Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது

கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது

அதிகாரம் 10

கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது

நீங்கள் கருவி ஒன்றினை வாங்கியபின் அது வேலைசெய்யாமல் இருப்பதைக் கண்ட அனுபவம் உங்களுக்கு ஒருவேளை இருந்திருக்கலாம். பழுதுபார்க்க ஒருவரை நீங்கள் அழைத்ததாக வைத்துக்கொள்வோம். கருவியை அவர் “சரிபார்த்து” கொடுத்தபோதிலும் சிறிது காலத்திற்குள் அது பழுதடைந்துவிட்டது. அது எத்தனை ஏமாற்றமாக இருந்தது!

2மனித அரசாங்கங்களின் விஷயம் இப்படியே இருக்கிறது. மனிதவர்க்கம் அமைதியையும் மகிழ்ச்சியையும் உறுதிசெய்யும் ஒரு அரசாங்கத்தை எப்பொழுதுமே விரும்பியிருக்கிறது. என்றபோதிலும், சமுதாயத்தின் சீர்குலைவுகளைப் பழுதுபார்க்க எடுக்கப்பட்டிருக்கும் கடுமையான முயற்சிகள் உண்மையில் வெற்றிகரமாக இருந்தில்லை. மிகப் பல சமாதான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு பின்னர் முறிக்கப்பட்டுவிட்டிருக்கின்றன. மேலுமாக, எந்த அரசாங்கத்தால் வறுமை, தப்பெண்ணம், குற்றச்செயல், நோய் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலின் நாசத்தை ஒழிக்க முடிந்திருக்கிறது? மனிதனின் ஆட்சி பழுதுபார்க்கப்பட முடியாதது. இஸ்ரவேலின் ஞானமுள்ள அரசன் சாலொமோன்கூட கேட்டார்: “மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?”—நீதிமொழிகள் 20:24.

3நம்பிக்கை இழக்கவேண்டாம்! நிலையான ஒரு உலக அரசாங்கம் வெறும் ஒரு கனவல்ல. இயேசுவினுடைய பிரசங்கிப்பின் பொருளாக இது இருந்தது. அவர் இதை “தேவனுடைய ராஜ்யம்” என்றழைத்து அதற்காக ஜெபிக்கும்படியாக தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்தார். (லூக்கா 11:2; 21:31) நிச்சயமாகவே, கடவுளுடைய ராஜ்யம் என்பது குறித்து மத வட்டாரங்களில் சில சமயங்களில் பேசப்படுகிறது. உண்மையில், லட்சக்கணக்கானோர் (பரமண்டல ஜெபம் அல்லது மாதிரி ஜெபம் என்றும் அழைக்கப்படும்) கர்த்தருடைய ஜெபத்தை திரும்பத் திரும்ப சொல்லும்போது தினந்தோறும் அதற்காக ஜெபிக்கின்றனர். ஆனால் “தேவனுடைய ராஜ்யம் என்பது என்ன?” என்பதாக கேட்கப்படுகையில் மக்கள் பல்வேறு வித்தியாசமான பதில்களை அளிக்கின்றனர். சிலர், “அது உங்கள் இருதயத்தில் இருக்கிறது,” என்று சொல்லுவார்கள். மற்றவர்கள் அதை பரலோகம் என்றழைக்கிறார்கள். ஆனால் பைபிள் தெளிவான ஒரு பதிலைக் கொடுக்கிறது, நாம் அதைப் பார்ப்போம்.

ஒரு நோக்கத்தையுடைய ராஜ்யம்

4யெகோவா தேவன் எப்போதுமே சர்வலோகத்தின் ராஜாவாக அல்லது உன்னத அரசதிகாரமுள்ள ஆட்சியாளராக இருந்து வந்திருக்கிறார். அவர் எல்லா காரியங்களையும் படைத்திருக்கிறார் என்ற உண்மையானது அந்த மிக உயர்ந்த ஸ்தானத்துக்கு அவரை உயர்த்துகிறது. (1 நாளாகமம் 29:11; சங்கீதம் 103:19; அப்போஸ்தலர் 4:24) ஆனால் இயேசு பிரசங்கித்த அந்த ராஜ்யம் கடவுளுடைய சர்வலோக உன்னத அரசதிகாரத்திற்கு கிளை ஆட்சியாக அல்லது இரண்டாம் பட்சமானதாக இருக்கிறது. அந்த மேசியானிய ராஜ்யம் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை உடையதாக இருக்கிறது, அது என்ன?

5அதிகாரம் 6-ல் விளக்கப்பட்டபடி, முதல் மனித ஜோடி கடவுளுடைய அதிகாரத்துக்கு எதிராக கலகம் செய்தனர். எழுப்பப்பட்ட விவாதங்களின் காரணமாக, யெகோவா தம்முடைய உன்னத அரசதிகாரத்திற்கு ஒரு புதிய வெளிக்காட்டினைக் கொண்டுவர தெரிந்துகொண்டார். சர்ப்பமாகிய சாத்தானின் தலையை நசுக்கி மனிதவர்க்கத்தின் சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் விளைவுகளை நீக்குவதற்கு ஒரு ‘வித்தைப்’ பிறப்பிப்பதற்கான தம்முடைய நோக்கத்தை கடவுள் அறிவித்தார். இயேசு கிறிஸ்து பிரதான ‘வித்தாக’ இருக்கிறார், “தேவனுடைய ராஜ்யம்” சாத்தானை முற்றிலுமாக தோற்கடிக்கப்போகும் கருவியாக இருக்கிறது. இந்த ராஜ்யத்தின் மூலமாக, இயேசு கிறிஸ்து யெகோவாவின் பெயரில் பூமியின் மீது ஆட்சியை திரும்பநிலைநாட்டி எல்லா காலத்துக்குமாக கடவுளுடைய நியாயமான உன்னத அரசதிகாரத்தை நியாயநிரூபணம் செய்திடுவார்.—ஆதியாகமம் 3:15; சங்கீதம் 2:2-9.

6பொல்லாத பரிசேயர்களிடம் இயேசு கூறிய வார்த்தைகளை ஒரு மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே.” (லூக்கா 17:21, தமிழ் யூனியன் வர்ஷன்) அந்தச் சீர்கெட்ட மனிதர்களின் பொல்லாத இருதயங்களில் ராஜ்யம் இருந்தது என்பதாக இயேசு அர்த்தப்படுத்தினாரா? இல்லை. மூல கிரேக்குவின் அதிக திருத்தமான ஒரு மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கிறது: “தேவனுடைய ராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறதே.” (புதிய உலக மொழிபெயர்ப்பு) அவர்கள் மத்தியில் இருந்த இயேசு, எதிர்கால அரசராக தம்மைக் குறிப்பிட்டு பேசினார். இருதயத்தில் ஒரு நபர் கொண்டிருக்கக்கூடிய ஏதோவொன்றாக இருப்பதற்கு பதிலாக, கடவுளுடைய ராஜ்யம் ஒரு அரசரையும் குடிமக்களையும் கொண்ட உண்மையான, இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு அரசாங்கமாகும். அது ஒரு பரலோக அரசாங்கம், ஏனென்றால், அது “பரலோக ராஜ்யம்” என்றும் “தேவனுடைய ராஜ்யம்” என்றும் இரண்டுவிதமாகவும் அழைக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 13:11; லூக்கா 8:10) ஒரு தரிசனத்தில், தானியேல் தீர்க்கதரிசி “மனுஷகுமாரனுடைய சாயலான” அதன் அரசர் சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டு “சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் [நீங்காத] கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடு”க்கப்படுவதைக் கண்டார். (தானியேல் 7:13, 14) இந்த அரசர் யார்? ஆம், பைபிள் இயேசு கிறிஸ்துவை ‘மனுஷகுமாரன்’ என்பதாக அழைக்கிறது. (மத்தேயு 12:40; லூக்கா 17:26) ஆம், யெகோவா தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவை அரசராக இருக்கும்படி நியமித்தார்.

7இயேசு தனியாக ஆட்சிசெய்வதில்லை. உடன் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் இருக்கும்படி “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட” 1,44,000 பேர் அவரோடு இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3; லூக்கா 22:28-30) கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்கள் கிறிஸ்துவின் தலைமைத்துவத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கும் மனிதர்கள் அடங்கிய உலகளாவிய ஒரு குடும்பமாக இருப்பர். (சங்கீதம் 72:7, 8) ஆனால் ராஜ்யம் உண்மையில் கடவுளுடைய உன்னத அரசதிகாரத்தை நியாயநிரூபணம் செய்து நம்முடைய பூமிக்கு பரதீஸிய நிலைமைகளைத் திரும்ப கொண்டுவரும் என்று நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?

கடவுளுடைய ராஜ்யத்தின் மெய்ம்மை

8நெருப்பில் உங்களுடைய வீடு எறிந்துவிட்டதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்பொழுது வசதியுள்ள ஒரு நண்பர் உங்கள் வீட்டை திரும்பக் கட்ட உதவிசெய்வதாகவும் உங்கள் குடும்பத்துக்கு உணவு அளிப்பதாகவும் வாக்களிக்கிறார். அந்த நண்பர் எப்பொழுதும் உங்களிடம் உண்மையையே பேசிவந்திருக்கிறாரென்றால், நீங்கள் அவரை நம்பமாட்டீர்களா? அடுத்த நாள் நீங்கள் வேலையிலிருந்து வீடு திரும்பும்போது, நெருப்பின் விளைவாக ஏற்பட்ட கற்கூளங்களை சுத்தம் செய்யும் வேலையை வேலையாட்கள் ஏற்கெனவே செய்ய ஆரம்பித்துவிட்டிருந்ததையும் உங்கள் குடும்பத்துக்கு உணவு கொண்டுவரப்பட்டிருந்ததையும் நீங்கள் பார்த்ததாக வைத்துக்கொள்வோம். நாளடைவில் காரியங்கள் திரும்ப முன்னிருந்த நிலைக்கு வந்துவிடுவது மாத்திரமல்லாமல் முன்னிருந்ததைவிட அவை மேம்பட்டதாக இருக்கும் என்பதைக் குறித்து நீங்கள் முற்றிலும் நிச்சயமாய் இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

9அதேவிதமாகவே, யெகோவா ராஜ்யத்தின் மெய்ம்மையைக் குறித்து நமக்கு உறுதியளிக்கிறார். பைபிள் புத்தகமாகிய எபிரெயரில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, நியாயப்பிரமாணத்தின் அநேக அம்சங்கள் ராஜ்ய ஏற்பாட்டுக்கு முன்நிழலாக இருந்தன. (எபிரெயர் 10:1) கடவுளுடைய ராஜ்யம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதைப் பற்றிய முற்காட்சிகள் பூமியிலிருந்த இஸ்ரவேல் ராஜ்யத்தில் தெளிவாக காணப்பட்டன. அது சாதாரணமான ஒரு அரசாங்கமாக இருக்கவில்லை, ஏனென்றால் அதன் அரசர்கள் “கர்த்தருடைய சிங்காசனத்தில்” வீற்றிருந்தார்கள். (1 நாளாகமம் 29:23) மேலுமாக, “சமாதான கர்த்தர் [“ஷைலோ,” NW] வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்,” என்பதாக முன்னறிவிக்கப்பட்டிருந்தது. (ஆதியாகமம் 49:10) a ஆம், யூதாவின் இந்த ராஜாக்களின் வம்சத்தில்தான், கடவுளுடைய அரசாங்கத்தின் நிரந்தரமான ராஜாவாகிய இயேசு பிறக்கவிருந்தார்.—லூக்கா 1:32, 33.

10இயேசுவின் அப்போஸ்தலர் தெரிந்தெடுக்கப்பட்டபோது கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் அஸ்திவாரம் போடப்பட்டது. (எபேசியர் 2:19, 20; வெளிப்படுத்துதல் 21:14) இயேசு கிறிஸ்துவோடு பரலோகத்தில் உடன் அரசர்களாக ஆட்சிசெய்யப்போகும் 1,44,000 பேரில் இவர்கள் முதலானவர்களாக இருந்தனர். பூமியில் இருக்கையில், இந்த எதிர்கால உடன் அரசர்கள் இயேசுவின் பின்வரும் கட்டளைக்கு இணக்கமாக சாட்சிகொடுக்கும் வேலையை முன்நின்று செய்வர்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடு[ங்கள்].”—மத்தேயு 28:19.

11சீஷராக்கும்படியான கட்டளை இப்பொழுது முன்னொருபோதும் இராத அளவில் நிறைவேற்றப்பட்டுவருகிறது. யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு இசைவாக உலகம் முழுவதிலும் ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவித்துக்கொண்டு வருகின்றனர்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் ஒரு அம்சமாக, மிகப் பெரிய கல்வி புகட்டும் திட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடவுளுடைய ராஜ்யத்தின் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் தங்களை கீழ்ப்படுத்துகிறவர்கள் மனித அரசாங்கங்கள் முயன்று அடையமுடியாத சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்கெனவே அனுபவித்துவருகின்றனர். கடவுளுடைய ராஜ்யம் மெய்யானது என்பதற்கு இவை அனைத்தும் தெளிவான அத்தாட்சியைக் கொடுக்கின்றன!

12யெகோவா இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.” (ஏசாயா 43:10-12) “உண்மையுள்ள சாட்சி”யாகிய இயேசு ராஜ்யத்தின் நற்செய்தியை வைராக்கியமாக அறிவித்தார். (வெளிப்படுத்துதல் 1:5; மத்தேயு 4:17) ஆகவே இந்நாளைய ராஜ்ய அறிவிப்பாளர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற, கடவுளால் கொடுக்கப்பட்ட பெயரைத் தாங்கியிருப்பது பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு சாட்சிகள் ஏன் இவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் செலவழிக்கின்றனர்? இதை அவர்கள் செய்வதற்கு காரணம், ராஜ்யமே மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையாகும். மனித அரசாங்கங்கள் சீக்கிரத்திலோ நாளடைவிலோ ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றன, ஆனால் கடவுளுடைய ராஜ்யம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஏசாயா 9:6, 7 அதன் அரசராகிய இயேசுவை “சமாதானப் பிரபு” என்றழைத்து இவ்வாறு சொல்கிறது: “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.” இன்று இருந்து நாளை கவிழ்க்கப்படும் மனித அரசாங்கங்களைப்போல் கடவுளுடைய ராஜ்யம் இருப்பதில்லை. ஆம், தானியேல் 2:44 சொல்கிறது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. . . . தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”

13எந்த மனித அரசரால் போர், குற்றச்செயல், நோய், பட்டினி மற்றும் வீடில்லாமை போன்றவற்றை அகற்றிவிட முடியும்? மேலுமாக, பூமிக்குரிய எந்த அரசரால் இறந்தோரை எழுப்ப முடியும்? இந்த விஷயங்கள் கடவுளுடைய ராஜ்யத்தாலும் அதனுடைய அரசராலும் கையாளப்படும். இடைவிடாமல் பழுதுபார்ப்பதைத் தேவைப்படுத்தும் சரியாக வேலைசெய்யாத ஒரு கருவியைப் போல ராஜ்யம் குறையுள்ளதாக நிரூபிக்காது. மாறாக, கடவுளுடைய ராஜ்யம் வெற்றிபெறும், ஏனென்றால் யெகோவா இவ்விதமாக வாக்களிக்கிறார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் . . . வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55:11) கடவுளுடைய நோக்கம் தோல்வியடையாது, ஆனால் ராஜ்ய ஆட்சி எப்போது ஆரம்பமாக இருந்தது?

ராஜ்ய ஆட்சி—எப்போது?

14“ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?” இயேசுவின் சீஷர்கள் கேட்ட இந்தக் கேள்வி, அந்தச் சமயத்தில் அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் நோக்கத்தையும் அதனுடைய ஆட்சி ஆரம்பமாவதற்குரிய நியமிக்கப்பட்ட காலத்தையும் அறிந்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியது. இந்த விஷயத்தைக் குறித்து சந்தேகிக்காதபடி அவர்களை எச்சரிப்பவராய் இயேசு சொன்னார்: “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.” பூமியின்மீது தம்முடைய ஆட்சி எதிர்காலத்தில், தம்முடைய உயிர்த்தெழுதலுக்கும் பரலோகத்துக்கு ஏறிச்செல்வதற்கும் வெகு காலத்துக்குப்பின்பு, நிகழும்படி ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதை இயேசு அறிந்திருந்தார். (அப்போஸ்தலர் 1:6-11; லூக்கா 19:11, 12, 15) வேதவாக்கியங்கள் இதை முன்னறிவித்திருந்தன. எவ்விதமாக?

15தீர்க்கதரிசனமாக இயேசுவை “ஆண்டவர்” என்பதாக குறிப்பிட்டு தாவீது ராஜா இவ்விதமாகச் சொன்னார்: “கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்.” (சங்கீதம் 110:1; ஒப்பிடுக: அப்போஸ்தலர் 2:34-36.) இயேசுவின் ஆட்சி அவர் பரலோகத்துக்கு ஏறிச் சென்றதும் உடனடியாக ஆரம்பமாகாது என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டுகிறது. மாறாக, அவர் கடவுளுடைய வலது பாரிசத்தில் காத்திருப்பார். (எபிரெயர் 10:12, 13) இந்தக் காத்திருத்தல் எவ்வளவு காலம் நீடிக்கும்? அவருடைய ஆட்சி எப்போது ஆரம்பமாகும்? பதில்களைக் கண்டுபிடிக்க பைபிள் நமக்கு உதவிசெய்கிறது.

16முழு பூமியில் யெகோவா தம்முடைய பெயரை சூட்டியிருந்த ஒரே நகரம் எருசலேமாகும். (1 இராஜாக்கள் 11:36) கடவுளுடைய பரலோக ராஜ்யத்துக்கு மாதிரியாக இருந்த கடவுளால் அங்கீகரிக்கப்பட்டிருந்த பூமிக்குரிய ராஜ்யத்தின் தலைநகரமாகவும் அது இருந்தது. ஆகவே, பொ.ச.மு. 607-ல் எருசலேம் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தச் சம்பவம், பூமியில் தம்முடைய மக்களின்மீது கடவுளுடைய நேரடியான ஆட்சியில் ஏற்பட்ட நீண்டதொரு தடையின் ஆரம்பத்தைக் குறிப்பிட்டுக் காட்டியது. இடையில் தடுக்கப்பட்ட இந்த ஆட்சியின் காலப்பகுதி இன்னும் நீடித்திருப்பதாக சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இயேசு சுட்டிக்காட்டினார், அவர் சொன்னார்: “புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.”—லூக்கா 21:24.

17‘புறஜாதியாரின் காலத்தின்போது’ உலக அரசாங்கங்கள் கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சியை தடுப்பதற்கு அனுமதிக்கப்படுவர். அந்தக் காலப்பகுதி பொ.ச.மு. 607-ல் எருசலேமின் அழிவோடு ஆரம்பமானது, அது ‘ஏழு காலங்களுக்குச்’ செல்லும் என்பதாக தானியேல் சுட்டிக்காட்டினார். (தானியேல் 4:23-25) அது எவ்வளவு காலம் நீண்டது? மூன்றரை ‘காலங்கள்’ 1,260 நாட்களுக்கு சமம் என்பதாக பைபிள் காண்பிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:6, 14) இந்தக் காலப்பகுதியின் இரண்டு மடங்கு அல்லது ஏழு காலங்கள் 2,520 நாட்களாக இருக்கும். ஆனால் அந்தக் குறுகிய காலப்பகுதியின் முடிவில் குறிப்பிடத்தக்கதாக எதுவும் நடந்தேறவில்லை. ஆயினும், தானியேலின் தீர்க்கதரிசனத்துக்கு ‘ஒரு நாளுக்கு ஒரு வருஷம்’ என்பதைப் பொருத்தி, பொ.ச.மு. 607-லிருந்து 2,520 ஆண்டுகளைக் கணக்கிட்டால் நாம் பொ.ச. 1914-ம் ஆண்டுக்கு வருகிறோம்.—எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6.

18இயேசு அந்தச் சமயத்தில் பரலோகத்தில் ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்டாரா? அவர் ஆரம்பித்துவிட்டார் என்று சொல்வதற்கான வேதப்பூர்வமான காரணங்கள் அடுத்த அதிகாரத்தில் கலந்தாலோசிக்கப்படும். நிச்சயமாகவே, இயேசுவின் ஆட்சியின் ஆரம்பம் பூமியின்மீது உடனடியான சமாதானத்தினால் குறித்துக்காட்டப்படாது. ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டதும் உடனடியாக இயேசு சாத்தானையும் பேய் தூதர்களையும் பரலோகத்திலிருந்து வெளியேற்றிடுவார் என்பதாக வெளிப்படுத்துதல் 12:7-12 காண்பிக்கிறது. இது பூமிக்கு ஆபத்தைக் குறிக்கும், ஆனால் பிசாசுக்கு “கொஞ்சக்காலம் மாத்திரம்” மீந்திருப்பதை வாசிப்பது உற்சாகமளிப்பதாக இருக்கிறது. சீக்கிரத்தில், கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது என்பதற்காக மட்டுமல்லாமல், அது பூமிக்கும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதற்காகவும் நாம் களிகூருபவர்களாக இருப்போம். (சங்கீதம் 72:7, 8) இது சீக்கிரத்தில் நடந்தேறும் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

[அடிக்குறிப்புகள்]

a “ஷைலோ” என்ற பெயரின் பொருள் “உரிமைக்காரர், சொந்தக்காரர்” என்பதாகும். காலப்போக்கில், “ஷைலோ,” “யூதா கோத்திரத்துச் சிங்க”மாகிய இயேசு கிறிஸ்துவே என்பது தெளிவாக ஆனது. (வெளிப்படுத்துதல் 5:5) சில யூத மொழிபெயர்ப்புகளில் “ஷைலோ” என்ற வார்த்தைக்குப் பதிலாக “மேசியா” அல்லது “ராஜாவாகிய மேசியா” என்ற வார்த்தைகள் காணப்படுகின்றன.

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன, அது எங்கிருந்து ஆட்சிசெய்கிறது?

ராஜ்யத்தில் ஆட்சிசெய்வது யார், அதனுடைய குடிமக்கள் யார்?

தம்முடைய ராஜ்யம் மெய்யானது என்பதை யெகோவா எவ்விதமாக நமக்கு உறுதிசெய்திருக்கிறார்?

“புறஜாதியாரின் காலம்” எப்போது ஆரம்பமானது, எப்போது முடிவடைந்தது?

[கேள்விகள்]

1, 2. மனித அரசாங்கங்கள் எவ்விதமாக குறைவுபடுபவையாக நிரூபித்திருக்கின்றன?

3. (அ) இயேசுவினுடைய பிரசங்கிப்பின் பொருள் என்னவாக இருந்தது? (ஆ) சில ஆட்கள் கடவுளுடைய ராஜ்யத்தை எவ்வாறு விவரிக்கின்றனர்?

4, 5. யெகோவா தம்முடைய உன்னத அரசதிகாரத்துக்கு ஒரு புதிய வெளிக்காட்டினைக் கொண்டுவர ஏன் தெரிந்துகொண்டார், அது எதை நிறைவேற்றும்?

6, 7. (அ) ராஜ்யம் எங்கே இருக்கிறது, அரசரும் உடன் அரசர்களும் யாவர்? (ஆ) ராஜ்யத்தின் குடிமக்கள் யார்?

8, 9. (அ) கடவுளுடைய ராஜ்ய வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையை நாம் எவ்விதமாக விளக்கலாம்? (ஆ) ராஜ்யத்தின் மெய்ம்மையைக் குறித்து நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

10. (அ) கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் அஸ்திவாரம் எப்பொழுது போடப்பட்டது? (ஆ) இயேசுவின் எதிர்கால உடன் அரசர்கள் பூமியின்மீது என்ன முக்கியமான வேலையை முன்நின்று செய்துகொண்டிருப்பர்?

11. ராஜ்ய பிரசங்கிப்பு வேலை இன்று எவ்வாறு செய்யப்பட்டு வருகிறது, அது எதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது?

12. (அ) ராஜ்ய அறிவிப்பாளர்களை யெகோவாவின் சாட்சிகள் என்றழைப்பது ஏன் பொருத்தமாக இருக்கிறது? (ஆ) கடவுளுடைய ராஜ்யம் எவ்வாறு மனித அரசாங்கங்களிலிருந்து வித்தியாசமாயிருக்கிறது?

13. (அ) கடவுளுடைய ராஜ்யம் வெற்றிகரமாக கையாளப்போகும் சில பிரச்சினைகள் யாவை? (ஆ) கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

14. ராஜ்யத்தைப்பற்றி இயேசுவின் சீஷர்கள் என்ன தவறான புரிந்துகொள்ளுதலைக் கொண்டிருந்தனர், ஆனால் தம்முடைய ஆட்சியைப்பற்றி இயேசு எதை அறிந்திருந்தார்?

15. இயேசுவின் ஆட்சி ஆரம்பிக்கும் காலத்தின் சம்பந்தமாக சங்கீதம் 110:1 எவ்விதமாக நமக்கு உட்பார்வை அளிக்கிறது?

16. பொ.ச.மு. 607-ல் என்ன சம்பவித்தது, இது எவ்விதமாக கடவுளுடைய ராஜ்யத்தோடு சம்பந்தப்பட்டதாயிருந்தது?

17. (அ) “புறஜாதியாரின் காலம்” என்பது என்ன, அது எவ்வளவு நீண்டதாக இருக்க வேண்டியிருந்தது? (ஆ) “புறஜாதியாரின் காலம்” எப்போது ஆரம்பமாகி, எப்போது முடிந்தது?

18. ராஜ்ய வல்லமையைப் பெற்றுக்கொண்டதும் உடனடியாக இயேசு என்ன செய்தார், இது எவ்வாறு பூமியைப் பாதித்தது?

[பக்கம் 94-ன் பெட்டி]

கடவுளுடைய ராஜ்யத்தோடு சம்பந்தப்பட்ட ஒருசில முக்கியமான சம்பவங்கள்

• சர்ப்பத்தின், பிசாசாகிய சாத்தானின் தலையை நசுக்குவதற்கு ஒரு ‘வித்தை’ பிறப்பிப்பதற்கான தம்முடைய நோக்கத்தை யெகோவா அறிவிக்கிறார்.—ஆதியாகமம் 3:15.

• பொ.ச.மு. 1943-ல் இந்த “வித்து” ஆபிரகாமின் சந்ததியில் வரும் மனிதனாக இருப்பார் என்பதை யெகோவா சுட்டிக்காட்டுகிறார்.—ஆதியாகமம் 12:1-3, 7; 22:18.

• பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கை ‘வரப்போகிற நன்மைகளின் நிழலாய்’ இருக்கிறது.—யாத்திராகமம் 24:6-8; எபிரெயர் 10:1.

• பூமியிலிருந்த இஸ்ரவேல் ராஜ்யம் பொ.ச.மு. 1117-ல் ஆரம்பமாகிறது, பின்னால் தாவீதின் வம்சாவளியில் அது தொடர்ந்திருக்கிறது.—1 சாமுவேல் 11:15; 2 சாமுவேல் 7:8, 16.

• எருசலேம் பொ.ச.மு. 607-ல் அழிக்கப்படுகிறது, “புறஜாதியாரின் காலம்” ஆரம்பமாகிறது.—2 இராஜாக்கள் 25:8-10, 25, 26; லூக்கா 21:24.

• பொ.ச. 29-ல் இயேசு நியமிக்கப்பட்ட ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தை தொடங்குகிறார்.—மத்தேயு 3:16, 17; 4:17; 21:9-11.

• பொ.ச. 33-ல், இயேசு பரலோகத்துக்கு ஏறிச்செல்கிறார், அங்கே தம்முடைய ஆட்சி ஆரம்பமாகும்வரை கடவுளுடைய வலது பாரிசத்தில் காத்திருக்கிறார்.—அப்போஸ்தலர் 5:30, 31; எபிரெயர் 10:12, 13.

• “புறஜாதியாரின் காலம்” முடிவுக்கு வரும்போது இயேசு பொ.ச. 1914-ல் பரலோக ராஜ்யத்தில் சிங்காசனத்தில் அமர்த்தப்படுகிறார்.—வெளிப்படுத்துதல் 11:15.

• சாத்தானும் அவனுடைய பேய்களும் பூமிக்கு அருகாமையில் கீழே தள்ளப்படுகின்றனர், மனிதவர்க்கத்துக்கு அதிகமான ஆபத்தைக் கொண்டுவருகின்றனர்.—வெளிப்படுத்துதல் 12:9-12.

• உலகம் முழுவதும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியின் பிரசங்கிப்பை இயேசு மேற்பார்வைசெய்கிறார்.—மத்தேயு 24:14; 28:19, 20.