Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘பொது வாசிப்பில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்’

‘பொது வாசிப்பில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்’

படிப்பு 6

‘பொது வாசிப்பில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்’

1அப்போஸ்தலன் பவுல், தீமோத்தேயுவுக்கு ‘பொது வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிரு,’ என்று அறிவுரை கூறினார். அவர் தீமோத்தேயுவுக்கு இதையும் ஊழியத்துக்கான கூடுதல் தகுதிகளையும்பற்றி உடன் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு போதிக்கும்படி கட்டளையிட்டார். (1 தீ. 4:13, NW) ஏவப்பட்டெழுதப்பட்ட அந்த ஆலோசனை, இன்று கடவுளுடைய ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும்கூட பொருத்தமாயிருக்கிறது, அதற்கு கவனம்செலுத்துவது நமக்கு நல்லது.

2பொது வாசிப்பு அடிக்கடி தேவராஜ்ய ஊழியரின் பங்கில் தேவைப்படுகிறது. காவற்கோபுர படிப்பு மற்றும் சபை புத்தகப்படிப்பில், வேதவசனங்களும் பாராக்களும் வாசிக்கப்பட வேண்டும். ஊழியக் கூட்டத்திலும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும், வெளி ஊழியத்திலும் பைபிள் வசனங்கள் வாசிக்கப்படுகின்றன. ஆகவே ஒவ்வொரு ஊழியனும் நல்ல பொது வாசிப்பைச் செய்பவராக ஆவது அவருடைய சொந்த நன்மைக்காகவும் செவிகொடுத்துக் கேட்போரின் நன்மைக்காகவும் இருக்கிறது.

3பொது வாசிப்பு என்பது மற்றவர்களின் நன்மைக்காக சப்தமாக வாசிப்பதாகும். ஆனால் வாசிப்பவர், வார்த்தைகளில் தடுமாறி, தவறான சொல்தொகுப்பு அல்லது கருத்தைத் தெளிவற்றதாக்கும் வகையில் தவறான இடத்தே அழுத்தத்தைப் பயன்படுத்துவாரேயானால் செவிகொடுப்போர் உண்மையில் முழுவதுமாக பயனடைவார்களா? அவர் உற்சாகமின்றி தொனியில் ஏற்றத்தாழ்வின்றி வாசிப்பாரேயானால் என்ன கவனத்தை அவர்கள் கொடுப்பார்கள்? ஒரு தொகுதியில் நன்றாக வாசிப்பதற்கு தயாரிப்பு அவசியம். எந்த நியமிப்புக்கும், சபை புத்தகப்படிப்பில் வாசிப்பதற்கும்கூட பொருளை முழுவதுமாக வாசிக்காமல் ஒருபோதும் செல்லக்கூடாது, இது நல்லது. மற்றபடி சபையார் அவர்கள் பெறக்கூடிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பர், வாசகரிடமிருந்து தவறான உச்சரிப்புகளைக் கற்றுக்கொள்ளலாம். ஆம், ஒவ்வொரு ஊழியனும் பொது வாசிப்பில் ஈடுபடுத்திக்கொள்வதற்கு அவசியமிருக்கிறது.—ஆப. 2:2, NW.

4தேவையான பண்புகள். வாசிக்கையில் உற்சாகமாயிருங்கள். வார்த்தைகளால் வருணிக்கும் உணர்ச்சிகளைப் பிரதிபலித்து உங்கள் அளிப்பில் அனலை ஊட்டுங்கள். இவ்விதமாக நீங்கள் உணர்ச்சியற்ற மற்றும் உயிரோட்டமில்லாத அளிப்பைத் தவிர்ப்பீர்கள். சபையார் முக்கியப் பகுதிகளைக் கேட்கத் தவறும் அளவுக்கு உங்கள் சப்தத்தைக் குறைக்காதபடிக்கு கவனமாயிருங்கள். உங்கள் சப்தம் பயன்படுத்தப்படும் அறை அல்லது அரங்கத்தின் எல்லா பகுதிகளையும் எட்டும்வகையில் போதுமானதாய் இருக்க வேண்டும். ஒரு சொல்லையும்கூட புரிந்துகொள்ள ஒருவரும் சிரமப்படக்கூடாது.

5சொற்களின் சில பகுதிகளை வெட்டி குறுக்கிவிடாமலும் அல்லது விளங்காதபடிக்கு அவற்றை சேர்த்து குளறிப்பேசிவிடாமலும் உங்கள் சொற்களைத் தெளிவாக ஒலிப்பது அவசியமாகும். மறுபட்சத்தில், உங்கள் பேச்சுமுறை, செய்தியிலிருந்து திசைதிருப்பிவிடும் அளவுக்கு அத்தனை நுணுக்கமாயிருப்பது நல்லதல்ல. நல்ல தெளிவான வாசிப்பு என்பது கேட்போர் நீங்கள் வாசிக்கும் சொற்களைப்பற்றி ஒருபோதும் எந்தவிதமான சந்தேகத்திலும் இல்லாதிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. பெரும்பாலும் தெளிவில்லாமைக்குக் காரணம் குரல் சபையாரிடமாய் ஊடுருவிச் செல்லும் வகையில் வெளிப்படாதிருப்பதே ஆகும். ஆகவே வாசிக்கும்போது உங்கள் தலையை நிமிர்த்தி வைப்பதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். எந்தவித இடைஞ்சல்களும் இல்லாமல் ஒலி வெளியே செல்லும்படி உங்கள் வாயைத் திறந்து வாசியுங்கள்.

6சரியான அழுத்தம் முக்கியமாகும். ஆம், அதுவே நீங்கள் வாசிப்பதை புரிந்துகொள்வதற்குத் திறவுகோலாகும். அழுத்தத்தில் ஒரு மாற்றம் சபையாருக்கு முற்றிலும் வித்தியாசமான கருத்தை வெளிப்படுத்திடக்கூடும் என்பது நன்கு அறியப்பட்டதே. சில சமயங்களில் தனியொரு சொல்லுக்கு விசேஷ அழுத்தம் தேவைப்படுகிறது, ஆனால் அநேகமாக சொற்களின் ஒரு தொகுதி, ஒரு முழு சொற்றொடரே அழுத்தி வாசிக்கப்பட வேண்டும். அழுத்தம் கொடுக்கப்படவேண்டிய சரியான இடத்தை தெரிவிக்கப்படவிருக்கும் கருத்து தீர்மானிக்கிறது. இது வெறுமனே மீதமிருக்கும் வாக்கியத்தினால் அல்ல, முழு விவாதத்தினாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. சரியான இடத்தில் நிறுத்தங்கள், அழுத்தத்தின் இன்றியமையாத பாகமாகும். சுருக்கமான நிறுத்தங்கள் அர்த்தமுள்ள வகையில் சொற்களைச் சேர்க்க உதவிசெய்து முக்கிய கருத்துக்களிடமாக கவனத்தை இழுக்கின்றன. நீளமான நிறுத்தங்கள் விவாதத்தின் முக்கிய பகுதி முடிவடைவதைச் சுட்டிக்காண்பிக்கின்றன.

7நீங்கள் நன்றாக வாசிக்க முயற்சிசெய்யும்போது, தொனியிலும் வேகத்திலும் வேறுபாடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அது இல்லையென்றால் வாசிப்புமுறை சலிப்பூட்டுவதாயும் கவர்ச்சியற்றதாயுமிருக்கும். ஆனால் சரியாக பயன்படுத்தப்படுகையில், தொனியில் இப்படிப்பட்ட வேறுபாடுகள், உங்கள் வாசிப்பு அதிக இயல்பாய் அமைந்த, உயிரோட்டமுள்ள சம்பாஷணையைப்போன்று தொனிக்கச் செய்ய அதிகத்தைச் செய்யும்.

8உரை வாசிப்பு. பொது வாசிப்பை உட்படுத்தும் முக்கியமான சூழ்நிலைகளில் ஒன்று உரை வாசிப்பு பேச்சைக் கொடுப்பதாகும். இந்த வகையான அளிப்பு அதற்குரிய இடத்தைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, அவ்வப்போது குறிப்பிட்ட ஒரு தேசத்திலுள்ள கடவுளுடைய மக்களின் எல்லா சபைகளும் ஒரே சமயத்தில் ஒரே தகவலைக் கேட்பதற்கு சொஸைட்டி ஏற்பாடு செய்யக்கூடும். மேலுமாக, பேச்சிலிருந்து ஒரு பகுதியை செய்தித்துறை மேற்கோள் காண்பிக்கும் சாத்தியமோ அல்லது சிக்கலான பொருள் திருத்தமாக அளிக்கப்படவேண்டியதாகவோ இருக்கையில் அசெம்பிளி நிகழ்ச்சிநிரலிலும் உரை வாசிப்பு பேச்சுக்கள் தங்கள் இடத்தைக் கொண்டிருக்கின்றன.

9உரை வாசிப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய இடர்ப்பாடு சம்பாஷணை முறையில் வார்த்தைகளும் சொற்றொடர்களும் ஒன்று சேர்க்கப்படுவது போல தோன்றச்செய்வதாகும். இருந்தபோதிலும், தொனி கணிசமான அளவு விரிவாக்கப்பட வேண்டியது அவசியம். கட்டுரையின் சொல்தொகுப்பு நீங்கள் சாதாரணமாக பயன்படுத்துவதிலிருந்து வெகுவாக வித்தியாசமாயிருக்கிறது. வாக்கியங்கள் ஒருவேளை நீண்டதாயும் அதிக சிக்கலானதாயும் இருக்கின்றன. மிக நேர்த்தியான மொழியும், சாதாரணமாக பேசுகையில் இயல்பாயிராத சந்தமும் இருக்கலாம். பொருளை உங்கள் சொந்த வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் மேம்பட்டவிதமாக பேச்சுக் கொடுக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் பழக்கமும் அனுபவமும் உரை வாசிப்பு பேச்சுக்களைக் கொடுப்பதில் கவனிக்கப்படத்தக்க முன்னேற்றஞ்செய்ய உங்களுக்கு உதவிசெய்யும்.

10முன்கூட்டியே தயார்செய்வது, வெற்றிக்கு இன்றியமையாததாகும். உரையோடு பரிச்சயமாக நேரம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். முக்கிய கருத்துக்களை மனதில் தெளிவாக வைத்துக்கொள்ள பலமுறை உங்கள் பொருளை நீங்கள் வாசிக்க வேண்டும். பழக்கப்பட்டில்லாத சொற்கள் ஏதேனுமிருந்தால், நல்ல அகராதி ஒன்றில் அவற்றைப் பார்த்து, உரையில் உச்சரிப்பை குறித்துவைக்க வேண்டும். பின்னர் மூல எழுத்தாளரின் அளிப்புப் பாணியோடு உங்களைப் பரிச்சயமாக்கிக்கொள்ள சப்தமாக பேச்சைக் கொடுத்துப் பழகிக்கொள்ளுங்கள். சில வாசகர்கள், ஒரு நிலைக்கண்ணாடியின் முன் சப்தமாக வாசித்துப் பழகிக்கொள்வது கேட்போருடன் தொடர்பை முன்னேற்றுவிக்க அவர்களுக்கு உதவுவதாக காண்கின்றனர். சிறிய ஓர் அரங்கத்தில் பேச்சு கொடுக்கப்படுமானால் இது அதிக முக்கியமாகும்.

11நீங்கள் அழுத்திக்கூற விரும்பும் முக்கிய வார்த்தைகளைக் கோடிடுவது அல்லது அழுத்தக்குறியிடுவது பிரயோஜனமாயிருக்கிறது. சில வாசகர்கள் உரையில் சொற்றொடர்களை ஒரு சிறிய நேர்கோடு கொண்டு பிரிப்பது பயனுள்ளதாயிருப்பதைக் காண்கின்றனர். மேலுமாக, சொற்றொடரின் முடிவுக்கு வரும்வரையாக, நீங்கள் நிறுத்தக்கூடாது என்பதை உங்களுக்கு நினைப்பூட்டிக்கொள்ள ஒன்றாகச் சேர்த்து பேசப்படவேண்டிய கடினமான அல்லது அசாதாரணமான தொகுதிகளிலுள்ள சொற்கள் வளை கோடுகளால் ஒன்றாகச் சேர்க்கப்படலாம். இது இயற்கைத்தன்மை குறைவுபடுவதை அல்லது கருத்து இழக்கப்படுவதை தவிர்க்கிறது. நியாயமான நீண்ட நிறுத்தம் பொருத்தமாயிருக்கக்கூடிய இடங்களைக் காட்டுவதற்கு உரை வாசிப்பு பேச்சு பிரதியில் குறித்துக்கொள்வதையும் யோசிக்கலாம். நிறுத்தம் எதிர்பார்ப்பை உருவாக்கக்கூடும், அழுத்தம் கொடுத்து, பொருள் கிரகித்துக்கொள்ளப்பட நேரத்தை அனுமதிக்கும். பேச்சின் உச்சக்கட்டத்தை அல்லது முக்கிய குறிப்புகளை அடையாளங்காண்பதும்கூட முக்கியமாகும். நல்ல ஓர் உச்சநிலையை படிப்படியாக அமைக்க உங்களுக்கு உதவக்கூடிய இவை குறித்துக்கொள்ளப்படலாம். பின்னர் வேகத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

12பைபிள் வாசிப்பு. பைபிள் வாசிப்பு இளைஞருக்கும் முதியவருக்கும் ஒன்றுபோல் அத்தியாவசியமாக இருக்கிறது. அடிக்கடி பைபிளைச் சப்தமாக வாசிப்பதைத் தேவைப்படுத்தும் சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அவ்வப்போது இப்படிப்பட்ட நியமிப்புகள் இருக்கலாம். நமது ஊழியத்தில் ஜனங்களிடம் பேசுகையில் நாம் அனைவருமே வேதவசனங்களை வாசிக்கிறோம். ஆனால் அவற்றை நன்றாய் வாசிக்கிறோமா? தடுமாறாமலும் நம்முடைய விவாதத்துக்கு பொருந்தும் பகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்தும் இவ்விதமாக நம்முடைய வாசிப்பு இயற்கையாக, சம்பாஷணை முறையில் அமையும்விதமாக நாம் அவற்றை பழகியிருக்கிறோமா?

13பைபிளிலிருந்து வாசிக்கும் காரியத்தில், தயாரிப்பு நிச்சயமாகவே தேவையாயிருக்கிறது. இது அசாதாரணமான அழகும் உணர்ச்சியும் திருத்தமான மற்றும் நியாயமான விவாதங்கள் நிறைந்த பகுதிகளுள்ள கடவுளுடைய வார்த்தை என்பதை நினைவில் வையுங்கள். நாம் கேட்போரின் நன்மைக்காக அதை தகுதியுடன் திரும்ப எடுத்து வழங்க நாட வேண்டும். பைபிள் வாசிப்பை செய்ய வேண்டும் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்திருந்தால், அசாதாரணமான வார்த்தைகள், சொற்றொடர்கள் அல்லது மொழிநடைகளில் தடுமாறுவதை தவிர்ப்பதற்காக கவனமான தயாரிப்பு செய்யப்பட வேண்டும்.

14திரும்பிவந்த நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலர் தங்கள் கடவுளுடைய வார்த்தைகளுக்கு மெய்மறந்த கவனத்தைச் செலுத்துவதற்காக எருசலேமின் தண்ணீர்வாசலுக்கு முன்பாக வீதியிலே கூடிவந்திருந்த அந்தக் கிளர்ச்சியூட்டிய சம்பவத்தை சிந்தித்துப்பாருங்கள். நியமிக்கப்பட்டிருந்த அந்த லேவியர்கள் வாசிக்கையில் அரைகுறையாக தயார் செய்தவர்களாக, அசட்டையாக இருந்தார்களா? பதிவு பதிலளிக்கிறது: “அவர்கள் மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும் பொருளோடும் கடவுளின் திருச்சட்டநூலை வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.” (நெ. 8:8, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) அந்த வாசகர்கள் உன்னதமானவரிடமாக ஆழ்ந்த மரியாதைக் கொண்டிருந்தார்கள். உடன் வணக்கத்தாருக்கு அவருடைய வார்த்தைகளை அவர்கள் ஒப்புவித்தார்கள்.

15நம்முடைய சொந்த நன்மைக்காகவோ குடும்ப வட்டாரத்திலோ ராஜ்ய மன்றத்திலோ கதவண்டையில் ஒருவரிடமோ சப்தமாக வாசித்துக்காட்டுவதானாலும்சரி அதனுடைய எல்லா உணர்ச்சிகளோடும், விசுவாசத்தைக் கட்டியெழுப்பும் வல்லமையோடும் மூலப்பிரதியிலுள்ள பொருளை உண்மையுடன் திரும்ப எடுத்து வழங்குவதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும். பொது வாசிப்பிலிருந்து உண்டாகும் இந்த உந்துவிக்கும் வல்லமை, அப்போஸ்தலன் யோவான் பதிவுசெய்த இந்த வார்த்தைகளினால் அழுத்திக்காண்பிக்கப்படுகிறது: “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை [சப்தமாக, NW] வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.”—வெளி. 1:3.

[கேள்விகள்]

1, 2. பொது வாசிப்புக்கு எப்பொழுது நமக்கு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன?

3. தயாரிப்பு ஏன் முக்கியமானது?

4, 5. பொது வாசிப்பு சபையாரைத் தூண்டிடவும் எளிதில் புரிந்துகொள்ளப்படவும் என்ன பண்புகள் தேவையாயிருக்கின்றன?

6. அழுத்தம் கொடுக்கப்படவேண்டிய சரியான இடம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது, நிறுத்தங்கள் எவ்விதமாக அழுத்தத்துக்கு உதவிசெய்கின்றன?

7. வாசிப்பு சம்பாஷணையைப்போன்று அமைய எது உதவிசெய்கிறது?

8. ஒரு பேச்சு எப்பொழுது பொருத்தமாக ஒரு உரையிலிருந்து கொடுக்கப்படலாம்?

9, 10. உரை வாசிப்பு பேச்சைக் கொடுக்கையில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய பிரச்சினை என்ன, அது எவ்விதமாக செய்யப்படலாம்?

11. உரையில் எவற்றைக் குறித்துக்கொள்வது பயனுள்ளதாயிருக்கிறது?

12-15. விசேஷமாக பைபிள் வாசிப்பில் ஏன் முன்கூட்டியே தயாரிப்பது முக்கியமாயிருக்கிறது?