வெளி ஊழியத்தை மேம்படுத்த பள்ளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்
படிப்பு 19
வெளி ஊழியத்தை மேம்படுத்த பள்ளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்
1தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று வெளி ஊழியத்தில் நம்மை அதிக பலன்தரத்தக்கவர்களாக்குவதற்கு உதவிசெய்வதாகும். உங்கள் நியமிப்புகளுக்குத் தயாரிக்கும்போது அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அறிவை வெறுமனே அறிவுக்காகவே முயன்றுபெறுவதில் மட்டுமில்லாமல், வெளி ஊழியத்தில் உங்களுடைய பிரசங்கிப்பிலும் போதிப்பிலும் அந்த அறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதிலும் அக்கறையுள்ளவர்களாக இருங்கள்.
2சிலர் தங்கள் நியமிப்புகளை நண்பர்கள், அயலகத்தார், பள்ளி ஆசிரியர்கள், அவிசுவாசிகளாயிருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் இன்னும் செவிசாய்க்கக்கூடிய மற்றவர்கள் முன்னிலையில் பழகிப்பார்ப்பதன் மூலம் அவற்றை நேரடியாக நல்ல விதமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இது பல காரியங்களைச் சாதிக்கிறது. மாணாக்கர் மற்றவர்களின் பிரதிபலிப்பைப் பார்த்து பேச்சை முன்னேற்றுவிக்க சரிப்படுத்தல்களைச் செய்துகொள்ளலாம். மேலும், அளிக்கப்படும் மதிப்புள்ள தகவலைக் கவனிக்கையில் பைபிளில் மற்ற நபரின் அக்கறையை இது தூண்டக்கூடும். ஊழியப் பள்ளிக்கு ஆஜராக அவரை அழைப்பதற்கு இது ஒரு வழியாக இருக்கலாம். அநேக ஆட்கள் இம்முறையில்தான் ராஜ்ய மன்றத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஜப்பானிலுள்ள ஒரு சாட்சி ஓர் ஊழியப் பள்ளி நிகழ்ச்சிக்காக தன்னுடைய பாகத்தை ஒரு சர்ச் அங்கத்தினரின் முன்னிலையில் பழகிப்பார்த்தாள், விசேஷமாக அவரைச் சந்தித்து இவ்விதமாகச் செய்தாள். அவளுடைய தலைப்பு “கடவுளுடைய மக்கள் ‘பாபிலோனிலிருந்து’ வெளியேறும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்” என்பதாகும். அந்தப் பெண்மணி அக்கறை காண்பித்தாள், ஒரு பைபிள் படிப்புக்குச் சம்மதித்தாள்.
3வெளி ஊழியத்தின் சம்பந்தமாக சிந்தியுங்கள். ஊழியப் பள்ளியில் நீங்கள் மிகுதியாக மிக நேர்த்தியான தகவலைக் கேட்கிறீர்கள், அவற்றில் பெரும்பகுதி வெளி ஊழியத்தில் நேரடியாக பயன்படுத்தப்படலாம். நிகழ்ச்சிநிரலில் நாம், பைபிளை நம்புவதற்கான காரணங்கள், கோட்பாடு
சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதில்கள், பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம், குறிப்பிட்ட சில வேதவசனங்களுக்கு விளக்கங்கள், தினசரி வாழ்க்கையில் பைபிள் நியமங்கள் எவ்விதமாக பொருத்திப் பிரயோகிக்கப்படலாம் ஆகிய விஷயங்களைப்பற்றி கலந்தாலோசிக்கிறோம். வெளி ஊழியத்தில் இந்தத் தகவலைப் பயன்படுத்த வாய்ப்புக்களை நாடுங்கள். இதைக் குறித்து எவரோ ஒருவர் உங்களிடம் கேள்வி கேட்பதற்குக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பொருத்தமாயிருக்குமானால், நீங்களே தலைப்புப் பொருளை அறிமுகப்படுத்தலாம். இது தகவலை உங்கள் சொந்த மனதில் பதியவைக்கும், மேலும் உங்களை வெளி ஊழியத்தில் பல திறமைகளையும் கொண்டிருக்கச் செய்யும்.4பைபிளின் நேரடியான உபயோகம் நம்முடைய வேலையின் பிரதான பாகமாக இருக்கிறது. ஆனால் வேகமாக சரியான வேதவசனங்களுக்குத் திருப்புவதில் சில பிரஸ்தாபிகளுக்குப் பிரச்சினை இருக்கிறது. உங்களுக்கிருக்கிறதா? அப்படியானால், உறுதியாக முன்னேறுவதற்கு பள்ளி உங்களுக்கு உதவக்கூடும். எவ்விதமாக? ஊழியப் பள்ளியில் ஒவ்வொரு பேச்சாளர் பேசும்போதும் உங்கள் பைபிளில் பார்த்து பின்பற்றுங்கள். பேச்சாளர் ஒரு வசனத்தை வாசிக்கையில், எப்போதும் உங்கள் சொந்த பைபிளில் அதை எடுத்துப்பாருங்கள். வேதவசனங்களை திரும்பத் திரும்ப எடுத்துப் பார்க்கும்போது, நீங்கள் அவற்றை நன்கு அறிந்தவர்களாவீர்கள், அவற்றை சரியாக எங்கே கண்டுபிடிப்பது என்பதையும் கற்றுக்கொள்ளலாம். தேவைப்படுவது பழக்கமே, அந்தப் பழக்கத்தை வெளி ஊழியத்தில் மட்டுமல்ல, பள்ளியில் ஆஜராகும் ஒவ்வொரு வாரமும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், எல்லா பேச்சாளர்களும் செய்திருக்கும் ஆராய்ச்சியிலிருந்து நீங்கள் நன்மையடையலாம். அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சுப்பொருள்களின்பேரில் அதிக குறிப்பான வேதவசனங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். பேச்சாளர்களை பின்பற்றிவருகையில், உங்களுடைய சொந்த வெளி ஊழியத்தில் நீங்கள் பயன்படுத்த விரும்பக்கூடிய அந்த வேதவசனங்களின் முக்கிய பாகத்தை ஏன் அடிக்கோடிட்டுக் கொள்ளக்கூடாது? பைபிள் அட்டையின் உட்பக்கத்தில் தலைப்புப் பொருளோடுகூட அவற்றை நீங்கள் குறித்துவைக்கவும் விரும்பலாம். இவ்விதமாக நீங்கள் பள்ளியில் கற்றுக்கொண்டிருப்பதை வெளி ஊழியத்தில் பயன்படுத்துவது சுலபமாக இருப்பதை காண்பீர்கள்.
5உங்கள் பேச்சைத் தயாரிக்கையில், கவனமாக பேச்சு அமைப்புகளை தெரிவுசெய்வதும்கூட உங்கள் வெளி ஊழியத்தில் பள்ளியிலிருந்து நன்மைகளைப் பெற உங்களுக்கு உதவிசெய்யும். கூடுமானால், ஊழியத்தில் உண்மையில் எதிர்ப்படுகின்ற நிலைமைகளையே பயன்படுத்துங்கள். சில சமயங்களில் உங்கள் பேச்சு வீட்டுக்கு வீடு அளிப்புக்கு அல்லது சந்தர்ப்ப சாட்சிகொடுத்தலுக்கு பயனுள்ளதாக இருப்பதை நீங்கள் காணலாம். மற்ற சமயங்களில் அது ஒரு மறுசந்திப்புக் கலந்துரையாடலாக அதிக பிரயோஜனமாயிருக்கலாம். அல்லது ஒருவேளை ஒரு வீட்டு பைபிள் படிப்பில் வரக்கூடிய ஒரு குறிப்பைச் சுற்றி அமைக்கப்பட்ட ஒரு கலந்துரையாடலாக இருக்கலாம். சூழ்நிலை உள்ளபடியே இருப்பதற்கு எப்போதும் முயற்சி எடுங்கள். சில சமயங்களில் நீங்கள் சொல்வதை வீட்டுக்காரர் மறுத்துவிடுமாறு திட்டமிடுவதன் மூலம் உங்கள் பேச்சு அதிகமாக உள்ளபடியே இருக்கும்படி செய்யப்படலாம். பின்னர் அந்தச் சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை நீங்கள் காட்டலாம். வெளி ஊழிய சூழ்நிலைகளுக்குப்
பயனுள்ளதாக இருக்கும் பேச்சுக்கள் எப்போதும் உடனடியான வெற்றிக்கு வழிநடத்தவேண்டியதில்லை; அக்கறையின்மையை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் காட்டுவதும்கூட மதிப்புள்ளதாக இருக்கிறது.6வீட்டுக்காரரின் பாகம் உங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்தால், வெளி ஊழியத்தின் சம்பந்தமாக நீங்களும்கூட பயனடையலாம். வீட்டுக்காரர்கள் எவ்விதமாக சிந்திக்கின்றனர், அவர்கள் செய்கிறவிதமாக மறுப்புகளை எழுப்புவதற்குக் காரணமென்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்வதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஒரு வீட்டுக்காரரின் பாகத்தை நீங்கள் உள்ளபடியே நடிப்பதும், மாணாக்கர் பேச்சு கொடுப்பவர் அதை எவ்விதமாக சமாளிக்கிறார் என்பதைக் கவனிப்பதும் ஊழியத்தில் பலன்தரத்தக்கவர்களாக இருப்பதற்கு உங்களைப் பயிற்றுவிக்க உதவிசெய்யும்.
7ஒரு பேச்சு தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் அடிப்படையில் இருக்கையில், வீட்டுக்கு வீடு அல்லது வேறு எங்காவது இருந்தாலும்சரி, உங்களுடைய சொந்த ஊழியத்தை மேம்படுத்தும் நோக்குநிலையிலிருந்து அறிவுரையைப் பகுப்பாய்வு செய்யுங்கள். அந்த வாரத்தில் உங்கள் ஊழியத்தில் நீங்கள் முன்னேறவேண்டிய மிகப் பெரிய ஒரு குறிப்பாக ஏன் அதை ஆக்கிக்கொள்ளக்கூடாது? உதாரணமாக, ஒரு தலைப்பைக் கொண்டிருப்பதற்கான தேவையைப் பற்றியதாக பேச்சு இருக்குமானால், வெளி ஊழியத்தில் உங்கள் அளிப்பு உண்மையில் ஒரு தலைப்பைக் கொண்டிருக்கிறதா என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். வீட்டுக்காரர்களிடம் பேசிமுடித்த பின்பு, அவர்கள் உண்மையில் தங்களுடைய மனதில் அதை பதியவைத்துக்கொள்வதற்கு அது அத்தனை தெளிவாக மேலெழுந்து நிற்கும்படியாக நீங்கள் செய்கிறீர்களா? இல்லையென்றால் அந்த வாரம் அதில் வேலைசெய்யுங்கள். பின்னர், வேதவசனங்களை வாசித்து அதைப் பொருத்திப் பிரயோகிப்பதைப் பற்றிய பொருளையும் நீங்கள் கேட்பீர்கள். இந்தப் பேச்சை கேட்கையில், வேதவசனங்களை நீங்கள் உபயோகிப்பதை பகுப்பாய்வு செய்யுங்கள். நீங்கள் விளக்காமலே வீட்டுக்காரருக்கு அவற்றை வாசித்துக்காட்டுகிறீர்களா? வேதவசனங்களை உங்கள் தலைப்போடு எப்படி இணைக்கிறீர்கள்? வீட்டுக்காரருக்கு எப்படி நீங்கள் பொருத்திக்காட்டுகிறீர்கள்? இப்படிப்பட்ட ஒரு பகுப்பாய்வு, வேதவசனங்களை வாசிப்பதிலும் பொருத்துவதிலும் நீங்கள் முன்னேறுவதற்கு உதவிசெய்யக்கூடும். பேச்சு உதாரணங்களின் உபயோகம் பற்றியதா? உதாரணங்களின் உபயோகத்தில் நீங்கள் எவ்வாறு முன்னேறலாம்? அல்லது பேச்சு ஒரு வீட்டு பைபிள் படிப்பில் போதிப்பதைப் பற்றி இருக்கும். உங்களுடைய சொந்த வீட்டு பைபிள் படிப்பில் போதிப்பதற்கு அந்தப் பொருளை எவ்விதமாக நீங்கள் பொருத்திப்பிரயோகிக்கலாம் என்பதைக் காண உங்களுடைய சொந்த முறைகளை ஆராய்ந்துபார்த்து, அந்த வாரத்தில் அதைச் செய்யுங்கள். இவ்விதமாக, உங்களுடைய வெளி ஊழியத்தை மேம்படுத்திக்கொள்ள தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நீங்கள் கற்றுக்கொள்வதை பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள்.
8உங்கள் சொந்த அளிப்பை பகுப்பாய்வு செய்யுங்கள். பள்ளியில் வழக்கமாக ஆலோசனை கொடுக்கப்படுவதை கேட்டு அதன் நன்மைகளை நீங்கள் கவனிக்கிறீர்கள். வெளி ஊழியத்தில் கதவண்டையில் பள்ளி கண்காணி உங்களோடு ஒருவேளை இருக்கமாட்டார், ஆனால் உங்களுக்கு நீங்களே ஆலோசனை கொடுத்துக்கொள்வதை ஏன் பழக்கமாக்கிக்கொள்ளக்கூடாது?
ஒரு வீட்டுக்காரரிடம் நீங்கள் பேசிமுடித்து அடுத்த வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கையில், உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: அதிக பலன்தரத்தக்கவராக இருப்பதற்கு நான் என்ன செய்திருக்கலாம்? இப்பொழுது நான் செய்வதை அறிந்தவனாக, அந்தச் சந்திப்பை மறுபடியுமாகச் செய்ய முடிந்தால், நான் வித்தியாசமாக என்ன செய்வேன்? இப்படிப்பட்ட பகுப்பாய்வு அந்த நாளிலேயே உங்களுக்கு உதவக்கூடும், ஏனென்றால் மற்றொரு வீட்டில் இதே சூழ்நிலையை நீங்கள் எதிர்ப்படக்கூடும். நீங்கள் வேலைசெய்து கொண்டிருக்கும்போதே உங்கள் அளிப்புகளைப் பகுப்பாய்வுசெய்வதை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், நிலையான முன்னேற்றமிருக்கும். நிச்சயமாகவே, மற்றொரு பிரஸ்தாபியோடு வேலைசெய்கையில், யோசனைகளுக்கு உங்கள் துணையையும்கூட நீங்கள் கேட்கலாம்.9உங்கள் அளிப்புகளின் பயனுறுதியை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த முறை மற்றவர்களோடு பழகிக்கொண்டு, பின்னர் அவற்றை ஒன்றாகப் பகுப்பாய்வு செய்வதாகும். இதை உங்கள் சொந்த குடும்ப அங்கத்தினர்களுடனோ சபையிலுள்ள மற்றவர்களுடனோ செய்யலாம். பொதுவாயிருக்கும் மறுப்புகளை கொண்டுவருகின்ற வீட்டுக்காரர்களுடைய பாகத்தை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். மறுப்புகள் எழுப்பப்படுகையில், எவ்விதமாக கையாளுவது என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதைச் செய்யுங்கள். தெரியவில்லையென்றால், நிறுத்தி அங்கிருப்பவர்களிடமிருந்து யோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும். பின்னர் அளிக்கப்பட்ட சில கருத்துக்களைப் பயன்படுத்தி தொடர்ந்து பேசுங்கள். நீங்கள் முடித்தப்பிறகு, செய்யப்பட்டதனுடைய பயனுறுதியை ஒன்றாகச் சேர்ந்து பகுப்பாய்வு செய்யுங்கள். வீட்டில் இப்படிப்பட்ட பயிற்சி நேரங்கள் உங்கள் அளிப்பை மேம்படுத்த உதவிசெய்யக்கூடும், மேலும் வெளி ஊழியத்துக்குச் செல்வதற்கு முன்பாக உங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கும் வாய்ப்பை அளிக்கின்றன. பள்ளியில் கற்றுக்கொள்ளப்படும் நியமங்களை உங்கள் வெளி ஊழியத்திற்கு நீட்டிப்பதற்கு அவை உங்களுக்கு உதவக்கூடும். “நன்மை தீமை அறிவதற்குப் பயிற்சி பெற்ற பகுத்தறிவு” பெற்றவர்களே முதிர்ச்சியுள்ள ஆட்கள் என்பதாக அப்போஸ்தலன் பவுல் சொன்னது நினைவிலிருக்கட்டும். (எபி. 5: 14, கத்.பை.) பகுத்தறியும் அறிவை கூர்மையாக்குவதற்கு ஒரு வழி அவற்றை பயிற்சி நேரங்களில் பயன்படுத்துவதன் மூலமாகும்.
10தேவராஜ்ய ஊழியப் பள்ளி நம்முடைய பயிற்றுவிப்புக்காக யெகோவா செய்திருக்கும் அநேக தாராளமான ஏற்பாடுகளில் ஒன்றாகும். நாம் அதனுடைய பாடங்களை ஊக்கமாகப் படித்து பொருத்திப் பிரயோகிக்கையில், தீர்க்கதரிசியோடுகூட இவ்வாறு சொல்லக்கூடியவர்களாக இருப்போம்: “இளைப்படைந்தவனுக்குச் சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார். காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.”—ஏசா. 50: 4.
[கேள்விகள்]
1. நம்முடைய மாணாக்கர் பேச்சுக்களைத் தயார்செய்கையில், பள்ளியின் என்ன நோக்கத்தை நாம் மனதில் வைக்க வேண்டும்?
2. ஒரு சாட்சிகொடுப்பதற்காக மாணாக்கர் பேச்சுக்களை பழகிக்கொள்வது எவ்வாறு செய்யப்படலாம்?
3. பள்ளியில் நாம் கேட்பதை வெளி ஊழியத்தில் பயன்படுத்த எது நம்மைத் தூண்டுவதாக இருக்கும்?
4. பள்ளி எவ்விதமாக
நம்முடைய பைபிளின் உபயோகத்தை மேம்படுத்த நமக்கு உதவிசெய்யக்கூடும்?5, 6. நம்முடைய பேச்சுக்களுக்கு உள்ளபடியே இருக்கும் பேச்சு அமைப்புகளை பயன்படுத்துவது எவ்வாறு நமக்கு உதவிசெய்யும்?
7. ஒழுங்கான முன்னேற்றத்தைச் செய்ய, ஒவ்வொரு வாரத்தின்போதும் நம்முடைய ஊழியத்தில் என்ன குறிப்பின்பேரில் நாம் முன்னேற்றஞ்செய்ய நாடலாம்?
8. வெளி ஊழியத்தில் இருக்கையில், நாம் எவ்விதமாக பிரயோஜனமுண்டாக நமக்குநாமே ஆலோசனை கொடுத்துக்கொள்ள முடியும்?
9, 10. இங்கே நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களை வெளி ஊழியத்தில் பொருத்திப் பிரயோகிக்க நமக்கு உதவிசெய்வதற்கு வீட்டு பயிற்சி நேரங்களில் என்ன செய்யப்படலாம்?