Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருத்தமான முடிவுரையும் உங்கள் நேரமும்

பொருத்தமான முடிவுரையும் உங்கள் நேரமும்

படிப்பு 36

பொருத்தமான முடிவுரையும் உங்கள் நேரமும்

1நீங்கள் கடைசியாகச் சொல்வதே அடிக்கடி முதலாவதாக நினைவில் வைக்கப்படுகிறது. ஆகவே உங்கள் பேச்சின் முடிவுரை கவனமுள்ள தயாரிப்புக்குத் தகுதியுள்ளதாய் இருக்கிறது. அது நினைவில் வைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பும் முக்கியமான குறிப்புகளுக்கு கவனத்தைத் தெளிவாக ஒருமுகமாய் கவர்ந்து தலைப்பைத் தீர்க்கமான முடிவோடு மனதில் பதியச்செய்ய வேண்டும். உங்கள் தொகுப்பு, பேசும் விதம் ஆகிய இரண்டின் விளைவாகவும் அது கேட்போரைச் செயல்படத் தூண்ட வேண்டும். பேச்சு ஆலோசனைத் தாளில் “பொருத்தமான, பலன்தரத்தக்க முடிவுரை” என்பதற்கு நீங்கள் வரும்போது இதற்குதானே கவனம் செலுத்தும்படியாக நாங்கள் துரிதப்படுத்துகிறோம்.

2பேச்சின் தலைப்புக்கு நேரடியாக தொடர்புடைய முடிவுரை. முடிவுரையை எவ்விதமாக பேச்சின் தலைப்புக்குச் சம்பந்தப்படுத்துவது என்பதன்பேரில் ஆலோசனைகளுக்கு நீங்கள் படிப்பு 27-ஐ மறுபார்வையிட வேண்டும் என்று நாங்கள் யோசனை கூறுகிறோம். உங்கள் முடிவுரை பேச்சின் தலைப்பை அத்தனை அநேக வார்த்தைகளில் திரும்பச் சொல்வது அவசியமில்லை. ஆனாலும் ஒருசில மாணவர்கள் விசேஷமாக புதியவர்கள் அது உதவியாக இருப்பதைக் காணக்கூடும். ஆனால் அது தலைப்புக்குக் கவனத்தைத் திருப்ப வேண்டும். பின்னர் தலைப்பின் அடிப்படையில், கேட்போர் என்ன செய்யலாம் என்பதைக் காட்டுங்கள்.

3முடிவுரை தலைப்புக்கு நேரடியாக சம்பந்தப்படுத்தப்படவில்லையென்றால், அது பொருளைப் பூர்த்தியாக்கி ஒன்றாகச் சேர்த்து இணைக்காது. பிரதான குறிப்புகளைச் சுருக்கமாக அளித்து ஒரு நேரடியான பொழிப்புரை முடிவுரையை பயன்படுத்தினாலும்கூட இன்னும் பேச்சின் மையக்கருத்தை அல்லது தலைப்பை வெளிப்படுத்தும் முடிவான ஓரிரு வாக்கியங்களைச் சேர்க்க நீங்கள் விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

4என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுரை கேட்போருக்குக் காண்பிக்கிறது. சாதாரணமாக ஏதோவொரு வகையான செயல்நடவடிக்கையைத் தூண்டுவது அல்லது குறிப்பிட்ட ஒரு நோக்குநிலைக்கு இணங்கச் செய்வதே, பேசுவதில் உங்கள் நோக்கமாக இருப்பதன் காரணமாக நிச்சயமாகவே அப்பொழுது பேச்சின் முடிவான எண்ணங்கள் அந்தக் குறிப்புகளை மனதில் பதியசெய்ய வேண்டும். ஆகவே, முடிவுரையின் பிரதான நோக்கம், என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்போருக்குக் காண்பிப்பதும் அதை செய்யுமாறு அவர்களை ஊக்குவிப்பதுமே ஆகும்.

5இதன் காரணமாக, உங்கள் பேச்சின் நோக்கத்தைத் தெளிவாக்குவதோடுகூட, முடிவுரை ஊக்கத்தையும், திட நம்பிக்கையையும் உந்துவிக்கும் சக்தியையும் கொண்டிருக்க வேண்டும். அநேகமாக முடிவுரைக்கு வலிமையை அளிப்பதில் சுருக்கமான வாக்கியங்கள் பயனுள்ளவையாக இருப்பது காணப்படும். ஆனால் வாக்கிய அமைப்பு எப்படியிருந்தாலும், செயல்படுவதற்கு நியாயமான காரணங்கள், இப்படிப்பட்ட ஒரு போக்கை மேற்கொள்வதால் பெறப்படக்கூடிய நன்மைகள் உட்பட கொடுக்கப்பட வேண்டும்.

6பேச்சில் ஏற்கெனவே சொல்லப்பட்டதை முடிவுரை தர்க்கரீதியாக பின்தொடர வேண்டும். இவ்விதமாக, முடிவுரையில் நீங்கள் சொல்வது, பேச்சின் பொருளுரையில் ஏற்கெனவே சொல்லப்பட்டதன்பேரில் உங்கள் கேட்போரைச் செயல்பட தூண்ட வேண்டும். உங்கள் முடிவுரை, பேச்சில் எடுத்துரைக்கப்பட்ட காரியங்களின் அடிப்படையில் செயல்படும்படிக்கு, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி வலியுறுத்துவதாக இருக்கும். வலிமையான உங்கள் முடிவுரையினால் அவர்கள் அதைச் செய்ய விசேஷமாக உந்தப்படுவார்கள்.

7வீட்டுக்கு வீடு ஊழியத்தில் முடிவுரைகள் அநேகமாக வலுவற்றதாய் இருக்கின்றன. நாம் வீட்டுக்காரரிடம் எதிர்பார்ப்பது, நம்முடைய பிரசுரங்களில் ஒன்றைப் பெற்றுக்கொள்வது, மறுசந்திப்புக்கு ஒப்புக்கொள்வது அல்லது இதுபோன்ற ஒன்று, அவருக்குத் திட்டவட்டமாக காண்பிக்கப்படாதபோது இது சம்பவிக்கிறது.

8வெறுமனே பொருளின் சுருக்கங்களாக இருந்து கேட்போரை செயல்படத் தூண்டவில்லையென்றால் பள்ளி நியமனங்களில் முடிவுரைகளும்கூட வலுவற்றதாகவே இருக்கும். பொருளின் பொருத்தம் ஏதேனும் கொடுக்கப்பட வேண்டும் அல்லது கேட்போருக்கு பொருள் விசேஷித்த மதிப்புள்ளது என்பது வேறு ஏதோவொரு வகையில் காண்பிக்கப்பட வேண்டும்.

9ஒருசில பேச்சாளர்கள் பேச்சின் முக்கிய வசனங்களையும் தலைப்பையும் அடிப்படையாக பயன்படுத்தி முழு பேச்சின் ஒரு சுருக்கமான தொகுப்போடு பைபிள் தலைப்பின் பேரிலான ஒரு பேச்சை முடிப்பதை மிகவும் பிரயோஜனமுள்ளதாக காண்கின்றனர். கதவண்டையில் செய்வது போல சிந்திக்கப்பட்ட ஒருசில வசனங்களோடு இவ்விதமாக பேச்சின் சுருக்கத்தை கூறுவதன் மூலம் பேச்சின் குறிப்பைத் தெளிவாக்குவது மட்டுமல்லாமல், கேட்போர் தங்களோடு எடுத்துச்சென்று பேச்சின் முக்கிய குறிப்புகளைத் திரும்பச் சொல்வதற்குப் பயன்படுத்த எதையோ அவர்களுக்கு நீங்கள் கொடுப்பீர்கள். அதுவே முடிவுரையின் முக்கியமான நோக்கமாகும். இம்முறையானது பொருத்தமாக இருப்பது மட்டுமல்லாமல் அந்த நோக்கத்தைத் திறம்பட்டவிதமாக நிறைவேற்றவும் செய்கிறது.

**************

10அளவான முடிவுரை. முடிவுரையின் நீளம் கடிகாரத்தினால் தீர்மானிக்கப்படக்கூடாது, ஆனால் அடிக்கடி இது சம்பவிக்கிறது. பலன்தரத்தக்கதாயும் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதாயும் இருந்தால், முடிவுரை சரியான அளவு நீளமுள்ளதாக இருக்கிறது. ஆகவே அதனுடைய நீளத்தின் பொருத்தம் விளைவுகளினால் தீர்மானிக்கப்பட வேண்டும். பேச்சு ஆலோசனைத் தாளில் “அளவான முடிவுரை” என்பதில் நீங்கள் வேலைசெய்யும்போது உங்கள் ஆலோசகர் இதைத்தான் செய்வார்.

11பொருளுரையின் நீளத்தோடு முடிவுரைகளின் வீதப்பங்கை ஒப்பிடுவதற்கு, பிரசங்கி 12:13, 14-ல் காணப்படும் முழு பிரசங்கி புத்தகத்தினுடைய சுருக்கமான முடிவுரையைக் கவனித்து அதை இயேசுவின் மலைப்பிரசங்கத்தோடும் மத்தேயு 7:24-27-லுள்ள அவருடைய முடிவுரையோடும் ஒப்பிட்டுப்பாருங்கள். இங்கே இரண்டு வித்தியாசமான விதங்களிலும் அளவுகளிலும் முடிவுரைகள் காணப்படுகின்றன. என்றாலும் இரண்டுமே அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றன.

12கேட்போர் எதிர்பாராதிருக்கும் சமயத்தில் ஒரு முடிவுரையினிடமாக அவர்களுடைய கவனம் திருப்பப்படக்கூடாது. பேசப்பட்ட வார்த்தைகள் பேச்சின் முடிவைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுவதுமட்டுமல்லாமல், அவை தீர்க்கமான முடிவின் ஒரு தொனியையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதும் அதை எவ்விதமாகச் சொல்கிறீர்கள் என்பதும் உங்கள் கலந்துரையாடலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அது அநாவசியமாக இழுத்துக்கொண்டிருக்கக்கூடாது. உங்கள் பேச்சை ஒன்றாகச் சேர்த்து இணைத்தும் இன்னும் முடிவுரை முழுவதிலுமாக அக்கறையைப் பிடித்து நிறுத்த முடியவில்லை என்றால், அப்பொழுது அது திரும்பவும் வேலைசெய்யப்பட வேண்டும். அது இன்னும் அளவுக்கு அதிக நீளமாகவே இருக்கிறது.

13நீங்கள் ஆரம்ப நிலையிலுள்ள ஒரு பேச்சாளராக இருந்தால் தேவை என்று நினைப்பதைவிட உங்கள் முடிவுரையைச் சுருக்கிக்கொள்வது அநேகமாக மிகச் சிறந்ததாய் இருக்கிறது. அதை எளிமையாக, நேரடியாக மற்றும் சந்தேகத்திற்கிடமில்லாததாகச் செய்யுங்கள். அது முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்க அனுமதியாதேயுங்கள்.

14தொடர்பேச்சில் ஒரு பேச்சை நீங்கள் கொடுத்துக்கொண்டிருந்தால் அல்லது ஊழிய கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்தால், அப்பொழுது உங்கள் முடிவுரை அடுத்தப் பேச்சின் முன்னுரையோடு இணைய வேண்டும். ஆகவே அது சுருக்கமாயிருக்கலாம். இருந்தபோதிலும், ஒவ்வொரு பகுதியும் பேச்சின் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு முடிவுரையைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யுமானால், அப்பொழுது அது சரியான நீளமுள்ளதாக இருக்கிறது.

**********

15நேரம். முக்கியமாயிருப்பது முடிவுரையின் நீளம் மட்டுமல்ல; பேச்சின் ஒவ்வொரு பாகத்தினுடைய நேரமும் கவனத்துக்குத் தகுதியுள்ளதாயிருக்கிறது. அந்தக் காரணத்துக்காக, “நேரம்” என்பதற்கு பேச்சு ஆலோசனைத் தாளில் தனியாக பதிவுக்குறிப்பு உள்ளது.

16ஒரு பேச்சின் சரியான நேரத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறைத்துக்கூற முடியாது. பேச்சு சரியாக தயாரிக்கப்பட்டிருக்குமானால், நேரமும்கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் பேச்சாளர் எல்லா பொருளையும் திணிக்கும் முயற்சியில், குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதிகமாக எடுத்துக்கொள்வாரானால், அவர் உண்மையில் தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டில்லை. இது ஏனென்றால் கேட்போரிலிருப்பவர்கள் அமைதி இழக்க ஆரம்பித்துத் தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு உண்மையில் அவர் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதற்குக் கவனம் செலுத்தமாட்டார்கள். பேச்சின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அத்தியாவசியமாயிருக்கும் பொருத்தத்துக்கும் செயல்தூண்டுதலுக்கும் உருவங்கொடுக்கவேண்டிய முடிவுரை இழக்கப்பட்டுவிடும். அது அளிக்கப்பட்டாலும்கூட பெரும்பாலான சமயங்களில், பேச்சாளர் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் போய்க்கொண்டிருப்பதால் கேட்போர் அதிலிருந்து பயனடைய தவறிவிடுவர்.

17பேச்சாளர் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் போகையில், கேட்போர் மாத்திரமல்ல, பேச்சாளரும்கூட அசெளகரியமாக உணருவார். தன்னுடைய நேரம் தீர்ந்துகொண்டிருக்கிறது, தனக்கு இன்னும் அதிகமான பொருளிருப்பதை அவர் காணும்போது அளவுக்கு அதிகமானதைத் திணிக்க முயன்று அதன் பலன்தரத்தக்க தன்மையைக் கெடுத்துவிடலாம். இது நிதானத்தை இழந்துவிடுவதில் அநேகமாக முடிவடைகிறது. மறுபட்சத்தில், கொடுக்கப்பட்ட நேரத்தை நிரப்ப தனக்குப் போதுமான பொருள் இல்லாதிருப்பதைக் காண்கையில் அதை நீட்டுவதற்குச் செய்யும் முயற்சியில் கோர்வையில்லாமலும் விஷயத்துக்குச் சம்பந்தமில்லாதவற்றை தன் அளிப்பில் சேர்க்கவும்கூடும்.

18பள்ளி கண்காணி அவருடைய நேரம் முடியும்போது அதை தெரிவிப்பது உண்மைதான், ஆனால் ஒரு பேச்சு முடிவுபெறுவதற்குள் நிறுத்தப்பட வேண்டியிருக்கையில் அது மாணாக்கருக்கும் கேட்போருக்கும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. பேச்சாளர் தன் பொருளை அளிக்க விரும்புவதற்கு அதில் போதிய அளவு ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். கேட்போர் முடிவுரையைக் கேட்கத் தவறினால் நடுவானில் தொங்கிக்கொண்டிருக்க விடப்பட்டது போல உணருவார்கள். எப்பொழுதும் தன்னுடைய பேச்சுக்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதிகமாக போகிறவர், மற்றவர்களைக் குறித்து கரிசனையற்றவராக இருப்பதற்கு அல்லது தயாரிப்பு குறைவுபடுவதற்கு அத்தாட்சியளிக்கிறார்.

19ஒரு நிகழ்ச்சிநிரலில் பல பேச்சாளர்கள் பங்குகொள்கையில், சரியான நேரம் விசேஷமாக முக்கியத்துவமுள்ளதாயிருக்கிறது. உதாரணமாக, ஓர் ஊழியக் கூட்டத்தில் ஐந்து பாகங்கள் இருக்கலாம். ஒவ்வொரு பேச்சாளரும் தனக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்ட நேரத்துக்கு மேல் ஒரு நிமிடம் மாத்திரமே அதிகமாக பேசினாலும் கூட்டம் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஐந்து நிமிடங்கள் கழித்துமுடியும். என்றபோதிலும் ஒவ்வொருவரும் மிகக் குறைவாகவே அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். விளைவு, சிலர் வீட்டுக்குச் செல்ல ஒரு பேருந்தைப் பிடிப்பதற்காக கூட்டம் முடிவதற்கு முன்பே செல்ல வேண்டியிருக்கலாம். அல்லது கூட்டத்திலுள்ள ஒருவரை அழைத்துச்செல்ல வந்திருக்கும் அவிசுவாசியான துணைவர்கள் காத்திருக்கச் செய்யப்படுவதால் எரிச்சலடையலாம். பொதுவில் பாதிப்பு நல்லதாக இருப்பதில்லை.

20தொடர் பேச்சிலுள்ள ஒரு பேச்சாளர், தனக்குப் பகிர்ந்துகொடுக்கப்பட்ட நேரத்தைப் பூர்த்திசெய்யவில்லையென்றாலும்கூட பிரச்சினைகள் எழலாம். உதாரணமாக, ஒரு மாநாட்டு நிகழ்ச்சிநிரலில் அரை-மணி நேர பேச்சு நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு சகோதரர் இருபது நிமிடங்களுக்கு பின் முடித்துவிட்டாரென்றால், அடுத்தப் பேச்சாளர் உடனடியாக ஆரம்பிக்க தயாராக இல்லாத பட்சத்தில் நிகழ்ச்சிநிரலில் தடங்கல் ஏற்படும்.

21குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதிகமாக போவதற்கு அடிப்படை காரணங்களில் ஒன்று அளவுக்கு அதிகமாக பொருளைக் கொண்டிருப்பதாகும். இது பேச்சு தயாரிக்கப்படுகையில் திருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இருப்பினும் மற்ற குறிப்புகளில், பேச்சு ஆலோசனை படிவத்திலுள்ள முன்சொல்லப்பட்ட குறிப்புகளில், இந்தக் குறிப்புவரையாக தேர்ச்சிபெற்றுவிட்டிருந்தால், நேரம் ஒரு பிரச்சினையாக இராது. உங்கள் பிரதான குறிப்புகளைப் பிரித்தெடுத்து சரியான ஒரு குறிப்புத்தாளை எவ்வாறு தயாரிப்பது என்பதை நீங்கள் ஏற்கெனவே கற்றிருந்தால், சரியான நேரம் இயற்கையாகவே பின்தொடருவதை நீங்கள் காண்பீர்கள். நேரம், ஆலோசனை படிவத்தில் ஏறக்குறைய முடிவில் சிந்திக்கப்படுவதற்கு காரணம், அது பெருமளவில், சிந்திக்கப்பட்டிருக்கும் முன்கூறப்பட்ட பேச்சுப் பண்புகளின் மீதே சார்ந்திருக்கிறது.

22பொதுவாக நேரத்தில் பிரச்சினை, குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதிகமாகச் சென்றுவிடுவதாகும். நன்கு தயாரித்திருக்கும் ஒரு பேச்சாளர், பொதுவாக அதிகமான அறிவை வளர்க்கும் பொருளைக் கொண்டிருக்கிறார், ஆனால் பகிர்ந்தளிக்கப்பட்ட நேரம் அனுமதிப்பதைக்காட்டிலும் அதிகத்தைப் பயன்படுத்திவிடாதபடிக்கு அவர் கவனம் செலுத்த வேண்டும்.

23என்றபோதிலும், புதிய அல்லது அனுபவமற்ற பேச்சாளர்கள் சில சமயங்களில் சுருக்கமாக முடித்துக்கொள்ளும் மனச்சாய்வுடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கிடைக்கக்கூடிய நேரத்தை முழுமையாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ள விரும்புவர். ஆரம்பத்தில், அவர்கள் துல்லியமாக விரும்பப்படும் அளவுக்கு பேச்சு வரும்படி செய்யும்பொருட்டு தங்கள் பேச்சுக்களை அளவிடுவதைச் சற்றுக் கடினமாக காணலாம். ஆனால் பகிர்ந்தளிக்கப்பட்ட நேரத்துக்கு முடிந்தவரை அருகில் வர அவர்கள் முயற்சிசெய்ய வேண்டும். இருந்தபோதிலும், பேச்சு பகிர்ந்தளிக்கப்பட்ட நேரத்துக்கு கணிசமான அளவு குறைவுபட்டாலொழிய ஒரு மாணாக்கர் நன்கு பூர்த்தியான, திருப்தியளிக்கும் ஒரு பேச்சைத் தயாரித்து அளித்திருப்பாரேயானால், நேரம் ஒரு குறையாக இருந்ததாய் கருதப்படாது.

24ஒரு பேச்சாளரின் நேரம் குறையாகக் கருதப்பட வேண்டுமா வேண்டாமா என்பது அளிப்பு கேட்போர்மீது ஏற்படுத்தும் பாதிப்பை கவனிப்பதன் மூலம் மிகச் சிறப்பாகத் தீர்மானிக்கப்படலாம். நேரம் முடிந்துவிட்டதை பள்ளி கண்காணி தெரிவிக்கையில், மாணாக்கர் தன்னுடைய வாக்கியத்தை தாராளமாக முடித்துவிட்டு வரலாம். கேட்போர் நன்கு பூர்த்தியான ஒரு கலந்துரையாடலைக் கேட்டதாக உணரும் வகையில் அந்த வாக்கியத்தோடு தன்னுடைய பேச்சை பலன்தரத்தக்க ஒரு முடிவுக்குக் கொண்டுவரக்கூடுமானால், அப்பொழுது நேரத்தில் குறையிருந்ததாக கருதப்படக்கூடாது.

25சரியான நேரத்தை எவ்வாறு முயன்று பெறலாம்? அடிப்படையில் அது தயாரிப்பின் ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு பேச்சில் அடங்கியிருக்கும் பொருளை மாத்திரமல்ல, பேச்சை அளிப்பதைத் தயாரிப்பது முக்கியமாகும். பேச்சை அளிப்பதற்கு போதுமான தயாரிப்பு இருந்தால், நேரம் பொதுவாக சரியாய் இருக்கும்.

26உங்கள் பேச்சை சுருக்கமாகத் தயாரிக்கையில் உங்கள் பிரதான குறிப்புகள் எவை என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள். ஒவ்வொரு பிரதான குறிப்புக்கும் கீழே சிந்திப்பதற்கு பல்வேறு உபகுறிப்புகள் உங்களுக்கு இருக்கலாம். நிச்சயமாகவே சில குறிப்புகள் மற்றவற்றைக் காட்டிலும் அதிக முக்கியமானவையாக இருக்கும். அளிப்புக்கு அத்தியாவசியமானவை எவை, மற்றும் எவை தேவையானால் நீக்கப்படலாம் என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். பின்னர், உங்கள் அளிப்பின்போது, நேரத்துக்குப் பின்னால் நீங்கள் சென்றுகொண்டிருப்பதைக் கண்டால், முக்கியமான விவாதங்களை அளித்துவிட்டு இரண்டாம் பட்சமானவற்றை நீக்கிவிடுவது எளிதான காரியமாக இருக்கும்.

27வெளி ஊழியத்தில் எப்போதும் செய்யும்படி நாம் அழைக்கப்படும் ஒரு காரியமாக இது இருக்கிறது. மக்களின் கதவண்டைக்கு செல்லும்போது, அவர்கள் பொறுத்திருந்து செவிசாய்க்கும் பட்சத்தில் பல நிமிடங்கள் நாம் அவர்களிடம் பேசுவோம். ஆனால் அவசியமானால் ஓரிரு நிமிடங்கள் மாத்திரமே ஒருவேளை எடுத்துக்கொண்டு அதே அளிப்பை சுருக்கமான வடிவத்தில் அளிக்கவும்கூட நாம் தயாராக இருக்கிறோம். நாம் அதை எவ்வாறு செய்கிறோம்? நம்முடைய முக்கிய குறிப்பு அல்லது குறிப்புகளும், நிலைநிறுத்த தேவையான அதிமுக்கியமான பொருளும் மனதில் இருக்கிறது. கலந்துரையாடலை விரிவாக்க பயன்படுத்தப்படக்கூடிய இரண்டாம்பட்ச முக்கியத்துவமுள்ள மற்ற தகவலையும் நாம் மனதில் கொண்டிருக்கிறோம், ஆனால் நிலைமைத் தேவைப்படுத்துமானால் இது நீக்கிவிடப்படலாம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஒரு பேச்சை மேடையிலிருந்து அளிக்கையிலும் இதேமுறை பின்பற்றப்படலாம்.

28ஒரு பேச்சாளர், அவருடைய பாதி நேரம் முடிவடைகையில் எவ்வளவு பேசிமுடித்திருக்க வேண்டும் என்பதை அவருடைய பேச்சின் மார்ஜினில் குறித்து வைப்பது அவருக்கு அநேகமாக பிரயோஜனமாயிருக்கிறது. அல்லது அது நீண்டதொரு சொற்பொழிவாக இருக்குமானால், கால் பாகங்களாக பிரித்துவிட அவர் விரும்பலாம். பின்னர் தன்னுடைய குறிப்புத்தாளில் அந்த நேரக் குறிகளை கடந்துசெல்லும்போது, அவர் எவ்வாறு செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் காண கடிகாரத்தைச் சரிபார்க்க வேண்டும். நேரத்துக்குப் பின்னால் அவர் போய்க்கொண்டிருந்தால், கடைசி நிமிடம்வரையாகக் காத்திருந்து முடிவுரையை திணித்து அதன் பலன்தரத்தக்க தன்மையைக் கெடுப்பதற்குப் பதிலாக இரண்டாம்பட்ச முக்கியத்துவமுள்ள பொருளை நீக்கிவிட ஆரம்பிப்பதற்கு அதுவே சமயமாக இருக்கிறது. இருப்பினும், பேச்சாளர் அடிக்கடி தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் அல்லது அதை மிகவும் வெளிப்படையாகத் தெரியும்படிச் செய்தால் அல்லது தன்னுடைய நேரம் முடிந்துகொண்டிருப்பதால் பொருளை அவசரமாக தான் முடிக்க வேண்டும் என்று கேட்போரிடம் சொல்வாரானால், அது கவனத்தை மிகவும் சிதறடிப்பதாக இருக்கிறது. இது கேட்போருக்குத் தொந்தரவாக இல்லாதபடி இயல்பான முறையில் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும்.

29அனைத்தையும் உள்ளிட்ட நேரத்தை முயன்றுபெறுவது பொருத்தமான அளவு முன்னுரையையும் முக்கிய குறிப்புகள் ஒவ்வொன்றும் சரியான அளவில் விரிவாக்கப்படுவதையும், முடிவுரைக்குப் போதுமான நேரம் விடப்படுவதையும் கேட்கிறது. இது உங்கள் நேரம் முடிந்துகொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கும்போது மட்டுமே சிந்திக்கப்பட வேண்டிய ஒரு காரியமல்ல. ஆரம்பத்திலிருந்தே உங்கள் நேரத்தை நீங்கள் கவனித்தால், விளைவு நல்ல விகித பொருத்தமுள்ள ஓர் அளிப்பாக இருக்கும்.

[கேள்விகள்]

1-3. நீங்கள் எவ்வாறு முடிவுரையை உங்கள் பேச்சின் தலைப்புக்குத் தொடர்புடையதாகச் செய்யலாம்?

4-9. கேட்போர் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் முடிவுரை ஏன் காண்பிக்க வேண்டும்?

10-14. ஒரு முடிவுரையின் அளவைக் குறித்து ஆலோசனைகளைக் கொடுங்கள்.

15-18. நேரம் கருத்துள்ள கவனத்தைப் பெறவில்லையென்றால், என்ன விளைவடைகிறது?

19, 20. விசேஷமாக ஊழியக் கூட்டங்களிலும் மாநாட்டு நிகழ்ச்சிநிரல்களிலும் நேரம் ஏன் முக்கியமாக இருக்கிறது?

21-24. நேரம் மற்றும் அவற்றுக்கான காரணங்களின் சம்பந்தமாக ஒருசில பிரச்சினைகளைச் சுருக்கமாக குறிப்பிடுங்கள்.

25-29. தன்னுடைய பேச்சுக்கு நேரம் சரியாக திட்டமிடப்பட்டிருப்பதை ஒருவர் எவ்விதமாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?