Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்

ஒருநாள் எருசலேமில், தன்னுடைய அப்பா யெகோவாவைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். (யோவான் 8:​12-30) அதேசமயம், அன்றிருந்த பொய்மதத் தலைவர்களுடைய முகத்திரையைக் கிழித்தார். இயேசு அன்றைக்குச் சொன்ன வார்த்தைகள், நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறது. அது என்ன? கடவுளைப் பற்றி இன்றைக்குச் சொல்லப்படுகிற பிரபலமான கருத்துகளை எப்படி நாம் கவனமாக ஆராய்ச்சி செய்து பார்க்கலாம் என்பதுதான் அந்தப் பாடம். “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்“ என்று இயேசு சொன்னார்.​—யோவான் 8:​31, 32.

“என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால்” என்று இயேசு சொன்னபோது, இன்று மதங்கள் சொல்லிக்கொடுக்கும் விஷயங்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கவனமாக ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று அர்த்தப்படுத்தினார். அதனால், நீங்கள் கடவுளைப் பற்றி ஏதாவது ஒரு கருத்தைக் கேட்டால், ‘இந்தக் கருத்து இயேசு சொன்ன வார்த்தையோடும், பைபிளிலிருக்கும் மற்ற வசனங்களோடும் ஒத்துப்போகிறதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அப்போஸ்தலன் பவுல் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கிருந்த மக்கள், ”அவையெல்லாம் [அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாம்] சரிதானா என்று தினமும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்.” இவர்களைப் போல்தான் நாமும் செய்ய வேண்டும்.​—அப்போஸ்தலர் 17:11.

இந்தத் தொடர் கட்டுரையில் வந்த முதல் கட்டுரையில் மார்கோ, ரோஸா, ரேமன்ட் ஆகியவர்களின் அனுபவத்தைப் பார்த்தோம். இவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து தங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றிக் கவனமாக ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன? இப்போது பார்க்கலாம்.

மார்கோ: “நானும் என் மனைவியும் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் எங்களுக்கு பைபிள் படிப்பு எடுத்தவரு பைபிள்ல இருந்து பதில் சொன்னாரு. அதனால, யெகோவாமேல இருந்த அன்பு வளர ஆரம்பிச்சுது. கணவன் மனைவியா நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா ஆனோம்!”

ரோஸா: “பைபிள்னாலே மனுஷங்களோட கருத்துகள வச்சு கடவுள பத்தி விளக்குற ஒரு தத்துவ புத்தகம்னு ஆரம்பத்துல நெனச்சேன். ஆனா, போக போக என்னோட கேள்விகளுக்கு பைபிள்ல இருந்து பதில்கள கண்டுபிடிச்சேன். இப்போ யெகோவா எனக்கு ஒரு நிஜமான நபரா தெரியுறாரு. நான் அவர முழுசா நம்புறேன்.”

ரேமன்ட்: “உங்கள பத்தி தெரிஞ்சுக்க உதவி செய்ங்கனு கடவுள்கிட்ட ஜெபம் பண்ணேன். சீக்கிரத்திலயே என் கணவரும் நானும் பைபிள படிக்க ஆரம்பிச்சோம். கடைசியா யெகோவாவ பத்தின உண்மைகளயும் கத்துக்கிட்டோம்! கடவுள் உண்மையிலயே எப்படிப்பட்டவர்னு நாங்க தெரிஞ்சுகிட்டப்போ ரொம்ப சந்தோஷப்பட்டோம்.”

பைபிள் வெறுமனே கடவுளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் பொய்களை மட்டும் வெட்டவெளிச்சமாக்கவில்லை. அவரிடம் உள்ள அருமையான குணங்களைப் பற்றியும் தெளிவாக விளக்குகிறது. பைபிள் கடவுளுடைய சக்தியின் உதவியோடு எழுதப்பட்ட புத்தகம். அதனால்தான், ”கடவுள் நமக்குத் தயவுடன் வெளிப்படுத்தியிருக்கிற விஷயங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.” (1 கொரிந்தியர் 2:12) கடவுளைப் பற்றியும் அவர் நமக்காகச் செய்திருக்கும் விஷயங்களைப் பற்றியும் நம்முடைய எதிர்காலத்தைப் பற்றியும் உங்களுக்குச் சில கேள்விகள் இருக்கலாம். அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நீங்கள் ஏன் தெரிந்துகொள்ளக் கூடாது? இதுபோன்ற சில கேள்விக்கான பதில்களை jw.org வெப்சைட்டில், “பைபிள் போதனைகள் > பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்” என்ற தலைப்புக்கு கீழ் பார்க்கலாம். அல்லது, அந்த வெப்சைட்டில் பைபிள் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம், இல்லையென்றால், யெகோவாவின் சாட்சி ஒருவரிடம் பைபிள் படிப்பைப் பற்றி கேட்கலாம். இப்படிச் செய்யும்போது, நீங்கள் நினைத்ததைவிட உங்களால் கடவுள்மீது அதிக அன்பு காட்ட முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.