங்கள் பேச்சு ஆலோசனைத் தாளில், இது “பிரதான குறிப்புகளை மேலெழும்பி நிற்கச்செய்தல்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

10ஒரு பேச்சின் பிரதான குறிப்புகள் யாவை? அவை தற்செயலாக சுருக்கி குறிப்பிடப்படும் வெறும் அக்கறையூட்டும் கருத்துக்கள் அல்லது குறிப்புகள் அல்ல. அவை பேச்சின் பிரதான பகுதிகளாக, விளக்கமாக விரிவுபடுத்தப்படும் கருத்துக்களாக இருக்கின்றன. நிலைப்பெட்டி அடுக்கின் ஒரு பகுதி எதைத் தன்னகத்தே கொண்டிருக்கிறதென்பதை அடையாளங்காண ஒருவருக்கு உதவிசெய்யும் மளிகைக் கடையிலுள்ள நிலைப்பெட்டி பெயர் குறிப்புச் சீட்டுகள் அல்லது அறிவிப்புக் குறிகளைப் போல இருக்கின்றன. இவையே அந்தப் பகுதியில் எவை சேர்த்துக்கொள்ளப்படலாம் எவை சேர்த்துக்கொள்ளப்படக்கூடாது என்பதை கட்டுப்படுத்துகின்றன. நவதானியங்கள் என்ற ஒரு பெயர் குறிப்புச் சீட்டின்கீழ், ஜாம்களும் ஜெல்லிகளும் பொருத்தமில்லாமலும் மக்களைக் குழப்புவதாகவும் இருக்கும். காப்பி மற்றும் தேநீர் என்ற அறிவிப்புக் குறியின்கீழ், அரிசி சேராது. நிலையடுக்கின் பெயர் குறிப்புச் சீட்டுகள் ஜனநெருக்கத்தால் அல்லது அளவுக்கு மீறி சுமை ஏற்றியதால் மறைந்துவிட்டிருக்குமானால், அப்போது எதையும் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். ஆனால் அறிவிப்புக் குறிகள் தெளிவாக காணும்படி இருந்தால், ஒரு நபர் தனக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதை வேகமாக அடையாளங்கண்டுகொள்ள முடியும். அப்படியே உங்கள் பேச்சின் பிரதான குறிப்புகளும் இருக்கின்றன. அவற்றை புரிந்துகொண்டு மனதில் வைக்க முடியும்வரையில், கேட்போர் கூட்டத்துக்கு உங்கள் முடிவுரையை பின்தொடர்ந்துவர ஒருசில குறிப்புகளே தேவைப்படும்.

11மற்றொரு காரியம். பிரதான குறிப்புகளைத் தேர்ந்தெடுப்பதும் உபயோகிப்பதும் உங்கள் கேட்போர் கூட்டம் மற்றும் பேச்சின் நோக்கத்துக்கு இசைவாக வித்தியாசப்படும். இந்தக் காரணத்துக்காகவே, பள்ளி கண்காணி மாணாக்கர் தெரிவு செய்திருக்கும் பிரதான குறிப்புகளை, மாணாக்கர் பயன்படுத்துவதன் அடிப்படையில் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும்; ஆலோசகர் முன்கூட்டியே தன்னிச்சையாக தேர்ந்தெடுத்திருக்கும் குறிப்புகளின் பேரில் அல்ல.

12நீங்கள் தேர்ந்தெடுப்பைச் செய்யும்போது முக்கியமானவற்றை மாத்திரமே தெரிவுசெய்யுங்கள். ஒரு குறிப்பை முக்கியமானதாக்குவது எது என்பதாக கேட்டுக்கொள்ளுங்கள். அதில்லாமல் உங்கள் பேச்சின் நோக்கத்தை நீங்கள் நிறைவேற்றமுடியாதென்றால் அது முக்கியமானதாகும். உதாரணமாக கோட்பாட்டைப் பற்றி அறிந்திராத ஒரு நபரோடு மீட்பின் கிரயத்தைப் பற்றிய ஒரு கலந்துரையாடலில், பூமியின்மீது இயேசுவின் மானிடத்தன்மையை நிலைநாட்டுவது அத்தியாவசியமாகும், மற்றபடி அவருடைய பலியின் இணையானப் பண்பைக் காண்பிப்பது சாத்தியமாக இராது. ஆகவே இதை கலந்துரையாடலின் பிரதான குறிப்புகளில் ஒன்றாக நீங்கள் கருதுவீர்கள். ஆனால் திரித்துவம் ஒரு பொய்யான கொள்கையே என்பதை இந்த நபருக்கு நீங்கள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டிருந்தால், ஒரு மனிதராக இயேசு வகித்த ஸ்தானத்தைப்பற்றிய உங்கள் கலந்துரையாடல் இரண்டாம் பட்சமானதாகவே இருக்கும், ஏனென்றால் அது ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இயேசுவுடைய மீட்புக் கிரயத்தின் இணையான மதிப்பை நிலைநாட்டுவது அப்போது ஒப்பிடுகையில் எளிதாகவே இருக்கும். அந்தச் சந்தர்ப்பத்தில் இயேசுவின் மானிடத்தன்மைப் பற்றிய சிந்திப்பு முக்கியமாக இருக்காது.

13ஆகவே உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், என்னுடைய கேட்போர் கூட்டத்துக்கு ஏற்கெனவே என்ன தெரியும்? என்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற நான் எதை நிலைநாட்ட வேண்டும்? முதல் கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரிந்திருந்தால், இரண்டாவது கேள்விக்கு உங்கள் பொருளைச் சேகரித்து, அறியப்பட்டிருக்கும் எல்லா விஷயங்களையும் தற்காலிகமாக ஒருபுறமாய் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள குறிப்புகள் அனைத்தையும் கூடியமட்டும் மிகச் சில தொகுதிகளாக வகைப்படுத்துவதன் மூலம் நீங்கள் பதிலளிக்கலாம். இந்தத் தொகுதிகளே, என்ன ஆவிக்குரிய உணவை கேட்போர் கூட்டத்துக்கு அளிக்கிறீர்கள் என்பதில் உங்கள் அடையாள அறிவிப்புக் குறிகளாக ஆகின்றன. இந்தப் பெயர் குறிப்பு சீட்டுகள் அல்லது பிரதான குறிப்புகள் ஒருபோதும் மூடவோ மறைக்கப்படவோ கூடாது. அவையே மேலெழும்பி நிற்கவேண்டிய உங்கள் பிரதான குறிப்புகளாகும்.

14அளவுக்கு  அதிகமான பிரதான குறிப்புகளைக் கொண்டில்லாமல் இருத்தல்.  எந்தரு தலைப்புப் பொருளின் பேரிலும் முக்கியமானவை வெகு சில மாத்திரமே இருக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் அவற்றை ஒரு கையில் எண்ணிவிட முடியும். அவற்றை அளிப்பதற்கு உங்களுக்கிருக்கும் நேரம் என்னவாயிருந்தாலும் இது உண்மையாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான குறிப்புகள் மேலெழுந்து நிற்கும்படிச் செய்ய முயலும் பொதுவான கண்ணியினுள் விழுந்துவிடாதீர்கள். மளிகை கடை பெரியதாகவும், அளவுக்கு அதிகமாக அநேக பகுதிகளும் இருக்கையில், ஒருவர் வழிகளைக் கேட்க வேண்டியிருக்கும். ஒரு கூட்டத்தில் உங்கள் கேட்போர் கூட்டம் இத்தனை வித்தியாசமான கருத்துக்களை மாத்திரமே நியாயமாக கிரகித்துக்கொள்ள முடியும். உங்கள் பேச்சு எவ்வளவு நீளமாயிருக்கிறதோ, அது அவ்வளவு எளிதாகவும், உங்கள் முக்கிய குறிப்புகள் பலமானதாகவும் அதிக தெளிவாக நிர்ணயிக்கப்பட்டதாகவும் செய்யப்பட வேண்டும். ஆகவே உங்கள் கேட்போர் கூட்டம் அநேக காரியங்களை நினைவில் வைக்கும்படி செய்ய முயற்சிசெய்யாதீர்கள். அவர்கள் நிச்சயமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பதாக நீங்கள் நினைக்கும் அந்தக் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் இவற்றைப் பற்றியே பேசுவதில் உங்கள் எல்லா நேரத்தையும் செலவிடுங்கள்.

15அளவுக்கு அதிகமான குறிப்புகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை தீர்மானிப்பது எது? எளிதாகச் சொன்னால், ஏதேனும் ஒரு கருத்தை விட்டுவிட்டாலும் பேச்சின் நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தால், அந்தக் குறிப்பு ஒரு முக்கிய குறிப்பாக இல்லை. பேச்சை முழுமைப்பெறச் செய்ய அந்தக் குறிப்பை ஓர் இணைப்பிடையாக அல்லது நினைவூட்டுச் செய்தியாக சேர்த்துக்கொள்ள நீங்கள் தீர்மானிக்கலாம், ஆனால் ஒருவேளை விடப்பட முடியாதவற்றைப் போல அது முனைப்பாக மேலெழுந்து நிற்கக்கூடாது.

16மற்றொரு காரியம், ஒவ்வொரு குறிப்பையும் வெற்றிகரமாயும், முடிவாயும் விரிவாக்குவதற்கு உங்களுக்குப் போதிய நேரம் இருக்க வேண்டும். குறுகிய நேரத்தில் அதிகம் சொல்லப்பட வேண்டுமாயின், கேட்போர் அறிந்திருக்கும் காரியங்களைக் குறைந்தபட்சமாக வைத்துக்கொள்ளுங்கள். அறியப்படாத காரியங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் களைந்துபோட்டு, கேட்போர் மறக்கமுடியாதபடிக்கு அவற்றை அத்தனை தெளிவாக ஆக்கிவிடுங்கள்.

17கடைசியாக, உங்கள் பேச்சு எளிமையான ஒரு பதிலை உண்டாக்க வேண்டும். இது எப்போதும் அளிக்கப்படும் பொருளின் அளவைப் பொருத்ததாக இல்லை. அது உங்கள் குறிப்புகள் ஒன்றாகச் சேர்ந்து தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் விதமாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு கடைக்குள் நீங்கள் சென்று, அங்கே எல்லா பொருட்களும் தரையின் நடுவில் ஒன்றாகச் சேர்ந்து குவிக்கப்பட்டிருக்குமானால், அது நெருக்கமாயும் மிகவும் குழப்புவதாயும் தோற்றமளிக்கும். எதையும் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு சிரமம் இருக்கும். ஆனால், எல்லாம் சரியாக ஒழுங்காக வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட உருப்படிகள் ஒரே தொகுதியில் சேர்க்கப்பட்டு ஒரு பிரிவின் அறிவிப்புக் குறியால் அடையாளப்படுத்தப்பட்டால், விளைவு மிகவும் மனநிறைவளிப்பதாய் இருக்கிறது, ஏதாவது ஓர் உருப்படியை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஒருசில பிரதான கருத்துக்களின்கீழ் உங்கள் எண்ணங்களை ஒவ்வொரு தொகுதியிலும் சேர்ப்பதன் மூலம் உங்கள் பேச்சை எளிதாக்குங்கள்.

18பிரதான  கருத்துக்கள் தனித்தனியே விரிவாக்கப்படுதல்.  ஒவ்வொரு பிரதான எண்ணமும் தானாகவே மேலெழுந்து நிற்க வேண்டும். ஒவ்வொன்றும் தனித்தனியே விரிவாக்கப்பட வேண்டும். உங்கள் பேச்சின் முன்னுரையில் அல்லது முடிவுரையில் பிரதான தலைப்புகளின் ஒரு சுருக்கமான குறிப்புரை அல்லது சுருக்கத்தை இது தடைசெய்வதில்லை. ஆனால் பேச்சின் பொருளுரையில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு பிரதான கருத்தைப்பற்றி மட்டுமே நீங்கள் பேச வேண்டும். இணைப்புகளுக்கு அல்லது அழுத்தத்துக்காக தேவைப்படுமானால் மட்டுமே ஒன்று மற்றொன்றின்மீது படிவது அல்லது பின்னோக்கிச் செல்வது அனுமதிக்கப்பட வேண்டும். பிரதான குறிப்புகள் தனித்தனியே விரிவாக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை தீர்மானிப்பதில் விஷய சம்பந்தமான குறிப்புத்தாளை உண்டுபண்ண கற்றுக்கொள்வது பெரும் உதவியாக இருக்கும்.

19முக்கிய கருத்துக்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும் துணைக்குறிப்புகள். அளிக்கப்படும் சான்றுறுதி குறிப்புகள், வேதவசனங்கள் அல்லது மற்ற பொருள் பிரதான கருத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தி அதை விரிவாக விளக்க வேண்டும்.

20தயாரிக்கும்போது, எல்லா இரண்டாம்பட்ச குறிப்புகளையும் ஆராய்ந்து, குறிப்பைத் தெளிவுபடுத்தி, நிரூபித்து அல்லது விளக்கமளித்து பிரதான குறிப்புக்கு நேரடியாக பங்களிப்பவற்றை மாத்திரமே வைத்துக்கொள்ளுங்கள். பொருத்தமற்ற எதுவும் நீக்கப்பட வேண்டும். விவாதத்தை அது குழப்பியே விடும்.

21பிரதான கருத்துக்குத் தொடர்புடைய எந்த ஒரு குறிப்பும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதால் நேரடியாக அந்த எண்ணத்தோடு இணைத்துக்காட்டப்பட வேண்டும். கேட்போர் பொருத்தத்தைச் செய்துகொள்ள விட்டுவிடாதீர்கள். இணைப்பைத் தெளிவாக்குங்கள். இணைப்பு என்னவென்பதைச் சொல்லுங்கள். பேசப்படாமல் இருப்பது பொதுவாக புரிந்துகொள்ளப்படாது. பிரதான எண்ணத்தை வெளிப்படுத்தும் முக்கிய வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அல்லது அவ்வப்போது பிரதான குறிப்பின் கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் இதை நிறைவேற்ற முடியும். பேச்சின் பிரதான குறிப்புகள்மீது உங்களுடைய எல்லா துணைக்குறிப்புகளையும் ஒருமுகப்படுத்தி, ஒவ்வொரு பிரதான குறிப்பையும் தலைப்போடு தொடர்புபடுத்தும் கலையில் நீங்கள் தேர்ச்சிபெற்றுவிட்டால், உங்கள் பேச்சுக்கள் அவற்றைக் கொடுப்பதற்கு எளிதாகவும் மறப்பதற்குக் கடினமாகவும் செய்யும் மகிழ்வளிக்கும் எளிமையை ஏற்கும்.

[கேள்விகள்]

1-4. ஒரு பேச்சின் தலைப்பு என்பதன் பொருள் என்ன என்பதை விளக்கவும்.

5, 6. ஒரு தலைப்புப் பொருத்தமாயிருக்கிறதா என்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்கலாம்?

7, 8. ஒருவர் தலைப்பை உயர்த்திக் காண்பிக்கக்கூடிய வழிகளைக் காண்பிக்கவும்.

9-13. ஒரு பேச்சின் பிரதான குறிப்புகள் என்னவென்பதை விளக்கவும். உதாரணத்துடன் விவரிக்கவும்.

14-17. நாம் ஏன் அளவுக்கு அதிகமான பிரதான குறிப்புகளைக் கொண்டிருக்கக்கூடாது என்பதற்குக் காரணங்களைக் கொடுக்கவும்.

18. பிரதான குறிப்புகள் எவ்விதமாக விரிவாக்கப்பட வேண்டும்?

19-21. துணைக்குறிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும்?