Skip to content

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா? அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா?

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா? அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா?

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா? அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்? ஒருவேளை இதைப் பற்றி நீங்கள் யோசித்துக்கூட பார்த்திருக்க மாட்டீர்கள். அல்லது இந்த கேள்விகளில் ஒன்றுக்கொன்று என்னதான் சம்பந்தம் என்றுகூட சிந்திக்கலாம். அதனால் நீங்கள் இப்படி சொல்லலாம்: ‘நாம் என்ன செய்கிறோமோ அதற்கு கடவுள் கணக்குக் கேட்பார். அதேசமயம் நம்முடைய தலைவிதி எப்படியோ அப்படித்தான் எல்லாமே நடக்கும்.’

இதுவே உங்களுடைய கருத்து என்றால், தயவுசெய்து கொஞ்சம் நிதானமாக யோசித்துப்பாருங்கள்!

நம்மிடம் கணக்கு கேட்பது யார்? கடவுள். அப்படியென்றால், நம்முடைய விதியை தீர்மானிப்பவர் யார்? அதற்கும் “கடவுள்தான்” என்று பலர் பதிலளிப்பார்கள். ஆனால் இது நியாயமாக இருக்கிறதா? ஒருவரிடம் ஏதோவொன்றை செய்ய வற்புறுத்திவிட்டு, பின்பு அதைச் செய்ததற்காக அவரையே நீங்கள் குற்றம் சாட்டுவீர்களா? தன்னுடைய மகன் வெளியில் செல்லாமல் இருப்பதற்காக காலையில் அவனை வீட்டில் அடைத்து பூட்டி விட்டுச்சென்ற அப்பாவைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அன்றைக்கு சாயங்காலம் வீடு திரும்பியபோது, தன்னுடைய மகன் நாள்பூராவும் வீட்டிலேயே இருந்ததை பார்க்கிறார். இப்பொழுது, ஏன் வெளியில் போகவில்லை என்று அந்தத் தகப்பன் அவனிடம் கேட்டால் எப்படியிருக்கும்? ஒருவேளை அவன் சோம்பேறியாக இருந்ததற்காக தண்டனையும் கொடுத்தால்? அது நியாயமாக இருக்குமா? அப்படிப்பட்ட அப்பாவை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

‘இப்படி நடக்கவே நடக்காது’ என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், சிலர் சொல்கிறபடி, அதைத்தான் கடவுள் செய்கிறார். நல்லதும் கெட்டதும் கடவுளிடமிருந்து வருகிறதென்றால், எல்லாவற்றையும் நம் தலையில் எழுதி வைத்திருக்கிறாரென்றால், தப்பு செய்ததற்காக ஏன் நம்மிடம் கணக்குக் கேட்க வேண்டும்? நாம் செய்வதெல்லாம் கடவுள் நிர்ணயித்ததென்றால், நம்முடைய செயல்களுக்கு நாம் ஏன் கணக்கு கொடுக்க வேண்டும்? எதுவுமே நம் கையில் இல்லையென்றால், எதற்காக நாம் கடவுளுக்கு பதில்சொல்ல வேண்டும்?

இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் ஒருவேளை இவ்வாறு யோசிக்கலாம்: ‘இது ரொம்ப ஆழமான விஷயம். ஆண்டவன் வழிகளைப் புரிந்துகொள்வதற்கு நாம் யார்? இதைப் பற்றியெல்லாம் இறையியல் வல்லுநர்கள் வாக்குவாதம் செய்யட்டும்.’

நீங்களும் சம்பந்தப்படுகிறீர்கள்

ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கேள்விகள் நம் அனைவரையும் பாதிக்கின்றன. இந்த உலகில் நாம் வாழ்வது ஒருமுறைதான், அந்த வாழ்க்கையும் புல்லில் பூத்திருக்கும் பனித்துளி போல் விரைவில் மறைந்துவிடுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கு நாம் கொடுக்கும் பதில்கள் நாம் வாழும் விதத்தை ஆழமாய் பாதிக்கின்றன. கடவுள் நம்முடைய விதியை நிர்ணயித்துவிட்டார் என்றால், வாழ்க்கையில் முன்னேறுவதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? கடவுளைப் பற்றி கற்றுக்கொள்ளவும் ஏன் முயல வேண்டும்? “சரி” “தவறு,” “பாவம்” “புண்ணியம்” போன்ற வார்த்தைகள் அர்த்தமற்றவை. நாம் தவறு என நினைக்கும் ஒரு காரியத்தைச் செய்வது நம்முடைய விதியென்றால், எப்படியும் அதைச் செய்துதான் தீருவோம், ஏனென்றால் ஏற்கெனவே ‘எழுதப்பட்டிருப்பதை’ நம்மால் அழிக்க முடியாதே.

ஆனால் இப்படித்தான் காரியங்கள் நடக்குமென்றால், கடவுள் ஏன் நமக்கு அவருடைய கட்டளைகளை போதித்திருக்கிறார்? ஏன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்? கடவுளுடைய வார்த்தை என அழைக்கப்படும் புத்தகங்கள் ஏன் எழுதப்பட்டிருக்கின்றன? விதி விளையாடுகிறதென்றால், இவையனைத்தும் அர்த்தமற்றவையாக இருக்கும் அல்லவா? நிச்சயமாகவே, ஒன்றுக்கொன்று முரண்படுகிற நியாய விவாதத்திற்கு மனித பகுத்தறிவு இடங்கொடுப்பதில்லை. மனிதனுடைய தர்க்கரீதியான மனது இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

மறுபட்சத்தில், நமக்கு சுதந்திரம் இருந்து நாம் செய்யும் காரியத்திற்கு கடவுள் நம்மிடம் கணக்குக் கேட்பாரென்றால், கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவை அடைய நம்முடைய குறுகிய வாழ்நாளை பயன்படுத்த வேண்டும்; அவர் விரும்புகிறபடி வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகிறது. நமக்காக வேறு யாரும் கடவுளை சேவிக்க முடியாது. “கசாப்பு கடையில் ஒவ்வொரு ஆடும் அதன் காலில்தான் தொங்கவிடப்படுகிறது” என்ற துருக்கிய பழமொழியை இது ஒருவருக்கு நினைப்பூட்டுகிறது. அதாவது, ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த தவறுகளுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.

கடவுள் நம்மிடம் கணக்குக் கேட்பாரா? அல்லது நம்முடைய வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா? இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்களை கற்றுக்கொள்வது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?

பதில்களை எங்கே கண்டுபிடிப்பது

நம்முடைய கேள்விகளுக்கு பதில்களை எங்கே கண்டுபிடிக்கலாம்? பைபிளில் கண்டுபிடிக்கலாம்; இது இஸ்லாமிய மதத்தில் தவ்ராத், ஜபூர், இன்ஜீல் என அறியப்பட்டுள்ளது. இது “தேவனுடைய வார்த்தை” என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது a பைபிளில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம்.” (எசேக்கியேல் 18:21, 23) நிச்சயமாகவே, பொல்லாத மனிதன் தன்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ள முடியும். அவன் காலம்பூராவும் பொல்லாதவனாகவே இருப்பதற்கு விதிக்கப்படவில்லை.

மற்றொரு பைபிள் பகுதியிலிருந்தும் இதே முடிவுக்கு வரலாம்: “மனுபுத்திரனே, உன்னை . . . காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்​படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப் பழியையோ உன் கையிலே கேட்பேன்.”​—எசேக்கியேல் 3:17, 18.

ஆம், மனிதனுடைய வாழ்க்கையை விதி நிர்ணயிப்பதில்லை என்பதை கடவுளுடைய வார்த்தை தெள்ளத் தெளிவாக கூறுகிறது. மனிதனால் தெரிவுசெய்ய முடியும். அவனால் நல்லதையோ கெட்டதையோ தெரிவுசெய்ய முடியும். அறியாமையால் கெட்டதை செய்வானாகில், சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது நல்லவனாக மாறமுடியும், அதனால் ஜீவனையும் பெறமுடியும். சொல்லப்போனால், நம்முடைய செயல்களுக்கு நாமே பொறுப்பாளிகள்.

நீங்கள் எப்படி தெரிவுசெய்யலாம்?

நம்முடைய படைப்பாளர் அன்பின் கடவுள், அவரில் எந்தப் பொல்லாங்கும் இல்லை என பைபிள் சொல்கிறது. இந்த அன்பின் கடவுள் இவ்வாறு சொல்கிறார்: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் . . . ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொ[ள்].” (உபாகமம் 30:19) மனிதனை கடவுள் சுயாதீனத்தோடு படைத்தார். கடவுளுடைய நோக்கங்களுக்கு விரோதமாக மனிதர்கள் நடந்தபோது, அவர்கள் மரண தண்டனைக்கு ஆளானார்கள். என்றபோதிலும், நீங்கள் ஜீவனை தெரிவுசெய்ய முடியும். ஆனால் இந்தத் தெரிவு உங்கள் கையிலேயே இருக்கிறது, உங்களுக்காக வேறு எவரும் இதைத் தெரிவுசெய்ய முடியாது.

ஜீவனை எவ்வாறு தெரிந்தெடுப்பது? முதலாவதாக, பைபிள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை என்பதை நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக, அந்தப் புத்தகத்தை ஊக்கத்தோடும் பரந்த மனப்பான்மையோடும் ஆராய வேண்டும். பின்பு, கடவுள் ஏன் மனிதனை படைத்தார், நாம் ஏன் மரிக்கிறோம், மரணத்திற்குப்பின் என்ன நேரிடுகிறது, நீங்கள் எவ்வாறு கடவுளை பிரியப்படுத்தலாம் என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

‘இது ரொம்ப கஷ்டமாச்சே; என்னால இதைச் செய்ய முடியாது’ என்று சொல்லாதீர்கள். கடவுள் ஜீவனை வாக்குக்கொடுத்துவிட்டு, பின்பு அதைக் கண்டுபிடிப்பதை சிலருக்கு சாத்தியமற்றதாக்குவாரா? நமக்குத் தேவையான தகவல் பைபிளில் இருக்குமானால், அந்தப் புத்தகத்தை ஆராய்வதற்கு கடவுள் நமக்கு உதவிசெய்வார் அல்லவா? உங்கள் பங்கில் உண்மையான முயற்சி மட்டும் எடுங்கள். இதுவே சாலச் சிறந்த செயல்.

அவசர காலம்

தாமதியாதேயுங்கள். அவசரமாய் செயல்பட வேண்டிய காலம் இது. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களை தெளிவாக எடுத்துக் காட்டும் கூட்டு ‘அடையாளத்தை’ நாம் பைபிளில் காண்கிறோம். (மத்தேயு 24:3) இதோ, அந்த அடையாளத்தின் சில அம்சங்கள்:

“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும் . . . உண்டாகும்.” (மத்தேயு 24:⁠7) “பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும் கொள்ளைநோய்களும் உண்டாகும்.” (லூக்கா 21:11) ‘அக்கிரமம் மிகுதியாகும்.’​—⁠மத்தேயு 24:⁠12.

பைபிள் சொல்கிறபடி, இவையும் கடைசி நாட்களுக்கான அடையாளத்தின் மற்ற அம்சங்களும் ஒருசேர சம்பவிக்கும். 1914-⁠ல் நடந்த முதல் உலக யுத்தம் முதற்கொண்டு இந்த அடையாளம் நிறைவேறி வருவதை எல்லா அத்தாட்சிகளும் சுட்டிக் காட்டுகின்றன.

இதன் காரணமாகவே, தாமதிக்காமல் பைபிளை ஆராய்ந்து பார்க்கும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். கடவுளுடைய வார்த்தை நமக்கு சொல்கிறது: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.”​—பிரசங்கி 12:13, 14.

மிகவும் கஷ்டமான இந்தக் கடைசி நாட்களில் வாழ்க்கைக்கு தேவையானவற்றை எப்படி ஞானமாக தெரிவு செய்யலாம் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், தயவுசெய்து பின்வரும் விலாசங்களில் ஒன்றிற்கு எழுதுங்கள். உங்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது நவீன ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—⁠துணைக்குறிப்புகளுடன்.

[அடிக்குறிப்பு]

a குர்ஆனில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பிறகு அந்த நபிமார்களின் அடிச்சுவடுகளில் மர்யம் உடைய குமாரர் ஈஸாவை நாம் பின்தொடரச் செய்தோம். தவ்ராத்தில் (தோரா) எவை அவர் முன் இருந்தனவோ அவற்றை அவர் மெய்ப்படுத்துபவராய் இருந்தார். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலை (சுவிசேஷங்கள்) வழங்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. இன்னும் தவ்ராத்தில் எவை அப்போது எஞ்சியிருந்தனவோ அவற்றை மெய்யென உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அது திகழ்ந்தது. . . . மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்பத் தீர்ப்பு வழங்கட்டும். மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள் தாம் ஃபாஸிக்கள்-பாவிகளாவர்.” (“அல் மாயிதா” [ஐந்தாவது சூரா], வசனங்கள் 46, 47, மௌலவி ஏ. குத்புத்தீன் அஹ்மத் பாகவி, அஃப்ஸலுல் உலமா மௌலவி ஆர். அப்துர் ரவூஃப் பாகவி என்பவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது) பைபிளின் பகுதிகளாகிய தோரா, சங்கீதங்கள், சுவிசேஷங்கள் ஆகியவை களங்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் வாதாடுகின்றனர். அப்படியென்றால், கடவுளால் தாம் கொடுத்த புத்தகங்களை பாதுகாக்க முடியவில்லை என்பதையே இப்படிப்பட்ட வாதம் அர்த்தப்படுத்தும். இப்படி அடித்துக் கூறுபவர்கள் உண்மையில் கடவுள் பலவீனமானவர் என அவரை குற்றம்சாட்டுகின்றனர்.

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது நவீன ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்

[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]

நன்றி: முன்பக்கத்திலுள்ள காரின் உட்புறம்: H. Armstrong Roberts.