Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளைக் கனப்படுத்தும் ஒரு குடும்பத்தைக் கட்டுதல்

கடவுளைக் கனப்படுத்தும் ஒரு குடும்பத்தைக் கட்டுதல்

அதிகாரம் 15

கடவுளைக் கனப்படுத்தும் ஒரு குடும்பத்தைக் கட்டுதல்

நீங்கள் உங்கள் சொந்த வீட்டைக் கட்டுவதற்கு திட்டமிடுவதாக வைத்துக்கொள்வோம். முதலாவது நீங்கள் நிலத்தை வாங்குகிறீர்கள். ஆவலான எதிர்பார்ப்போடு, உங்கள் புதிய வீட்டை உங்களுடைய மனதில் கற்பனை செய்துபார்க்கிறீர்கள். ஆனால் உங்களிடம் கருவிகளும் வீடுகட்டும் திறமைகளும் இல்லாதிருந்தால் எப்படி? உங்கள் முயற்சிகள் எத்தனை ஏமாற்றமளிப்பதாக இருக்கும்!

2அநேக தம்பதிகள் மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தைக் கற்பனைசெய்துகொண்டு ஒரு திருமணத்திற்குள் பிரவேசிக்கிறார்கள், என்றாலும் மகிழ்ச்சியான குடும்பத்தைக் கட்டுவதற்கு அவர்களிடம் தேவையான கருவிகளுமில்லை திறமைகளுமில்லை. திருமண நாளுக்குப் பின் விரைவிலேயே நம்பிக்கையிழந்த மனச்சாய்வுகள் வளர்ந்துவிடுகின்றன. சண்டையும் சச்சரவும் தினசரி காரியங்களாகிவிடுகின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது, புதிய தந்தையும் தாயும் மகிழ்ச்சியான திருமணத்தை நடத்துவதற்குத் தேவையான திறமைகளில் குறைவுபட்டிருந்தவிதமாகவே பெற்றோராயிருப்பதற்குத் தேவையான திறமைகளிலும் தாங்கள் குறைவுபட்டிருப்பதைக் காண்கிறார்கள்.

3என்றபோதிலும், பைபிளால் உதவிசெய்ய முடிவது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதனுடைய நியமங்கள் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தைக் கட்டுவதற்கு உதவிசெய்யக்கூடிய கருவிகளைப் போல இருக்கின்றன. (நீதிமொழிகள் 24:3) இது எவ்வாறு என்பதை நாம் பார்க்கலாம்.

மகிழ்ச்சியான திருமணத்தைக் கட்டுவதற்கு கருவிகள்

4திருமணமான ஒரு தம்பதி எவ்வளவு நல்ல பொருத்தமுள்ளவர்களாக தோன்றினாலும்சரி, அவர்கள் உணர்ச்சிப்பூர்வமான உருவமைப்பு, இளமைக் கால அனுபவங்கள், மற்றும் குடும்ப பின்னணி ஆகியவற்றில் வித்தியாசப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆகவே, திருமணத்துக்குப்பின் சில பிரச்சினைகளை எதிர்பார்க்கலாம். அவை எவ்வாறு கையாளப்படும்? ஆம், கட்டுமான பணியில் இருப்பவர்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது, கட்டடக் கலைஞரின் வரைபடத்தைப் பார்க்கின்றனர். இவை பின்பற்ற வேண்டிய வழிகாட்டு குறிப்புகளாகும். ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தைக் கட்டுவதற்கு கடவுளுடைய தராதரங்களை பைபிள் அளிக்கிறது. இவற்றில் சிலவற்றை நாம் ஆராய்வோமாக.

5 உண்மைப்பற்றுறுதி. இயேசு சொன்னார்: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” a (மத்தேயு 19:6) அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) ஆகவே திருமணமான நபர்கள் தங்களுடைய துணைவர்களிடம் உண்மையுள்ளவர்களாயிருப்பதை யெகோவாவிடம் தங்களுக்குள்ள ஒரு கடமையாக உணரவேண்டும்.—ஆதியாகமம் 39:7-9.

6உண்மைப்பற்றுறுதி திருமணத்துக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது. பற்றுமாறாத வாழ்க்கைத் துணைவர்கள் என்ன சம்பவித்தாலும் தாங்கள் ஒருவரையொருவர் ஆதரிப்பர் என்பதை அறிந்திருக்கிறார்கள். (பிரசங்கி 4:9-12) முதல் பிரச்சினையின் ஆரம்ப அறிகுறி தோன்றுகையிலேயே தங்களுடைய திருமணத்தை கைவிடுகிறவர்களிலிருந்து எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறார்கள்! இப்படிப்பட்ட நபர்கள் தாங்கள் ‘தவறான திருமணத் துணையை தெரிந்துகொண்டார்கள்,’ என்றும் அவர்கள் ‘ஒருவரையொருவர் இனிமேலும் நேசிப்பதில்லை,’ என்றும் புதிய ஒரு துணைவரே இதற்குப் பரிகாரம் என்றும் அவசரப்பட்டு முடிவுசெய்துவிடுகிறார்கள். ஆனால் இந்த முடிவு உணர்ச்சிப்பூர்வமாக வளருவதற்கு இருவருக்குமே வாய்ப்பை அளிப்பதில்லை. மாறாக, உண்மைப்பற்றுறுதியற்ற இப்படிப்பட்டவர்கள் புதிய திருமணத் துணைவர்களிடம் இதே பிரச்சினைகளைக் கடத்திச் செல்கின்றனர். ஒரு நபருக்கு நேர்த்தியான ஒரு வீடு இருந்து, கூரை ஒழுகுவதை அவர் கண்டுபிடித்தால், நிச்சயமாகவே அவர் அதைப் பழுதுபார்க்க முயற்சிசெய்கிறார். அவர் வெறுமனே வேறொரு வீட்டுக்கு இடம் மாறிச் சென்றுவிடுவதில்லை. அதேவிதமாகவே, துணைவரை மாற்றிக்கொள்வது, திருமணத்தில் ஏற்படும் சண்டைகளுக்குக் கீழே புதைந்துகிடக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழி அல்ல. பிரச்சினைகள் எழும்போது, திருமணத்திற்கு முற்றுப்புள்ளிவைக்க முயற்சிசெய்யாமல், அதைக் காத்துக்கொள்வதற்கு மிகவும் கடினமாக பிரயாசப்படுங்கள். இப்படிப்பட்ட உண்மைப்பற்றுறுதி, திருமணத்தைப் பாதுகாக்க, காத்துக்கொள்ள, போற்றிப் பேண தகுதியுள்ள ஒன்றாகக் கருதப்படுகிறது.

7 பேச்சுத்தொடர்பு. “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்,” என்பதாக பைபிள் பழமொழி ஒன்று சொல்கிறது. (நீதிமொழிகள் 15:22) என்றபோதிலும், திருமணமான ஒருசில தம்பதிகளுக்குப் பேச்சுத்தொடர்பு கொள்வது கடினமாக இருக்கிறது. ஏன் அப்படி இருக்கிறது? ஏனென்றால் மக்கள் வித்தியாசமான பேச்சுத்தொடர்பு பாணிகளைக் கொண்டிருக்கின்றனர். அநேக சமயங்களில் கணிசமான தப்பெண்ணத்துக்கும் ஏமாற்றத்துக்கும் வழிவகுக்கும் உண்மையாக இது இருக்கிறது. வளர்ப்பு இதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும். உதாரணமாக, பெற்றோர் எப்பொழுதும் சண்டைபோட்டுக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் சிலர் வளர்க்கப்பட்டிருக்கலாம். இப்பொழுது, திருமணமான பெரியவர்களாக, இவர்கள் தங்களுடைய துணைவரிடம் எப்படி தயவாக, அன்பான முறையில் பேசுவது என்பதை அறியாமல் இருக்கலாம். என்றபோதிலும், உங்களுடைய வீடு ‘சண்டைகள் நிறைந்த வீடாக’ தரம்குறைந்துவிட அவசியமில்லை. (நீதிமொழிகள் 17:1) பைபிள் ‘புதிய ஆளுமையைத்’ தரித்துக்கொள்வதை வலியுறுத்துகிறது, கசப்பையும், கோபத்தையும், கூக்குரலையும், தூஷணப் பேச்சையும் பைபிள் பொறுத்துக்கொள்வது கிடையாது.—எபேசியர் 4:22-24, 31, NW.

8கருத்து வேற்றுமைகள் இருக்கையில் நீங்கள் என்ன செய்யலாம்? நீங்களும் உங்கள் துணைவரும் கோபமடைய ஆரம்பிப்பதை உணர்ந்தால் நீதிமொழிகள் 17:14-லுள்ள புத்திமதியைப் பின்பற்றுவது உங்களுக்கு நல்லதாக இருக்கும்: “விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு [“அவ்விடம் விட்டுப் போய்விடு,” NW].” ஆம், உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் கோபம் தணியும் சமயம் வரையாக கலந்துரையாடலை நீங்கள் நிறுத்தி வைத்திருக்கலாம். (பிரசங்கி 3:1, 7) என்ன சம்பவித்தாலும், “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இரு[ங்கள்].” (யாக்கோபு 1:19) உங்களுடைய குறிக்கோள், நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதாக இருக்கவேண்டும், வாக்குவாதத்தில் வெற்றுபெறுவதாக இருக்கக்கூடாது. (ஆதியாகமம் 13:8, 9) உங்களையும் உங்கள் துணைவரையும் அமைதிப்படுத்தக்கூடிய வார்த்தைகளையும் பேசும் முறையையும் பயன்படுத்துங்கள். (நீதிமொழிகள் 12:18; 15:1, 4; 29:11) எல்லாவற்றுக்கும் மேலாக, கோபத்தோடே இருந்துவிடாமல், ஒன்றாக சேர்ந்து மனத்தாழ்மையான ஜெபத்தில் கடவுளிடமாக பேசுவதன் மூலமாக உதவியை நாடுங்கள்.—எபேசியர் 4:26, 27; 6:18.

9ஒரு பைபிள் பழமொழி சொல்லுகிறது: “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.” (நீதிமொழிகள் 16:23) அப்படியென்றால் உண்மையில் வெற்றிகரமான பேச்சுத் தொடர்புக்குத் திறவுகோல் இருதயத்தில் இருக்கிறது, வாயில் அல்ல. உங்கள் துணைவரிடமாக உங்கள் மனநிலை என்ன? ‘ஒற்றுணர்வைக்’ காட்டும்படியாக பைபிள் கிறிஸ்தவர்களை ஊக்குவிக்கிறது. (1 பேதுரு 3:8, NW) உங்களுடைய திருமண துணைவர் நிலைகுலைந்துபோய் கவலையை அனுபவிக்கையில் இதை உங்களால் செய்யமுடியுமா? அப்படி முடியுமானால், எவ்விதமாக பதிலளிப்பது என்பதைத் தெரிந்துகொள்ள அது உங்களுக்கு உதவிசெய்யும்.—ஏசாயா 50:4.

10 கனமும் மரியாதையும். கிறிஸ்தவக் கணவன்மார்கள் ‘மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், அறிவின்படி அவர்களுடனே வாழ்ந்து அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யும்படியாக,’ சொல்லப்படுகிறார்கள். (1 பேதுரு 3:7, NW) ஒருவரின் மனைவியைக் கனம் பண்ணுவது அவளுடைய மதிப்பை அங்கீகரிப்பதை உட்படுத்துகிறது. ‘அறிவின்படி’ தன் மனைவியோடு வாழ்ந்துவரும் ஒரு கணவன் அவளுடைய உணர்ச்சிகளுக்கு, பலங்களுக்கு, புத்திக்கூர்மைக்கு மற்றும் கண்ணியத்துக்கு உயர்ந்த மதிப்பை உடையவராக இருக்கிறார். பெண்களை யெகோவா எவ்விதமாக நோக்குகிறார் என்பதையும் அவர்கள் எவ்விதம் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்பதையும் அவர் கற்றுக்கொள்ள விரும்பவேண்டும்.

11உங்களுடைய வீட்டில் மிகவும் பிரயோஜனமாகவும் அதிக மென்மையாகவும் உள்ள ஒரு பாத்திரம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதை நீங்கள் அதிக கவனத்தோடு கையாளமாட்டீர்களா? ஆம், அதே கருத்தில்தான் ‘பெலவீன பாண்டம்’ என்ற பதத்தை பேதுரு உபயோகித்தார், இது தன்னுடைய அருமையான மனைவிக்கு மென்மையான மதிப்பை வெளிக்காட்ட ஒரு கிறிஸ்தவக் கணவனைத் தூண்டவேண்டும்.

12ஆனால் ஒரு மனைவிக்கு பைபிள் என்ன புத்திமதியைக் கொடுக்கிறது? பவுல் எழுதினார்: “மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் [“ஆழ்ந்த மரியாதை கொண்டிருக்கக்கடவள்,” NW].” (எபேசியர் 5:33) ஒரு மனைவி தான் கனப்படுத்தப்பட்டு தன்னுடைய துணைவரால் அன்பாக நேசிக்கப்படுவதை உணருவது அவசியமாயிருப்பது போலவே, ஒரு கணவன் தான் தன்னுடைய மனைவியால் மதிக்கப்படுகிறான் என்பதை உணருவது அவசியமாகும். மரியாதையுள்ள ஒரு மனைவி தன்னுடைய கணவன் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும்சரி அவருடைய தவறுகளை யோசனையின்றி எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்கமாட்டாள். தனிமையிலோ அல்லது பொதுவிடங்களிலோ அவர் பேரில் குறைகூறி சிறுமைப்படுத்துவதன் மூலம் அவருடைய கண்ணியத்தை அவர் இழக்கும்படியாகச் செய்யமாட்டாள்.—1 தீமோத்தேயு 3:11; 5:13.

13ஒரு மனைவி தன் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ஏதோவொரு காரியம் அவளுடைய அமைதியைக் குலைக்கும்போது, அவள் மரியாதையுடன் தன் கருத்தை சொல்லலாம். (ஆதியாகமம் 21:9-12) தன் கணவனிடம் தன் கருத்தைச் சொல்வது அவரிடமாக ஒரு பந்தை வீசுவதற்கு ஒப்பிடப்படலாம். அவர் எளிதில் அதைப் பிடிக்கும்படியாக அவள் மெதுவாகவும் அதை வீசலாம் அல்லது அது அவரைக் காயப்படுத்தும்படியாக அதை மிகவும் பலமாக சுழற்றியும் வீசலாம். துணைவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுக்களை வீசியெறிவதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக தயவாகவும் மென்மையான முறையிலும் பேசினால் அது எவ்வளவு மேலானதாக இருக்கும்!—மத்தேயு 7:12; கொலோசெயர் 4:6; 1 பேதுரு 3:3, 4.

14நாம் பார்த்தவண்ணமாக, பைபிள் நியமங்கள் மகிழ்ச்சியான திருமணத்தைக் கட்டுவதற்கு உங்களுக்கு உதவக்கூடும். ஆனால் உங்கள் துணைவர் பைபிள் சொல்லவிருப்பதன் பேரில் அக்கறை காண்பிக்காவிட்டால் அப்போது என்ன? அப்பொழுதும்கூட தேவனை அறியும் அறிவை உங்கள் பங்கில் நீங்கள் பொருத்திப் பிரயோகித்தால் அதிகத்தை சாதித்துவிடலாம். பேதுரு எழுதினார்: “அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” (1 பேதுரு 3:1, 2) நிச்சயமாகவே, அதே காரியமானது பைபிளிடமாக அசட்டையான மனப்பான்மை கொண்ட மனைவியையுடைய ஒரு கணவனுக்கும் பொருந்தும். உங்கள் துணைவர் எதைச் செய்ய தெரிந்துகொண்டாலும் சரி, பைபிள் நியமங்கள் உங்களை மேம்பட்ட ஒரு துணைவராக்கட்டும். தேவனை அறியும் அறிவு உங்களை மேம்பட்ட ஒரு பெற்றோராகவும்கூட ஆக்க முடியும்.

தேவனை அறியும் அறிவின்படி பிள்ளைகளை வளர்த்தல்

15ஒரு ரம்பம் அல்லது ஒரு சுத்தியலை வெறுமனே வைத்திருப்பதுதானே ஒருவரை திறமையுள்ள தச்சனாக ஆக்கிவிடுவதில்லை. அதேவிதமாகவே, வெறுமனே பிள்ளைகளைக் கொண்டிருப்பதுதானே, ஒருவரை திறமையுள்ள பெற்றோராக்கிவிடுவதில்லை. தெரிந்தோ தெரியாமலோ, பெற்றோர் அநேகமாக தாங்கள் தாமே வளர்க்கப்பட்ட அதே முறையில் தங்கள் பிள்ளைகளை வளர்க்கின்றனர். இதன் காரணமாக, தவறான பிள்ளை வளர்ப்பு முறைகள் சில சமயங்களில் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. பண்டைய எபிரெய பழமொழி ஒன்று சொல்கிறது: “பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின.” என்றபோதிலும், ஒரு நபர் தன்னுடைய பெற்றோர் நிலைநாட்டிய அதே போக்கைப் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை என்பதாக வேதவசனங்கள் காண்பிக்கின்றன. யெகோவாவின் சட்டங்களால் வடிவமைக்கப்பட்ட வித்தியாசமான ஒரு பாதையை அவர் தெரிந்துகொள்ளலாம்.—எசேக்கியேல் 18:2, 14, 17.

16கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வழிநடத்தலையும் கவனிப்பையும் கொடுக்கவேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். பவுல் எழுதினார்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாக தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) என்னே வலிமையான வார்த்தைகள்! உங்கள் பிள்ளைகளின் சரீரப்பிரகாரமான, ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளைப் பூர்த்திசெய்வதை உட்படுத்தும் உங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை நிறைவேற்றுவது, தேவபக்தியுள்ள ஒரு நபரின் சிலாக்கியமாகவும் கடமையாகவும் இருக்கிறது. தங்களுடைய பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான ஒரு சூழ்நிலையை உருவாக்க பெற்றோருக்கு உதவக்கூடிய நியமங்களைப் பைபிள் தருகிறது. இவற்றில் சிலவற்றை சிந்தித்துப் பாருங்கள்.

17 ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கவும். இஸ்ரவேல பெற்றோர் இவ்விதமாக கட்டளையிடப்பட்டனர்: “நீ அவைகளை [கடவுளுடைய வார்த்தைகளை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.” பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கடவுளுடைய தராதரங்களைக் கற்பிக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஆனால் இந்தப் புத்திமதிக்கு முன்னால் சொல்லப்பட்டதாவது: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) (உபாகமம் 6:6, 7) ஆம், பெற்றோர் தங்களிடம் இல்லாததைக் கொடுக்கமுடியாது. உங்கள் பிள்ளைகளின் இருதயங்களில் கடவுளுடைய சட்டங்கள் எழுதப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களுடைய சொந்த இருதயங்களில் அவை முதலாவதாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.—நீதிமொழிகள் 20:7; ஒப்பிடுக: லூக்கா 6:40.

18 உங்கள் அன்பைக் குறித்து உறுதியளியுங்கள். இயேசுவினுடைய முழுக்காட்டுதலின் சமயத்தில், யெகோவா அறிவித்தார்: “நீர் என்னுடைய நேசகுமாரன், நான் உம்மை அங்கீகரித்திருக்கிறேன்.” (லூக்கா 3:22, NW) யெகோவா இவ்விதமாக தம்முடைய குமாரனை ஏற்றுக்கொண்டு, அவரை தாம் அங்கீகரிப்பதைத் தாராளமாக வெளிப்படுத்தி தம்முடைய அன்பைக் குறித்து அவருக்கு உறுதியளித்தார். இயேசு பின்னால் தம்முடைய பிதாவிடம் சொன்னார்: “உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்[தீர்].” (யோவான் 17:24) ஆகவே தேவபக்தியுள்ள பெற்றோராக, நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசிப்பதை சொல்லிலும் செயலிலும் காண்பிக்க வேண்டும்—இதை அடிக்கடி செய்யுங்கள். ‘அன்பு கட்டியெழுப்பும்,’ என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.—1 கொரிந்தியர் 8:1.

19 சிட்சை. சிட்சையை நேசிப்பதன் முக்கியத்துவத்தை பைபிள் வலியுறுத்துகிறது. (நீதிமொழிகள் 1:8) தங்கள் பிள்ளைகளை வழிநடத்த வேண்டிய தங்கள் பொறுப்பிலிருந்து இன்று பின்வாங்கும் பெற்றோர் நாளை நிச்சயமாகவே இருதயத்துக்கு வேதனையளிக்கும் பின்விளைவுகளை எதிர்ப்படுவர். என்றபோதிலும், பெற்றோர் அளவுக்கு மீறிய கண்டிப்பான நிலைக்குச் செல்வதற்கு எதிராக எச்சரிக்கப்படுகிறார்கள். “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்,” என்று பவுல் எழுதினார். (கொலோசெயர் 3:21) பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக திருத்துவதை அல்லது இடைவிடாமல் அவர்களுடைய குறைகளைப் பற்றி வசைபாடிக்கொண்டும் அவர்களுடைய முயற்சிகளில் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டும் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

20நம்முடைய பரலோக தகப்பனாகிய யெகோவா தேவன் சிட்சை அளிப்பதில் முன்மாதிரியை வைக்கிறார். அவர் திருத்தம் செய்வது ஒருபோதும் அளவுக்கு மீறியதாக இல்லை. “உன்னை மட்டாய்த் [“சரியான அளவுக்கு,” NW] தண்டிப்பேன்,” என்று தம்முடைய ஜனங்களிடம் கடவுள் சொன்னார். (எரேமியா 46:28) பெற்றோர்கள் இந்த விஷயத்தில் யெகோவாவைப் போல் இருக்க வேண்டும். நியாயமான எல்லைகளைத் தாண்டிச்செல்லும் அல்லது அதன் திருத்தும் மற்றும் போதிக்கும் நோக்கத்துக்கு அப்பால் செல்லும் சிட்சை நிச்சயமாகவே திடனற்றுப்போகும்படி செய்துவிடுகிறது.

21தங்களுடைய சிட்சை பயனுள்ளதாக இருக்கிறதா என்பதைப் பெற்றோர் எவ்விதமாக தீர்மானிக்கலாம்? ‘என்னுடைய சிட்சை எதை சாதிக்கிறது?’ என்பதாக அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளலாம். அது போதிப்பதாக இருக்க வேண்டும். சிட்சை ஏன் கொடுக்கப்படுகிறது என்பதை உங்கள் பிள்ளை புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர் தங்களுடைய திருத்தத்தின் பின்விளைவுகளைக் குறித்தும்கூட அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும். உண்மைதான், பெரும்பாலும் எல்லா பிள்ளைகளுமே ஆரம்பத்தில் சிட்சையினால் எரிச்சலடைவர். (எபிரெயர் 12:11) ஆனால் சிட்சையானது ஒரு பிள்ளையை ஒருபோதும் அஞ்சி நடுங்கும்படி செய்யவோ அல்லது கைவிடப்பட்டவனாக உணரவோ அல்லது தான் இயல்பாகவே பொல்லாதவனாக இருக்கிறான் என்ற அபிப்பிரயாயத்தை அவனில் ஏற்படுத்தவோ கூடாது. தம்முடைய மக்களைத் திருத்துவதற்கு முன்பாக யெகோவா சொன்னார்: “நீ பயப்படாதே; . . . நான் உன்னுடனே இருக்கிறேன்.” (எரேமியா 46:28) ஆம், நீங்கள் அன்புள்ள ஆதரவளிக்கும் பெற்றோராக அவன் அல்லது அவளோடு இருக்கிறீர்கள் என்று உங்கள் பிள்ளை உணரும் விதமாக திருத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

“நல்லாலோசனைகளை” அடைதல்

22மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தைக் கட்டுவதற்கு தேவையான கருவிகளை யெகோவா கொடுத்திருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் வெறுமனே கருவிகளைப் பெற்றிருப்பது தானே போதுமானதாக இல்லை. அவற்றை சரியாக பயன்படுத்த நாம் பழகிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, கட்டுமானப் பணியில் இருக்கும் ஒருவர் தன்னுடைய கருவிகளைக் கையாளும் விதத்தில் மோசமான பழக்கங்களை வளர்த்துக்கொள்ளக்கூடும். அவர் அவற்றில் சிலவற்றை முற்றிலும் தவறாக பயன்படுத்திவிடவும்கூடும். இந்தச் சூழ்நிலைமைகளின்கீழ், அவருடைய முறைகள் தரம் குறைந்த ஒரு பொருளை உருவாக்குவதில் விளைவடையக்கூடும். அதேவிதமாகவே, உங்கள் குடும்பத்திற்குள் புகுந்திருக்கும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களைக் குறித்து இப்பொழுது ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒருசில பழக்க வழக்கங்கள் பலமாக வேரூன்றியதாய் மாற்றுவதற்கு கடினமாக இருக்கலாம். என்றபோதிலும், பைபிளின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்: “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடை[வான்].”—நீதிமொழிகள் 1:5.

23தேவனை அறியும் அறிவைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் நல்லாலோசனைகளை அடையலாம். குடும்ப வாழ்க்கைக்குப் பொருந்துகின்ற பைபிள் நியமங்களைக் குறித்து விழிப்பாயிருந்து தேவையான இடத்தில் சரிப்படுத்துதல்களைச் செய்யுங்கள். திருமணத் துணைவர்களாகவும் பெற்றோராகவும் நல்ல முன்மாதிரியை வைக்கும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களிடம் பேசுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் கவலைகளை யெகோவாவிடம் ஜெபத்தில் எடுத்துச்செல்லுங்கள். (சங்கீதம் 55:22; பிலிப்பியர் 4:6, 7) அவரைக் கனப்படுத்தும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து மகிழ அவர் உங்களுக்கு உதவமுடியும்.

[அடிக்குறிப்புகள்]

a மறுமணத்தை அனுமதிக்கும் விவாகரத்துக்கான ஒரே வேதப்பூர்வமான அடிப்படை “வேசித்தனம்”—அதாவது விவாகத்துக்கு வெளியே பாலுறவு கொள்வது.—மத்தேயு 19:9.

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

உண்மைப்பற்றுறுதியும் பேச்சுத்தொடர்பும் கனமும் மரியாதையும் எவ்விதமாக மகிழ்ச்சியுள்ள ஒரு திருமணத்திற்கு உதவக்கூடும்?

பெற்றோர் என்ன வழிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்களுடைய அன்பைக் குறித்து உறுதியளிக்கலாம்?

சரியான சிட்சையில் என்ன அம்சங்கள் உட்பட்டிருக்கின்றன?

[கேள்விகள்]

1-3. திருமணத்திலும் பெற்றோரின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் பொதுவாயுள்ள பிரச்சினைகளை ஏன் சிலரால் தீர்க்க முடிவதில்லை, ஆனால் பைபிள் ஏன் உதவிசெய்யமுடியும்?

4. திருமணத்தில் ஏன் பிரச்சினைகள் எதிர்பார்க்கப்பட வேண்டும், பைபிள் என்ன தராதரங்களை அளிக்கிறது?

5. திருமணத்தில் உண்மைப்பற்றுறுதியின் முக்கியத்துவத்தை பைபிள் எவ்வாறு வலியுறுத்துகிறது?

6. உண்மைப்பற்றுறுதி எவ்விதமாக ஒரு திருமணத்தைப் பாதுகாக்க உதவி செய்யும்?

7. திருமணமானவர்களுக்கு அநேக சமயங்களில் பேச்சுத்தொடர்பு ஏன் கடினமாக இருக்கிறது, ஆனால் ‘புதிய ஆளுமையைத்’ தரித்துக்கொள்வது எவ்விதமாக உதவியாக இருக்கும்?

8. உங்கள் துணைவரிடத்தில் கருத்து வேற்றுமை ஏற்படுகையில் எது பயனுள்ளதாக இருக்கலாம்?

9. பேச்சுத்தொடர்பு இருதயத்தில் ஆரம்பமாகிறது என்பதாக ஏன் சொல்லப்படலாம்?

10, 11. ஒரு கணவன் எவ்விதமாக 1 பேதுரு 3:7-ன் புத்திமதியைப் பின்பற்றலாம்?

12. ஒரு மனைவி தான் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை கொண்டிருப்பதை எவ்விதமாக காண்பிக்கலாம்?

13. சமாதானமான முறையில் எவ்விதமாக கருத்துக்கள் சொல்லப்படலாம்?

14. திருமணத்தில் பைபிள் நியமங்களைப் பொருத்துவதில் உங்கள் துணைவர் அக்கறை காண்பிக்காதவராய் இருந்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

15. தவறான பிள்ளை வளர்ப்பு முறைகள் எவ்விதமாக சில சமயங்களில் கடத்தப்படுகின்றன, ஆனால் இந்தச் சுழற்சி எவ்விதமாக நிறுத்தப்படலாம்?

16. உங்கள் குடும்பத்துக்குத் தேவையானவற்றை அளித்து கவனித்துக் கொள்ளுதல் ஏன் முக்கியமாக இருக்கிறது, இது எதை உட்படுத்துகிறது?

17. உங்கள் பிள்ளைகள் தங்கள் இருதயங்களில் கடவுளுடைய சட்டங்களைக் கொண்டிருக்க வேண்டுமானால் என்ன தேவைப்படுகிறது?

18. அன்பை வெளிப்படுத்துவதில் யெகோவா எவ்விதமாக பெற்றோருக்கு மிக நேர்த்தியான ஒரு முன்மாதிரியை வைத்திருக்கிறார்?

19, 20. பிள்ளைகளுக்குச் சரியான சிட்சையை அளிப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது, யெகோவாவின் முன்மாதிரியிலிருந்து பெற்றோர் எவ்விதமாக நன்மையடையலாம்?

21. தங்களுடைய சிட்சை பயனுள்ளதாக இருக்கிறதா என்பதைப் பெற்றோர் எவ்விதமாக தீர்மானிக்கலாம்?

22, 23. மகிழ்ச்சியான குடும்பத்தைக் கட்டுவதற்கு தேவையான ஆலோசனையை நீங்கள் எவ்வாறு அடையலாம்?

[பக்கம் 147-ன் முழுபடம்]