Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளுக்குக் கவனத்தைத் திருப்புதல்

பைபிளுக்குக் கவனத்தைத் திருப்புதல்

படிப்பு 24

பைபிளுக்குக் கவனத்தைத் திருப்புதல்

1கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு அனைவருடைய கவனத்தையும் திருப்புவதே ஊழியத்தில் நம்முடைய ஆசையாக இருக்கிறது. நாம் பிரசங்கிக்கிற செய்தியை அது கொண்டிருக்கிறது, நாம் சொல்வது சுயமான எண்ணங்கள் அல்ல, ஆனால் கடவுளிடமிருந்து வருபவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். கடவுளை நேசிக்கும் மக்கள் பைபிளில் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர். அது வாசித்துக் காட்டப்படுகையில், அவர்கள் செவிகொடுத்துக் கேட்டு அதன் ஆலோசனையை இருதயத்தில் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தங்களுடைய சொந்த பைபிள் பிரதியை வெளியே எடுத்து அவர்களாகவே அதை வாசிக்கையில், அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. ஆகவே, வெளி ஊழியத்தில், சூழ்நிலைகள் அதை சாத்தியமானதாக்கும்போது, வீட்டுக்காரரை அவருடைய சொந்த பைபிளை வெளியே எடுத்து உங்களோடு சேர்ந்து வேதவசனங்களைப் பார்க்கும்படியாக உற்சாகப்படுத்துவது ஞானமுள்ள காரியமாகும். அதேவிதமாகவே, சபை கூட்டங்களில், அனைவரும் தங்கள் பைபிளை உபயோகிக்குமாறு உற்சாகப்படுத்தப்பட்டால், புதியவர்கள் இதுவே நம்முடைய நம்பிக்கைகளுக்கு ஆதாரமாயிருப்பதை உடனடியாக உணர்ந்துகொள்வர், கண்ணால் பார்த்துப் பதித்துக்கொள்ளும் கூடுதலான சொல்லழுத்தத்திலிருந்து அனைவரும் பயனடைவர்.

2ஆகவே, எங்கெல்லாம் நடைமுறையில் சாத்தியமாயிருக்கிறதோ அங்கெல்லாம் உங்கள் கேட்போர் கூட்டத்திலுள்ளவர்கள் வேதவசனங்களை நீங்கள் வாசிக்கையில், அவர்களுடைய சொந்த பைபிள்களில் அவற்றை பின்பற்றிக்கொண்டு வருவார்களேயானால், உங்கள் பேச்சின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் நிச்சயமான அனுகூலத்தை உடையவர்களாக இருப்பீர்கள். அவர்கள் அதைச் செய்கிறார்களா இல்லையா என்பது நீங்கள் அவர்களுக்குச் சரியான ஊக்குவிப்பை அளிக்கிறீர்களா என்பதையே பெருமளவில் சார்ந்திருக்கும். இதுதானே உங்கள் பேச்சு ஆலோசனைத் தாளில், “கேட்போர் பைபிளை உபயோகிக்க உற்சாகப்படுத்துதல்” என்பதாக குறிப்பிடப்படுகிறது.

3குறிப்பாகச் சொல்வதன் மூலம். பைபிளை உபயோகிக்குமாறு கேட்போருக்கு நேரடியான அழைப்பு விடுப்பது மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்; இந்த முறை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் அவற்றை வாசிப்பதற்கு முன்பாக அந்த வேதவசனங்கள் எங்கே இருக்கின்றன என்பதை வெறுமனே சொல்வதன் மூலம் அதே விளைவுகளைப் பெறலாம்; ஒருவேளை இப்படியாக இருக்கலாம்: “இப்பொழுது நாம் 2 தீமோத்தேயு 3:1-5 வாசிக்கையில், இந்தச் சுற்றுவட்டாரத்திலுள்ள நிலைமைகளைப் பற்றியே சிந்தித்துப்பாருங்கள்.” பின்னர் அந்த வேதவசனத்துக்குத் திருப்புகையில், கேட்போர் குறிப்பாக நீங்கள் சொன்னதை அனுகூலப்படுத்திக் கொண்டிருக்கின்றனரா என்பதைப் பார்க்க சுற்றி நோட்டமிடுங்கள். பொதுவாக அவர்களும்கூட வேதவசனத்தை எடுத்துப்பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

4கேட்போரை எடுத்துப்பார்க்க செய்வதன் மூலம் எந்த வேதவசனங்களை அழுத்திக்காண்பிப்பது என்பதைத் தீர்மானிப்பது பேச்சாளரே. உங்கள் கேட்போர் கூட்டத்தைக் கவனியுங்கள். அவர்கள் உங்களைப் பின்பற்றிவருகிறார்களா என்பதைப் பார்ப்பதில் அக்கறையுள்ளவர்களாயிருங்கள். ஏதோவொரு காரணத்துக்காக உரை வாசிப்பு பேச்சை கொடுக்கும் அவசியம் ஏற்பட்டாலும்கூட, கேட்போர் தங்கள் பைபிள்களில் உங்களைப் பின்பற்றிவரும் வகையில் அநேகமாக முக்கிய வேதவசனங்களை நீங்கள் கையாளமுடியும்.

5வேதவசனத்தைக் கண்டுபிடிக்க நேரத்தை அனுமதிப்பதன் மூலம். ஒரு வேதவசனத்தை வெறுமனே குறிப்பிடுவது மாத்திரமே போதுமானதல்ல. நீங்கள் அதை வாசித்துவிட்டு கேட்போர் அதை கண்டுபிடிக்க நேரத்தை கொண்டிருப்பதற்கு முன்பாக மற்றொன்றுக்குப் போய்விட்டால், அவர்கள் கடைசியில் உற்சாகமிழந்து அதைச் செய்வதை நிறுத்திக்கொள்வார்கள். உங்கள் கேட்போர் கூட்டத்தைக் கவனித்து, பெரும்பாலானோர் வேதவசனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களேயானால், அப்பொழுது அது வாசிக்கப்படலாம்.

6வேதவசனத்தை நீங்கள் வாசிக்க திட்டமிட்டிருப்பதற்கும் போதியளவு முன்கூட்டியே அதை குறிப்பிடுவது பொதுவாக உகந்ததாயிருக்கிறது. அப்பொழுது கேட்போர் வேதவசனத்தை கண்டுபிடித்துகொண்டிருக்கையில் அடிக்கடி நீண்ட நிறுத்தங்கள் செய்வதிலும் அல்லது அநாவசியமான “இடைவேளைகளிலும்” அதன் சம்பந்தமாக ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பதிலும் மதிப்புள்ள நேரம் இழக்கப்படுவதில்லை. என்றபோதிலும் பொருத்தமான நிறுத்தம் இங்கே சரியாகவே இருக்கிறது. மறுபட்சத்தில், வேதவசனத்தை அறிமுகப்படுத்துகையில் ஆரம்பத்தில் அது குறிப்பிடப்பட்டுவிட்டால், நீங்கள் சொல்லும் சில காரியங்கள் உன்னிப்பாக பின்பற்றப்படாது என்பதை மனதில் வைக்க வேண்டும். ஆகவே இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஆரம்ப விவாதத்துக்குப் பொருத்தமான அந்தக் காரியங்கள் வேதவசனத்தைக் குறிப்பிடுவதற்கு முன்பே சொல்லப்பட வேண்டும்.

*****************

7ஒரு பேச்சில் பயன்படுத்தப்படும் வேதவசனங்கள் சாதாரணமாக பேச்சின் மையக் குறிப்புகளாக இருக்கின்றன. விவாதங்கள் இந்த வேதவசனங்களைச் சுற்றியே இருக்கின்றன. அப்படியென்றால், அவை எந்தளவு பேச்சுக்கு பங்களிக்கும் என்பது அவை எவ்வளவு பலன்தரத்தக்கவிதமாக பயன்படுத்தப்படுகிறது என்பதையே சார்ந்திருக்கிறது. ஆகவே உங்கள் பேச்சு ஆலோசனைத் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள “வேதவசனங்களைச் சரியான முறையில் அறிமுகப்படுத்துதல்” என்ற விஷயம் சிந்திக்கப்படுவதற்கு முக்கியமான ஒன்றாகும்.

8ஒரு வேதவசனத்தை அறிமுகப்படுத்தி, வாசித்து, பொருத்துவதற்கு வித்தியாசமான மிகப் பல வழிகள் உண்டு. உதாரணமாக, சில சமயங்களில், வேதவசனத்தின் அறிமுகம் வாசிப்பதற்கு வழிநடத்துவது மட்டுமல்லாமல், பொருத்தத்தையும்கூட விளக்குகிறது, ஆகவே வாசிப்பது வெறுமனே குறிப்பை வலியுறுத்தவோ தீர்வான முடிவையோ மட்டுமே கொடுக்கிறது. மறுபட்சத்தில், சில வேதவசனங்கள் பேச்சின் ஆரம்பத்திலேயே இருப்பது போல, எந்த அறிமுக வார்த்தையும் பேசாமல், முனைப்பான விளைவை உண்டுபண்ணுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

9வேதவசனங்களை எவ்விதமாக பலன்தரத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள, அனுபவமுள்ள பேச்சாளர்கள் என்ன செய்கின்றனர் என்பதை ஆராய்ந்துபாருங்கள். வேதவசனங்கள் அறிமுகப்படுத்தப்படும் வித்தியாசமான வழிகளை அடையாளங்காண முயற்சிசெய்யுங்கள். அவற்றின் பலன்தரத்தக்க தன்மையைச் சிந்தித்துப்பாருங்கள். உங்கள் சொந்த பேச்சுக்களைத் தயாரிக்கையில், விசேஷமாக பிரதான குறிப்புக்கு அது முக்கிய வேதவசனமாக இருந்தால், அது எதை சாதிக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே யோசித்துப்பாருங்கள். அதிக முனைப்பான விளைவோடு பயன்படுத்தப்படும் விதமாக அதன் அறிமுகத்தை கவனமாக திட்டமிடுங்கள். இங்கே சில ஆலோசனைகள்:

10ஒரு கேள்வி. கேள்விகள் பதில்களைக் கேட்கின்றன. அவை சிந்தனையைத் தூண்டுகின்றன. வசனமும் அதன் பொருத்தமும் பதிலை அளிக்க அனுமதியுங்கள். உதாரணமாக, இரத்தமேற்றுதலை கலந்தாலோசிக்கையில், எபிரெய வேதாகமத்தின் பிரகாரம் தடையை நிலைநாட்டினப் பின்பு, நீங்கள் அப்போஸ்தலர் 15:28, 29-ஐ அறிமுகப்படுத்துவீர்கள். நீங்கள் இவ்வாறு கேட்பதன் மூலம் வேதவசனத்தை அறிமுகப்படுத்தலாம், “ஆனால் இதே தடை கிறிஸ்தவர்களையும் கட்டுப்படுத்துவதாக இருக்கிறதா? பரிசுத்த ஆவியால் உந்துவிக்கப்பட்ட ஆரம்பகால சபையின் நிர்வாகக் குழுவினுடைய இந்த அதிகாரப்பூர்வமான கட்டளையைக் கவனியுங்கள்.”

11வேதவசனத்தால் நிலைநிறுத்தப்படவிருக்கும் ஒரு கூற்று அல்லது நியமம் அறிமுகப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, குற்றமிழைத்தலின் பேரிலான ஒரு பேச்சில் நீங்கள் இவ்வாறு சொல்லக்கூடும்: “சரி மற்றும் தவறினிடமாக நம்முடைய மனநிலை என்ன என்பதைப் பற்றியதில் நம்முடைய தோழர்களின் தெரிவும்கூட முக்கியமான காரியமாக இருக்கிறது.” பின்னர் உங்கள் கூற்றை நிலைநிறுத்துவதற்காக 1 கொரிந்தியர் 15:33-லுள்ள பவுலின் வார்த்தைகளை நீங்கள் வாசிக்கலாம்.

12பைபிளை நம்பத்தக்க அதிகாரம் பெற்றதாக மேற்கோள் காட்டுதல். விசேஷமாக இரண்டாம் பட்சமான வசனங்களுக்கு நீங்கள் வெறுமனே இவ்வாறு சொல்லலாம்: “இந்தக் குறிப்பின்பேரில் கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறதென்பதை கவனியுங்கள்.” வசனத்தை எதிர்பார்ப்போடு பார்ப்பதற்கு இது போதுமான காரணமாக இருக்கிறது, அதைப் பயன்படுத்துவதற்கான தெளிவான காரணத்தை அளிக்கிறது.

13ஒரு பிரச்சினை. “நரகம்” பற்றிய பேச்சில் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “மனிதன் நித்திய அக்கினி ஜுவாலையில் துன்பப்பட வேண்டுமானால், மரணத்துக்குப்பின் அவன் உணர்வுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்தும். ஆனால் பிரசங்கி 9:5, 10 என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்.”

14எண்ணிறந்த தெரிவுகள். குறிப்பிட்ட ஒரு கேட்போர் கூட்டத்துக்கு நேரடியான ஒரு கேள்வி அல்லது பிரச்சினை அளவுக்கு அதிகமாக கடினமாய் இருக்குமென்றால், பல்வேறு சாத்தியங்களை அளித்து, வசனமும் அதன் பொருத்தமும் பதிலளிக்க அனுமதியுங்கள். சரியாக யாரிடம் ஜெபிக்க வேண்டும் என்பதைக் காண்பிக்க ஒரு கத்தோலிக்கரிடம் பேசுகையில் நீங்கள் மத்தேயு 6:9-ஐ பயன்படுத்த விரும்பலாம். நேரடியான ஒரு கேள்வி அல்லது பிரச்சினை உங்கள் வீட்டுக்காரரின் மனதைத் தவறான திசையில் திருப்பிவிடலாம், ஆகவே நீங்கள் இவ்விதமாகச் சொல்லலாம்: “நாம் யாரிடம் ஜெபிக்க வேண்டும் என்பதைக் குறித்த விஷயத்தில் அநேக கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் மரியாளிடம் என்றும் மற்றவர்கள் ‘புனிதர்கள்’ ஒருவரிடமும் ஜெபிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர், ஆனால் சிலர் நாம் கடவுளிடம் மட்டுமே ஜெபிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இயேசு சொன்னதை இங்கே காணலாம்.”

15சரித்திரப்பூர்வமான பின்னணி. மீட்பின் கிரயம் பேரிலான ஒரு பேச்சில், இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ‘நமக்கு நித்திய மீட்பை உண்டுபண்ணினார்,’ என்பதைக் காண்பிப்பதற்கு எபிரெயர் 9:12-ஐ பயன்படுத்துவதென்றால், வசனத்தை நீங்கள் வாசிப்பதற்கு முன்னால் இயேசு பிரவேசித்த இடத்துக்குப் படமாயிருந்ததாக பவுல் குறிப்பிடும் கூடாரத்தினுடைய ‘பரிசுத்த ஸ்தலத்தை’ பற்றிய சுருக்கமான விளக்கத்தைக் கொடுப்பது அவசியமாக இருப்பதை நீங்கள் காணலாம்.

16சந்தர்ப்பம். சில சமயங்களில் சுற்றியுள்ள வசனங்கள் விளக்கும்விதமாக ஒரு வசனத்தினுடைய அமைப்பு, வேதவசனத்தை அறிமுகப்படுத்துவதில் பிரயோஜனமாயிருக்கிறது. உதாரணமாக, ‘இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துவதில்’ என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் காண்பிக்க லூக்கா 20:25-ல் உள்ள வேதவசனத்தை நீங்கள் பயன்படுத்துகையில், பதிவு சந்தர்ப்பத்துக்கு தொடர்புடையதாக இருப்பதால் இராயனுடைய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த நாணயத்தை இயேசு பயன்படுத்தியதை விளக்குவது நன்மையாக இருப்பதை நீங்கள் காணலாம்.

17ஒன்றுசேர்த்தல். இந்த முறைகளை ஒன்றுசேர்த்தலும்கூட சாத்தியமாகவும் அநேகமாக பயன்தருவதாகவும் இருக்கின்றன.

18வசனம் வாசிக்கப்படுகையில் கவனத்தை உரிமையுடன் பெறும் அளவுக்கு வேதவசனத்தின் அறிமுகம் போதிய எதிர்பார்ப்பை தூண்டிட வேண்டும். வசனத்தை நீங்கள் உபயோகிப்பதற்கான காரணத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்.

19வேதவசனங்களுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுதல். ஒரு வசனத்துக்கு நீங்கள் எதிர்பார்ப்பை தூண்டியிருப்பதை எவ்விதமாக அறிந்துகொள்ளலாம்? முக்கியமாக கேட்போருடைய பிரதிபலிப்பின் மூலமாக, ஆனால் நீங்கள் வசனத்தை அறிமுகப்படுத்தும் விதத்தின் மூலமாகவும்கூட. அறிமுகப்படுத்திய பிறகு வசனத்தை வாசிக்கத் தவறியதன் காரணமாக கேட்போர் தீர்மானிக்க முடியாமல் விடப்படுவார்களானால், அல்லது உங்கள் அறிமுகத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டால், வசனத்தில் அக்கறையை நீங்கள் தூண்டியிருப்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். நிச்சயமாகவே அறிமுகம் தலைப்புப் பொருளோடும் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் வசனத்தோடும் இசைவாக இருக்க வேண்டும். வசனமோ அதைத் தொடர்ந்துவரும் பொருத்தமோ அறிமுகத்தில் எழுந்தக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.

20ஒரு வசனத்தின் அறிமுகம் ஓர் அறிவிப்புக்கு முன்வரும் எக்காள ஒலிக்கு ஒப்பிடப்படலாம். கட்டியக்காரன் ஒரு முழு சங்கீதக் கச்சேரியைச் செய்வதற்கு தன்னை அளிப்பதில்லை. மாறாக, அவனுடைய எக்காளத்தின் கிளர்ச்சியூட்டும் சுருதி, அறிவிப்பின்பேரில்தானே எல்லா அக்கறையையும் கவனத்தையும் மையப்படுத்துகிறது. இவ்விதமாக அறிமுகப்படுத்தப்படுகையில், நீங்கள் தெரிந்தெடுத்திருக்கும் வசனம் மிகுந்த மகிழ்வோடும் பயனுள்ள வகையிலும் கேட்கப்படும்.

21வேதவசனத்தைப் பயன்படுத்துவதற்கான காரணத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துதல். ஒரு வசனத்துக்கு அறிமுகம், ஒரு கேள்விக்குப் பதிலளிக்காமல் இருக்கையில், அந்த வசனம் ஏன் பொருத்தமாயும் முழு கவனத்துக்குத் தகுதியாயும் இருக்கிறது என்பதைக் காண்பிக்க குறைந்தபட்சம் ஏதாவது ஒரு காரணத்தை அளிக்க வேண்டும். உதாரணமாக மனிதனின் நிரந்தரமான வீடாக பூமியைப் பற்றிய கலந்தாலோசிப்பில், நீங்கள் வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம். உங்களுடைய ஆரம்ப விவாதத்தோடுகூட, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “இப்பொழுது இந்த அடுத்த வேதவசனத்தில், வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் துயரமும் மரணமும் இல்லாமலிருக்கையில் கடவுளுடைய கூடாரம் எந்த இடத்தில் இருக்கும் என்பதைக் கவனியுங்கள்.” வசனம் வெளிப்படுத்துவதற்கு எதையோ ஒன்றை விட்டுவிடுவதன் மூலம் நீங்கள் எதிர்பார்ப்பை தூண்டியிருப்பது மட்டுமல்லாமல், உங்கள் வசனத்தின் முக்கியமான பாகத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியும் இருக்கிறீர்கள். வசனத்தை வாசித்தப் பிறகு உங்கள் விவாதத்துக்கு இதை எளிதில் பொருத்திவிடலாம். இவ்விதமாக வேதவசனத்தின் உண்மையான பொருளடக்கத்துக்கு கவனத்தைத் திருப்புவதன் மூலம், கடவுளுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள்.

[கேள்விகள்]

1, 2. கேட்போரின் கவனத்தை நாம் ஏன் பைபிளிடமாக திருப்ப வேண்டும்?

3, 4. இதைப் பலன்தரத்தக்க முறையில் நாம் எவ்வாறு செய்யலாம்?

5, 6. நாம் வாசிக்க திட்டமிடும் வேதவசனங்களைக் கண்டுபிடிப்பதற்கு கேட்போருக்கு நேரத்தை அனுமதிப்பது ஏன் பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது என்பதை விளக்கவும்.

7-18. வேதவசனங்களைப் பலன்தரத்தக்க விதமாக அறிமுகப்படுத்துவதற்கு என்ன முறைகள் பயன்படுத்தப்படலாம்?

19, 20. குறிப்பிடப்படும் வசனத்துக்கு எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறோமா என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்கலாம்?

21. ஒரு வசனத்தை பயன்படுத்துவதற்கான காரணத்தின்மீது நாம் ஏன் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்?