Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருத்தமான உதாரணங்கள்

பொருத்தமான உதாரணங்கள்

படிப்பு 34

பொருத்தமான உதாரணங்கள்

1ஒரு பேச்சாளர் உதாரணங்களைப் பயன்படுத்தும்போது, தன்னுடைய கேட்போர் மனங்களில் அர்த்தமுள்ள காட்சிகளை அவர் உண்மையில் பதியவைக்கிறார். உதாரணங்கள் அக்கறையை ஊக்குவித்து முக்கிய குறிப்புகளை உயர்த்திக்காண்பிக்கின்றன. அவை சிந்திக்கும் செயல்முறைகளைத் தூண்டி புதிய எண்ணங்கள் கிரகித்துக்கொள்வதை எளிதாக்கிவிடுகின்றன. நன்கு தெரிந்துகொள்ளப்பட்ட உதாரணங்கள் புத்திக்கூர்மையான வேண்டுகோளை உணர்ச்சிப்பூர்வமான செயல்விளைவோடு இணைக்கின்றன. விளைவு, செய்தியானது உண்மையான எளிய கூற்றுகளால் அநேகமாக முடியாத ஒரு வலிமையோடு மனதுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. ஆனால் உதாரணங்கள் பொருத்தமாக இருந்தால் மட்டுமே இது உண்மையாக இருக்கிறது. அவை உங்கள் பொருளுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்.

2தப்பெண்ணத்தை அல்லது ஒருதலையான பற்றைத் தவிர்ப்பதற்காக எப்போதாவது ஓர் உதாரணம் பயன்படுத்தப்படலாம். தர்க்கத்துக்கு இடமளிக்கிற ஒரு கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஆட்சேபணைகளை அது அகற்றிவிடக்கூடும். உதாரணமாக நீங்கள் சொல்லலாம், “எந்த ஒரு தந்தையும் தண்டனையாகத் தன்னுடைய பிள்ளையின் கையை ஒரு சூட்டடுப்பில் வைக்கமாட்டார்.” “நரகம்” கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் இப்படிப்பட்ட ஓர் உதாரணம் பொய் மத கருத்தாகிய “நரகத்தை” முரண்பாடானதாக்கி இவ்விதமாக அதிக சுலபமாக அதை ஒதுக்கிவிடுகிறது.

3உதாரணங்கள் பல வடிவங்களை ஏற்கலாம். அவை இணையொப்புகளாக, ஒப்புமைகளாக, ஒப்பீட்டின் அடிப்படையில் வேறுபாடுகளாக, உவமையணிகளாக, உருவக வழக்குகளாக, தனிப்பட்ட அனுபவங்களாக, எடுத்துக்காட்டுகளாக இருக்கலாம். அவை அநேக மூலங்களிலிருந்து தெரிந்துகொள்ளப்படலாம். அவை படைப்பின் உயிருள்ள அல்லது உயிரற்றப் பொருட்கள் சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம். அவை கேட்போரின் தொழில்கள், மனித விசேஷ குணங்கள் அல்லது சிறப்பியல்புகள், வீட்டிலிருக்கும் உருப்படிகள், அல்லது வீடுகள், கப்பல்கள் போன்ற மனிதரின் வேலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். இருப்பினும், என்ன உதாரணங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அது சமயம் மற்றும் பொருளை முன்னிட்டே தெரிந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டும், அது வெறுமனே பேச்சாளருக்கு பிடித்தமான உதாரணம் என்பதால் அல்ல.

4எச்சரிக்கையான ஒரு வார்த்தை. அநேக உதாரணங்களை வைத்து பேச்சுக்கு அளவுக்கு அதிகமாக சுவையூட்டிவிடாதீர்கள். அவற்றைப் பயன்படுத்துங்கள், ஆனால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்திவிடாதீர்கள்.

5உதாரணங்களைச் சரியாக பயன்படுத்துவது ஒரு கலையாகும். அது திறமையையும் அனுபவத்தையும் கேட்கிறது. ஆனால் அவற்றின் பலன்தரத்தக்கதன்மையை மிகைப்படக்கூறாமல் இருக்கமுடியாது. உதாரணங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதற்கு, நீங்கள் உதாரணங்களின் சம்பந்தமாக சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாசிக்கையில், பயன்படுத்தப்பட்டிருக்கும் உதாரணங்களை கவனியுங்கள். நீங்கள் காரியங்களைப் பார்க்கும்போது, கிறிஸ்தவ ஜீவியம் மற்றும் ஊழியத்தின் சம்பந்தமாக அவற்றைப்பற்றி சிந்தியுங்கள். உதாரணமாக, காய்ந்தும் வாடியும்போன ஒரு பூந்தொட்டியை பார்ப்பீர்களானால், நீங்கள் இவ்வாறு யோசிக்கலாம், “நட்பு என்பது ஒரு செடியைப் போன்றது. அது செழித்தோங்க அதற்கு நீர்ப்பாய்ச்சப்பட வேண்டும்.” இன்று சில ஆட்கள் சந்திரனைப்பற்றி விண்வெளி பயணத்தின் சம்பந்தமாக மட்டுமே யோசிக்கின்றனர். ஒரு கிறிஸ்தவர் அதை கடவுளின் ஒரு கைவேலையாக, அவருடைய படைப்பின் ஒரு துணைக்கோளாக, என்றுமாக நிலைத்திருக்கும் ஒரு பொருளாக, சமுத்திர அலைகள் பொங்கி எழுதலுக்குக் காரணமாயிருந்து நம்முடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாக பார்க்கிறார்.

6ஒரு பேச்சைத் தயாரிக்கையில், எளிமையான உதாரணங்கள் உடனடியாக உங்கள் மனதுக்கு வரவில்லையென்றால், உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களில் அது சம்பந்தப்பட்ட பொருளை ஆராய்ந்து பாருங்கள். அங்கே உதாரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். பேச்சில் முக்கிய வார்த்தைகளையும் அவை உங்கள் மனதுக்குக் கொண்டுவரும் காட்சிகளையும் பற்றி யோசித்துப்பாருங்கள். அவற்றின்மீது கட்டுங்கள். ஆனால், பொருத்தமாயிராத உதாரணத்தைவிட எந்த உதாரணமுமில்லாதிருப்பது மேலானது என்பதை நினைவில் வையுங்கள். பேச்சு ஆலோசனைப் படிவத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் “பொருளுக்குப் பொருத்தமான உதாரணங்கள்” சிந்திக்கும்போது, காரியத்தின் பல்வேறு அம்சங்களை மனதில் வைக்க வேண்டும்.

7எளிமை. ஓர் எளிமையான உதாரணத்தை நினைவில் வைப்பது எளிது. அதனுடைய சிக்கலானத் தன்மையின் காரணமாக கவனத்தை திசைதிருப்புவதைவிட அது விவாதத்தின் போக்குக்குப் பங்களிக்கிறது. இயேசுவின் உதாரணங்கள் அநேகமாக ஒருசில வார்த்தைகளாக இருந்தன. (உதாரணமாக, மத்தேயு 13:31-33; 24:32,33-ஐப் பார்க்கவும்.) எளிமையாக இருப்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஓர் உதாரணத்துக்கு அதிகமான விளக்கம் தேவைப்படுமானால், அது மிகையளவு பயணமூட்டையாகும். அதை ஒதுக்கிவிடுங்கள் அல்லது எளிமையாக்குங்கள்.

8இயேசு பெரிய காரியங்களை விளக்க சிறிய காரியங்களையும், கடினமான காரியங்களை விளக்க எளிமையான காரியங்களையும் பயன்படுத்தினார். ஓர் உதாரணம் எளிதில் கற்பனைசெய்யப்பட வேண்டும், ஒரே சமயத்தில் அளவுக்கு அதிகமான கருப்பொருட்களை அளிக்கக்கூடாது. அது குறிப்பாகவும் எளிதில் உணரமுடிவதாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட உதாரணங்கள் எளிதில் தவறாகப் பொருத்தப்படுவது கிடையாது.

9ஓர் உதாரணம் அது விளக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பொருளுக்கு முழுவதுமாக இணையாய் இருந்தால் மிகச் சிறந்தது. உதாரணத்தின் ஏதோ ஓர் அம்சம் பொருத்தமாக இல்லையென்றால், அதை பயன்படுத்தாதிருப்பதே மேல். எவராவது பொருத்தமற்ற அம்சங்களைப் பற்றி யோசிக்க, அதன் பயன் இழக்கப்பட்டுவிடும்.

10பொருத்தம் தெளிவாக்கப்படுதல். ஓர் உதாரணத்தின் பொருத்தம் செய்யப்படாவிட்டால், சிலர் குறிப்பை புரிந்துகொள்ளலாம், ஆனால் அநேகர் புரிந்துகொள்ளமாட்டார்கள். பேச்சாளர் உதாரணத்தை தெளிவாக மனதில் கொண்டிருந்து அதன் நோக்கத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். உதாரணத்தின் மதிப்பைக் காண்பிக்கையில் அவர் எளிமையாக அதைக் கூற வேண்டும். (மத்தேயு 12:10-12-ஐப் பார்க்கவும்.)

11ஓர் உதாரணத்தைப் பல வழிகளில் பொருத்தலாம். ஓர் உதாரணத்துக்கு முன்போ பின்போ எளிமையாகச் சொல்லப்பட்ட ஒரு நியமத்தை நிலைநாட்டுவதற்காக அது பயன்படுத்தப்படலாம். உதாரணத்தால் காண்பிக்கப்பட்ட விவாதத்தின் பின்விளைவுகளை வலியுறுத்துவதன் மூலம் அது பொருத்தப்படலாம். அல்லது உதாரணத்தின் குறிப்புகளுக்கும் விவாதத்துக்குமிருக்கும் ஒப்புமைகளுக்கு கவனத்தை திருப்புவதன் மூலம் அது பொருத்தப்படலாம்.

12முக்கிய குறிப்புகள் வலியுறுத்தப்படுதல். ஓர் உதாரணத்தை நீங்கள் வெறுமனே யோசிக்க நேரிட்டதற்காக அதை பயன்படுத்தாதீர்கள். பிரதான குறிப்புகளைத் தெரிந்துகொள்ள பேச்சை ஆராய்ந்து, அதற்குப் பின்பு அவற்றை மனதில் பதியவைப்பதற்கு உதாரணங்களைத் தெரிந்தெடுங்கள். குறைந்த முக்கியத்துவமுள்ள குறிப்புகளுக்கு வலிமையான உதாரணங்கள் பயன்படுத்தப்பட்டால், கேட்போர் பிரதானமானவற்றைவிட குறைந்த முக்கியத்துவமுள்ள குறிப்புகளையே நினைவில் கொள்வர். (மத்தேயு 18:21-35; 7:24-27-ஐப் பார்க்கவும்.)

13உதாரணம் விவாதத்தை மறைத்துவிடக்கூடாது. அது கேட்போர் நினைவில் வைத்திருக்கக்கூடியதாக இருக்கலாம், ஆனால் உதாரணம் மனதுக்கு வருகையில் அது உயர்த்திக்காண்பிக்க நோக்கங்கொண்டிருந்த குறிப்பும் மனதுக்கு வர வேண்டும். அதைச் செய்யவில்லையென்றால், உதாரணம் அளவுக்கு அதிக முக்கியத்துவமுடையதாகி இருக்கிறது.

14ஒரு பேச்சைத் தயாரித்து உதாரணங்களைத் தேர்ந்தெடுக்கையில், வலியுறுத்தப்படவேண்டிய குறிப்புகளோடு ஒப்பிட உதாரணத்தின் மதிப்பை நிறுத்துப்பாருங்கள். இந்தக் குறிப்புகளுக்கு அது வலுவூட்டுகிறதா? அது அவற்றை மேலெழுந்து நிற்கச்செய்கிறதா? அது குறிப்புகளை எளிதாக புரிந்துகொள்ளவும் நினைவில் வைக்கவும் செய்கிறதா? இல்லையென்றால், அது பொருத்தமான உதாரணம் இல்லை.

******************

15உதாரணங்கள் பொருளுக்குப் பொருத்தமானதாக இருப்பது மட்டுமன்றி அவை உங்கள் கேட்போருக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். இது ஆலோசனைத் தாளில் “கேட்போருக்குப் பொருத்தமான உதாரணங்கள்” என்று தனியாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. பத்சேபாளுடன் தாவீது செய்த பாவத்தில் அவரைத் திருத்துவதற்காக நாத்தான் அழைக்கப்பட்டபோது, அவர் தரித்திரனையும் அவனுக்கிருந்த ஒரு சின்ன ஆட்டுக்குட்டியையும் பற்றிய உதாரணத்தை தெரிந்துகொண்டார். (2சா. 12:1-6) இந்த உதாரணம் சாதுரியமான ஒன்றாக இருந்தது மட்டுமல்லாமல், அது தாவீதுக்குப் பொருத்தமாக இருந்தது, ஏனென்றால் அவர் ஒரு மேய்ப்பராக இருந்தார். அவர் குறிப்பை உடனடியாக புரிந்துகொண்டார்.

16கேட்போரில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்களாக இருந்தால், இளைஞருக்கு மாத்திரமே கவர்ச்சியாக இருக்கும் உதாரணங்கள் பயன்படுத்தப்படக்கூடாது. ஆனால் கல்லூரி மாணவர்களின் ஒரு தொகுதிக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் முற்றிலும் பொருத்தமாக இருக்கும். சில சமயங்களில் கேட்போரில் உள்ள வயது முதிர்ந்தவர்கள் மற்றும் இளைஞர், ஆண்கள் மற்றும் பெண்கள் என்பதாக இரண்டு எதிர்மாறான நோக்குநிலைகளிலிருந்து உதாரணங்களை அணுகலாம்.

17பழக்கப்பட்ட நிலைமைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. உதாரணங்களை வழங்குவதில் அருகேயுள்ள பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால், அவை உங்கள் கேட்போருக்கு பழக்கப்பட்டவையாக இருக்கும். இயேசு இதைச் செய்தார். கிணற்றருகே அந்தப் பெண்ணிடம், தம்முடைய ஜீவனைக்கொடுக்கும் பண்புகளைத் தண்ணீருக்கு ஒப்பிட்டு பேசினார். அவர் விதிவிலக்கானவற்றை அல்ல ஆனால் வாழ்க்கையின் சிறிய காரியங்களைப் பயன்படுத்திப் பேசினார். அவருடைய உதாரணங்கள், அவருடைய கேட்போர் கூட்டத்திலிருந்தவர்களின் மனங்களுக்கு உடனடியாக ஒரு காட்சியை அனுப்பியது, அல்லது அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த ஏதோவொரு தனிப்பட்ட அனுபவத்தை உடனடியாக நினைப்பூட்டியது. கற்றுக்கொடுப்பதற்கு அவர் உதாரணங்களைப் பயன்படுத்தினார்.

18அதேவிதமாக இன்று. குடும்பத் தலைவிகள் வியாபார உலகைப் பற்றி அறிந்திருக்கலாம், ஆனால் அவர்களுடைய பிள்ளைகள், அவர்களுடைய வீட்டுக் கடமைகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்படும் உருப்படிகள் போன்ற அன்றாட வாழ்க்கையில் இருக்கும் காரியங்களை வைத்து உங்கள் குறிப்புகளை விளக்குவீர்களானால் நீங்கள் நன்றாகச் செய்வீர்கள்.

19திட்டவட்டமாகவே உள்ளூருக்குரியதாக, குறிப்பாக ஒருவேளை அந்த இடத்துக்கு மட்டுமே இயல்பாயுள்ள ஏதோவொன்றை அடிப்படையாக கொண்ட உதாரணங்களும்கூட பலன்தரத்தக்கவையாக இருக்கின்றன. சமுதாயத்துக்கு நன்கு அறியப்பட்ட நடப்பு சம்பவங்கள், உள்ளூர் செய்திகளிலுள்ள செய்திக்குறிப்புகள் போன்றவைகூட அவை நல்ல ரசனையில் இருக்குமானால் தகுந்ததாக இருக்கும்.

20நல்ல ரசனையில். பயன்படுத்தப்படும் எந்த உதாரணமும் ஒரு பைபிள் கலந்துரையாடலுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். தெளிவாகவே, உதாரணங்கள் “ஆபாசமானவையாக,” அதாவது ஒழுக்க சம்பந்தமாக அப்படியிருக்கக்கூடாது. அவை தவறாக எண்ணப்படக்கூடுமென்றால் இரட்டை அர்த்தமுள்ள கூற்றுகளைத் தவிர்த்திடுங்கள். பின்பற்றுவதற்கு ஒரு நல்ல நியமம்: சந்தேகமாயிருந்தால், அதை விட்டுவிடவும்.

21உதாரணங்கள் உங்கள் கேட்போரிலுள்ள எந்த நபரையும், விசேஷமாக புதிதாய் அக்கறை காட்டுகிறவர்களையும் அநாவசியமாக புண்படுத்தக்கூடாது. இந்தக் காரணத்துக்காக, உங்கள் கலந்துரையாடலில் உண்மையில் விவாதமாக இல்லாத கோட்பாடு சம்பந்தமான அல்லது கருத்துவேற்றுமைக்குரிய விஷயங்களை எழுப்புவது நல்லதாக இருக்காது. உதாரணமாக, பேச்சின் பிரதான குறிப்பு அதுவாக இல்லாவிட்டால் இரத்தமேற்றுதல் அல்லது கொடி வணக்கம் போன்ற ஓர் எடுத்துக்காட்டை நீங்கள் பயன்படுத்தமாட்டீர்கள். எவராவது வேறுபக்கமாக திசைதிருப்பப்படலாம் அல்லது இடறலுமடைந்துவிடலாம். உங்கள் பேச்சின் குறிப்பு இப்படிப்பட்ட விஷயங்களை கலந்துரையாடுவதாக இருக்குமானால், அது வித்தியாசமாக இருக்கிறது. அப்பொழுது அவற்றின்மேல் நியாயங்காட்டி பேசி உங்கள் கேட்போரை நம்பவைப்பதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் உங்கள் உதாரணங்கள் நீங்கள் கலந்துரையாடும் முக்கிய சத்தியங்களுக்கு எதிராக உங்கள் கேட்போரை தப்பெண்ணங்கொள்ளச்செய்வதற்கு அனுமதிப்பதன் மூலம் உங்கள் நோக்கத்தை தோல்வியுறச்செய்துவிடாதீர்கள்.

22ஆகவே உங்கள் உதாரணங்களைத் தேர்ந்தெடுப்பதில் பகுத்துணர்வை பயன்படுத்துங்கள். அவை பொருத்தமானவையாக இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். அவை உங்கள் பொருளுக்கும் உங்கள் கேட்போருக்கும் பொருத்தமாக இருந்தால் அப்படி இருக்கும்.

[கேள்விகள்]

1, 2. ஒரு பேச்சுக்கு உதாரணங்கள் என்ன செய்கின்றன என்பதைச் சுருக்கமாக காட்டவும்.

3-6. என்ன மூலங்களிலிருந்து உதாரணங்கள் தெரிந்துகொள்ளப்படலாம்?

7-9. எளிமையான உதாரணங்கள் ஏன் அத்தனை பலன்தரத்தக்கவையாக இருக்கின்றன?

10, 11. உதாரணங்களின் பொருத்தம் ஏன் தெளிவாக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுங்கள்.

12-14. பொருத்தமான உதாரணம் எது என்பதைத் தீர்மானிக்க எது உதவிசெய்யும்?

15, 16. உதாரணங்கள் ஏன் கேட்போருக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதை விளக்குங்கள்.

17-19. உதாரணங்கள் உங்கள் கேட்போருக்கு கவர்ச்சியாக இருப்பதற்கு அவை எங்கிருந்து எடுக்கப்பட வேண்டும்?

20-22. உதாரணங்களின் உபயோகத்தில் தவிர்க்கப்படவேண்டிய ஒருசில படுகுழிகளைக் குறிப்பிடுங்கள்.